எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கடந்த வாரத்தில் நாம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறோம், இது நம்முள்ளே பெருமிதத்தை நிரப்பியிருக்கின்றது. பாரதம் கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர், அதாவது, 30 இலட்சம் கோடி ரூபாய் என்ற ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது. முதன்முறையாகக் கேள்விப்படும் போது இது ஏதோ பொருளாதாரம் தொடர்பான விஷயமாகப் பட்டாலும், பொருளாதாரத்தையும் தாண்டி, பாரதத்தின் வல்லமை, பாரதத்தின் ஆற்றல் ஆகியவற்றோடு தொடர்புடைய விஷயம் இது. ஒரு காலத்தில் பாரதத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை பற்றிய புள்ளிவிவரம் ஏதோ 100 பில்லியன், சில சமயம் 150 பில்லியன், சில வேளை 200 பில்லியன் டாலர்கள் என்பது வரை இருந்திருந்தது. ஆனால் இன்றோ, பாரதம் 400 பில்லியன் டாலர்களை எட்டிவிட்டது. இதன் பொருள் என்னவென்றால், பாரதத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தேவை உலகெங்கிலும் அதிகரித்திருக்கிறது என்பது ஒன்று; மேலும் இரண்டாவதாக பாரதத்தின் விநியோகச் சங்கிலி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பலமடைந்து வருகிறது என்ற மிகப்பெரிய செய்தியையும் இது நமக்களிக்கிறது. நாம் கனவு காண்பதற்கேற்ப மகத்தான உறுதிப்பாடுகளை நாம் ஏற்கும் போது, தேசம் விசாலமான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. மேற்கொள்ளப்பட்ட உறுதிப்பாடுகளுக்காக இரவுபகலாக நேர்மையாக முயற்சிகள் செய்யப்படும் போது, அந்த உறுதிப்பாடுகள் மெய்ப்படவும் செய்கின்றன, எந்த ஒரு நபரின் வாழ்க்கையிலும் கூட இவ்வாறே தான் நடக்கிறது என்பதை நீங்களும் கவனித்திருக்கலாம். ஒருவருடைய மனவுறுதிப்பாடு, அவருடைய முயல்வு, அவருடைய கனவுகளை விடவும் பெரியதாக இருக்கும் போது, வெற்றித்திருமகள் தானே அவரை நாடித் தேடி வருகிறாள்.
நண்பர்களே, தேசத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் புதியபுதிய பொருட்கள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அஸாமின் ஹைலாகாண்டியின் தோல் பொருட்களாகட்டும், உஸ்மானாபாதின் கைத்தறிப் பொருட்களாகட்டும், பீஜாபூரின் பழங்கள்-காய்கறிகளாகட்டும், சந்தௌலியின் கறுப்பு அரிசியாகட்டும், அனைத்து வகைப் பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரித்து வருகின்றது. நம்முடைய லத்தாக்கின் உலகப் பிரசித்தி பெற்ற ஆப்ரிகாட் பழங்கள் துபாயிலும் கிடைக்கின்றன, தமிழ்நாடு அனுப்பி வைத்த வாழைப்பழங்கள் அரேபியாவில் கிடைக்கிறது. இப்போது பெரிய விஷயம் என்னவென்றால், புதியபுதிய பொருட்கள், புதியபுதிய நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஹிமாச்சல், உத்தராகண்டில் விளையும் சிறுதானிய அனுப்பீடுகள் டென்மார்க் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டன. ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் விளையும் பங்கனபல்லி, சுவர்ணரேகா மாம்பழ ரகங்கள், தென் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டன. திரிபுராவில் விளையும் புத்தம்புதுப் பலாப்பழம், விமானம் வழியாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முதன்முறையாக நாகாலாந்தின் கிங் பெப்பர் என்ற மிளகு ரகம் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. இதே போன்று பாலியா கோதுமையின் முதல் அனுப்பீடு, குஜராத்திலிருந்து கென்யாவுக்கும், இலங்கைக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது, இப்போது நீங்கள் பிற நாடுகளுக்குச் சென்றால், அங்கே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் முன்பை விட அதிகமாகக் காணக் கிடைக்கும்.
நண்பர்களே, இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது, எத்தனை நீளமாக இந்தப் பட்டியல் இருக்கிறதோ, அத்தனை பெரியதாக நமது சக்தி உள்ளது இந்தியாவில் தயாரிப்போம் என்பதன் சக்தி, அத்தனை விசாலமானதாக இருக்கிறது பாரதத்தின் திறமைகள். பாரதத்தின் வல்லமைக்கான ஆதாரம் – நமது விவசாயிகள், நமது கைவினைஞர்கள், நமது நெசவாளிகள், நமது பொறியாளர்கள், நமது சிறுதொழில் புரிவோர், நமது சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை, மேலும் பல தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நபர்கள், இவர்கள் அனைவரும் தான் மெய்யான ஆற்றல். இவர்களின் உழைப்பாலேயே 400 பில்லியன் டாலர் ஏற்றுமதி என்ற இலக்கை எட்ட முடிந்திருக்கிறது, பாரத நாட்டவரின் இந்த வல்லமை, இப்போது உலகின் மூலை முடுக்கெங்கும் புதிய சந்தைகளைச் சென்றடைந்திருக்கிறது என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. பாரதநாட்டவர் ஒவ்வொருவரும் உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்பவராக இருக்கும் போது, உள்ளூர்ப் பொருட்கள் உலகமயமானவையாக ஆவதற்கு அதிக காலம் பிடிக்காது. வாருங்கள், உள்ளூர் பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வோம், நமது உற்பத்திகளின் செல்வாக்கை மேலும் அதிகரிப்போம்.
நண்பர்களே, குடிசைத் தொழில் என்ற அளவிலும் கூட நமது சிறுதொழில்முனைவோரின் வெற்றி நமக்குள்ளே பெருமிதத்தை ஏற்படுத்துவதாக இருப்பதை மனதின் குரல் நேயர்கள் உண்ர்வார்கள். இன்று நமது சிறு தொழில்முனைவோர், கொள்முதலுக்கான அரசின் தளமான Government e-Market place அதாவது GeM வாயிலாக, பெரிய பங்காண்மை ஆற்றி வருகின்றார்கள். தொழில்நுட்பம் வாயிலாக பெரிய அளவிலான ஒளிவுமறைவற்ற அமைப்பு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஓராண்டில் ஜெம் வலைவாசல் வாயிலாக, அரசு ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்களை வாங்கியிருக்கிறது. தேசத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் கிட்டத்தட்ட ஒண்ணேகால் இலட்சம் சிறு தொழில்முனைவோர், சிறிய வியாபாரிகள் ஆகியோர் தங்களுடைய பொருட்களை அரசுக்கு நேரடியாக விற்பனை செய்திருக்கின்றார்கள். ஒரு காலத்தில், பெரிய நிறுவனங்கள் மட்டுமே அரசுக்குப் பொருட்களை விற்க முடிந்தது. ஆனால் இப்போது தேசம் மாறி வருகிறது, பழைய வழிமுறைகளும் மாறி வருகின்றன. இப்போது சிறிய கடைக்காரர்களும் கூட ஜெம் வலைவாசலில் அரசுக்குத் தங்களுடைய பொருட்களை விற்க முடியும், இது தானே புதிய பாரதம்!! இவர்கள் பெரிய கனவுகளைக் காண்பதோடு, யாருமே இதுவரை எட்டாத, அந்த இலக்கை எட்டும் துணிவையும் வெளிப்படுத்துகிறார்கள். இந்தத் துணிவின் துணை கொண்டு பாரதநாட்டவர் நாமனைவருமாக இணைந்து, தற்சார்பு பாரதத்தின் கனவைக் கண்டிப்பாக மெய்யாக்குவோம்.
எனதருமை நாட்டுமக்களே, தற்போது நடைபெற்ற பத்ம விருதுகள் அளிக்கப்படும் நிகழ்ச்சியில் நீங்கள் பாபா சிவானந்த் அவர்களைக் கண்டிப்பாக கவனித்திருப்பீர்கள். 126 வயது நிரம்பிய பெரியவரின் சுறுசுறுப்பைப் பார்த்து, என்னைப் போலவே அனைவரும் ஆச்சரியத்திலே ஆழ்ந்து போயிருப்பார்கள். கண்ணிமைக்கும் நேரத்திற்கு உள்ளாக அவர் நந்தி முத்திரையில் வணக்கம் செய்யத் தொடங்கியதை கவனித்தேன். நானுமே கூட குனிந்து மீண்டும் மீண்டும் பாபா சிவானந்தருக்கு வணக்கம் தெரிவித்தேன். 126 வயது, பாபா சிவானந்தரின் உடலுறுதி, என இந்த இரண்டும் இன்று தேசத்தின் விவாதப் பொருளாகி இருக்கின்றன. சமூக வலைத்தளத்தில் பலரின் கருத்துக்களை நான் கவனித்தேன், அதாவது பாபா சிவானந்தர், தனது வயதை விட 4 மடங்கு குறைந்த வயதானவரை விடவும் அதிக உடலுறுதியோடு இருக்கிறார் என்பது போன்று. மெய்யாகவே, பாபா சிவானந்தரின் வாழ்க்கை நம்மனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கவல்லது. அவருடைய நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். அவரிடத்திலே யோகக்கலை தொடர்பான ஒரு பேரார்வம் இருக்கிறது, மிக ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை அவர் வாழ்ந்து வருகிறார்.
ஜீவேம சரத: சதம்.
जीवेम शरदः शतम् |
நமது கலாச்சாரத்தில் அனைவருக்குமே 100 ஆண்டுக்காலம் வாழ நல்வாழ்த்துக்கள் அளிக்கப்படுகிறது. நாம் ஏப்ரல் 7 அன்று உலக ஆரோக்கிய தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். இன்று உலகெங்கிலும் ஆரோக்கியம் தொடர்பாக பாரதநாட்டு எண்ணப்பாடு, அது யோகக்கலையாகட்டும், ஆயுர்வேதமாகட்டும், இவை தொடர்பாக ஆர்வம் அதிகரித்து வருகிறது. இப்போது கூட நீங்கள் கவனித்திருக்கலாம், கடந்த வாரத்தில் கத்தார் நாட்டில் ஒரு யோகக்கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதிலே 114 நாடுகளின் குடிமக்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள், இது ஒரு புதிய உலக சாதனையாக ஆனது. இதைப் போலவே, ஆயுஷ் தயாரிப்புத் துறையின் சந்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆயுர்வேதத்தோடு தொடர்புடைய மருந்துகளுக்கான சந்தை 22,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றோ, ஆயுஷ் தயாரிப்புத் துறை, ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டி வருகிறது. அதாவது இந்தத் துறையின் சாத்தியக்கூறுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஸ்டார்ட் அப் உலகிலும் கூட ஆயுஷ், ஈர்ப்பை ஏற்படுத்தும் விஷயமாக ஆகி வருகிறது.
நண்பர்களே, உடல்நலத் துறையின் பிற ஸ்டார்ட் அப்புகள் பற்றி நான் முன்பே கூட பலமுறை பேசியிருக்கிறேன்; ஆனால் இந்த முறை ஆயுஷ் ஸ்டார்ட் அப்புகள் பற்றி உங்களோடு சிறப்பான வகையில் உரையாட இருக்கிறேன். ஒரு ஸ்டார்ட் அப்பின் பெயர் கபிவா. இதன் பெயரில் தான் இதன் பொருள் மறைந்திருக்கிறது. இதில் இருக்கும் க என்பதன் பொருள் கபம், பி என்பதன் பொருள் பித்தம், வா என்பதன் பொருள் வாதம். இந்த ஸ்டார்ட் அப், நமது பாரம்பரியங்களின்படி ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஆதாரமாகக் கொண்டது. மேலும் ஒரு ஸ்டார்ட் அப்பான நிரோக்-ஸ்ட்ரீட் உள்ளது, அதே போல ஆயுர்வேத உடல்பராமரிப்புச் சூழலமைப்பில் ஒரு வித்தியாசமான கோட்பாடு உள்ளது. இதன் தொழில்நுட்பத்தால் இயங்கும் தளம், உலகெங்கிலும் இருக்கும் ஆயுர்வேத மருத்துவர்களை நேரடியாக மக்களோடு இணைத்து வைக்கிறது. 50000த்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதோடு இணைந்திருக்கிறார்கள். இதைப் போன்றே, ஆத்ரேயா கண்டுப்பிடிப்புகள், ஒரு உடல்பராமரிப்புத் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் ஆகும்; இது முழுமையான நலன் என்ற துறையில் பணியாற்றி வருகிறது. இக்ஸோரியல் என்பது அஸ்வகந்தா பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்தி இருப்பதோடு, தலைசிறந்த தரம் வாய்ந்த தயாரிப்புச் செயல்முறைகளிலும் பெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறது. க்யூர்வேதா, மூலிகைகளின் நவீன ஆய்வு, பாரம்பரிய ஞானம் ஆகியவற்றின் சங்கமம் வாயிலாக முழுமையான நல்வாழ்விற்குத் தேவையான துணை உணவை ஏற்படுத்தி இருக்கிறது.
நண்பர்களே, நான் இப்போது சில பெயர்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். இந்தப் பட்டியல் மிக நீளமானது. இவை பாரதநாட்டின் இளம் தொழில்முனைவோர், பாரதத்தில் உருவாகி வரும் புதிய சாத்தியக்கூறுகள் ஆகியவற்றின் அடையாளம். உடல் பராமரிப்புத் துறையின் ஸ்டார்ட் அப்புகள், குறிப்பாக ஆயுஷ் ஸ்டார்ட் அப்புகளிடத்தில் நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விழைகிறேன். நீங்கள் நிகழ்நிலையில் ஏற்படுத்தும் வலைவாசலை, ஐக்கிய நாடுகள் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் கூட உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்பது தான் அது. உலகின் பல நாடுகளில் ஆங்கிலம் அதிகம் பேசப்படுவதுமில்லை, புரிந்து கொள்ளப்படுவதும் இல்லை. இப்படிப்பட்ட நாடுகளையும் கூட கவனத்தில் கொண்டு, உங்கள் தகவல்களின் பரப்புரையைச் செய்ய வேண்டும். பாரதத்தின் ஆயுஷ் ஸ்டார்ட் அப்புகள், மிகச் சிறப்பான தரமுள்ள பொருட்களோடு கூட, விரைவாக, உலகில் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நண்பர்களே, ஆரோக்கியத்தோடு நேரடித் தொடர்பு உடையது தூய்மை. மனதின் குரலில் நாம் எப்போதுமே தூய்மை ஆர்வலர்களின் முயற்சிகளைக் கண்டிப்பாக வெளிப்படுத்தி வந்திருக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு தூய்மை ஆர்வலர் சந்திரகிஷோர் பாடில் அவர்கள். இவர் மஹாராஷ்டிரத்தின் நாசிக்கில் வசித்து வருகிறார். சந்திரகிஷோர் அவர்களுடைய தூய்மை தொடர்பான உளவுறுதி மிகவும் ஆழமானது. இவர் கோதாவரி நதிக்கருகே நின்று கொண்டு, நதியிலே குப்பைக் கூளங்களை வீசி எறியாதிருக்கும் வகையில் மக்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார். யாராவது அப்படி வீசினால், உடனடியாக இவர் அவர்களைத் தடுக்கிறார். இந்தச் செயலில் கணிசமான நேரத்தை செலவிடுகிறார் சந்திரகிஷோர் அவர்கள். மாலை நேரத்திற்குள்ளாக, வழக்கமாக நதியிலே வீசியெறியப்பட்டிருக்கும் குப்பைக் கூளப் பொதி இவரிடத்தில் குவிந்து விடுகிறது. சந்திரகிஷோர் அவர்களின் இந்த முயல்வு, விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது, உத்வேகத்தையும் அளிக்கிறது. இதைப் போலவே மேலும் ஒரு தூய்மை ஆர்வலரான ஒடிஷாவின் புரியைச் சேர்ந்த ராஹுல் மஹாராணா. ராஹுல் ஞாயிற்றுக் கிழமை தோறும் காலை வேளையில் புரீயில் இருக்கும் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று, அங்கே இருக்கும் நெகிழிக் குப்பைகளை அகற்றுகிறார். இவர் இப்போது வரை ஆயிரக்கணக்கான கிலோ அளவுள்ள நெகிழிக் குப்பைகளையும் கூளங்களையும் அகற்றியிருக்கிறார். புரீயின் ராஹுலாகட்டும், நாசிக்கின் சந்திரகிஷோராகட்டும், இவர்கள் நம்மனைவருக்கும் மிகப்பெரிய கற்பித்தலை அளிக்கிறார்கள். குடிமக்கள் என்ற முறையில் நாம் நமது கடமைகளை ஆற்ற வேண்டும், அது தூய்மையாகட்டும், ஊட்டச்சத்தாகட்டும், அல்லது தடுப்பூசியாகட்டும், இந்த முயற்சிகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவிகரமாக இருக்கின்றன.
எனதருமை நாட்டுமக்களே, முப்பத்தடம் நாராயணன் அவர்களைப் பற்றிப் பேசலாம் வாருங்கள்!! இவர் ஒரு திட்டத்தைத் தொடங்கினார், இதன் பெயர் Pots for water of life, அதாவது வாழ்க்கை என்ற நீருக்கான பானைகள் என்பது இதன் பொருள். நீங்கள் இந்தத் திட்டம் பற்றித் தெரிந்து கொண்டால், எத்தனை அருமையான பெயர் இது என்று நினைப்பீர்கள்.
நண்பர்களே, முப்பத்தடம் நாராயணன் அவர்கள் கோடையில் பறவைகளும் விலங்குகளும் நீருக்காகத் தவிக்கக் கூடாது என்பதற்காக, மண் பாத்திரங்களை விநியோகம் செய்யும் இயக்கத்தை நடத்தி வருகிறார். கோடையில் பறவைகள்-விலங்குகளின் தாகத்தைப் பார்த்து இவரே கூட வேதனை அடைந்தார். ஏன் தானே மண்கலயங்களை விநியோகம் செய்யும் இயக்கத்தைத் தொடங்கக் கூடாது, இதனால் மற்றவர்கள் இதைப் பெற்றுக் கொண்டு இதில் நீர் நிரப்பும் பணியை மட்டுமே செய்யட்டுமே என்ற எண்ணம் இவருக்கு உண்டானது. தற்போது நாராயணன் அவர்கள் விநியோகம் செய்திருக்கும் மண்கலயங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சதைக் கடக்க இருக்கிறது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போவீர்கள். தன்னுடைய இயக்கத்தில் இவர் ஒரு இலட்சமாவது மண் பாத்திரத்தை சாபர்மதியில் உள்ள காந்தியடிகளின் ஆசிரமத்திற்கு தானமளிப்பார். இன்று கோடைக்காலம் அடியெடுத்து வைக்கவிருக்கும் வேளையில், நாராயணன் அவர்களின் இந்தப் பணி நம்மனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கிறது, நமது புள்ளின-விலங்கின நண்பர்களுக்கு நீருக்கான ஏற்பாடுகளை நாம் செய்வோம்.
நண்பர்களே, நாம் நமது உள உறுதிப்பாடுகளை மீண்டும் உரைப்போம் என்று நான் மனதின் குரல் நேயர்களிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க நம்மால் ஆன அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். இதைத் தவிர நீரின் மறுசுழற்சி குறித்தும் நாம் அதே அளவு முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். வீட்டில் பயன்படுத்தப்படும் நீர், பூத்தொட்டிகளுக்கும், தோட்டங்களுக்கும் மறுபயனாகும், இதை நாம் கண்டிப்பாக மீள்பயன்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும். சற்றே முயன்றாலும் கூட, நமது வீடுகளில் இதற்குத் தோதான அமைப்பு முறைகளை ஏற்படுத்திவிட முடியும். ரஹீம்தாஸ் அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சில காரணங்களுக்காகவே இப்படிக் கூறியிருக்கிறார், ரஹிமன் பானீ ராகியே, பின் பானி ஸப் சூன். அதாவது நீரைச் சேமியுங்கள், நீரில்லா உலகு பாழ் என்கிறான் ரஹீம் என்பதே இதன் பொருள். நீரைச் சேமிக்கும் பணியில் எனக்குக் குழந்தைகள் மீது மிகவும் நம்பிக்கை இருக்கிறது. தூய்மை விஷயத்தை எவ்வாறு நமது குழந்தைகள் ஒரு இயக்கமாக ஆக்கினார்களோ, அதே போலவே அவர்கள் Water Warriorsஆக, நீருக்கான போராளிகளாக மாறி, நீரைப் பராமரிப்பதில் துணைநிற்க வேண்டும்.
நண்பர்களே, நமது தேசத்தில் நீர்ப் பராமரிப்பு, நீராதாரங்களின் பாதுகாப்பு ஆகியன பல நூற்றாண்டுகளாகவே சமூகத்தின் இயல்பின் ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. நீர்ப்பராமரிப்பைத் தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகவே தேசத்தில் பலர் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அருண் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சென்னையைச் சேர்ந்த ஒரு நண்பர். அருண் அவர்கள் தனது பகுதியில் இருக்கும் குளங்களையும், ஏரிகளையும் தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் 150க்கும் மேற்பட்ட குளங்கள்-ஏரிகளில் மாசகற்றும் கடமையை மேற்கொண்டிருக்கிறார், இதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இதைப் போலவே, மஹாராஷ்டிரத்திலும் ரோஹன் காலே என்ற நண்பர் ஒருவர் இருக்கிறார். ரோஹன் ஒரு மனிதவள மேம்பாட்டு வல்லுநர். இவர் மஹாராஷ்டிரத்தின் ஆயிரக்கணக்கான படிக்கிணறுகளைப் பராமரிப்பது என்ற குறிக்கோளை மேற்கொண்டிருக்கிறார். இவற்றில் பல, பலநூறு ஆண்டுகள் பழைமையானவை, நமது மரபின் அங்கங்களாக விளங்குகின்றன. செகந்தராபாதின் பன்சீலால் பேட் கிணறு, இப்படிப்பட்ட ஒரு படிக்கிணறு தான். பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டதன் காரணமாக, அதில் மண்ணும் குப்பையும் நிரம்பி மூடியிருக்கிறது. ஆனால் இப்போது அங்கே இந்தப் படிக்கிணற்றினை மீளுயிர்ப்பிக்க மக்கள் பங்கெடுப்போடு ஒரு இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, நான் எந்த மாநிலத்திலிருந்து வந்திருக்கின்றேனோ, அங்கே நீருக்கான தட்டுப்பாடு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். குஜராத்திலே இந்த படிக்கிணறுகளை வாவ் என்று அழைப்போம். குஜராத் போன்ற மாநிலத்தில் வாவ் என்ற இந்த குளங்களின் மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. இந்தக் கிணறுகள் அல்லது குளங்களின் பராமரிப்புக்காக ஜல் மந்திர் யோஜனா என்ற நீர்க்கோயில் திட்டம் மிகப்பெரிய பங்களிப்பை நல்கியிருக்கிறது. குஜராத் நெடுக பல குளங்களின் மீளுயிர்ப்பு புரியப்பட்டிருக்கிறது. இதனால் இந்தப் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரிக்க பேருதவியாக இருந்திருக்கிறது. இதே போன்ற இயக்கத்தை நீங்களும் வட்டார அளவில் செயல்படுத்த முடியும். தடுப்பணைகள் கட்டுவதாகட்டும், மழைநீர் சேகரிப்பாகட்டும், இதிலே தனிநபரின் முயற்சி முக்கியமானது, அதே போல கூட்டுமுயற்சிகளும் அவசியமானவை. சுதந்திரத்தின் அமிர்த மஹோத்ஸவத்தைக் கொண்டாடும் விதத்தில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 75 அமிர்த ஏரிகளை உருவாக்க முடியும். சில பழைய ஏரிகளை மேம்படுத்தலாம், சில புதிய ஏரிகளை ஏற்படுத்தலாம். நீங்கள் இந்தத் திசையில் நல்ல முயற்சிகளைக் கண்டிப்பாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
என் மனம் நிறை நாட்டுமக்களே, மனதின் குரலின் அழகே என்னவென்றால், இதில் உங்களிடமிருந்து செய்திகள்-தகவல்கள் பல மொழிகளில், பல வழக்கு மொழிகளில் கிடைப்பது தான். பலர் மைகவ் தளத்தில் ஒலித் தகவல்களையும் அனுப்புகிறார்கள். பாரதத்தின் கலாச்சாரம், நமது மொழிகள், நமது வழக்கு மொழிகள், நமது வாழ்க்கைமுறை, உணவு முறைகள் என இவையனைத்து பன்முகத்தன்மையும் தான் நமது மிகப்பெரிய வலிமை. கிழக்கு முதல் மேற்கு வரை, வடக்கு முதல் தெற்கு வரை பாரதத்தின் இந்தப் பன்முகத்தன்மை தான் நம்மை ஒருங்கிணைத்து வைக்கிறது, ஒரே பாரதம் உன்னத பாரதமாக ஆக்கி வைக்கிறது. இதிலும் கூட நமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், புராணக் கதைகள், இரண்டிற்கும் மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. இந்த விஷயம் குறித்து நான் ஏன் உங்களிடம் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன் என நீங்கள் நினைக்கலாம். காரணம் மாதவ்பூர் மேளா. இந்த மாதவ்பூர் மேளா என்பது எங்கே தொடங்கியது, ஏன் தொடங்கியது, எப்படி இது பாரதத்தின் பன்முகத்தன்மையோடு இணைந்தது என்பதை மனதின் குரலின் நேயர்களான நீங்கள் அறிந்து கொண்டால் சுவாரசியமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
நண்பர்களே, மாதவ்பூர் மேளா என்பது குஜராத்தின் போர்பந்தரின் கடலோர கிராமமான மாதவ்பூரிலே நடக்கிறது. ஆனால் இந்தியாவின் கிழக்கு எல்லையோரத்தோடும் இதற்குத் தொடர்பு உள்ளது. இது எப்படி சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கலாம்? இதற்கான விடையை ஒரு புராணக்கதை நமக்கு அளிக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருமணம் வடகிழக்கின் அரசகுமாரி ருக்மணியோடு நடந்தது என்று கூறப்படுகிறது. இந்தத் திருமணம் போர்பந்தரின் மாதவ்பூரில் நடைபெற்றது, இந்தத் திருமணத்தின் அடையாளமாக இன்றும் கூட அங்கே மாதவ்பூரில் திருவிழா நடக்கிறது. கிழக்கும் மேற்கும் இணையும் அழகான, ஆழமான பந்தம், இதுவே நமது பாரம்பரியம். காலப்போக்கில் இப்போது மக்களின் முயற்சியால், மாதவ்பூரின் திருவிழாவோடு புதியபுதிய விஷயங்களும் இணைந்து விட்டன. எங்கள் பக்கங்களில் பெண்வீட்டாரை கராதீ என்பார்கள்; இந்தத் திருவிழாவில் இப்போது வடகிழக்கிலிருந்து ஏகப்பட்ட கராதீயினர் வரத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒரு வாரம் வரை நடைபெறும் இந்த மாதவ்பூர் திருவிழாவில் வடகிழக்கின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் வருகிறார்கள், கைவினைஞர்கள் வருகிறார்கள், இந்தத் திருவிழாவின் பெருமைக்கு மேலும் மெருகூட்டுகிறார்கள். ஒரு வாரம் வரை பாரதத்தின் கிழக்கு மற்றும் மேற்கின் கலாச்சாரங்களின் இந்த இணைவு, மாதவ்பூரின் இந்தத் திருவிழாவானது, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதற்கான மிக அழகான எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. நீங்களும் இந்தத் திருவிழா பற்றிப் படியுங்கள், தெரிந்து கொள்ளுங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, தேசத்தில் சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவம், இப்போது மக்களின் பங்கெடுப்புக்கான புதிய எடுத்துக்காட்டாக ஆகி வருகிறது. சில நாட்கள் முன்பாக மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று, தியாகிகள் தினத்தன்று தேசத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன. தேசம் தனது சுதந்திரத்திற்காக உயிர்துறந்த நாயகர்கள் நாயகிகளை, மிகுந்த சிரத்தையோடு நினைவு கூர்ந்தது. இதே நாளன்று கோல்காத்தாவின் விக்டோரியா நினைவகத்தின் பிப்லோபீ பாரத் காட்சியகத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. பாரதத்தின் வீரம்நிறைந்த புரட்சியாளர்களுக்கு நினைவாஞ்சலிகளை அளிக்க உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான காட்சியகம் இது. சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்களும் இதைக் காணச் சென்று வாருங்கள். நண்பர்களே, ஏப்ரல் மாதத்தில் நாம் இரண்டு மாபெரும் ஆளுமைகளின் பிறந்த நாட்களைக் கொண்டாட இருக்கிறோம். இவர்கள் இருவருமே பாரத சமுதாயம் மீது தங்களுடைய ஆழமான தாக்கத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த மாபெரும் ஆளுமைகள் – மஹாத்மா புலேவும், பாபாசாஹேப் அம்பேட்கரும் தான். மஹாத்மா புலேயின் பிறந்த நாள் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதியன்று வருகிறது, பாபா சாஹேபின் பிறந்த நாளை நாம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று கொண்டாடுவோம். இந்த இரு மாமனிதர்களும் வேற்றுமைகள், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு எதிராகப் பெரும் போரைத் தொடுத்தார்கள். மஹாத்மா புலே அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்காக பள்ளிகளைத் திறந்தார், பெண் சிசுக் கொலைக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்தார். நீர்த் தட்டுப்பாட்டிலிருந்து விடுதலை அடையவும் கூட மாபெரும் இயக்கத்தை அவர் நடத்தினார்.
நண்பர்களே, மஹாத்மா புலேயின் இந்தப் போராட்டத்தில் சாவித்ரீபாய் புலே அவர்களின் பங்களிப்பும் அதே அளவுக்கு மகத்துவம் நிறைந்தது. சாவித்ரிபாய் புலே பல சமூக அமைப்புக்களை நிறுவிப் பெரும்பங்காற்றினார். ஓர் ஆசிரியை, ஒரு சமூக சீர்திருத்தவாதி என்ற வகையில் அவர் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, அதன் தன்னம்பிக்கையையும் அதிகரித்தார். இருவருமாக இணைந்து சத்யஷோதக் சமாஜ் என்ற அமைப்பை நிறுவினார்கள். அனைத்து மக்களின் அதிகாரப்பங்களிப்பு விஷயத்தில் முயற்சி மேற்கொண்டார்கள். பாபாசாஹேப் அம்பேட்கரின் செயல்களிலும் கூட மஹாத்மா புலேயின் தாக்கத்தை நம்மால் தெளிவாகக் காண முடியும். எந்த ஒரு சமூகத்தின் வளர்ச்சியையும் அளவிட வேண்டுமென்றால், அந்த சமூகத்தில் பெண்களின் நிலையைப் பார்த்துத் தான் செய்ய வேண்டும் என்று அவர் கூறுவதுண்டு. மஹாத்மா புலே, சாவித்ரிபாய் புலே, பாபாசாஹேப் அம்பேட்கர் ஆகியோரின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெற்று, நான் அனைத்து தாய் தந்தையர், காப்பாளர்கள் ஆகியோரிடத்திலும் விடுக்கும் வேண்டுகோள்– கண்டிப்பாகப் பெண் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள் என்பது தான். பள்ளிகளில் பெண் பிள்ளைகளின் சேர்க்கையை அதிகரிக்க சில நாட்கள் முன்பாக பெண் குழந்தைகள் கல்விச் சேர்க்கை விழாவும் தொடங்கப்பட்டிருக்கிறது; எந்தப் பெண் குழந்தைகளின் படிப்பு ஏதோ காரணத்தால் விடுபட்டுப் போயிருக்கிறதோ, அப்படிப்பட்டவர்களை மீண்டும் பள்ளிகளுக்குக் கொண்டு வர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
நண்பர்களே, நம்மனைவருக்குமே பேற்றினை அளிக்கும் விஷயம் என்னவென்றால், பாபாசாஹேபோடு இணைந்த பஞ்ச தீர்த்தங்களுக்கான பணியில் ஈடுபடும் சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது என்பது தான். அவருடைய பிறந்த இடமான மஹூவாகட்டும், மும்பையில் அவருடைய பூதவுடல் எரியூட்டப்பட்ட இடமான சைத்திய பூமியாகட்டும், லண்டனில் அவருடைய வீடாகட்டும், நாகபுரியில் தீக்ஷா பூமியாகட்டும், தில்லியில் பாபாசாஹேபின் மஹாபரிநிர்வாண, அதாவது மறைந்த இடமாகட்டும், இந்த அனைத்து இடங்களுக்கும், அனைத்துத் தீர்த்தங்களுக்கும் செல்லக்கூடிய பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. மனதின் குரல் நேயர்களான உங்கள் அனைவரிடத்திலும், நான் விடுக்கும் வேண்டுகோள் – மஹாத்மா புலே, சாவித்ரிபாய் புலே, பாபாசாஹேப் அம்பேட்கரோடு தொடர்புடைய இடங்களைக் கண்டிப்பாகக் காணச் செல்லுங்கள். அது உங்களுக்கு ஒரு பெரிய கற்றல் அனுபவமாக இருக்கும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை நாம் பல விஷயங்கள் குறித்துக் கலந்தோம். அடுத்த மாதம், பல பண்டிகைகள்-புனித நாட்கள் வரவிருக்கின்றன. சில நாட்கள் கழித்து நவராத்திரி வரவிருக்கிறது. நவராத்திரியில் நாம் விரதங்கள்-உபவாசங்கள் இருப்பதோடு, சக்தியைப் பூஜிக்கிறோம், சக்திசாதனை புரிகிறோம், அதாவது நமது பாரம்பரியங்கள் நமக்குக் கேளிக்கையையும் கற்பிக்கின்றன, கட்டுப்பாட்டையும் அறிவுறுத்துகின்றன. கட்டுப்பாடும் தவமும் கூட நமக்குப் புனிதமானவை, ஆகையால் நவராத்திரி என்பது எப்போதுமே நம்மனைவருக்கும் மிகவும் விசேஷமானது. நவராத்திரிக்கு முந்தைய நாளன்று குடீ பட்வா திருநாளும் வருகிறது. ஏப்ரல் மாதம் தான் ஈஸ்டரும் வருகிறது, ரமலான் புனித காலமும் தொடங்கவிருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நமது பண்டிகைகளைக் கொண்டாடுவோம், பாரதத்தின் பன்முகத்தன்மையை மேலும் பலப்படுத்துவோம், அனைவரின் விருப்பமும் இது தான். இந்த முறை மனதின் குரலில் இவை மட்டுமே. அடுத்த மாதம் புதிய விஷயங்களோடு உங்களை சந்திக்கிறேன். பலப்பல நன்றிகள்.
The Prime Minister begins this month's #MannKiBaat by congratulating the people of India for a momentous feat. #MannKiBaat pic.twitter.com/insPTz5EGa
— PMO India (@PMOIndia) March 27, 2022
India is now thinking big and working to realise that vision! #MannKiBaat pic.twitter.com/j5JgULUeGL
— PMO India (@PMOIndia) March 27, 2022
Taking massive steps towards economic progress. #MannKiBaat pic.twitter.com/83hIrfCPfh
— PMO India (@PMOIndia) March 27, 2022
New products are reaching new destinations and this is a great sign! #MannKiBaat pic.twitter.com/PZRI20KF65
— PMO India (@PMOIndia) March 27, 2022
I applaud our farmers, youngsters, MSMEs says PM @narendramodi. #MannKiBaat pic.twitter.com/Pnw3kLcInY
— PMO India (@PMOIndia) March 27, 2022
Earlier it was believed only big people could sell products to the Government but the GeM Portal has changed this, illustrating the spirit of a New India! #MannKiBaat pic.twitter.com/GnNmYt6gnh
— PMO India (@PMOIndia) March 27, 2022
A distinguished Padma Awardee has won the hearts the several Indians... #MannKiBaat pic.twitter.com/qrl37HinDb
— PMO India (@PMOIndia) March 27, 2022
One of the encouraging trends in the recent years is the rise and success of several start-ups and enterprises in the AYUSH sector. #MannKiBaat pic.twitter.com/SP7cBAyRxZ
— PMO India (@PMOIndia) March 27, 2022
Inspiring efforts in Maharashtra and Odisha to further cleanliness... #MannKiBaat pic.twitter.com/seOr5wBT2v
— PMO India (@PMOIndia) March 27, 2022
Here is how a unique effort in Kerala can inspire the nation on the subject of water conservation and on caring for birds... #MannKiBaat pic.twitter.com/2F8hQLr3GT
— PMO India (@PMOIndia) March 27, 2022
Emphasising on water conservation, PM @narendramodi talks about efforts in Gujarat like Jal Mandirs. Also urges making Amrit Sarovars across India. #MannKiBaat pic.twitter.com/HRuqV9DEEI
— PMO India (@PMOIndia) March 27, 2022
Every #MannKiBaat is enriched by creative and diverse inputs... #MannKiBaat pic.twitter.com/4MuRLRDPDP
— PMO India (@PMOIndia) March 27, 2022
How many of know about a fair in the coastal part of Gujarat which is a manifestation of a spirit of Ek Bharat, Shreshtha Bharat! #MannKiBaat pic.twitter.com/cXGeuMi4ZA
— PMO India (@PMOIndia) March 27, 2022
In the month of April we remember Mahatma Phule and Dr. Babasaheb Ambedkar. #MannKiBaat pic.twitter.com/QB1qNrOJyV
— PMO India (@PMOIndia) March 27, 2022
The greatness of Mahatma Phule... #MannKiBaat pic.twitter.com/7KPYpGmfmb
— PMO India (@PMOIndia) March 27, 2022
During #MannKiBaat, PM @narendramodi paid tributes to the great Savitribai Phule. #MannKiBaat pic.twitter.com/C7EvHpTBUQ
— PMO India (@PMOIndia) March 27, 2022
I feel honoured to have gone to the Panch Teerth associated with Dr. Ambedkar. I would also urge you all to visit these inspiring places. #MannKiBaat pic.twitter.com/7YcEQzmmGv
— PMO India (@PMOIndia) March 27, 2022
Let us further girl child education and strengthen women empowerment. #MannKiBaat pic.twitter.com/eH8BPlmKM1
— PMO India (@PMOIndia) March 27, 2022