Prabhu Ram was also a source of inspiration for the makers of our Constitution: PM Modi
The festivals of our democracy further strengthen India as the ‘Mother of Democracy’: PM Modi
Pran Pratishtha in Ayodhya has woven a common thread, uniting people across the country: PM Modi
India of the 21st century is moving ahead with the mantra of Women-led development: PM Modi
The Padma Awards recipients are doing unique work in their respective fields: PM Modi
The Ministry of AYUSH has standardized terminology for Ayurveda, Siddha and Unani medicine: PM Modi

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். 2024ஆம் ஆண்டின் முதலாவது மனதின் குரல் இது. அமுதக்காலத்திலே ஒரு புதிய உற்சாகம், புதிய உல்லாசம். இரண்டு நாட்கள் முன்பாகத் தான் நாட்டுமக்கள் அனைவரும் 75ஆவது குடியரசுத் திருநாளை மிகுந்த கோலாகலத்தோடு கொண்டாடினோம். இந்த ஆண்டு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆவது ஆண்டும் கூட, உச்சநீதிமன்றத்தின் 75ஆவது ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது. நமது ஜனநாயகத்தின் இந்தத் திருநாட்கள், ஜனநாயகத்தின் தாய் என்ற வகையிலே, பாரதத்தை மேலும் சக்தி படைத்ததாக ஆக்குகின்றன. பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டம் மிகுந்த ஆழமான கருத்தாய்வுக்குப் பிறகு தான் உருவாக்கப்பட்டது. இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதியின் மூன்றாவது அத்தியாயத்தில், பாரதத்தின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது; 3ஆவது அத்தியாயத்தின் தொடக்கத்திலே, இராமன், அன்னை சீதை, லக்ஷ்மணன் ஆகியோரது சித்திரங்களுக்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர்கள் இடமளித்துள்ளார்கள் என்பது மிகவும் சுவாரசியமான விஷயம். பிரபு இராமனின் ஆட்சி, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர்களுக்கும் கூட உத்வேகத்தின் ஊற்றாக இருந்திருக்கிறது; ஆகையினால் தான் ஜனவரி 22ஆம் தேதியன்று, அயோத்தியில் நான் “தெய்வம் முதல் தேசம் வரை” என்று பேசியிருந்தேன், “இராமன் முதல் நாடு வரை” என்றும் கூறியிருந்தேன்.

நண்பர்களே, அயோத்தியிலே பிராண பிரதிஷ்டை சந்தர்ப்பமானது, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஓரிழையில் இணைத்து வைத்தது. அனைவரின் இறையும் ஒன்றே, அனைவரின் பக்தியும் ஒன்றே, அனைவரின் சொல்லிலும் இராமன், அனைவரின் இதயங்களிலும் இராமன். தேசத்தின் பலர் இந்த வேளையில் இராம பஜனைகளைப் பாடி, அவற்றை இராமனின் பாதாரவிந்தங்களிலே சமர்ப்பணம் செய்தார்கள். ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று மாலையிலே, நாடெங்கிலும் இராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த வேளையிலே, தேசத்தின் சமூகத்தன்மையின் சக்தி பார்க்கப்பட்டது, இதுவே வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உளவுறுதிப்பாட்டின் மிகப் பெரிய ஆதாரமும் ஆகும். மகரசங்கராந்தி முதல் ஜனவரி மாதம் 22ஆம் தேதி வரை தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இலட்சக்கணக்க்கானோர் மிகுந்த சிரத்தையோடு கூட, தங்களது பகுதிகளில் உள்ள புனிதத்தலங்களிலே தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள். பலர் இந்தப் பணியோடு தொடர்புடைய படங்களை, காணொளிகளை அனுப்பியிருக்கிறார்கள் – இந்த உணர்வு தடைப்படக்கூடாது, இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டும். சமூக இயல்பின் இந்தச் சக்தி, நமது தேசத்தை வெற்றியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.

என் அருமையான நாட்டுமக்களே, இந்த முறை ஜனவரி 26ஆம் தேதியன்று நடைபெற்ற அணிவகுப்பு, மிகவும் அற்புதமானதாக இருந்தது; ஆனால் மிக அதிக அளவு விவாதப் பொருளானது என்னவோ, அணிவகுப்பில் கலந்து கொண்ட பெண்கள் சக்தி தான். கர்த்தவ்ய பாதையில், மத்திய பாதுகாப்புப் படையினர், தில்லி போலீசாருடைய பெண்கள் பிரிவு, அணிவகுப்பைத் தொடங்கிய போது, அனைவரும் பெருமிதம் அடைந்தார்கள். பெண்களின் பேண்டு வாத்தியத்தின் அணிவகுப்பு, அவர்களின் அற்புதமான ஒருங்கிணைப்பு ஆகியவற்றைப் பார்த்த போது, நாட்டிலும், அயல்நாடுகளிலும் உள்ளோர் வியந்து போனார்கள். இந்த முறை அணிவகுப்பில் கலந்து கொண்ட 20 அணிகளில் 11 அணிகள் பெண்களின் அணிகளாகவே இருந்தன. இடம்பெற்றக் காட்சி ஊர்திகள் அனைத்திலும் பெண் கலைஞர்களே இருந்ததையும் காண முடிந்தது. நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளிலும் கூட, கிட்டத்தட்ட 1500 பெண்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். பல பெண் கலைஞர்கள், சங்கு, நாகஸ்வரம் மற்றும் நாகதா போன்ற பாரதீய இசை வாத்தியங்களை வாசித்து வந்தார்கள். பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமான DRDO வின் காட்சி ஊர்தி வந்த போது, அதுவும் அனைவரையும் கவனத்தையும் கவர்ந்தது. எப்படி பெண்சக்தியானது நிலம்-நீர்-வானம், இணையம் மற்றும் விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது என்பது இதிலே வெளிப்படுத்தப்பட்டது. 21ஆம் நூற்றாண்டின் பாரதம், இப்படிப்பட்ட பெண்கள் வழிகாட்டும் முன்னேற்றம் என்ற மந்திரத்தோடு கூட முன்னேறி வருகிறது.

நண்பர்களே, அர்ஜுன் விருதுகள் வழங்கு விழாவினை நீங்கள் சில நாட்கள் முன்னர் பார்த்திருப்பீர்கள். குடியரசுத் தலைவரின் மாளிகையிலே, தேசத்தின் பல திறமையான விளையாட்டு வீரர்களும், தடகள வீரர்களும் இதிலே கௌரவிக்கப்பட்டார்கள். இங்கேயும் கூட மக்களின் கவனத்தை நன்றாக கவர்ந்த விஷயம் என்றால், அது அர்ஜுன் விருதுகளைப் பெறும் பெண்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் தாம். இந்த முறை 13 பெண் தடகள வீராங்கனைகளுக்கு அர்ஜுன் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தப் பெண் வீராங்கனைகள், பல பெரிய பந்தயங்களில் பங்கெடுத்திருக்கிறார்கள், பாரதத்தின் கொடியை அங்கே பறக்க விட்டிருக்கிறார்கள். உடல்ரீதியான, பொருளாதாரச் சவால்கள் ஆகியவை எல்லாம், இந்த சாகஸம் படைத்த, திறமைவாய்ந்த வீராங்கனைகளின் முன்னே தாக்குப் பிடிக்க முடியவில்லை. மாறிவரும் பாரதத்தில், அனைத்துத் துறைகளிலும் நமது சிறுமிகள், தேசத்தின் பெண்கள் அற்புதங்களை வெளிப்படுத்தி வருகிறர்கள். மேலும் ஒரு துறை உண்டு, அதிலே பெண்கள் தங்களின் அடையாளத்தைப் பொறித்திருக்கிறார்கள் என்றால் அது சுயவுதவிக் குழுக்கள். இன்று பெண்கள் சுயவுதவிக் குழுக்களின் எண்ணிக்கை தேசத்திலே அதிகரித்திருக்கிறது, அவர்களுடைய பணியாற்றும் எல்லைகளும் விரிவடைந்திருக்கின்றன. கிராமங்கள்தோறும் வயல்களிலே, நமோ ட்ரோன் சகோதரிகள், ட்ரோன் வாயிலாக, வேளாண்மையில் உதவி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை. உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச்சிலே, அங்கே இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி உயிரி உரம், உயிரிப் பூச்சிக்கொல்லி ஆகியவற்றைத் தயாரிக்கும் பெண்களைப் பற்றித் தெரிய வந்தது. சுயவுதவிக் குழுக்களோடு இணைந்த நிபியா பேகம்புர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் பசுஞ்சாணம், வேப்பிலைகள், பலவகையான மருத்துவத் தாவரங்களைக் கலந்து, உயிரி உரத்தைத் தயார் செய்கிறார்கள். இதைப் போலவே இந்தப் பெண்கள், இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் மிளகாயைப் பசை போல அரைத்து, உயிரி பூச்சிக்கொல்லியைத் தயாரிக்கிறார்கள். இந்தப் பெண்கள் அனைவரும் இணைந்து உன்னதி ஜைவிக் இகாயி, அதாவது உன்னதி உயிரி அலகு என்ற பெயரிலான அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். உயிரிப் பொருட்களைத் தயாரிப்பதில் இந்தப் பெண்களுக்கு இந்த அமைப்பு உதவிகரமாக இருக்கிறது. இதன் வாயிலாகத் தயாரிக்கப்படும் உயிரி உரம், உயிரிப் பூச்சிக்கொல்லி ஆகியவற்றுக்கான தேவை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்று, அருகில் இருக்கும் உள்ள கிராமங்களில் 6000த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இவர்களிடமிருந்து உயிரிப் பொருட்களை வாங்கி வருகிறார்கள். இதன் காரணமாக சுயவுதவிக்குழுவோடு தொடர்புடைய இந்தப் பெண்களின் வருமானம் அதிகரித்திருக்கிறது, அவர்களின் பொருளாதார நிலையும் மேம்பாடு கண்டிருக்கிறது.

என் மனம்நிறை நாட்டுமக்களே, சுயநலமில்லாத உணர்வோடு சமூகத்தையும், தேசத்தையும் சக்தியுடையதாக ஆக்கும் பணியில் ஈடுபடும் நாட்டுமக்களின் முயற்சிகளை மனதின் குரலில் நாம் முன்னிறுத்துகிறோம். அந்த வகையிலே, மூன்று நாட்கள் முன்பாக தேசத்தில் பத்ம விருதுகளை அறிவித்த போது, மனதின் குரலில் இப்படிப்பட்ட மனிதர்கள் குறித்த விவாதம் இயல்பாக நடக்கும் ஒன்று. இந்த முறையும் கூட இப்படிப்பட்ட நாட்டுமக்கள் பாலருக்கு பத்ம விருதுகள் அளிக்கப்பட்டிருந்தன, இவர்கள் களத்தோடு இணைந்து, சமூகத்தில் பெரியபெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய செயல்களைப் புரிந்திருப்பவர்கள். கருத்தூக்கமளிக்கும் உத்வேகம் நிறைந்த இந்த நபர்களின் வாழ்க்கைப் பயணம் பற்றித் தெரிந்து கொள்வது தொடர்பாக, தேசமெங்கும் அதிக ஆர்வம் காணப்பட்டிருக்கிறது. ஊடகங்களின் தலைப்புச்செய்திகளைத் தாண்டி, செய்தித்தாள்களின் முதல்பக்கங்களுக்கு அப்பால், எந்த ஒரு புகழ் வெளிச்சமும் இல்லாமல் இவர்கள் சமூகச் சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள். நாம் இவர்களைப் பற்றி மிகச் சிறிய அளவே ஒரு வேளை அறிந்திருப்போம் ஆனால், இப்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி அனைத்து விதங்களிலும் விவாதிக்கப்படுகின்றன, மக்களும் இவர்களைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கின்றார்கள். பத்மவிருதுகளைப் பெறும் பெரும்பாலானோர், தத்தமது துறைகளில் மிகவும் சிறப்பான செயல்களைப் புரிந்து வருகிறார்கள். சிலர் அவசரகால ஊர்திக்கு ஏற்பாடு செய்து தருகிறார்கள், சிலர் யாருமற்ற அநாதைகளுக்கு குடியிருக்க இடம் அமைத்துத் தருகிறார்கள். சிலர் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு, இயற்கைப் பராமரிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 650க்கும் மேற்பட்ட நெல் ரகங்களைப் பாதுகாக்கும் பணியிலும் கூட சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். சிலரோ, போதைப்பொருள் மற்றும் மதுபானத்தால் பீடிக்கப்பட்டவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். சுயவுதவிக் குழுக்கள், குறிப்பாக பெண்சக்தி இயக்கம் வாயிலாக பலர் மக்களை ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். பத்ம விருதுகளைப் பெறுபவர்களில் 30 பேர் பெண்கள் என்பது நாட்டுமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். இந்தப் பெண்கள், கள அளவில் தங்கள் பணிகள் வாயிலாக சமூகத்தையும், தேசத்தையும் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்களே, பத்ம விருத்களைப் பெறும் அனைவரின் பங்களிப்பானது, நாட்டுமக்களுக்கு உத்வேகம் அளிக்கவல்லது. இந்த முறை விருது பெறுவோரில் பாரம்பரிய இசை, பாரம்பரிய நடனம், நாட்டுப்புற நடனம், நாடகத்துறை மற்றும் பஜனை உலகிலே தேசத்திற்குப் பெருமை சேர்ப்போர் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். பிராக்கிருதம், மாலவி, லம்பாடி மொழிகளில் பிரமாதமான செயல்களைப் புரிந்தோருக்கும் கூட கௌரவம் வழங்கப்பட்டிருக்கிறது. அயல்நாடுகளைச் சேர்ந்த பலருக்கு பத்ம விருது அளித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் பணிகளால் பாரத நாட்டு கலாச்சாரம், மரபு ஆகியவற்றுக்குப் புதிய உயர்வு கிடைத்து வருகிறது. இவர்களில் ஃப்ரான்ஸ், தாய்வான், மெக்சிகோ, வங்கதேசத்தைச் சேர்ந்த குடிமக்களும் அடங்குவார்கள்.

