பாலியில் நடைபெறும் ஜி-20 தலைவர்களின் உச்சிமாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் மேதகு திரு ஜோசப் ஆர். பைடன் மற்றும் இந்தோனேசிய அதிபர் மேதகு திரு ஜோகோ விடோடோ ஆகியோரை இன்று சந்தித்துப் பேசினார்.
சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பின் முக்கிய மன்றமாக ஜி-20 திகழ்கிறது என்று கூறிய பிரதமர், சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்காக முக்கிய பொருளாதரங்கள் அனைத்தையும் இணைப்பதற்கான திறனை இந்த அமைப்பு தொடர்ந்து வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நமது பொருளாதாரங்களில் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மீண்டும் கொண்டு வரவும், தற்போதைய பருவநிலை, எரிசக்தி மற்றும் உணவு தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், உலகளாவிய மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தவும், தொழில்நுட்ப மாற்றங்களை ஊக்குவிக்கவும் ஜி-20 அமைப்பு பணியாற்றுகிறது.
இந்த அமைப்பிற்குத் தலைமை தாங்கும் போது இதர வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்கும் என்று பிரதமர் திரு மோடி உறுதியளித்தார். பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு உதவுதல்; உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஆதரவு; பொருளாதார பாதுகாப்பு மற்றும் சர்வதேச விநியோக சங்கிலியை வலுப்படுத்துவது; பல அம்ச நிதி நிறுவனங்களுக்கு மேம்பட்ட மற்றும் புதுமையான நிதி மாதிரிகளை உருவாக்குதல்; பருவநிலை மாற்றம், பெருந்தொற்று, பலவீனமான பொருளாதாரம், வறுமை ஒழிப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைதல், உள்கட்டமைப்பு இடைவெளியைக் குறைப்பதற்கு அரசு மற்றும் தனியார் நிதியைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் ஜி-20 அமைப்பின் பங்களிப்பை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 அமைப்பின் பணிகளுக்கு ஆதரவளித்ததற்காக அதிபர்கள் திரு விடோடோ மற்றும் திரு பைடன் ஆகியோருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.