Remarkable surge in Khadi sales on the occasion of Gandhi Jayanti: PM Modi
During our festivals, our primary focus should be on ‘Vocal for Local,’ as it aligns with our collective aspiration for a ‘Self-reliant India’: PM Modi
31st October holds great significance for all of us, as it marks the birth anniversary of Sardar Vallabhbhai Patel: PM Modi
MYBharat, will offer young Indians to actively participate in various nation-building initiatives: PM Modi
Bhagwaan Birsa Munda’s life exemplifies true courage and unwavering determination: PM Modi
India has etched a new chapter in history, securing a total of 111 medals in Para Asian Games: PM Modi
Mirabai remains a wellspring of inspiration for the women of our country, be they mothers, sisters, or daughters: PM Modi

எனதருமை குடும்பச் சொந்தங்களே, வணக்கம்.  மனதின் குரலில் மீண்டும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்தப் பகுதி வெளியாகும் வேளையில், நாடு முழுவதிலும் பண்டிகைக்காலக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது, வரவிருக்கும் அனைத்துப் பண்டிகைகளுக்கும் உங்கள் அனைவருமே கூட பலப்பல நல்வாழ்த்துக்கள்.

          நண்பர்களே, பண்டிகைகளின் இந்தக் கோலாகலத்திற்கு இடையே, தில்லியின் ஒரு செய்தியோடு நான் மனதின் குரலைத் தொடங்குகிறேன்.  இந்த மாதத் தொடக்கத்தில், காந்தி ஜயந்தியை ஒட்டி, தில்லியில் காதிக்கடை வரலாறு காணாத விற்பனையைச் செய்திருக்கிறது.  இங்கே கனாட் ப்ளேஸிலே, ஒரே ஒரு காதி அங்காடியில், ஒரே நாளில் மட்டும், ஒண்ணரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்களை மக்கள் வாங்கியிருக்கிறார்கள்.  இந்த மாதம் நடைபெற்று வரும் காதி மஹோத்சவம், மீண்டும் ஒருமுறை வியாபாரத்தில் தனது பழைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.  உங்களுக்கு மேலும் ஒரு விஷயம் மகிழ்ச்சியை அளிக்கலாம், பத்தாண்டுகளுக்கு முன்பாக, தேசத்தில் காதிப் பொருட்களின் விற்பனை 30,000 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தது; இப்போது இது பெருகி, ஒண்ணேகால் இலட்சம் கோடி ரூபாயை எட்டியிருக்கிறது.  காதிப் பொருட்களின் விற்பனை அதிகரித்திருப்பதன் பொருள் என்னவென்றால், இதனால் ஆதாயம் நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை, பல்வேறு மட்டத்தினருக்கும் சென்றடைந்திருக்கிறது என்பது தான்.  இந்த விற்பனையால் இலாபம், நமது நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள், நமது விவசாயிகள், ஆயுர்வேதத் தாவரங்களை நடுவோர், குடிசைத் தொழில்கள் என அனைவருக்கும் கிடைத்திருக்கிறது, மேலும் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கத்தின் பலமே இதில் தானே அடங்கியிருக்கிறது!!  மெல்லமெல்ல, நாட்டுமக்களான உங்களனைவரின் ஆதரவும் பெருகிக் கொண்டே வருகிறது. 

          நண்பர்களே, இன்று மீண்டுமொரு முறை உங்களிடத்திலே ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன், மிகவும் பணிவோடு மறுபடி இதை சமர்ப்பிக்க விழைகிறேன்.  நீங்கள் எப்போதெல்லாம் சுற்றுலா செல்கிறீர்களோ, புனித யாத்திரை மேற்கொள்கிறீர்களோ, அப்போதெல்லாம் அங்கே அந்த வட்டாரக் கலைஞர்கள் வாயிலாக உருவாக்கப்படும் பொருட்களை அவசியம் வாங்குங்கள்.   உங்களுடைய பயணத்தின் மொத்த வரவுசெலவுகளில் வட்டாரத்தில் இந்த உற்பத்தியாகும் பொருட்களுக்கு ஒரு முக்கியமான முதன்மை அளிப்பது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.  அது பத்து சதவீதமாகட்டும், 20 சதவீதமாகட்டும், உங்கள் வரவுசெலவினத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு, உள்ளூர் பொருட்களை வாங்குவதில் செலவு செய்யுங்கள், அங்கே, அந்த இடத்திலேயே செலவு செய்யுங்கள்.

          நண்பர்களே, ஒவ்வொரு முறையைப் போலவும், இந்த முறையும் நமது பண்டிகைகளில், நமது முதன்மையானது உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்பது என்பதாக இருக்க வேண்டும், நாமனைவரும் இணைந்து நமது கனவை நிறைவேற்றுவோம்; நமது அந்தக் கனவு தற்சார்பு பாரதம்.  இந்த முறை நம் வீட்டில் ஒளியேற்றும் பொருட்களில், நமது நாட்டுமக்களின் வியர்வையின் மணம் இருக்க வேண்டும், நமது இளைஞர்களின் திறன் இருக்க வேண்டும், அதைத் தயாரிப்பதில் நமது நாட்டுமக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுவதாக இருக்க வேண்டும், அன்றாட வாழ்க்கையின் எந்த ஒரு தேவையாக இருந்தாலும் சரி, நாம் உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும்.  ஆனால், உங்களிடத்திலே மேலும் ஒரு விஷயம் குறித்து கவனத்தைச் செலுத்த வேண்டுகிறேன்.  உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல் என்ற இந்த உணர்வு, பண்டிகைகளின் போது வாங்கும் பொருட்களோடு நின்று போய் விடக் கூடாது, சில இடங்களில் நானே பார்த்திருக்கிறேன், தீபாவளிக்கு விளக்குகள் வாங்குகிறோம், அல்லது சமூக ஊடகங்களில் இதை உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம் கொடுப்போம் என்று பதிவிடுகிறோம்.   இது மட்டும் அல்ல ஐயா, இது வெறும் தொடக்கம் மட்டுமே.  நாம் மேலும், இன்னும் முன்னேற வேண்டும், வாழ்க்கையின் அனைத்துத் தேவைகள் – நமது தேசத்திலே இப்போது அனைத்துமே கிடைக்கின்றன.  இந்தப் பார்வை சிறிய கடைக்காரர்களிடம், தள்ளுவண்டியில் பொருட்களை விற்பனை செய்வோரிடம் வாங்குவதோடு மட்டும் குறுகிப் போய் விடக் கூடாது.  பாரதம் இன்று, உலகின் பெரிய தயாரிப்பு மையமாக ஆகி வருகிறது.  பல பெரிய ப்ராண்டுகள், இங்கே தமது பொருட்களைத் தயாரித்து வருகின்றார்கள்.  நாம் அந்தப் பொருட்களை வாங்கும் போது, இந்தியாவில் தயாரிப்போம் என்பதற்கும் ஊக்கம் அளிக்கப்படுகிறது, மேலும், இதுவுமே கூட உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல் என்றே ஆகிறது.  மேலும் ஒரு விஷயம், இப்படிப்பட்ட பொருட்களை வாங்கும் வேளையில் நமது தேசத்தின் பெருமிதமான யுபிஐ டிஜிட்டல் பணம் செலுத்தும் முறை வாயிலாகச் செலுத்துங்கள் என்றும் வேண்டிக் கொள்கிறேன், இதை வாழ்க்கையில் ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள், மேலும் அந்தப் பொருளோடு கூடவே, அல்லது, அந்தக் கைவினைஞரோடு எடுக்கப்பட்ட சுயபுகைப்படத்தை நமோ செயலியில், என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள், அதுவும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் ஃபோன் வாயிலாக.  நான் அவற்றில் சில பதிவுகளை சமூக ஊடகத்தில் பகிர்வேன், இதன் வாயிலாக மற்றவர்களுக்கும் கூட உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம் அளிக்கும் உத்வேகம் உண்டாகும்.

           நண்பர்களே, நீங்கள், பாரதத்தில் உருவாக்கப்பட்ட, பாரத நாட்டவரால் உருவாக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு தீபாவளியை ஒளிமயமாக்கும் போது, உங்களுடைய குடும்பத்தின் அனைத்துச் சிறிய-பெரிய தேவைகளும் உள்ளூரிலேயே நிறைவடையும் போது, தீபாவளியின் ஒளிவெள்ளம் கண்டிப்பாக மேலும் அதிகரிக்கும், அதே வேளையில், அந்தக் கைவினைஞர்களின் வாழ்க்கையில், ஒரு புதிய தீபாவளி ஒளிவிடும், வாழ்க்கையில் ஒரு புது விடியல் புலரும், அவர்களுடைய வாழ்க்கை வளம் பெறும். பாரதத்தை தற்சார்புடையதாக ஆக்குங்கள், இந்தியாவில் தயாரிப்பதையே தேர்ந்தெடுங்கள், இதனால் உங்களோடு கூடவே மேலும் கோடிக்கணக்கான நாட்டுமக்களின் தீபாவளி பிரமாதமாக ஆகும், ஜீவனுள்ளதாக ஆகும், ஒளிமயமானதாக ஆகும், சுவாரசியமாகவும் ஆகும்.

          எனதருமை நாட்டுமக்களே, அக்டோபர் 31 என்பது நம்மனைவருக்கும் மிகவும் சிறப்பான ஒன்றாகும்.  இந்த நாளன்று தான் நமது இரும்பு மனிதரான சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் பிறந்த நாள் ஆகும்.  பாரதநாட்டவரான நாமனைவரும் அவரை பல காரணங்களுக்காக நினைவு கூர்கிறோம், மிகுந்த சிரத்தையுடன் வணங்குகிறோம்.  மிகப்பெரிய காரணம் என்னவென்றால், தேசத்தின் 580க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைப்பதில் அவருடைய ஈடிணையில்லாத பங்களிப்பு.  ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 31ஆம் தேதியன்று, குஜராத்தில் அமைந்திருக்கும் ஒற்றுமை நினைவுச் சின்னத்தில் ஒருமைப்பாட்டு தினத்தோடு தொடர்புடைய முக்கியமான விழா நடக்கும் என்பதை நாமறிவோம்.  இந்த முறை, இதைத் தவிர, தில்லியில் கர்த்தவ்ய பாதையில், ஒரு மிகவும் சிறப்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  கடந்த  சில நாட்களுக்கு முன்பாக, தேசத்தின் அனைத்து கிராமங்களிலிருந்தும், அனைத்து வீடுகளிலிருந்தும் மண்ணைத் திரட்டுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.   அனைத்து இல்லங்களிலிருந்தும் மண்ணை சேகரித்த பிறகு, அதைக் கலசத்தில் வைத்து, அவை அமுத கலச யாத்திரையாகப் பயணப்பட்டு விட்டது.  தேசத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஒன்று திரட்டப்பட்ட இந்த மண்ணைத் தாங்கிய ஆயிரக்கணக்கான கலசங்கள் அடங்கிய அமுத கலச யாத்திரை இப்போது தில்லி வந்தடைந்திருக்கிறது.  இங்கே தில்லியில் அந்த மண்ணை ஒரு விசாலமான பாரதக் கலசத்தில் இட்டு, இந்த பவித்திரமான மண்ணைக் கொண்டு தில்லியில் அமுத வனம் நிர்மாணிக்கப்படும்.   இது தேசத்தின் தலைநகரின் மையப்பகுதியில், அமுத மஹோத்சவத்தின் நேர்த்தியான மரபாக மிளிரும்.  நாடெங்கிலும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவின் நிறைவு அக்டோபர் 31 அன்று தான் அரங்கேறும். நீங்கள் அனைவரும் இணைந்து இந்த உலகின் மிக நீண்ட காலம் வரை நடைபெற்ற பெருவிழாவினை சாதித்திருக்கிறீர்கள்.  நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதாகட்டும், அல்லது அனைத்து இல்லங்களிலும் மூவண்ணக் கொடி பறக்க விடுவதாகட்டும், சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவிலே, மக்கள் தங்களுடைய பகுதியின் வரலாற்றுக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்திருக்கின்றார்கள்.  இதன் வாயிலாக சமூகசேவைக்குமான அற்புதமான எடுத்துக்காட்டும் காணக் கிடைத்திருக்கிறது.

          நண்பர்களே, நான் இன்று உங்களுக்கு மேலும் ஒரு சந்தோஷமான செய்தியை அளிக்க இருக்கிறேன். குறிப்பாக எனது இளைய சமுதாயச் செல்வங்களுக்கு.  இவர்களுடைய இதயங்களில் தேசத்திற்காக எதையாவது சாதித்துக் காட்ட வேண்டும் என்ற தாகம் இருக்கிறது, கனவு இருக்கிறது, உறுதிப்பாடு இருக்கிறது. இந்தச் சந்தோஷமான செய்தி, நாட்டுமக்கள் அனைவருக்கும் உரியது தான் என்றாலும், எனது இளைய நண்பர்களே, உங்களுக்குத் தான் இது அதிக விசேஷமானது.   இரண்டு நாட்கள் கழித்துத் தான் அக்டோபர் 31 அன்று ஒரு மிகப்பெரிய நாடு தழுவிய அமைப்புக்கான அடித்தளம் போடப்பட இருக்கிறது, அதுவும் சர்தார் ஐயாவின் பிறந்த நாளன்று.  இந்த அமைப்பின் பெயர் – மேரா யுவா பாரத், அதாவது MYBharat.  இந்த மைபாரத் அமைப்பானது, பாரதத்தின் இளைஞர்களை தேச நிர்மாணத்தின் பல்வேறு திட்டங்களில் தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பைத் தரக்கூடிய சந்தர்ப்பத்தை அளிக்கும்.  இது வளர்ந்த பாரதத்தை நிர்மாணிப்பதில் பாரதத்தின் இளைஞர் சக்தியை ஒன்று திரட்டும் ஒரு ஒப்பற்ற முயற்சியாகும்.  என்னுடைய இளைய பாரதத்தின் இணையதளமான MYBharatம் தொடங்கப்பட இருக்கிறது.   நான் இளைஞர்களிடத்திலே வேண்டுகோள் விடுக்கிறேன், மீண்டும்மீண்டும் வேண்டிக் கொள்கிறேன், என் தேசத்தின் இளைஞர்களே, நமது தேசத்தின் செல்வங்களே, MYBharat.Gov.inஇல் பதிவு செய்து கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.  அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் காலமான நாளும் ஆகும்.  நான் அவர்களுக்கும் கூட, உணர்வுபூர்வமான நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். 

          எனது குடும்பச் சொந்தங்களே, நமது இலக்கியம், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வினை முரசறிவித்துச் சொல்லும் மிகச் சிறப்பான ஊடகங்களில் ஒன்றாகும்.  தமிழ்நாட்டின் பெருமைமிகு மரபோடு தொடர்புடைய இரண்டு மிகவும் உத்வேகமளிக்கும் முயற்சிகளை முன்வைக்க விரும்புகிறேன்.   தமிழ்மொழியின் புகழ்மிக்க எழுத்தாளரான சகோதரி சிவசங்கரி அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.  அவர் ஒரு செயல்திட்டத்தை புரிந்திருக்கிறார் – Knit India, Through Literature. இதன் பொருள் என்னவென்றால், இலக்கியம் வாயிலாக தேசத்தை ஓரிழையில் கோர்ப்பது என்பது தான்.  இவர் இந்தச் செயல்திட்டம் தொடர்பாக கடந்த 16 ஆண்டுகளாகச் செயலாற்றி வருகிறார்.   இந்தச் செயல்திட்டம் வாயிலாக இவர் பாரதநாட்டு மொழிகள் 18இல் எழுதப்பட்ட இலக்கியங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார்.  இவர் பலமுறை கன்யாகுமாரி தொடங்கி கஷ்மீரம் வரையும், இம்ஃபால் தொடங்கி ஜைசால்மேர் வரையும், தேசம் நெடுக, பல்வேறு மாநிலங்களின் எழுத்தாளர்கள்-கவிஞர்களை நேர்முகம் காண்பதற்காக சிவசங்கரி அவர்கள் பல பயணங்களை மேற்கொண்டிருக்கிறார், பயணக் கட்டுரைகளோடு கூட இவற்றைப் பதிப்பித்தும் இருக்கிறார்.  இது தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இருக்கிறது.  இந்தச் செயல்திட்டத்தின் நான்கு பெரிய தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன, ஒவ்வொரு தொகுதியும் பாரதத்தின் தனித்தனி பாகத்திற்கு என அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.  இவருடைய இந்த உறுதிப்பாட்டு சக்தி குறித்து எனக்குப் பெருமையாக இருக்கிறது.

          நண்பர்களே, கன்னியாகுமாரியின் ஏ.கே. பெருமாள் அவர்களுடைய பணியும் மிகவும் கருத்தூக்கம் அளிக்கவல்லதாக இருக்கிறது.  இவர் தமிழ்நாட்டின் கதை சொல்லும் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் போற்றத்தக்க பணியைச் செய்திருக்கிறார். இவர் தனது இந்தக் குறிக்கோளோடு, கடந்த 40 ஆண்டுகளாக இணைந்திருக்கிறார்.   இதன் பொருட்டு இவர் தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் பயணிக்கிறார், நாட்டுப்புற கலை வடிவங்களைத் தேடித்தேடி, அவற்றைத் தனது புத்தகத்தில் இடம்பெறச் செய்கிறார்.  இவர் இதுவரை, கிட்டத்தட்ட 100 புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்.  இதைத் தவிர பெருமாள் அவர்களுக்கு மேலும் ஒரு பேரார்வமும் உண்டு.  தமிழ்நாட்டின் கோயில் கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.  இவர் தோல்பாவைக் கூத்து பற்றியும் நிறைய ஆய்வுகளைச் செய்திருக்கிறார், இதனால் ஆதாயம் வட்டார நாட்டுப்புற கலைஞர்களுக்கும் கிடைத்து வருகிறது. சிவசங்கரி அவர்கள், ஏ.கே. பெருமாள் அவர்கள் – இவர்கள் இருவரின் முயற்சிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவன. பாரதம் தனது கலாச்சாரத்தைப் பாதுகாக்கக்கூடிய அனைத்து முயற்சிகள் குறித்தும் பெருமிதம் அடைகிறது, இது நமது தேச ஒற்றுமையை மேலும் பலப்படுத்துவதோடு, தேசத்தின் பெயரையும், தேசத்தின் கௌரவத்தையும், அனைத்தையும் ஓங்கச் செய்யும்.

          எனது குடும்பச் சொந்தங்களே, வரவிருக்கும் நவம்பர் மாதம் 15ஆம் தேதின்று நாடெங்கிலும் பழங்குடி மக்களின் பெருமித தினம் கொண்டாடப்படும்.  இந்தச் சிறப்பான நாளோடு தான் பகவான் பிர்ஸா முண்டா அவர்களின் பிறந்த நாளும் இணைந்திருக்கிறது.  பகவான் பிர்ஸா முண்டா நம்மனைவரின் இதயங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்.  மெய்யான நெஞ்சுரம் என்றால் என்ன? தனது மனவுறுதிப்பாட்டில் அசையாமல் ஆணித்தரமாக இருப்பது என்று எதைச் சொல்கிறார்கள்? என்பதையெல்லாம் அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும்.  அவர் அந்நிய ஆட்சியை ஒருபோதும் ஏற்கவில்லை.  அவர் கற்பனை செய்த சமுதாயத்தில் அநீதிக்கு எந்த ஒரு இடமும் கிடையாது.  அனைவருக்கும் சமமான, சமத்துவமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது.  பகவான் பிர்ஸா முண்டா அவர்கள், இயற்கையோடு இணக்கமாக வாழ்வதற்கு மிகவும் உரம் சேர்த்தார்.   இன்றும் கூட, நமது பழங்குடியின சகோதர-சகோதரிகள், இயற்கையை எப்படிப் பாதுகாக்கிறார்கள், அதைப் பராமரிப்பதில் எத்தனை அர்ப்பணிப்போடு இருக்கிறார்கள் என்பது கண்கூடு.  நம்மனைவருக்கும், நமது பழங்குடியின சகோதர சகோதரிகளின் இந்தப் பணி மிகவும் உத்வேகம் அளிக்க வல்லது.

          நண்பர்களே, நாளை, அதாவது அக்டோபர் 30ஆம் தேதி குரு கோவிந்த சிம்மன் காலமான தினம்.  நமது குஜராத் மற்றும், ராஜஸ்தானத்துப் பழங்குடியினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வாழ்க்கையில் கோவிந்த குருவிற்கு மிகவுயர்வான மகத்துவம் உள்ளது.  கோவிந்த குருவுக்கும் நான் எனது சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன்.  மான்கட் படுகொலையின் நினைவு ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது.  அந்தப் படுகொலையில் உயிர்த்தியாகம் புரிந்த, பாரத அன்னையின் அனைத்துப் புதல்வர்களுக்கும் என் நினைவாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன். 

          நண்பர்களே, பாரதநாட்டிலே பழங்குடியினச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நிறைவான வரலாறு உண்டு.  இதே பாரத பூமியில் தான் பெருமைமிகு திலகா மாஞ்ஜீ அவர்கள், அநீதிக்கு எதிராக சங்கநாதம் முழக்கினார்.  இதே மண்ணிலிருந்து தான் சித்தோ-கான்ஹூவும் சமத்துவத்திற்கான குரலை ஒலிக்கச் செய்தார்கள்.  மக்கள் போராளியான டண்ட்யா பீல் நமது மண்ணிலே பிறந்தார் என்பதில் நமக்குப் பெருமிதம் உண்டு.  உயிர்த்தியாகியான வீர் நாராயண் சிம்மனை மிகுந்த சிரத்தையோடு நாம் நினைவில் கொள்கிறோம், இவர் கடினமான சூழ்நிலைகளிலும் தனது மக்களுக்குத் துணை நின்றார்.  வீர் ராம்ஜி கோண்ட் ஆகட்டும், வீர் குண்டாதுர் ஆகட்டும், பீமா நாயக் ஆகட்டும், இவர்களுடைய நெஞ்சுரம் இன்றும் நமக்கு உத்வேகத்தை அளித்து வருகின்றது.  அல்லூரி சீதாராம் ராஜூ அவர்கள், பழங்குடி சகோதர சகோதரிகளின் மனதிலே சுதந்திரத் தீயைக் கொழுந்து விட்டெரியச் செய்தமைக்கு, தேசம் அவரை இன்றும் நினைவில் ஏத்துகிறது.  வடகிழக்கில் கியாங்க் நோபாங்க், ராணி கைதின்யூ போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களிடமிருந்தும் நாம் வேண்டுமளவு உத்வேகம் பெறுகிறோம்.  பழங்குடியின சமூகத்திலிருந்து தான் தேசத்தின் ராஜமோஹினி தேவியும், ராணி கமலாபதி போன்ற வீராங்கனைகளும் நமக்குக் கிடைக்கப் பெற்றார்கள்.  பழங்குடியின சமூகத்திற்கு உத்வேகம் அளிக்கவல்ல ராணி துர்க்காவதி அவர்களின் 500ஆவது பிறந்த நாளை இந்த வேளையில் தேசம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.   தேசத்தின் அதிகமான இளைஞர்கள், தங்கள் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின ஆளுமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டால், அவர்களிடமிருந்து உத்வேகம் அடையலாம் என்பதே என் விருப்பம்.  தனது பழங்குடியின சமூகத்திற்கு தேசம் நன்றிக்கடன்பட்டிருக்கிறது, இவர்கள் தாம் தேசத்தின் சுயமரியாதை மற்றும் மேன்மையை எப்போதுமே மிகவுயர்வாகக் கொண்டு வந்துள்ளார்கள்.

          எனதருமை நாட்டுமக்களே, பண்டிகைகளின் இந்தக் காலத்தில், இப்போது தேசத்திலே, விளையாட்டுக்களும் கொடிகட்டிப் பறக்கின்றன. கடந்த தினங்களிலே ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் கூட பாரத நாட்டு விளையாட்டு வீரர்கள் மிகச் சிறப்பான வெற்றியை ஈட்டியிருக்கிறார்கள்.  இந்த விளையாட்டுப் போட்டிகளில் பாரதம் 111 பதக்கங்களை வென்று, ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்திருக்கிறது.  நான் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து வீரர்களுக்கும் பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

          நண்பர்களே, சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக கோடைக்கால விளையாட்டுப் போட்டிகள் மீது உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.  இதற்கான ஏற்பாடுகள் பெர்லினில் நடைபெற்றன.  இந்தப் போட்டிகள், Intellectual Disabilities, அறிவுசார் குறைபாடுகள் உடைய நமது விளையாட்டு வீரர்களின் அற்புதமான திறமையை வெளிப்படுத்துகிறது.  இந்தப் போட்டிகளில் பாரத நாட்டு அணியானது 75 தங்கப் பதக்கங்கள் உட்பட 200 பதக்கங்களை வென்றிருக்கிறது.  Roller skating, உருளைச் சறுக்குப் போட்டி ஆகட்டும், பீச் வாலிபால் ஆகட்டும், கால்பந்தாட்டம் ஆகட்டும், அல்லது லான் டென்னிஸ் ஆகட்டும், பாரத நாட்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை சரமாரியாக வென்றார்கள்.  பதக்கங்கள் வென்ற இந்த வீரர்களின் வாழ்க்கைப் பயணம் மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருந்திருக்கிறது.  ஹரியாணாவின் ரண்வீர் சைனி, கோல்ஃப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.  சிறுவயது முதற்கொண்டே Autism - மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட ரண்வீருக்கு, கால்ஃப் விளையாட்டுத் தொடர்பான எந்த ஒரு சவாலாலும் அவருடைய பேரார்வத்துக்குத் தடை போட முடியவில்லை.  இவருடைய குடும்பத்தார் அனைவரும் இன்று கால்ஃப் விளையாட்டு வீரர்களாக ஆகி விட்டார்கள் என்ற அளவுக்கு இவருடைய தாயார் கூறுகிறார்.  புதுச்சேரியைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய டி. விஷால், நான்கு பதக்கங்களை வென்றிருக்கிறார்.  கோவாவின் சியா சரோதே, பவர்லிஃப்டிங் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்கள் உட்பட, நான்கு பதக்கங்களை வென்றிருக்கிறார்.  9 வயதிலே தனது தாயைப் பறிகொடுத்த பிறகு, இவர் தன்னை ஏமாற்றத்தில் மூழ்கிப் போக அனுமதிக்கவில்லை.  சத்தீஸ்கட்டைச் சேர்ந்த துர்க்கிலே வசிக்கும் அனுராக் பிரசாத், பவர்லிஃப்டிங்க் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார்.  இதைப்ழ் போலவே மேலும் ஒரு உத்வேகமளிக்கும் கதை ஜார்க்கண்டின் இந்து பிரகாஷுடையது, இவர் சைக்கில் ஓட்டும் பந்தயத்தில் இரண்டு பதக்கங்களை வென்றிருக்கிறார். மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இந்து, தனது வெற்றிக்கு எதிராக எழுப்பப்பட்ட சுவராகத் தனது ஏழ்மையை அவர் கருதவில்லை.  இந்த விளையாட்டுக்களில் பாரத நாட்டு விளையாட்டு வீரர்களின் வெற்றி, அறிவுசார் குறைபாடுகளை எதிர்கொள்ளும் பிற மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கும், குடும்பத்தாருக்கும் கருத்தூக்கம் அளிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.  உங்கள் கிராமத்திலே, உங்கள் கிராமத்தின் அருகிலே, இப்படிப்பட்ட குழந்தைகள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்திருந்தார்கள், அல்லது வெற்றி பெற்றிருந்தார்கள் என்றால், நீங்கள் உங்கள் குடும்பத்தாரோடு அவர்களிடம் செல்லுங்கள், அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவியுங்கள், சில கணங்கள் அந்தக் குழந்தைகளோடு கழியுங்கள் என்பதே நான் உங்கள் முன்பாக வைக்கும் வேண்டுகோள்.  உங்களுக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்படும்.  இறைவன் அவர்களிடத்திலே நிரப்பியிருக்கும் சக்தியைக் காணும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும், கண்டிப்பாகச் சென்று வாருங்கள்.

          என் குடும்பச் சொந்தங்களே, நீங்கள் அனைவரும் புனிதத் தலமான குஜராத்தின் அம்பாஜி கோயிலைப் பற்றி அவசியம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது மிகவும் மகத்துவமான சக்திபீடமாகும், இங்கே தாய் அம்பாவை தரிசனம் செய்ய நம் நாட்டிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகிறார்கள். இங்கே கப்பர் மலையின் வழியில் பல்வேறு வகையான யோக முத்ரைகளையும், ஆசனங்களையும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் காணப்படும்.  இந்தச் சிற்பங்களின் விசேஷம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? உண்மையில், இவை ஓட்டை உடைசல்களிலிருந்து உருவாக்கப்பட்டவை, மிகவும் அற்புதமானவை. அதாவது இந்த வடிவங்கள், கழித்துக் கட்டப்பட்ட காயலான் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அம்பாஜி சக்திபீடத்தில் தேவி அன்னையை தரிசனம் செய்வதோடு, இந்த உருவச்சிலைகளும் கூட பக்தர்களை ஈர்க்கும் மையமாக ஆகி விட்டன.  இந்த முயற்சியின் வெற்றியைக் கண்டு, என் மனதிலே ஒரு எண்ணம் உதிக்கிறது.  பயனற்றவை என்று கழித்துக் கட்டப்பட்ட பொருட்களிலிருந்து இப்படிப்பட்ட கலைப்படைப்புக்களை உருவாக்குவோர் நமது தேசத்திலே பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் குஜராத் அரசிடம் நான் முன்வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் போட்டி ஒன்று நடத்தி, இப்படிப்பட்ட நபர்களை அதிலே பங்கெடுக்கச் செய்ய வேண்டும் என்பதே.  இந்த முயற்சியால் கப்பர் மலையின் ஈர்ப்பினை அதிகரிப்பதோடு கூடவே, நாடு முழுவதிலும் கழிவிலிருந்து செல்வம் இயக்கத்தில் ஈடுபட மக்களுக்கு உத்வேகம் அளிக்கும். 

          நண்பர்களே, தூய்மை பாரதம், கழிவிலிருந்து செல்வம் பற்றி எப்போதெல்லாம் பேச்சு வருகிறதோ, அப்போதெல்லாம் தேசத்தின் அனைத்து இடங்களிலும் கணக்கேயில்லாத எடுத்துக்காட்டுகள் தேசத்தில் கிடைக்கின்றன.  அசாமின் காமரூபம் பெருநகர மாவட்டத்தில் அக்ஷர் ஃபோரம் என்ற பெயர் கொண்ட ஒரு பள்ளி, குழந்தைகளிடத்திலே நீடித்த வளர்ச்சி என்ற உணர்வினை ஏற்படுத்த, பழக்கமாகவே அதை ஆக்க, ஒரு நீடித்த பணியை ஆற்றி வருகிறது.  இங்கே படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு வாரமும், நெகிழிக் கழிவைச் சேகரிக்கிறார்கள், இவை சூழலுக்கு நேசமான செங்கற்கள், சாவிக்கொத்தை போன்ற பொருட்களைத் தயாரிக்கப் பயனாகிறது.  இங்கே மறுசுழற்சி மற்றும் நெகிழிக் கழிவுகளிலிருந்து பொருட்களைத் தயாரிப்பது மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.   சிறிய வயதிலேயே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, தேசத்தின் கடமையுணர்வுள்ள குடிமக்களாக இந்தக் குழந்தைகளை ஆக்குவதில் மிகவும் உதவிகரமாக விளங்கும்.

          எனது குடும்பச் சொந்தங்களே, பெண்சக்தியின் வல்லமை காணப்பெறாத எந்த ஒரு துறையும் இன்று வாழ்க்கையில் இல்லை.   அந்த வகையிலே, அனைத்து இடங்களிலும் அவர்களுடைய சாதனைகள் போற்றப்பட்டு வருகின்றன எனும் வேளையிலே, பக்தியையும் சக்தியையும் வெளிப்படுத்தும் ஒரு பெண் புனிதையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும், இவருடைய பெயர் வரலாற்றின் பொன்னான பக்கங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது.   மாபெரும் புனிதை மீராபாயின் 525ஆவது பிறந்த நாளை தேசம் இந்த ஆண்டு கொண்டாடி வருகிறது. இவர் நாடு முழுவதிலும் இருக்கும் மக்களுக்கு, பல்வேறு காரணங்களுக்காக ஒரு உத்வேக சக்தியாக இருந்திருக்கிறார்.  ஒருவருக்கு இசையில் நாட்டம் இருந்தால், அவர் இசைக்கே தம்மை அர்ப்பணித்த பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறார், ஒருவர் கவிதைகளை விரும்புபவர் என்றால், பக்திரசத்திலே தோய்ந்த மீராபாயின் பஜனைப் பாடல்கள், அவர்களுக்கு அலாதியான ஆனந்தத்தை அளிக்க வல்லவை, ஒருவர் இறைசக்தியில் நம்பிக்கை உள்ளவர் என்றால், மீராபாயின் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கலந்து கரைதல் என்பது அவருக்கு ஒரு பெரிய உத்வேக காரணியாக ஆகக்கூடும்.  மீராபாய், புனிதர் ரவிதாசைத் தனது குருவாக வரித்தவர். 

गुरु मिलिया रैदासदीन्ही ज्ञान की गुटकी |

குரு மிலியா ரைதாஸ், தீன்ஹீ ஞான் கீ குட்கீ

அதாவது ரைதாஸர் எனக்கு குருவாகக் கிடைத்தது என்பது, பிரசாத வடிவில் ஞானம் கிடைத்தது போல என்று அவர் கூறியிருக்கிறார். 

          தேசத்தின் தாய்மார்கள்-சகோதரிகள், புதல்விகளுக்கு மீராபாய், இன்றும் கூட உத்வேகத்தின் ஊற்று.  அந்தக் காலகட்டத்திலும் கூட, அவர் தனக்குள்ளே ஒலித்த குரலுக்குச் செவி மடுத்தார், பழமைவாத, மூடப் பழக்கங்களுக்கு எதிராக நின்றார்.  ஒரு புனிதை என்ற வகையிலும் கூட அவர் நம்மனைவருக்கும் கருத்துக்கக் காரணியாக மிளிர்கிறார்.  தேசம் பலவகையான தாக்குதல்களை எதிர்கொண்ட அந்தக் காலத்திலே, அவர் பாரதநாட்டு சமூகம் மற்றும் கலாச்சாரத்துக்கு வலுக்கூட்ட முன்வந்தார்.  எளிமையிலும், பணிவிலும் எத்தனை சக்தி நிறைந்திருக்கிறது என்பது, நமக்கு மீராபாயின் வாழ்க்கையிலிருந்து தெரிய வருகிறது.  நான் புனிதை மீராபாயிக்குத் தலைவணங்குகிறேன். 

          என் நெஞ்சம் நிறை குடும்பச் சொந்தங்களே, இந்த முறை மனதின் குரலில் இம்மட்டே.  உங்களனைவரோடும் நடைபெறும் ஒவ்வொரு உரையாடலும், என்னுள்ளே புதிய சக்தியை நிரப்புகிறது.  உங்களுடைய தகவல்களில் நம்பிக்கையும், நேர்மறை எண்ணங்களும் நிரம்பிய ஏராளமான தரவுகள் தொடர்ந்து என்னை வந்தடைகின்றன.  நான் மீண்டும் உங்களிடத்திலே வேண்டிக் கொள்கிறேன் – தற்சார்பு பாரதம் இயக்கத்திற்கு பலம் கூட்டுங்கள்.  வட்டாரத்தில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குங்கள், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் தாருங்கள்.  எப்படி நீங்கள் உங்கள் இல்லங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறீர்களோ, அப்படியே உங்கள் சுற்றுப்புறத்தையும், நகரையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.  அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று சர்தார் ஐயாவின் பிறந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியும், ஒருமைப்பாட்டு தினம் என்ற வகையிலே இந்த நாளை தேசம் கொண்டாடுகிறது, தேசத்தின் பல இடங்களில் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.  நீங்களும் அக்டோபர் 31ஆம் தேதி இந்த ஒற்றுமைக்கான ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்.  மிகப்பெரிய எண்ணிக்கையில் நீங்களும் இதிலே உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், ஒற்றுமைக்கான உறுதிப்பாட்டை மேலும் பலப்படுத்துங்கள்.  மீண்டும் ஒரு முறை, வரவிருக்கும் பண்டிகைகளுக்காக பலப்பல நல்வாழ்த்துக்களை அளிக்கிறேன். நீங்கள் அனைவரும் குடும்பத்தாரோடு சந்தோஷமாகக் கொண்டாடுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஆனந்தமாக இருங்கள், இதுவே என் விருப்பம்.  மேலும் தீபாவளி சமயத்தில், தவறுதலாகக் கூட தீ விபத்து ஏதும் ஏற்படாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.  யாருடைய உயிருக்கும் எந்த பங்கமும் ஏற்படாமல் இருக்கட்டும், நீங்களும் கவனமாக இருங்கள், மொத்த பகுதியையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.  பலப்பல நல்வாழ்த்துக்கள்.  பலப்பல நன்றிகள்.   

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Indian economy ends 2024 with strong growth as PMI hits 60.7 in December

Media Coverage

Indian economy ends 2024 with strong growth as PMI hits 60.7 in December
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 17, 2024
December 17, 2024

Unstoppable Progress: India Continues to Grow Across Diverse Sectors with the Modi Government