நண்பர்களே, கடந்த ஒரு தசாப்தத்திலே, பத்மவிருதுகள் வழங்கும் முறையானது முழுமையாக மாற்றமடைந்திருக்கிறது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்போது இது மக்களின் பத்மவாக மாறிவிட்டது. பத்ம விருதுகளை அளிக்கும் முறையில் பல மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதிலே இப்போது தங்களைத் தாங்களே முன்னிறுத்தும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாகத் தான், 2014ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த முறை 28 மடங்கு அதிக நியமனங்கள் கிடைத்திருக்கின்றன. பத்ம விருதுகளின் பெருமை, நம்பகத்தன்மை, அதன்மீதான நன்மதிப்பு ஒவ்வொர் ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது என்பது நமக்கு விளங்குகிறது. பத்ம விருதுகளைப் பெறும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, ஒவ்வொரு வாழ்க்கைக்கும் ஒரு இலக்கு உள்ளது, ஒவ்வொருவரும் ஒரு இலட்சியத்தை நிறைவு செய்யவே பிறப்பெடுத்திருக்கிறார்கள் என்று கூறப்படுவதுண்டு. இதன் காரணமாக மக்கள் முழுமையான அர்ப்பணிப்போடு தங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறார்கள். சிலர் சமூக சேவை வாயிலாக, சிலர் இராணுவத்தில் சேர்வது மூலம், சிலரோ அடுத்த தலைமுறைக்குக் கல்வி கற்பிப்பதன் வாயிலாக என்று தங்கள் கடமைகளின்படி ஒழுகி வருகிறார்கள். ஆனால் நண்பர்களே, வாழ்க்கையின் இறுதிக்குப் பிறகும் கூட, சமூக வாழ்க்கையின்பால் தங்களுடைய பொறுப்புக்களை நிறைவேற்றும் சிலரும் கூட நம்மிடையே இருக்கத் தான் செய்கிறார்கள். இதற்கு அவர்கள் கண்டிருக்கும் வழிதான் உடலுறுப்பு தானம். தற்காலத்தில் நாட்டில் ஓராயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களின் மரணத்திற்குப் பிறகு தங்களின் உடலுறுப்புக்களைத் தானமாக அளித்துச் சென்றிருக்கிறார்கள். இந்தத் தீர்மானம் எளிதானது அல்ல. ஆனால் இந்தத் தீர்மானம் பலரது உயிர்களைக் காக்கவல்லது. தங்களுடைய நெருங்கிய சொந்தங்களின் இறுதி ஆசைக்கு மதிப்பளித்த அத்தகையோரின் குடும்பங்களுக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இன்று தேசத்திலே பல அமைப்புகள் இந்த திசையிலே பல உத்வேகமளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சில அமைப்புகள் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் அதே வேளையில், சில அமைப்புகள் அங்கதானம் செய்ய விருப்பமுடையோரைப் பதிவு செய்வதில் உதவிகரமாகச் செயல்படுகின்றன. இப்படிப்பட்ட முயற்சிகளால் உறுப்புதானம் குறித்த ஆக்கப்பூர்வமான சூழல் தேசத்தில் உருவாகி வருகிறது, மக்களில் உயிர்களும் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

என் இனிய நாட்டுமக்களே, நோயாளிகளின் வாழ்க்கையை எளிதாக ஆக்கக்கூடிய, அவர்களின் பிரச்சினைகளைக் குறைக்கக்கூடிய ஒரு நம் நாட்டுக் கண்டுபிடிப்பு பற்றி உங்களிடம் தெரிவிக்க இருக்கிறேன். உங்களில் பலர் ஆயுர்வேதம், சித்தா அல்லது யுனானி மருத்துவமுறைகள் வாயிலாக சிகிச்சையை மேற்கொண்டிருப்பீர்கள். ஆனால் இந்த நோயாளிகள், இதே முறையின் வேறு ஒரு மருத்துவரிடம் செல்லும் போது இவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த சிகிச்சை முறைகளில் நோய்களின் பெயர்கள், சிகிச்சை மற்றும் மருந்துகள் விஷயத்தில் பொதுவான பதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. ஒவ்வொரு மருத்துவரும் தங்கள் வழிமுறைப்படி நோயின் பெயர் மற்றும் சிகிச்சை நெறிமுறைகளை எழுதுகிறார்கள். வேறு ஒரு மருத்துவருக்குப் பலமுறை புரிதலில் கடினத்தை அடிக்கடி இது ஏற்படுத்துகிறது. பல தசாப்தங்களாகத் தொடர்ந்தவரும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. ஆயுஷ் அமைச்சகம், ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவ முறைகளோடு தொடர்புடைய தரவுகளையும், அகராதியையும் வகைப்படுத்தியிருக்கிறது, இதிலே உலக சுகாதார அமைப்பும் உதவி புரிந்திருக்கிறது. இருவரின் முயற்சிகளின்படி ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா சிகிச்சை முறைகளில் நோய் மற்றும் சிகிச்சை தொடர்பான அகராதியின் தனிக்குறியீடு செய்யப்பட்டுவிட்டது. இந்த தனிக்குறியாக்க முறையின் உதவியால், இப்போது அனைத்து மருத்துவர்களும் மருத்துவக் குறிப்பு அல்லது மருந்துச் சீட்டில் ஒரே மாதிரியான மொழியில் எழுத முடியும். இதனால் ஒரு நன்மை என்னவென்றால், நீங்கள் இந்தச் சீட்டை எடுத்துக் கொண்டு வேறொரு மருத்துவரிடம் சென்றீர்களென்றால், அந்த மருத்துவருக்கு இதன் முழு விபரமும் கிடைத்து விடும். உங்களது நோய், சிகிச்சை, மருந்துகள் என்னென்ன, எப்போதிலிருந்து சிகிச்சையை மேற்கொண்டு வருகிறீர்கள், உங்களுக்கு இருக்கும் ஒவ்வாமை என்ன என அனைத்துத் தகவல்களையும் தெரிந்து கொள்வதற்கு இந்தச் சீட்டு உதவிகரமாக இருக்கும். ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருப்போருக்கு இதனால் மேலும் ஒரு நன்மை உண்டாகும். பிற நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கும் கூட நோய், மருந்து மற்றும் அதன் தாக்கம் பற்றிய முழுத் தகவலும் கிடைக்கும். ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்லவும், பல விஞ்ஞானிகளோடு இணைவதாலும் இந்த சிகிச்சை முறை, மேலும் சிறப்பான விளைவுகளை அளிக்கும், மக்களுக்கும் இவற்றின்பால் ஈர்ப்பும் அதிகரிக்கும். இந்த ஆயுஷ் வழிமுறைகளோடு இணைந்திருக்கும் நமது மருத்துவர்கள், இந்தத் தனிக் குறியீட்டு முறையை மிக விரைவிலேயே பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

எனது நண்பர்களே, ஆயுஷ் சிகிச்சை முறை பற்றிப் பேசி வரும் போது, என் கண்முன்னால் யானுங்க் ஜாமோஹ் லைகோவின் படமும் விரிகிறது. செல்வி. யானுங்க், அருணாச்சல் பிரதேசத்தில் வசிப்பவர், மருத்துவத் தாவரங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர். இவர் பழங்குடி மக்களின் பாரம்பரிய சிகிச்சைமுறைக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டி, கணிசமான பணிகளைச் செய்திருக்கிறார். இந்தப் பங்களிப்பிற்காக இவருக்கு இந்த முறை பத்ம விருதும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதைப் போலவே, இந்த முறை சத்தீஸ்கட்டின் ஹேமசந்த் மாஞ்ஜீ அவர்களுக்கும் கூட பத்ம விருது அளிக்கப்பட்டிருக்கிறது. வைத்யராஜ் ஹேமசந்த் மாஞ்ஜீ அவர்களும் ஆயுத் சிகிச்சை முறையின் துணையோடு மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். சத்தீஸ்கட்டின் நாராயன்பூரைச் சேர்ந்த ஏழை நோயாளிகளுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சேவையாற்றி வருகிறார். நமது தேசத்தின் ஆயுர்வேத மற்றும் தாவர மருந்துகளின் அறியப்படாதிருக்கும் களஞ்சியத்தைப் பராமரிப்பதிலே யானுங்க், ஹேமசந்த் போன்றவர்களின் பங்களிப்பு மகத்தானது.

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரல் வாயிலாக நமக்கிடையேயான உறவு, இது பத்தாண்டுகள் பழமையானதாக ஆகியிருக்கிறது. சமூக ஊடகங்களும், இணையமும் கோலோச்சும் இந்தக் காலகட்டத்திலும் கூட, வானொலி நாடு முழுவதையும் இணைக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஊடமாக இருக்கிறது. வானொலியின் பலம் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்தவல்லது, இதன் ஆச்சரியமான எடுத்துக்காட்டு, சத்தீஸ்கட்டிலே காணக் கிடைக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாகவே இங்கே மக்களுக்கு விருப்பமான ஒரு நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பாகி வருகிறது. இதன் பெயர் ஹமர் ஹாதீ – ஹமர் கோட். பெயரைக் கேட்டவுடனே வானொலிக்கும், யானைக்கும் என்ன தொடர்பிருக்க முடியும் என்று எண்ணமிடத் தோன்றும். ஆனால் இதில் தான் வானொலியின் அழகே அடங்கியிருக்கிறது. சத்தீஸ்கட்டில் ஆகாசவாணியின் நான்கு நிலையங்களான அம்பிகாபூர், ராய்பூர், பிலாஸ்பூர் மற்றும் ராய்கட்டில், ஒவ்வொரு மாலையும் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது என்பதோடு, சத்தீஸ்கட்டின் காடுகளிலும், அதற்கருகில் இருக்கும் பகுதிகளில் வசிப்போரும் மிகுந்த கவனத்தோடு இந்த நிகழ்ச்சியைக் கேட்டு வருகிறார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். யானைக்கூட்டம் காட்டிலே எந்தப் பகுதியில் சென்று கொண்டிருக்கிறது என்ற தகவல் ஹமர் ஹாதீ –ஹமர் கோட் என்ற இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவல் இங்கிருப்போருக்கு மிகவும் பயனுடையதாக இருக்கிறது. வானொலி வாயிலாக யானைகளின் கூட்டம் பற்றிய தகவல் தெரிந்தவுடனேயே மக்கள் எச்சரிக்கை அடைகிறார்கள். எந்தப் பாதையில் யானைகள் பயணிக்கின்றன என்று அறிந்து கொண்டு, அங்கே செல்லாமல் இருப்பதால் அபாயம் தவிர்க்கப்படுகிறது. இதனால் ஒருபுறம் யானைகளின் கூட்டத்தால் இழப்பிற்கான சாத்தியக்கூறு குறைகிறது, மறுபுறத்தில் யானைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதிலும் இது உதவிகரமாக இருக்கிறது. இந்தத் தரவுகளின் பயன்பாடு, எதிர்காலத்தில் யானைகளைப் பாதுகாப்பதில் உதவிகரமாக இருக்கும். யானைகளோடு தொடர்புடைய தகவல்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்கப்படுகின்றன. இதனால் காடுகளின் அக்கம்பக்கத்தில் இருப்போருக்கு, யானைகளோடு இசைவாக வாழ்வது எளிதாக ஆகியிருக்கிறது. சத்தீஸ்கட்டின் இந்த விநோதமான முன்னெடுப்பு மற்றும் இதன் அனுபவங்களால் ஆதாயத்தைக் கண்டு, தேசத்தின் பிற வனப்பிரதேசங்களில் வசிப்போரும் இதைப் பின்பற்றி ஆதாயம் அடையலாம்.

என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதியன்று நாமனைவரும் தேசிய வாக்காளர் தினத்தைக் கொண்டாடினோம். நமது கௌரவம்மிக்க ஜனநாயகப் பாரம்பரியங்களுக்கான ஒரு சிறப்பான தினம் ஆகும் இது. இன்று தேசத்தில் சுமார் 96 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இந்தப் எண்ணிக்கை எத்தனை பெரியது என்பதை நீங்கள் அறிவீர்கள். இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையை விடவும் மூன்று பங்கு பெரியது. ஐரோப்பாவின் மொத்த மக்கள்தொகையை விடவும் இது ஒண்ணரை பங்கு அதிகமானது. வாக்குச்சாவடிகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், தேசத்தில் இன்று இவற்றின் எண்ணிக்கை சுமார் பத்தரை இலட்சம் இருக்கிறது. பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனும், தனது ஜனநாயகக் கடமையைப் பயன்படுத்த இயல வேண்டும் என்பதற்காக, நமது தேர்தல் ஆணையம், ஒரே ஒரு வாக்காளர் இருக்கும் இடங்களிலும் கூட வாக்குச் சாவடியை அமைக்கப்படுகிறது. தேசத்தில் ஜனநாயக மதிப்பீடுகளைப் பலப்படுத்தும் வகையில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நமது தேர்தல் ஆணையத்தையும் நான் பாராட்ட விரும்புகிறேன்.

நண்பர்களே, இன்று தேசத்தில் உற்சாகமான விஷயம் என்னவென்றால், உலகின் பல நாடுகளில் வாக்களிப்போரின் சதவீதம் குறைந்து வரும் வேளையில், பாரதத்தில் வாக்களிப்போரின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. 1951-52இலே, தேசத்திலே முதன்முறையாக தேர்தல் நடந்த போது, சுமார் 45 சதவீதம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தார்கள். இன்று இந்தப் புள்ளிவிவரம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. தேசத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையோடு கூடவே, வாக்களிப்பும் அதிகரித்திருக்கிறது. நமது இளையதலைமுறை வாக்காளர்களுக்கான பதிவிற்கான வாய்ப்பு அதிகம் அளிக்கப்பட வேண்டி, இதற்காக அரசாங்கம் சட்டமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. வாக்காளர்களுக்கிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் பொருட்டு சமூக அளவிலும் பல முயற்சிகள் நடைபெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சிலர் வீடுதோறும் சென்று வாக்களிப்பு பற்றி வாக்காளர்களுக்குத் தெரிவிக்கிறார்கள், சிலர் சித்திரங்கள் வாயிலாகவும், சிலரோ தெருமுனை நாடகங்கள் மூலமாகவும் இளைஞர்களின் கருத்தைக் கவரும் வகையில் பணிபுரிகிறார்கள். இப்படியான அனைத்து முயற்சிகளும், நமது மக்களாட்சி என்ற உற்சவத்திலே, பல்வேறு வண்ணங்களை இட்டு நிரப்புகிறது. வாக்காளர் பட்டியிலில் உங்கள் பெயரை கண்டிப்பாக இணைத்துக் கொள்ளுங்கள் என்று முதல்முறையாக வக்களிக்கப்போகும் நமது வாக்காளர்களிடம் மனதின் குரல் வாயிலாக நான் கேட்டுக் கொள்கிறேன். தேசிய வாக்காளர் சேவைத் தளம் மற்றும் வாக்காளர் உதவி எண் செயலி வாயிலாக, அவர்கள் எளிதாக இதை இணையம் மூலமாக நிறைவு செய்ய முடியும். உங்களுடைய ஒரு வாக்கு, தேசத்தின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கக்கூடும், தேசத்தின் எதிர்காலமாக ஆகக் கூடும் என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, இன்று ஜனவரி மாதம் 28ஆம் தேதியன்று பாரதத்தின் இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளின் பிறந்த நாளாகும். இவர்கள் பல்வேறு காலகட்டங்களில் தேசபக்தியின் உதாரணத்தை நிலைக்கச் செய்தவர்கள். பஞ்சாபின் சிங்கமான லாலா லாஜ்பத் ராய் அவர்களுக்கு இன்று தேசம் நினைவாஞ்சலிகளை அளித்து வருகிறது. லாலா அவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் எப்படிப்பட்ட வீரராக இருந்தாரென்றால், அந்நிய ஆட்சியிடமிருந்து விடுதலை பெற்றுத்தரும் நோக்கத்தில் தனது இன்னுயிரையே ஆகுதியாக அளித்தார். லாலா அவர்களின் ஆளுமையானது சுதந்திரப் போராட்டத்தோடு மட்டும் நின்று போகவில்லை. அவர் மிகுந்த தொலைநோக்குப் பார்வை உடையவராக இருந்தார். பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் பிற அமைப்புக்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார் இவர். இவருடைய நோக்கம் அந்நியர்களை நாட்டை விட்டு விரட்டுவது மட்டுமல்ல, மாறாக, தேசத்தைப் பொருளாதாரரீதியாக பலப்படுத்தும் தொலைநோக்கும் கூட இவருடைய எண்ணத்தில் முக்கிய பங்கு வகித்தது. இவருடைய கருத்துக்களும், இவருடைய உயிர்த்தியாகமும் பகத் சிங்கின் மனதிலே பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஃபீல்ட் மார்ஷல் கே. எம். கரியப்பா அவர்களுக்கும் நான் சிரத்தையுடனான அஞ்சலிகளை அளிக்கும் தினம் இன்று. இவர் வரலாற்றின் மகத்துவமான காலத்தில் நமது படைக்குத் தலையேற்று, சாகஸம் மற்றும் வீரத்தின் எடுத்துக்காட்டாக விளங்கினார். நமது இராணுவத்தை சக்தியுடையதாக ஆக்குவதில் இவருடைய மகத்துவமான பங்களிப்பு உண்டு.

என் கனிவுநிறை நாட்டுமக்களே, இன்று விளையாட்டு உலகிலேயும் கூட பாரதம் தினம்தினம் புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது. விளையாட்டுலகில் முன்னேறிச் செல்ல, விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும், தேசத்தில் நிறைய விளையாட்டுப் பந்தயங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பன அவசியமானது. இந்த எண்ணத்தோடு கூடவே இன்று பாரதத்தில் புதியபுதிய விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. சில நாட்கள் முன்பாகத் தான் சென்னையில் கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதிலே தேசத்தின் 5000த்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கெடுத்தார்கள். இன்று பாரதத்தில் தொடர்ந்து இப்படிப்பட்ட புதிய தளங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன, இவை காரணமாக விளையாட்டு வீரர்களுக்குத் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. கடற்கரை விளையாட்டுக்கள் இதே போன்றதொரு தளமாக ஆகியிருக்கிறது. தீவ் தீவிலே இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தீவ் தீவு, மத்திய யூனியன் பிரதேசம் என்பதை நீங்கள் அறிவீர்கள், சோமநாத்துக்கு மிக அருகிலே இது இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தீவில் இந்தக் கடற்கரை விளையாட்டுக்கள் தொடக்கி வைக்கப்பட்டன. இது பாரதத்தின் முதல் பல்விளையாட்டு கடற்கரை விளையாட்டுக்கள் ஆகும். இவற்றிலே டக் ஆஃப் வார், கடல் நீச்சல், பென்காக்சிலாட், மல்லகம்பம், பீச் வாலிபால், பீச் கபடி, பீச் கால்பந்தாட்டம், பீச் குத்துச்சண்டை போன்ற போட்டிகள் நடைபெற்றன. இவற்றிலே அனைத்துப் போட்டியாளர்களுக்கும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது, கடல் பகுதிகள் இல்லாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கூட இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்கள் என்பது உங்களுக்குப் பேராச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தப் போட்டியில் அதிக அளவில் பதக்கங்களை மத்திய பிரதேசம் வென்றது, இங்கே கடற்கரை என்பதே கிடையாது. விளையாட்டுக்களின்பால் இந்தக் கண்ணோட்டம், எந்த ஒரு தேசத்தையும், விளையாட்டுக்களின் உலகின் மகுடமணியாக ஆக்கவல்லது.

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை இம்மட்டே. பிப்ரவரியிலே மீண்டும் ஒருமுறை உங்களை வந்து சந்திப்பேன். நாட்டுமக்களின் சமூக முயற்சிகளால், தனிப்பட்ட முயற்சிகளால் எப்படி தேசம் முன்னேறி வருகிறது, இது குறித்தே நமது கவனம் இருக்கும். நண்பர்களே, நாளை 29ஆம் தேதியன்று காலையில் பரீக்ஷா பே சர்சா, தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. தேர்வுகளை எதிர்கொள்வோமின் இது 7ஆவது பதிப்பாகும். அனைவரும் எப்போதும் ஆவலோடு காத்திருந்து கேட்கும் வகையிலான நிகழ்ச்சி இது. இதனால் மாணவர்களோடு உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது, அவர்களுடைய தேர்வுகள் தொடர்பான மனவழுத்ததைக் குறைக்கும் முயற்சிகளில் நான் ஈடுபடுகிறேன். கடந்த ஏழாண்டுகளிலே, பரீக்ஷா பே சர்ச்சா, கல்வி மற்றும் தேர்வுகளோடு தொடர்புடைய பல பிரச்சினைகள் குறித்து உரையாட ஒரு மிகச் சிறந்த ஊடகமாக ஆகி இருக்கிறது. இந்த முறை இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் இதிலே தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள், தங்கள் உள்ளீடுகளையும் அளித்திருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நாம் முதன்முறையாக 2018இலே இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிய வேளையில் இந்த எண்ணிக்கை வெறும் 22,000ஆக இருந்தது. மாணவச் செல்வங்களுக்கு உத்வேகம் அளிக்கவும், தேர்வுகளின் அழுத்தங்கள் குறித்து விழிப்புணர்வைப் பரப்பவும், பல நூதனமான முயற்சிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. நாளை சாதனைப் பதிவேற்படுத்தும் எண்ணிக்கையில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும், குறிப்பாக இளைஞர்களிடத்தில், மாணவச் செல்வங்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களோடு கலந்து பேசுவது எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. இந்தச் சொற்களோடு நான் மனதின் குரலின் இந்தப் பதிப்பினை நிறைவு செய்கிறேன், உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். விரைவிலேயே நாம் மீண்டும் சந்திப்போம். நன்றிகள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi visits the Indian Arrival Monument
November 21, 2024

Prime Minister visited the Indian Arrival monument at Monument Gardens in Georgetown today. He was accompanied by PM of Guyana Brig (Retd) Mark Phillips. An ensemble of Tassa Drums welcomed Prime Minister as he paid floral tribute at the Arrival Monument. Paying homage at the monument, Prime Minister recalled the struggle and sacrifices of Indian diaspora and their pivotal contribution to preserving and promoting Indian culture and tradition in Guyana. He planted a Bel Patra sapling at the monument.

The monument is a replica of the first ship which arrived in Guyana in 1838 bringing indentured migrants from India. It was gifted by India to the people of Guyana in 1991.