Mahatma Gandhi served communities in South Africa that were bearing the brunt of apartheid: PM during #MannKiBaat
Gandhiji shared an unbreakable bond with truth: PM Modi during #MannKiBaat
For Mahatma Gandhi, the individual and society, human beings and humanity was everything: PM #MannKiBaat
The way 130 crore countrymen ran a campaign for cleanliness with utmost enthusiasm, let us now join hands in curbing ‘single use plastic’: PM #MannKiBaat
Visit sites associated with nature and wildlife and animals: PM Modi during #MannKiBaat
The concern and care for the environment in India seems natural: PM Modi during #MannKiBaat
Swami Vivekananda shook the conscience of the human race of the entire world, imparted onto this world a glorious identity of India: PM #MannKiBaat

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய தேசம் இப்போது, ஒரு பக்கம் மழையளிக்கும் இன்பத்தை அனுபவித்து வருகிறது.  அதே வேளையில், மற்றொரு பக்கம் நாட்டின் அனைத்து இடங்களிலும் ஏதாவது ஒரு வகையில் உற்சவங்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் என தீபாவளி வரை அனைத்தும் நடக்கின்றன; எந்த ஒரு சூழ்நிலையிலும், சமூகத்தில் எப்போதும் ஒரு மந்தநிலை என்பதே இருக்க கூடாது என்ற வகையில், நம்முடைய முன்னோர்கள் பருவ சுழற்சி, பொருளாதார சுழற்சி மற்றும் சமூக வாழ்க்கை என்ற அமைப்பை மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள்.  கடந்த சில தினங்களில் நாம் பல கொண்டாட்டங்களைக் கொண்டாடினோம்.  நேற்று இந்தியாவெங்கும் ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தித் திருநாளைக் கொண்டாடினார்கள்.  எப்படிப்பட்ட ஆளுமை படைத்தவராக பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் இருந்திருக்க வேண்டும் என்று சற்றே கற்பனை செய்து பாருங்கள்…… பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட, ஒவ்வொரு கொண்டாட்டமும், ஒரு புதுப்பொலிவோடு, புதிய உத்வேகத்தோடு, புதிய சக்தியை தன்னுள்ளே நிரப்பிக் கொண்டு வருகிறது….. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான காலத்தில் வாழ்ந்தாலும், இன்றும் கூட பிரச்சனைகளுக்கான தீர்வு தேடவோ, எடுத்துக்காட்டு அளிக்கவோ, அனைவரும் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின் வாழ்க்கையிலிருந்தே இன்றைய சிக்கல்களுக்குத் தீர்வுகளைத் தேடுகிறார்கள்.  இத்தனை வல்லமையைத் தாண்டியும் கூட, அவர் சில வேளைகளில் ராஸலீலையில் ஈடுபடுவார், சில வேளைகளில் பசுக்களின் மத்தியில் திளைப்பார், சில சமயங்களில் கோபாலர்களின் இடையே இன்பமாக இருப்பார், சில போதுகளில் விளையாட்டுக்களில் மெய்மறந்து காணப்படுவார், சில வேளைகளில் குழலிசையில் லயித்திருப்பார் …… எத்தனையோ தனித்துவங்கள் நிறைந்த ஒரு ஆளுமை, ஈடு இணையற்ற திறமைகள்-வல்லமைகளின் கருவூலம்; என்றாலும் கூட, சமூக சக்திக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், மக்கள் சக்திக்குத் தன்னை அளித்தவர், உலகை இணைப்பவராக, புதிய சாதனைகள் படைத்த ஆளுமையான ஸ்ரீ க்ருஷ்ணனை நட்பின் இலக்கணமாகக் கூற வேண்டும் என்றால், குசேலன் சம்பவமே முதலில் மனதில் தோன்றும். ஏராளமான பராக்கிரமம் படைத்தவராக இருந்தாலும் கூட, போர்க்களத்தில் தேரோட்டியாக தன் பணியை அவர் ஏற்றுக் கொண்டார்.  சில வேளைகளில் மலையைத் தூக்கினார், சில சமயங்களில் உணவு உண்ட இலையை அகற்றும் பணியை மேற்கொண்டார், அதாவது அவரது ஒவ்வொரு செயலிலும் ஒரு புதுமையை நம்மால் உணர முடிகிறது.  ஆகையால் இன்று நான் உங்களுடன் உரையாடும் போது, என் சிந்தை இரு மோஹன்கள் பால் செல்கிறது.  ஒருவர் சுதர்ஸன சக்கரத்தைத் தாங்கும் மோஹன், மற்றவர் சர்க்காவைத் தாங்கும் மோஹன்.  சுதர்ஸன சக்கரத்தைத் தாங்கிய மோஹன் யமுனை நதிக்கரையைத் துறந்து, குஜராத்தின் சமுத்திரக் கரைகளுக்குச் சென்று, துவாரகை நகரத்திலே நிலை பெற்றார்; ஆனால் சமுத்திரக் கரைகளிலே தோன்றிய மோஹனோ, யமுனையின் கரைகளுக்கு வந்து, தில்லியில் தனது கடைசி மூச்சை விடுகிறார்.  சுதர்ஸன சக்கரத்தைத் தாங்கும் மோஹன், அந்தக்காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பாகவும் கூட, போரைத் தவிர்க்கவும், மோதலில்லாமல் வாழவும், தனது புத்திகூர்மையை, தனது கடமையை, தனது வல்லமையை, தனது எண்ணங்களை முழுமனதோடு பயன்படுத்தினார்; அதே வேளையில் சர்க்கா தாங்கிய மோஹனோ, நாடு சுதந்திரம் அடைவதற்காக வேண்டியும், மனித விழுமியங்களைப் பாதுகாக்கவும், ஆளுமையின் அடிப்படைக் கூறுகளுக்கு வல்லமை அளிக்கப்படவும், சுதந்திரப் போராட்டத்துக்கு ஒரு புதிய வடிவம் அளித்தார். ஒட்டுமொத்த உலகுக்கும் தனித்தன்மை வாய்ந்த ஒரு புதிய திருப்பமேற்படுத்தினார், இது இன்று வரையும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது.  சுயநலமில்லாத சேவையின் மகத்துவம் என்ன, ஞானத்தின் மகத்துவம் என்ன, வாழ்க்கையின் அனைத்து ஏற்ற இறக்கங்களுக்கு இடையே புன்னகையோடு முன்னேறிச் செல்வதன் மகத்துவம் என்ன, என இவையனைத்தையும் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள இயலும்; ஆகையால் தானே ஸ்ரீ க்ருஷ்ணரை ஜகத்குருவாக நாம் கண்டு போற்றுகிறோம் – க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.

இன்று நாம் திருவிழாக்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், பாரதம் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது; பாரதம் மட்டுமல்ல, உலகம் முழுமையுமே இதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறது.  எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நான் அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.  1869ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று, சமுத்திரக் கரையோரம் இருக்கும் போர்பந்தரில், இன்று நாம் கீர்த்தி மந்திர் என்று அழைக்கும் சின்னஞ்சிறிய இல்லத்தில், ஒரு தனிமனிதன் அல்ல, ஒரு யுகம் பிறப்பெடுத்தது.  இது தான் மனித வரலாறு முழுமைக்கும் ஒரு புதிய திருப்பத்தை அளித்தது, புதிய சாதனையைப் படைத்தது.  அண்ணல் காந்தியடிகளுடன் எப்போதுமே ஒரு விஷயம் இணைந்தே இருந்தது, ஒரு வகையில் அது அவரது வாழ்க்கையின் நிரந்தர அங்கமாகவே மிளிர்ந்தது, அது தான் – சேவை, சேவையுணர்வு, சேவையின் பொருட்டு கடமையுணர்வு.  அவருடைய வாழ்க்கை முழுவதையும் நாம் பார்த்தோமேயானால், தென்னாப்பிரிக்காவில் நிறவேறுபாட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கான சேவையில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  அன்றைய காலகட்டத்தில், அது சிறிய விஷயம் ஒன்றும் இல்லை ஐயா.   சம்பாரண் பகுதியில் ஒடுக்கப்பட்ட விவசாயிகளுக்காக அவர் சேவை புரிந்தார்.  உரிய ஊதியம் கிடைக்காத ஆலைத் தொழிலாளர்களுக்கான சேவையில் அவர் ஈடுபட்டார்.  ஏழைகள், நிராதரவானவர்கள், பலவீனமானவர்கள், பட்டினியில் வாடினோர் ஆகியோரின் சேவையில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார், இதைத் தன் பரம கடமையாக அவர் கருதினார்.  தொழுநோய் தொடர்பான ஏகப்பட்ட தவறான கருத்துக்கள் இருந்தன, அந்தத் தவறான கருத்துக்களை நிராகரிக்க வேண்டி தானே தொழுநோயாளிகளுக்கான சேவையில் ஈடுபட்டார், தான், தனது வாழ்க்கை வாயிலாக, சேவை மூலமாக, எடுத்துக்காட்டை முன்வைத்தார்.  சேவை என்பதை அவர் சொற்களால் அல்ல, செயல்பாட்டால் சொல்லிக் கொடுத்தார்.  சத்தியத்தோடு காந்தியடிகளுக்கு இருந்த பிரிக்க முடியாத தொடர்பு அளவுக்கு, சேவையின் பொருட்டும் அண்ணலுக்கு இடையறாத பந்தம் இருந்து வந்தது.  யாருக்காவது எந்த வேளையிலாவது உதவி தேவைப்படுமானால், எந்த வேளையிலும் சேவை செய்ய அண்ணல் துணைவருவார்.  அவர் சேவை மீது மட்டும் வலுகூட்டவில்லை, சேவையோடு இணைந்த ஆன்ம சுகத்தின் மீதும் வலுசேர்த்தார்.  சேவை என்ற சொல்லுக்கு எப்போது பொருள் உண்டாகும் என்றால், அதோடு ஆனந்தம் இணையும் போது தான்.  சேவா பரமோ தர்ம:, சேவையே தலைசிறந்த அறமாகும் என்பதே இதன் பொருள்.  ஆனால் இதனோடு கூடவே சிறப்பான ஆனந்தம்,ஸ்வாந்த சுகாய என்ற தன்னிறைவான இன்பஉணர்வின் அனுபவமும் கூட, சேவையினுள்ளே பொதிந்திருக்கிறது.  இதை, நாம் அண்ணலின் வாழ்க்கை வாயிலாக, தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.  அண்ணல் காந்தியடிகள், எண்ணற்ற இந்தியர்களின் குரலாக ஒலித்தார், ஆனால் மனித விழுமியங்கள், மனித கண்ணியத்துக்காக, ஒரு வகையில் அவர், உலகின் குரலாகவே ஒலித்தார் என்றால் அது மிகையாகாது.  காந்தியடிகளுக்கு, தனிமனிதனும் சமூகமும், மனிதனும் மனிதமும் தான் அனைத்துமானவை.  அது ஆப்பிரிக்காவின் ஃபீனிக்ஸ் பண்ணையாகட்டும் அல்லது டால்ஸ்டாய் பண்ணையாகட்டும், அல்லது சாபர்மதி ஆசிரமம் ஆகட்டும் அல்லது வர்த்தாவாகட்டும், அனைத்து இடங்களிலும் தனக்கே உரிய வித்தியாசமான வகையில், சமூக ஒன்றுதிரட்டல் மீது அவர் எப்போதுமே வலுசேர்த்தே வந்திருக்கிறார்.  அண்ணலோடு தொடர்புடைய பல மகத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் சென்று, அங்கே என் அஞ்சலிகளைச் செலுத்தக்கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது என்பதை நான் என்னுடைய மிகப்பெரிய பேறாகவே கருதுகிறேன்.  காந்தியடிகள் சேவை மனப்பான்மைக்கும், ஒருங்கிணைக்கும் உணர்வுக்கும் என்றுமே வலுகூட்டி வந்திருக்கிறார்.  சமூக சேவை மற்றும் சமுதாய ஒன்றிணைப்பு ஆகிய இவற்றைத் தான் நாம் நமது அன்றாட வாழ்க்கையில் அனுசரிக்கப் பழக வேண்டியிருக்கிறது.   இதுவே அண்ணலுக்கு நாம் புரியக்கூடிய மெய்யான ச்ரத்தாஞ்சலியாக, செயல்பாட்டு அஞ்சலியாக இருக்க முடியும்.  இந்த வகையிலான சந்தர்ப்பங்கள் நிறைய வருகின்றன, நாம் அவற்றோடு இணைந்தும் கொள்கிறோம், ஆனால் காந்தி 150 என்ற சந்தர்ப்பம் அது தன் பாட்டுக்கு வந்து, நாம் பார்க்காமல் மறைந்து செல்வதில் நமக்கு உடன்பாடு உண்டா?  கண்டிப்பாக இல்லை நாட்டுமக்களே!!  நாமனைவரும் நம்மிடத்திலே வினா எழுப்பிக் கொள்வோம், சிந்தனையில் ஈடுபடுவோம், ஆய்ந்து பார்ப்போம், சமூக அளவிலான உரையாடல்களில் ஈடுபடுவோம்.  ஒவ்வொரு சமுதாயத்தின் அதிகபட்ச மக்களோடு கலந்து பேசுவோம், அனைத்து நிலைகளிலான மக்களுடன் கலந்துரையாடுவோம், அனைத்து வயதினரோடும் இணைந்து பரிமாறுவோம் – கிராமங்கள், நகரங்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரையும் கலந்து, சமூகத்துக்காக என்ன செய்யலாம், ஒரு தனிநபர் என்ற முறையில் என்னால் இந்த முயற்சிகளுக்கு எதைச் சேர்க்க முடியும் என்று சிந்திப்போம்.  என் தரப்பில் என்ன மதிப்புக்கூட்டலை என்னால் அளிக்க முடியும்?  சமூகம் என்று வரும் போது அதற்கென்று ஒரு பலம் இருக்கிறது.  காந்தி 150 என்ற இந்த நிகழ்வில் சமூக வெளிப்பாடு, சேவை என அனைத்தும் இருக்க வேண்டும்.  நாம் வாழும் பகுதியனைத்தையும் இந்த நிகழ்வுகளில் ஈடுபடுத்த முயற்சி செய்யலாமே!!  நாம் ஒரு கால்பந்தாட்ட அணியில் இருந்தால், கால்பந்தாட்டம் ஆடுவது தவிர, அண்ணலின் வழிகாட்டுதல்களில் ஒன்றிரண்டைப் பின்பற்றி, சேவைப்பணிகளில் ஈடுபடலாமே!!  நாம் சார்ந்திருக்கும் மகளிர் சங்கம் இருக்குமென்றால், நவீனகால பெண்கள் சங்கத்தின் செயல்பாடுகளுடன்கூட, சங்கத்தின் அனைத்து அங்கத்தினர்களுமாக இணைந்து, ஏதாவது ஒரு சேவைப்பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாமே!!  ஏகப்பட்ட வேலைகளைச் செய்யலாம்.  பழைய புத்தகங்களை சேகரித்து, ஏழைகளிடம் பகிர்ந்தளிப்போம், கல்வியறிவை வளர்ப்போம், 130 கோடி நாட்டுமக்களிடம் 130 கோடிக் கற்பனைகள் இருக்கின்றன, 130 கோடி முனைவுகளும் இருக்கலாம்.  இதற்கு எந்த வரன்முறையும் கிடையாது.  மனதிl என்ன தோன்றுகிறதோ – அது நல்ல விருப்பமாக இருக்க வேண்டும், நல்ல நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும், நல்லிணக்கம் வாய்ந்ததாக அமைந்திருக்க வேண்டும், முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன்கூடிய சேவையாகவும், ஸ்வாந்த: சுகாய: – இடையறாத ஆனந்த அனுபவத்தை அளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கமாக அமைய வேண்டும். 

எனதருமை நாட்டுமக்களே, சில மாதங்கள் முன்பாக, நான் குஜராத்தில் தாண்டீ சென்றிருந்தேன்.  சுதந்திரப் போராட்டத்தில் உப்பு சத்தியாகிரஹத்துக்குப் பெயர் போன தாண்டீ, ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது.  தாண்டீயில் நான் அண்ணலுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட அதிநவீன அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தேன்.  நீங்களனைவரும் அண்ணல் காந்தியடிகளோடு தொடர்புடைய ஏதாவது ஒரு இடத்துக்குப் பயணம் மேற்கொள்ளுங்கள் என்று நான் உங்களனைவரிடத்திலும் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.  இது எந்த இடமாக வேண்டுமானாலும் இருக்கலாம் – அது போர்பந்தரோ, சாபர்மதி ஆசிரமமோ, சம்பாரண்ணோ, வர்த்தா ஆசிரமமோ, தில்லியில் காந்தியடிகளுடன் இணைந்த இடங்களோ, எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நீங்கள், இவை போன்ற இடங்களுக்குச் செல்லும் போது, உங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் தரவேற்றம் செய்யுங்கள், மற்றவர்களும் இதன்வாயிலாக கருத்தூக்கம் அடைவார்கள், உங்கள் உணர்வுகளை இரண்டொரு வாக்கியங்களில் நீங்கள் வெளிப்படுத்தவும் செய்யுங்கள்.  உங்கள் மனதில் உதித்த உணர்வுகள், எந்த ஒரு இலக்கிய வரிகளை விடவும் அதிக வல்லமை வாய்ந்தவையாக இருக்கலாம், இன்றைய காலகட்டத்தில், உங்கள் பார்வையில், உங்கள் பேனா வடித்த அண்ணலின் சித்திரம், அதிக உகந்ததாகவும் அது அமையலாம்.  வரவிருக்கும் காலத்தில் பல நிகழ்ச்சிகள், போட்டிகள், கண்காட்சிகள் ஆகியவை திட்டமிடப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில், ஒரு மிகவும் சுவாரசியமான விஷயத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  Venice Biennale என்ற பெயர் கொண்ட புகழ்மிக்க கலைக் கண்காட்சி உண்டு.  இங்கே உலகெங்கிலும் இருந்தும் கலைஞர்கள் குழுமுவார்கள்.  இந்த முறை Venice Biennaleஇல் இண்டியா காட்சிக்கூடத்தில் காந்தியடிகளின் நினைவுகள் நிரம்பிய பல சுவாரசியமான காட்சிப் பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.  இதில் ஹரிபுரா பற்றிய பகுதி, தனி சுவாரசியம் வாய்ந்ததாக உள்ளது.  குஜராத்தின் ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டின் போது தான் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் பதிக்கப்பட்டது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  இந்தக் கலைப் பகுதிகளில் ஒரு மிக அழகான கடந்த காலம் வடிக்கப்பட்டிருக்கிறது.   காங்கிரஸின் ஹரிபுரா மாநாட்டுக்கு முன்னதாக 1937-38இல் அண்ணல், சாந்திநிகேதனத்தின் கலா பவனத்தின் அப்போதைய முதல்வர் நந்த்லால் போஸுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.  பாரதத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறை கலை வாயிலாக காட்சிப்படுத்தப்பட வேண்டும், இந்தக் கலைப்படைப்பு, மாநாட்டில் கண்காட்சியாக்கப்பட வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார்.  இதே நந்த்லா போஸ் அவர்களின் கைவண்ணம் தான் நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கிறது.  அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்திருக்கிறது.  அவருடைய இந்த கலைத் தவமானது, அரசியலமைப்பை மட்டுமல்ல, நந்த்நால் போஸ் அவர்களையுமே அமரத்துவம் வாய்ந்தவராக ஆக்கி விட்டது.  நந்த்லால் போஸ் அவர்கள் ஹரிபுராவை ஒட்டிய கிராமங்களைச் சுற்றிப் பார்த்தார், நிறைவாக கிராமப்புற வாழ்க்கையைக் காட்சிப் படுத்தும் வகையில் ஓவியங்களை வரைந்தார்.  இந்த விலைமதிப்பில்லாத படைப்புக்கள் பற்றி வெனிஸில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்றன.  மீண்டும் ஒருமுறை காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாள் தொடர்பான நல்வாழ்த்துக்களுடன், ஒவ்வொரு இந்தியனும் ஏதாவது ஒரு உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.  நாட்டுக்காக, சமூகத்துக்காக, ஏதாவது ஒரு நல்ல விஷயத்துக்காக எதையாவது செய்ய வேண்டும்.  இது தான் அண்ணலுக்கு நாம் செய்யக்கூடிய நல்ல, உண்மையான செயல்பாட்டு அஞ்சலியாக, வணக்கமாக இருக்க முடியும்.

பாரத அன்னையின் நல்மைந்தர்களே, கடந்த சில ஆண்டுகளாகவே நாம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதிக்கு முன்பாக, 2 வாரங்கள் வரை தூய்மையே சேவை என்ற இயக்கத்தை நடத்தி வருகிறோம் என்பது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம்.  இந்த முறை இது செப்டெம்பர் மாதம் 11ஆம் தேதி தொடங்கும்.  இதன்படி, நாம் நம்முடைய வீடுகளை விட்டு வெளியேறி, உடல் சேவை வாயிலாக, நம் செயல்களால் அண்ணலுக்கு செயல்அஞ்சலி செலுத்துவோம்.  வீடாகட்டும், தெருக்களாகட்டும், நாற்சந்திகள் ஆகட்டும், கால்வாய்கள் ஆகட்டும், பள்ளிகள்-கல்லூரிகள் தொடங்கி அனைத்துப் பொதுவிடங்களிலும், தூய்மை தொடர்பான பேரியக்கத்தை முடுக்கி விடுவோம்.  இந்த முறை நெகிழிப் பொருட்கள் அகற்றல் மீது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும், 130 கோடி நாட்டுமக்களும் தூய்மையின் பொருட்டு எப்படி இயக்கங்களை மேற்கொண்டார்களோ, அதே உற்சாகத்தையும், ஊக்கத்தையும் நெகிழிப் பொருட்கள் அகற்றல் விஷயத்திலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று செங்கோட்டையிலிருந்து கூட நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.  திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிப்பை நாம் அடைந்திருக்கிறோம்.  இதைப் போலவே, ஒரேமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.  இந்த இயக்கத்தை முன்னிட்டு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடத்திலும் உற்சாகம் இருக்கிறது.  எனது வியாபாரி சகோதர சகோதரிகள் எல்லோரும், தங்கள் கடைகளில் ஒரு அறிவிப்புப் பலகையைத் தொங்க விட்டிருக்கிறார்கள்.  வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்து வரும் போது துணிப்பையோடு வரவேண்டும் என்று அதில் எழுதி வைத்திருக்கிறார்கள்.  இதனால் பணமும் மிச்சமாகும், சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படுவதில் நமது பங்களிப்பும் இருக்கும்.  இந்த முறை அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று நாம் அண்ணலின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில், இந்த சந்தர்ப்பத்தில், திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்ட இந்தியாவை அவருக்கு அர்ப்பணிக்கும் அதே நேரத்தில், நெகிழிப் பொருட்களுக்கு எதிராக ஒரு புதிய மக்கள் இயக்கத்துக்கான அடித்தளத்தை நாடு முழுவதிலும் ஏற்படுத்த வேண்டும்.  நான் சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரிடத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், சிறிய பகுதியிலும், நகரவாசிகளிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன், கைக்கூப்பி வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன், இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி நன்னாளை ஒரு வகையில் நமது இந்த பாரத அன்னைக்கு நெகிழிக் கழிவிலிருந்து விடுதலை அளிக்கும் நோக்கத்தில் நாம் கொண்டாட வேண்டும்.  அக்டோபர் மாதம் 2ஆம் தேதியை குறிப்பாக சிறப்பான நாளாக நாம் கொண்டாட வேண்டும்.  அண்ணலின் பிறந்த நாள் ஒரு சிறப்பான சேவை நாளாக ஆக வேண்டும்.  நாட்டின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்ட நிர்வாகங்கள், கிராமப் பஞ்சாயத்துக்கள், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள், அனைத்து சங்கங்கள் என, ஒவ்வொரு குடிமகனிடத்திலும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நெகிழிக் கழிவுகளின் சேகரிப்பையும், திரட்டுதலையும் உகந்த வழியிலே செய்ய வேண்டும் என்பது தான்.  நான் தனியார் பெருநிறுவனங்களிடமும் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இத்தனை நெகிழிப் பொருட்களும் சேகரிக்கப்பட்ட பிறகு, இவற்றை உகந்த வகையில் அகற்ற நீங்கள் முன்வர வேண்டும் என்பது தான்.  இவற்றை மறுசுழற்சி செய்ய முடியும்.  இவற்றின் மூலம் எரிபொருள் தயாரிக்க முடியும்.  இந்த வகையில் இந்த தீபாவளி வரை நாம் இந்த நெகிழிக் கழிவுகளை கவனமாக அகற்றும் செயலில் ஈடுபடலாமே.  இதற்கு மனதில் உறுதி வேண்டும்.  உத்வேகம் பெற அங்கே இங்கே ஆராய வேண்டிய அவசியம் இல்லை.   காந்தியடிகளே மிகப்பெரிய உத்வேகமாக நமக்கெல்லாம் இருக்கிறார்.

என் மனம்நிறை நாட்டுமக்களே, நமது சம்ஸ்க்ருத பழமொழிகளில் ஞானத்தின் ரத்தினங்கள் கொட்டிக் கிடக்கின்றன.  நம் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அவை அனைத்தும் அதிலே கிடைக்கும்.  இப்போதெல்லாம் நான் இவற்றைப் படிப்பது என்பது மிகவும் குறைந்து விட்டது; ஆனால் முன்போ நிறைய இருந்தது.  இன்று நான் ஒரு சம்ஸ்க்ருத பொன்மொழியிலிருந்து அதிக மகத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தைத் தொட்டுக் காட்ட விரும்புகிறேன்.  இது பல நூற்றாண்டுகள் முன்பாக எழுதப்பட்ட விஷயம் என்றாலும், இன்றும் கூட, இது எத்தனை மகத்துவம் வாய்ந்தது தெரியுமா? 

                   “ पृथिव्यां त्रीणि रत्नानि  जलमन्नं सुभाषितम् |

मूढैः पाषाणखण्डेषु रत्नसंज्ञा प्रदीयते” ||

ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலமன்னம் சுபாஷிதம்.

மூடை: பாஷாணகண்டேஷு ரத்ன சஞ்யா ப்ரதீயதே.

 

அதாவது பூமியில் நீர், உணவு மற்றும் மூதுரைகள் என்பவை தான் மூன்று ரத்தினங்கள்.  மூடர்கள் கற்களாலானவைகளை ரத்தினங்கள் என்று அழைக்கிறார்கள்.  நமது கலாச்சாரத்தில் உணவுக்கு என்றுமே அதிக மகத்துவம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.  எந்த அளவுக்கு என்றால், உணவு பற்றிய அறிவைக் கூட நாம் விஞ்ஞானமாக்கி விட்டோம்.  சமச்சீரான, ஊட்டச்சத்து நிரம்பிய உணவு நம்மனைவருக்குமே தேவையானது.  சிறப்பாக, பெண்கள் மற்றும் சிசுக்களுக்கு, ஏனென்றால் இவர்கள் தான் நமது சமூகத்தின் வருங்கால அஸ்திவாரங்கள்.  போஷண இயக்கம், அதாவது ஊட்டச்சத்து இயக்கத்துக்கு உட்பட்டு, நாடெங்கிலும் நவீன வழிமுறைகளில் ஊட்டச்சத்து அளித்தல், மக்கள் இயக்கமாக ஆகி வருகிறது.  மக்கள் புதிய மற்றும் சுவாரசியமான வழிகளில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.  ஒருமுறை என்னுடைய கவனத்திற்கு ஒரு விஷயம் கொண்டு வரப்பட்டது.  நாசிக்கில் பிடியளவு தானியம் என்ற ஒரு பெரிய இயக்கம் நடைபெற்றது.  இதில் அறுவடை நாட்களில் ஆங்கன்வாடி சகோதரிகள், மக்களிடமிருந்து ஒரு கைப்பிடியளவு தானியங்களை சேகரிக்கிறார்கள்.   இந்த தானியங்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக தயார் செய்யப்படும் சூடான உணவுக்குப் பயன்படுகிறது.  இதில் தானம் அளிப்பவர் ஒரு வகையில் விழிப்புணர்வு கொண்ட குடிமகனாக, சமூகசேவகனாக ஆகிறார்.  இதன் பின்னர், அவர் இந்த இலட்சியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்.  இந்த இயக்கத்தில் ஒரு சிப்பாயாக அவர் தன்னை இணைத்துக் கொள்கிறார்.  நாம் அனைவரும், நமது குடும்பங்களில் அன்னப் ப்ராஸனம் சடங்கு பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.  இந்தச் சடங்கு, குழந்தைக்கு முதல்முறையாக திடஉணவு கொடுக்கப்படுவது தொடங்கும் போது செய்யப்படுகிறது.    திரவ உணவு அல்ல, திடஉணவு.  குஜராத்தில் 2010ஆம் ஆண்டில், ஏன் நாம் அன்னப் பிராஸன சடங்கின் போது, குழந்தைகளுக்கு இணை உணவு கொடுக்க கூடாது, அப்படிக் கொடுத்தால் மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுமே என்று நான் நினைத்தேன்!!  இது ஒரு அருமையான முயற்சி, இதை அனைத்து இடங்களிலும் செயல்படுத்திப் பார்க்கலாம்.  பல மாநிலங்களில் மக்கள் திதி போஜனம் என்ற இயக்கத்தை நடத்துகிறார்கள்.  குடும்பத்தில் பிறந்த நாள் என்றாலோ, ஏதோ ஒரு சுபதினம் என்றாலோ, அல்லது நினைவு நாள் என்றாலோ, குடும்பத்தவர்கள், ஊட்டச்சத்து நிரம்பிய உணவை, சுவையான உணவைத் தயார் செய்து ஆங்கன்வாடிக்குச் செல்கிறார்கள், பள்ளிகளுக்குச் செல்கிறார்கள், அங்கே குடும்பத்தவர் அனைவரும் தாங்களே குழந்தைகளுக்கு பரிமாறுகிறார்கள், உணவளிக்கிறார்கள்.  தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அப்படி மகிழ்ச்சி பகிரப்படும் போது அது குறைவதில்லை.  சேவை உணர்வுடன் ஆனந்த உணர்வும் ஒரு அற்புதமான சங்கமமாக மிளிர்கின்றன.  நண்பர்களே, இப்படிப்பட்ட பல சின்னச்சின்ன விஷயங்கள் வாயிலாக நம்முடைய நாட்டில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு எதிரான பலமான போரை நாம் முடுக்கி விட முடியும்.  இன்று விழிப்புணர்வு குறைவாக உள்ள காரணத்தால், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏழைகளும் சரி, தன்னிறைவு உடையவர்களும் சரி, இருசாராருமே இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.  நாடு முழுவதிலும் செப்டெம்பர் மாதத்தை ஊட்டச்சத்து இயக்கம் என்ற வகையில் நாம் கொண்டாடுவோம்.  நீங்கள் கண்டிப்பாக இதோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், தகவல்களைப் பெறுங்கள், அதில் புதிய கருத்துக்களை இணையுங்கள்.  நீங்களும் பங்களிப்புத் தாருங்கள்.  நீங்கள் ஒன்றிரண்டு நபர்களையாவது ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தீர்கள் என்றால், நம்மால் தேசத்தையே ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து வெளியே கொண்டு வர இயலும்.

 

       ”ஹலோ சார், என் பேர் ஸ்ருஷ்டி வித்யா, நான் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவி.  சார், நான் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி, Bear Grylls உடன் நீங்கள் பங்கெடுத்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்.  நீங்கள் பங்கெடுத்த இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  முதலாவதாக உங்களுக்கு நம்முடைய இயற்கை, வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் ஆகியவை மீது எத்தனை அதிக அக்கறை இருக்கிறது, கரிசனம் இருக்கிறது என்பதை அறிந்து உவப்பாக இருந்தது.  மேலும் உங்களின் சாகஸ பரிமாணம் என்னை மிகவும் கவர்ந்தது.  இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் போது உங்கள் அனுபவம் எப்படி இருந்தது என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  மேலும் உங்கள் உடலுறுதியைப் பார்க்கும் போது எங்களைப் போன்ற இளைஞர்கள் அதிகம் கவரப்படுகிறார்கள், உங்களைப் பார்த்து அதிகம் உத்வேகம் அடைகிறார்கள்”

      ஸ்ருஷ்டிஜி, உங்கள் தொலைபேசி அழைப்பிற்கு நன்றிகள்.  உங்களைப் போலவே ஹரியாணாவின் ஸோஹனாவிலிருந்து கே. கே. பாண்டே அவர்களும் சூரத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ஷர்மா அவர்களும், இன்னும் பலரும் டிஸ்கவரி சேனலில் காட்டப்பட்ட Man vs Wild நிகழ்ச்சி பற்றித் தெரிந்து கொள்ள விரும்பியிருக்கிறார்கள்.  இந்த முறை மனதின் குரலுக்காக நான் எண்ணமிட்டுக் கொண்டிருந்த போது, இந்த விஷயம் தொடர்பாக ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்படும் என்று எனக்கு ஏராளமாக நம்பிக்கை இருந்தது.  மேலும் கடந்த சில வாரக்காலமாகவே நான் எங்கே சென்றாலும், மக்களை சந்தித்த வேளையிலெல்லாம், Man Vs Wild பற்றிப் பேசப்பட்டு வந்தது.  இளைஞர்கள் மனங்களில் இந்த மாதிரியாக இடம் பிடிப்பேன் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.  அதே போல, நம்முடைய நாட்டிலும் சரி, உலகத்திலுமே கூட, இளைஞர்கள் பன்முகத்தன்மை நிறைந்த விஷயங்கள்பால் கவனம் செலுத்துகிறார்கள் என்றும் நான் சிந்தித்துப் பார்க்கவில்லை.  உலக அளவிலான இளைஞர்களின் மனங்களில் இடம் பிடிக்க எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.  கடந்த வாரம் நான் பூட்டான் சென்றிருந்தேன்.  பிரதமர் என்ற முறையில் எப்போதெல்லாம் எனக்கு எங்கே செல்ல சந்தர்ப்பம் வாய்த்தாலும் சரி, சர்வதேச யோகதினம் காரணமாக நிலைமை எப்படி ஆகி விட்டது என்றால், உலகில் யாரிடம் சென்று அமர்ந்தாலும், அளவளாவினாலும், ஒரு 5-6 நிமிடங்கள் யோகம் தொடர்பாக என்னிடம் வினா எழுப்பத் தொடங்கி விடுகிறார்கள்.  இதுவரை யோகக்கலை பற்றி என்னிடம் வினவாத உலகத் தலைவரே இல்லை என்ற அளவில் ஆகியிருக்கிறது, இதுவே உலகம் முழுவதிலும் என் அனுபவமாக இருந்து வந்திருக்கிறது.  ஆனால் இப்போதெல்லாம் ஒரு புதிய அனுபவம் கிடைத்து வருகிறது.  யாரை நான் சந்திக்க நேர்ந்தாலும், எங்கே எப்போது அளவளாவ வாய்ப்பு கிடைத்தாலும், அவர்கள் வன உயிரினங்கள் தொடர்பான விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள், சுற்றுச்சூழல் தொடர்பான விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். புலி, சிங்கம், உயிரினங்கள் தொடர்பாக மக்கள் மனங்களில் இத்தனை நாட்டமும் ஈர்ப்பும் இருக்கின்றது என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது.  டிஸ்கவரியின் இந்த நிகழ்ச்சியை 165 நாடுகளும், அவர்களின் மொழியில் ஒளிபரப்பும் திட்டத்துடன் இருக்கிறார்கள்.  இன்று சுற்றுச்சூழல், உலக வெப்பமயமாதல், சூழல்மாற்றம் என்பன தொடர்பான உலகளாவிய கருத்துக் கடைதல் நடைபெற்று வருகிறது.  இந்தச் சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சி வாயிலாக பாரதமளிக்கும் செய்தியானது, பாரதநாட்டு பாரம்பரியம், பாரதத்தின் கலாச்சாரத்தில் இயற்கையின் மீதான நேசம்-புரிதல் ஆகியவற்றை உலகத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்ததில், டிஸ்கவரி சேனலின் இந்த நிகழ்ச்சி பேருதவி புரிந்திருக்கிறது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது; மேலும் நம் நாட்டில் பருவநிலைநீதி, சுத்தமான சூழல் என்ற கோணத்தில் எடுக்கப்பட்ட முயல்வுகளைப் பற்றி இப்போது மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.  ஆனால் மேலும் ஒரு சுவாரசியமான விஷயம், சிலர் சற்று சங்கடத்துடன் என்னிடம் ஒரு விஷயத்தை அவசியம் வினவுகிறார்கள், மோதிஜி நீங்களோ ஹிந்தியில் பேசுகிறீர்கள், Bear Gryllsக்கு ஹிந்தி மொழி தெரியாதே எனும் போது, எப்படி உங்களுக்கு இடையே இத்தனை வேகமாக உரையாட முடிந்தது?  இது பிறகு தொகுப்பாக்கத்துக்கு உட்படுத்தப்பட்டதா?  பலமுறை படப்பிடிப்பு நடத்தப்பட்டதா? என்ன நடந்தது, என்றெல்லாம் பெரும் ஆர்வத்தோடு வினவுகிறார்கள்.  பாருங்கள், இதில் எந்த ஒரு ரகசியமும் கிடையாது.  யதார்த்தம் என்னவென்றால், Bear Grylls உடன் உரையாடல் நிகழ்த்த தொழில்நுட்பம் முழுமையான வகையில் பயன்படுத்தப்பட்டது.  நான் என்ன பேசினாலும், உடனுக்குடன் அது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு விடும்.  உடனுக்குடன் பொருள்விளக்கம் அளிக்கப்படும், Bear Gryllsஇன் காதுகளில் ஒரு வயரில்லா, சிறிய கருவி பொருத்தப்பட்டு இருந்தது.  நான் பேசுவது என்னமோ ஹிந்தி மொழியில், ஆனால் அவருக்கு ஆங்கிலத்தில் அது கேட்கும், இதன் காரணமாக உரையாடல் மிகவும் எளிதாக அமைந்தது, தொழில்நுட்பத்தின் அற்புதம் இது தான்.  இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் மக்கள் என்னிடம் ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா பற்றியெல்லாம் விவாதங்கள் செய்யத் தொடங்கி விட்டார்கள்.  நீங்களும் கூட இயற்கை மற்றும் வன உயிரினங்களுடன் இணைந்த இடங்களுக்குக் கண்டிப்பாகச் சென்று வாருங்கள்.  நான் முன்னமேயே கூறியிருந்தேன், அதை மறுபடி இப்போது கூறுகிறேன்.  உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக நீங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று பாருங்கள்.  என்ன ஒரு இயற்கை அழகு அங்கே கொஞ்சுகிறது தெரியுமா?  நீங்கள் அசந்து, மெய்மறந்து போய் விடுவீர்கள்.  உங்களுக்குள்ளே நீங்கள் விசாலப்படுவதை நீங்களே உணர்வீர்கள்.  ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று செங்கோட்டையிலிருந்து நான் உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தேன், அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவுக்கு உள்ளே குறைந்தபட்சம் 15 இடங்களுக்குச் சென்று பாருங்கள், 100 சதவீதம் சுற்றுலாவின் பொருட்டு மட்டுமே இந்த 15 இடங்களுக்கும் சென்று பாருங்கள், மனதில் உள்வாங்கிக் கொள்ளுங்கள், உங்கள் குடும்பத்தோடு சென்று பாருங்கள், அங்கே சற்று நேரம் நிம்மதியாகச் செலவிடுங்கள்.  பன்முகத்தன்மைகள் நிறைந்த நமது நாடு, உங்களுக்கு இந்தப் பன்முகத்தன்மைகள் வாயிலாக கற்பித்து, உங்களுக்குள்ளே பன்முகத்தன்மைகளை நிரப்பி விடும்.  உங்கள் வாழ்க்கை விசாலமாகும்.  உங்கள் எண்ணங்கள் விசாலமடையும்.  என் மீது முழுமையாக நம்பிக்கை வையுங்கள், இந்தியாவில் மட்டுமே இப்படிப்பட்ட அநேக இடங்களில் உங்களுக்கு புதிய சக்தி, புதிய உற்சாகம், புதிய பூரிப்பு, புதிய கருத்தூக்கம் ஆகியன கிடைக்கும்; ஒருவேளை சில இடங்களை மீண்டும் மீண்டும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும் உங்கள் மனதிலே எழலாம், உங்கள் குடும்பத்துக்கும் இப்படிப்பட்ட ஆர்வம் துளிர்க்கலாம்.

என் மனம் நிறை நாட்டுமக்களே, இந்தியாவிலே சூழல் மீதான அக்கறையும் கரிசனமும் இயல்பாகவே அனைவராலும் காணக்கூடியது.  கடந்த மாதங்களில் காட்டுப்புலிகளின் கணக்கெடுப்பை வெளியிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.  இந்தியாவில் எத்தனை புலிகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?  இந்தியாவிலே புலிகளின் எண்ணிக்கை 2967.  சில ஆண்டுகள் முன்பாக இதில் பாதியளவு தான் அவற்றின் எண்ணிக்கையாக இருந்தது.   புலிகள் தொடர்பான உச்சிமாநாடு ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலே 2010ஆம் ஆண்டு நடந்தது.  இதில் உலகில் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது, முடிவிலே உறுதி மேற்கொள்ளப்பட்டது.  2022ஆம் ஆண்டுக்குள்ளாக உலகம் முழுவதிலும் உள்ள புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது என்பது தான் இந்த உறுதிப்பாடு.  ஆனால் இது புதிய இந்தியா, இதிலே நாம் இலக்குகளை அதிவிரைவாக எட்டிக் கொண்டிருக்கிறோம் என்ற காரணத்தால், நாம் 2019ஆம் ஆண்டிலேயே இங்கே இருக்கும் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி விட்டோம்.   பாரதம் புலிகளின் எண்ணிக்கையை மட்டுமல்ல, பாதுகாக்கப்பட்ட பகுதிகள், சமுதாய காப்புக்காடுகள் ஆகியவற்றின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கிறது.  நான் புலிகள் தொடர்பான தரவுகளை வெளியிட்ட போது, குஜராத்தின் கீர் காடுகளில் உள்ள சிங்கங்கள் பற்றிய நினைவு எழுந்தது.  நான் அங்கே முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தேன்.  அப்போது கீர் காடுகளில் சிங்கங்களின் வசிப்பிடங்கள் குறைந்து கொண்டே வந்தன.  அவற்றின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வந்தது.  நாங்கள் கீர் காடுகளில் ஒன்றன்பின் ஒன்றாக நடவடிக்கைகள் மேற்கொண்டோம்.  2007ஆம் ஆண்டு அங்கே பெண் காவலர்களை பொறுப்பில் அமர்த்த முடிவெடுத்தோம்.  சுற்றுலாவை அதிகரிக்க கட்டமைப்பிலே மேம்பாடுகளை மேற்கொண்டோம்.  நாம் இயற்கை மற்றும் வன உயிரினங்கள் பற்றிப் பேசும் போதெல்லாம், பராமரிப்பு பற்றி மட்டுமே நாம் பேசுகிறோம்.  ஆனால் நாம் பராமரிப்பு என்பதை முன்னெடுத்துப் போகும் அதே நேரத்தில், பரிவு பற்றியும் சற்று சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.  நம்முடைய சாத்திரங்களில் இந்த விஷயம் குறித்து மிகச் சிறப்பாக வழிகாட்டப்பட்டிருக்கிறது.  பலநூறு ஆண்டுகளாக நமது சாத்திரங்களில் நாம் என்ன கூறி வந்திருக்கிறோம்?

निर्वनो बध्यते व्याघ्रो, निर्व्याघ्रं  छिद्यते वनम | 

तस्माद् व्याघ्रो वनं रक्षेत्, वनं व्याघ्रं न पालयेत्  ||

நிர்வனோ பத்யதே வ்யாக்ரோ, நிர்வ்யாக்ரம் சித்யதே வனம்,

தஸ்மாத் வ்யாக்ரோ வனம் ரக்ஷேத், வனம் வ்யாக்ரம் ந பாலயேத்.

      அதாவது வனம் என்ற ஒன்று இல்லையென்றால், மனிதன் வாழும் இடங்களுக்கு புலிகள் வரும் கட்டாயமேற்படும், பின்னர் அவை கொல்லப்படும்; அதே போல வனத்தில் புலி இல்லை என்றால், மனிதன் வனத்தை வெட்டி, அதை அழித்து விடுகிறான் ஆகையால், உள்ளபடியே புலி வனத்தின் பாதுகாவலனாக இருக்கிறது, வனம் புலியின் பாதுகாவலனாக இல்லை.  பாருங்கள்!! எத்தனை அருமையான வகையிலே நமது முன்னோர்கள் விஷயத்தை விளங்க வைத்திருக்கிறார்கள்.  ஆகையால், நாம் நமது வனங்களை, தாவரங்களை, வன உயிரினங்களை, பாதுகாப்பது மட்டும் போதுமானது அன்று, அவை சிறப்பான முறையிலே தழைக்கும் வகையில், ஒரு சரியான சூழலை ஏற்படுத்துவதும் அவசியமாகிறது.

      எனதருமை நாட்டுமக்களே, 1893ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் தேதியன்று விவேகானந்தர் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை யாரால் மறக்க இயலும்.  உலகம் முழுவதும் இருக்கும் மனித சமுதாயத்தை உறக்கத்திலிருந்து எழுப்பிய இந்திய நாட்டின் இந்த இளைய துறவி, உலகத்திலே பாரதம் பற்றிய ஒரு ஒளிவீசும் அடையாளத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.  எந்த அடிமை பாரதத்தை உலகம் ஈனமான பார்வை பார்த்ததோ, அதே உலகம், 1893ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் தேதியன்று, ஸ்வாமி விவேகானந்தர் என்ற மாமனிதரின் சொற்களைக் கேட்டு, பாரத நாட்டைப் பார்க்கும் பார்வையையே மாற்றிக் கொண்டது.  வாருங்கள், ஸ்வாமி விவேகானந்தர் அவர்கள் பாரதத்தின் எந்த வடிவத்தைப் பார்த்தாரோ, ஸ்வாமி விவேகானந்தர் அவர்கள் பாரதத்தின் எந்த வல்லமையைக் கண்டாரோ, நாம் அதை வாழ்ந்து காட்டும் முயற்சியில் ஈடுபடுவோம்.  நமக்குள்ளேயே அது இருக்கிறது, அனைத்துமே இருக்கிறது, நாம் தன்னம்பிக்கையோடு முன்னேறுவோம். 

      எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியை நாம் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறோம்.  இந்த சந்தர்ப்பத்தில் நாம் நாடு முழுவதிலும் FIT INDIA MOVEMENT – உடலுறுதி வாய்ந்த இந்தியா என்ற இயக்கத்தை தொடங்க இருக்கிறோம்.  நாம் உடலுறுதியோடு இருப்பது.  தேசத்திற்கு உரமூட்டுவது.  குழந்தைகள், பெரியவர், இளைஞர்கள், பெண்கள் என அனைவருக்காகவும் மிக சுவாரசியமான இயக்கம் நடைபெறும், இது உங்களுடையதாக இருக்கும்.  ஆனால் அவற்றின் நுணுக்கமான விஷயங்கள் பற்றி நான் இன்று ஏதும் கூறப் போவதில்லை.  ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி வரை காத்திருங்கள்.  நானுமே கூட அன்று விரிவான வகையிலே விவரிக்க இருக்கிறேன், இதோடு உங்களை இணைக்காமல் விடப் போவதில்லை.  ஏனென்றால், உங்களனைவரையும் உடலுறுதி உடையவர்களாகப் பார்க்க நான் விரும்புகிறேன்.  உடலுறுதி பற்றிய விழிப்புணர்வை உங்கள் மனதிலே ஏற்படுத்த விரும்புகிறேன், உறுதியான இந்தியாவுக்காக, நம் தேசத்துக்காக, நாம் இணைந்து சில இலக்குகளைத் தீர்மானம் செய்து கொள்வோம்.

      என் மனதுக்கு நெருக்கமான நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியன்றும், செப்டம்பர் மாத ஊட்டச்சத்து இயக்கத்தின் போதும், குறிப்பாக செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வரையிலான தூய்மை இயக்கத்தின் போதும், உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்வீர்கள் என்று நான் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்.   மேலும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி என்பது முழுக்க முழுக்க நெகிழிப் பொருட்கள் அகற்றலுக்காகவே அர்ப்பணம் செய்யப்பட்ட ஒன்று.  நெகிழிப் பொருட்களிலிருந்து விடுதலை பெற நாமனைவரும், வீடு, வீட்டுக்கு வெளியே, என அனைத்து இடங்களிலும் முழுவீச்சோடு ஈடுபடுவோம், சமூக வலைத்தளங்களிலே இதைப் பற்றி நாம் கொட்டி முழக்கிடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  ஒரு புத்துணர்வு, புதிய உறுதிப்பாடு, புதிய சக்தியோடு நாம் முன்னேறிச் செல்வோம், வாருங்கள்!!

      எனதருமை நாட்டுமக்களே, இன்று மனதின் குரல் இம்மட்டே.  மீண்டும் சந்திப்போம்.  நான் உங்கள் கருத்துக்களுக்காக, நீங்கள் தெரிவிக்கும் விஷயங்களுக்காக, உங்கள் ஆலோசனைகளுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பேன்.  நாமனைவரும் இணைந்து சுதந்திரப் பித்துப்பிடித்த நமது தியாகிகள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க, காந்தியடிகளின் கனவுகளை மெய்ப்பிக்க முயன்று முன்னேறுவோம் – ஸ்வாந்த: சுகாய:  உள்ளே ஆனந்தம் பொங்க சேவை உணர்வை வெளிப்படுத்தி, நாம் முன்னே பயணிப்போம். 

மிக்க நன்றிகள். 

வணக்கம்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...

Prime Minister Shri Narendra Modi paid homage today to Mahatma Gandhi at his statue in the historic Promenade Gardens in Georgetown, Guyana. He recalled Bapu’s eternal values of peace and non-violence which continue to guide humanity. The statue was installed in commemoration of Gandhiji’s 100th birth anniversary in 1969.

Prime Minister also paid floral tribute at the Arya Samaj monument located close by. This monument was unveiled in 2011 in commemoration of 100 years of the Arya Samaj movement in Guyana.