A task force has been formed, which will monitor the cheetahs and see how they are adapting to the environment: PM Modi
Deendayal ji's 'Ekatma Manavdarshan' is such an idea, which in the realm of ideology gives freedom from conflict and prejudice: PM Modi
It has been decided that the Chandigarh airport will now be named after Shaheed Bhagat Singh: PM Modi
A lot of emphasis has been given in the National Education Policy to maintain a fixed standard for Sign Language: PM Modi
The world has accepted that yoga is very effective for physical and mental wellness: PM Modi
Litter on our beaches is disturbing, our responsibility to keep coastal areas clean: PM Modi
Break all records this time to buy Khadi, handloom products: PM Modi
Use locally made non-plastic bags; trend of jute, cotton, banana fibre bags is on the rise once again: PM Modi

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  கடந்த நாட்களில், நம்மனைவரின் கவனங்களையும் கவர்ந்த ஒன்று என்றால் அது வேங்கை தான்.  வேங்கைகள் குறித்து உரையாட ஏராளமான செய்திகள் வந்திருக்கின்றன, அது உத்தரப் பிரதேசத்தின் அருண் குமார் குப்தா அவர்களாகட்டும் அல்லது தெலங்கானாவின் என். ராமச்சந்திரன் ரகுராம் அவர்களாகட்டும், குஜராத்தின் ராஜன் அவர்களாகட்டும், அல்லது தில்லியைச் சேர்ந்த சுப்ரத் அவர்களாகட்டும்.  தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள் பாரதத்தில் வேங்கைகள் திரும்ப வந்தமைக்குத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.  130 கோடி பாரதநாட்டவர்கள் சந்தோஷப்படுகிறார்கள், பெருமிதம் கொள்கிறார்கள் – இது தான் பாரதம் இயற்கை மீது கொண்டிருக்கும் காதல்.   இந்த விஷயம் குறித்து அனைவரிடமும் உள்ள ஒரு பொதுவான வினா என்னவென்றால், மோதி அவர்களே, வேங்கையைக் காணும் சந்தர்ப்பம் எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது தான். 

 

நண்பர்களே, பணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.  இங்கிருக்கும் சூழலுக்கேற்ப, இந்த வேங்கைகள் தங்களை எப்படி தகவமைத்துக் கொள்கின்றன என்பதை இந்தப் பணிக்குழு கண்காணிக்கும்.  இதனடிப்படையில் சில மாதங்கள் கழித்து ஒரு முடிவு எடுக்கப்படும், அப்போது நீங்கள் வேங்கைகளைப் பார்க்கலாம்.  ஆனால் அதுவரை உங்கள் அனைவருக்கும் நான் ஒரு பணியை அளிக்கிறேன், இதன் பொருட்டு மைகவ் தளத்திலே, ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, இதிலே மக்கள் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.  வேங்கைகள் தொடர்பாக நடக்கும் இந்த இயக்கத்தின் பெயர் என்னவாக இருக்க வேண்டும்!  இந்த வேங்கைகளுக்குப் பெயர் சூட்டுவது குறித்து ஆலோசனைகளை அளிக்கலாம்!  இந்தப் பெயர்களும் பாரம்பரியமானவையாக இருந்தால் நன்றாக இருக்கும்; ஏனென்றால், நம்முடைய சமூகம், நமது கலாச்சாரம்-பாரம்பரியம்-மரபோடு தொடர்புடைய எந்த ஒரு விஷயமும், இயல்பாகவே அவற்றை நோக்கி நம்மைக் கவர்கின்றன.  இது மட்டுமல்ல, நீங்கள் மேலும் ஒன்றைக் கூற வேண்டும்!  நமது அடிப்படைக் கடமைகளிலும் கூட விலங்குகளுக்கு மதிப்பு என்பது குறித்து அழுத்தம் அளிக்கப்பட்டிருக்கிறது.  நீங்கள் இந்தப் போட்டியில் கண்டிப்பாகப் பங்கெடுங்கள் – உங்கள் வெற்றியின் பரிசாக வேங்கையைக் காணக்கூடிய முதல் சந்தர்ப்பம் உங்களுக்கே கூட அமையலாம், யாரறிவார்கள்?!  இதுவே நான் உங்களிடம் வைக்கும் விண்ணப்பம்.

 

