கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐஸ்லாந்து பிரதமர் திருமதி காத்தரின் ஜாகோப்ஸ்டாட்டிர் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஸ்டாக்ஹோமில் ஏப்ரல் 2018-ல் நடைபெற்ற முதலாவது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின்போது, தாங்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டதை இரு பிரதமர்களும் நினைவு கூர்ந்தனர். மேலும், இரு நாடுகளிடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 50-வது ஆண்டு நிறைவை இருநாடுகளும் கொண்டாடி வருவதையும் சுட்டிக்காட்டினர்.
புவி வெப்ப எரிசக்தி, நீலப் பொருளாதாரம், ஆர்டிக், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மீன்வளம், உணவு பதப்படுத்துதல், டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். குறிப்பாக, புவி உள் வெப்ப எரிசக்தித் துறையில், ஐஸ்லாந்து, சிறப்பு நிபுணத்துவம் பெற்றுள்ளதால், இந்தத் துறையில் இருநாட்டு பல்கலைக்கழகங்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து இருநாடுகளும் வலியுறுத்தின.
பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதில், பிரதமர் ஜாகோப்ஸ்டாட்டிரின் தனிப்பட்ட முயற்சிகளை பாராட்டிய பிரதமர், இந்த விவகாரத்தில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்தியா – ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்க (EFTA) வர்த்தக பேச்சுவார்த்தைகளும் இந்த விவாதத்தில் இடம் பெற்றது. பிராந்திய மற்றும் சர்வதேச நிலவரம் குறித்தப் பேச்சுக்களும் இடம் பெற்றன.
Prime Minister @narendramodi held talks with PM @katrinjak of Iceland. They discussed boosting ties in areas like trade, energy, fisheries and more. pic.twitter.com/kw2koKnm9t
— PMO India (@PMOIndia) May 4, 2022