எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் 110ஆவது பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன். எப்போதும் போலவே, இந்த முறையும் உங்களுடைய பல்வேறு ஆலோசனைகள், உள்ளீடுகள், விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. மேலும் எப்போதும் போலவே இந்த முறையும் கூட என்ன சவால் என்றால், இந்தப் பகுதியில் எவற்றையெல்லாம் இடம் பெறச் செய்வது என்பது தான். ஆக்கப்பூர்வமான உணர்வில் ஒன்றை ஒன்று விஞ்சிய உள்ளீடுகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றில் பல, மற்றவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பதோடு கூடவே, தங்களுடைய வாழ்க்கையையும் மேலும் சிறப்பானதாக ஆக்குவதில் ஈடுபட்டிருக்கும் நாட்டுமக்களைப் பற்றியவை.
நண்பர்களே, சில நாட்கள் கழித்து மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று நாம் பெண்கள் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். இந்த விசேஷமான நாளானது, தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பெண்-சக்தியின் பங்களிப்பைப் போற்றும் சந்தர்ப்பத்தை நமக்கு அளிக்கிறது. பெண்களுக்கு சமமான சந்தர்ப்பம் வாய்க்கப்பெறும் போது மட்டுமே உலகம் தன்னிறைவு பெற்றதாக ஆகும் என்று மகாகவி பாரதியார் கூறியிருக்கிறார். இன்று பாரதத்தின் பெண்-சக்தி என்பது அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தின் புதிய சிகரங்களைத் தொட்டு வருகிறது. நமது தேசத்திலே, கிராமங்களில் வசிக்கும் பெண்கள் எல்லாம் ட்ரோன்களை இயக்குவார்கள் என்று சில ஆண்டுகள் முன்பு வரை யாராவது கற்பனை செய்து பார்த்திருப்பார்களா!! ஆனால் இன்று இது சாத்தியமாகி இருக்கிறது. இன்று, கிராமங்கள்தோறும் ட்ரோன் தீதீ எனும் இந்தப் பெண்களைப் பற்றியே பேச்சாக இருக்கிறது. ஒரு மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் காணும் போது, இந்த முறை மனதின் குரலில், ஒரு நமோ ட்ரோன் தீதியோடு நாம் ஏன் உரையாடக் கூடாது என்று நான் சிந்தித்தேன். நம்மோடு இந்த வேளையிலே, நமோ ட்ரோன் தீதியான சுனிதா அவர்கள் இணைந்திருக்கிறார். இவர் உத்திர பிரதேசத்தின் சீதாபூரைச் சேர்ந்தவர், வாருங்கள், அவரோடு நாம் உரையாடுவோம்.
மோதி ஜி: சுனிதா தேவி அவர்களே, உங்களுக்கு வணக்கம்.
சுனிதா தேவி: வணக்கம் சார்.
மோதி ஜி: சரி சுனிதா அவர்களே, முதல்ல நீங்க உங்க குடும்பம் பத்தி, உங்க பின்னணி பத்தி சொல்லுங்க, நான் தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்.
சுனிதா தேவி: சார், எங்க குடும்பத்தில ரெண்டு பிள்ளைங்க, நான், என் கணவர், எங்கம்மா.... இவங்க எல்லாம் இருக்காங்க.
மோதி ஜி: நீங்க எதுவரை படிச்சிருக்கீங்க சுனிதா ஜி.
சுனிதா தேவி: சார், பி.ஏ. (இறுதியாண்டு) வரை.
மோதி ஜி: அப்புறம் வேலை எனும் போது, வாழ்வாதாரத்துக்கு என்ன செய்யறீங்க?
சுனிதா தேவி: வேலைன்னா, விவசாயம் தானுங்கய்யா, வயல் வேலை.
மோதி ஜி: சரி சுனிதா ஜி, இந்த ட்ரோன் தீதியாகற உங்க பயணம் எப்படி தொடங்கிச்சு. உங்களுக்கு எங்க பயிற்சி கொடுத்தாங்க, என்ன மாதிரியான மாற்றம் எல்லாம் ஏற்பட்டிருக்கு, எனக்கு தொடக்கத்திலேர்ந்து ஒண்ணு விடாம சொல்லுங்க.
சுனிதா தேவி: கண்டிப்பா சார். பயிற்சி இங்க நம்ம ஃபூல்புர் இஃப்கோ கம்பெனியில குடுத்தாங்க இலாஹாபாதில, அங்க தான் பயிற்சி கிடைச்சுது.
மோதி ஜி: அதுக்கு முன்னால நீங்க ட்ரோன் பத்தி ஏதும் முன்னபின்ன கேள்விப்பட்டிருந்தீங்களா?
சுனிதா தேவி: சார், கேள்விப்பட்டது கிடையாதுங்க. ஆனா ஒருமுறை மட்டும் சீதாபுர்ல இருக்கற கிருஷி விஞ்ஞான் கேந்திரத்தில பார்த்திருக்கேன். அப்பத் தான் முத முறையா ட்ரோனை நான் பார்த்தது.
மோதி ஜி: சுனிதா ஜி, அது தான் நீங்க முதமுறையா அங்க போனது, சரிதானே!!
சுனிதா தேவி: ஆமாங்க.
மோதி ஜி: முத நாள் உங்களுக்கு ட்ரோனை காண்பிச்சிருப்பாங்க, பிறகு பலகையில எழுதிப் போட்டு கத்துக் குடுத்திருப்பாங்க, காகிதத்தில எழுதி படிக்க வச்சிருப்பாங்க, பிறகு மைதானத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயி, பயிற்சி குடுத்திருப்பாங்க, இது எல்லாத்தைப் பத்தியும் விவரமா சொல்லுங்களேன்.
சுனிதா தேவி: கண்டிப்பா சொல்றேன் சார். முத நாளன்னைக்கு நாங்க போன அடுத்த நாளிலிருந்து, எங்களுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. முதல்ல கோட்பாடு கத்துக் குடுத்தாங்க, பிறகு ரெண்டு நாள் வரை வகுப்பு நடத்தினாங்க. வகுப்புல ட்ரோன்ல என்னென்ன பாகங்கள் இருக்கு, எப்படிஎப்படி இயக்கறதுன்னு, எல்லா விஷயங்களும் கோட்பாடு வகுப்புல நடத்தினாங்க. 3ஆவது நாளன்னைக்கு சார், எங்களுக்கு தேர்வு வச்சாங்க, அதுக்குப் பிறகு கணிப்பொறியிலயும் ஒரு தேர்வு வச்சாங்க. அதாவது முதல்ல வகுப்பு எடுப்பாங்க, பிறகு தேர்வு எழுதச் சொல்லுவாங்க. பிறகு தான் களப்பயிற்சி; அதாவது எப்படி ட்ரோனை எழும்பச் செய்யணும், எப்படி அதைக் கட்டுப்பாட்டுல வச்சுக்கணும் மாதிரியான விஷயங்கள் எல்லாம் இந்தக் களப்பயிற்சியில கத்துக் கொடுத்தாங்க.
மோதி ஜி: பிறகு ட்ரோன் என்ன வேலை செய்யும்னு கத்துக் கொடுத்தாங்களா?
சுனிதா தேவி: சார் கண்டிப்பா. அதாவது பயிர் இப்ப அறுவடைக்கு தயாராயிட்டு இருக்கு, இப்ப மழை இல்லை ஏதோ காரணத்தால வயல்ல எங்களால, இல்லை வேலையாட்களால நுழைய முடியலைன்னா இவை வாயிலா ரொம்ப ஆதாயங்கள் விவசாயிகளுக்கு ஏற்படும், வயல்ல நாங்க நுழைய வேண்டிய அவசியமே இல்லை. நாம வரப்பு மேல நின்னுக்கிட்டு, வயல்ல ஏதும் புழுபூச்சி நுழைஞ்சிருக்கா, நாம என்ன முன்னெச்சரிக்கை எடுக்கணும், எல்லாத்தையும் நமக்குப் புட்டுபுட்டு வச்சிடும், விவசாயிகளுக்கும் ரொம்ப உதவிகரமா இருக்கும். சார், இந்த ட்ரோனை வச்சு நாங்க இதுவரைக்கும் 35 ஏக்கருக்கு ஸ்ப்ரே செஞ்சிருக்கோம்.
மோதி ஜி: அப்ப இதனால பயனிருக்குன்னு விவசாயிகளுக்கும் புரியுதா?
சுனிதா தேவி: கண்டிப்பா சார். விவசாயிகளுக்கு ரொம்ப சந்தோஷம், அவங்க இதை ரொம்ப பாராட்டிப் பேசறாங்க. இதனால நேரமும் மிச்சப்படுது, எல்லா வேலைகளையும் இதுவே பார்த்துக்குது. தண்ணி, மருந்துன்னு எல்லாத்தையும் இதுவே பார்த்துக்குது, நாம வந்து வயலோட அளவு, எல்லையை சொன்னா மட்டும் போதும், எல்லா வேலையையும் அரை மணி நேரத்தில செஞ்சு முடிக்க முடியுது.
மோதி ஜி: அப்ப இந்த ட்ரோனை பார்க்கவே ஆளுங்க வந்து போவாங்க இல்லை?
சுனிதா தேவி: சார், அதை ஏன் கேக்கறீங்க. ட்ரோனைப் பாக்கவே ஏகப்பட்ட பேருங்க வராங்க. வயல்ல மருந்தடிக்க உங்களைக் கூப்பிடறோம், உதவி செய்யுங்கன்னு பெரியபெரிய விவசாயிகள்லாம் என்கிட்டேர்ந்து நம்பர் வாங்கிட்டுப் போறாங்க.
மோதி ஜி: நல்லது. நான் ஏன் இதைக் கேக்கறேன்னா, லட்சாதிபதி தீதியை உருவாக்கறதுங்கற ஒரு இலக்கு எனக்கு இருக்கு. இன்னைக்கு நீங்க பேசறதை, ஒரு ட்ரோன் தீதி முதமுறையா என் கூட பேசறதை நாடு முழுக்க இருக்கற சகோதரிகள் கேட்டுக்கிட்டு இருக்காங்க, அவங்க கிட்ட நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?
சுனிதா தேவி: இன்னைக்கு நான் ஒரே ஒரு ட்ரோன் தீதியா இருக்கலாம், ஆனால் என்னை மாதிரியே ஆயிரக்கணக்கான சகோதரிகள் முன்வந்து என்னை மாதிரியே ட்ரோன் தீதியா ஆகணும், என் கூட ஆயிரக்கணக்கான நபர்கள் இணையும் போது தான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும், நம்ம எல்லாருக்கும் ட்ரோன் தீதிங்கற அடையாளம் கிடைக்கும்.
மோதி ஜி: சரி சுனிதா அவர்களே, உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள். இந்த நமோ ட்ரோன் தீதி, இவர் தேசத்தின் விவசாயத்தை நவீனமயமாக்கும் ஒரு மிகப்பெரிய ஊடகமாக ஆகி வருகிறார். என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.
சுனிதா தேவி: நன்றி சார். ரொம்ப நன்றி.
மோதி ஜி: நன்றிம்மா.
நண்பர்களே, இன்று தேசத்தில் பெண்-சக்தி பின்தங்கி இருக்கும் துறை என்பது ஏதும் இல்லை. பெண்கள், தங்களின் தலைமைப்பண்பு காரணமாக மிகச் சிறப்பான வகையில் செயல்பட்டிருக்கிறார்கள். இயற்கை வேளாண்மை, நீர்பாதுகாப்பு மற்றும் தூய்மை. வேதிப்பொருள்கள் நமது பூமித்தாய்க்கு அளிக்கும் கஷ்டங்கள், அது தரும் வேதனை-வலி.... இவற்றிலிருந்து நமது பூமித்தாயைக் காப்பாற்றுவதில், தேசத்தின் தாய்மைசக்தி பெரும்பங்காற்றி வருகிறது. தேசத்தின் மூலைமுடுக்கெங்கும் பெண்கள் இப்போது இயற்கை விவசாயத்தை விரிவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்று தேசத்தில் ஜல்ஜீவன் மிஷன், அதாவது அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் திட்டத்தின்படி நடந்துவரும் அனைத்துப் பணிகளுக்கும் பின்னணியில் நீர்க்குழுக்களின் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. இந்த நீர்க் குழுக்களுக்குத் தலைமையேற்று நடத்துபவர்கள் என்று சொன்னால் அவர்கள் பெண்கள் தாம். இதைத் தவிரவும் கூட சகோதரிகள்-பெண்கள், நீர் பாதுகாப்பிற்காக அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். என்னோடு இப்போது தொலைபேசிவழி இணைந்திருக்கும் பெண்ணின் பெயர் கல்யாணி பிரஃபுல்ல பாடில் அவர்கள். இவர் மஹாராஷ்டிரத்தில் வசிப்பவர். வாருங்கள், கல்யாணி பிரஃபுல்ல பாடில் அவர்களோடு உரையாடி அவருடைய அனுபவத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
மோதி ஜி: கல்யாணி அவர்களே, வணக்கம்.
கல்யாணி: வணக்கம் சார், வணக்கம்.
மோதி ஜி: கல்யாணி அவர்களே, முதல்ல நீங்க உங்களைப் பத்தியும், உங்க குடும்பம் பத்தியும், நீங்க பார்த்திட்டு இருக்கற வேலை பத்தியும் சொல்றீங்களா?
கல்யாணி: சார், நான் மைக்ரோபயாலஜி, நுண்ணுயிரியல் படிப்பு முதுகலை வரைக்கும் படிச்சிருக்கேன். எங்க வீட்டில என்னோட என் கணவர், எங்க மாமியார், எங்க ரெண்டு பசங்க இருக்காங்க. நான் கடந்த மூன்றாண்டுகளா கிராம பஞ்சாயத்தில பணியாற்றிக்கிட்டு வர்றேன்.
மோதி ஜி: அப்புறம் கிராமத்தில விவசாயத்தில ஈடுபட்டிருக்கீங்களா? ஏன்னா உங்ககிட்ட அடிப்படை ஞானமும் இருக்கு, உங்க படிப்பு வேற விவசாயத் தொடர்பு உடையதா இருக்கு, நீங்களும் இப்ப விவசாயத்தோட இணைஞ்சிருக்கீங்க, அந்த வகையில ஏதும் புதிய பரிசோதனை-முயற்சியில ஈடுபட்டிருக்கீங்களா?
கல்யாணி: ஐயா, பத்துவகையான தாவரங்களை ஒண்ணு திரட்டி அது மூலமா ஒரு இயற்கை தெளிப்பானை உருவாக்கியிருக்கேன். இப்ப பார்த்தீங்கன்னா, நாம கிருமிநாசினியைத் தெளிக்கும் போது பயிருக்குத் தீங்கான பூச்சிகளோடு சேர்ந்து, பயிர்களோட வளர்ச்சிக்கு உதவிகரமா இருக்கற புழு-பூச்சிகளும் கூட அழிஞ்சு போயிடுது. மேலும் பூமியும் மாசுபடுது. இந்த வேதிப்பொருள் எல்லாம் நீரோட கலக்கறதால நம்ம உடம்புலயும் தீமையேற்படுத்தும் விளைவுகள் ஏற்படுது. அந்த வகையில நாம மிகக் குறைஞ்ச அளவுலயே பூச்சிக்கொல்லியை பயன்படுத்தணும்.
மோதி ஜி: அப்படின்னா நீங்க முழுமையான இயற்கை விவசாயம் செய்யறீங்கன்னு சொல்லுங்க.
கல்யாணி: ஆமாங்க, இது பாரம்பரியமான விவசாயம்.
மோதி ஜி: இயற்கை விவசாயம் பத்தின உங்க அனுபவத்தைப் பகிர்ந்துக்களேன்.
கல்யாணி: ஐயா, நம்ம பெண்களுக்கு இதனால செலவு குறைவாச்சு, இந்தப் பொருள் காரணமா அவங்களுக்கு ஒரு தீர்வு ஏற்பட்டிச்சு. இதனால நாங்க பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டை நிறுத்திட்டோம். இந்த பூச்சிக்கொல்லியால தான் புற்றுநோய் அதிகமாகுது, நகரங்கள்ல ஒருபக்கம் அதிகமாகுதுங்கறது ஒருபக்கம், கிராமங்கள்லயும் இது அதிகரிக்குதுங்கறதைப் பார்க்கறோம். நாம நம்ம குடும்பங்களோட ஆரோக்கியத்தை உறுதி செய்யணும்னா, இந்த இயற்கை வழி வேளாண்மையை கைக்கொள்றது அவசியம், அந்த வகையில பெண்களும் கூட ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செய்திட்டு இருக்கோம்.
மோதி ஜி: நல்லது கல்யாணி அவர்களே, நீங்க நீர்மேலாண்மை-நீர்பாதுகாப்பு விஷயத்திலயும் பணியாற்றியிருக்கீங்க இல்லையா? அதில என்ன செய்தீங்க?
கல்யாணி: ஐயா, மழைநீர் சேகரிப்புங்கற வகையில, தொடக்கப்பள்ளி, ஆங்கன்வாடி, கிராமப்பஞ்சாயத்து மாதிரியான அரசுக் கட்டிடங்கள்ல சேருற தண்ணி எல்லாத்தையும் ஓரிடத்தில சேகரிக்கறோம், இது ஒரு recharge shaft, நீர்சேகரிப்பு அமைப்புன்னு வச்சுக்குங்களேன். மழைநீர் விழும் போது, அது நிலத்தடியில ஊறி இறங்கணும், ஆக அதுக்கு ஏத்த வகையில நீர்சேகரிப்புக்கான 20 மீள்நிரப்புச் சுரங்கங்களை நாங்க கிராமத்தில உருவாக்கியிருக்கோம், மேலும் 50 மீள்நிரப்புச் சுரங்கங்களுக்கு ஒப்புதல் கிடைச்சிருக்கு. இப்ப விரைவிலேயே இதுக்கான பணிகளும் தொடங்க இருக்கு.
மோதி ஜி: நல்லது கல்யாணி அவர்களே, உங்களோட உரையாடினதுக்கு ரொம்ப மகிழ்ச்சி. உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள்.
கல்யாணி: ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. உங்களோட பேசுறது எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. என் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா நான் உணர்றேன். ரொம்ப நன்றிங்க.
மோதி ஜி: தொடர்ந்து சேவை செய்யுங்கம்மா.
மோதி ஜி: உங்க பேரே கல்யாணி, நீங்க எப்பவுமே நல்லதே செய்வீங்க. நன்றிம்மா, வணக்கம்.
கல்யாணி: நன்றிங்க, வணக்கம்.
நண்பர்களே, சுனிதா அவர்களாகட்டும், கல்யாணி அவர்களாகட்டும், இவர்களைப் போன்ற பெண்-சக்தியின் வெற்றி பல்வேறு துறைகளில் உத்வேகமளிப்பதாக இருக்கிறது. நான் மீண்டுமொருமுறை நமது பெண்-சக்தியின் இந்த உணர்வுக்கு இதயப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று நம்மனைவரின் வாழ்க்கையிலும் தொழில்நுட்பத்தின் மகத்துவ மிகவும் அதிகரித்து விட்டது. மொபைல் ஃபோன், டிஜிட்டல் கருவிகள் ஆகியன நம்மனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான பங்கு வகிக்கத் தொடங்கி விட்டன. ஆனால் இந்த டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு இப்போதெல்லாம் காட்டு விலங்குகளோடு இசைவு ஏற்படுவதிலும் உதவிகரமாக இருக்கிறது என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க இயலுமா? சில நாட்கள் கழித்து, மார்ச் மாதம் 3ஆம் தேதியன்று உலக வன உயிரின நாள் வரவிருக்கிறது. வன உயிரினங்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக வன உயிரின நாளின் கருப்பொருளில் டிஜிட்டல் கண்டுபிடுப்புகள் முதன்மையானதாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. நமது தேசத்திலே பல்வேறு பாகங்களிலே வன உயிரினங்களின் பாதுகாப்பிற்காக தொழில்நுட்பம் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். கடந்த சில ஆண்டுகளில் அரசு முயற்சிகள் காரணமாக தேசத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் சந்திரபுர் புலிகள் சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை 250க்கும் அதிகமாகி ஆகியிருக்கிறது. சந்திரபுர் மாவட்டத்தில் மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையேயான போராட்டத்தைக் குறைக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கே கிராமத்திற்கும் வனத்திற்கும் இடையிலான எல்லையில் காமிராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. கிராமத்துக்கு அருகே புலி ஏதேனும் வரும் போது, செயற்கை நுண்ணறிவின் உதவியால், அந்தப் பகுதி மக்களின் செல்பேசியில் எச்சரிக்கை ஒன்று அளிக்கப்படும். இன்று இந்த புலிகள் சரணாலயத்தின் அருகே இருக்கும் 13 கிராமங்களில் இந்த அமைப்பு காரணமாக மக்களுக்கு மிக வசதியாக இருப்பதோடு, புலிகளுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நண்பர்களே, இன்று இளைய தொழில்முனைவோரும் கூட வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் சூழலியல் சுற்றுலாவின் பொருட்டு, புதியபுதிய புதுமையான கண்டுபிடிப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உத்திராகண்டின் ரூட்கீயில், ரோட்டர் பிரசிஷன் க்ரூப்ஸ் அமைப்பானது, இந்திய வன உயிரினக் கழகத்துடன் இணைந்து ஒரு ட்ரோனைத் தயாரித்திருக்கிறது. இதன் காரணமாக கேன் நதியிலே முதலைகளின் மீது ஒரு கண் வைத்திருப்பதில் உதவிகரமாக இருக்கிறது. இதைப் போலவே பெங்களூரூவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், பகீரா மற்றும் கருட் என்ற பெயர் கொண்ட ஒரு செயலியை ஏற்படுத்தியிருக்கிறது. பகீரா செயலி மூலம் வனச்சுற்றுலாவின் போது வாகனத்தின் வேகம் மற்றும் பிற விதிமுறைகளின் மீது கண்காணிப்பு செலுத்தப்படுகிறது. தேசத்தின் பல புலிகள் சரணாயலயங்களில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் Internet of things ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்ட கருட் செயலியை ஏதோவொரு சிசிடிவியில் இணைப்பதன் மூலம் உடனுக்குடன் எச்சரிக்கை அளிக்கப்படுகிறது. வன உயிரினங்களின் பாதுகாப்பு என்ற வகையில் இவை போன்ற அனைத்து முயற்சிகள் வாயிலாக நமது தேசத்தின் உயிரி பன்முகத்தன்மையை மேலும் வளமுடையதாக ஆக்குகின்றன.
நண்பர்களே, பாரதத்திலே இயற்கையோடு இயைந்த இசைவு என்பது நமது கலாச்சாரத்தின் பிரிக்கமுடியாத அங்கமாக இருப்பது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இயற்கையோடும், வன உயிரினங்களோடும் இசைவான வாழ்க்கையை வாழும் உணர்வோடு நாம் வாழ்ந்து வந்திருக்கிறோம். நீங்கள் மஹாராஷ்டிரத்தின் மேல்காட் புலிகள் சரணாலயத்திற்குச் சென்றால், அங்கே உங்களால் நேரடியாக இதை அனுபவிக்க முடியும். இந்த புலிகள் சரணாலயத்தின் அருகே கட்கலி கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினக் குடும்பங்கள், அரசு உதவியோடு தங்களின் வீடுகளை ஹோம் ஸ்டே எனும் தங்கும் விடுதிகளாக மாற்றி விட்டார்கள். இவை வருமானத்திற்கான மிகப்பெரிய சாதனமாக இவர்களுக்கு ஆகியிருக்கிறது. இதே கிராமத்தில் வசிக்கும் கோர்கூ பழங்குடியினத்தவரான பிரகாஷ் ஜாம்கர் அவர்கள், தனது இரண்டு ஹெக்டேர் நிலத்தில் ஏழு அறைகள் கொண்ட தங்கும் விடுதியை ஏற்படுத்தி இருக்கிறார். இவருடைய தங்கும் விடுதியில் தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு-குடிநீர் வசதிகளுக்கான ஏற்பாடுகளைக் குடும்பம் செய்து தருகிறது. தங்களுடைய வீடுகளுக்கு அருகே இவர்கள் மருத்துவத் தாவரங்களோடு கூடவே மாமரம், காப்பி ஆகியவற்றையும் நட்டிருக்கிறார்கள். இது சுற்றுலாப்பயணிகளின் ஆர்வத்தை அதிகரிக்கிறது, அதே வேளையில் புதிய வேலைவாய்ப்புகளும் ஏற்படுகின்றன.
எனதருமை நாட்டுமக்களே, கால்நடை வளர்ப்பு குறித்துப் பேசும் போது, உரையாடல் பசுமாடுகள்-எருமைமாடுகளோடு நின்று போகின்றன. ஆனால் ஆடுகளும் கூட ஒரு முக்கியமான கால்நடைச் செல்வங்கள் தாம், இவை அதிக அளவு விவாதப் பொருளாவதில்லை. நாட்டில் பல்வேறு பகுதிகளில், பலர் ஆடுகள் வளர்ப்போடு இணைந்திருக்கிறார்கள். ஒடிஷாவின் காலாஹாண்டியில் ஆடுகள் வளர்ப்பு, கிராமவாசிகளின் வாழ்வாதாரத்தோடு சேர்ந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்தும் ஒரு மிகப்பெரிய சாதனமாக ஆகி வருகிறது. இந்த முயற்சியின் பின்னணியில் ஜயந்தி மஹாபாத்ரா, இவருடைய கணவர் பீரேன் சாஹூ ஆகியோரின் ஒரு மகத்தான தீர்மானம் இருக்கிறது. இவர்கள் இருவரும் பெங்களூரூவில் மேலாண்மை தொழில் வல்லுநர்களாக இருந்தார்கள், ஆனால் இவர்கள் இடைவெளி எடுத்துக் கொண்டு காலாஹாண்டியின் சாலேபாடா கிராமத்திற்கு வருவது என்ற முடிவை எடுத்தார்கள். இங்கே இருக்கும் கிராமமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் அதே வேளையில், அவர்கள் அதிகாரப்பங்களிப்பு உடையவர்களாகவும் ஆக வேண்டும் என்ற வகையில் செயல்பட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்கள். சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு நிறைந்த இந்த எண்ணத்தோடு இவர்கள் மாணிகாஸ்து அக்ரோ என்ற அமைப்பை நிறுவினார்கள், விவசாயிகளோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள். ஜயந்தி அவர்களும், பீரேன் அவர்களும் இங்கே ஒரு சுவாரசியமான மாணிகாஸ்து ஆடுகளை வளர்ப்பதற்கான இடத்தையும் நிறுவினார்கள். இவர்கள் சமூகரீதியாக ஆடுகள் வளர்ப்புக்கு ஊக்கமளித்து வருகிறார்கள். இவர்களுடைய பண்ணையில் கிட்டத்தட்ட பலடஜன் ஆடுகள் இருக்கின்றன. மாணிகாஸ்து ஆடுகள் அமைப்பில் இவர்கள் விவசாயிகளுக்கென முழுமையான ஒரு முறையைத் தயார் செய்திருக்கிறார்கள். இதன் வாயிலாக விவசாயிகளுக்கு 24 மாதக்காலத்திற்கு 2 ஆடுகள் அளிக்கப்படுகின்றன. ஈராண்டுகளில் ஆடுகள் 9 முதல் 10 குட்டிகள் வரை போடுகின்றன, இவற்றில் 6 குட்டிகளை அமைப்பு தக்க வைத்துக் கொள்கிறது, மற்றவை ஆடுவளர்க்கும் அந்த குடும்பத்துக்கே அளிக்கப்படுகிறது. இது மட்டுமல்ல, ஆடுகளைப் பராமரிக்கத் தேவையான அவசியமான சேவைகளும் அளிக்கப்படுகின்றன. இன்று 50 கிராமங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த இணையோடு இணைந்திருக்கின்றார்கள். இவர்களுடைய உதவியோடு கிராமத்தவர்கள், கால்நடை வளர்ப்புத் துறையில் தற்சார்பை நோக்கி முன்னேறி வருகிறார்கள். பல்வேறு துறைகளில் வெற்றியடைந்த வல்லுநர்களும் கூட சிறிய விவசாயிகளின் அதிகாரப் பங்களிப்பு மற்றும் தற்சார்பு நிலைக்காக, புதியபுதிய வழிமுறைகளைப் பின்பற்றுவது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது. இவர்களுடைய இந்த முயற்சி அனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லது.
என் மனம்நிறை நாட்டுமக்களே, நமது கலாச்சாரம் நமக்குக் கற்பிக்கும் பாடம் – ‘परमार्थ परमो धर्मः’, பரமார்த்த பரமோ தர்ம: - அதாவது, மற்றவர்களுக்கு உதவுவது தான் முதன்மையான கடமையாகும் என்பதே. இதே உணர்வோடு பயணிக்கும் நமது தேசத்தில், ஏராளமான பேர், தன்னலமற்ற உணர்வோடு மற்றவர்களுக்கு சேவை புரிவதற்கே தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு நபர் தான், பிஹாரின் போஜ்புரைச் சேர்ந்த பீம் சிங் பவேஷ் அவர்கள். தன்னுடைய பகுதியில் வசிக்கும் முஸஹர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இடையே இவருடைய பணிகள் வெகுவாகப் பாராட்டப்படுகின்றன. ஆகையால் நாம் ஏன் இன்று இவரைப் பற்றியும் உரையாடக் கூடாது என்று எனக்குப் பட்டது. பிஹாரின் முஸஹர் மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினராக, மிகவும் ஏழ்மையான சமுதாயமாகக் கருதப்படுபவர்கள். இவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமானதாக ஆக வேண்டி, இந்த சமுதாயக் குழந்தைகளின் கல்வி மீது பீம் சிங் பவேஷ் அவர்கள் தனது குவிமையத்தைச் செலுத்தினார். இவர் முஸஹர் பிரிவின் கிட்டத்தட்ட 8000 குழந்தைகளை பள்ளியில் சேர்த்தார். குழந்தைகளின் படிப்புக்கான சிறப்பான வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு பெரிய நூலகத்தையும் ஏற்படுத்தினார். பீம் சிங் அவர்கள், தன் சமூக உறுப்பினர்களின் அவசியமான ஆவணங்களைத் தயார் செய்யவும், படிவங்களை நிரப்பவும் உதவி புரிந்தார். இதனால் தேவையான ஆதாரங்களைப் பெறுவதில் கிராமவாசிகளுக்கு வசதி ஏற்பட உதவிகரமாக இருக்கும். மக்களின் உடல்நலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்தார். கொரோனா பெருந்தொற்று பீடித்த காலத்தில், பீம் சிங் அவர்கள் தன்னுடைய பகுதிவாழ் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள மிகவும் ஊக்கப்படுத்தினார். தேசத்தின் பல்வேறு பாகங்களில் பீம் சிங் பவேஷ் அவர்களைப் போன்ற பலர், சமூகத்தில் இப்படி பல நேரிய காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பொறுப்பான குடிமகன் என்ற முறையில் நாம் இவரைப் போன்று நமது கடமைகளைப் பின்பற்றி நடப்போம் என்றால், சக்திபடைத்த ஒரு தேசத்தை உருவாக்குவதில் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
என் கனிவுநிறை நாட்டுமக்களே, பாரதத்தின் அழகே இங்கிருக்கும் பன்முகத்தன்மை நமது கலாச்சாரத்தின் பல்வேறு வண்ணங்களில் கலந்திருப்பது தான். பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் பாதுகாப்பு மற்றும் இதை மேலும் பராமரிக்கும் முயற்சிகளில் எத்தனையோ பேர் சுயநலமில்லா உணர்வோடு ஈடுபடுவதைக் காணும் போது எனக்கு மிகவும் நன்றாக இருக்கிறது. இப்படிப்பட்ட நபர்கள் பாரதத்தின் அனைத்து இடங்களிலும் உங்களுக்குக் காணக் கிடைப்பார்கள். மொழித் துறையில் பணியாற்றுபவர்களை அதிக எண்ணிக்கையில் நீங்கள் காண இயலும். ஜம்மு கஷ்மீரத்தின் காந்தர்பலைச் சேர்ந்த மொஹம்மத் மான்ஷாஹ் அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாகவே கோஜ்ரி மொழியைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவர் குஜ்ஜர் பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்தவர், ஒரு பழங்குடியினச் சமூகமாகும் இது. சிறுவயது முதற்கொண்டே, கல்வி பயில பெரும் சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. தினமும் 20 கிலோமீட்டர் நடந்து சென்று படிக்க வேண்டியிருந்தது. இதைப் போன்ற சவால்களுக்கு இடையே இவர் முதுகலைப் பட்டம் பெற்றார், தன்னுடைய மொழியைப் பாதுகாக்கும் உறுதிப்பாட்டை உள்ளத்தில் மேற்கொண்டார்.
இலக்கியத் துறையில் மான்ஷாஹ் அவர்களின் செயல்பாடுகளின் சாதனைத் தொடர் என்று பார்த்தால், இவருடைய எழுத்துக்கள் 50க்கும் மேற்பட்ட வெளியீடுகளில் இடம் பெற்றிருக்கின்றன. இவர் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார்; இவற்றில் கவிதைகள், நாட்டுப்புற கீதங்கள் ஆகியன அடங்கும். இவர் பல புத்தகங்களை தன்னுடைய மொழியான கோஜ்ரியில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
நண்பர்களே, அருணாச்சல பிரதேசத்தின் திரப் பகுதியைச் சேர்ந்த பன்வங்க் லோஸூ அவர்கள் ஒரு ஆசிரியர். இவர் வாஞ்சோ மொழியைப் பரப்ப, தன்னுடைய முக்கியமான பங்களிப்பை அளித்திருக்கிறார். இந்த மொழி, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்த், அஸாமின் சில பகுதிகளில் பேசப்பட்டு வருகிறது. இவர் ஒரு மொழிப் பள்ளியை உருவாக்கியிருக்கிறார். இவருடைய வாஞ்சோ மொழியின் ஒரு எழுத்துவடிவத்தைக் கூட தயார் செய்திருக்கிறார். இந்த மொழி வழக்கொழிந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, வருங்காலத் தலைமுறையினருக்கும் வாஞ்சோ மொழியைக் கற்பித்து வருகிறார்.
நண்பர்களே, ஆடல்-பாடல்கள் மூலம் தங்களுடைய கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுவரும் பலர் நமது தேசத்திலே இருக்கிறார்கள். கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கப்பா அம்பாஜி சுகேத்கர் அவர்களுடைய வாழ்க்கையும் இந்த விஷயத்தில் மிகவும் கருத்தூக்கம் அளிக்கவல்லது. இந்த மாநிலத்தின் பாகல்கோட்டில் வசிக்கும் சுகேத்கர் அவர்கள் ஒரு கிராமியப் பாடகர். இவர் ஆயிரத்திற்கு மேற்பட்ட ”கோந்தலி” பாடல்களைப் பாடியிருப்பதோடு, இந்த மொழியிலே, கதைகளையும் நன்கு பிரச்சாரம் செய்திருக்கிறார். எந்த ஒரு கட்டணமும் பெறாமல், பல மாணவர்களுக்குப் பயிற்சியும் அளித்திருக்கிறார். பாரதத்திலே உற்சாகமும், ஊக்கமும் நிறைந்த இப்படிப்பட்ட நபர்களுக்குக் குறைவே இல்லை, இவர்கள் நமது கலாச்சாரத்தைத் தொடர்ந்து வளப்படுத்தி வருகிறார்கள். நீங்களும் இவர்களிடமிருந்து உத்வேகமடையுங்கள், உங்கள் தரப்பில் ஏதேனும் செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். நீங்களும் நிறைவான உணர்வை அனுபவிப்பீர்கள்.
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, இரண்டு நாட்கள் முன்பாக வாராணசியில் நான் இருந்த வேளையில், ஒரு மிகச் சிறப்பான புகைப்படக் கண்காட்சியைப் பார்க்க நேர்ந்தது. காசி மற்றும் அருகிலே இருக்கும் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் காமிராக்களில் படம்பிடித்த கணங்களைக் கண்ட போது அற்புதமானதாக இருந்தது. இதிலே பல புகைப்படங்கள், மொபைல் காமிராக்களிலே எடுக்கப்பட்டவை. உள்ளபடியே, இன்று யாரிடத்தில் செல்பேசி இருக்கிறதோ, அவர் ஒரு content creator, உள்ளடக்க விஷயங்களை உருவாக்குபவராக ஆகி விட்டார். மக்கள் தங்களுடைய திறன்கள்-திறமைகளை வெளிப்படுத்த சமூக ஊடகமும் பேருதவியாக இருக்கிறது. பாரதத்தின் நமது இளைய நண்பர்கள் உள்ளடக்க விஷயங்களை உருவாக்கும் துறையில் அற்புதங்களைப் படைத்து வருகிறார்கள். அது எந்த ஒரு சமூக ஊடகத் தளமாக இருந்தாலும் சரி, பல்வேறு விஷயங்கள் குறித்து, பல்வேறு உள்ளடக்கத்தை பகிரக்கூடிய நமது இளைய நண்பர்கள் கண்டிப்பாக அவற்றிலே இருப்பார்கள். சுற்றுலாவாகட்டும், சமூகச் சேவையாகட்டும், பொதுமக்கள் பங்களிப்பாகட்டும், அல்லது உத்வேகமளிக்கும் வாழ்க்கைப் பயணமாகட்டும், இவற்றோடு தொடர்புடைய பலவகையான உள்ளடக்க விஷயங்கள், சமூக ஊடகத்தில் காணக் கிடைக்கின்றன. உள்ளடக்க விஷயங்களை உருவாக்கிவரும் தேசத்தின் இளைஞர்களின் குரல் இன்று மிகவும் தாக்கமேற்படுத்துவதாக ஆகி விட்டது. இவர்களுடைய வல்லமைக்கு மதிப்பளிக்கும் வகையிலே National Creators Award, தேசிய படைப்பாளிகள் விருது ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமூக மாற்றத்தின் வலுவான குரலாக பல்வேறு பிரிவுகளில் ஒலிக்கும் இவர்கள் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். நீங்களும் இத்தகைய சுவாரசியமான உள்ளடக்க விஷயங்களைப் படைப்போரை அறிவீர்கள் என்றால், அவர்களை தேசியப் படைப்பாளிகள் விருதுக்குக் கண்டிப்பாக பரிந்துரை செய்யுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாகவே, தேர்தல் ஆணையம் மேலும் ஒரு இயக்கமான, ‘मेरा पहला वोट - देश के लिए’ என்னுடைய முதல் வாக்கு – தேசத்தின் பொருட்டு என்பதைத் தொடக்கியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் வாயிலாக, குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள். உற்சாகமும், ஊக்கமும் நிறைந்த தனது இளைஞர் சக்தியின் மீது எப்போதும் பாரதத்திற்கு பெருமிதம் உண்டு. நமது இளைய நண்பர்கள், தேர்தல் நடைமுறைகளில் எந்த அளவுக்குப் பங்கெடுக்கிறார்களோ, அதன் விளைவு தேசத்திற்கு அந்த அளவுக்கு இலாபகரமானதாக இருக்கும். நானும் கூட முதல்முறை வாக்காளர்களிடத்திலே வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் சாதனைப்பதிவேற்படுத்தும் எண்ணிக்கையிலே வாக்களியுங்கள். 18 வயது ஆன பிறகு, 18ஆவது மக்களவைக்கான உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதாவது இந்த 18ஆவது மக்களவையும் கூட இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களின் அடையாளமாக விளங்கும். ஆகையால் உங்களுடைய வாக்கின் மகத்துவம் மேலும் அதிகரித்திருக்கிறது. பொதுத் தேர்தல்களின் இந்த அமளிக்கு இடையே, இளைஞர்களே, நீங்கள், அரசியல் வழிமுறைகளின் அங்கமாக ஆவதோடு கூடவே, இது தொடர்பாக நடைபெறும் வாதம்-விவாதங்கள் தொடர்பாகவும் விழிப்போடு இருங்கள். மேலும் நினைவில் வைத்திருங்கள் – என்னுடைய முதல் வாக்கு – தேசத்தின் பொருட்டு என்பதை. விளையாட்டுத் துறையாகட்டும், திரைத்துறையினராகட்டும், இலக்கிய உலகைச் சேர்ந்தவர்களாகட்டும், பிற தொழில் வல்லநர்களாகட்டும், அல்லது நமது இன்ஸ்டாகிராம் மற்றும் யூ ட்யூப் ஆகட்டும் இந்த இயக்கத்தில் உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொள்ளுங்கள், நிபுணர்களே, முதன்முறையாக வாக்களிக்கும் நமது வாக்காளர்களை ஊக்கப்படுத்துங்கள் என்று என அனைத்துத் துறைகளைச் சார்ந்த தாக்கமேற்படுத்துபவர்களிடத்திலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே, மனதின் குரலின் இந்தப் பகுதியில் இம்மட்டே. தேசத்தில் மக்களவைத் தேர்தல்களுக்கான சூழல் நிலவுகிறது, கடந்த முறையைப் போன்றே, மார்ச் மாதத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வரும் சாத்தியம் இருக்கிறது. மனதின் குரல் நிகழ்ச்சியின் கடந்த 110 பகுதிகளாக நாம் இதை அரசின் தாக்கத்திலிருந்து தள்ளி வைத்தே வந்திருக்கிறோம் என்பதே கூட மனதின் குரலின் மிகப்பெரிய வெற்றியாகும். மனதின் குரலில், தேசத்தின் சமூக சக்தி பற்றி பேசப்படுகிறது, தேசத்தின் சாதனைகள் விவாதிக்கப்படுகின்றன. இது ஒரு வகையிலே மக்களின் மக்களுக்காக, மக்கள் வாயிலாக தயார் செய்யப்படும் நிகழ்ச்சியாகும். ஆனாலும் கூட அரசியல் கண்ணியத்தைப் பின்பற்றும் வகையில், மக்களவைத் தேர்தல் என்ற இப்போதைய காலகட்டத்தில், அடுத்த மூன்று மாதங்களுக்கு மனதின் குரலின் ஒலிபரப்பு நடைபெறாது. அடுத்த முறை நாம் உரையாடுவது மனதின் குரலின் 111ஆவது பகுதியாக இருக்கும். அடுத்த முறை மனதின் குரலின் தொடக்கம் 111 என்ற சுபமான எண்ணோடு கூடவே இருக்கும், இதை விட வேறு என்ன சிறப்பாக இருக்க முடியும்!! ஆனால் நண்பர்களே, நீங்கள் எனக்காக ஒரு வேலை செய்ய வேண்டும். மனதின் குரல் வேண்டுமானால் மூன்று மாதங்கள் வரை வராமல் போகலாம் ஆனால், தேசத்தின் சாதனைகள் நின்று போகப் போவதில்லை என்பதால், நீங்கள் மன் கீ பாத் ஹேஷ்டேக்(#) என்பதோடு கூட, சமூகத்தின் சாதனைகளை, தேசத்தின் சாதனைகளை, சமூக ஊடகத்தில் தரவேற்றிக் கொண்டே இருக்கவும். சில நாட்கள் முன்பு தான் ஒரு இளைஞர் நல்லதொரு ஆலோசனையைக் கூறியிருந்தார். அதாவது மனதின் குரலின் இதுவரையிலான பகுதிகளிலிருந்து சின்னச்சின்ன காணொளிகளை, யூ ட்யூப் ஷார்ட்டுகளாக பகிர வேண்டும் என்று கூறியிருந்தார். ஆகையால் மனதின் குரலின் நேயர்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள், நீங்கள் இப்படிப்பட்ட குறும்படங்களை நன்கு பகிரவும்.
நண்பர்களே, அடுத்த முறை உங்களோடு உரையாடும் போது, புதிய சக்தி, புதிய தகவல்களோடு வந்து சந்திப்பேன். நீங்கள் உங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள், பலப்பல நன்றிகள். வணக்கம்.
India's Nari Shakti is touching new heights of progress in every field. #MannKiBaat pic.twitter.com/sQwIr0ne2o
— PMO India (@PMOIndia) February 25, 2024
Technology is being used extensively for the conservation of wildlife in different parts of our country. #MannKiBaat pic.twitter.com/VkSijtdyMX
— PMO India (@PMOIndia) February 25, 2024
Tribal families living in Khatkali village near Melghat Tiger Reserve have converted their houses into home stays with the help of the government. This is becoming a big source of income for them. #MannKiBaat pic.twitter.com/BbtUSBaOrb
— PMO India (@PMOIndia) February 25, 2024
In Kalahandi, Odisha, goat rearing is becoming a major means of improving the livelihood of the village people as well as their standard of living. #MannKiBaat pic.twitter.com/WQ01tO2tHj
— PMO India (@PMOIndia) February 25, 2024
Countless people in our country dedicate their lives to serving others selflessly. Here is one such example from Bihar...#MannKiBaat pic.twitter.com/wgtinByMuN
— PMO India (@PMOIndia) February 25, 2024
Great to see countless people selflessly making efforts to preserve Indian culture and traditions. The efforts of citizens in Jammu and Kashmir, Arunachal Pradesh and Karnataka inspire everyone...#MannKiBaat pic.twitter.com/4NBpaS2BNh
— PMO India (@PMOIndia) February 25, 2024
Social media has helped a lot in showcasing people’s skills and talents. Youngsters in India are doing wonders in the field of content creation. To honour their talent, the National Creators Award has been initiated. #MannKiBaat @mygovindia pic.twitter.com/r9Jqr4GfIB
— PMO India (@PMOIndia) February 25, 2024
A few days ago the Election Commission has started a campaign – ‘Mera Pehla Vote – Desh Ke Liye’. I would urge first time voters to vote in record numbers: PM @narendramodi #MannKiBaat pic.twitter.com/Lfx5r7OeMU
— PMO India (@PMOIndia) February 25, 2024