Mann Ki Baat is completing 10 years: PM Modi
The listeners of Mann Ki Baat are the real anchors of this show: PM Modi
Water conservation efforts across the country will be instrumental in tackling water crisis: PM Modi
On October 2nd, we will mark 10 years of the Swachh Bharat Mission: PM Modi
The mantra of 'Waste to Wealth' is becoming popular among people: PM Modi in Mann Ki Baat
The US government returned nearly 300 ancient artifacts to India: PM Modi in Mann Ki Baat
‘Ek Ped Maa Ke Naam’ is an extraordinary initiative that truly exemplifies ‘Jan Bhagidari’: PM Modi
India has become a manufacturing powerhouse: PM Modi

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் மீண்டும் உங்களோடு இணைய, மீண்டுமொரு சந்தர்ப்பம்.  இன்றைய பகுதி என்னை உணர்ச்சியிலாழ்த்துவது, பழைய நினைவுகள் என்னைச் சூழ்ந்து விட்டன.  ஏன் தெரியுமா?  நம்முடைய மனதின் குரலுக்கு பத்து வயதாகி விட்டது; பத்தாண்டுகள் முன்பாக மனதின் குரல் அக்டோபர் 3ஆம் தேதியன்று, விஜயதசமி நன்னாளன்று தொடங்கப்பட்டது.  அந்த நாள் எத்தனை புனிதமான நாள்!!!  இது இயல்பாக அமைந்த ஒன்று.  இதோடு கூடவே, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று நாம் மனதின் குரலின் பத்தாண்டுகளை நிறைவு செய்யும் அதே வேளையிலே, நவராத்திரி புண்ணிய காலத்தின் முதல் நாளுமாகவும் இருக்கும்.   மனதின் குரலின் இந்த நீண்டநெடிய பயணத்திலே பல கட்டங்களை என்னால் மறக்க இயலாது.  மனதின் குரலில் கோடிக்கணக்கான நேயர்கள் நம்முடைய இந்தப் பயணத்தின் போது கூட்டாளிகளாக இருந்தார்கள், தொடர்ந்து எனக்குத் தோள் கொடுத்தும் வந்தார்கள்.  தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் தகவல்களை எனக்குத் திரட்டித் தந்தார்கள்.  மனதின் குரலின் நேயர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் உண்மையான சூத்திரதாரிகள்.  காரசாரமான விஷயம் இல்லையென்று சொன்னால், எதிர்மறை விஷயங்கள் இல்லையென்று சொன்னால், அந்த விஷயமோ, நிகழ்ச்சியோ அதிக கவனத்தைப் பெறாது என்று பொதுவாகவே ஒரு கருத்து உண்டு.   ஆனால் ஆக்கப்பூர்வமான தகவல்களுக்காக நாட்டுமக்களிடத்திலே எத்தனை தாகம் இருக்கிறது, ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், உத்வேகமளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுகள், நம்பிக்கையூட்டக்கூடிய சம்பவங்கள் ஆகியவற்றை மக்கள் எத்தனை பேரார்வத்தோடு அரவணைத்துக் கொள்கிறார்கள் என்பதை மனதின் குரலின் வெற்றி நிரூபித்துக் காட்டியிருக்கிறது.  சகோரப் பறவை என்று ஒன்று உண்டு, இது மழைநீர்த்துளிகளை மட்டுமே பருகி உயிர் வாழுமாம்.  மக்களும் கூட இந்த சகோரப் பறவையைப் போலவே, தேசத்தின் சாதனைகளையும், மக்களின் சமூகரீதியான சாதனைகளையும் எந்த அளவுக்கு பெருமிதத்தோடு செவி மடுக்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் மனதின் குரலில் பார்த்தோம்.  மனதின் குரலின் பத்தாண்டுக்காலப் பயணம் எப்படிப்பட்டதொரு மாலையைத் தயாரித்திருக்கிறது என்று சொன்னால், இதன் ஒவ்வொரு பகுதியிலும் புதிய காதைகள், புதிய உயர்வுகள், புதிய ஆளுமைகள் இணைந்து கொண்டே வருகின்றன.  நமது சமூகத்தின் சமூக உணர்வோடு கூட அரங்கேறும் செயல்களுக்கு மனதின் குரல் வாயிலாக கௌரவம் கிடைக்கிறது.  அந்த வேளையிலே மனதின் குரலுக்காக வந்திருக்கும் கடிதங்கள் என் நெஞ்சையும் கூட பெருமிதத்தில் விம்மச் செய்கின்றன.  நம்முடைய தேசத்திலே தான் எத்தனை திறமைசாலிகள் இருக்கின்றார்கள்!!  அவர்களிடம் தேசம் மற்றும் சமூகத்திற்கு சேவை புரிய வேண்டும் என்று எத்தனை தாகம் இருக்கிறது!!  சுயநலமற்ற தன்மையோடு சேவை செய்ய இவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்கின்றார்கள்.  இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வேளையிலே என்னுள்ளும் ஆற்றல் பொங்குகிறது.  மனதின் குரலின் இந்த மொத்தச் செயல்பாடும் என்னைப் பொறுத்த வரையில் எப்படிப்பட்டதென்றால், இது ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதற்கு ஒப்பானது.  மனதின் குரலின் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு சம்பவத்தையும், ஒவ்வொரு கடிதத்தையும் நான் நினைத்துப் பார்க்கும் போது, மக்களாகிய மகேசர்கள் எனக்கு இறைவனாரின் வடிவங்கள், அவர்களை நான் தரிசனம் செய்கிறேன் என்றே நான் உணர்கிறேன். 

