For us the rivers are not a physical thing, for us the rivers is a living entity: PM
Modi A special e-auction of gifts I received is going on these days. The proceeds from that will be dedicated to the 'Namami Gange' campaign: PM
Small efforts lead to big changes: PM Modi
Mahatma Gandhi made cleanliness a mass movement: PM Modi
Just as the construction of toilets enhanced the dignity of the poor, ‘economic cleanliness’ (elimination of corruption) ensures rights to the poor, makes their lives easier: PM
PM Modi urges countrymen to buy Khadi products on Bapu’s Jayanti on 2nd October
Mann Ki Baat: PM Modi mentions world record created by Divyangjan at the Siachen glacier
PM Modi pays rich tributes to Pt. Deendayal Upadhyaya, says he remains an inspiration for everyone even today

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  ஒரு முக்கிய வேலையாக நான் அமெரிக்கா செல்ல வேண்டியிருப்பதால், நான் பயணிக்கும் முன்பேயே மனதின் குரலைப் பதிவு செய்யத் தீர்மானித்தேன்.  செப்டம்பர் அன்று மனதின் குரல் ஒலிக்கும் நாள், மகத்துவம் நிறைந்த ஒரு நன்னாள்.  நாம் பல நாட்களை நினைவில் இருத்திக் கொள்கிறோம், பலவகையான நாட்களைக் கொண்டாடுகிறோம்.  உங்கள் வீடுகளில் இளைஞர்களிடம் நீங்கள் கேட்டீர்கள் என்றால், அவர்கள் ஆண்டு முழுவதிலும் எந்த நாள் என்று வருகிறது என்ற அட்டவணையையே உங்களுக்குப் போட்டுக் கொடுத்து விடுவார்கள்.  ஆனால் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மேலும் ஒரு நாள் என்றால், இந்த நாள் பாரதநாட்டுப் பாரம்பரியங்களோடு மிகவும் இயைந்து போகும் ஒரு நாள்.  பல நூற்றாண்டுகளாக, எந்தப் பாரம்பரியங்களோடு நாம் இணைந்து வந்துள்ளோமோ, அதோடு நம்மை இணைக்கும் ஒன்று இது.  இது தான் உலக ஆறுகள் தினம் அதாவது World River Day.  நம் நாட்டிலே ஒரு வழக்கு உண்டு.

पिबन्ति नद्यः, स्वय-मेव नाम्भः

பிபந்தி நத்ய:, ஸ்வயமேவ நாம்ப:

அதாவது நதிகள் தங்களுடைய நீரைத் தாமே பருகுவதில்லை; ஆனால் மற்றவர்களுக்கு உதவும் வகையிலே அளிக்கின்றன.  நம்மைப் பொறுத்த மட்டில் நதிகள் என்பன ஏதோ பருப்பொருட்கள் அல்ல, நதிகள் உயிர்ப்பு நிறைந்த அலகுகள், அவற்றை நாம் அன்னையர்களாகவே கருதுகிறோம்.  நம்மிடத்தில் திருநாட்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள், உற்சாகங்கள் என பல இருந்தாலும், நமது இந்த அன்னையரின் மடியினில் தான் அவையெல்லாம் நடைபெறுகின்றன.

உங்கள் அனைவருக்குமே தெரியும் – மாக மாதம் வந்து விட்டால், நமது நாட்டில் பலர் அந்த மாதம் முழுவதிலும், அன்னை கங்கை அல்லது ஏதோ ஒரு நதிக்கரையில் கல்பவாஸம் செய்வது வழக்கம்.  இப்போதெல்லாம் அந்தப் பாரம்பரியம் இல்லை என்றாலும், முற்காலத்திலே, வீட்டில் நீராடும் போதும் கூட, நதிகளை நினைத்துக் கொள்ளும் பாரம்பரியமும் இன்று வழக்கொழிந்து போய் விட்டது அல்லது அங்கே இங்கே என ஏதோ சில இடங்களில் மட்டுமே எஞ்சி இருக்கிறது.  ஆனால் ஒரு மிகப்பெரிய பாரம்பரியம் ஒன்று இருந்தது; அது காலையிலே நீராடும் போது, விசாலமான பாரதநாட்டு யாத்திரையைப் புரிய வைத்தது, மானசீகமான யாத்திரை!  தேசத்தின் அனைத்து மூலைகளோடும் இணைந்து கொள்ளும் உத்வேகம் அளித்தது.  அது என்ன?  நீராடும் போது பாரத நாட்டிலே ஒரு சுலோகம் சொல்லும் பாரம்பரியம் –

கங்கே ச யமுனே சைவ கோதாவரீ சரஸ்வதி.

நர்மதே சிந்து காவேரீ ஜலே அஸ்மின் ஸன்னிதிம் குரு.

       गंगे च यमुने चैव गोदावरी सरस्वति |

नर्मदे सिन्धु कावेरी जले अस्मिन् सन्निधिं कुरु ||

முன்பெல்லாம் வீடுகளில், குடும்பங்களின் பெரியவர்கள் இந்த சுலோகத்தைக் குழந்தைகளுக்கு நினைவூட்டுவார்கள்.  இதனால் நமது தேசத்தின் நதிகளின் மீதான நம்பிக்கை ஏற்படும்.  விசாலமான பாரத நாட்டின் ஒரு மானசீகமான சித்திரம் மனதில் பதிந்து விடும்.  நதிகள் மீதான ஒரு பிடிப்பு உருவாகும்.  எந்த நதியைத் தாயாக நாம் கருதுகிறோமோ, காண்கிறோமோ, உயிர்ப்பிக்கிறோமோ, அதே நதி மீதான ஒரு நம்பிக்கையுணர்வு ஏற்படும்.  ஒரு நற்பண்பு பிறப்பெடுக்கும்.