எனதருமை நாட்டுமக்களே, இன்று செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி தீவிர மனிதநேயவாதியும், சிந்தனையாளரும், மகத்தான தவப்புதல்வருமான தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த நாளாகும்.  எந்த ஒரு நாட்டின் இளைஞரும் தங்களுடைய அடையாளம்-கௌரவம் மீது பெருமிதம் கொள்ளும் போது, அவருக்குத் தங்களுடைய அடிப்படை சித்தாந்தம்-சிந்தனை ஆகியவை மீது ஈர்ப்பு ஏற்படும்.  தீன்தயாள் அவர்களின் சிந்தனைகளின் மிகப்பெரிய அழகு என்னவென்றால், அவர் தன்னுடைய வாழ்க்கையில், உலகின் மிகப்பெரிய கொந்தளிப்புக்களைச் சந்தித்தவர் என்பது தான்.  அவர் கருத்தோட்டங்களின் மோதல்களின் சாட்சியாக விளங்கினார்.  ஆகையால், அவர் ஏகாத்ம மானவ்தர்சனம், அந்த்யோதய் ஆகிய எண்ணங்களை தேசத்தின் முன்பாக வைத்தார், இவை முழுமையாக பாரத நாட்டுத் தன்மை வாய்ந்தவை, பாரத நாட்டுக்குரியவை.  தீன்தயாள் அவர்களின் ஏகாத்ம மானவ்தர்சனம் என்பது எப்படிப்பட்ட சிந்தனை என்றால், சித்தாந்தத்தின் அடிப்படையிலான மோதல்கள், தப்பான எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து அது விடுதலை அளிக்கிறது.  மனிதனை சமமாகக் கருதும் பாரதநாட்டு சித்தாந்தத்தை மீண்டும் உலகின் முன்பாக அவர் இருத்தினார்.  ஆத்மவத் சர்வபூதேஷு என்று நமது சாஸ்திரங்களிலே கூறப்பட்டிருக்கிறது.  அதாவது நாம் அனைத்து உயிர்களையும் ஒன்று போலவே பாவிக்க வேண்டும், நம்மிடம் நடந்து கொள்வது போலவே நடந்து கொள்ள வேண்டும்.  நவீன, சமூக, அரசியல் பின்னணியிலும் கூட, பாரத நாட்டு சித்தாந்தமானது எப்படி உலகிற்கு வழிகாட்ட முடியும் என்பதை தீன்தயாள் அவர்கள் நமக்குக் கற்பித்தார்.   ஒரு புறத்தில், சுதந்திரத்திற்குப் பிறகு தேசத்தில் நலிவுற்ற நிலை நிலவிய வேளையில், அதிலிருந்து விடுவித்து, நம்மிடத்திலே விழிப்புணர்வை அவர் தட்டி எழுப்பினார்.  “நமது கலாச்சாரம் மற்றும் அடையாளம் எப்போது வெளிப்படுகிறதோ, அப்போது தான் நமது சுதந்திரம் பொருள் படைத்த ஒன்றாக ஆகும்” என்று அவர் கூறுவதும் உண்டு.  இந்தக் கருத்தின் அடிப்படையிலே தான் அவர் தேசத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்கைத் தீர்மானம் செய்தார்.  தேசம் அடையும் முன்னேற்றத்தின் தாக்கம், கடைசிப் படிநிலையில் இருக்கும் மனிதன் வரை சென்றடைய வேண்டும் என்று, தீன்தயாள் உபாத்யாயா அவர்கள் கூறுவார்.  சுதந்திரத்தின் அமுதகாலத்தில் தீன்தயாள் அவர்களைப் பற்றி நாம் எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, எந்த அளவுக்கு அவரிடமிருந்து கற்கிறோமோ, அந்த அளவுக்கு தேசத்தை முன்னேற்றிச் செல்ல நம்மனைவருக்கும் உத்வேகம் கிடைக்கும். 

 

எனதருமை நாட்டுமக்களே, இன்றிலிருந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, அதாவது செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று அமுதப் பெருவிழாவின் ஒரு விசேஷமான நாள் வரவிருக்கிறது.  இந்த நாளன்று தான் நாம் பாரத அன்னையின் வீரம்நிறைந்த சத்புத்திரனான பகத் சிங்குடைய பிறந்த நாளைக் கொண்டாடுவோம்.  பகத் சிங் அவர்களின் பிறந்த நாளுக்கு சற்று முன்பாக, அவருக்கு சிரத்தாஞ்ஜலிகளை அர்ப்பணிக்கும் பொருட்டு ஒரு மகத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது.   சண்டீகட்டின் விமான நிலையத்திற்கு இனி உயிர்த்தியாகி பகத் சிங் அவர்களின் பெயர் சூட்டப்படும்.  இது மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று.  சண்டீகட், பஞ்ஜாப், ஹரியாணா, இன்னும் தேசத்தின் அனைத்து மக்களுக்கும் இந்தத் தீர்மானத்தின் பொருட்டு பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

 

நண்பர்களே, நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களிடமிருந்து கருத்தூக்கம் பெற வேண்டும், அவர்களின் இலட்சியங்களைப் பின்பற்றி நடந்து, அவர்கள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க வேண்டும், இதுவே, அவர்களுக்கு நாம் செலுத்தும் நினைவாஞ்சலிகளாகும்.  உயிர்த்தியாகிகளின் நினைவிடங்கள், அவர்களின் பெயரில் இருக்கும் இடங்கள், அமைப்புக்களின்  பெயர்கள் ஆகியன, நமது கடமைகள் குறித்து நமக்கு உத்வேகம் அளிக்கின்றன.   சில நாட்கள் முன்பாகத் தான் தேசம், கர்த்தவ்ய பத்தில் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் அவர்களுடைய உருவச்சிலையை நிறுவியதன் வாயிலாகவும் கூட, இதே போன்றதொரு முயற்சியைச் செய்தது; இப்போது உயிர்த்தியாகி பகத் சிங்கின் பெயரை சண்டீகட் விமானநிலையத்திற்குச் சூட்டியதும் கூட இதே திசையில் வைக்கப்பட்ட மேலும் ஒரு முன்னேற்றப்படி.   நாம் எந்த வகையில் அமுதப் பெருவிழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்களோடு தொடர்புடைய சிறப்பான சந்தர்ப்பங்களைக் கொண்டாடி வருகிறோமோ, அதைப் போலவே செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியின் போதும், ஒவ்வொரு இளைஞரும் புதிய ஒரு முயற்சியில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

 

மேலும் எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நீங்கள் அனைவரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியைக் கொண்டாட வேறு ஒரு காரணமும் உண்டு.  அது என்னவென்று தெரியுமா!  நான் இரு சொற்களை மட்டுமே கூறுவேன், ஆனால் உங்களுடைய உற்சாகம் நான்கு மடங்கு அதிகரிக்கும் என்பதை நானறிவேன்.  அந்த இரண்டு சொற்கள் – சர்ஜிகல் ஸ்ட்ரைக், துல்லியத் தாக்குதல்.  உற்சாகம் அதிகரித்து விட்டது இல்லையா!!  நமது தேசத்தின் அமுதப் பெருவிழா என்ற இயக்கம் நடைபெற்று வரும் வேளையிலே, அதை நாம் முழுமையான ஈடுபாட்டோடு கொண்டாடுவோம், நமது சந்தோஷங்களை அனைவரோடும் பகிர்ந்து கொள்வோம்.

 

என் மனம்நிறை நாட்டுமக்களே, வாழ்க்கை என்ற போராட்டங்களின் நெருப்பிலே புடம் போட்ட ஒரு மனிதன் முன்பாக எந்தத் தடையும் ஒரு தடையல்ல என்பார்கள் இல்லையா!!  நமது அன்றாட வாழ்க்கையில், நாம் இப்படிப்பட்ட சில நண்பர்களைச் சந்திக்கிறோம், இவர்கள் ஏதோ வகையான ஒரு உடல்ரீதியான சவாலை எதிர்கொண்டு வருகிறார்கள்.  சிலரால் கேட்க முடியாது என்றால் சிலராலோ வாய்மொழி மூலம் தங்களை வெளிப்படுத்த இயலாது.  இப்படிப்பட்ட நண்பர்களுக்கெல்லாம் மிகப்பெரிய துணையாக இருக்கிறது, Sign Language, சைகை மொழி.   ஆனால் பாரதநாட்டிலே, பல்லாண்டுகளாக ஒரு பெரிய கடினம் என்னவென்றால், இந்தச் சைகை மொழிக்கான எந்தவொரு தெளிவான சைகைகளும் தீர்மானிக்கப்பட்டதில்லை, தரநிலைகள் இருக்கவில்லை.  இந்த இடர்களைக் களையவே 2015ஆம் ஆண்டில், Indian Sign Language Research and Training Center, இந்திய சைகைமொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையம் நிறுவப்பட்டது.   இந்த அமைப்பு இதுவரை, 10,000 சொற்களையும், சைகைகளையும் அடங்கிய ஒரு அகராதியை தயார் செய்திருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  இரண்டு நாட்கள் முன்பாக, அதாவது செப்டம்பர் மாதம் 23ஆம் தேதியன்று சைகை மொழி நாளன்று, பல பள்ளிகளின் பாடத்திட்டங்களிலும் கூட சைகை மொழி ஆரம்பிக்கப்பட்டாகி விட்டது.  சைகைமொழியின் தீர்மானிக்கப்பட்ட தரநிலையை நிலைநிறுத்த, தேசியக் கல்விக்கொள்கையிலும் கூட கணிசமான அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  சைகைமொழியின் அகராதி மீதான காணொளியைத் தயாரித்தும் கூட இது தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.  யூ ட்யூபிலே பலர், பல அமைப்புகள், இந்திய சைகைமொழியில் தங்களுடைய சேனல்களைத் தொடங்கி இருக்கிறார்கள், அதாவது 7-8 ஆண்டுகள் முன்பாக சைகைமொழி தொடர்பாக தேசத்தில் தொடங்கப்பட்ட இயக்கம், இப்போது இதனால் ஆதாயம் இலட்சக்கணக்கான என்னுடைய மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளுக்கும் கிடைக்கவிருக்கிறது.  ஹரியாணாவில் வசிக்கும் பூஜா அவர்கள் இந்திய சைகைமொழியால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.  முன்பெல்லாம் இவர் தனது மகனோடு உரையாட முடியாமல் இருந்தார், ஆனால் 2018இல் சைகைமொழியில் பயிற்சி பெற்ற பிறகு, தாய்-மகன் இருவரின் வாழ்க்கை எளிதாகி விட்டிருக்கிறது. பூஜா அவர்களின் மகனும் கூட சைகைமொழியைக் கற்றுக் கொண்டு தனது பள்ளியில் இவர் கதைகூறும் போட்டியில் பரிசுகளை வென்றிருக்கிறார். இதைப் போலவே டிங்காஜி தனது ஆறு வயது நிரம்பிய மகளுக்கு சைகைமொழிப் படிப்புக்கு ஏற்பாடு செய்தார்; ஆனால் அவருக்கு சைகைமொழி விளங்கவில்லை என்பதால் தனது மகளோடு தகவல் பரிமாறிக் கொள்ள இயலாமல் இருந்தார்.  இப்போது டிங்காஜியும் கூட சைகை மொழியில் பயிற்சி பெற்று விட்டார், தாய்-மகள் இருவரும் இப்போது பரஸ்பரம் நன்றாகக் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து வருகிறார்கள்.  இந்த முயற்சிகளால் மிகப்பெரிய ஆதாயம் கேரளத்தின் மஞ்சு அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.  மஞ்சு அவர்கள், பிறப்பிலிருந்தே கேட்புத் திறன் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி என்பதோடு, இவருடைய பெற்றோரின் வாழ்க்கையிலும் இதே நிலைமை நிலவி வந்தது.  இந்த நிலையில் சைகைமொழி மட்டுமே குடும்பமனைத்துக்கும் உரையாடலுக்கான ஊடகமாக இருக்கிறது.  இப்போது மஞ்சு அவர்கள், சைகைமொழியின் ஆசிரியையாக தானே ஆகும் தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறார்.

 

நண்பர்களே, இதைப் பற்றி நான் மனதின் குரலில் ஏன் உரையாட விரும்புகிறேன் என்றால், இந்திய சைகைமொழி குறித்த விழிப்புணர்வு  அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத் தான்.  இதனால் நாம் நமது மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு மேலும் அதிக அளவில் உதவிகரமாக இருக்க முடியும்.  சகோதர சகோதரிகளே, சில நாட்கள் முன்பாக, ப்ரைல் மொழியில் எழுதப்பட்ட ஹேமகோசத்தின் ஒரு பிரதி எனக்குக் கிடைத்தது.  ஹேமகோசம் என்பது அசாமிய மொழியின் மிகப் பழமையான அகராதிகளில் ஒன்று.  இது 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.  மொழி வல்லுநரான ஹேமசந்திர பருவா அவர்கள் இதனைத் தொகுத்திருக்கிறார்.  ஹேமகோசத்தின் ப்ரைல் பதிப்பு, சுமார் 10000 பக்கங்கள் கொண்டதாகும், இது 15 தொகுதிகளுக்கும் அதிகமாக அச்சிடப்பட இருக்கிறது.  இதிலே ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சொற்கள் மொழியாக்கம் செய்யப்படவிருக்கின்றன.  புரிந்துணர்வுடன் கூடிய இந்த முயற்சியை நான் மிகவும் பாராட்டுகிறேன்.  இதைப் போன்ற அனைத்து முயற்சிகளும், மாற்றுத் திறனாளி நண்பர்களின் திறன்கள்-திறமைகளை மேம்படுத்துவதில் உதவி புரிகின்றன.  இன்று பாரதம் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளிலும் கூட வெற்றிக் கொடியை நாட்டி வருகிறது.  நாமனைவரும் பல பந்தயங்களில் இதன் சாட்சிகளாக இருக்கின்றோம்.  மாற்றுத் திறனாளிகளின் மத்தியில் உடலுறுதி கலாச்சாரத்தை அடிமட்ட அளவில் ஊக்குவிப்பதில் இன்று பலர் ஈடுபட்டிருக்கின்றார்கள்.  இதனால் மாற்றுத் திறனாளிகளின் தன்னம்பிக்கைக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கிறது.

 

என் கனிவான நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக சூரத்தில், அன்வீ என்ற சிறுமியைச் சந்தித்தேன்.  அன்வீயுடனும், அன்வீயின் யோகக்கலையுடனும் நிகழ்ந்த என்னுடைய சந்திப்பு, எந்த அளவுக்கு மறக்க முடியததாக இருக்கிறது என்றால், இதைப் பற்றி நான் மனதின் குரலின் அனைத்து நேயர்களோடும் பகிர விரும்புகிறேன்.  நண்பர்களே, அன்வீ, Down Syndrome, மரபணுக் கோளாறால் பிறப்பிலிருந்தே ஏற்படும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர், சிறு பிராயத்திலிருந்தே தீவிரமான இருதய நோயால் இவர் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.  வெறும் மூன்று மாதங்கள் நிரம்பிய போதே, இவருக்கு இருதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.  இந்த இடர்ப்பாடுகள் அனைத்தையும் தாண்டி, அன்வீயும் சரி, இவருடைய தாய் தந்தையரும் சரி சற்றும் துவளவில்லை.  அன்வீயின் பெற்றோர் இந்த Down Syndrome பற்றிய  அனைத்துத் தகவல்களையும் திரட்டினார்கள், எப்படி அன்வீ மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கலாம் என்பதை முடிவு செய்தார்கள்.   எப்படி குடிநீர்க் குவளையை மேலே உயர்த்திப் பிடிப்பது, காலணிகளின் லேஸ்களை எப்படிக் கட்டுவது, உடைகளின் பொத்தான்களை எப்படிப் பொருத்துவது போன்ற சின்னச்சின்ன விஷயங்களைக் கற்பிக்கத் தொடங்கினார்கள் அன்வீயின் பெற்றோர்.  எந்தப் பொருளின் இடம் எது, எவை நல்ல பழக்கவழக்கங்கள், இவற்றையெல்லாம் மிகவும் பொறுமையோடு அன்வீக்குக் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.  இவற்றைக் கற்றுக் கொள்ள எவ்வாறெல்லாம் குழந்தை அன்வீ ஆர்வம் காட்டினாளோ, தனது திறமையை வெளிப்படுத்தினாளோ, இதனால் அவளின் பெற்றோருக்கும் பெரும் நம்பிக்கை பிறந்தது.  அவர்கள் அன்வீயை யோகக்கலையைக் கற்றுக் கொள்ள ஊக்கப்படுத்தினார்கள்.  எந்த அளவுக்கு அதிக சிரமங்கள் இருந்தன என்றால், அன்வீயால் தனது இரு கால்களிலும் எழுந்து நிற்க முடியாத நிலை; இந்தச் சூழ்நிலையில் யோகக்கலையைக் கற்றுக் கொள்ள அன்வீக்கு ஊக்கமளித்தார்கள் அவளுடைய பெற்றோர்.  முதன்முறையாக யோகக்கலை கற்பிக்கும் பயிற்றுநரிடம் அன்வீ சென்ற போது, இந்தச் சிறுமியால் எப்படி யோகம் பயில முடியும் என்று அந்தப் பயிற்றுநரும் குழம்பிப் போனார்.   ஆனால் அன்வீயின் திறமை என்ன என்பதைப் பயிற்றுநரும் அறிந்திருக்கவில்லை.  அன்வீ தனது பெற்றோருடன் சேர்ந்து பயிற்சி பெறத் தொடங்கி, இப்போது இவர் யோகக்கலை வல்லுநராகி விட்டார்.  அன்வீ இன்று நாடெங்கிலும் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார், பதக்கங்களைக் குவித்து வருகிறார்.  யோகக்கலையானது, சிறுமி அன்வீக்கு ஒரு புதிய வாழ்வை அளித்திருக்கிறது.  யோகம் பயில்வதன் வாயிலாக சிறுமி அன்வீயின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றத்தைக் காண முடிந்தது, அவளுக்குத் தன்னம்பிக்கை வியக்கத்தக்க அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்று அன்வீயின் பெற்றோர் என்னிடத்திலே தெரிவித்தார்கள்.  யோகக்கலை மூலமாக அன்வீயின் உடல் ஆரோக்கியமும் மேம்பாடு அடைந்திருக்கிறது, மருந்துகளின் தேவையும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.  உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் இருக்கும் மனதின் குரலின் நேயர்களால், யோகக்கலையால் அன்வீக்குக் கிடைத்த ஆதாயங்களை அறிவியல்பூவமாக ஆய்வு செய்ய முடிந்தால், அன்வீ ஒரு அருமையான விஷய ஆய்வாக இருப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது.  யாரெல்லாம் யோகக்கலையின் வல்லமை குறித்து ஆய்வுகள்-சோதனைகளில் ஈடுபட விருப்பம் உள்ளவர்களோ, அப்படிப்பட்ட ஆய்வாளர்கள் முன்வந்து, அன்வீயின் இந்த வெற்றி குறித்து ஆராயட்டும், யோகக்கலையின் வல்லமையை உலகோருக்கு அடையாளம் காட்ட வேண்டும்.  உலகெங்கிலும் இருக்கும் Down Syndrome கோளாறால் பீடிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட எந்த ஒரு ஆய்வும் மிகவும் உதவிகரமாக இருக்கும்.   உடல்ரீதியான, மனரீதியான ஆரோக்கியம் விஷயத்தில் யோகக்கலை அதிக உதவிகரமாக இருக்கிறது என்பதை உலகம் இப்போது ஏற்றுக் கொண்டு விட்டது.  குறிப்பாக நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளில் யோகக்கலை மிகவும் உதவிகரமாக இருக்கிறது.  யோகக்கலையின் சக்தியைக் கண்டு ஐக்கிய நாடுகள் சபையும் ஜூன் மாதம் 21ஆம் தேதியை சர்வதேச யோகக்கலை தினமாக அறிவித்திருக்கிறது.  இப்போது ஐக்கிய நாடுகள் சபை, பாரதத்தின் மேலும் ஒரு முயல்விற்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது, அதற்கு கௌரவம் அளித்திருக்கிறது.  இந்த முயல்வு தான், 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “India Hypertension Control Initiative”, இந்தியா உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு முயற்சி.   இதன்படி, இரத்த அழுத்த பிரச்சனைகளில் அவதிப்பட்டு வரும் இலட்சக்கணக்கானோரின் சிகிச்சை, அரசின் சேவை மையங்களில் செய்யப்பட்டு வருகிறது.   இந்த முன்முயற்சியானது சர்வதேச அமைப்புக்களின் கவனத்தை ஈர்த்திருப்பது, இதுவரை காணாத ஒன்று.  இதில் நம்மனைவரின் உற்சாகத்தையும் அதிகரிக்கும் விஷயம், யாருக்கெல்லாம் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டதோ, அவர்களில் கிட்டத்தட்ட பாதியளவு பேர்களுடைய இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கிறது.  நான் இந்த முனைப்பில் செயலாற்றி வரும் அனைவருக்கும் பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன், இவர்கள் தங்களுடைய கடுமையான முயற்சியால் இதை வெற்றியடையச் செய்திருக்கிறார்கள். 

 

நண்பர்களே, மனித வாழ்வின் வளர்ச்சிப் பயணம், நீடித்த வகையிலே நீரோடு தொடர்புடையது – அது கடலாகட்டும், நதியாகட்டும், அல்லது குளமாகட்டும்.  பாரதத்தின் பேறு என்னவென்றால், சுமார் 7500 கிலோமீட்டருக்கும் அதிகமான நீண்ட கடற்கரை காரணமாக, கடலோடு நம்முடைய தொடர்பு இணைபிரியாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.  இந்தக் கரையோரப் பகுதிகள் பல மாநிலங்கள்-தீவுகளைக் கடந்து செல்கிறது.  பாரதத்தின் பல்வேறு சமுதாயங்கள்-பன்முகத்தன்மைகள் நிறைந்த கலாச்சாரம் மலர்ந்து மணம் பரப்புவதை, நம்மால் இங்கே காண முடியும்.  இது மட்டுமல்ல, இந்தக் கரையோரப் பகுதிகளின் உணவு முறைகள் மக்களை நன்கு கவர்கின்றன.  ஆனால் இந்த சுவாரசியமான விஷயங்களோடு கூடவே ஒரு வருத்தமளிக்கும் பக்கமும் உண்டு.  நமது இந்த கரையோரப் பகுதிகளின் சுற்றுச்சூழலோடு தொடர்புடைய பல சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.  சூழலியல் மாற்றம், கடல்சார் சூழலியல் அமைப்புகளுக்கு பெரிய அபாயமாக ஒரு புறம் ஆகி வருகிறது என்றால், நமது கடற்கரைகளில் பரவியிருக்கும் மாசு பிரச்சனையாகி இருக்கிறது.  இந்தச் சவால்கள் குறித்துத் தீவிரமான, நிரந்தரமான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பது நமது கடமையாகிறது.   இந்த இடத்திலே, தேசத்தின் கரையோரப் பகுதிகளில் சுத்தம் செய்யும் ஒரு முயல்வான ஸ்வச்ச சாகர்-சுரக்ஷித் சாகர், அதாவது தூய்மையான கடல்கள்-பாதுகாப்பான கடல்கள் என்பது குறித்துத் தெரிவிக்க விரும்புகிறேன்.  ஜூலை 5ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த இயக்கம், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியான விஸ்வகர்மா ஜயந்தி தினத்தன்று நிறைவடைந்தது.  கரையோரப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் நாளும் இதே நாளன்று தான் கடைப்பிடிக்கப்படுகிறது.  சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், 75 நாட்களுக்கு நடைபெற்றது.  தொடங்கிய சில காலத்திலேயே மக்களின் பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.  இந்த முயற்சியின்படி, இரண்டரை மாதங்கள் வரை தூய்மை தொடர்பான பல செயல்திட்டங்களைக் காண முடிந்தது.  கோவாவில் ஒரு நீண்ட மனிதச் சங்கிலி ஏற்படுத்தப்பட்டது.  காகிநாடாவில் கணபதி திருவுருவங்களை நீரில் கரைக்கும் போது, நெகிழியால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது.  தேசிய சேவைத் திட்டம், என் எஸ் எஸ்ஸின் சுமார் 5000 இளைய நண்பர்கள், 30 டன்களுக்கும் அதிகமான நெகிழிப் பொருட்களை ஒன்று திரட்டினார்கள்.  ஒடிஷாவில் மூன்று நாட்களுக்குள்ளாக 20,000த்திற்கும் அதிகமான பள்ளி மாணவமாணவியர், தாங்கள் மட்டுமல்ல, தங்களின் குடும்பத்தார் மற்றும் அக்கம்பக்கத்தில் இருப்போருக்கும், தூய்மையான கடல்கள் மற்றும் பாதுகாப்பான கடல்கள் குறித்த விழிப்புணர்வை அளிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.  யாரெல்லாம் இந்த இயக்கத்தில் பங்கெடுத்தார்களோ அவர்கள் அனைவருக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், குறிப்பாக நகரத் தலைவர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களோடு நான் உரையாடும் போதெல்லாம், தூய்மை போன்ற முயல்வுகளில் உள்ளூர் சமூகங்களையும், உள்ளூர் அமைப்புக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும், நூதனமான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று கேட்டு வருகிறேன். 

 

Youth For Parivarthan, மாற்றத்திற்கான இளைஞர்கள் என்ற பெயரிலான பெங்களூரூவில் இருக்கும் ஒரு குழு, கடந்த எட்டு ஆண்டுகளாகவே தூய்மை, இன்னும் பிற சமூக விதிமுறைகள் தொடர்பான பணியில் ஈடுபட்டு வருகிறது.  இவர்களின் குறிக்கோள் வாக்கியம் தெளிவானதாக இருக்கிறது - ‘Stop Complaining, Start Acting’, குற்றம் கூறுவதை விடுத்து, செயல்படத் தொடங்குங்கள் என்பதே ஆகும்.  இந்தக் குழுவானது இதுவரை, நகரெங்கும் 370க்கும் மேற்பட்ட இடங்களை அழகுபடுத்தி இருக்கிறது.  ஒவ்வொரு இடத்திலும் மாற்றத்திற்கான இந்த இளைஞர்களுடைய இயக்கம், நூறிலிருந்து நூற்று ஐம்பது குடிமக்களை இணைத்துக் கொண்டது.  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் இந்த நிகழ்ச்சி காலை தொடங்கி, நண்பகல் வரை நடைபெறுகிறது.  இந்தச் செயல்பாட்டின் மூலம் குப்பைகள் அகற்றப்படுவதோடு, சுவர்களில் ஓவியங்களையும், வரிவடிவக் கலைப்படைப்புக்களையும் ஏற்படுத்துகிறார்கள்.  பல இடங்களில் பிரபலமான நபர்களின் வரிவடிவ ஓவியங்களையும் அவர்களின் கருத்தூக்கமளிக்கும் மேற்கோள்களையும் உங்களால் காண முடியும்.  பெங்களூரூவின் இந்த மாற்றத்திற்கான இளைஞர்களின் முயற்சிகளுக்கு அடுத்தபடியாக, மேரட்டின் கபாட் சே ஜுகாட், அதாவது குப்பையிலிருந்து கோமேதகம் என்ற பொருளிலான இயக்கம் குறித்தும் நான் தெரிவிக்க விரும்புகிறேன்.  இந்த இயக்கம், சுற்றுச்சூழலின் பாதுகாப்போடு கூடவே, நகரின் அழகுபடுத்தலோடும் தொடர்புடையது.  இந்த இயக்கத்தின் சிறப்பான விஷயம் என்னவென்றால், இதிலே இரும்புக் குப்பை, நெகிழிக் கழிவுகள், பழைய டயர்கள், டிரம்கள் போன்ற பயனற்றதாகிவிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.  குறைந்த செலவில் பொதுவிடங்களை எவ்வாறு அழகுபடுத்தலாம் என்பதற்கும் இந்த இயக்கம் ஒரு எடுத்துக்காட்டு.  இந்த இயக்கத்தோடு தொடர்புடைய அனைவருக்கும் நான் இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இப்போது தேசத்தின் நாலாபுறங்களிலும் கொண்டாட்டங்களின் குதூகலம் நிரம்பியிருக்கிறது.  நாளை நவராத்திரியின் முதலாம் நாள்.  இந்த நாளன்று நாம் தேவியின் முதல் சொரூபமான அன்னை சைலபுத்ரியின் உபாசனையில் ஈடுபடுவோம்.  அன்றிலிருந்து ஒன்பது நாட்கள் வரையான நியமங்கள்-கட்டுப்பாடுகள் மற்றும் விரதங்கள், பிறகு விஜயதசமி நன்னாள்.  அதாவது ஒருவகையிலே பார்த்தோமேயானால், நம்பிக்கையும், ஆன்மீகமும் ஊடும் பாவுமாகக் கலந்த எத்தனை ஆழமான செய்தி மறைந்திருக்கிறது என்பதை நமது புனித நாட்களில் நம்மால் காண முடியும்.  ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு வாயிலாக வெற்றி என்பதற்குப் பிறகு வெற்றிக்கான திருநாள், இது தானே வாழ்க்கையில் எந்த ஒரு இலக்கையும் அடையக்கூடியதான மார்க்கமாக இருக்கிறது.  தசராவிற்குப் பிறகு தந்தேரஸும், தீபாவளி புனித நாட்களும் வரவிருக்கின்றன. 

 

நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளாகவே, நமது பண்டிகைகளோடு கூடவே, தேசத்தின் ஒரு புதிய உறுதிப்பாடும் இணைந்திருக்கிறது.  உங்களனைவருக்கும் தெரியும் அது என்ன உறுதிப்பாடு என்பது – அது தான் ‘Vocal for Local’ உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்பது.  இப்போது நமது பண்டிகைகளின் மகிழ்ச்சியில் நமது உள்ளூர் கைவினைஞர்களுக்கும், கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நாம் இடமளிக்க வேண்டும்.  வரவிருக்கும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியான அண்ணலின் பிறந்த நாளின் போது, நாமனைவரும் இந்த இயக்கத்தை மேலும் வேகப்படுத்துவோம் என்ற உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.  காதி, கைத்தறி, கைவினைப்பொருள் போன்ற அனைத்துப் பொருட்களோடு கூடவே, உள்ளூர் பொருட்களைக் கண்டிப்பாக வாங்குவோம்.  நம் மக்கள் அனைவரும் இந்தப் பண்டிகைகளின் அங்கமாக ஆனால் தானே இந்தப் பண்டிகைகளின் மெய்யான ஆனந்தம் ஏற்படும்.  ஆகையினாலே, உள்ளூர் பொருட்களோடு தொடர்புடையவர்களுக்கு நாம் ஆதரவளிக்கவும் வேண்டும்.  இதற்கான ஒரு நல்ல வழிமுறை என்றால், பண்டிகைக்காலத்தில், நாம் அளிக்கும் பரிசுப் பொருட்களில் இவை போன்ற பொருட்களை நாம் இடம் பெறச் செய்ய வேண்டும். 

 

இப்போது இந்த இயக்கம் ஏன் மேலும் சிறப்பான ஒன்று என்றால், சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா வேளையிலே, நாம் தற்சார்பு பாரதம் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம்.  இதன் மூலமாகத் தான் சுதந்திர தாகம் படைத்த போராட்ட வீரர்களுக்கு நாம் மெய்யான நினைவாஞ்சலிகளைச் செலுத்த முடியும்.  ஆகையால் இந்த முறை காதி, கைத்தறி அல்லது கைவினைப்பொருள் போன்ற இந்த வகைப் பொருட்களை வாங்குவதில் நீங்கள் புதிய சாதனை படைக்க வேண்டும் என்று உங்களிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.  பண்டிகைகளின் போது பேக்கிங் மற்றும் பேக்கேஜிங் செய்யப் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளின் பயன்பாடு மிகவும் குறைந்து வருவதையும் நம்மால் காண முடிகிறது.  புனிதக்காலங்களில் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் பிரச்சனைக்குக் காரணமான குப்பையும் கூட, நமது திருவிழா உணர்வுக்கு எதிரானது.  ஆகையால் நாம் வட்டார அளவிலே உருவாக்கப்படும் நெகிழியல்லாத பைகளையே பயன்படுத்துவோம்.  நம் பகுதிகளிலே சணல், பருத்தி, வாழை போன்றவற்றால் ஆன எத்தனையோ வகையான பாரம்பரியப் பைகளின் புழக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.  நமது திருவிழாக்காலங்களில் இவற்றுக்கு ஊக்கமளிக்க வேண்டும், தூய்மையோடு கூடவே நமது மற்றும் நமது சுழலின் நலன் குறித்தும் கவனம் செலுத்த வேண்டுவது நமது பொறுப்பல்லவா?

 

எனதருமை நாட்டுமக்களே, நமது சாஸ்திரங்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதென்றால் – பரஹித் சரிஸ் தரம் நஹீன் பாயி, அதாவது பிறருடைய நலனுக்கு இணையான, பிறருக்கு சேவை புரிதல், உதவி செய்வதற்கு இணையான அறம் பிறிதொன்று இல்லை.  கடந்த நாட்களில், தேசத்திலே, சமூக சேவை என்ற இந்த உணர்வின் மேலும் ஒரு காட்சியைக் காண முடிந்தது.  காசநோய் பீடித்த ஏதோ ஒரு நோயாளிக்குப் பொறுப்பேற்று, அவர்களுக்கு ஊட்டச்சத்து நிரம்பிய உணவை அளிக்கும் சவாலை நாட்டில் சிலர் மேற்கொண்டு வருவதை நீங்களே கூட கவனித்திருக்கலாம்.  உள்ளபடியே, இது காசநோயிலிருந்து விடுவிக்கப்பட்ட பாரதம் இயக்கத்தின் ஒரு அங்கமாகும்; இதனடிப்படையில் இருப்பது மக்களின் பங்களிப்பு மற்றும் கடமையுணர்வு.  சரியான ஊட்டச்சத்து மூலமாக, சரியான நேரத்தில் கிடைக்கப் பெறும் மருந்துகளால், காசநோய்க்கான சிகிச்சை சாத்தியப்படும்.  மக்களின் பங்களிப்பு வாயிலாக, இந்த ஆற்றல் துணையோடு, 2025ஆம் ஆண்டுக்குள்ளாக பாரதம் கண்டிப்பாக காசநோயிலிருந்து விடுதலை அடைந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

 

நண்பர்களே, மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட தாத்ரா-நகர் ஹவேலி மற்றும் தமன்-தீவோடு தொடர்புடைய ஒரு எடுத்துக்காட்டு என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது, இது மனதைத் தொடும் வகையில் அமைந்திருக்கிறது.  இந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினப் பகுதியில் வசிக்கும் ஜினு ராவதீயா அவர்கள் எழுதியிருக்கிறார், இங்கே நடைபெறும் கிராமங்களைத் தத்து எடுக்கும் திட்டத்தின்படி, மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் 50 கிராமங்களைத் தத்தெடுத்திருக்கின்றார்கள்.  இதிலே ஜினு அவர்களின் கிராமமும் அடங்கும்.  மருத்துவப்படிப்பு மாணவர்கள், நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள கிராமத்தவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கிறார்கள், நோய்வாய்ப்படும் போது உதவுகிறார்கள், மேலும், அரசு நலத்திட்டங்கள் குறித்தும் தகவல்களை அளிக்கின்றார்கள்.  பரோபகார உணர்வானது, கிராமங்களில் வசிப்போரின் வாழ்க்கையில் புதிய சந்தோஷங்களைக் கொண்டு வந்திருக்கிறது.  இதன் பொருட்டு, மருத்துவக் கல்லூரியின் அனைத்து மாணவர்களுக்கும் நான் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். 

 

நண்பர்களே, மனதின் குரலில் புதியபுதிய விஷயங்கள் பற்றிய பரிமாற்றம் நடந்து வருகிறது.  பலமுறை இந்த நிகழ்ச்சி வாயிலாக சில பழைமையான விஷயங்களின் ஆழங்களைக் காணும் வாய்ப்பும் நமக்குக் கிட்டியிருக்கிறது.  கடந்த மாதம் மனதின் குரலில் சிறுதானியங்கள், 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுவதோடு தொடர்புடைய விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தோம்.  இந்த விஷயம் தொடர்பாக மக்களிடம் பெரும் உற்சாகம் காணப்படுகிறது.  எப்படி சிறுதானியங்களைத் தங்கள் அன்றாட உணவின் அங்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாக எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்திருக்கின்றன.  சிலர் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பாரம்பரியமான உணவுகளைப் பற்றியும் கூறியிருக்கிறார்கள்.  இது பெரிய ஒரு மாற்றத்திற்கான அறிகுறி.  மக்களின் இந்த உற்சாகத்தைக் காணும் போது, நாம் இணைந்து சிறுதானியங்கள் தொடர்பான ஒரு மின்னணுப் புத்தகத்தினைத் தயாரிக்க வேண்டும், அதிலே சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தங்கள் குறித்தும், தங்களுடைய அனுபவங்களையும் அதிலே மக்கள் பகிர்வார்கள், இதன் மூலம் சர்வதேச சிறுதானிய ஆண்டு தொடங்கும் முன்பாகவே நம்மிடத்திலே சிறுதானியங்கள் குறித்த ஒரு பொதுக் களஞ்சியமும் தயாராகி விடும், இதைப் பிறகு மைகவ் தளத்திலே வெளியிடலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. 

 

நண்பர்களே, மனதின் குரலில் இந்த முறை இவ்வளவே என்றாலும், விடைபெறும் முன்பாக, தேசிய விளையாட்டுப் போட்டிகள் குறித்தும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.  செப்டம்பர் 29ஆம் தேதியன்று குஜராத்திலே தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  இது பெரிய, சிறப்பான சந்தர்ப்பம்; ஏனென்றால், தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.  கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த முறையின் ஏற்பாடுகளை ரத்து செய்ய வேண்டியிருந்தது.  இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.  இந்த நாளன்று விளையாட்டு வீரர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் விதமாக, நான் அவர்கள் மத்தியில் இருப்பேன்.  நீங்கள் அனைவரும் கூட தேசிய விளையாட்டுப் போட்டிகளைக் கண்டிப்பாக கவனியுங்கள், உங்கள் விளையாட்டு வீரர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்.  இப்போது நான் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.  அடுத்த மாதம் மனதின் குரலில் புதிய விஷயங்களோடு உங்களை மீண்டும் வந்து சந்திக்கிறேன்.  நன்றிகள், வணக்கம். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait

Media Coverage

When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Under Rozgar Mela, PM to distribute more than 71,000 appointment letters to newly appointed recruits
December 22, 2024

Prime Minister Shri Narendra Modi will distribute more than 71,000 appointment letters to newly appointed recruits on 23rd December at around 10:30 AM through video conferencing. He will also address the gathering on the occasion.

Rozgar Mela is a step towards fulfilment of the commitment of the Prime Minister to accord highest priority to employment generation. It will provide meaningful opportunities to the youth for their participation in nation building and self empowerment.

Rozgar Mela will be held at 45 locations across the country. The recruitments are taking place for various Ministries and Departments of the Central Government. The new recruits, selected from across the country will be joining various Ministries/Departments including Ministry of Home Affairs, Department of Posts, Department of Higher Education, Ministry of Health and Family Welfare, Department of Financial Services, among others.