நண்பர்களே, நான் இன்று தூர்தர்ஷன், பிரசார்பாரதி மற்றும் ஆல் இண்டியா ரேடியோவோடு தொடர்புடைய அனைவரையும் பாராட்டுகிறேன்.  இவர்களுடைய தீவிரமான முயற்சிகள் காரணமாகவே மனதின் குரலின் இந்த மகத்துவம் நிறைந்த கட்டத்தை நாம் எட்ட முடிந்திருக்கிறது.  தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைக் காட்சிப்படுத்திவரும் பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள், மண்டலத் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  மனதின் குரல் வாயிலாக நாம் எந்த பிரச்சனைகளை எழுப்பினோமோ, ஊடக நிறுவனங்கள் இவற்றை ஒரு இயக்கமாகவே மாற்றினார்கள்.  நான் அச்சு ஊடகத்திற்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன், இவர்கள் தாம் இதனை வீடுகள்தோறும் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.  அதே போல யூடியூபர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன், இவர்கள் தாம் மனதின் குரல் தொடர்பாக பல நிகழ்ச்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.  இந்த நிகழ்ச்சியை 22 மொழிகளோடு கூடவே, 12 அயல்நாட்டு மொழிகளிலும் கேட்க முடிகிறது.  தங்களுடைய பிராந்திய மொழியிலே மனதின் குரலைக் கேட்பதாக மக்கள் என்னிடத்திலே கூறும் போது எனக்கு மிக உவப்பாக இருக்கிறது.  மனதின் குரல் நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்ட ஒரு வினா-விடை போட்டி நடைபெற்றுவருவது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்.  இதிலே யார் வேண்டுமானாலும் பங்கெடுத்துக் கொள்ளலாம்.   Mygov.in தளத்திற்குச் சென்று, நீங்கள் இந்தப் போட்டியில் பங்கெடுக்கலாம்,   மகத்துவம் வாய்ந்த இன்றைய இந்தத் தருவாயில், நான் மீண்டுமொரு முறை உங்கள் அனைவரின் நல்லாசிகளையும் வேண்டுகிறேன்.  பவித்திரமான மனத்தோடும், முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடும், இதைப் போன்றே பாரதநாட்டு மக்களுக்கு நான் வாழ்த்துப்பா பாடிக் கொண்டே இருக்க வேண்டும்.  தேசத்தின் சமூகசக்தியை நாமனைவரும் இதைப் போன்றே கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும் – இதுவே இறைவனிடத்திலே என்னுடைய வேண்டுதல், மக்களாகிய மகேசர்களிடம் என் பிரார்த்தனை.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கடந்த சில வாரங்களாகவே தேசத்தின் பல்வேறு பாகங்களில் கடும்மழை பெய்துவருகிறது.  நீர் சேமிப்பு எத்தனை மகத்துவம் வாய்ந்தது, நீரைச் சேமித்து வைப்பது எத்தனை அவசியமானது என்பதை இந்த மழைக்காலம் நமக்கு அறிவுறுத்துகிறது.  மழைக்கால நாட்களில் சேமிக்கப்படும் நீரானது, நீர் தட்டுப்பாடு மாதங்களில் மிகவும் உதவிகரமாக இருக்கிறது, இது தான் ‘Catch the Rain‘ மழைநீரைச் சேமிப்போம் போன்ற இயக்கங்களின் உணர்வாகும்.  நீர் பாதுகாப்பு தொடர்பாக பலர், பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்று.  இப்படிப்பட்டதொரு முயற்சியைத் தான் உத்திரபிரதேசத்தின் ஜான்சியில் நம்மால் காண முடிகிறது.  ஜான்சி புந்தேல்கண்டில் இருப்பதும், அங்கே நீர்த்தட்டுப்பாடு எத்தனை கடுமையானது என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  இங்கே ஜான்சியிலே, சில பெண்கள், குராரி நதிக்குப் புத்துயிரூட்டி இருக்கிறார்கள்.  இந்தப் பெண்கள் சுயவுதவிக் குழுவோடு இணைந்தவர்கள், ஜல் சஹேலி, அதாவது நீர்த் தோழிகளாகி, இந்த இயக்கத்திற்குத் தலைமையேற்று நடத்தினார்கள்.  உயிரிழந்து போன குராரி நதியை இந்தப் பெண்கள் எவ்வாறு காப்பாற்றினார்கள் என்பதை உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது.  இந்த நீர்த்தோழிகள், சாக்குகளில் மணலை நிரப்பி, தடுப்பணைகளை ஏற்படுத்தினார்கள், மழைநீர் வீணாகாமல் தடுத்தார்கள், நதியை நீரால் நிரம்பச் செய்தார்கள்.  இந்தப் பெண்கள் பலநூறு நீர்நிலைகளை உருவாக்கி, அவற்றைப் புத்தாக்கம் செய்யப் புரிந்தார்கள்.  இதன் காரணமாக இந்தப் பகுதியிலே மக்களுக்கு இருந்த நீர் பிரச்சனை தொலைந்துபோனது, மக்களின் முகங்களிலே மகிழ்ச்சி மீண்டது. 