நண்பர்களே, நமது தேசத்திலே நதிகளின் மகிகை பற்றிப் பேசுகையில், அனைவரும் இயல்பாகவே எழுப்பக்கூடிய ஒரு வினா, அதை எழுப்பும் உரிமையும் உண்டு, இதற்கான விடையளிப்பதும் அனைவரின் கடமை ஆகும்.  நீங்கள் நதிகளைப் பற்றி இந்த அளவு போற்றிப் புகழ்கிறீர்கள், நதிகளை அன்னையர் என்கிறீர்கள் என்றால், ஏன் இவை இத்தனை மாசுபட்டுப் போகின்றன?  நதிகளை சிறிதளவு மாசுபடுத்துவதும் கூட தவறு என்றே நமது சாத்திரங்களிலே கூட கூறியிருக்கிறது.  நமது நாட்டின் மேற்குப் பகுதியில், குறிப்பாக குஜராத் மற்றும் ராஜஸ்தானத்தில் நீர்த்தட்டுப்பாடு நிறைய உண்டு, அங்கே பல முறை பஞ்சமும் ஏற்பட்டிருக்கிறது.  ஆகையினாலே அங்கே சமூக வாழ்க்கையில் ஒரு புதிய பாரம்பரியம் மேம்பட்டிருக்கிறது.  எடுத்துக்காட்டாக, குஜராத்தில் மழைக்காலத் தொடக்கத்தின் போது ஜல் ஜீலானீ ஏகாதசியைக் கொண்டாடுகிறார்கள்.  அதாவது இன்றைய யுகத்தில் நாம் Catch the Rain என்று கூறும் அதே விஷயத்தை, நீரின் ஒவ்வொரு சொட்டையும் நாம் சேமிக்க வேண்டும், அதாவது ஜல் ஜீலனீ.  இதைப் போலவே மழைக்குப் பிறகு பிஹார் மற்றும் கிழக்குப் பகுதிகளில் ”சட்” என்ற பெருநாள் கொண்டாடப்படுகிறது.  இந்த சட் பூஜையை மனதில் கொண்டு நதிக்கரைகள், படித்துறைகள் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டு, செப்பனிடப்படும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்.  நாம் நதிகளைத் தூய்மைப்படுத்தி, மாசு நீக்கம் செய்யும் பணியை, அனைவரின் முயற்சிகளோடும் அனைவரின் ஒத்துழைப்போடும் செய்ய வேண்டும்.  நமாமி கங்கே இயக்கமும் இன்று முன்னேறிக் கொண்டு இருக்கிறது என்றால் இந்தப் பணியில் அனைவரின் முயல்வுகளும், ஒரு வகையில் மக்கள் விழிப்புணர்வு, மக்கள் இயக்கம் ஆகிய அனைத்தின் பெரிய பங்களிப்பு இருக்கிறது.

நண்பர்களே, நாம் நதிகளைப் பற்றி, அன்னை கங்கை குறித்துப் பேசும் வேளையில், கண்டிப்பாக ஒரு விஷயம் மீது உங்கள் கவனம் சென்றிருக்கும், குறிப்பாக நமது இளைஞர்களின் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கும்.  இப்போதெல்லாம் ஒரு சிறப்பான ஈ ஆக்க்ஷன், ஈ ஏலம் நடைபெற்று வருகிறது.  இந்த மின்னணு ஏலம் வாயிலாக, அவ்வப்போது எனக்குப் பலர் அளித்திருக்கும் பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன.  இந்த ஏலம் வாயிலாகக் கிடைக்கும் தொகை, நமாமி கங்கே இயக்கத்திற்காக அர்ப்பணிக்கப்படும்.  நீங்கள் எந்த உள்ளார்ந்த அன்போடு எனக்குப் பரிசுகளை அளிக்கிறீர்களோ, அதே உணர்வு தான் இந்த இயக்கத்தை மேலும் பலப்படுத்துகிறது.

நண்பர்களே, நாடெங்கிலும் உள்ள நதிகளுக்கு மீளுயிர்ப்பு அளிக்க, நதியின் தூய்மையின் பொருட்டு, அரசும் சமூகசேவை அமைப்புக்களும் தொடர்ந்து ஏதோ ஒன்றைச் செய்து வருகின்றன.  இன்று தொடங்கி அல்ல, பல பத்தாண்டுகளாகவே செய்து வருகின்றன. சிலர் இவை போன்ற பணிகளுக்காக தங்களையே அர்ப்பணம் செய்திருக்கிறார்கள்.  இதே பாரம்பரியம், இதே முயற்சி, இதே நம்பிக்கை தாம் நமது நதிகளைக் காத்தளித்திருக்கின்றன.  இந்தியாவின் எந்த ஒரு மூலையிலிருந்தும் இப்படிப்பட்ட பணிகளை ஆற்றுவோர் பற்றிய செய்திகள் கிடைக்கப் பெறும் வேளையில், அவர்கள் மீது ஒரு மிகப் பெரிய மரியாதையுணர்வு மனதில் தோன்றுகிறது; இவை பற்றி உங்களோடு கலக்க வேண்டும் என்று என் மனம் அவாவுகிறது.  தமிழ்நாட்டின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் எடுத்துக்காட்டுக்களை நான் அளிக்கிறேன்.  இங்கே இருக்கும் ஒரு நதியின் பெயர் நாகநதி.  இந்த ஆறு பல ஆண்டுகளுக்கு முன்பேயே வறண்டு விட்டது.  இதன் காரணமாக இந்த நிலப்பரப்பில் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது.  ஆனால், இங்கே இருக்கும் பெண்கள் இந்தச் சவாலை சிரமேற்கொண்டு, தங்களுடைய இந்த நதிக்கு மீளுயிர்ப்பளித்தார்கள்.  இவர்கள் மக்களை இணைத்தார்கள், மக்கள் பங்களிப்பு வாயிலாக கால்வாய்களைத் தோண்டினார்கள், தடுப்பணைகளை உருவாக்கினார்கள், மறுசெறிவுக் குளங்களை வெட்டினார்கள்.  இந்த நதி இன்று நீர் நிரம்பி இருக்கிறது என்பதை அறிந்து உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் நண்பர்களே.  நதியில் நீர் நிரம்பி இருக்கும் காட்சி மனதிற்கு ஒரு அமைதியை ஏற்படுத்துகிறது, இதை நானே கூட அனுபவித்திருக்கிறேன்.

