வணக்கம்!
துபாயில் நடைபெறும் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் இந்திய பெவிலியனுக்கு அனைவரையும் வரவேற்கிறோம். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கண்காட்சி ஆகும். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா பிராந்தியத்தில் நடைபெறும் முதல் நிகழ்ச்சியாகும். இந்தியா இந்த கண்காட்சியில் மிகப்பெரிய அரங்குடன் பங்கேற்கிறது. எதிர்காலத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துபாயுடனான நமது ஆழ்ந்த வரலாற்று உறவுகளை மேம்படுத்துவதில் இந்த கண்காட்சி பெரும் பங்கு வகிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்திய அரசு மற்றும் இந்திய மக்கள் சார்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் மற்றும் அபுதாபியின் ஆட்சியாளர் மரியாதைக்குரிய ஷேக் கலீபா பின் சயீத் பின் அல் நஹ்யானுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும் துணை ஜனாதிபதியும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அபுதாபியின் பட்டத்து இளவரசர் எனது சகோதரர் மரியாதைக்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அடிப்படை கூட்டணியில் நாங்கள் அடைந்த முன்னேற்றத்திற்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார். இரு நாடுகளின் முன்னேற்றத்திற்காகவும் செழிப்புக்காகவும் எங்கள் பணி தொடரும் என எதிர்பார்கிறேன்.
நண்பர்களே,
எக்ஸ்போ 2020 கண்காட்சியின் முக்கிய கருப்பொருள்: மனதை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க இந்தியா எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் இந்த கருப்பொருள் அடிப்படையாக இருப்பதை காணமுடியும். எக்ஸ்போ 2020 ஐ அருமையான முறையில் ஏற்பாடு செய்ததற்காக ஐக்கிய அரபு அமீரக அரசை வாழ்த்துகிறேன். இந்த எக்ஸ்போ நூற்றாண்டுக்கு ஒரு முறை தொற்றுநோய்க்கு எதிராக மனிதகுலம் ஒன்று திரளும் நெகிழ்ச்சிக்கு சான்றாகும்.
நண்பர்களே,
இந்திய அரங்கின் கருப்பொருள்: வெளிப்படை தன்மை, வாய்ப்பு மற்றும் வளர்ச்சி. இன்றைய இந்தியா உலகின் மிக திறந்த நாடுகளில் ஒன்றாகும். கற்றலுக்குத் திறந்திருக்கிறது, முதலீடுகளுக்கும், புதுமைகளுக்கும் வாசல் திறந்திருக்கிறது. அதனால்தான் எங்கள் தேசத்தில் வந்து முதலீடு செய்ய நான் உங்களை அழைக்கிறேன். இன்று, இந்தியா வாய்ப்புகளின் பூமி. கலை அல்லது வணிகம், தொழில் அல்லது கல்வித் துறையில் இருந்தாலும்,கண்டறியும் வாய்ப்பு, பங்குதாரர் ஆவதற்கான வாய்ப்பு, முன்னேறுவதற்கான வாய்ப்பு குவிந்துள்ளது. இந்தியாவிற்கு வந்து இந்த வாய்ப்புகளை ஆராயுங்கள். இந்தியாவும் உங்களுக்கு அளவில் வளர்ச்சி, லட்சியத்தில் வளர்ச்சி, முடிவுகளில் வளர்ச்சி என அதிகபட்ச வளர்ச்சியை வழங்கும். இந்தியாவிற்கு வந்து எங்கள் வளர்ச்சி கதையின் ஒரு பகுதியாக இருங்கள்.
நண்பர்களே,
இந்தியா அதன் துடிப்பான பன்முகத்தன்மைக்கு பிரபலமானது. எங்களிடம் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், உணவு வகைகள், கலை வடிவங்கள், இசை மற்றும் நடனம் உள்ளன. இந்த பன்முகத்தன்மை எங்கள் அரங்கில் பிரதிபலிக்கிறது. அதேபோல, இந்தியா திறமைசாலிகளின் சக்தி இல்லம், அத்துடன் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் உலகில் பல முன்னேற்றங்களை செய்து வருகிறது, நமது பொருளாதார வளர்ச்சி மரபு சார்ந்த தொழில்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர் கலவையால் இயக்கப்படுகிறது. இந்த இந்திய அரங்கம், இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள சிறந்த காட்சிகளைக் காட்சிப்படுத்துகிறது. இது சுகாதாரம், ஜவுளி, உள்கட்டமைப்பு, சேவைகள் மற்றும் பல துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளையும் காட்சிப்படுத்தும். கடந்த ஏழு ஆண்டுகளில், இந்திய அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பல சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்தப் வளர்ச்சியை தொடர நாங்கள் இன்னும் அதிகமாக சீர்த்திருத்தங்களை மேற்கொள்வோம்.
நண்பர்களே,
அமிர்த மஹோத்ஸவ் வடிவத்தில் இந்தியா 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், அனைவரையும் இந்திய அரங்கிற்கு வருகை தந்து எழுச்சி பெற்ற புதிய இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மீண்டும் அழைக்கிறோம். 'அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி,அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி ஆகியவற்றுடன் உலகை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றுவோம்.
நன்றி.
மிக்க நன்றி.