நண்பர்களே, ஒரு புறத்திலே பெண்சக்தி நீர்சக்தியை மேம்படுத்துகிறது என்றால், வேறோர் புறத்தில் நீர்சக்தியும் கூட பெண்சக்தியைப் பலப்படுத்துகிறது.  மத்திய பிரதேசத்தின் இரண்டு பெரிய கருத்தூக்கமளிக்கக்கூடிய முயற்சிகள் பற்றிய தகவல் கிடைத்தது.  இங்கே டிண்டௌரியின் ராய்புரா கிராமத்திலே ஒரு பெரிய குளத்தை நிறுவியதால், நிலத்தடி நீரின் மட்டம் கணிசமாக உயர்ந்தது.  இதனால் ஆதாயம் இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்குக் கிடைத்தது.  இங்கே சாரதா ஆஜீவிகா சுயவுதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு மீன்வளர்ப்பு என்ற புதிய தொழில் கிடைத்தது.  இந்தப் பெண்கள் மீன் அங்காடியைத் தொடக்கினார்கள், இங்கே மீன்களை விற்று தங்களுடைய வருமானத்தைப் பெருக்கியும் கொண்டார்கள்.  மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரைச் சேர்ந்த பெண்களின் முயற்சியும் மிகவும் பாராட்டுக்குரியது.  இங்கே இருக்கும் கோம்ப் கிராமத்தின் பெரிய குளம் வற்றத் தொடங்கிய போது, பெண்கள் இதற்குப் புத்துயிர் அளிக்கும் சவாலை மேற்கொண்டார்கள்.  ஹரி பகியா சுயவுதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள், குளத்திலிருந்து பெரிய அளவில் தூர்வாறி, குளத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த வண்டலை வளமற்ற நிலத்தில் கொட்டி அங்கே பழமரங்களைத் நட்டார்கள்.   இந்தப் பெண்களின் உழைப்பால் குளத்தில் நீர் நிறைந்ததோடு, பயிர்களின் அறுவடையும் கணிசமாக உயர்ந்தது.  தேசத்தின் பல்வேறு இடங்களிலும் நடந்தேறிவரும் நீர் சேமிப்பின் இத்தகைய முயற்சிகள், நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும்.  நீங்களும் கூட உங்கள் அக்கம்பக்கத்தில் இப்படிப்பட்ட முயற்சிகளில் கண்டிப்பாக ஈடுபடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுக்க உண்டு.

என் மனம்நிறை நாட்டுமக்களே, உத்தராகண்டின் உத்தரகாசியில் இருக்கும் ஒரு எல்லைப்புறக் கிராமத்தின் பெயர் ஜாலா.  இங்கிருக்கும் இளைஞர்கள் தங்களுடைய கிராமத்தைத் தூய்மையானதாக வைக்க, புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கியிருக்கின்றார்கள்.  இவர்கள் தங்களுடைய கிராமத்திலே தன்யவாத் பிரக்ருதி அல்லது இயற்கைக்கு நன்றி என்ற பெயரிலான இயக்கம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகின்றார்கள்.   இதன்படி, கிராமத்தில் தினமும் இரண்டு மணிநேரம் வரை துப்புரவுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  கிராமத்தின் வீதிகளில் இறைந்து கிடக்கும் குப்பைகளை ஒன்று திரட்டி, இவற்றை கிராமத்திற்கு வெளியே குறிப்பிட்டதொரு இடத்தில்  கொண்டு சேர்க்கின்றார்கள்.  இதனால் ஜாலா கிராமம் தூய்மையானதாக ஆகிறது, மக்களிடம் விழிப்புணர்வும் உண்டாகி வருகின்றது.  இப்படி கிராமங்கள்தோறும், வீதிகள்-குடியிருப்புப் பகுதிகள் தோறும், தங்கள் இடங்களிலே நன்றி இயக்கத்தைத் தொடக்கினால், எத்தனை பெரிய மாற்றத்தை நம்மால் ஏற்படுத்திவிட முடியும்!!

நண்பர்களே, தூய்மை தொடர்பாக புதுச்சேரியின் கடற்கரைப் பகுதியிலும் கூட பலமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இங்கே ரம்யா அவர்கள், மாஹே நகராட்சி மற்றும் இதன் அருகிலே இருக்கும் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் குழு ஒன்றை ஏற்படுத்தி வழிநடத்தி வருகிறார்.  இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள், தங்கள் முயற்சிகள் வாயிலாக மாஹே பகுதியை, குறிப்பாக இங்கே இருக்கும் கடற்கரைப் பகுதிகளை முழுமையான வகையிலே தூய்மையானதாக ஆக்கி வருகிறார்கள். 

நண்பர்களே, இங்கே நான் இரண்டு முயற்சிகளைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன் ஆனால், நமக்கருமே நாம் பார்த்தோமென்றால், தேசத்தின் அனைத்து பாகங்களிலுமே தூய்மை தொடர்பாக ஏதாவது ஒரு வித்தியாசமான முயற்சி அரங்கேறி வருவதைக் கண்டிப்பாக நம்மால் காண முடியும்.  சில நாட்களுக்குப் பிறகு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று தூய்மை பாரத் மிஷனின் பத்தாண்டுகள் நிறைவடைய இருக்கின்றன.  இதனை பாரத சரித்திரத்தின் இத்தனை பெரிய மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கும் அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தின் போது நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.  தன் வாழ்க்கை முழுவதும் தூய்மை என்ற நோக்கத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த காந்தியடிகளுக்கு இது மெய்யான சிரத்தாஞ்சலிகளாகும்.

நண்பர்களே, இன்று இந்த தூய்மை பாரத இயக்கத்தின் வெற்றி காரணமாகவே ‘Waste to Wealth’ கழிவிலிருந்து செல்வம் என்ற மந்திரம் அனைவருக்கும் பிடித்தமானதாகி இருக்கிறது.  மக்கள் ‘Reduce, Reuse மற்றும் Recycle’ கழிவுகளைக் குறைப்பீர், மீள்பயன்படுத்துவீர், மறுசுழற்சி செய்வீர் என்பது குறித்து மக்கள் பேசத் தொடங்கி விட்டார்கள், இதன் எடுத்துக்காட்டுகளை இயம்ப ஆரம்பித்து விட்டார்கள்.  கேரளத்தின் கோழிக்கோட்டிலே ஒரு அருமையான முயற்சி பற்றி எனக்குத் தெரிய வந்தது.  இங்கே 74 வயதான சுப்பிரமணியன் அவர்கள், 23,000த்திற்கும் மேற்பட்ட நாற்காலிகளை சீர்செய்து, இவற்றை மீள்பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறாராம்.  மக்கள் இவரை ரெட்யூஸ், ரீயூஸ், ரீசைக்கிள், அதாவது ட்ரிப்பிள் ஆர் சேம்பியன் என்றும் அழைக்கிறார்களாம்.  இவருடைய இந்த வித்தியாசமான முயற்சிகளின் வெளிப்பாடுகளை கோழிக்கோடு சிவில் ஸ்டேஷன், பொதுப்பணித்துறை மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கழகம் போன்ற நிறுவனங்களின் அலுவலகங்களில் காண முடியும்.

நண்பர்களே, தூய்மை தொடர்பாக நடந்துவரும் இயக்கத்தில் நாம் அதிகபட்ச மக்களை இணைக்க வேண்டும், இந்த இயக்கம் மட்டுமே, ஏதோ ஒரு நாளோ, ஓர் ஆண்டோ நடந்து முடிந்துவிடும் இயக்கமல்ல;  இது பல யுகங்களாகத் தொடர்ந்து செய்யப்படக்கூடிய பணியாகும்.  தூய்மை என்பது நமது இயல்பாகவே ஆகும் வரையில் இந்தப் பணி தொடரும்.  நீங்களும் உங்கள் குடும்பத்தார், நண்பர்கள், அண்டை அயலார் அல்லது சக ஊழியர்களோடு இணைந்து தூய்மை இயக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.  தூய்மை பாரத இயக்கத்தின் வெற்றியின் பொருட்டு நான் உங்களனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். 

என் மனம்நிறை நாட்டு மக்களே, நமது மரபு-பாரம்பரியம் குறித்து நம்மனைவருக்கும் பெருமை உண்டு.  வளர்ச்சியோடு சேர்ந்து மரபும் என்று நான் எப்போதுமே கூறி வந்திருக்கிறேன்.  இதன் காரணமாகவே, சில நாட்கள் முன்பு எனது அமெரிக்கப் பயணத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சம் குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.  மீண்டும் ஒருமுறை நமது தொனமையான கலைப்படைப்புகள் நாடு மீண்டிருப்பது தொடர்பாக நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  இது தொடர்பாக உங்களனைவரின் உணர்வுகளையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, மேலும் மனதின் குரல் நேயர்களுக்கும் இதைப் பற்றி பகிர்ந்து கொள்ள விழைகிறேன். 

நண்பர்களே, எனது அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்க அரசாங்கம் பாரதத்திடம் கிட்டத்தட்ட 300 தொன்மையான கலைப்படைப்புக்களைத் திருப்பிக் கொடுத்தது.  அமெரிக்க குடியரசுத் தலைவர் பைடன் அவர்கள், பெரும் இணக்கத்தை வெளிப்படுத்தி, டெலாவேரில் உள்ள தன்னுடைய தனிப்பட்ட இல்லத்தில் இவற்றில் சில கலைப்படைப்புக்களை என்னிடத்தில் காட்டினார்.  திருப்பிக் கொடுக்கப்பட்ட கலைப்படைப்புக்கள், சுடுமண்பாண்டம், கல், யானையின் தந்தம், மரம், வெண்கலம், செம்பு போன்றவற்றால் ஆனவையாக இருந்தன.  இவற்றில் பல 4000 ஆண்டுகள் பழைமையானவை.  4000 ஆண்டுகள் பழைமையானவை தொடங்கி, 19ஆம் நூற்றாண்டு வரையிலான கலைப்படைப்புகளை அமெரிக்க திரும்பக் கொடுத்திருக்கிறது.  இவற்றில் பூ ஜாடி, கடவுளர்களின் சுடுமண் திருவுருவங்கள் அவற்றின் பட்டைகள், ஜைன தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களைத் தவிர, பகவான் புத்தர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவுருவங்களும் அடங்கும்.  திரும்பக் கொடுக்கப்பட்ட பொருட்களில் பல்வேறு அளவுகளில் விலங்கினங்களும் இருக்கின்றன.  ஆடவர் பெண்டிர் வடிவிலான ஜம்மு கஷ்மீரத்தின் சுடுமண்ணோடுகள் மிகவும் சுவாரசியமானவையாக இருந்தன.  இவற்றில் செம்பாலான பிள்ளையாரின் மூர்த்தங்களும் இருந்தன, இவை தென்னாட்டைச் சார்ந்தவை.  திரும்பக் கொடுக்கப்பட்ட பொருட்களில் அதிக எண்ணிக்கையில் பகவான் விஷ்ணுவின் படங்களும் இருந்தன. இவை முக்கியமாக, வட மற்றும் தென் பாரதத்தோடு தொடர்புடையவை.  இந்தக் கலைப்படைப்புகளைப் பார்க்கும்போது, நமது முன்னோர்கள் எந்த அளவுக்கு நுணுக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.   கலை தொடர்பாக அவர்களிடத்திலே ஆச்சரியமான புரிதல் இருந்தது.  இவற்றில் பல கலைப்படைப்புகள் கடத்தப்பட்டவை, பிற சட்டவிரோதமான முறைகளில் தேசத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டவை.  இவை கடுமையான குற்றங்கள், ஒருபுறத்திலே நம்முடைய மரபைச் சிதைப்பது போன்றதாகும்;  ஆனால் ஒரு விஷயம் சந்தோஷமளிப்பது என்னவென்றால், கடந்த பத்தாண்டுகளில், இப்படிப்பட்ட பல கலைப்படைப்புகள், நமது பல தொன்மையான மரபுச் சின்னங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.  இந்தத் திசையில், இன்று, பாரதம் பல நாடுகளோடு இணைந்து பணியாற்றி வருகிறது.   நமது மரபின் மீது நாம் பெருமிதம் கொள்ளத் தொடங்கும் போது தான் உலகமும் அதனை மதிக்கும் என்பதே என் நம்பிக்கை என்பதோடு, இதன் விளைவாகவே இன்று உலகின் பல நாடுகள் நம் நாட்டிலிருந்து வெளிச்சென்ற இப்படிப்பட்ட கலைப்படைப்புக்களை நமக்குத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

எனதருமை நாட்டுமக்களே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் எந்த மொழியைக் கற்றுக் கொள்ள முடியும் என்று எந்த ஒரு சிறுவனிடத்திலும் வினவினால், தாய்மொழி என்றே விடை வரும்.  நம்முடைய தேசத்திலே சுமார் 20,000 மொழிகளும், வழக்குமொழிகளும் இருக்கின்றன, இவையனைத்தும் யாரோ ஒருவருக்குத் தாய்மொழியாக இருக்கின்றன.  சில மொழிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவானதாக இருக்கலாமானாலும், அந்த மொழிகளைப் பாதுகாக்க இன்று வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  டிஜிட்டல் புதுமைபுகுத்தல் துணையோடு சந்தாலி மொழிக்கு புதிய அடையாளம் அளிக்கும் இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.  சந்தாலி மொழி நமது தேசத்தின் பல மாநிலங்களில் வசிக்கும் சந்தால் பழங்குடியினச் சமுதாய மக்களின் மொழியாக இருக்கிறது.  பாரதம் தவிர, வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய இடங்களிலும் கூட சந்தாலி மொழி பேசும் பழங்குடி சமூகத்தார் இருக்கின்றார்கள்.  சந்தாலி மொழிக்கான இணையவழி அடையாளத்தை உருவாக்க, ஒடிஷாவின் மயூர்பஞ்ஜ்ஜில் வசிக்கும் ராம்ஜீத் டுடு அவர்கள் ஒரு இயக்கத்தைத் தொடங்கியிருக்கின்றார்கள்.  ராம்ஜீத் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் டிஜிட்டல் தளத்தில், சந்தாலி மொழியோடு தொடர்புடைய இலக்கியத்தைப் படிக்க இயலும், சந்தாலி மொழியில் எழுத இயலும்.  சில ஆண்டுகள் முன்பாக ராஜ்மீத் அவர்கள் கைப்பேசியைப் பயன்படுத்தத் தொடங்கிய போது, தனது தாய்மொழியிலே தகவல்களை அனுப்ப முடியவில்லையே என்று வருந்தினார்.  இதன் பிறகு சந்தாலி மொழியின் எழுத்துருவான ‘ஓல் சிகி’யில் தட்டச்சு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தார்.  தனது சில கூட்டாளிகளின் துணையோடு இவர் ‘ஓல் சிகி’யில் தட்டச்சு செய்யும் நுட்பத்தை மேம்படுத்தினார்.  இன்று இவருடைய முயற்சிகள் காரணமாக சந்தாலி மொழியில் எழுதப்பட்ட கதைகள் கட்டுரைகள் எல்லாம் இலட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்து வருகின்றன.

நண்பர்களே, நமது உறுதிப்பாடும், சமூகப் பங்களிப்பும் சங்கமிக்கும் போது, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் அற்புதமான விளைவுகள் மலர்கின்றன.  இதற்கான புத்தம்புது எடுத்துக்காட்டுத் தான், ‘அன்னையின் பெயரில் ஓர் மரம்’ – இந்த இயக்கம் அற்புதமான இயக்கமாக மிளிர்ந்திருக்கிறது, மக்களின் பங்களிப்புக்கான இப்படிப்பட்டதொரு எடுத்துக்காட்டு உள்ளபடியே உத்வேகம் தரவல்லது.  சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக தொடங்கப்பட்ட இந்த இயக்கம் தேசத்தின் அனைத்து மூலைகளிலும் இருக்கும் மக்களின் பங்களிப்பின் துணையோடு ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.   உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தானம், தெலங்கானா மாநிலங்கள் இலக்கிற்கும் விஞ்சிய எண்ணிக்கையில் மரங்களை நட்டு சாதனைகளைப் படைத்திருக்கின்றன.  இந்த இயக்கத்தின்படி உத்தர பிரதேசத்தில் 26 கோடிக்கும் மேற்பட்ட மரங்களும், குஜராத்தில் 15 கோடிக்கும் மேற்பட்ட மரங்களும், ராஜஸ்தானத்தில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 6 கோடிக்கும் அதிகமான மரங்களும் நடப்பட்டிருக்கின்றன.  தேசத்தின் ஆயிரக்கணக்கான பள்ளிகளும் கூட இந்த இயக்கத்தில் விறுவிறுப்பாக கலந்து கொண்டன.

 

நண்பர்களே, நமது தேசத்திலே மரம்நடும் இயக்கத்தோடு தொடர்புடைய ஏராளமான எடுத்துக்காட்டுகள் வந்தவண்ணம் இருக்கின்றன.  இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டுத் தான் தெலங்காணாவின் கே.என். ராஜஷேகர் அவர்களுடையது.  மரம்நடுவதில் இவருக்கு இருக்கும் தீவிர முனைப்பு நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.  சுமார் நான்கு ஆண்டுகள் முன்பாக இவர் மரம்நடும் இயக்கத்தைத் தொடங்கினார்.  ஒவ்வொரு நாளும் ஒரு மரம் நடுவது என்று இவர் தனக்குத் தானே தீர்மானித்துக் கொண்டார்.  இந்த உறுதிப்பாட்டை இவர் மிகத் தீவிரமான விரதம் போன்றே கடைப்பிடித்து, 1500க்கும் மேற்பட்ட மரங்களை இதுவரை நட்டிருக்கிறார்.  மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இந்த ஆண்டு ஒரு விபத்துக்கு ஆளான பிறகும் கூட இவர் தனது உறுதிப்பாட்டிலிருந்து சற்றும் தளரவில்லை.  இப்படிப்பட்ட அனைத்து முயற்சிகளையும் நான் இதயப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.  அன்னையின் பெயரில் ஓர் மரம் என்ற இந்த பவித்திரமான இயக்கத்தோடு கண்டிப்பாக நீங்களும் இணைய வேண்டும் என்பதே நான் உங்களிடம் விடுக்கும் வேண்டுகோள்.

எனதருமை நாட்டுமக்களே, நமதருகே இருப்போர் சிலர், பேரிடர்க்காலங்களில் தங்கள் பொறுமையை இழப்பதில்லை, மாறாக அதிலிருந்து கற்கிறார்கள்.  இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் பெயர் சுபஸ்ரீ.  இவர் தனது முயற்சியின் துணையால், கடினமான மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகளால் ஒரு அற்புதமான பூங்காவை உருவாக்கி இருக்கிறார்.  இவர் தமிழ்நாட்டின் மதுரையில் வசிப்பவர்.  இவர் தொழில்ரீதியாக ஆசிரியையாக இருந்தாலும், மருத்துவத் தாவரங்களின்பால் இவருக்கு அலாதியான பிரியம் இருக்கிறது.  இவருடைய இந்த ஈடுபாடு, 1980களில் தொடங்கியது; ஒரு முறை இவருடைய தந்தையாரை நச்சுப்பாம்பு ஒன்று தீண்டிய போது, பாரம்பரியமான மூலிகைகள்-தாவரங்களைக் கோண்டு உடல்நலம் மீட்சி பெறுவதில் உதவிகரமாக இருந்தது.  இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பாரம்பரியமான மருத்துவத் தாவரங்களைப் பற்றிய தேடலைத் தொடக்கினார் இவர்.  இன்று மதுரையின் வரிச்சியூர் கிராமத்தில் இருக்கும் இவருடைய வித்தியாசமான மூலிகைப் பூங்காவிலே 500க்கும் மேற்பட்ட அரியவகை மூலிகைச் செடிகள் இருக்கின்றன.  தனது இந்தப் பூங்காவைத் உருவாக்க இவர் தீவிரமாக உழைக்க வேண்டியிருந்தது.  ஒவ்வொரு தாவரத்தையும் தேடித்தேடி இவர் தொலைதூரங்களுக்குப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார், தகவல்களைத் திரட்டி இருக்கிறார், பலமுறை மற்றவர்களிடம் உதவிகளையும் கோரியிருக்கிறார்.  கோவிட் காலத்தில், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கக்கூடிய மருத்துவ மூலிகைகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார்.  இன்று இவருடைய இந்த மூலிகைப் பூங்காவைக் காண தொலைவான பகுதிகளிலிருந்தும் பலர் வருகிறார்கள்.  இவர் அனைவருக்கும் மருத்துவத் தாவரங்களைப் பற்றிய தகவல்களையும், அவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் விளக்குகிறார்.  சுபஸ்ரீ அவர்கள், பலநூறு ஆண்டுகள் நமது கலாச்சாரத்தின் அங்கமாக விளங்கும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.  அவருடைய மூலிகைப் பூங்காவானது, நமது கடந்தகாலத்தை, வருங்காலத்தோடு இணைக்கிறது, அவருக்கு நம்முடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.

நண்பர்களே, மாறிவரும் காலத்திலே வேலைகளின் தன்மையும் மாறிக்கொண்டே வருகிறது, புதியபுதிய துறைகள் உருவாகி வருகின்றன.  எப்படி கேமிங், அனிமேஷன், ரீல் மேகிங், திரைப்படத் தயாரிப்பு அல்லது போஸ்டர் தயாரிப்பு இவை போன்று.  இவற்றிலே ஒன்றில் உங்களுடைய திறமையை நன்கு சிறப்பாக உங்களால் வெளிப்படுத்த முயன்றால், உங்கள் திறன்களுக்கு மிகப்பெரிய மேடை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.  நீங்கள் ஒரு வாத்தியக்குழு-பேண்டோடு தொடர்புடையவராகவோ, சமுதாய வானொலிக்காகப் பணியாற்றுபவராகவோ இருந்தால், உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது.  உங்களுடைய திறமை மற்றும் படைப்புத்திறனை மேம்படுத்த பாரத அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ‘Create in India’ ‘இந்தியாவில் படைப்போம்’ என்ற கருத்திலான 25 சவால்களைத் தொடங்கி இருக்கிறது.  இந்தச் சவால்கள் உங்களுக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும்.  சில சவால்கள் இசை, கல்வி மற்றும் Anti-Piracy எனப்படும் படைப்பாற்றல் களவுக்கு எதிரான நடவடிக்கைகளின் மீதும் கவனம் செலுத்துவதாக இருக்கின்றது.  இந்த ஏற்பாட்டில் பல தொழில்சார் அமைப்புக்களும் பங்கெடுக்கின்றன, இவை இந்த சவால்களுக்குத் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் அளிக்கவிருக்கின்றன.  இவற்றில் கலந்து கொள்ள நீங்கள் wavesindia.org என்ற இணையத்தளத்தில் நுழையவும்.  நாடெங்கிலும் இருக்கும் படைப்பாளிகளிடம் என்னுடைய சிறப்பான வேண்டுகோள், நீங்கள் கண்டிப்பாக இதிலே கலந்து கொள்ளுங்கள், உங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள்.

என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த மாதம் மேலும் ஒரு மகத்துவமான இயக்கத்தின் பத்தாண்டுகள் நிறைவடையவிருக்கிறது.  இந்த இயக்கத்தின் வெற்றியில், தேசத்தின் பெரிய தொழில்கள் தொடங்கி, சிறிய கடைக்காரர்கள் வரை பலரின் பங்களிப்பும் அடங்கி இருக்கிறது.  நான் இந்தியாவில் தயாரிப்போம் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.  இன்று ஏழைகள், மத்தியத்தட்டு மக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், இந்த இயக்கத்தால் மிகுந்த ஆதாயம் அடைந்து வருகின்றார்கள்.  இந்த இயக்கத்தால் அனைத்து வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கும் தங்களுடைய திறன்கள்-திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது.  இன்று பாரதம் தயாரிப்பின் சக்திபீடமாக ஆகி வருகிறது, தேசத்தின் இளைஞர்சக்தி காரணமாக உலகெங்கிலுமுள்ளோர் பார்வையும் நம்மீது தான் குவிந்திருக்கிறது.   வாகனத்தயாரிப்பாகட்டும், ஜவுளிகளாகட்டும், விமானங்களாகட்டும், மின்னணுப்பொருட்களாகட்டும், பாதுகாப்புத் தளவாடங்களாகட்டும், அனைத்துத் துறைகளிலும் தேசத்தின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  தேசத்தில் அந்நிய நேரடி முதலீடும் தொடர்ந்து அதிகரித்து வருவதும் கூட நமது இந்தியாவில் உருவாக்குவோம் என்பதின் வெற்றிக்குப் பரணி பாடுகிறது.  இப்போது நாம் முக்கியமாக இரண்டு விஷயங்களின் மீது கவனம் செலுத்தி வருகிறோம்.  முதலாவதாக, தரம் – அதாவது நமது தேசத்தில் தயாரிக்கப்படுபவை உலகத்தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.  இரண்டாவதாக உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல், அதாவது அந்தந்த வட்டாரங்களில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச ஊக்கமளிக்கப்பட வேண்டும்.  மனதின் குரலில் நாம் #MyProductMyPride குறித்தும் விவாதித்திருக்கிறோம்.   உள்ளூர்ப் பொருட்களுக்கு ஊக்கமளிக்கப்படுவதால், நாட்டுமக்களுக்கு எந்த வகையில் ஆதாயம் ஏற்படுகிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டையும் முன்வைக்கிறேன். 

மஹாராஷ்டிர மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தில் ஜவுளிக்கென ஒரு பண்டைய பாரம்பரியம் உண்டு.  பண்டாரா டஸர் சில்க் ஹேண்ட்லூம்.  டஸர் வகை பட்டு தனது பிரத்யேகமான வடிவமைப்பு, வண்ணம் மற்றும் உறுதிக்காக பெயர் போனது.  பண்டாராவின் சில பாகங்களில் 50க்கும் மேற்பட்ட சுயவுதவிக் குழுக்கள் இதைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.  இவற்றில் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரியது.  இந்தப் பட்டு விரைவாக அனைவரின் கவனத்தையும் கவரத் தொடங்கியிருக்கிறது, உள்ளூர் சமூகங்களின் அதிகாரப் பங்களிப்புக்கு வழிவகை செய்கிறது, இது தானே இந்தியாவில் உருவாக்குவோம் என்பதன் உணர்வு!!

நண்பர்களே, பண்டிகைகளின் இந்தப் பருவத்தில் நீங்கள் மீண்டும் உங்களுடைய பழைய உறுதிப்பாட்டை மறந்துவிட வேண்டாம்.  எந்த ஒன்றை நீங்கள் வாங்க நேர்ந்தாலும், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருளாக இருக்க வேண்டும், எந்த ஒரு பரிசுப் பொருளை நீங்கள் அளித்தாலும், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.  ஏதோ மண்அகல் விளக்குகளை வாங்குவது மட்டுமே உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்பதாக ஆகாது.  உங்கள் பகுதியில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அதிகபட்ச ஊக்கமளித்து, அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அதை உருவாக்குவதில் இந்திய தொழிலாளி-கைவினைஞரின் வியர்வை சிந்தப்பட்டிருந்தால், பாரத நாட்டுப் பொருள்களால் தயாரிக்கப்பட்டதாக இருந்தால், அது நம்முடைய பெருமிதம், இந்த கௌரவத்தை, இந்தப் பெருமிதத்தை நாம் எப்போதும் கொண்டாடுவோம்.

நண்பர்களே, மனதின் குரலின் இந்தப் பகுதியில் உங்களோடு இணைந்து பயணித்தது மிகவும் சுகமாக இருந்தது.  இந்த நிகழ்ச்சியோடு உங்களை இணைத்துக் கொண்டு, உங்களுடைய கருத்துக்கள்-ஆலோசனைகளைக் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள்.  உங்களுடைய கடிதங்கள்-கருத்துக்கள்-தகவல்களுக்காக நான் எப்போதும் காத்திருப்பேன்.  சில நாட்கள் கழித்து பண்டிகைகளின் காலம் தொடங்க இருக்கிறது.   நவராத்திரி தொடங்க இருக்கிறது, அடுத்த இரண்டு மாதங்கள் வரை பூஜைகள்-வழிபாடுகள், விரதங்கள்-பண்டிகைகள், உற்சாகம்-உல்லாசம் என நாலாபுறங்களிலும் இந்தச் சூழல் பரவியிருக்கும்.  நான் வரவிருக்கும் பண்டிகைகள் அனைத்திற்குமான நல்வாழ்த்துக்களை உங்களனைவருக்கும் தெரிவிக்கிறேன்.  நீங்களும், உங்கள் குடும்பத்தாரோடு இணைந்து, அனைத்துப் பண்டிகைகளையும் நன்கு கொண்டாடுங்கள், ஆனந்தத்தை அனுபவியுங்கள், மற்றவர்களையும் உங்கள் மகிழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.  அடுத்த மாதம் மனதின் குரலில் மேலும் புதிய விஷயங்களோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.  உங்களனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Income inequality declining with support from Govt initiatives: Report

Media Coverage

Income inequality declining with support from Govt initiatives: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chairman and CEO of Microsoft, Satya Nadella meets Prime Minister, Shri Narendra Modi
January 06, 2025

Chairman and CEO of Microsoft, Satya Nadella met with Prime Minister, Shri Narendra Modi in New Delhi.

Shri Modi expressed his happiness to know about Microsoft's ambitious expansion and investment plans in India. Both have discussed various aspects of tech, innovation and AI in the meeting.

Responding to the X post of Satya Nadella about the meeting, Shri Modi said;

“It was indeed a delight to meet you, @satyanadella! Glad to know about Microsoft's ambitious expansion and investment plans in India. It was also wonderful discussing various aspects of tech, innovation and AI in our meeting.”