#MannKiBaat: PM Modi shares an interesting conversation he had with Lata Mangeshkar Ji ahead of her birthday
Not only 'delivery in', think about 'delivery out' also. Share your joy with those in need: PM #MannKiBaat
On this Diwali, let us organise public programmes to honour our daughters, let us celebrate their achievements: PM Modi #MannKiBaat #BharatKiLaxmi
#MannKiBaat: e-cigarettes became a fashion statement, banned to protect youth from it's ill effects, says PM
It is a matter of great joy for India that the Pope will declare Sister Mariam Thresia a saint on October 13: PM during #MannKiBaat
Let us shun single-use plastic as a tribute to Mahatma Gandhi: PM Modi during #MannKiBaat

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நண்பர்களே, இன்றைய மனதின் குரலில் நாட்டின் மகத்துவம் வாய்ந்த ஆளுமையைப் பற்றி நான் பேச இருக்கிறேன்.  நம்மனைவரின் மனங்களிலுமே அவர் மீதான பெரும் மரியாதை இருக்கிறது, பிடிப்பு இருக்கிறது.  அவர் மீது மரியாதை கொண்டிராத, அவருக்கு மதிப்பு அளிக்காத இந்தியக் குடிமகன் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.  அவர், வயதில் நம்மனைவரையும் விட மிகவும் மூத்தவர், நாட்டின் பல்வேறு நிலைகளிலும், வேறுவேறு காலகட்டங்களிலும் சாட்சியாக அவர் விளங்கியவர்.  நாமெல்லாரும் அவரை தீதி, அதாவது சகோதரி என்று அழைப்போம் – லதா தீதி.  அவருக்கு இந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் தேதியன்று 90 வயதாகிறது.  அயல்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும் முன்பாக சகோதரியோடு தொலைபேசியில் உரையாடும் பேறு எனக்குக் கிட்டியது.  இந்த உரையாடல் எப்படி இருந்தது தெரியுமா?  கரிசனமான மனமுடைய ஒரு இளைய சகோதரன், தனது மூத்த சகோதரியோடு எப்படி உரையாடுவானோ அப்படி இருந்தது.  நான் பொதுவாகத் தனிப்பட்ட உரையாடல்கள் பற்றிப் பேசுவது இல்லை, ஆனால் இன்று பேச விரும்புகிறேன், நீங்களும், லதா தீதி கூறுவதைக் கேளுங்களேன், எங்கள் உரையாடலைக் கேளுங்களேன்.  மூப்பு நிறைந்த இந்த நிலையிலும் லதா தீதி, நாடு தொடர்பான விஷயங்கள் அனைத்திலும் எத்தனை உற்சாகமாக இருக்கிறார், எத்தனை முனைப்போடு இருக்கிறார் என்பது உங்களுக்கே விளங்கும்.  வாழ்க்கையின் சந்தோஷங்கள் கூட, இந்தியாவின் முன்னேற்றத்தில் இருக்கிறது, மாறிவரும் இந்தியாவில் இருக்கிறது, புதிய சிகரங்களைத் தொடும் இந்தியாவில் இருக்கிறது.  இவை அவரது சொற்களில் பிரதிபலிக்கிறது. 

 

மோதி ஜி:  லதா தீதி, வணக்கம்!  நான் நரேந்திர மோதி பேசுகிறேன்.

 

லதா ஜீ:  வணக்கம்.

 

மோதி ஜீ:  நான் ஏன் ஃபோன் செஞ்சேன்னா, இந்த முறை உங்க பிறந்த நாள் அன்னைக்கு….

 

லதா ஜீ:  ஆமாம் ஆமாம்.

 

மோதி ஜி:  நான் விமானத்தில பயணம் செஞ்சிட்டு இருப்பேன்.

 

லதா ஜீ:  சரி.

 

மோதி ஜி:  அதனால நான் என்ன நினைச்சேன்னா முன்னமேயே…

 

லதா ஜீ:  ஓ சரி சரி.

 

மோதி ஜி:  உங்க பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவிக்க நினைச்சேன், முதல் வாழ்த்துக்கள் என்னோடது தான்.  நீங்க ஆரோக்கியமா இருக்கணும், உங்க ஆசிகளால நாங்க எல்லாரும் நல்லா இருக்கணும், இது தான் நான் உங்க கிட்ட வைக்கற வேண்டுதல், உங்களுக்கு என் வணக்கங்களைத் தெரிவிச்சுக்கத் தான், நான் அமெரிக்கா போகறதுக்கு முன்னாடி உங்களுக்குப் ஃபோன் செஞ்சேன்.

 

லதா ஜீ:  உங்க ஃபோன் வரும்னு நான் கேட்டதிலிருந்தே ரொம்ப சந்தோஷமாயிட்டேன், காத்துக்கிட்டு இருந்தேன்.  சரி, நீங்க எப்ப திரும்பி வருவீங்க.

 

மோதி ஜீ:  சொல்லப்போனா நான் 28ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு, இல்லை 29 காலையில தான் வருவேன், ஆனா அதுக்குள்ள உங்க பிறந்த நாள் கடந்து போயிருக்குமே!!

 

லதா ஜீ:  ஓ ஆமாம் ஆமா.  என்ன பெரிசா பிறந்த நாளைக் கொண்டாடப் போறேன், எல்லாம் வீட்டுல இருக்கறவங்க தான்…..

 

மோதி ஜி:  தீதி ஒரு வேண்டுதல்…

 

லதா ஜீ:  உங்க ஆசிகள் வேணும்.

 

மோதிஜி:  அட, உங்க ஆசிகளை நாங்க வேண்டறோம், நீங்க என்னடான்னா…… நீங்க எங்க எல்லாரையும் விடப் பெரியவங்க.

 

லதா ஜீ:  வயதில ரொம்ப பெரியவங்க சிலர் இருப்பாங்க, ஆனா யாரு தாங்கள் செய்யற வேலையில மகத்தானவங்களா இருக்காங்களோ, அவங்களோட ஆசிகள் கிடைக்கறது தான் பெரிய விஷயம்.

 

மோதி ஜி:  தீதி, நீங்க வயதிலயும் மூத்தவங்க, பணியிலயும் மூத்தவங்க.  நீங்க செய்திருக்கற சாதனை, இதெல்லாம் இடைவிடாத சாதகத்தாலயும், தவம் காரணமாகவும் அடைஞ்சிருக்கீங்க.

 

லதா ஜீ:  ஐயா, நான் இதெல்லாம் என் பெற்றோரோட ஆசிகளால தான்னு நம்பறேன், மேலும் என் பாட்டைக் கேட்கறவங்களோட ஆசிகளும் கூடத் தான். நான் ஒண்ணுமே கிடையாதுங்க.

 

மோதி ஜி:  தீதி, இது தான் உங்களோட பணிவு.  நம்ம புதிய தலைமுறையைச் சேர்ந்தவங்க மட்டுமில்லாம, எங்க எல்லாருக்குமே இது ஒரு பெரிய கற்றல் அனுபவம், நீங்க எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய கருத்தூக்கமா விளங்கறீங்க, உங்க வாழ்க்கையில இத்தனை சாதனைகளை நீங்க நிகழ்த்திய பிறகும் கூட, நீங்க எப்பவுமே உங்க பெற்றோருடைய வளர்ப்புக்கும், பணிவான நடத்தைக்குமே முதன்மை அளிச்சு வந்திருக்கீங்க.

 

லதா ஜி:  ஆமாம்.

 

மோதி ஜீ:  உங்க அம்மா குஜராத்திக்காரங்கன்னு நீங்க பெருமிதம் பொங்க சொல்லும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

 

லதா ஜீ:  ஆமாம்.

 

மோதி ஜீ:  நான் எப்ப எல்லாம் உங்களைப் பார்க்க வந்திருக்கேனோ

 

லதா ஜீ:  ஆமாம்

 

மோதி ஜீ:  நீங்க ஏதாவது ஒரு குஜராத்தி உணவுப்பொருளை உண்ணக் கொடுத்திருக்கீங்க. 

 

லதா ஜீ:  ஆமாம்.  நீங்க யாருங்கறது உங்களுக்கே தெரியாது.  நீங்க வந்த பிறகு பாரத நாட்டோட திருவுருவம் மாறிவருதுங்கறது எனக்குத் தெரியும், இது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை அளிக்குது.  எனக்கு இந்த உணர்வு ரொம்ப அருமையா இருக்கு.

 

மோதி ஜி:  நன்றி தீதி, உங்க ஆசிகள் என்னைக்கும் எனக்குக் கிடைக்கணும், ஒட்டுமொத்த நாட்டுக்கும் உங்க ஆசிகள் கிடைச்சுக்கிட்டே இருக்கணும், எங்களை மாதிரி ஆளுங்க ஏதாவது நல்லது செய்துக்கிட்டே இருக்கணும், இதுக்கான உத்வேகம் அளிக்கறவங்களா நீங்க என்னைக்கும் இருந்து வந்திருக்கீங்க.  நீங்க எழுதற கடிதங்கள் எனக்குத் தொடர்ந்து கிடைச்சிட்டு இருக்கு, உங்களை சந்திக்கறதுக்கான பேறும் எனக்கு கிடைச்சு வந்திட்டு இருக்கு.  என்னை உங்களோட சொந்தமா நினைக்கற ஒரு குடும்பப்பாங்கான உறவு, எனக்கு சிறப்பான ஆனந்தத்தை அளிக்குது.

 

லதா ஜீ:  சரி சரி.  நிஜமா நான் உங்களுக்கு எந்த சிரமமும் கொடுக்க விரும்பலை.  ஏன்னா, நீங்க எத்தனை சுறுசுறுப்பா இயங்கறீங்க, உங்களுக்கு எத்தனை வேலை இருக்குன்னு எல்லாம் நான் பார்க்கவும் செய்யறேன், எனக்கும் தெரியும்.  நீங்க உங்க தாயாரோட பாதங்களைத் தொட்டு ஆசிகளைப் பெறுவதைப் பார்த்துட்டு, நானும் ஒருத்தரை அவங்க கிட்ட அனுப்பி அவங்க ஆசிகளைப் பெற்றேன்.

 

மோதி ஜீ:  ஆமாம், எங்கம்மாவுக்கு நினைப்பு இருந்திச்சு, அவங்க என் கிட்ட சொன்னாங்க.

 

லதா ஜீ:  சரி.

 

மோதி ஜீ: ஆமாம்.

 

லதா ஜீ:  மேலும் டெலிஃபோன்ல அவங்க எனக்கு ஆசியளிச்சாங்க, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு.

 

மோதி ஜீ:  உங்க அன்பு காரணமா, எங்கம்மா ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. 

 

லதா ஜீ:  ஓஹோ, அப்படியா?

 

மோதி ஜீ:  என் மேல நீங்க தொடர்ந்து காட்டி வந்திருக்கற அக்கறைக்கு நான் என்னைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.  மறுபடி ஒருமுறை உங்களுக்கு என் அன்புநிறை பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன். 

 

லதா ஜீ:  சரி.

 

மோதி ஜீ:  இந்தமுறை மும்பை வந்த போது, உங்களை சந்திச்சுப் பேச நினைச்சேன்.

 

லதா ஜீ:  ஆஹா, வந்திருக்கலாமே!!

 

மோதி ஜீ:  ஆனா நேரம் ரொம்ப குறைவா இருந்த காரணத்தால என்னால வர முடியலை.

 

லதா ஜீ:  ஓஹோ, சரி.

 

மோதி ஜீ:  ஆனா நான் சீக்கிரமாவே வருவேன்.

 

லதா ஜீ:  அவசியம் வாங்க.

 

மோதி ஜீ:  நான் உங்க வீட்டுக்கு வந்து உங்க கையால சில குஜராத்தி உணவுகளை கண்டிப்பா சாப்பிடுவேன்.

 

லதா ஜீ:  ஆஹா, கண்டிப்பா, கண்டிப்பா, அது எனக்குப் பெரிய பாக்கியம்.

 

மோதி ஜீ:  வணக்கம் சகோதரி.

 

லதா ஜீ:  வணக்கம்.

 

மோதி ஜீ:  பலப்பல நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.

 

லதா ஜீ:  பலப்பல நல்வணக்கங்கள்.  நன்றி.

 

மோதி ஜீ:  வணக்கம் சகோதரி. 

 

     லதா தீதியுடனான இந்த உரையாடல் உண்மையிலேயே என் மனதுக்கு மிகுந்த ஆசுவாசத்தையும் சந்தோஷத்தையும் அளித்தது நண்பர்களே. 

 

     எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நவராத்திரியுடன் கூட, இன்றிலிருந்து, பண்டிகளைகளின் காலம் ஆரம்பமாகி விட்டது, புதிய உற்சாகம், புதிய சக்தி, புதிய உவகை, புதிய தீர்மானங்கள் எல்லாம் நிரம்பி வழியும்.  பண்டிகைக்காலம் இல்லையா!!  இனிவரும் பல வாரங்களுக்கு நாடு முழுவதிலும் பண்டிகளைகளின் பளபளப்பு ஒளிகூட்டும்.  நாமனைவரும் நவராத்திரி மஹோத்சவம், கர்பா, துர்க்கா பூஜா, தஸரா, தீபாவளி, பையா தூஜ், சட்பூஜை என எண்ணிலடங்கா பண்டிகைகளைக் கொண்டாடுவோம்.  உங்களனைவருக்கும் வரவிருக்கும் பண்டிகைகளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.  பண்டிகைகளின் போது, குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைவார்கள்.  வீட்டில் சந்தோஷங்கள் நிரம்பியிருக்கும், ஆனால் நம்மைச் சுற்றியும்கூட சிலர், இந்தப் பண்டிகைகளின் சந்தோஷங்களை அனுபவிக்க முடியாமல் துக்கத்திலும் ஏக்கத்திலும் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.  விளக்கு நாலாபுறத்துக்கும் ஒளியளித்தாலும், அதன் அடியில் இருள் இருக்கும் இல்லையா!!  இது நமக்கெல்லாம் ஒரு செய்தி, ஒரு தத்துவம், ஒரு கருத்தூக்கம்.  சிந்தியுங்கள், ஒருபுறம், சில வீடுகளில் விளக்கு வெள்ளம்….. மறுபுறம் இருள் எங்கும் பரவிக் கிடக்கிறது.  சில இல்லங்களில் உண்பவர் இல்லாமல் இனிப்புகள் வீணாகிக் கொண்டிருக்கின்றன, சில இல்லங்களில், தங்களுக்கு இனிப்புகள் உண்ணக் கிடைக்காதா என்று ஏங்கும் நெஞ்சங்கள்.  சில வீடுகளிலோ துணிகளை வைக்க அலமாரிகளில் இடமே போதாமல் இருக்கிறது, மறுபுறமோ, உடலை மூடுவதற்கே கூட சிரமப்பட வேண்டிய சூழல்.  இது தானே விளக்கினடியில் இருக்கும் இருள்!!  இந்தப் பண்டிகைகளின் ஆனந்தத்தை நாம் எப்போது உண்மையாக அனுபவிப்போம் என்று சொன்னால், இந்த இருள் நீக்கப்படும் போதும், அங்கே ஒளி பரவும் போது மட்டும் தான்.  எங்கெல்லாம் சந்தோஷங்கள் இல்லாமல் இருக்கிறதோ, அங்கெல்லாம் நாம் சந்தோஷங்களை நிரப்ப வேண்டும், இதுவே நமது இயல்பாக மாற வேண்டும்.  நமது வீடுகளிலே, இனிப்புக்களை, துணிமணிகளை, பரிசுப்பொருட்களைப் பெறுகிறோம் இல்லையா, அப்போது அவற்றை அளித்தல் பற்றியும் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.  குறைந்தபட்சம் நம்முடைய வீடுகளில் எது மிகையாக இருக்கிறதோ, எதை நாம் பயன்படுத்துவதில்லையோ, அப்படிப்பட்ட பொருட்களை மற்றவர்களுக்கு அளிக்கலாமே!!  பல நகரங்களில், பல அரசுசாரா அமைப்புகள், இளைஞர்களின் ஸ்டார்ட் அப்புகள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.  அவர்கள் மக்களின் வீடுகளில் இருக்கும் துணிமணிகள், இனிப்புகள், உணவுப்பொருட்கள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து, தேவையானவர்களைத் தேடிச் சென்று அவர்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள், எந்த விளம்பரமும் இல்லாமல் இதைச் செய்கிறார்கள்.  இந்தமுறை, பண்டிகைகளின் இந்தப் பருவத்தில், முழுமையான விழிப்புணர்வோடும், மனவுறுதியோடும், விளக்கினடியில் இருக்கும் இருளை நாம் விரட்டுவோமா?  பல ஏழைக் குடும்பங்களின் முகங்களில் உதிக்கும் புன்னகை, பண்டிகைக்காலங்களில் உங்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும், உங்களின் முகம், மேலும் பிரகாசமாகும், நீங்கள் ஏற்றும் விளக்கும் மேலும் ஒளியேற்றும், உங்கள் தீபாவளி, மேலும் ஒளிமயமானதாக ஆகும்.

 

     எனக்குப் பிரியமான என் சகோதர சகோதரிகளே, தீபாவளியன்று, பல பேறுகளும், நிறைவான வாழ்க்கையும் அளிக்கும் வகையில் வீட்டிலே திருமகள் வரவேற்கப்படுகிறாள்.  பாரம்பரியமாக நாம் திருமகளை வரவேற்கிறோம்.  இந்த முறை நாம் புதிய வழிமுறையில் திருமகளை வரவேற்போமா?  நமது கலாச்சாரத்தில், பெண்களை திருமகளின் வடிவமாகப் போற்றி வணங்குகிறோம், ஏனென்றால், பெண் என்பவள் சௌபாக்கியங்கள், நிறைவை அளிப்பவளாகக் கருதப்படுகிறாள்.  இந்தமுறை நமது சமூகத்தில், நமது கிராமங்களில், நகரங்களில், பெண்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு நாம் ஏற்பாடு செய்யலாமா?  பொது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.  தங்கள் கடும் உழைப்பாலும் முனைப்பாலும் சாதனைகள் பல படைத்த பெண்கள் நம்மிடையே, நம் குடும்பங்களிலே, சமூகத்திலே, நாட்டிலே இருப்பார்கள்.  இந்த தீபாவளியின் போது பாரதத்தின் இந்தத் திருமகள்களுக்கு கௌரவமும், மதிப்பும் அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை நாம் ஏற்பாடு செய்யலாம் இல்லையா?  பல அசாதாரணமான வேலைகளைச் செய்த பெண்கள் நம்மிடையே இருக்கலாம்.  ஒருவர் தூய்மை மற்றும் உடல்நலத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முனைந்திருக்கலாம், சிலர் மருத்துவராக, பொறியாளராக, ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் என ஏதாவது ஒரு சமூக சேவையில் ஈடுபட்டிருக்கலாம்.  வழக்குரைஞராக, நியாயத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கும் முயற்சி செய்து கொண்டிருக்கலாம். நம்முடைய சமூகம் அப்படிப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு, அவர்கள் பற்றிப் பெருமிதம் கொள்ள வேண்டும்.  அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நாடுமுழுவதிலும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.  மேலும் ஒரு வேலையை நாம் செய்ய வேண்டும் – இந்தப் பெண்களின் சாதனைகள் பற்றி, சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிர்தல்கள் அமைய வேண்டும், ஹேஷ்டேக் # பயன்படுத்தி #bharatkilaxmi என்று பகிரலாமே!!  எப்படி நாமெல்லாரும் இணைந்து மகளுடனான ஒரு செல்ஃபி என்ற இயக்கத்தை உலகம் முழுவதிலும் இயக்கினோமோ, அதே போல பாரத் கீ லக்ஷ்மீ என்ற இயக்கத்தை முடுக்கி விடுவோம்.  பாரத நாட்டின் திருமகளுக்கு ஊக்கம் அளிப்பது என்பதன் பொருள் என்னவென்றால், நாடு, நாட்டுமக்கள் ஆகியோரது நிறைவான வாழ்க்கையை உறுதி செய்வது என்பது தான். 

 

     எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரல் பற்றி நான் முன்னமேயே கூறியிருந்தேன், இதனால் மிகப்பெரிய ஆதாயம், தெரிந்த தெரியாத பலருடன் உரையாடிக் கருத்துப் பரிமாற்றம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது என்பது தான்.  கடந்த நாட்களில், தொலைவான அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு மாணவரான அலீனா தாயங்க் என்பவர் சுவாரசியமான கடிதம் ஒன்றை எனக்கு எழுதியிருந்தார்.  அவர் எழுதிய கடிதத்தையே நான் படித்து விடுகிறேனே, மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே,

     என்னுடைய பெயர் அலீனா தாயங்க்.  நான் அருணாச்சல் பிரதேசத்தின் ரோயிங்க் பகுதியைச் சேர்ந்தவன்.  இந்தமுறை என்னுடைய தேர்வு முடிவுகள் வந்த போது, நீ எக்ஸாம் வாரியர்கள் புத்தகம் படித்திருக்கிறாயா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள்.  நான் அந்தப் புத்தகத்தைப் படித்ததில்லையே என்று கூறினேன்.  ஆனால் வீடு திரும்பிய பின்னர், நான் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தேன், அதை 2-3 முறைகள் திரும்பத் திரும்பப் படித்தேன்.  இதன் பிறகு எனக்கு ஏற்பட்ட அனுபவம் மிக இனிமையானதாக இருந்தது.  இதே புத்தகத்தை மட்டும் நான் தேர்வு எழுதும் முன்பு படித்திருந்தேன் என்று சொன்னால், மேலும் அதிக ஆதாயங்கள் எனக்குக் கிடைத்திருக்குமே என்று நான் உணர்ந்தேன்.  இந்தப் புத்தகத்தில் காணப்படும் பல விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன, ஆனால் மாணவர்களுக்கு இந்தப் புத்தகத்தில் பல விஷயங்கள் இருந்தாலும், பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இந்தப் புத்தகத்தில் அதிகமாக ஏதும் இல்லை என்பதையும் என்னால் காண முடிந்தது.  இந்தப் புத்தகத்தின் புதிய பதிப்பு வரும் போது, அதில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பாகவும் சில உத்திகள், கருத்துக்கள், சிந்தனைகள் ஆகியவற்றை கண்டிப்பாக இதில் சேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

 

     பாருங்கள், என்னுடைய இளைய நண்பர்கள், நாட்டின் முதன்மை சேவகனிடம் ஒரு வேலையைச் சொல்லி விட்டால், அது கண்டிப்பாக நடந்தேறி விடும் என்று எத்தனை நம்பிக்கையோடு இருக்கிறார்கள் பாருங்கள்!! 

 

     என்னுடைய பாலக மாணவச் செல்வங்களே, கடிதம் எழுதியதற்காக என் முதன்மையான நன்றிகள்.  எக்ஸாம் வாரியர்ஸை 2-3 முறை படித்தமைக்காகவும் என் நன்றிகள்.  மேலும் படிக்கும் வேளையில் அதில் இருக்கும் குறைகளை என்னிடம் தெரிவித்தமைக்கு பலப்பல நன்றிகள்; கூடவே என்னுடைய இந்த பாலக நண்பர் இப்போது எனக்கு புதிய ஒரு பணியை இட்டிருக்கிறார்.  ஒரு ஆணை பிறப்பித்திருக்கிறார்.  நான் உங்கள் ஆணைக்குக் கீழ்ப்படிந்து நடப்பேன்.  நீங்கள் கூறியவற்றை, புதிய பதிப்பு வரும் நேரத்தில் எனக்கு சேர்ப்பு செய்ய நேரம் இருந்தால், கண்டிப்பாகச் செய்வேன்.  அதில் பெற்றோருக்காக, ஆசிரியர்களுக்காக செய்திகளைத் தெரிவிக்க முயல்கிறேன்.  ஆனால் இதில் எனக்கு உதவ வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.  உங்கள் தினப்படி வாழ்க்கையில் உங்கள் அனுபவம் என்னவாக இருக்கிறது?  நாட்டின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரிடம் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அழுத்தமில்லாத தேர்வுகளோடு இணைந்த விஷங்கள் குறித்து உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் ஆலோசனைகளைத் தெரிவியுங்கள்.  கண்டிப்பாக நான் அவற்றை ஆராய்கிறேன், அவற்றில் என் சிந்தனையைச் செலுத்துகிறேன், எது எனக்குச் சரியெனப் படுகிறதோ, அதை என்னுடைய சொற்களில், என் பாணியில் எழுத முயல்வேன், முடிந்தால், உங்கள் ஆலோசனைகள் அதிகம் வந்தால், எனது புதிய பதிப்பும் உறுதியாகி விடும்.  உங்கள் கருத்துக்களுக்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.  அருணாச்சலைச் சேர்ந்த நமது இளைய நண்பர், மாணவரான அலீனா தாயங்கிற்கு மீண்டும் ஒருமுறை நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

     என் மனம் நிறை நாட்டுமக்களே, நீங்கள் செய்தித்தாள்கள் வாயிலாக, டிவி வாயிலாக, நாட்டின் பிரதம மந்திரியின் இடைவிடாத நிகழ்ச்சிகள் பற்றி அறிந்திருப்பீர்கள், ஓய்வு ஒழிச்சல் இல்லாத நிலை பற்றியும் விவாதமும் செய்கிறீர்கள்.  ஆனால், நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் தான் என்பதும் உங்களுக்குத் தெரிந்த விஷயம் தானே!!  ஒரு சாதாரண குடிமகனின் சாதாரணமான வாழ்க்கையில் என்னவெல்லாம் விஷயங்கள் தாக்கத்தை ஏறப்டுத்துகின்றனவோ, அவை அனைத்தும் என்னுடைய வாழ்க்கையிலும் ஏற்படுத்துகின்றன, ஏனென்றால் நானும் உங்களிடமிருந்து வந்தவன் தானே!!   இந்த முறை அமெரிக்க ஓப்பன் போட்டியில், வெற்றி பற்றி எத்தனை பேசப்பட்டதோ, அந்த அளவுக்கு இறுதிப் போட்டியில் இரண்டாவதாக வந்த மெட்வெடெவின் உரை பற்றியும் சிலாகித்துப் பேசப்பட்ட்து.  சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் உரையை நானும் கேட்டேன், பிறகு ஆட்டத்தைப் பார்த்தேன்.  23 ஆண்டுகளே ஆன டேனில் மெட்வெடெவின் எளிமையும் அவரது பக்குவமும், அனைவரையும் ஆட்கொள்ளக்கூடியவையாக இருந்தன.  கண்டிப்பாக அவரால் நான் கவரப்பட்டேன்.  19 முறை க்ராண்ட் ஸ்லாம் வென்ற, டென்னிஸ் உலகின் ஜாம்பவானாக கருதப்படும் ரஃபேல் நடாலிடம் தோற்ற சில நிமிடங்களிலேயே இந்த உரை ஆற்றப்பட்டது.  இந்த வேளையில் வேறு ஒருவராக இருந்திருந்தால், அவர் வருத்தமும், ஏமாற்றமும் கொண்டவராக இருந்திருப்பார், ஆனால், இவரது முகத்தில் எந்த வாட்டமும் இல்லை, மாறாக, தனது சொற்கள் வாயிலாக அனைவரின் சிந்தையிலும் வதனத்திலும் புன்னகையை ஏற்படுத்தினார்.  அவருடைய பணிவு, எளிமை, விளையாட்டு வீர்ர்களுக்கே உரித்தான தோல்வியையும் சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்ளும் மெய்யான உணர்வு ஆகியவற்றைப் பார்த்த போது, அனைவரும் கவரப்பட்டார்கள்.  அவரது பேச்சினை அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் பெரிய அளவில் வரவேற்றார்கள்.  டேனில் வெற்றி பெற்ற நாடாலை வாய்நிறையப் பாராட்டினார்.  எப்படி நாடால் இலட்சக்கணக்கான இளைஞர்களை டென்னிஸ் விளையாட்டின் பால் ஈர்த்திருக்கிறார் என்று பாராட்டினார்.  கூடவே அவருக்கு எதிராக விளையாடுவது எத்தனை கடினமான காரியம் என்பதையும் தெரிவித்தார்.  கடும் மோதலில் தோல்விக்குப் பிறகு, அவர் தனது போட்டியாளர் நாடாலைப் பாராட்டியது, அவரது sportsman spiritக்கான வாழும் உதாரணமாக விளங்குகிறது.  ஆனால் மற்றொரு புறத்தில் சேம்பியனான நாடாலும் கூட, டேனிலின் விளையாட்டு பற்றி மனம் திறந்து பாராட்டினார்.  ஒரே ஒரு ஆட்டத்தில், தோற்றவரின் உற்சாகம், வெற்றி பெற்றவரின் விநயம் ஆகியன மனதைக் கொள்ளை கொண்டன.  நீங்கள் டேனில் மெட்வெடெவின் உரையை இதுவரை கேட்கவில்லை என்று சொன்னால், குறிப்பாக இளைஞர்களிடம் கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து சென்று பாருங்கள், கேளுங்கள்.  இதில் அனைத்துத் தரப்பினருக்கும், அனைத்து வயதினருக்கும் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.  இந்தக் கணங்கள் வெற்றி தோல்வி ஆகியவற்றைத் தாண்டியதாக இருக்கின்றன.  இந்த நிலையில் வெற்றி தோல்வி என்பவற்றுக்கு எந்த அர்த்தமும் இருப்பதில்லை.  வாழ்க்கை வெற்றி பெறுகிறது, மேலும் நமது சாத்திரங்கள் மிகச் சிறப்பான வகையில் இந்த விஷயத்தை நமக்கெல்லாம் தெரிவிக்கின்றன.  நமது முன்னோர்களின் எண்ணம் உண்மையிலேயே எண்ணி எண்ணி வியக்கத் தக்கது.  நமது சாத்திரங்கள் என்ன கூறியிருக்கின்றன என்றால் –

வித்யா வினய உபேதா ஹரதி

ந சேதாம்ஸி கஸ்ய மனுஜஸ்ய.

மணி காஞ்சன சம்யோக:

ஜனயதி லோகஸ்ய லோசன ஆனந்தம்

  

विद्या विनय उपेता हरति

न चेतांसी कस्य मनुज्स्य |

मणि कांचन संयोग:

जनयति लोकस्य लोचन आनन्दम

          அதாவது ஒரு நபருக்கு தகுதியும் பணிவும் ஒருசேர அமைந்து விடுமானால், அவரால் யாருடைய இதயத்தைத் தான் ஜெயிக்க முடியாது!!  உண்மையில், இந்த இளைய விளையாட்டு வீரர் உலக மக்கள் இருதயங்கள் அனைத்தையுமே வென்று விட்டார்.

    

     என் மனம் நிறை நாட்டுமக்களே, குறிப்பாக என் இளைய நண்பர்களே, நான் இப்போது கூறவிருக்கும் விஷயம், அது உங்கள் நேரடி நலனுக்காகவே கூறவிருக்கிறேன்.  வாத விவாதங்கள் எல்லாம் அவை பாட்டுக்கு நடந்து கொண்டு தான் இருக்கும், தரப்பு எதிர்த்தரப்பு வாதங்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும், ஆனால் சில விஷயங்கள், நடைபெறும் முன்னரே தடுத்து நிறுத்தி விட்டோமென்று சொன்னால், அதிக பயன்கள் ஏற்படும்.  எவை அதிகமாகப் பெருகி விடுகின்றனவோ, வளர்ந்து விடுகின்றனவோ, அவற்றைப் பின்னர் தடுப்பது என்பது சிரமசாத்தியமானதாக ஆகி விடும்.  ஆனால் தொடக்கத்திலேயே நாம் விழிப்போடு இருந்து அவற்றைத் தடுத்து விட்டோம் என்றால், மிகுந்த பாதுகாப்பாக இருக்க முடியும்.  இந்த உணர்வை மனதில் தாங்கி, குறிப்பாக இளைய சமூகத்திடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.  புகையிலை தரும் போதை என்பது உடல்நலத்துக்கு மிகவும் கேடு விளைவிப்பது என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும், அந்தப் பழக்கத்தை ஒழிப்பது என்பது மிகவும் கடினமாகி விடுகிறது.  புகையிலை பயன்படுத்துவோருக்கு புற்றுநோய், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பீடிக்கும் அபாயம் அதிகமாக இருக்கிறது.  இப்படித்தான் அனைவருமே கூறுகிறார்கள்.  புகையிலை தரும் மயக்கமானது, அதில் இருக்கும் நிக்கோட்டின் காரணமாகவே ஏற்படுகிறது.  சிறுவயதில் இதைப் பழகுவதனால் மூளை வளர்ச்சியை இது அதிகம் பாதிக்கிறது.  ஆனால் இன்று, நான் உங்களிடம் ஒரு புதிய விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.  உங்களுக்கே தெரியும், தற்போது இந்தியாவில் ஈ சிகரெட்டின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது.  சாதாரண சிகரெட்டை விட வேறுபட்ட ஈ சிகரெட் என்பது, ஒரு வகையான மின்னணு கருவி தான்.  ஈ சிகரெட்டில் நிக்கோட்டின் உள்ள திரவப் பொருளை வெம்மைப் படுத்துவதால், ஒருவகையான வேதியியல் புகை உருவாகிறது.  இதன் வாயிலாக நிக்கோட்டின் உட்கொள்ளப்படுகிறது.  சாதாரண சிகரெட்டின் அபாயங்கள் பற்றி நாம் எல்லோரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.  ஆனால் ஈ சிகரெட் பற்றிய தவறான கருத்து பரவலாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.  அதாவது இந்த ஈ சிகரெட்டால் எந்த ஒரு அபாயமும் கிடையாது என்பது தான் அது.  மற்ற சிகரெட்டுக்களைப் போல இதில் துர்நாற்றம் இருக்கக் கூடாது என்பதால், இதில் மணம் தரும் ஒரு வேதிப் பொருளைக் கலக்கிறார்கள்.  ஒரு வீட்டில் தகப்பனார் தொடர்ந்து புகைப்பவர் என்றால், அந்த வீட்டில் இருக்கும் மற்றவர்களை புகைப்பிடிக்காது இருக்க விரட்டுவார் என்பதை நமது அக்கம்பக்கத்தில் நாம் பார்த்திருக்கலாம், தனது பிள்ளைகளுக்கும் தன்னைப் போன்ற புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்று அவர் விரும்புவார்.  குடும்பத்தில் யாரும் புகைபிடிக்கக் கூடாது என்பதே அவரது முயற்சியாக இருக்கும்.  ஏனென்றால் புகை பிடிப்பதாலும், புகையிலைப் பயன்பாட்டாலும், உடலுக்கு எத்தனை கேடு ஏற்படும் என்பதை அவர் நன்கறிவார்.  சிகரெட் ஏற்படுத்தும் கேடு பற்றி யாருக்கும் எந்த ஐயமும் கிடையாது.  இதனால் கேடு மட்டுமே விளையும்.  இதை விற்பவருக்கும் இது தெரியும்.  பிடிப்பவரும் தெரிந்தே புகைக்கிறார், இதனைப் பாரப்பவருக்கும் இது நன்கு தெரியும்.  ஆனால் ஈ சிகரெட் விஷயம் இப்படியல்ல.  ஈ சிகரெட் பற்றி மக்களிடம் இத்தனை விழிப்புணர்வு கிடையாது.  அவர்களுக்கு இதன் ஆபத்து பற்றி முழுமையாகத் தெரியாது, இதன் காரணமாக சில வேளைகளில் குதூகலமாக ஈ சிகரெட் என்பது அமைதியாக வீட்டிற்குள் நுழைந்து விடுகிறது.  ஏதோ மாயாஜாலம் காண்பிக்கிறேன் என்ற வகையில் குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் புகைத்துக் காண்பிக்கிறார்கள்.  குடும்பத்தில் பெற்றோருக்கு முன்பாக நான் ஒரு மேஜிக் செய்கிறேன் பாருங்கள், புகை வரும் என்று காட்டுகிறார்கள்.  நெருப்பே ஏற்றாமல், தீக்குச்சியைப் பற்ற வைக்காமல் எப்படி புகையை வரவழைக்கிறேன் பார்த்தீர்களா என்று காட்டுகிறார்கள்.  இதைப் பார்க்கும் குடும்பத்தாரும் விளைவோ, வினையோ தெரியாமல் கைதட்டுகிறார்கள்.  ஒருமுறை வீட்டில் இருக்கும் சிறுவர்கள், குழந்தைகள் இந்த மாயவலையில் சிக்கி விட்டார்கள் என்றால், மெல்ல மெல்ல இந்த போதைக்கு அவர்கள் நிரந்தர அடிமைகள் தாம்.  அவர்கள் இந்த மோசமான பழக்கத்துக்கு இரையாகி விடுகிறார்கள்.  நமது இளைய சமுதாயத்தினரின் பொன்னான இளமை அழிவுப் பாதையை நோக்கிச் செல்லத் தொடங்கும்.  அறியாமலேயே இது நடக்கும்.  உண்மையில் ஈ சிகரெட்டில் பல கேடு உண்டாக்கும் வேதிப் பொருட்கள் கலக்கப்பட்டிருக்கின்றன, இவை காரணமாக உடல்நலத்துக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும்.  அக்கம்பக்கத்தில் இருப்பவர் யாராவது புகைபிடித்தால், அதன் நாற்றமே நமக்குக் காட்டிக் கொடுத்து விடும்.  அவரது பாக்கெட்டில் சிகரெட் இருந்தாலும் கூட வாடை அடையாளம் காட்டிக் கொடுக்கும்.  ஆனால் ஈ சிகரெட் விஷயத்தில் இப்படி ஏதும் கிடையாது.  ஆகையினால் பல சிறுவர்கள், இளைஞர்கள், தெரிந்தோ தெரியாமலோ, சில வேளைகளில் இதை ஒரு ஃபேஷன் என்று நினைத்து, பெரிய பெருமிதமாக நினைத்துக் கொண்டு, தங்கள் புத்தகங்களுக்கு இடையிலே, தங்கள் அலுவலகங்களிலே, தங்கள் பாக்கெட்டுக்களிலே, வைத்துக் கொண்டு திரிவதை நாம் பார்க்கலாம், அவர்கள் இதற்கு இரையாகி விடுகிறார்கள்.  இளைய சமுதாயத்தினர் நாட்டின் எதிர்காலம்.  ஈ சிகரெட்டின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது; ஏனென்றால் இந்தப் புதியவகை போதைப் பழக்கமானது நம் நாட்டின் இளைய சமூகத்தினரை அழிக்கக் கூடாது என்பதற்காகத் தான்.  ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகளையும் இது காலில் போட்டு மிதித்து விடக் கூடாது என்பதற்காகத் தான்.  குழந்தைகளின் எதிர்காலம் நாசமாகி விடக்கூடாது என்பதற்காகத் தான்.  இந்த நோய், இந்தப் பழக்கம், சமுதாயத்திலிருந்து அடியோடு களையப்பட வேண்டும்.

 

     புகையிலைப் பழக்கத்தை விட்டொழியுங்கள், ஈ சிகரெட் தொடர்பான எந்த ஒரு தவறான கருத்தையும் மனதிலே கொள்ளாதீர்கள்.  வாருங்கள், நாமனைவருமாக இணைந்து ஒரு ஆரோக்கியமான பாரதம் படைப்போம். 

    

     ஆம், உங்களுக்கு ஃபிட் இண்டியா பற்றி நினைவிருக்கிறது இல்லையா.  ஃபிட் இண்டியா என்பதன் பொருள், ஏதோ காலை மாலை இரண்டு மணி நேரம் ஜிம் சென்று பயிற்சி மேற்கொண்டால் போதும் என்பது கிடையாது.  இவை போன்றவற்றிலிருந்து விலகி இருப்பதும் அவசியம்.  நான் கூறுவதை நீங்கள் கசப்பாக உணர மாட்டீர்கள், கண்டிப்பாக நன்றாகவே உங்களுக்கு இது படும் என்று நான் நம்புகிறேன்.  

 

     எனக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே, தங்களுக்காக வாழாமல் மற்றவர்களின் நலன்கள் பொருட்டு தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த அசாதாரண மனிதர்களுக்கு நம்முடைய பாரத நாடு பிறந்த நாடாகவும், சேவைக்கான களமாகவும் அமைந்து வந்திருக்கிறது என்பது நமக்கெல்லாம் பெரும் பாக்கியமான விஷயம்.

 

     நமது இந்த பாரத அன்னை, இந்த தாய்த்திருநாடு ஏராளமான ரத்தினங்களைத் தன்வசம் கொண்டது.   மனிதகுல மாணிக்கங்கள் பலர் இந்த மண்ணிலிருந்து தான் தோன்றினார்கள்.  இவர்கள் எல்லாம் தங்களுக்காக வாழாமல், மற்றவர்களுக்காக தங்களையே அர்ப்பணிப்பு செய்தவர்கள்.  இப்படிப்பட்ட ஒரு மாமனிதரைத் தான் அக்டோபர் மாதம் 13ஆம் தேதியன்று வேடிகன் நகரில் கௌரவிக்க இருக்கிறார்கள்.  இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதம் அளிக்கும் விஷயம்.  போப்பாண்டவர் ஃப்ரான்ஸிஸ் வரவிருக்கும் அக்டோபர் 13ஆம் தேதியன்று மரியம் த்ரேஸியாவை புனிதர் என்று அறிவிக்க இருக்கிறார்.  சிஸ்டர் மரியம் த்ரேஸியா 50 ஆண்டுக்கால தனது குறைந்த வாழ்நாளில், மனித சமூகத்தின் நலன் பொருட்டு செய்த செயல்கள், ஒட்டுமொத்த உலகிற்குமே ஒரு எடுத்துக்காட்டு.  சமூக சேவை மற்றும் கல்வித்துறையில் அவருக்கு சிறப்பான ஈடுபாடு இருந்தது.  அவர் பல பள்ளிகள், தங்கும் இல்லங்கள் மற்றும் அநாதை இல்லங்களை ஏற்படுத்தினார், தனது ஆயுள் முழுவதும் இந்த நோக்கத்துக்காகவே வாழ்ந்தார்.  சிஸ்டர் த்ரேஸியா செய்த பணிகள் அனைத்தையுமே அதே முனைப்போடு, ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு நிறைவு செய்தார்.  அவர் Congregation of the Sisters of the Holy Family என்ற அமைப்பை நிறுவினார்.  இது இன்றும்கூட, அவரது வாழ்க்கையையும் நோக்கத்தையும் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.  நான் மீண்டும் ஒருமுரை சிஸ்டர் மரியம் த்ரேஸியாவுக்கு என் ச்ரத்தாஞ்சலிகளை காணிக்கையாக்குகிறேன்.  மேலும் பாரதநாட்டு மக்களுக்கு, குறிப்பாக நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு, இந்த சாதனைக்காக பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

     எனதருமை நாட்டுமக்களே, பாரதம் மட்டுமல்ல இன்று உலகம் முழுவதற்கும் பெருமிதம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இன்று நாம் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, 130 கோடி நாட்டுமக்கள் ஒருமுறை பயன்படுத்தி வீசி எறியும் நெகிழியிலிருந்து விடுதலை அடைய உறுதி பூண்டிருக்கிறார்கள் என்பது தான்.  சூழல் பாதுகாப்புத் திசையில், பாரதம் உலகம் முழுவதற்கும் ஒருவகையில் தலைமை தாங்கி வருகிறது.  இதைப் பார்த்து இன்று அனைத்து நாடுகளின் பார்வையும் பாரதம் மீது பதிந்திருக்கிறது.  நீங்கள் அனைவரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியை ஒரே முறை பயன்படுத்தும் நெகிழியிலிருந்து விடுப்பு அளிக்கும் இயக்கத்தில் பங்கு பெறுவீர்கள் என்ற நம்பிக்கை முழுமையாக எனக்கு இருக்கிறது.  பல இடங்களில் மக்கள் தங்களுக்கே உரிய பிரத்யேக வழிமுறைகளில் இந்த இயக்கத்துக்குத் தங்களாலான பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.  ஆனால் நமது நாட்டின் இளைஞர் ஒருவர் மிகவும் விநோதமான இயக்கத்தை நடத்தி இருக்கிறார்.  அவரின் இந்தப் பணியின் பால் என் கவனம் சென்ற போது, நான் அவருக்கு ஃபோன் செய்து அவரின் இந்தப் புதிய பரிசோதனை பற்றித் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டேன்.  ஒருவேளை அவரது இந்த முயற்சியால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்குமே!!  ரிபுதமன் பேல்வீ அவர்கள் ஒரு விநோதமான முயற்சியில் ஈடுபட்டார். இவர் plogging செய்கிறார்.  முதன்முறையாக நான் plogging என்ற இந்தச் சொல்லைக் கேள்விப்பட்ட போது, எனக்கு இது புதிதாகப் பட்டது.  ஒருவேளை அயல்நாடுகளில் இந்தச் சொல் அதிகப் பயன்பாட்டில் இருக்கலாம். ஆனால் பாரதத்தில் ரிபுதமன் பேல்வீ அவர்கள் தாம் இதை அதிகம் பரப்பி வருகிறார்.  அவரிடமே பேசிப் பார்ப்போமே!!    

 

ஹெலோ ரிபுதமன் அவர்களே, வணக்கம், நான் நரேந்திர மோதி பேசுகிறேன்.

 

ஆமாம் சார் சொல்லுங்க, ரொம்ப ரொம்ப நன்றி.

 

ரிபுதமன் அவர்களே, நீங்க இந்த plogging தொடர்பா ரொம்பவே அர்ப்பணிப்போட செயல்பட்டுக்கிட்டு வர்றீங்களே,

 

ஆமாம் சார்.

 

இது என்ன அப்படீங்கற விவரம் பத்தி தெரிஞ்சுக்கலாமேன்னு தான் நான் ஃபோன் செஞ்சிருக்கேன்.

 

ஓகே சார்.

 

இந்தக் கற்பனை உங்களுக்கு எப்படி உதிச்சுது?  மேலும் இந்தச் சொல், இந்த வழிமுறை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.

 

சார், இளைஞர்களுக்கு இன்னைக்கு கொஞ்சம் cool வேணும்.  கொஞ்சம் சுவாரசியமா இருக்கணும், அவங்களுக்கு உத்வேகம் அளிக்க கூடிய வகையில இருக்கணும்.  அப்படி 130 கோடி நாட்டுமக்களையும் என்னோட இந்த முனைப்போட இணைக்கணும்னு சொன்னா, நான் சுவாரசியமான ஒண்ணை செஞ்சாகணும்.  நானே ஒரு ஓட்டப்பந்தய வீரன், காலையில ஓடிப் பழகும் போது, போக்குவரத்து நெரிசல் குறைவா இருக்கும், மனிதர்கள் குறைவா இருப்பாங்க, குப்பையும் நெகிழியும் அப்ப ஏராளமா தென்படும்.  ஐயோ இப்படி இருக்கேன்னு ஒப்பாரி வைக்காம, இது தொடர்பா ஆக்கப்பூர்வமா எதையாவது செய்யணுங்கறதுக்காக, நான் எங்க ஓட்டம் தொடர்பான குழுவோட இந்த இயக்கத்தை தில்லியைச் சுற்றியிருக்கற பகுதியில முன்னெடுத்துப் போன பிறகு, நாடு முழுவதுக்கும் இதைக் கொண்டு போனேன். ஒவ்வொரு இடத்திலயும் நிறைய பாராட்டுக்கள் கிடைச்சுது…..

 

சரி தான், அப்படியா.  நீங்க என்ன செஞ்சீங்க?  கொஞ்சம் விளக்குங்க, ஏன்னா இதை மனதின் குரல் வாயிலாக, நாட்டுமக்கள் கிட்ட கொண்டு போக முடியும். 

 

கண்டிப்பா சார், ஆகையால நாங்க Run and Clean up, அதாவது ஓடுவோம் சுத்தம் செய்வோம் அப்படீங்கற இயக்கத்தை ஆரம்பிச்சோம்.  அதாவது ஓடும் பழக்கம் இருக்கற குழுக்கள் அவங்க உடற்பயிற்சி செய்த பிறகு, அவங்களோட ஓய்வு செயல்பாடா என்ன சொன்னோம்னா, நீங்க குப்பைகளை அகற்ற ஆரம்பிங்க, நெகிழிகளை அகற்ற ஆரம்பிங்க, அதாவது நீங்க ஓடவும் செய்யறீங்க, குப்பையை அகற்றவும் செய்யறீங்க, திடீர்னு இதில நிறைய உடற்பயிற்சியும் சேர்ந்திருது.  நீங்க வெறுமனே ஓட மட்டும் செய்யலை, உட்கார்றீங்க, குனியறீங்க, தாவறீங்க, எட்டி எடுக்கறீங்க, இப்படி முழுமையான உடற்பயிற்சி செய்ய நேருது.  மேலும் கடந்த ஆண்டு நிறைய உடலுறுதி பத்திரிக்கைகள்ல, இந்தியாவோட தலைசிறந்த ஃபிட்னஸ் போக்கு அப்படீங்கற வகையில இதைத் தேர்ந்தெடுத்திருக்காங்க, இந்த ஜாலியான போக்குக்கு இது ஒரு அங்கீகாரம்.

 

உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

ரொம்ப நன்றி சார்.

 

சரி நீங்க செப்டெம்பர் மாதம் 5ஆம் தேதியன்னைக்கு கொச்சியில தான் ஆரம்பிச்சீங்க இல்லையா!!    

 

ஆமாம் சார், இந்த இலக்கோட பேர் Run to make India litter free, அதாவது ஓடுவோம், ஓடிக்கொண்டே இந்தியாவிலிருந்து குப்பையை அகற்றுவோம்.  நீங்க எப்படி அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்னைக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை அளிக்கணும்னு சொல்றீங்களோ, அதே போல குப்பை இல்லாத, நெகிழி இல்லாத நாட்டை ஏற்படுத்தறது நம்ம எல்லாரோட பொறுப்புங்கறதால, நான் 50 நகரங்களை உள்ளடக்கி சுத்தம் செய்துக்கிட்டே ஓடிக்கிட்டு இருக்கேன்.  பலர் சொன்னாங்க இது தான் உலகத்திலேயே மிகப்பெரிய சுத்தம் செய்யும் முன்னெடுப்பா இருக்கும்னாங்க.  மேலும் இதோடு ரொம்ப கூலான சமூக வலைத்தள ஹேஷ்டேகை நாங்க பயன்படுத்தறோம். #PlasticUpvaas.  இதன் வாயிலா நாங்க என்ன சொல்ல வர்றோம்னா, ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் எந்த ஒரு பொருளை, அது நெகிழியா மட்டுமே இருக்கணும்னு அவசியமில்லை, எந்தப் பொருளை உங்க வாழ்க்கையிலேர்ந்தே நீக்கப் போறீங்கன்னு நீங்க சொல்லுங்கன்னு கேட்டிருக்கோம். 

 

அருமை, நீங்க செப்டெம்பர் 5ஆம் தேதி கிளம்பிய பிறகு உங்க அனுபவம் எப்படி இருந்திச்சு?

 

சார், இதுவரை ரொம்ப சிறப்பாவே இருந்திச்சு.  கடந்த இரண்டு ஆண்டுக்காலமா நாங்க கிட்டத்தட்ட 300 plogging முனைப்புக்களை நாடு முழுவதிலயும் மேற்கொண்டிருக்கோம்.  நாங்க கொச்சியிலிருந்து ஆரம்பிச்ச போது, ஓடும் பயிற்சி மேற்கொள்ளும் குழுக்கள் இணைஞ்சாங்க, அங்க உள்ளூர்ல சுத்தப்படுத்தல்கள் நடக்கும், அப்படிப்பட்ட குழுக்களையும் எங்க கூட சேர்த்துக்கிட்டோம்.  கொச்சியிக்குப் பிறகு மதுரை, கோவை, சேலம்னு நாங்க உடுப்பி போனோம், அங்க ஒரு பள்ளியில எங்களை அழைச்சிருந்தாங்க.  சின்னச் சின்னக் குழந்தைகள், மூணாங்கிளாஸ்லேர்ந்து, ஆறாம் கிளாஸ் வரைக்குமான பிள்ளைங்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டரை அளிக்க அழைச்சிருந்தாங்க, அரை மணி நேரப் பட்டரை, 3 மணி நேர plogging driveஆ ஆயிருச்சு.  சார், ஏன்னா பசங்க ரொம்ப ஆர்வமாயிட்டாங்க.  எந்த அளவுக்குன்னா, அவங்க தங்களோட பெற்றோருக்கும், அயலாருக்கும், சக நண்பர்களுக்கும் இந்தச் செய்தியைக் கொண்டு சேர்க்க உற்சாகத்தோட இருந்தாங்க.  எங்களுக்கு இது என்ன பெரிய உத்வேகம் அளிச்சுதுன்னா, இதை இனி நாம அடுத்த கட்டம் நோக்கிக் கொண்டு போகணும்ங்கற உணர்வை மனதில ஏற்படுத்திச்சு.

 

ரிபு அவர்களே, இது உழைப்பில்லை, இது ஒரு சாதனை.  உண்மையிலேயே நீங்க ஒரு சாதனையை நிகழ்த்திக்கிட்டு இருக்கீங்க.   

 

நன்றி சார்.

 

என் தரப்பிலேர்ந்து உங்களுக்கு பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிச்சுக்கறேன்.  ஆனா மூணு விஷயங்களை நாட்டுமக்களுக்கு தெரிவிச்சே ஆகணும்னு சொன்னா, குறிப்பிட்ட அந்த மூணு விஷயங்கள் என்னவா இருக்கும்? 

 

பார்க்கப் போனா நான் மூன்று நிலைகளைப் பத்தி தெரிவிக்க விரும்பறேன்.  குப்பைகளற்ற இந்தியா, அசுத்தங்களற்ற இந்தியா அப்படீங்கற இலக்கை எட்ட, முதல் படி, குப்பைகளைக் குப்பைத் தொட்டிகள்ல மட்டுமே நாம போடணும்.  ரெண்டாவது படி, எந்த ஒரு குப்பையும் உங்க கண்ணுல பட்டா, அதை எடுத்து கவனமா குப்பைத் தொட்டியில போடுங்க.  மூணாவதா, குப்பைத் தொட்டி கண்ணுல தென்படலைன்னா, உங்க பையில வச்சுக்குங்க, இல்லை உங்க வண்டியில வச்சுக்குங்க, வீட்டுக்குக் கொண்டு வாங்க.  உலர்கழிவு – ஈரமான கழிவுங்கற வகையில அதைப் பிரிச்சிருங்க.  காலையில நகராட்சி வண்டி வரும் போது, அவங்க கிட்ட இதைக் குடுத்திருங்க.  நாம இந்த மூணு படிகளைப் பின்பற்றி நடந்தோம்னா, குப்பைக்கூளங்களற்ற இந்தியாவை நாம கண்குளிரக் காண முடியும். 

 

பார்த்தீங்களா நண்பர்களே, ரிபு அவர்கள் ரொம்ப எளிமையான சொற்கள்ல, பாமர மக்களுக்கும் புரியற வகையில, ஒருவகையில காந்தியடிகள் காட்டிய வழியில அவங்க கனவுகளைத் தாங்கிப் பயணிச்சுட்டு இருக்காங்க.  கூடவே காந்தியடிகளை மாதிரியே எளிமையான சொற்கள் வாயிலா தன் கருத்துக்களையும் முன்வைக்கறாங்க.

 

ரொம்ப நன்றி சார்.

 

ஆகையினால தான் நீங்க பாராட்டுக்கு உரியவர்.  ரிபுதமன் அவர்களே, உங்களோட பேசினது எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்திச்சு, நீங்க ரொம்பவே நூதனமான வழிமுறைகளைக் கையாண்டு, அதுவும் குறிப்பா இளைஞர்களுக்குப் பிடித்தமான வகையில, இந்த மொத்த நிகழ்ச்சியையும் வடிவமைச்சிருக்கீங்க.  நான் உங்களுக்கு பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிச்சுக்கறேன். 

 

மேலும் நண்பர்களே, இந்த முறை வணக்கத்துக்குரிய அண்ணலோட ஜெயந்தி சந்தர்ப்பத்தில் விளையாட்டுத் துறையும் Fit India Plogging Run என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.  அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று 2 கிலோமீட்டர் plogging நாடு முழுக்க நடைபெற இருக்கிறது.  இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்துவது, நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றி எல்லாம் ரிபுதமன் அவர்கள் தன்னுடைய அனுபவம் வாயிலாகப் பகிர்ந்து கொண்டார்.  அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று தொடங்கும் இந்த இயக்கத்தில் நாம் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்றால், நாம் 2 கிலோமீட்டர் வரை நிதான ஓட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு, வழியில் கிடக்கும் நெகிழிக் குப்பைகளை சேகரிக்க வேண்டும்.  இதன் வாயிலாக, நாம் நமது உடல்நலத்தின் மீது மட்டும் அக்கறை செலுத்தவில்லை, பூமித்தாயின் உடல்நலத்தின் மீதும் அக்கறை செலுத்தி அதைப் பாதுகாக்கிறோம்.  இந்த இயக்கத்தில், மக்கள் உடலுறுதியோடு கூடவே தூய்மை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவார்கள்.  130 கோடி நாட்டுமக்களும் இந்தத் திசையில் ஒரு அடி எடுத்து வைத்தார்களேயானால், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களிலிருந்து விடுதலை அடையும் திசையை நோக்கி பாரதம் 130 கோடி அடிகளை முன்வைத்து முன்னேறும்.  ரிபுதமன் அவர்களே, மீண்டும் ஒருமுறை, உங்களுக்கு என் பலப்பல நன்றிகள்.  மேலும் உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும், இப்படிப்பட்ட ஒரு புதிய கற்பனைக்காகவும் என் தரப்பிலிருந்து பலப்பல பாராட்டுக்கள். தேங்க்யூ.

 

எனம் மனம்நிறை நாட்டுமக்களே, அக்டோபர் மாதம் 2ஆம் தேதிக்கான தயாரிப்பு முஸ்தீபுகளில் நாடும் உலகும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன, ஆனால், நாம் காந்தியடிகள் 150 என்ற கடமைப் பாதையில் பயணிக்க விரும்புகிறோம்.  நம்முடைய வாழ்க்கையில் நாட்டுநலன் கருதி மாற்றம் ஏற்படுத்தி முன்னேற்ற விரும்புகிறோம்.  முன்கூட்டியே உங்களுக்கு ஒரு விஷயம் பற்றி நினைவுபடுத்த நான் விரும்புகிறேன்.  அடுத்த மனதின் குரலில் அதைப் பற்றி நான் விரிவாக உரைப்பேன் என்றாலும், இன்று சற்று முன்கூட்டியே இதை ஏன் உரைக்கிறேன் என்றால், நீங்களும் இதற்கான தயாரிப்புக்களில் ஈடுபட ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும் இல்லையா?  உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும், அக்டோபர் மாதம் 31ஆம் தேதி, சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் பிறந்த நாள்.  ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது நம்மனைவரின் கனவு, இதன் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று நாம் நாடு முழுவதிலும் ஒற்றுமைக்கான ஓட்டம், Run For Unityயை நடத்துகிறோம்.  சிறுவர்கள், பெரியோர் என அனைவரும், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் ஆயிரக்கணக்கானோர், இந்தியாவின் இலட்சக்கணக்கான கிராமங்களில், அந்த நாளன்று ஒற்றுமைக்காக நாம் ஓட்டத்தில் ஈடுபட வேண்டும்.  ஆகையினால் நீங்களனைவரும் இப்போதிலிருந்தே ஓடிப் பழகத் தொடங்குங்கள்.  விரிவான வகையில் பின்னர் நான் உங்களோடு பேசுகிறேன், ஆனால் இப்போது இன்னும் நேரமிருக்கிறது, சிலர் பயிற்சி தொடங்கி விடலாம், சிலர் அதற்கான திட்டமிடலிலும் ஈடுபடலாம்.

 

     எனதருமை நாட்டுமக்களே, உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று நான் செங்கோட்டையிலிருந்து பேசியிருந்தேன், 2022ஆம் ஆண்டுக்குள்ளாக இந்தியாவில் ஏதாவது 15 இடங்களுக்காவது நீங்கள் சென்று பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.  குறைந்தபட்சம் 15 இடங்கள், முடிந்தால் ஓரிரவோ, ஈரிரவுகளோ அங்கே தங்கி இருக்கும்படியான நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டும்.  நீங்கள் இந்தியாவைப் பாருங்கள், அதைப் புரிந்து கொள்ளுங்கள், அனுபவித்து உணருங்கள்.  நம்மிடத்தில் எத்தனை பன்முகத்தன்மை இருக்கிறது என்பது அப்போது உங்களுக்கே தெரிய வரும்.  தீபாவளிப் பண்டிகையை ஒட்டி விடுமுறைகள் வரும் வேளையில், மக்கள் கண்டிப்பாக சுற்றிப் பார்க்க கிளம்புகிறார்கள் என்பதால், நான் மீண்டும் ஒருமுறை உங்களிடம் வேண்டிக் கொள்கிறேன், தயவு செய்து இந்தியாவில் உள்ள ஏதாவது 15 இடங்களுக்குச் சென்று பாருங்கள்.

                  

                  

          எனதருமை நாட்டுமக்களே, இப்போது நேற்றைய முன்தினம் தான் செப்டம்பர் 27ஆம் தேதியன்று, உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.  உலகின் சில பொறுப்புணர்வுமிக்க அமைப்புகள் சுற்றுலா பற்றிய தரவரிசைப் பட்டியலை வெளியிடுகின்றன.  பயணம் மற்றும் சுற்றுலா போட்டிக் குறியீட்டில் இந்தியா மிகவும் மேம்பாடு அடைந்திருக்கிறது என்பது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கலாம்.  மேலும் இவை அனைத்தும் உங்களின் ஒத்துழைப்பு காரணமாக மட்டுமே நடந்தேறியிருக்கிறது.   குறிப்பாக சுற்றுலாவின் மகத்துவத்தை நாம் புரிந்து கொண்டதால் தான் இது ஏற்பட்டிருக்கிறது.  தூய்மை இயக்கமும் இதிலே தனது பெரிய பங்களிப்பை நல்கியிருக்கிறது.   இந்த மேம்பாட்டின் அளவு என்ன என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளவா?  தெரிந்து கொண்டால் நீங்களும் அதிக சந்தோஷப்படுவீர்கள்!!  இன்று நமது தரநிலை 34 என்ற நிலையில் இருக்கிறது; இதுவே ஐந்தாண்டுகள் முன்பாக உலக அளவில் 65 என்ற நிலையில் இருந்தது.  அதாவது, ஒருவகையில் இது மிகப்பெரிய ஒரு பாய்ச்சலாக அமைந்திருக்கிறது.  நாம் மேலும் முயன்றோம் என்று சொன்னால், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுக்காலத்தை நாம் நெருங்கும் வேளையில், சுற்றுலாத் துறையில் முக்கிய இடங்களில் ஒன்றை நமக்குரியதாக்கிக் கொள்ள முடியும்.   

 

          என் மனம் நிறை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பன்முகத்தன்மை நிறைந்த பாரதத்தில், பலவிதமான பண்டிகைகளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.  ஒரு விஷயம்!  இதன் மீதும் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.  தீபாவளி நாட்களில் பட்டாசுகளைக் கொளுத்தும் வேளைகளில் தெரியாத்தனமாக யாருக்கும் எந்த ஒரு தீங்கும் ஏற்படாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.   பார்த்து, பக்குவமாக, கவனமாக பட்டாசுகளைக் கொளுத்துங்கள், அப்படி நடந்து கொள்வீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  சந்தோஷம், ஆனந்தம், உற்சாகம் எல்லாம் இருக்க வேண்டும்.  மேலும் நமது பண்டிகைகள் அனைத்தும் சமூக இயல்பின் மணத்தைக் கொண்டு சேர்க்கின்றன.  சமூக வாழ்க்கை என்பது ஒரு புதிய வல்லமையை அளிக்கிறது.  அந்தப் புதிய வல்லமையைப் உணர்ந்து பார்க்கும் நல்வாய்ப்பை அளிக்கின்றன பண்டிகைகள்.  அனைவருமாக இணைந்து, உற்சாகத்தோடு, பூரிப்போடு, புதிய கனவுகள், புதிய தீர்மானம் ஆகியவற்றின் துணையோடு, நமது பண்டிகைகளைக் கொண்டாடுவோம், வாருங்கள்!!  மீண்டும் ஒருமுறை பலப்பல நல்வாழ்த்துக்கள்.  நன்றிகள். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait

Media Coverage

When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Under Rozgar Mela, PM to distribute more than 71,000 appointment letters to newly appointed recruits
December 22, 2024

Prime Minister Shri Narendra Modi will distribute more than 71,000 appointment letters to newly appointed recruits on 23rd December at around 10:30 AM through video conferencing. He will also address the gathering on the occasion.

Rozgar Mela is a step towards fulfilment of the commitment of the Prime Minister to accord highest priority to employment generation. It will provide meaningful opportunities to the youth for their participation in nation building and self empowerment.

Rozgar Mela will be held at 45 locations across the country. The recruitments are taking place for various Ministries and Departments of the Central Government. The new recruits, selected from across the country will be joining various Ministries/Departments including Ministry of Home Affairs, Department of Posts, Department of Higher Education, Ministry of Health and Family Welfare, Department of Financial Services, among others.