எந்த சாபர்மதீ நதிக்கரையில் காந்தியடிகள் சாபர்மதீ ஆசிரமத்தை அமைத்தாரோ, அங்கே சில பத்தாண்டுகளுக்கு முன்பிலிருந்தே சாபர்மதீ ஆறு வறண்டு விட்டது.  ஆண்டில் 6-7 மாதங்கள் வரை கண்ணுக்கு நீரே தட்டுப்படாது.  ஆனால் நர்மதையாறும், சாபர்மதீ ஆறும் இணைக்கப்பட்ட பிறகு, இன்று நீங்கள் அஹ்மதாபாத் சென்றால், சாபர்மதீ ஆற்றில் நீரைக் கண்டு உங்கள் மனம் மலரும்.  தமிழ்நாட்டின் நமது சகோதரிகள் புரிந்துள்ள இதே போன்ற பல பணிகள் நாட்டின் பல்வேறு பாகங்களில் நடந்து வருகின்றன.  நம்முடைய மதப் பாரம்பரியங்களோடு இணைந்த பல புனிதர்கள், குருமார்கள் உள்ளார்கள், அவர்களும் தங்களுடைய ஆன்மீகப் பயணத்தோடு கூடவே, நீருக்காக, நதிகளுக்காக, பல நதிக்கரைகளில் மரங்களை நடும் இயக்கம் போன்ற பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள் என்பதை நான் அறிவேன்.  இதனால் நதிகளில் பெருகும் மாசுபட்ட நீர் தடுக்கப்படும்.

நண்பர்களே, உலக ஆறுகள் தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும், வாழ்த்த வேண்டும்.  ஆனால் ஒவ்வொரு நதியோரமும் வசிப்போரிடத்திலும், நாட்டுமக்களிடத்திலும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், பாரதத்திலே, அனைத்து பாகங்களிலும் ஆண்டுக்கொரு முறையாவது நதித்திருவிழாவைக் கொண்டாட வேண்டும் என்பது தான்.

எனதருமை நாட்டுமக்களே, எப்போதும் சிறிய விஷயத்தை, சிறியது என்று கருதி நாம் புறந்தள்ளி விடக் கூடாது.  சின்னச்சின்ன முயல்வுகள் கூட சில வேளைகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; காந்தியடிகளின் வாழ்க்கையை நாம் நோக்கினால், அவர் ஒவ்வொரு கணமும் சின்னச்சின்ன விஷயங்களுக்குத் தனது வாழ்விலே எத்தனை முக்கியத்துவம் அளித்தார் என்பதும், சின்னச்சின்ன விஷங்களின் பொருட்டு, பெரியபெரிய உறுதிப்பாடுகளை நடத்திக் காட்டினார் என்பதும் தெரிய வரும்.  தூய்மை இயக்கமானது எவ்வாறு சுதந்திரப் போராட்டத்திற்கு நிரந்தரமான ஒரு சக்தியை அளித்தது என்பதை நமது இன்றைய இளைய தலைமுறையினர் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.  காந்தியடிகள் தாம் தூய்மையை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றிக் காட்டினார்.  அவர் தூய்மையை, தன்னாட்சிக் கனவோடு இணைத்து வைத்தார்.  இன்று இத்தனை தசாப்தங்களுக்குப் பின்னர், தூய்மை இயக்கமானது மீண்டும் ஒருமுறை புதிய பாரதம் என்ற கனவோடு தேசத்தை இணைக்கும் பணியைச் செய்திருக்கிறது.  நமது பழக்கங்களை மாற்றும் இயக்கமாக இது ஆகி வரும் அதே வேளையில், தூய்மை என்பது வெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.  தூய்மை என்பது ஒவ்வொரு தலைமுறையினருக்கும் நற்பதிவுகளை அளிக்கும் ஒரு கடமை, தலைமுறைத் தொடர்களாக தூய்மை இயக்கம் நடக்கும் போது தான், ஒட்டுமொத்த சமூக வாழ்விலும் தூய்மை என்பது ஒரு இயல்பாகவே பொதியும்.  ஆகையால் இதை ஏதோ ஓராண்டு-ஈராண்டு என்பதாகவோ, ஒன்றிரண்டு அரசுகளின் செயல்பாடாகாவோ குறுக்கி விடக்கூடாது.  தலைமுறை தலைமுறையாக நாம் தூய்மை தொடர்பாக விழிப்போடும், தொடர்ச்சியாகவும், சோர்வடையாமல், தடைப்படாமல், அர்ப்பணிப்பு உணர்வோடு இணைந்து, தூய்மை என்ற பேரியக்கத்தைத் தொடர வேண்டும்.  தூய்மை என்பது வணக்கத்துக்குரிய அண்ணலுக்கு தேசம் அளிக்கக்கூடிய மிகப்பெரிய சிரத்தாஞ்சலி, இதை நாம் ஒவ்வொரு முறையும் அளித்து வர வேண்டும், தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் முன்னமேயே கூறியிருக்கிறேன்.

நண்பர்களே, தூய்மை குறித்துப் பேசும் எந்த ஒரு வாய்ப்பினையும் நான் விடுவதில்லை என்பதை மக்கள் அறிவார்கள்.  ஒருவேளை அதனால் தானோ என்னவோ, மனதின் குரலின் ஒரு நேயர் ரமேஷ் படேல் அவர்கள், நாம் சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் போது, பொருளாதாரத் தூய்மை என்ற உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதை அண்ணலிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.  கழிப்பறைகள் எப்படி ஏழைகளின் கண்ணியத்தை அதிகரித்திருக்கிறதோ, அதே போல, பொருளாதாரத் தூய்மையும், ஏழைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துகிறது, அவர்களின் வாழ்க்கையை எளிமையாக்குகிறது.  ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடர்பான இயக்கத்தை தேசம் முடுக்கி விட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.  இதன் காரணமாக, இன்று ஏழைகளுக்கு அவர்களுடைய உரிமைத் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளைச் சென்றடைகின்றன; விளைவு, ஊழல் போன்ற தடைகள் பெரிய அளவில் குறைந்து விட்டிருக்கின்றன.  பொருளாதாரத் தூய்மையில் தொழில்நுட்பம் பெரிய உதவிக்கரமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.  இன்று ஊரகப் பகுதிகளிலும் கூட, fin-tech UPI, அதாவது நிதிசார் தொழில்நுட்ப UPIஇன் விளைவாக, டிஜிட்டல் முறை பணம் கொடுக்கல் வாங்கல் திசையில், எளிய மக்களும் இணைந்து வருகிறார்கள், இதன் புழக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.  நான் உங்களோடு ஒரு புள்ளிவிவரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.  கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்த ஒரே மாதத்தில், UPI வாயிலாக கிட்டத்தட்ட 350 கோடிக்கும் மேற்பட்ட பரிவர்த்தனை டிஜிட்டல் முறையில் நடைபெற்றிருப்பதில் UPI பயனாகி இருக்கிறது.  இன்று சராசரியாக 6 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை மின்னணு பணப்பரிவர்த்தனை UPI வாயிலாக நடைபெற்று வருகிறது.  இதனால் தேசத்தின் பொருளாதார அமைப்பில் தூய்மை, ஒளிவுமறைவற்ற தன்மை ஏற்பட்டு வருகிறது, இப்போது நிதிசார் தொழில்நுட்பத்தின் மகத்துவம் அதிகரித்து வருகிறது என்பது நமக்கெல்லாம் பெருமிதம் தரும் ஒரு விஷயம். 

நண்பர்களே, தூய்மையை எவ்வாறு தன்னாட்சியோடு அண்ணல் இணைத்தாரோ, அதே போல, காதியையும் நாம் சுதந்திரத்தின் அடையாளமாக ஆக்கியிருக்கிறோம்.  இன்று சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை நாம் சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவமாகக் கொண்டாடும் வேளையில், விடுதலைப் போராட்டத்தில் காதிக்கு இருந்த அதே பெருமையை, இன்றைய நமது இளம் தலைமுறையினர் அளித்து வருகிறார்கள் என்பது நிறைவை ஏற்படுத்துகிறது.  இன்று காதி மற்றும் கைத்தறி ஆடைகளின் உற்பத்தி பல மடங்கு பெருகி இருக்கிறது, தேவையும் அதிகரித்திருக்கிறது.  தில்லியின் காதி காட்சியகத்தில் ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட விற்பனை பலமுறை நடந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.  அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று வணக்கத்துக்குரிய அண்ணலின் பிறந்த நாளன்று நாம் அனைவரும் மீண்டும் ஒரு முறை ஒரு புதிய சாதனையைப் படைக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.  இது பண்டிகைகளுக்கான நேரம், தீபாவளியும் வருகிறது, உங்கள் பகுதியில் எங்கே காதிப்பொருட்கள் விற்பனை ஆகிறதோ, கைத்தறிப் பொருட்கள்-கைவினைப் பொருட்கள் விற்பனை ஆகிறதோ, அங்கே காதி, குடிசைத் தொழில், கைத்தறி தொடர்பாக நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளும், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற இந்த இயக்கத்திற்கு வலுவூட்டுவதாக இருக்கும், பழைய பதிவுகள் அனைத்தையும் தகர்ப்பதாக அமையும்.

நண்பர்களே, அமிர்த மஹோத்சவத்தின் இந்தக் காலகட்டத்தில், தேச விடுதலை வரலாற்றின் சொல்லப்படாத பல சம்பவங்கள்-கதைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் இயக்கம் நடைபெற்று வருகிறது, இதன் பொருட்டு, மலரத் துடிக்கும் எழுத்தாளர்களுக்கும், தேசத்திலும், உலகெங்கிலும் இருக்கும் இளைஞர்களுக்கும் நான் அறைகூவல் விடுத்தேன்.  இந்த இயக்கத்தோடு 13,000த்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள், அதுவும் 14 வேறுவேறு மொழிகளில்.  20க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் அயல்நாடுவாழ் இந்தியர்களும் தங்களை இந்த இயக்கத்தோடு இணைத்துக் கொள்ளத் விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  மேலும் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கிட்டத்தட்ட 5000த்திற்கும் மேற்பட்ட உருவாக விரும்பும் எழுத்தாளர்கள், விடுதலை வேள்வியோடு தொடர்புடைய போராட்டம் பற்றிய கதைகளை ஆராய்ந்து வருகிறார்கள்.  மறைந்து போன, யாருமறியா நாயகர்களைப் பற்றியும், வரலாற்றுப் பக்கங்களிலிருந்து காணாமல் போன சம்பவங்கள் பற்றியும் எழுதும் சவாலை இவர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.  அதாவது 75 ஆண்டுக்காலத்தில் யாருமே பேசத் தவறிய, பேசப்படாமல் விடுபட்டுப் போன விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றை தேசத்தின் முன்பாகக் கொண்டு வருவோம் என்று உறுதி பூண்டிருக்கிறார்கள்.  அனைத்து இளைஞர்களையும் ஊக்கப்படுத்துங்கள் என்று அனைத்து நேயர்களிடமும், கல்வித்துறையோடு தொடர்புடைய அனைவரிடத்திலும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.  நீங்களும் முன்னே வாருங்கள், சுதந்திரத்தின் அமிர்ந்த மஹோத்சவத்தின் வரலாற்றினை எழுதும் பணியைச் செய்வோர் அனைவரும், வரலாற்றினைப் படைக்கவிருக்கிறார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

என் மனம் நிறை நாட்டுமக்களே, சியாச்சின் பனிக்கட்டிப்பாளம் பற்றி நாமனைவரும் அறிவோம்.  அங்கே வசிப்பது என்பது சாதாரண மக்களுக்கு இயலாத ஒன்று எனும் அளவிற்கு அங்கே தீவிரமான குளிர் இருக்கிறது.  கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே பனிமயம், அங்கே மரம்-செடி-கொடி என்பது மாதிரிக்குக் கூட கிடையாது. இங்கே இருக்கும் வெப்பநிலை பூஜ்யத்திற்குக் கீழே 60 டிகிரி வரை கூட செல்லும்.   சில நாட்கள் முன்பாக, 8 மாற்றுத்திறனாளிகள் கொண்ட ஒரு குழு படைத்திருக்கும் சாதனை, நாட்டுமக்கள் ஒவ்வொருவருக்கும் பெருமிதம் ஏற்படுத்துவது.  சியாச்சின் பனிக்கட்டிப் பாளத்தில், 15000 அடிக்கும் மேற்பட்ட உயரத்திலே இருக்கும் குமார் போஸ்டில் தங்களுடைய முத்திரையைப் பதித்து, உலக சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது இந்தக் குழு.  உடல்ரீதியிலான சவால்களையும் தாண்டி, நமது இந்த மாற்றுத்திறனாளிகள் புரிந்திருக்கும் இந்த சாதனை, தேசத்திற்கே ஒரு பெரிய கருத்தூக்கம்.  இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரைப் பற்றியும் நீங்கள் தெரிந்து கொண்டால், என்னிடத்தில் நிறைந்தது போலவே உங்களுக்குள்ளேயும் தைரியமும், தன்னம்பிக்கையும் நிறையும்.  இந்த சாகஸ மாற்றுத்திறனாளிகளின் பெயர்கள் – மஹேஷ் நெஹ்ரா, உத்தராக்கண்டின் அக்ஷத் ராவத், மஹாராஷ்ட்டிரத்தின் புஷ்பக் கவாண்டே, ஹரியாணாவைச் சேர்ந்த அஜய் குமார், லத்தாக்கைச் சேர்ந்த லோப்சாங் சோஸ்பேல், தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் துவாரகேஷ், ஜம்மு-கஷ்மீரத்தைச் சேர்ந்த இர்ஃபான் அஹ்மத் மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சோஞ்ஜின் ஏங்க்மோ.  சியாச்சின் பனிக்கட்டிப் பாளத்தின் மீது கால் பதிக்கும் இந்தச் செயல்பாடு, இந்திய இராணுவத்தின் சிறப்புப் படைகளின் நீடித்த அனுபவமுடையோர் காரணமாகவே வெற்றி பெற்றிருக்கிறது.  இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, இதுவரை புரியப்படாத சாதனையைப் புரிந்தமைக்கு, இந்தக் குழுவுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நமது நாட்டுமக்களின் ”சாதிக்க முடியும் என்ற கலாச்சாரம், சாதிக்க முடியும் என்ற உறுதிப்பாடு, சாதிக்க முடியும் என்ற கண்ணோட்டத்தோடு” கூடவே, அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய உணர்வினையும் வெளிப்படுத்துகிறது. 

நண்பர்களே, இன்று மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல முயல்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  உத்தரப் பிரதேசத்தில் நடந்தேறிவரும் One Teacher, One Call, அதாவது ”ஒரு ஆசிரியர், ஒரு அழைப்பு”  என்ற ஒரு முயற்சி பற்றித் தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்கு அமைந்தது.  பரேலியில் ஒரு வித்தியாசமான முயற்சியானது, மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கு புதிய பாதை ஒன்றினைக் காட்டி வருகிறது.  இந்த இயக்கத்திற்குத் தலைமையேற்று நடத்தி வருபவர், டபோரா கங்காபூரின் ஒரு பள்ளித் தலைமை ஆசிரியையான தீப்மாலா பாண்டே அவர்கள்.  கொரோனா காலகட்டத்தில் இந்த இயக்கம் காரணமாக, அதிகமான எண்ணிக்கையில் பள்ளியில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டதோடு, 350க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், சேவையுணர்வோடு இத்துடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.  இந்த ஆசிரியர்கள் கிராமந்தோறும் சென்று மாற்றுத் திறனாளிப் பிள்ளைகளை அழைக்கிறார்கள், அவர்களைத் தேடுகிறார்கள், பிறகு இவர்கள் ஏதோ ஒரு பள்ளியில் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்துகிறார்கள்.  மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்காக தீப்மாலா அவர்களும் அவருடன் இணைந்திருக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும், இந்த அருமையான முயல்விற்காக, என் மனம் திறந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  கல்வித்துறையில் இப்படிப்பட்ட அனைத்து முயற்சிகளும் நமது தேசத்தின் எதிர்காலத்திற்கு மேலும் மெருகூட்டும்.

என் இனிய நாட்டுமக்களே, இன்று நமது வாழ்க்கையின் நிலை எப்படி இருக்கிறது என்றால், ஒரே நாளிலேயே பலமுறை கொரோனா என்ற சொல் நமது காதுகளிலே எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது, நூறாண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கும் மிகப்பெரிய உலகளாவிய பெருந்தொற்றான கோவிட்-19, நாட்டுமக்களுக்கு பல படிப்பினைகளை ஊட்டியிருக்கிறது.  உடல்நலத்தைப் பேணுவது குறித்தும், நலவாழ்வு குறித்தும் இன்று பேரார்வமும் அதிகரித்திருக்கிறது, விழிப்புணர்வும் வலுத்திருக்கிறது.  நம்முடைய நாட்டில் பாரம்பரியமான இயற்கைப் பொருட்கள் அதிக அளவிலே கிடைக்கின்றன, இவை நலவாழ்வுக்கு மிகவும் பயனுடையவையாக உள்ளன.  ஒடிஷாவின் காலாஹண்டியைச் சேர்ந்த நாந்தோலில் வசிக்கும் பதாயத் சாஹூ அவர்கள் இந்தத் துறையில் பல ஆண்டுகளாக ஒரு வித்தியாசமான செயலைச் செய்து வருகிறார்.  இவர் ஒண்ணரை ஏக்கர் நிலப்பரப்பில், மருத்துவத் தாவரங்களைப் பயிரிட்டு வருகிறார்.  இது மட்டுமல்ல, சாஹூ அவர்கள் இந்த மருத்துவத் தாவரங்களை ஆவணப்படுத்தியும் இருக்கிறார்.  ராஞ்சியைச் சேர்ந்த சதீஷ் அவர்கள் கடிதம் வாயிலாக இப்படிப்பட்ட மேலும் ஒரு தகவலையும் அளித்திருக்கிறார்.  ஜார்க்கண்டின் ஒரு Aloe Vera Village, அதாவது கற்றாழை கிராமத்தின்பால் என் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.  ராஞ்சிக்கருகே, தேவரீ கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், மஞ்சு கச்சப் அவர்களின் தலைமையின் கீழ், பிர்ஸா விவசாய கல்விசாலையில், கற்றாழை வளர்ப்பு பற்றி பயிற்சி பெற்றார்.  இதன் பிறகு இவர் கற்றாழை வளர்ப்பில் ஈடுபட்டு, இதனால் உடல்நலத் துறையில் இவருக்கு ஆதாயம் கிட்டியதோடு, இந்தப் பெண்களின் வருவாயும் பெருகியது.  கோவிட் பெருந்தொற்றின் போதும் இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தது.  காரணம் என்ன தெரியுமா?  sanitizer என்ற கிருமிநாசினி தயாரிக்கும் நிறுவனங்கள், நேரடியாக இவர்களிடமிருந்து கற்றாழையை வாங்கியது தான் காரணம்.  இன்று, இந்தப் பணியில் கிட்டத்தட்ட 40 பெண்கள் அடங்கிய குழு இணைந்திருக்கிறது, பல ஏக்கர் நிலப்பரப்பில் கற்றாழை சாகுபடி செய்யப்படுகிறது, ஒடிஷாவின் பதாயத் சாஹூ அவர்கள் ஆகட்டும், தேவரீயின் பெண்களின் இந்தக் குழுவாகட்டும், இவர்கள் விவசாயத்தை எவ்வாறு உடல்நலத்தோடு இணைத்தார்கள் என்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நண்பர்களே, வரவிருக்கும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று லால் பஹாதுர் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாளுமாகும்.  அவரது நினைவைப் போற்றும் வகையிலே இந்த நாள் விவசாயத்தில் புதியபுதிய பரிசோதனைகளைச் செய்பவர்களுக்கும் கற்றலை அளிக்கிறது.  மருத்துவத் தாவரங்கள் துறையில் ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கமளிக்கும் Medi-Hub TBI என்ற பெயர் கொண்ட ஒரு இன்குபேட்டர், குஜராத்தின் ஆனந்தில் இதற்கான பணிகள் நடந்தேறி வருகின்றன.  மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்களோடு தொடர்புடைய இன்குபேட்டர், மிகக்குறைவான காலத்திலேயே 15 தொழில்முனைவோரின் வியாபார முனைப்பிற்கு ஆதரவளித்திருக்கிறது.  இந்த இன்குபேட்டரின் துணைக்கொண்டு, சுதா சேப்ரோலூ அவர்கள் தன்னுடைய ஸ்டார்ட் அப்பைத் தொடங்கி இருக்கிறார்.  இவரது நிறுவனத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, நூதனமான மருத்துவ வடிவமைத்தல்களின் பொறுப்பு இவர்களிடமே உள்ளது.  மேலும் ஒரு தொழில் முனைவோரான சுபாஸ்ரீ அவர்களுக்கும் இதே மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்களின் இன்குபேட்டரிடமிருந்து உதவிகள் கிடைத்துள்ளன.  சுபாஸ்ரீ அவர்களின் நிறுவனம், மருத்துவத் தாவர அறை மற்றும் காரின் காற்றினிமைத் திவலைத் துறையில் பணியாற்றி வருகிறது.  இவர் ஒரு மருத்துவத் தாவர மாடித் தோட்டத்தையும் ஏற்படுத்தி, அதிலே 400க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவரங்களைப் பயிர் செய்து வருகிறார்.

நண்பர்களே, குழந்தைகளிடத்திலே மருத்துவத் தாவரங்கள் மற்றும் மூலிகைத் தாவரங்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒரு சுவாரசியமான முன்னெடுப்பைச் செய்திருக்கிறது, இந்தச் சவாலை ஏற்றிருக்கிறார் நமது பேராசிரியர் ஆயுஷ்மான் அவர்கள்.  சரி, யார் இந்த பேராசிரியர் ஆயுஷ்மான் என்று நீங்கள் யோசிக்கலாம்?  உள்ளபடியே, பேராசிரியர் ஆயுஷ்மான் என்பவர் ஒரு காமிக் புத்தகத்தின் கதாபாத்திரம்.  இதிலே பலவகையான கேலிச்சித்திரங்கள் வாயிலாக, சின்னச்சின்னக் கதைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.  இதோடு கூடவே, கற்றாழை, துளசி, நெல்லி, வேம்பு, சீந்தில், அஸ்வகந்தா, வல்லாரை போன்ற ஆரோக்கியத்திற்கு உதவும் மருத்துவத் தாவரங்களின் பயன்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

நண்பர்களே, இன்றைய நிலையில், எந்த வகையான மருத்துவத் தாவரம் மற்றும் மூலிகைப் பொருட்கள் உற்பத்தி குறித்து உலகம் முழுவதிலும் ஆர்வம் அதிகரித்திருக்கிறதோ, அவை தொடர்பாக பாரத நாட்டிடம் அளப்பரிய சாத்தியக்கூறுகள் உள்ளன.  கடந்த காலத்திலே ஆயுர்வேத மற்றும் மூலிகைப் பொருட்கள் ஏற்றுமதியில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.

மக்களின் உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கக்கூடிய, நமது விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வருவாயை அதிகரிப்பதில் உதவிகரமாக இருக்கும் இப்படிப்பட்ட பொருட்கள் மீது நீங்கள் உங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள் உலகோடு தொடர்புடையவர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே, பாரம்பரியமான விவசாயத்திலிருந்து சற்று முன்னேறி, விவசாயத் துறையில் நடைபெற்றுவரும் புதிய பரிசோதனைகள், புதிய மாற்றுகள் ஆகியன தொடர்ந்து சுயவேலைவாய்ப்புக்கான புதிய சாதனங்களை உருவாக்கித் தருகின்றன.  புல்வாமாவின் இரு சகோதரர்கள் பற்றிய கதையும் கூட இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.  ஜம்மு-கஷ்மீரத்தின் புல்வாமாவைச் சேர்ந்த பிலால் அஹ்மத் ஷேக், முனீர் அஹ்மத் ஷேக் ஆகியோர், தங்களுக்கென ஒரு புதிய பாதையை எப்படி அமைத்துக் கொண்டார்கள் என்பது புதிய இந்தியாவின் ஒரு எடுத்துக்காட்டு.  39 வயதான பிலால் அஹ்மத் அவர்கள் உயர்கல்வி படித்தவர், இவர் பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.  தனது உயர்கல்வியோடு தொடர்புடைய அனுபவங்களைப் பயன்படுத்தி, இவர் விவசாயத்திலே தானே ஒரு ஸ்டார் அப்பை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.  பிலால் அவர்கள் தனது வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிக்கும் ஒரு அலகை உருவாக்கினார்.  இந்த அலகிலே தயாராகும் உயிரி உரமானது, விவசாயத்திற்கு ஆதாயமானதாக இருப்பதோடு, மக்களுக்கான வேலைவாய்ப்பினையும் அளிக்கிறது.  ஒவ்வொரு ஆண்டும் இந்தச் சகோதரர்களின் அலகிலிருந்து விவசாயிகளுக்குக் கிட்டத்தட்ட 3000 குவிண்டால் மண்புழு உரம் கிடைத்து வருகிறது.  இவர்களின் மண்புழு உரத் தயாரிக்கும் அலகில் இன்று 15 பேர் வேலைபார்த்து வருகிறார்கள்.  இவர்களின் இந்த அலகைக் காண்பதற்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் வருகிறார்கள், இவர்களில் பெரும்பாலானோர், விவசாயத் துறையில் சாதிக்க நினைக்கும் இளைஞர்கள்.  புல்வாமாவின் ஷேக் சகோதரர்கள் வேலை தேடுபவர்கள் என்பதற்கு பதிலாக, வேலையளிப்பவர்களாக மாறும் உறுதியை இறுகப் பற்றிக் கொண்டார்கள், இன்று ஜம்மு-கஷ்மீரில் மட்டுமல்ல, தேசமெங்கும் இருப்போருக்குப் புதிய பாதையை இவர்கள் காட்டி வருகிறார்கள்.

எனதருமை நாட்டுமக்களே, செப்டெம்பர் மாதம் 25ஆம் தேதியன்று தேசத்தின் மகத்தான செல்வன், பண்டித தீன் தயாள் உபாத்தியாயா அவர்களின் பிறந்த நாள்.  தீன் தயாள் அவர்கள், கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சிந்தனையாளர்களில் ஒருவர்.  இவருடைய பொருளியல் தத்துவம், சமூகத்திற்கு அதிகாரப் பங்களிப்பு அளிக்கவல்ல இவருடைய கோட்பாடுகள், இவர் காட்டிய அந்த்யோதய் மார்க்கம் ஆகியவை இன்றும் கூட பேசப்படும் பொருளாக இருப்பதோடு, உத்வேகம் அளிக்கவல்லதாகவும் இருக்கிறது.  மூன்று ஆண்டுகள் முன்பாக, செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி, அவருடைய பிறந்த நாளன்று தான், உலகின் மிகப்பெரிய உடல்நலக் காப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரதம் திட்டம் அமல் செய்யப்பட்டது.  இன்று தேசத்தின் இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு, ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தின்படி, மருத்துவமனைகளில் ஐந்து இலட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சை இலவசமாகக் கிடைத்திருக்கிறது.  ஏழைகளுக்கான இத்தனை பெரிய திட்டம், தீன் தயாள் அவர்களின் அந்த்யோதய் தத்துவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.  தீன் தயாள் அவர்களுடைய விழுமியங்களையும்,  இலட்சியங்களையும் இன்றைய இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையிலே கடைப்பிடித்தால், அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  ஒருமுறை லக்னௌவிலே தீன் தயாள் அவர்கள், “எத்தனை அருமையான பொருட்கள், எத்தனை அழகான குணங்கள், இவை அனைத்தும் சமூகத்திடமிருந்து நமக்குக் கிடைக்கின்றன.  இந்தச் சமூகத்திற்கு நாம் பட்ட கடனை அடைக்க வேண்டும், போன்ற கருத்துக்களை நாம் மனதில் ஏற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.  அதாவது நாம் சமூகத்திடமிருந்தும், தேசத்திடமிருந்தும் நிறைய பெற்றுக் கொள்கிறோம், இவையெல்லாம் தேசத்தின் காரணமாகவே நமக்குக் கிடைக்கிறது; ஆகையால், இப்படிப்பட்ட தேசத்திற்கு நாம் எவ்வாறு கைம்மாறு செய்யலாம் என்ற கோணத்திலே சிந்திக்க வேண்டும் என்ற கற்பித்தலை தீன் தயாள் அவர்கள் அளித்திருக்கிறார்.  இது இன்றைய இளைஞர்களுக்கான ஒரு மிகப்பெரிய செய்தி.

நண்பர்களே, தோல்வியை ஏற்காமல், தொடர்ந்து முயல வேண்டும் என்ற கற்றலும், தீன் தயாள் அவர்களின் வாழ்க்கையிலிருந்து நமக்குக் கிடைக்கிறது.  சாதகமற்ற அரசியல் மற்றும் கொள்கைரீதியிலான சூழ்நிலைகளைத் தாண்டி, பாரதத்தின் முன்னேற்றத்திற்காக, உள்நாட்டு மாதிரி என்ற ஒரு தொலைநோக்கினை அளிப்பதிலிருந்து அவர் சற்றும் சளைக்கவில்லை.  இன்று பல இளைஞர்கள் வாடிக்கையான பாதைகளை விட்டு விலகி, முன்னேறிச் செல்ல விழைகிறார்கள்.  விஷயங்களை இவர்கள் தங்கள் போக்கிலே செய்ய விரும்புகிறார்கள்.  இந்த விஷயத்தில் தீன் தயாள் அவர்களின் வாழ்க்கையிலிருந்து இந்த இளைஞர்கள் பயனடைய முடியும்.  ஆகையால் இவரைப் பற்றி நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளுங்கள் என்று இளைஞர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, நாம் இன்று பல விஷயங்கள் குறித்துப் பேசினோம்.  நாம் முன்னேயே கூறியதைப் போல, வரவிருக்கும் காலம் பண்டிகைக் காலம்.  கண்ணியமே உருவெடுத்த மனிதகுலத் தலைவனாம் இராமன், பொய்மை மீது பெற்ற வெற்றியை நினைவு கொள்ளும் திருநாளை தேசம் முழுவதும் கொண்டாடும்.  ஆனால் இந்தக் கொண்டாட்டத்தில் மேலும் ஒரு போராட்டத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் – அது தான் தேசம் மேற்கொண்டிருக்கும் கொரோனாவுடனான போர்.  டீம் இண்டியாவின் இந்தப் போரிலே தினமொரு சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது.  தடுப்பூசி போடுவதில் தேசம் பல சாதனைகளைப் படைத்து விட்டது, இதைப் பற்றித் தான் உலகெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது.  இந்தப் போரிலே, ஒவ்வொரு இந்தியனுக்கும், சிறப்பானதொரு பங்களிப்பு இருக்கிறது.  நமது முறை வரும் போது நாம் தடுப்பூசி போட்டுக் கொள்வதோடு, இந்தப் பாதுகாப்பு வளையத்திலிருந்து யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.  நமக்கருகே யாருக்காவது தடுப்பூசி போடப்படவில்லை என்றால், அவரையும் அருகே இருக்கும் தடுப்பூசி மையத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.  தடுப்பூசி போடப்பட்ட பிறகு அவசியமான வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்.  இந்தப் போரிலே, மீண்டும் ஒருமுறை டீம் இண்டியா தனது முத்திரையைப் பதிக்கும் என்பதிலே எனக்கு எந்தவிதமான ஐயமும் கிடையாது.  நாம் அடுத்த முறை மேலும் பல விஷயங்கள் குறித்து மனதின் குரலில் உரையாடுவோம்.  உங்கள் அனைவருக்கும், நாட்டுமக்கள் அனைவருக்கும், பண்டிகைகளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.  நன்றி. 

 

 

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi