Sardar Patel and Birsa Munda shared the vision of national unity: PM Modi
Let’s pledge to make India a global animation powerhouse: PM Modi
Journey towards Aatmanirbhar Bharat has become a Jan Abhiyan: PM Modi
Stop, think and act: PM Modi on Digital arrest frauds
Many extraordinary people across the country are helping to preserve our cultural heritage: PM
Today, people around the world want to know more about India: PM Modi
Glad to see that people in India are becoming more aware of fitness: PM Modi

 எனதருமை நாட்டுமக்களே வணக்கம்.  இன்றைய மனதின் குரலில் உங்கள் அனைவருக்கும் நல்வரவேற்பு.  உங்கள் வாழ்க்கையின் மிகவும் நினைவில் கொள்ளத்தக்க கணம் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் என்றால், அப்படி ஏராளமாக இருக்கின்றன என்றாலும், இவை அனைத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட கணம் மிகவும் விசேஷமானது.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை ஒட்டி, அவர் பிறந்த இடமான ஜார்க்கண்டின் உலிஹாதூ கிராமத்திற்கு நான் சென்ற கணம் தான் அது.  இந்தப் பயணம் எனக்குள்ளே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.  பவித்திரமான இந்த பூமியின் மண்ணை என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் பெரும்பேறு கிடைத்த, தேசத்தின் முதல் பிரதமர் என்ற சௌபாக்கியம் எனக்கு வாய்க்கப்பெற்றது.  அந்தக் கணத்தில் சுதந்திரப் போராட்ட்த்தின் சக்தியை மட்டும்  நான் உணரவில்லை, இந்த மண்ணின் சக்தியோடு என்னை நானே இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் எனக்கு வாய்த்தது.  மேற்கொண்ட ஒரு உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வல்லமை இருந்தால், எப்படி அதனால் தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை நான் ஆழமாக உணர்ந்தேன்.

            நண்பர்களே, பாரத நாடு அனைத்துக் காலகட்டங்களிலும் ஏதாவது ஒரு சவாலை சந்தித்து வந்திருக்கிறது, அந்தக் காலங்களில் எல்லாம் அசாதாரணமான வல்லமை படைத்தோர் தோன்றினார்கள், சவால்களைத் திறம்பட எதிர்கொண்டார்கள்.  இன்றைய மனதின் குரலில், வல்லமையும், தொலைநோக்கும் உடைய இப்படிப்பட்ட இரண்டு மகாநாயகர்களைப் பற்றியே நான் உங்களோடு கலந்து கொள்ள இருக்கிறேன்.  இவர்களின் 150ஆவது பிறந்த நாளை தேசம் கொண்டாட முடிவு செய்திருக்கிறது.  அக்டோபர் 31ஆம் தேதியன்று சர்தார் படேல் அவர்களின் 150ஆவது பிறந்த ஆண்டின் தொடக்கமாக இருக்கும்.  இதன் பிறகு நவம்பர் 15ஆம் தேதியன்று பகவான் பிர்ஸா முண்டாவின் 150ஆவது பிறந்த ஆண்டுத் தொடக்கம் வரும்.  இந்த இரண்டு மாமனிதர்கள், வேறுபட்ட சவால்களை சந்தித்தார்கள் என்றாலும், இருவரின் தொலைநோக்கும் ஒன்றாகவே இருந்தது, அது தான் தேசத்தின் ஒற்றுமை.

            நண்பர்களே, கடந்த ஆண்டுகளில் இப்படிப்பட்ட மாமனிதர்களின் பிறந்த நாள்களை, புதிய சக்தியோடு தேசம் கொண்டாடியது, புதிய தலைமுறையினருக்குப் புதிய உத்வேகத்தை ஊட்டியது.  நாம் அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய வேளையில் அது எத்தனை விசேஷமாக இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கம் தொடங்கி, ஆப்பிரிக்காவின் சின்ன கிராமம் வரை, உலக மக்கள் யாவரும் பாரதத்தின் வாய்மை மற்றும் அகிம்ஸை பற்றிய செய்தியைப் அறிந்து கொண்டார்கள், புரிந்து கொண்டார்கள், அதை வாழ்ந்தும் பார்த்தார்கள்.  இளைஞர்கள் முதல் வயதானோர் வரை, இந்தியர்கள் முதல் அயல்நாட்டவர் வரை, அனைவரும் காந்தியடிகளின் உபதேசங்களை, புதிய கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டார்கள், புதிய உலக சூழ்நிலையில் அதை அறிந்து கொண்டார்கள்.  நாம் ஸ்வாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய வேளையில், தேசத்தின் இளைஞர்கள் பாரதத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார சக்தியின் புதிய அர்த்தங்களைப் புரிந்து கொண்டார்கள்.  நமது மகாபுருஷர்கள் கடந்த காலத்தோடு கடந்து சென்று விடப்போவதில்லை, அவர்களின் வாழ்க்கை நமது தற்கால வாழ்க்கைக்கு, வருங்காலப் பாதையை இவை துலக்கிக் காட்டுகின்றன.

            நண்பர்களே, அரசு இந்த மாமனிதர்களின் 150ஆவது பிறந்த ஆண்டினை தேசிய அளவில் கொண்டாட முடிவு செய்திருந்தாலும் கூட, உங்களின் பங்களிப்பு மட்டுமே இந்த இயக்கத்தில் உயிர்ப்பை அளிக்கும், இதை உயிர்பெறச் செய்யும்.  நீங்கள் அனைவரும் இந்த இயக்கத்தோடு உங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள் என்று நான் உங்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்.  இரும்பு மனிதர் சர்தார் படேலோடு தொடர்பான கருத்துக்கள்-செயல்களை #Sardar150 என்பதிலே பதிவு செய்யுங்கள்; மண்ணின் மைந்தன் பிர்ஸா முண்டாவின் கருத்தூக்கங்களை #BirsaMunda150 என்பதிலே பதிவு செய்து உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.  வாருங்கள், நாமனைவரும் ஒன்றுபட்டு, பாரதத்தின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையின் கொண்டாட்டத்தில் ஈடுபடுவோம், மரபு தொடங்கி முன்னேற்றம் என்ற இந்த விழாவை முன்னெடுப்போம்.

            எனதருமை நாட்டுமக்களே, தொலைக்காட்சியில் சோட்டா பீம் தொடங்கப்பட்ட நாளை நீங்கள் கண்டிப்பாக நினைவில் வைத்திருப்பீர்கள், இல்லையா?  குழந்தைகளால் இதைக் கண்டிப்பாக மறக்க இயலாது, சோடா பீம் தொடர்பாக எந்த அளவுக்கு ஆர்வம் இருந்தது!!  டோலக்பூரின் இந்த மேளம், பாரத நாட்டில் மட்டுமல்ல, பிற நாடுகளின் குழந்தைகளையும் மிகவும் கவர்ந்து இழுக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்.  இதைப் போலவே நமது வேறு பிற அனிமேஷன் செய்யப்பட்ட தொடர்களான கிருஷ்ணன், அனுமன், மோடூ-பத்லூ போன்றவற்றை விரும்புவோர் உலகெங்கிலும் இருக்கிறார்கள்.   பாரதநாட்டின் அனிமேஷன் செய்யப்பட்ட பாத்திரங்கள், நம் நாட்டின் அனிமேஷன் செய்யப்பட்டத் திரைப்படங்கள், நமது உள்ளடக்கம், படைப்பாற்றல் ஆகியவை காரணமாக உலகெங்கிலும் இவை விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.  நீங்களே கூட கவனித்திருக்கலாம், ஸ்மார்ட்ஃபோன் தொடங்கி வெள்ளித் திரை வரை, கேமிங் கன்சோல் தொடங்கி, virtual reality, அதாவது மெய்நிகர் உண்மை வரை, அனிமேஷன் என்பது அங்கிங்கெனாதபடி பரவியிருக்கிறது.  அனிமேஷன் உலகத்தில், பாரதம் புதிய புரட்சியைப் படைக்கும் பாதையில் இருக்கிறது.  பாரதநாட்டின் கேமிங் துறையும் கூட மிக வேகமாக வளர்ந்து வருகிறது.  சில மாதங்கள் முன்பாக, பாரதத்தின் முன்னணி கேமர்களோடு நான் சந்திக்க நேர்ந்தது, அப்போது தான் இந்திய விளையாட்டுக்களின் ஆச்சரியம் கொள்ளவைக்கும் படைப்புத்திறன் மற்றும் தரம் பற்றித் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் என்னால் முடிந்தது.  உண்மையிலேயே, தேசத்தில் படைப்பாற்றல் அலை ஒன்று வீசிக் கொண்டிருக்கிறது.  அனிமேஷன் உலகில் இந்தியாவில் தயாரிப்பது, இந்தியர்களால் உருவாக்கப்படுவது என்பது விரவிக் கிடக்கிறது.  இன்று பாரதத்தின் திறமைகள், அயல்நாட்டுத் தயாரிப்புக்களில் முக்கியமான பங்கு வகிக்கின்றன என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம்.  இப்போதிருக்கும் ஸ்பைடர்மேனாகட்டும், ட்ரான்ஸ்ஃபார்மர்களாகட்டும், இந்த இரண்டு படங்களிலும் ஹரிநாராயண் ராஜீவின் பங்களிப்பினை மக்கள் மிகவும் மெச்சியிருக்கிறார்கள்.  பாரதத்தின் அனிமேஷன் ஸ்டூடியோக்கள், டிஸ்னி மற்றும் வார்னர் சகோதரர்களைப் போலவே, உலகின் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றன.

            நண்பர்களே, இன்று நமது இளைஞர்கள் நமது கலாச்சாரம் பிரதிபலிக்கும் புத்தம்புது இந்திய உள்ளடக்கம்-விஷயங்களைத் தயாரித்து வருகின்றார்கள்.   இவை உலகம் நெடுகப் பார்க்கப்பட்டும் வருகின்றன.  அனிமேஷன் துறை இன்று எப்படிப்பட்டத் துறையாக ஆகிவிட்டது என்றால், பிற துறைகளுக்கு அது பலமூட்டி வருகின்றது.  எடுத்துக்காட்டாக,  இப்போதெல்லாம் வீ ஆர் டூரிஸம் மிகவும் பிரபலமாகி வருகிறது.  நீங்கள் மெய்நிகர் சுற்றுலா வாயிலாக, அஜந்தாவின் குகைகளுக்குச் சென்று பார்க்கலாம், கோணார்க் ஆலயத்தின் இடைக்கழியில் உலவிவிட்டு வரலாம் அல்லது, வாராணசியின் துறைகளின் ஆனந்தமாகக்  கழிக்கலாம்.  இந்த அனைத்து வீஆர் அனிமேஷனையும், பாரதத்தின் படைப்பாளிகள் தாம் தயார் செய்திருக்கின்றார்கள்.  இந்த வீஆர் வாயிலாக, இந்த இடங்களைக் கண்டு களித்த பிறகு பலர் மெய்யாகவே இந்தச் சுற்றுலா இடங்களுக்குச் சென்று பார்க்க விரும்புகிறார்கள், அதாவது சுற்றுலா இடத்தை மெய்நிகர்க் காட்சி வாயிலாக சுற்றிப் பார்த்த பிறகு மக்களின் மனங்களிலே மெய்யாகவே அங்கே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும் கருவியாக இது ஆகி இருக்கிறது.  இன்று இந்தத் துறையில் அனிமேட்டர்களோடு கூடவே கதை சொல்பவர்கள், எழுத்தாளர்கள், குரல் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், கேம் டெவலப்பர்கள், வீஆர் மற்றும் ஏஆர் வல்லுநர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  ஆகையால், பாரத நாட்டு இளைஞர்களிடம் நான் கூற விரும்புவது என்னவென்றால், உங்களுடைய படைப்புத் திறனுக்கு இறக்கை அளியுங்கள்.  உலகின் அடுத்த சூப்பர்ஹிட் அனிமேஷன் உங்களுடைய கணிப்பொறியிலிருந்து கூட பிறப்பெடுக்கலாம், யார் அறிவார்கள்!!   அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டு தீயாய்ப் பரவும் அடுத்தப் படைப்பு உங்களுடையதாக இருக்கலாம்!!  கல்விசார் அனிமேஷன்களின் உங்களுடைய புதுமைகள், பெரும் வெற்றியை ஈட்டலாம்.  வரும் அக்டோபர் 28ஆம் தேதி, அதாவது நாளைய தினம் உலக அனிமேஷன் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  வாருங்கள், நாம் பாரதத்தை உலக அனிமேஷன் ஆற்றல் மையமாக மாற்றும் உறுதிப்பாட்டை ஏற்போம். 

            என் மனம்நிறை நாட்டுமக்களே, ஸ்வாமி விவேகானந்தர் ஒருமுறை வெற்றிக்கான மந்திரத்தை அளித்தார்.  அந்த மந்திரம் என்னவென்றால், ஏதோ ஒரு கருத்தை மனதில் கொள்ளுங்கள்அந்த ஒரு கருத்தை உங்கள் வாழ்க்கையாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்அதையே சிந்தியுங்கள்அதைப் பற்றியே கனவு காணுங்கள்அதை வாழத் தொடங்குங்கள்.  இன்று, தற்சார்பு பாரதம் இயக்கத்தின் வெற்றியும் கூட இதே மந்திரத்தை அடியொற்றிப் பயணித்து வருகிறது.  இந்த இயக்கம் நமது சமுக விழிப்புநிலையின் அங்கமாக ஆகி விட்டது.  தொடர்ந்து, ஒவ்வொரு படிநிலையிலும் நமது உத்வேகமாக ஆகியிருக்கிறது.  தற்சார்பு என்பது நமது கொள்கைத் திட்டம் மட்டுமல்ல, நமது பேரார்வமாகவே ஆகியிருக்கிறது.  பல ஆண்டுகள் ஆகி விடவில்லை, வெறும் பத்தாண்டுகள் முன்பான விஷயம் தான், ஏதோவொரு நுணுக்கமான தொழில்நுட்பத்தை பாரதத்தில் மேம்படுத்த வேண்டும் என்று அப்போது யாராவது கூறியிருந்தால், பலருக்கு நம்பிக்கையே இருந்திருக்காது, பலர் பரிகாசம் கூட செய்திருப்பார்கள்.  ஆனால் இன்று அதே மனிதர்கள், தேசத்தின் வெற்றியைக் கண்டு திகைத்துப் போயிருக்கிறார்கள்.  தற்சார்புடையதாக மாறிவரும் பாரதம், அனைத்துத் துறைகளிலும் அற்புதங்களை அரங்கேற்றி வருகின்றது.  நீங்களை சிந்தியுங்கள், ஒரு காலத்தில் செல்பேசிகள் இறக்குமதி செய்துவந்த பாரதம் இன்றோ, உலகின் மிகப்பெரிய செல்பேசித் தயாரிப்பாளராக ஆகியிருக்கிறது.  ஒரு காலத்தில் மிக அதிக அளவு பாதுகாப்புத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த பாரதம் இன்றோ, 85 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது.  விண்வெளித் தொழில்நுட்பத்தில் பாரதம் இன்று, நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் தேசமாக அறியப்படுகிறது.  இவற்றிலெல்லாம் ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, அது என்னவென்றால், தற்சார்பு நோக்கிய இந்த இயக்கம் இப்போது ஒரு அரசு இயக்கமாக மட்டுமே நின்று போகாமல், இந்த தற்சார்பு பாரத இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக மாறி வருகிறது என்பது தான்.  அனைத்துத் துறைகளிலும் சாதனைகளைப் படைத்து வருகிறது.  இந்த மாதம் தான் லத்தாக்கின் ஹான்லேவில், நாம் ஆசியாவின் மிகப்பெரிய ஒலிவழி இயல்நிலை வரைவி தொலைநோக்கியான மேஸ், அதாவது ‘Imaging Telescope MACE’ஐ நிறுவினோம்.  இது 4300 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.  இதன் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா?  இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.  சிந்தியுங்கள், எந்த இடத்தில் பூஜ்யத்திற்குக் கீழே 30 டிகிரிகள் என்ற வெப்பநிலை இருக்கிறதோ, எங்கே பிராணவாயு என்பதே அரிதாக உள்ளதோ, அங்கே நமது விஞ்ஞானிகளும், உள்ளூர் தொழில்துறையும் இதை சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.  இப்படி ஆசியாவின் எந்த தேசமும் இதுவரை செய்தது இல்லை.  ஹான்லேவின் இந்தத் தொலைநோக்கி தொலைவான உலகை வேண்டுமானால் பார்க்கலாம் ஆனால், இது நமக்கு மேலும் ஒரு விஷயத்தைச் சுட்டுகிறது, அது தான் தற்சார்பு பாரதத்தின் வல்லமை.

            நண்பர்களே, நீங்களுமே கூட ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  தற்சார்பு பாரதத்தின் அதிக அளவு எடுத்துக்காட்டுகள், இப்படிப்பட்ட முயற்சிகளை நீங்களும் பகிருங்கள்.  நீங்கள் உங்களுடைய அக்கம்பக்கத்திலே என்ன மாதிரியான புதுமைகளைக் கண்டீர்கள், எந்த உள்ளூர் ஸ்டார்ட் அப் உங்களை அதிகம் கவர்ந்தது, சமூக வலைத்தளத்தில் #AatmanirbharInnovationஇலே தகவல்களை அளியுங்கள், தற்சார்பு பாரதக் கொண்டாட்டத்தைக் கொண்டாடுங்கள்.  பண்டிகைகளின் இந்தக் காலத்திலே நாமனைவரும் தற்சார்பு பாரதம் என்ற இந்த இயக்கத்தை மேலும் பலமடையச் செய்வோம்.  நாம் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் மந்திரத்தோடு நமது கொள்முதலை இணைப்போம்.  இது புதிய பாரதம், அசாத்தியம் என்பது இங்கே ஒரு சவால் தான், இங்கே இந்தியாவில் தயாரிப்போம் என்பது உலகிற்காகத் தயாரிப்போமாக ஆகி விட்டது, இங்கே அனைத்துக் குடிமக்களும் புதுமைகள் படைப்போராக ஆகியிருக்கிறார்கள், இங்கே அனைத்துச் சவால்களுமே சந்தர்ப்பங்கள் தாம்.  நாம் பாரதத்தை தற்சார்புடையதாக ஆக்குவது மட்டுமல்ல, நமது தேசத்தை புதுமைகள் படைத்தலின் உலகளாவிய சக்திபீடமாகவும் பலப்படுத்த வேண்டும். 

            என் கனிவுநிறை நாட்டுமக்களே, நான் உங்களுக்கு ஒரு ஒலிக்குறிப்பை ஒலிக்க வைக்கிறேன்.

###### (audio)

Transcription of Audio Byte

Fraud Caller 1Hello 

Victim சார் வணக்கம் சார்.

Fraud Caller 1வணக்கம்.

Victim சொல்லுங்க சார்.

Fraud Caller 1பாருங்க, நீங்க எனக்கு வந்திருக்கற எஃப் ஐ ஆர் நம்பர்ல 17 குற்றச்சாட்டுகள் இருக்கு.  நீங்க இந்த நம்பரையா பயன்படுத்திட்டு இருக்கீங்க?

Victim நான் இதை பயன்படுத்தலை சார்.

Fraud Caller 1இப்ப எங்கிருந்து நீங்க பேசிட்டு இருக்கீங்க?

Victim கர்நாடகாவிலேர்ந்து சார். இப்ப நான் வீட்டுல தான் இருக்கேன்.

Fraud Caller 1ஓகே, உங்க ஸ்டேட்மெண்டை பதிவு செய்யுங்க, அதுக்குப் பிறகு உங்க நம்பர் ப்ளாக் செய்யப்படும்.  எதிர்காலத்தில இதனால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது, ஓகேயா?

Victim சரி சார்.

Fraud Caller 1இப்ப நான் உங்களை கனெக்ட் செய்யறேன், அவரு தான் புலனாய்வு அதிகாரி.  நீங்க அவருகிட்ட உங்க ஸ்டேட்மெண்டை குடுத்திருங்க.  அப்பத் தான் உங்க நம்பர் ப்ளாக் ஆகும். ஓகேயா?         

Victim சரி சார்.

Fraud Caller 1சொல்லுங்க சார். நான் யாரு கிட்ட பேசிட்டு இருக்கேன்னு தெரிஞ்சுக்கலாமா?  உங்க ஆதார் அட்டையை கொஞ்சம் காமிக்க முடியுமா, சரிபார்க்க விவரம் சொல்ல முடியுமா? 

Victim :  சார், என்கிட்ட என்னோட ஆதார் அட்டை இப்ப இல்லை, ப்ளீஸ் சார்.  

Fraud Caller 1ஃபோன், உங்க ஃபோன்ல இருக்கும்ல?

Victim இல்லை சார்.  

Fraud Caller 1உங்க ஃபோன்ல உங்க ஆதார் அட்டையோட புகைப்படம் இருக்குமில்லையா?     

Victim இல்லை சார்.

Fraud Caller 1நம்பராவது ஞாபகம் இருக்குமில்லையா?

Victim இல்லை சார்.  நம்பரும் நினைவுல இல்லை சார்.

Fraud Caller 1நாங்க வெறுமனே சரி மட்டும் பார்க்கணும், ஓகே, சரிபார்க்க மட்டும் தான் தேவை.

Victim இல்லை சார்.

Fraud Caller 1நீங்க பயப்படவே வேண்டாம், நீங்க ஒண்ணும் செய்யலைன்னா பயப்படவே தேவையில்லை. சரியா?

Victim சரி சார் சரி சார்.

Fraud Caller 1உங்க கிட்ட ஆதார் அட்டை இல்லைன்னு சொன்னா, சரிபார்க்க எனக்கு ஏதாவது ஒரு ஆவணத்தையாவது குடுங்க!! 

Victim இல்லை சார், நான் கிராமத்திலேந்ர்ந்து வந்திருக்கேன், என்னோட எல்லா ஆவணங்களுமே அங்க வீட்டுல தான் சார் இருக்கு.

Fraud Caller 1ஓகே

Fraud Caller 2: நான் உள்ள வரலாமா சார்?

Fraud Caller 1வாங்க.

Fraud Caller 2ஜய் ஹிந்த்

Fraud Caller  1: ஜய் ஹிந்த்

Fraud Caller 1இந்த ஆளோட  one sided video call பதிவு செய்.  ஓகே.

########

இந்த ஒலிப்பதிவு வெறும் தகவலுக்காக மட்டுமல்ல, இது ஏதோ கேளிக்கைக்கான ஒலிக்குறிப்பல்ல, ஆழமான கவலையளிக்கவல்ல ஒலிக்குறிப்பு இது.  நீங்கள் இப்போது கேட்ட உரையாடல், டிஜிட்டல் கைது மோசடி தொடர்பானது.  இந்த உரையாடல் பாதிக்கப்பட்ட நபருக்கும், மோசடி செய்பவருக்கும் இடையிலானது.  டிஜிட்டல் கைது என்ற மோசடியில் தொலைபேசியில் அழைப்பவர், போலீஸாகவோ, சிபிஐயாகவோ, போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்தவராகவோ, ரிசர்வ் வங்கிக்காரராகவோ சொல்லிக்கொண்டு, இப்படி விதவிதமான வகைகளில், போலி அதிகாரிகளாகப் பேசுவார்கள், மிகுந்த துணிச்சலோடு பேசுவார்கள்.  மனதின் குரலின் நேயர்கள் பலர் இது குறித்து நான் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.  வாருங்கள், இந்த மோசடிப் பேர்வழிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், இந்த அபாயகரமான விளையாட்டு என்ன என்பது தொடர்பான விபரங்களை நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.  நீங்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம், அதே போல மற்றவர்களும் இதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.  முதல் தந்திரமான உத்தி, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திரட்டிக் கொள்கிறார்கள், எடுத்துக்காட்டாக, ”கடந்த மாதம் நீங்கள் கோவா போயிருந்தீர்கள், இல்லையா?, உங்களுடைய மகள் தில்லியில் படிக்கிறாள், இல்லையா?” என்பது போன்று.  இவர்கள் உங்களைப் பற்றி போதுமான அளவு தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு உங்களிடம் திகைப்பை ஏற்படுத்துகிறார்கள்.  அடுத்த தந்திரம் – அச்சம் நிறைந்த ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள், சட்டப் பிரிவுகளைச் சொல்வார்கள், அவர்கள் எந்த அளவுக்கு உங்களுக்குள்ளே அச்சத்தை விதைப்பார்கள் என்றால், தொலைபேசியில் உரையாடும் போது நீங்கள் சுயமாக சிந்திக்கும் சக்தியையே இழந்து விடுவீர்கள்.  பிறகு அவர்களுடைய அடுத்த தந்திரம் தொடங்கும்.  மூன்றாவது தந்திரம் – நேரக்குறைவு என்ற அழுத்தம்.  “இப்பவே நீங்க முடிவெடுத்தாகணும் இல்லைன்னா உங்களை கைது செய்ய வேண்டியிருக்கும்”.  என்று சொல்லி, பாதிக்கப்பட்டவருக்கு உளவியல்ரீதியாக தாங்கமுடியாத அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்.  டிஜிட்டல் கைதுக்கு இரையானவர்களில் அனைத்து நிலைகள், அனைத்து வயதினைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.  அச்சம் காரணமாக மக்கள், தங்களுடைய கடும் உழைப்பின் மூலம் சம்பாதித்த இலட்சக்கணக்கான பணத்தை இழந்திருக்கின்றார்கள்.  இவை போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அச்சத்தைத் தவிர்க்க வேண்டும்.  எந்த ஒரு புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு வாயிலாக இவை போன்று புலனாய்வினை என்றுமே செய்ய மாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.  நான் உங்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பின் மூன்று படிநிலைகளைப் பற்றிக் கூறுகிறேன்.  நிதானியுங்கள்  சிந்தியுங்கள்  செயல்படுங்கள்.  அழைப்பு வந்தால், “நிதானியுங்கள்” – அச்சப்படாதீர்கள், அமைதியாக இருங்கள், அவசரப்பட்டு எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாதீர்கள், முடிந்தால் ஸ்க்ரீன்ஷாட் அதாவது செல்பேசி திரையின் புகைப்படத்தை எடுங்கள், உரையாடலைக் கண்டிப்பாக ஒலிப்பதிவு செய்யுங்கள்.  இதன் பிறகு வருவது அடுத்த கட்டம்.  முதல் கட்டம் நிதானியுங்கள், அடுத்த கட்டம், ”சிந்தியுங்கள்”.  எந்த ஒரு அரசு அமைப்பும் தொலைபேசி-அலைபேசி வாயிலாக இப்படிப்பட்ட மிரட்டலை விடுக்காது, காணொளி அழைப்பு வாயிலாகவும் புலனாய்வு செய்யாது, அதே போல பணம் தர வேண்டும் என்று கேட்காது, பயம் ஏற்பட்டால், ஏதோ கோளாறு இருக்கிறது என்று தெளியுங்கள்.  முதல் கட்டம், இரண்டாவது கட்டத்திற்குப் பிறகு வருவது மூன்றாவது கட்டம்.  முதல் கட்டத்தில் நான் நிதானியுங்கள் என்றும், இரண்டாம் கட்டத்தில் சிந்தியுங்கள் என்றும் கூறியிருந்தேன், இப்போது மூன்றாவது கட்டத்தில் கூறுகிறேன் – “நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்”.  தேசிய சைபர் உதவி எண்ணான 1930 என்ற எண்ணோடு தொடர்பு கொண்டு, cybercrime.gov.in என்ற இணையத்தளத்திற்குத் தெரிவியுங்கள், குடும்பத்தார் மற்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவியுங்கள், ஆதாரத்தைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.  நிதானியுங்கள், பிறகு சிந்தியுங்கள், அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள், இந்த மூன்று படிநிலைகளும் உங்களுடைய டிஜிட்டல் பாதுகாப்புக் காவலர்களாக ஆகும். 

            நண்பர்களே, நான் மீண்டும் கூறுகிறேன், டிஜிட்டல் கைது போன்ற அமைப்பு சட்டத்திலே கிடையாது, இது பச்சையான மோசடி, புரட்டு, போக்கிரிகளின் கும்பல் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது, இவர்களைப் பிடிக்க அனைத்து புலனாய்வு அமைப்புகளும், மாநில அரசுகளோடு இணைந்து செயல்பட்டு வருகின்றன.  இந்த அமைப்புக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்காக தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்பட்டிருக்கிறது.  அமைப்புகளின் தரப்பிலிருந்து இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான காணொளி அழைப்பு எண்கள் அரசு அமைப்புக்களின் தரப்பிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கின்றன.  இலட்சக்கணக்கான சிம் கார்டுகள், செல்பேசிகள் மற்றும் வங்கிக் கணக்குகளும் கூட முடக்கப்பட்டிருக்கின்றன.  அரசாங்க அமைப்புகள் தங்களுடைய பணியைப் புரிந்து வருகின்றன என்றாலும், டிஜிட்டல் கைது என்ற பெயரில் நடந்தேறி வரும் மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியமானது.  அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டும், அனைத்துக் குடிமக்களும் விழிப்புணர்வோடு செயலாற்ற வேண்டும்.   யாரெல்லாம் இப்படிப்பட்ட சைபர் மோசடிக்கு இரையாகி இருக்கின்றார்களோ, அவர்கள் அதிக அளவு மக்களுக்கு இதைப் பற்றித் தெரிவிக்க வேண்டும்.  விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்கள் #SafeDigitalIndia என்பதைப் பயன்படுத்தலாம்.  இந்த சைபர் மோசடிக்கு எதிராக விழிப்புணர்வு முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகள்-கல்லூரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன், இதில் அதிக அளவில் மாணவர்களை இணைத்துக் கொள்ளுங்கள்.  சமுதாயத்தில் அனைவரின் முயற்சிகள் வாயிலாக மட்டுமே நாம் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும்.

            எனதருமை நாட்டுமக்களே, நமது பல பள்ளிக் குழந்தைகள் calligraphy அதாவது எழுத்துக்கலையில் கணிசமான நாட்டமுடையவர்களாக இருக்கிறார்கள்.  இதன் வாயிலாக நமது எழுத்து தெளிவாக, அழகாக, ஈர்க்கும் வகையில் இருக்கிறது.  இன்று ஜம்மு-கஷ்மீரத்தில் இதன் பயன்பாடு உள்ளூர் கலாச்சாரத்தை அனைவரும் விரும்பும் வகையில் ஆக்கப் பயன்படுகிறது.  அனந்தநாகின் ஃபிர்தௌசா பஷீர் அவர்கள் எழுத்துக்கலையில் வல்லவர்.  இதன் வாயிலாக உள்ளூர் கலாச்சாரத்தின் பல பரிமாணங்களை இவர் வெளிப்படுத்தி வருகிறார்.  ஃபிர்தௌசா அவர்களின் எழுத்துக்கலையானது, உள்ளூர் மக்களை, குறிப்பாக இளைஞர்களைத் தன்பால் ஈர்த்து வருகின்றது.  இப்படிப்பட்ட ஒரு முயற்சியில், உதம்பூரின் கௌரிநாத் அவர்களும் ஈடுபட்டு வருகிறார்.  ஒரு நூற்றாண்டுக்கும் பழைமையான சாரங்கி வாத்தியம் வாயிலாக டோக்ரா கலாச்சாரம் மற்றும் மரபின் பல்வேறு வடிவங்களை அழகுபடுத்துவதில் இவர் ஈடுபட்டு வருகிறார்.  சாரங்கியின் சுரங்களோடு சேர்த்து, இவர் தங்களுடைய கலாச்சாரத்தோடு இணைந்த பண்டைய கதைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவங்களையும் கூட, சுவாரசியமான முறையில் வெளிப்படுத்துகிறார்.  தேசத்தின் பல்வேறு பாகங்களிலும், கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருக்கும் இப்படிப்பட்ட பல அசாதாரணமான மனிதர்களை நீங்கள் சந்திக்க நேரலாம்.   டீ. வைகுண்டம் அவர்கள் சுமார் 50 ஆண்டுகளாக செரியால் நாட்டுப்புறக் கலையை பிரபலமானதாக ஆக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.  தெலங்காணாவோடு இணைந்த இந்தக் கலையை முன்னெடுத்துச் செல்ல விழையும் இவருடைய முயற்சி அற்புதமானது.  செரியால் ஓவியங்களை உருவாக்கும் செயல்முறை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது.  இது ஒரு காகிதச் சுருள் வடிவத்தில் கதைகளை முன்வைக்கிறது.  இதிலே நமது வரலாறு மற்றும் புராணங்கள் முழுமையாகப் பளிச்சிடுகின்றன.  சத்திஸ்கட்டின் நாராயண்பூரைச் சேர்ந்த புட்லுராம் மாத்ரா அவர்கள், அபூஜ்மாடியா பழங்குடியின மக்களின் கலையைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருக்கிறார்.  கடந்த 40 ஆண்டுகளாக இவர் தனது இந்த பெருநோக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்.  இவருடைய இந்தக் கலை, பெண் குழந்தைகளைக் காப்போம்அவர்களுக்குக் கல்வியளிப்போம் போன்ற இயக்கத்தோடு மக்களை இணைப்பதில் பேருதவியாக இருந்திருக்கிறது.   

            நண்பர்களே, இப்போது நாம் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே கஷ்மீரத்தின் பள்ளத்தாக்குகள் தொடங்கி, சத்தீஸ்கட்டின் காடுகள் வரை, நமது கலை மற்றும் கலாச்சாரம் புதியபுதிய வண்ணங்களை இரைத்து வருகிறது என்றாலும், இதோடு இந்த விஷயம் முடிந்து போகவில்லை.  நமது இந்தக் கலைகளின் நறுமணம் தொலைவான பிரதேசங்கள் வரையும் கூட பரவி வருகின்றது.  உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பாரதநாட்டுக் கலை மற்றும் கலாச்சாரத்தில் சொக்கி வருகிறார்கள்.  உதம்பூரில் எதிரொலிக்கும் சாரங்கி பற்றி நான் பேசிய வேளையில், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவாக, ரஷியாவின் நகரான யாகூத்ஸ்கிலும் கூட பாரதநாட்டுக் கலையின் இனிமையான இசை எதிரொலிப்பது என் நினைவுக்கு வருகிறது.  கற்பனை செய்து பாருங்கள், குளிர் நிறைந்த ஒன்றிரண்டு நாட்கள், பூஜ்யத்திற்கு கீழே 65 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை, நாலாபுறங்களிலும் பனிப்படலம் ஏதோ வெண்போர்வையை விரித்தது போல இருந்த வேளையில், அங்கே ஒரு அரங்கிலே, பார்வையாளர்கள் மகுடிக்கு முன்பு நாகம் போலே, காளிதாசனின் அபிக்யான சாகுந்தலத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்தார்கள்.  உலகின் மிகவும் குளிர்நிறைந்த நகரான யாகூத்ஸ்கிலே, பாரத இலக்கியத்தின் தண்மையை உங்களால் எண்ணிப் பார்க்க முடிகிறதா?  இது கற்பனையல்ல சத்தியம்.  நம்மனைவருக்குள்ளும் பெருமிதத்தையும், ஆனந்தத்தையும் நிரப்பக்கூடிய சத்தியம்!!

            நண்பர்களே, சில வாரங்கள் முன்பாக நான் லாவோஸ் நாட்டிற்குச் சென்றிருந்தேன்.  அது நவராத்திரி காலம், அங்கே சில அற்புதமான காட்சிகளைக் கண்டேன்.  அந்தப் பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள் ஃபலக் ஃபலம், இதை அரங்கேற்றியிருந்தார்கள், இது தான் லாவோஸின் இராமாயணம்.  நம்முடைய மனங்களிலே இராமாயணத்தின்பால் இருக்கும் அதே பக்தி, அவர்களுடைய குரல்களிலே அதே அர்ப்பணிப்பு அகியவற்றை நான் அவர்களுடைய கண்களில் கண்டேன்.  இதைப் போலவே, குவைத்தில் அப்துல்லா அல் பாரூன் அவர்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபு மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.  இந்தப் பணி வெறும் மொழியாக்கமல்ல, மாறாக இரு மகத்தான கலாச்சாரங்களுக்கு இடையேயான பாலம்.  அவருடைய இந்த முயற்சி, அரபுலகில் பாரதநாட்டு இலக்கியத்தின்பால்  புதிய புரிதலை மேம்படச் செய்து வருகிறது.  பெரூ நாட்டிலிருந்து மேலும் ஒரு கருத்தூக்கமேற்படுத்தும் எடுத்துக்காட்டு – எர்லிண்டா கார்சியா அவர்கள் அங்கே இருக்கும் இளைஞர்களுக்கு பரதநாட்டியக்கலையைக் கற்பித்து வருகிறார், மாரியா வால்தேஸ் அவர்கள் ஒடிசீ நாட்டியத்தைக் கற்பித்து வருகிறார்.  இந்தக் கலைகளால் கவரப்பட்டு, தென்னமெரிக்காவின் பல நாடுகளில் பாரதநாட்டுப் பாரம்பரிய நடனங்கள் அதிக நறுமணம் பரப்பி வருகிறது. 

            நண்பர்களே, அயல்நாட்டு மண்ணிலே பாரதத்தின் இந்த எடுத்துக்காட்டுகள், பாரத நாட்டுக் கலாச்சாரத்தின் சக்தி எத்தனை அற்புதமானது என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.  இவை தொடர்ந்து உலகைத் தம்பால் கவர்ந்து வருகின்றன.

எங்கெல்லாம் கலை உள்ளதோஅங்கெல்லாம் பாரதம் உண்டு,

எங்கெல்லாம் கலாச்சாரம் உள்ளதோஅங்கெல்லாம் பாரதம் உண்டு.

இன்று உலகனைத்தும் பாரதம் பற்றித் தெரிந்து கொள்ள விழைகிறது, பாரதநாட்டவரைப் பற்றித் தெரிந்து கொள்ள அவாவுகிறது.  ஆகையால் உங்கள் அருகிலே இப்படிப்பட்ட கலாச்சாரமுன்னெடுப்பு குறித்து #CulturalBridgesஇலே தகவல் தெரிவியுங்கள்.  மனதின் குரலில் நாம் இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் குறித்து மேலும் உரையாடுவோம்.

            என் இதயம்நிறை நாட்டுமக்களே, தேசத்தின் பல பாகங்களில் குளிர்காலம் தொடங்கிவிட்டது, ஆனால் உடலுறுதி குறித்தப் பேரார்வம், ஃபிட் இண்டியாவின் உணர்வு, இதன் மீது எந்தப் பருவநிலையும் தாக்கமேற்படுத்தாது.  உடலுறுதி மீது உறுதி கொண்ட யாருக்கும், அது குளிர்காலமாகட்டும், மழைக்காலமாகட்டும், எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.  பாரதத்திலே இப்போது மக்கள் உடலுறுதி தொடர்பாக மிகவும் விழிப்புணர்வு உடையவர்களாக ஆகி வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  உங்கள் அருகிலே இருக்கும் பூங்காக்களில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை நீங்களே கவனித்திருக்கலாம்.  பூங்காக்களில் நடைபயிலும் மூத்தோர், இளைஞர்கள், மற்றும் யோகக்கலையில் ஈடுபட்டு வரும் குடும்பங்களைப் பார்த்து, எனக்கு நன்றாக இருக்கிறது.  யோகக்கலை தினம் தொடர்பாக சில நாட்கள் முன்பாக நான் ஸ்ரீநகருக்குச் சென்றிருந்தது எனக்கு நினைவிருக்கிறது.  அங்கே மாரத்தான் போட்டி நடந்தது, அதிலேயும் கூட இந்த உடலுறுதி மீதான ஆர்வத்தை என்னால் காண முடிந்தது.  ஃபிட் இண்டியா, அதாவது உடலுறுதியான இந்தியா என்ற இந்த உணர்வு, இப்போது ஒரு மக்கள் இயக்கமாக ஆகி வருகிறது.

            நண்பர்களே, நமது பள்ளிகள், குழந்தைகள் எல்லாம் உடலுறுதி மீது இப்போது அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார்கள் என்பதைக் காணும் போது நான் உவப்பெய்துகிறேன்.  ஃபிட் இண்டியா ஸ்கூல் அவர்ஸ் என்பதும் கூட மிக வித்தியாசமான முன்னெடுப்பு.  பள்ளிகள் தங்களுடைய முதல் வகுப்புக் காலத்தைப் பயன்படுத்தி, பல்வேறு உடலுறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.  எத்தனையோ பள்ளிகளில், ஏதோ ஒரு நாளன்று பிள்ளைகளுக்கு யோகக்கலையைப் பயிற்றுவிக்கிறார்கள், சில நாட்களில் ஏரோபிக்ஸ் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது, ஒரு நாள் விளையாட்டுத் திறன்கள் தொடர்பான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஏதோ ஒரு நாளன்று கபடி-கோகோ போன்ற பாரம்பரியமான விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன, இவற்றின் தாக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது.  வருகை சிறப்பாக இருக்கிறது, குழந்தைகளின் மனச்செறிவும் அதிகரிக்கிறது, அவர்களும் குதூகலம் அடைகிறார்கள்.

            நண்பர்களே, இந்த உடல்நலத்தின் சக்தியை என்னால் அனைத்து இடங்களிலும் காண முடிகிறது.   மனதின் குரலின் பல நேயர்களும் கூட என்னோடு தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  சிலர் மிகவும் சுவாரசியமான பிரயோகங்களையும் அனுப்பி இருக்கிறார்கள்.  எடுத்துக்காட்டாக, குடும்ப உடலுறுதி மணிநேரம் பற்றி, அதாவது ஒரு குடும்பம், ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு மணிநேரத்தை குடும்பத்தின் உடலுறுதிக்காக ஒதுக்குகிறது.  மேலும் ஒரு எடுத்துக்காட்டு, உள்நாட்டு விளையாட்டுக்களின் மறுமலர்ச்சி தொடர்பானது, அதாவது சில குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரியமான விளையாட்டுக்களைக் கற்பித்து வருகிறார்கள், அவர்களோடு விளையாடியும் வருகிறார்கள்.  நீங்களும் கூட உங்களுடைய உடலுறுதி வாடிக்கை தொடர்பான உங்களுடைய அனுபவங்களை #fitIndia  என்ற பெயரிலான சமூக ஊடகத்தில் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான தகவலை அளிக்க விரும்புகிறேன்.  இந்த முறை அக்டோபர் 31ஆம் தேதியன்று சர்தார் படேல் அவர்களின் பிறந்தநாளன்று, தீபாவளித் திருநாளும் வருகிறது.  நாம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதியான தேச ஒற்றுமை தினத்தன்று, ஒற்றுமை ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்வது வழக்கம்.  தீபாவளி காரணமாக இந்த முறை, அக்டோபர் 29ஆம் தேதி அதாவது செவ்வாய்க்கிழமையன்று இந்த ஒற்றுமை ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  அதிக அளவில் மக்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.  தேசத்தின் ஒருமைப்பாட்டின் மந்திரத்தோடு கூடவே உடலுறுதி மந்திரத்தையும் அனைத்துத் திசைகளிலும் பரப்புங்கள்.

            எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை இவ்வளவே.  நீங்கள் உங்கள் பின்னூட்டங்களைக் கண்டிப்பாக அனுப்பி வாருங்கள்.  இது பண்டிகைக்காலம்.  மனதின் குரல் நேயர்களுக்கு தன்தேரஸ், தீபாவளி, சட்பூஜை, குருநானக் பிறந்தநாள் மற்றும் அனைத்துத் திருநாட்களுக்குமான என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.  நீங்கள் அனைவரும் முழு உற்சாகத்தோடு பண்டிகைகளைக் கொண்டாடுங்கள்.  உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை என்றும் நினைவில் கொள்ளுங்கள், பண்டிகைக் காலத்தில் உங்களுடைய இல்லங்களிலே உள்ளூர் கடைக்காரர்களிடம் பொருட்களைக் கண்டிப்பாக வாங்க முயற்சி செய்யுங்கள்.  மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் வரவிருக்கும் திருநாட்களை முன்னிட்டு பலப்பல நல்வாழ்த்துக்கள்.   நன்றி.

*****

பத்திரிகை தகவல் அலுவலகம்
இந்திய அரசு
சென்னை

மனதின் குரல் நிகழ்ச்சியின் 115-வது அத்தியாயத்தில், 27.10.2024 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

புதுதில்லி,  அக்டோபர் 27, 2024

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi