“நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தில் தொடங்கி சுற்றுலாத்துறை வரையில், வேளாண்மையில் தொடங்கி கல்வி மற்றும் திறன்மேம்பாடு வரையிலும், சாதனைப் படைத்த மத்தியப்பிரதேசம் ஒரு வியத்தகு மாநிலம்”
“நிறுவனங்களும், ஆதரவு குரல்களும், உலகப் பொருளாதாரமும் இந்தியா மீது அபரிதமான நம்பிக்கைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது”
“2014-ஆம் ஆண்டு முதல் சீர்திருத்தம், மாற்றம், செயல்பாடு என்ற பாதையில் இந்தியா பயணிக்கிறது”
“நிலையான அரசு, தீர்க்கமான அரசு, சரியான அணுகுமுறையைக் கொண்ட அரசு வளர்ச்சியின் அபரிதமான வேகத்தை வெளிப்படுத்தும்”
“அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு முனையங்கள், தொழிற்சாலை முனையங்கள், தளவாடப் பூங்கா ஆகியவை புதிய இந்தியாவின் அடையாளங்கள்”
“விரைவுசக்தி பெருந்திட்டம், இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் தேசிய பிரதான திட்டமாக உருவெடுத்திருக்கிறது”
“இந்தியாவை உலகின் போட்டி மிகுந்த தளவாட சந்தையாக மாற்றும் இலக்கை நிறைவேற்றுவதற்காக தேசிய தளவாடக் கொள்கை"
“உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தில் அதிக அளவில் பயனடைவதற்காக மத்தியப்பிரதேசத்தில் முதலீடு செய்ய அழைப்பு”
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலமாக இன்று (11.01.2023) உரையாற்றினார்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலமாக இன்று (11.01.2023) உரையாற்றினார். அப்போது இந்த உச்சிமாநாடு மத்தியப்பிரதேசத்தின் பல்துறை சார்ந்த முதலீட்டாளர் வாய்ப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாகக் கூறினார்.  உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள அனைத்து முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் மத்தியப்பிரதேசத்தின் பங்களிப்புக் குறித்தும் எடுத்துரைத்தார். நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தில் தொடங்கி சுற்றுலாத்துறை வரையிலும், வேளாண்மையில் தொடங்கி கல்வி மற்றும் திறன்மேம்பாடு வரையிலும், சாதனைப் படைத்த மத்தியப்பிரதேசம் ஒரு வியத்தகு  மாநிலம் என்று கூறினார்.  இந்த உச்சிமாநாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாக்காலத்தில் நடைபெறுவதை சுட்டிக்காட்டிய அவர்,  நாம் அனைவரும் இணைந்து வளர்ச்சியடைந்த இந்தியாவைக்  கட்டமைக்க பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.  வளர்ச்சி அடைந்த இந்தியாவைப் பற்றி பேசும் போது, இது நம் அனைவரின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரின் தீர்மானமாக இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். அதே நேரத்தில், உலகின் ஒவ்வொரு அமைப்பிலும், நிபுணர்கள் பட்டியலிலும் இந்தியர்கள் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச அமைப்புகள் இந்தியா மீது கொண்டுள்ள விசுவாசம் குறித்து உதாரணங்களை பட்டியலிட்ட பிரதமர், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவிற்கு முன்னணி இடம் கிடைத்திருப்பது குறித்தும் எடுத்துரைத்தார். மற்ற  நாடுகளைவிட சர்வதேச அளவில் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உலக வங்கி தெரிவித்திப்பதற்கும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த ஆண்டில் ஜி-20 நாடுகளில் இடம் பெற்றுள்ள அதிவேக வளர்ச்சி  பொருளாதார நாடுகளில் இந்தியாவும் இடம் பெறும் என ஓஇசிடி  என்ற பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு  அமைப்பு தெரிவித்திருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில், உலகின் மிகப்பெரிய 3-வது பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா மாறும் என மோர்கன் ஸ்டான்லி என்ற அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் தெரிவித்திருப்பதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.  நடப்பு  தசாப்தம் மட்டுமல்லாமல், இந்த நூற்றாண்டே இந்தியாவிற்கானது   என எம்சிகின்சே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கூறியிருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். நிறுவனங்கள் மற்றும் அதன்  ஆதரவு குரல்களும், உலகப் பொருளாதாரம் இந்தியா மீது அபரிதமான நம்பிக்கைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இதே நிலைப்பாட்டை சர்வதேச முதலீட்டாளர்களும் கொண்டிருப்பதாக கூறிய அவர், முன்னணி சர்வதேச வங்கி நடத்திய ஆய்வில், சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்பும் நாடாக இந்தியா  திகழ்வதாகவும் தெரிவித்தார். நேரடி அந்நிய முதலீட்டில் இந்தியா இன்று சர்வதேச சாதனைகளைப் படைத்து வருவதை மேற்கோள் காட்டிய பிரதமர், இதனை இங்கு வந்துள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை பிரதிபலிப்பதாகவும்  அவர் குறிப்பிட்டார். இந்தியாவின்  வலிமையான ஜனநாயகம், இளைஞர் திறன் ஆகியவை  நம் தேசத்தை நோக்கி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், வாழ்க்கை, வணிகம் ஆகிய இரண்டையும் எளிமையாக்கும்  நாட்டின்  இலக்கையும் எடுத்துரைத்தார்.

தற்சார்பு இந்தியா என்ற விழிப்புணர்வு, முதலீட்டுக்கு உகந்த நாடாக  இந்தியாவை மாற்றியிருப்பதாகவும், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சீர்த்திருத்தம், மாற்றம், மற்றும்  செயல்பாடு என்ற வழியில் இந்தியா பயணிப்பதே இதற்குக் காரணம் எனவும் குறிப்பிட்டார். இந்த நூற்றாண்டின் ஒரு கட்டத்தில் நெருக்கடியை சந்தித்த போதிலும் சீர்த்திருத்தப் பாதையை இந்தியா  தேர்வு செய்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

ஒரு நிலையான அரசு, தீர்க்கமான அரசு, சரியான பாதையில் நடைபோடும் அரசு வளர்ச்சியில், அபரிதமான மாற்றத்தை அடையும் என்று குறிப்பிட்ட பிரதமர், இதன் காரணமாகவே கடந்த 8 ஆண்டுகளில் நம்முடைய இலக்கும் சீர்த்திருத்தத்திற்கான அளவும் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் எடுத்துரைத்தார்.   வங்கித்துறையில், ஆளுமை பெற்ற அரசாக இந்தியா மாறியிருப்பதற்கு திவால் குறியீடு போன்ற நவீன தீர்மான வரைவை உருவாக்குதல், ஜிஎஸ்டி போன்ற ஒரு தேசம், ஒரு வரி என்ற திட்டத்தை உருவாக்குதல், ஓய்வூதியம் போன்றவற்றுக்கு வரி விலக்கு அளித்தல், சர்வதேச நாடுகளோடு போட்டி போடும் அளவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிவிதிப்பை உருவாக்குதல், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தல், சிறிய அளவிலான பொருளாதார தவறுகளையும் குற்றமற்றவையாக அங்கீகரித்தல் போன்ற சீர்திருத்தங்களை உருவாக்கி முதலீடு செய்வதில் உள்ள தடைகளை தகர்த்திருப்பதாகவும் அவர் கூறினார். அதே போல் பாதுகாப்பு, சுரங்கம் மற்றும் விண்வெளித்துறைகளில் தனியாரும் சமமான பங்களிப்பை அளிக்க வாய்ப்பு வழங்கியிருப்பது, தற்சார்பு இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்திருப்பதாகவும், அதிக எண்ணிக்கையிலான  தொழிலாளர் சட்டங்களை எளிமையான விதிகளாகக் குறைத்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு பல முயற்சிகள்  மேற்கொண்டு  வருவதாகவும், கடந்த சில ஆண்டுகளில் 40,000 சிக்கல்கள் தீர்க்கப்பட்டு இணக்கம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

வர்த்தகத்தை எளிமையாக்குவதற்காக கொண்டுவரப்பட்ட தேசிய ஒற்றைச் சாளர முறையில் இதுவரை 50,000 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள நவீன மற்றும் பன்னோக்கு உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் இந்தியா மீதான முதலீட்டு வாய்ப்புகளுக்கு ஏற்றத்தை அளித்திருப்பதாகவும், கடந்த 8 ஆண்டுகளில், விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, தேசிய நெடுஞ்சாலைப் பணிகளின் வேகம் இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதையும்  பிரதமர் எடுத்துரைத்தார்.  இதே போல் இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் கையிருப்பு வசதியும் அபரிமித வளர்ச்சிக் கண்டிருப்பதாகவும், அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு முனையங்கள், தொழிற்சாலை முனையங்கள், தளவாடப் பூங்கா ஆகியவை புதிய இந்தியாவின் அடையாளங்களாக மாறியிருப்பதாகவும் கூறினார். விரைவுசக்தி பெருந்திட்டம், இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் தேசிய பிரதான திட்டமாக உருவெடுத்திருப்பதாகவும் இந்தியாவை உலகின் போட்டி மிகுந்த தளவாட சந்தையாக  மாற்றும் இலக்கை நிறைவேற்றுவதற்காக தேசிய தளவாடக் கொள்கையை அறிமுகப்படுத்தியிருப்பதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

ஸ்மார்ட் போன் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிப்பதையும், நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளையும் சுட்டிக்காட்டிய பிரதமர், விமானப்போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன சந்தையில் இந்தியா உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்திருப்பதையும் குறிப்பிட்டார். சர்வதேச வளர்ச்சிக்கான அடுத்தக் கட்டத் திட்டத்தின் முக்கியத்துவத்தை மேற்கோள் காட்டிப் பேசிய அவர்,  ஒருபுறம் அனைத்து கிராமங்களிலும் செயற்கை கண்ணாடி இழை இணையத்தை ஏற்படுத்துவதையும், மறுபுறம் 5-ஜி அலைவரிசை இணையம் விரிவாக்கம் செய்யப்படுவதையும் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு துறையிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் 5-ஜி அலைவரிசை  உதவியுடன் நுகர்வோரைத் தீர்மானிப்பதும், இந்தியாவின் வளர்ச்சிக்கான வேகத்தை துரிதப்படுத்தியிருப்பதையும் குறிப்பிட்டார்.

உற்பத்தித் துறையில் உலக அளவில் இந்தியா அபரிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளதையும் பிரதமரின் உற்பத்தியுடன் ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.2.5 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டிருப்பதையும் அவர் நினைவு கூர்ந்தார். சர்வதேச உற்பத்தியாளர்களிடையே இந்தத் திட்டம் பிரபலம் அடைந்ததன் காரணமாக பல்வேறு துறைகளில் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தி அதிகரித்திருப்பதாகவும், இதில் பல கோடி ரூபாய் மத்தியப்பிரதேசத்தில் முதலீடு செய்யப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் மத்தியப்பிரதேசத்தை மருந்தகம் மற்றும் ஜவுளி கேந்திரமாக மாற்றி வருவதாகவும் மத்தியப்பிரதேசத்தில் அதிக அளவில் முதலீடு செய்து இந்தத் திட்டத்தின்  மூலம்  பயனடையுமாறும் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

பசுமை சுற்றுச்சூழலுக்கு வழிவகுக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாகவும் இதன் மூலம் ரூ.8 லட்சம் கோடிக்கான முதலீடு வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். இதில் இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன் சர்வதேச அளவிலான பசுமை  எரிசக்திக்கானத் தேவையையும் பூர்த்தி செய்யும் என்றார். சுகாதாரம், வேளாண்மை, ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க முயற்சிகளில், இந்தியாவுடன் இணைந்து சர்வதேச அளவிலும் விநியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டியது  அவசியம் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

 

 

 

 

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi