எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரல் அதாவது தேசத்தின் சமூக முயற்சிகளின் குரல், தேசத்தின் சாதனைகளின் குரல், மக்கள் அனைவரின் வல்லமையின் குரலான மனதின் குரல் அதாவது தேசத்தின் இளைஞர்களின் கனவுகள், தேசக் குடிமக்களின் எதிர்பார்ப்புக்களின் குரல். எப்போது வரும் என்று, மாதம் முழுவதும் மனதின் குரலுக்காக நான் காத்திருக்கிறேன். அப்போது தானே நேரடியாக என்னால் உங்களோடு கலந்துரையாட முடியும்!! எத்தனையோ செய்திகள், எத்தனையோ தகவல்கள்!! என்னுடைய முயற்சிகள் அனைத்தும் என்ன தெரியுமா – எப்படி முடிந்த அளவு அதிக தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, எவ்வாறு உங்களுடைய ஆலோசனைகளில் சிந்தை செலுத்திப் பரிசீலிப்பது என்பது தான்.
நண்பர்களே, இன்று மிகவும் சிறப்பானதொரு தினமாகும். இன்று என்.சி.சி – தேசிய மாணவர் படையின் தினமாகும். தேசிய மாணவர் படை என்ற பெயர் வந்தவுடனேயே நமக்கு நம்முடைய பள்ளி-கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்து விடுகின்றன. நானும் கூட என்.சி.சி யின் கேடட்டாக இருந்திருக்கிறேன் என்பதால், இதனால் எனக்குக் கிடைத்த அனுபவம் விலைமதிப்பில்லாதது என்பதை என்னால் என் அனுபவம் வாயிலாக அறுதியிட்டுக் கூற இயலும். தேசிய மாணவர் படையானது இளைஞர்களிடத்திலே ஒழுங்கு, தலைமைப்பண்பு மற்றும் சேவையுணர்வை ஏற்படுத்துகின்றது. நீங்களே கூட உங்கள் அக்கம்பக்கத்தில் பார்த்திருக்கலாம், எப்போதெல்லாம் ஏதேனும் பேரிடர் ஏற்படுகிறதோ, அது வெள்ளப்பெருக்காகட்டும், நிலநடுக்கமாகட்டும், வேறு எந்த ஒரு பேரிடராக இருந்தாலும், அங்கே உதவிக்கரம் நீட்ட நமது என்.சி.சி. கேடட்டுகள் விரைந்து செல்கிறார்கள். இன்று தேசத்தில் தேசிய மாணவர் படையை வலுப்படுத்த தொடர்ந்து செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2014ஆம் ஆண்டு வாக்கிலே 14 இலட்சம் இளைஞர்கள் தேசிய மாணவர் படையோடு இணைந்திருந்தார்கள். இப்போது 2024இலே 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேசிய மாணவர் படையோடு இணைந்திருக்கிறார்கள். முன்பிருந்ததை விட மேலும் புதிய 5000 பள்ளிகள்-கல்லூரிகளில் இப்போது என்.சி.சி. செயலாற்றுகிறது; மேலும் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், முன்பு தேசிய மாணவர் படையில் பெண் கேடட்டுகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் இருந்து வந்தது. இப்போதோ தேசிய மாணவர் படையில் பெண் கேடட்டுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 சதவீதமாக அதிகரித்துவிட்டது. எல்லையோரப்பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் தேசிய மாணவர் படையோடு இணைக்கும் இயக்கமும் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. நான் இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், அதிக எண்ணிக்கயில் தேசிய மாணவர் படையோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஒரு பணிக்குச் சென்றாலும் கூட, என்.சி.சியில் உங்களுக்குக் கிடைத்த ஆளுமைத்திறன் மேம்பாடு உங்கள் பணிக்காலத்தில் தோள் கொடுக்கும்.
நண்பர்களே, வளர்ச்சியடைந்த பாரதத்தை நிர்மாணிப்பதில் இளைஞர்களின் பங்குபணி மிகவும் பெரியது. இளைஞர்களின் மனங்கள் ஒருமுனைப்புடன் செயலாற்றும் போது தேசத்தின் முன்னேற்றப் பயணத்திற்காக ஆய்வு செய்யும் போது, சிந்திக்கும் போது, கண்டிப்பாக அவர்கள் அருமையான பாதையை அமைக்கிறார்கள். ஜனவரி மாதம் 12ஆம் தேதியன்று ஸ்வாமி விவேகானந்தரின் பிறந்த நாள் வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், இதை நாம் இளைஞர்கள் தினமாக கொண்டாடுகிறோம். அடுத்த ஆண்டு ஸ்வாமி விவேகானந்தரின் 162ஆவது பிறந்த ஆண்டாகும். இந்த முறை இதை மிகவும் சிறப்பான வகையிலே கொண்டாட வேண்டும். இந்த சந்தர்ப்பத்திலே 11-12 ஜனவரியன்று தில்லியின் பாரத மண்டபத்தில் இளைஞர்களின் கருத்துக்களின் மஹாகும்பமேளா நடைபெற இருக்கிறது, இந்த முன்முயற்சியின் பெயர் “வளர்ச்சியடைந்த பாரத தேசத்து இளைய தலைவர்களின்” உரையாடல். பாரத நாடெங்கிலுமிருந்தும் கோடிக்கணக்கான இளைஞர்கள் இதிலே பங்கெடுத்துக் கொள்வார்கள். கிராமங்கள், தொகுதிகள், மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இப்படிப்பட்ட 2,000 இளைஞர்கள் பாரத மண்டபத்தில் வளர்ச்சியடைந்த இளம் தலைவர்கள் உரையாடலில் பங்கெடுக்க ஒன்றிணைவார்கள். யாருக்கு எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லையோ, யாருடைய குடும்பத்தின் எந்த ஒரு நபரோ, குடும்பமோ அரசியல் பின்புலம் இல்லாததோ, இப்படிப்பட்ட ஒரு இலட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நான் செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய வேளையில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படிப்பட்ட இளைஞர்கள், புதிய இளைஞர்களை அரசியலோடு இணைக்க தேசத்தில் பலவகையான சிறப்பு இயக்கங்கள் நடத்தப்படும். வளர்ச்சியடைந்த பாரத தேசத்து இளம் தலைவர்கள் உரையாடலும் கூட இப்படிப்பட்ட ஒரு முயற்சி தான். இதிலே தேசம் மற்றும் அயல்நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொள்வார்கள். பல தேசிய மற்றும் சர்வதேச ஆளுமைகளும் இதில் இடம் பெறுவார்கள். நானும் கூட இதிலே அதிக நேரம் கலந்து கொள்வேன். நேரடியாக தங்களுடைய கருத்துக்களை முன்வைக்க இளைஞர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்க்கும். தேசம் இந்தக் கருத்துக்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும்? எப்படி ஒரு உறுதியான திட்டமிட்ட பாதையை ஏற்படுத்த இயலும்? இதன் வரைபடம் தயார் செய்யப்படும். ஆகையால் நீங்களும் தயாராகுங்கள், பாரதத்தை நிர்மாணிக்க இருக்கும், தேசத்தின் வருங்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய வாய்ப்பு மலர இருக்கிறது. வாருங்கள், இணைந்து நாம் தேசத்தை உருவாக்குவோம், தேசத்தை வளர்ந்த தேசமாக ஆக்குவோம்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் அடிக்கடி இப்படிப்பட்ட இளைஞர்களைப் பற்றிப் பேசி வருகிறோம். சுயநலமற்ற தன்மையோடு சமூகத்திற்காகச் செயலாற்றி வரும் இப்படி எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள், இவர்கள் மக்களின் சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைக் கண்டுபிடித்தளிப்பதில் ஈடுபட்டு வருகின்றார்கள். நாம் நம்முடைய அக்கம்பக்கத்தில் பார்த்தோமேயானால், எத்தனையோ மனிதர்கள் ஏதோ ஒருவகையில் உதவி தேவைப்படுவோராக, தகவல் தேவையிருப்போராக இருக்கிறார்கள். சில இளைஞர்கள் ஒரு குழுவாக இணைந்து இது போன்ற தேவைகளை இட்டுநிரப்புவதில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்போது லக்னௌவில் வசிக்கும் வீரேந்திராவை எடுத்துக் கொள்வோமே, இவர் முதியோருக்கும் டிஜிட்டல் ஆயுள் சான்று பெற்றுத் தருவதில் உதவி புரிகிறார். விதிமுறைகளின்படி அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஆண்டுதோறும் ஒரு முறை ஆயுள் சான்று அளிக்க வேண்டியிருக்கிறது. 2014ஆம் ஆண்டு வரை, முதிய ஓய்வூதியதாரர்கள் இதைத் தாங்களே வங்கிகளில் சென்று செலுத்த வேண்டும் என்ற விதிமுறை நிலவி வந்தது. இதனால் நமது முதியவர்களுக்கு எத்தனை சிரமங்கள் இருந்தன என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இப்போதோ, இந்த அமைப்புமுறை மாறிவிட்டது, சுலபமாகிவிட்டது. இப்போது டிஜிட்டல் ஆயுள் சான்று அளிப்பதால் நிலைமை மிகவும் சுலபமாகி விட்டது, முதியவர்கள் வங்கிகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதில்லை. தொழில்நுட்பம் காரணமாக மூத்தோருக்கு எந்த சிரமமும் ஏற்பட்டுவிடாமல் இருப்பதில் வீரேந்திரா போன்ற இளைஞர்களின் பங்களிப்பு மிகப் பெரியது. இவர் தனது பகுதியில் இருக்கும் முதியவர்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். இது மட்டுமல்ல, இவர் முதியவர்களைத் தொழில்நுட்பத்திறம் படைத்தவர்களாகவும் ஆக்கி வருகிறார். இவரைப் போன்றோருடைய இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாக டிஜிட்டல் ஆயுள் சான்று பெறுவோரின் எண்ணிக்கை 80 இலட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது. இவர்களிலே இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட முதியவர்களின் வயது 80ஐயும் தாண்டி விட்டது.
நண்பர்களே, பல நகரங்களில் முதியவர்களை இந்த டிஜிட்டல் புரட்சியில் பங்குதாரர்களாக ஆக்கும் பணியில் இளைஞர்கள் முன்வந்து ஈடுபட்டுவருகிறார்கள். போபாலின் மகேஷ், மொபைல் வாயிலாக பணம் செலுத்தும் வழிவகையை, தனது பகுதியில் பல முதியவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த முதியவர்களிடம் ஸ்மார்ட் ஃபோன் இருந்தாலும் கூட, அதனைப் பயன்படுத்த கற்றுக் கொடுப்போர் யாரும் இல்லை. முதியவர்களை டிஜிட்டல் கைது என்ற அபாயத்திலிருந்து காப்பாற்றவும் கூட இளைஞர்கள் முன்வருகிறார்கள். அஹமதாபாதின் ராஜீவ், டிஜிட்டல் கைதின் அபாயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மனதின் குரலின் கடந்த பகுதியில் நாம் இந்த டிஜிட்டல் கைது பற்றி உரையாடி இருந்தோம். இது போன்ற குற்றங்களுக்கு அதிக அளவில் இரையாவது மூத்த குடிமக்கள் தாம். இந்த நிலையில், நாம் அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இணையவழி மோசடியிலிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவி செய்ய வேண்டியது நமது கடமையாகும். டிஜிட்டல் கைது என்ற பெயரில் அரசாங்கத்தில் எந்தவிதமான வழிவகையும் இல்லை என்று நாம் மீண்டும் மீண்டும் மக்களுக்குப் புரிய வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த டிஜிட்டல் கைது என்பது முழுப்பொய், மக்களைச் சிக்க வைக்க ஒரு சூழ்ச்சி, நமது இளைய நண்பர்கள் இந்தப் பணியில் முழுமையான புரிந்துணர்வோடு தங்கள் பங்களிப்பை அளித்து வருவதோடு, மற்றவர்களுக்கும் உத்வேகமாக இருந்து வருகிறார்கள் என்பது எனக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இப்போதெல்லாம் குழந்தைகளின் படிப்பு தொடர்பாக பலவகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நமது குழந்தைகளின் படைப்பாற்றல் மேலும் வளர வேண்டும், புத்தகங்களிடம் அவர்களின் நேசம் மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே முயற்சியாக இருக்கிறது. புத்தகங்கள் மனிதனின் மிகச் சிறந்த நண்பன் என்று கூறப்படுகிறதல்லவா? இப்போது இந்த நட்பினை மேலும் வலுப்படுத்துவதில் நூலகத்தை விடச் சிறப்பான இடம் வேறு என்னவாக இருக்க முடியும்? நான் சென்னையின் ஒரு எடுத்துக்காட்டை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இங்கே குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட ஒரு நூலகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றால், இது படைப்பாற்றல் மற்றும் கற்றலின் மையக்களமாக ஆகியிருக்கிறது. இதன் பெயர் பிரக்ருத் அறிவகம். இந்த நூலகம் பற்றிய எண்ணம், தொழில்நுட்ப உலகோடு தொடர்புடைய ஸ்ரீராம் கோபாலன் அவர்களின் கொடை. அயல்நாட்டில் தனது பணியின் போது இவர் நவீன தொழில்நுட்ப உலகோடு இணைந்து வந்திருக்கிறார். ஆனால் அதே வேளையில் குழந்தைகளின் படிப்பு மற்றும் கற்றல் பழக்கத்தை மேம்படுத்துவது குறித்தும் சிந்தித்திருக்கிறார். பாரதம் திரும்பிய பிறகு இவர் பிரக்ருத் அறிவகத்தை உருவாக்கியிருக்கிறார். இதிலே 3000த்திற்கும் அதிகமாக புத்தகங்கள் இருக்கின்றன, இவற்றைப் படிக்க குழந்தைகள் சாரிசாரியாக வருகிறார்கள். புத்தகங்களைத் தவிர இந்த நூலகத்தில் பலவகையான செயல்பாடுகளும் கூட குழந்தைகளை ஈர்க்கின்றன. கதைசொல்லும் அமர்வாகட்டும், கலைப்பட்டறைகளாகட்டும், நினைவாற்றல் பயிற்சி வகுப்புகளாகட்டும், ரோபோட்டிக்ஸ் பாடமாகட்டும், மேடைப் பேச்சாகட்டும், இங்கே அனைவருக்கும் ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்கிறது, அது அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.
நண்பர்களே, ஹைதராபாதில் Food for Thought நிறுவனமும் கூட பல அருமையான நூலகங்களை உருவாக்கியிருக்கிறது. இவர்களின் முயற்சியும் கூட, குழந்தைகளுக்கு அதிக அளவிலான விஷயங்கள் குறித்த சிறப்பான தகவல்களோடு கூடவே, படிப்பதற்குத் தேவையான புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்பது தான். பிஹாரின் கோபால்கஞ்ஜில் பிரயோக் நூலகம் குறித்த உரையாடல் அக்கம்பக்கத்தில் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நூலகத்தில் சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்து வருவதோடு, படிக்க உதவிகரமாக இருக்கக்கூடிய பல வசதிகளையும் இந்த நூலகம் செய்து கொடுக்கிறது. சில நூலகங்கள் எப்படிப்பட்டவை என்றால், போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் மாணவர்களுக்கு மிகவும் பயனுடையவையாக இருக்கின்றன. சமூகத்தை அதிகாரமுள்ளதாக ஆக்க நூலகங்கள் மிகச்சிறப்பான வகையிலே பயனளித்து வருகின்றன என்பது மிகவும் சுகமான செய்தியாக இருக்கிறது. நீங்கள் புத்தகங்களோடு தோழமையை வளர்த்துக் கொண்டு தான் பாருங்களேன், உங்கள் வாழ்க்கை எப்படி மாறிப் போகிறது என்பதை உணர்ந்து உங்களுக்கே வியப்பேற்படும்.
என் கனிவான நாட்டுமக்களே, நேற்றுமுன்தினம் இரவு தான் நான் தென்னமெரிக்க நாடான கயானாவிலிருந்து நாடு திரும்பினேன். பாரதத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கயானாவிலும் கூட, ஒரு மினி பாரதம் வாழ்ந்து வருகிறது. இன்றிலிருந்து சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்னால், கயானாவில் பாரத நாட்டவர், விவசாயக் கூலிகளாகவும், இன்னபிற வேலைகளுக்காகவும் கொண்டு வரப்பட்டார்கள். இன்று பாரத வம்சாவழியினர், அரசியல், வியாபாரம், கல்வி மற்றும் கலாச்சாரம் என அனைத்துத் துறைகளிலும் கயானாவில் முன்னணி வகிக்கிறார்கள். கயானாவின் குடியரசுத் தலைவர் டாக்டர். இர்ஃபான் அலியும் கூட பாரத வம்சாவழி வந்தவர் தான், தான் பாரத நாட்டு மரபுவழியைச் சேர்ந்தவர் என்பதில் இவர் பெருமிதம் கொள்கிறார். நான் கயானாவில் இருந்த வேளையில், என் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. இதை நான் மனதின் குரலில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கயானாவைப் போலவே உலகில் பல டஜன் நாடுகளில், இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் பாரதநாட்டவர் வசிக்கிறார்கள். பல பத்தாண்டுகள் முன்பாக 200-300 ஆண்டுகள் முன்பாக, அவர்களின் முன்னோர் பற்றிய கதைகள் உண்டு. எவ்வாறு அயல்நாடுவாழ் பாரதநாட்டவர், பல்வேறு தேசங்களில் தங்களுக்கென தனி அடையாளத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி அவர்கள் அந்த நாடுகளின் சுதந்திர வேள்வியில் பங்கெடுத்துக் கொண்டார்கள், எப்படி தங்களுடைய பாரதிய மரபினை உயிர்ப்போடு வைத்திருந்தார்கள் என்பது போன்ற உண்மையான கதைகளைத் தேடிக் கண்டுபிடித்து என்னோடு உங்களால் பகிர்ந்து கொள்ள முடியுமா? நீங்கள் இந்தக் கதைகளை நமோ செயலியிலோ, மைகவ் இலோ, #IndianDiasporaStories என்ற ஹேஷ்டேகில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நண்பர்களே, ஓமான் நாட்டில் நடைபெற்றுவரும் ஒரு அசாதாரணமான செயல்திட்டம் குறித்த சுவாரசியமான தகவல்களை உங்களோடு நான் பகிர விரும்புகிறேன். பல பாரதநாட்டவரின் குடும்பங்கள், பல நூற்றாண்டுகளாகவே ஓமான் நாட்டில் வசித்து வருகின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் குஜராத்தின் கட்ச் பகுதிலிருந்து புறப்பட்டு அங்கே வசித்து வருகிறார்கள். இவர்கள் மகத்துவம் வாய்ந்த ஒரு வியாபாரத் தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இன்றும் கூட இவர்களிடம் ஓமானி குடிமை இருக்கிறது என்றாலும் கூட, பாரத நாட்டுணர்வு இவர்களின் நாடிநரம்புகளில் எல்லாம் ஊறியிருக்கிறது. ஓமானின் பாரதநாட்டுத் தூதரகம் மற்றும் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் துணையோடு ஒரு குழு, இந்தக் குடும்பங்களின் வரலாற்றினைப் பாதுகாக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறது. இந்த இயக்கத்தின்படி, இப்போதுவரை, ஆயிரக்கணக்கான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு விட்டன. இவற்றிலே நாட்குறிப்புகள், கணக்குப் புத்தகங்கள், பேரேடுகள், கடிதங்கள் மற்றும் தந்திகள் அடங்கும். இவற்றில் சில ஆவணங்கள் 1838ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாகவும் இருக்கின்றன. இந்த ஆவணங்களில் உணர்வுகள் நிரம்பியிருக்கின்றன. பல ஆண்டுகள் முன்பாக இவர்கள் ஓமானுக்குச் சென்ற போது, இவர்கள் எந்தவிதமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள், எப்படி சுகதுக்கங்களை எதிர்கொண்டார்கள், ஓமான் நாட்டுமக்களோடு இவர்களுடைய தொடர்புகள் எவ்வாறு பெருகியது போன்றவை எல்லாம் இந்த ஆவணங்களில் அடங்கியிருக்கின்றன. Oral History Project – வாய்மொழி வரலாறுத் திட்டமும் கூட இந்தக் குறிக்கோளின் ஒரு மகத்துவம் வாய்ந்த ஆதாரமாக விளங்குகிறது. இந்தப் பேரிலக்கில், அங்கே இருக்கும் மூத்தோரும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே தங்களுடைய வாழ்க்கைமுறை குறித்த தகவல்களை விரிவாக அவர்கள் எடுத்துப் பேசியிருக்கிறார்கள்.
நண்பர்களே, இப்படிப்பட்ட ஒரு வாய்மொழி வரலாற்றுத் திட்டம், பாரத நாட்டிலும் நடந்தேறி வருகிறது. இந்தத் திட்டப்படி, வரலாறு விரும்பிகள் தேசப்பிரிவினை காலகட்டத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் அனுபவங்களைத் தொகுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது தேசத்தில், தேசப்பிரிவினை பயங்கரத்தைக் கண்டவர்கள்-பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்த வகையில் இந்த முயற்சி மேலும் மகத்துவம் வாய்ந்ததாக ஆகியிருக்கிறது.
நண்பர்களே, எந்த தேசம் எந்தப் பகுதி தனது வரலாற்றைப் பாதுகாத்து வைக்கிறதோ, அதன் எதிர்காலம் பாதுகாப்பானது. இந்த எண்ணத்தோடு தான் ஒரு முயற்சி நடந்திருக்கிறது. இதிலே கிராமங்களின் வரலாற்றை ஒன்று திரட்டும் வகையில் ஒரு தகவல்திரட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. கடல்பயணம் மேற்கொண்ட பாரதத்தின் பழமையான திறமைகளோடு தொடர்புடைய சான்றுகளைத் திரட்டும் இயக்கம் கூட தேசத்தில் இயங்கி வருகிறது. இது தொடர்பாக லோதலில், ஒரு மிகப்பெரிய அருங்காட்சியகம் கூட உருவாக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர, உங்களுக்குத் தெரிந்து ஏதேனும் ஓலைச்சுவடியோ, வரலாற்று முக்கியத்துவமான ஆவணமோ, கையெழுத்துப்படியோ இருந்தால், நீங்கள் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் உதவியோடு அதைப் பராமரிக்கலாம்.
நண்பர்களே, ஸ்லோவாகியாவில் நடைபெற்றுவரும் இதேபோன்ற மேலும் ஒரு முயற்சி குறித்துத் தெரிய வந்தது. நமது கலாச்சாரத்தைப் பாதுகாத்து அதை முன்னெடுத்துச் செல்வதோடு இது தொடர்புடையது. இங்கே முதன்முறையாக ஸ்லோவாக் மொழியில் நமது உபநிஷதங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த முயற்சிகளால் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் உலகம்தழுவிய தாக்கம் குறித்துப் புரிந்து கொள்ள முடிகிறது. உலகமெங்கும் இப்படிப்பட்ட கோடிக்கணக்கானோரின் இதயங்களில் பாரதம் வாழ்ந்து வருகிறது என்பது பெருமிதமளிக்கும் விஷயம்.
எனதருமை நாட்டுமக்களே, தேசத்தின் இப்படிப்பட்ட சாதனையை இப்போது நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன், இது உங்களுக்கு பேருவகையையும் அளிக்கலாம், பெருமிதமும் ஏற்படலாம், நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால் உங்களுக்கு ஒருவேளை கழிவிரக்கமும் ஏற்படலாம். சில மாதங்கள் முன்பாக நாம் “தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம்” என்ற இயக்கத்தைத் தொடக்கினோம் இல்லையா? இந்த இயக்கத்தின் வாயிலாக தேசமெங்கிலும் மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள். இந்த இயக்கம் வாயிலாக 100 கோடி மரங்கள் நடப்பட்டிருக்கின்றன என்ற முக்கியமான கட்டத்தை நாம் தாண்டியிருக்கிறோம் என்பதை நான் மிகுந்த உவகையோடு தெரிவித்துக் கொள்கிறேன். 100 கோடி மரங்கள், அதுவும் வெறும் ஐந்தே மாதங்களில் என்பது நமது நாட்டுமக்களின் இடையறாத முயற்சிகளால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. இதோடு தொடர்புடைய மேலும் ஒரு விஷயத்தைக் கேட்டால் நீங்கள் பெருமிதப்படுவீர்கள். தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம் இயக்கமானது இப்போது உலகின் பிற நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கிறது. நான் கயானாவில் இருந்த வேளையில், அங்கேயும் கூட இந்த இயக்கத்தை என்னால் கண்ணாரக் காண முடிந்தது. அங்கே என்னோடு கூட கயானாவின் குடியரசுத் தலைவர் டாக்டர். இர்ஃபான் அலி, அவருடைய மனைவியின் தாய், மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் எல்லோரும், தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
நண்பர்களே, தேசத்தின் பல்வேறு பாகங்களிலும் இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தின் இந்தோரில், தாயின் பெயரில் ஒரு மரம் இயக்கத்தில், மரம் நடுவதில் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. இங்கே 24 மணிநேரத்தில் 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. இந்த இயக்கம் காரணமாக இந்தோரின் ரேவதி குன்றுகளின் வறண்ட பகுதி இப்போது பசுமைப்பகுதியாக உருமாறிவிடும். ராஜஸ்தானத்தின் ஜைசால்மேரில் இந்த இயக்கம் வாயிலாக ஒரு வித்தியாசமான சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. இங்கே பெண்களின் ஒரு குழு, ஒரு மணிநேரத்தில், 25,000 மரங்களை நட்டிருக்கிறது. தாய்மார்கள், தாயின் பெயரில் ஒரு மரம் நட்டார்கள், மற்றவர்களுக்கும் இப்படிச் செய்ய உத்வேகம் அளித்தார்கள். இங்கே இருக்கும் ஓரிடத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து மரங்களை நட்டார்கள் என்பது கூட ஒரு சாதனை தான். தாயின் பெயரில் ஒரு மரம்நடு இயக்கத்தின்படி பல சமூக அமைப்புகள், வட்டாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மரங்களை நட்டு வருகின்றார்கள். எங்கெல்லாம் மரங்களை நட வேண்டியிருக்கிறதோ, அங்கேயெல்லாம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலே ஒட்டுமொத்த சூழலமைப்பையும் மேம்பாடு அடையச் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் முயற்சியாக இருக்கிறது. ஆகையால் இந்த அமைப்புகள் சில இடங்களில் மருத்துவத் தாவரங்களை நடுகிறார்கள், சில இடங்களில் புள்ளினங்கள் தங்கியிருக்க மரங்களை நடுகிறார்கள். பிஹாரின் ஜீவிகா சுயவுதவிக் குழுவின் பெண்கள், 75 இலட்சம் மரங்களை நடும் இயக்கத்தைத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்தப் பெண்களின் ஒட்டுமொத்த கவனமும், பழமரங்களை நடுவதன் மீது இருக்கிறது, இதனால் வருங்காலத்தில் வருவாயும் பெற முடியும்.
நண்பர்களே, இந்த இயக்கத்தோடு இணைந்து, எந்த ஒரு நபரும் தனது தாயின் பெயரில் மரம் நட முடியும். தாய் உடனிருந்தால், அவர்களையும் அழைத்துக் கொண்டு மரம் நடலாம். இல்லையென்றால் அவருடைய படத்தின் முன்னிலையில் கூட நீங்கள் இந்த இயக்கத்தின் பங்குதாரராக ஆகலாம். மரத்தோடு கூட நீங்கள் உங்கள் சுயபுகைப்படம், செல்ஃபியை எடுத்து, அதை மைகவ்.இன் தளத்தில் தரவேற்றம் செய்யலாம். தாயானவள் நமக்கெல்லாம் அளிப்பவற்றுக்கான நன்றிக்கடனை நம்மால் என்றுமே இட்டுநிரப்ப முடியாது என்றாலும், தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டு, நாம் அவருடைய இருப்பை என்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருக்க முடியும்.
என் கனிவான நாட்டுமக்களே, நீங்களனைவரும் உங்கள் சிறுவயதில் சிட்டுக்குருவியை உங்கள் வீட்டுக் கூரைகளிலோ, மரங்களிலோ கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள், அதன் கீச்சொலியைக் கேட்டிருப்பீர்கள். தமிழிலும் மலையாளத்திலும் இதை குருவி என்றும், தெலுகுவில் இதை பிச்சுகா என்றும், கன்னடத்தில் இதை குப்பி என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள். அனைத்து மொழிகளிலும், கலாச்சாரத்திலும் சிட்டுக்குருவி தொடர்பான சம்பவங்கள்-கதைகள் இருக்கின்றன. நம்மருகிலே உயிரிபன்முகத்தன்மையைப் பராமரிப்பதில் சிட்டுக்குருவிக்கு மிக மகத்துவமான பங்களிப்பு உண்டு; ஆனால் இன்று நகர்ப்புறங்களில் மிக அரிதாகவே சிட்டுக்குருவி காணப்படுகிறது. பெருகிவரும் நகர்ப்புறங்கள் காரணமாக சிட்டுக்குருவி நம்மை விட்டுத் தொலைவாகச் சென்றுவிட்டது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளில் பலர், சிட்டுக்குருவியை படங்களிலோ, காணொளிகளிலோ மட்டுமே பார்த்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளின் வாழ்விலே, இந்த இனிமையான பறவையை மீண்டும் மீட்டெடுக்க, சில வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையைச் சேர்ந்த கூடுகள் அறக்கட்டளையானது, சிட்டுக்குருவியின் எண்ணிக்கையைப் பெருக்க, பள்ளிக் குழந்தைகளைத் தங்கள் இயக்கத்தில் கலந்து கொள்ளச் செய்திருக்கிறார்கள். இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், சிட்டுக்குருவிகள் நமது அன்றாட வாழ்விலே எத்தனை மகத்துவம் வாய்ந்தவை என்பதைப் பள்ளிகளுக்குச் சென்று புரியவைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிட்டுக்குருவியின் கூட்டை எவ்வாறு அமைத்துக் கொடுப்பது என்பது தொடர்பாக பயிற்சிகளை அளிக்கிறார்கள். இதற்காக இந்த அமைப்பைச் சேர்ந்த இவர்கள், சிறிய அளவிலான மரவீட்டை உருவாக்க குழந்தைகளுக்குப் பயிற்றுவித்திருக்கிறார்கள். இதிலே சிட்டுக்குருவி வசிக்கவும், உண்ணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பை எளிதாக வெளிப்புறச் சுவரிலோ, மரத்திலோ பொருத்திவிட முடியும். குழந்தைகள் இந்த இயக்கத்தில் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டார்கள், சிட்டுக்குருவிகளுக்கான கூடுகளை அமைக்கத் தொடங்கினார்கள். கடந்த நான்கு ஆண்டுகளிலே இந்த அமைப்பு, சிட்டுக்குருவிகளுக்கென இப்படி 10,000 கூடுகளை உருவாக்கியிருக்கிறது. கூடுகள் அறக்கட்டளையின் இந்த முன்னெடுப்பு காரணமாக அக்கம்பக்கப் பகுதிகளில் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. நீங்களும் உங்கள் அருகிலே நடைபெறும் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டால், சிட்டுக்குருவி கண்டிப்பாக மீண்டும் நமது வாழ்க்கையின் அங்கமாக ஆகி விடும்.
நண்பர்களே, கர்நாடகத்தின் மைசூரூவில் இருக்கும் ஒரு அமைப்பு, குழந்தைகளுக்காக Early Bird என்ற பெயரிலான இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறது. இந்த அமைப்பானது பறவைகளைகளைப் பற்றி குழந்தைகளுக்குப் புரியவைக்க, சிறப்பானதொரு நூலகத்தை நடத்துகிறது. இதுமட்டுமல்ல, குழந்தைகளிடம் இயற்கையின்பால் பொறுப்புணர்வை ஏற்படுத்தவும் இயற்கைக்கல்வி கிட் ஒன்றைத் தயார் செய்திருக்கிறது. இந்த கிட்டிலே, குழந்தைகளுக்கென கதைப்புத்தகம், விளையாட்டுக்கள், செயல்பாட்டுத் தாள்-activity sheet மற்றும் திருகுவெட்டுப் புதிர்கள் ஆகியன அடங்கும். இந்த அமைப்பு, நகரக்குழந்தைகளை கிராமங்களுக்கு இட்டுச் செல்கிறது, அங்கே பறவைகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறது. இது போன்ற முயற்சிகள் மூலம் குழந்தைகளிடம் தங்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவற்றைக் கண்டு, புரிந்து கொண்டு பல கண்ணோட்டங்களை ஏற்படுத்த முடியும். மனதின் குரலின் நேயர்களும் கூட இத்தகைய முயற்சிகளைச் செய்து குழந்தைகளின் புரிதலை மேம்படுத்த இயலும்.
எனதருமை நாட்டுமக்களே, அரசாங்க அலுவலகம் என்று சொன்னவுடனே மனதிலே கோப்புகளின் குவியல் என்ற காட்சி மனதிலே நிழலாடும். திரைப்படங்களிலும் கூட இப்படித் தான் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அரசு அலுவலகங்களில் இந்தக் கோப்புகள் தொடர்பாக ஏராளமாக கேலி பேசப்பட்டு வருகின்றது, ஏகப்பட்ட கதைகளும் எழுதப்பட்டு விட்டன. பல்லாண்டுகளாக கோப்புகள், அலுவலகங்களில் தூசிபடிந்த நிலையில் இருந்தன, அங்கே தூய்மையின்மை நிலவி வந்தது. இப்படிப்பட்ட பல பத்தாண்டுகள் பழமையான கோப்புகளையும், குப்பைகளையும் அகற்ற சிறப்புத் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது. அரசுத் துறைகளில் இந்த இயக்கம் காரணமாக, அற்புதமான விளைவுகள் ஏற்பட்டன என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். தூய்மைப்படுத்தல் காரணமாக கணிசமான இடம் அலுவலகங்களில் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அலுவலகத்தில் பணி செய்வோருக்கு ’இது தங்கள் உடைமை’ என்ற உணர்வும் ஏற்பட்டிருக்கிறது. தங்களுடைய பணியிடங்களைத் தூய்மையாக வைத்திருப்பதன் முக்கியத்துவமும் அவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
நண்பர்களே, எங்கே தூய்மை இருக்கிறதோ, அங்கே திருமகள் வாசம் செய்கிறாள் என்று மூத்தோர் அடிக்கடி கூற நீங்கள் கேட்டிருக்கலாம். நமது தேசத்திலே குப்பையிலிருந்து கோமேதகம் ஏற்படுத்தும் கருத்து மிகவும் பழமையானது. தேசத்தின் பல பாகங்களில் பயனற்றவை என்று கருதப்படும் பொருட்கள் தொடங்கி, இளைஞர்கள் குப்பையிலிருந்து கோமேதகத்தை உருவாக்கி வருகின்றார்கள். பலவகையான நூதனக் கண்டுபிடிப்புக்களைப் புரிந்து வருகிறார்கள். இவற்றின் மூலம் அவர்கள் வருவாய் ஈட்டி வருகிறார்கள், வேலைவாய்ப்புக்கான சாத்தியங்களை மேம்படுத்தி வருகிறார்கள். இந்த இளைஞர்கள் தங்கள் முயற்சிகளின் மூலம் நீடித்த வாழ்க்கைமுறைக்கும் உந்துதல் அளித்து வருகிறார்கள். மும்பையின் இரு பெண்களின் இந்த முயற்சி மிகவும் கருத்தூக்கம் அளிக்கவல்லது. அக்ஷராவும், பிரக்ருதியும், துணித்துண்டுகளிலிருந்து ஃபேஷனுக்கான பொருட்களை உருவாக்கி வருகின்றார்கள். துணிகளை வெட்டித் தைக்கும் போது, மிஞ்சும் துண்டுத்துணிகள் இருக்கிறதல்லவா, இவற்றைக் குப்பை என்று தூர எறிந்து விடுவார்கள். அக்ஷரா-பிரக்ருதியின் குழு, இந்தத் துண்டுத் துணிகளின் குப்பையை ஃபேஷன் பொருளாக மாற்றி விடுகிறது. துண்டுத் துணிகளாலான தொப்பிகள், பைகள் உடனுக்குடன் விற்றுத் தீர்ந்து விடுகின்றன.
நண்பர்களே, தூய்மை தொடர்பாக உபி மாநிலத்தின் கான்பூரிலும் கூட நல்லதொரு முன்னெடுப்பு நடந்து வருகிறது. இங்கே சிலர் தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள், கங்கையின் கரைகளில் பரவியிருக்கும் நெகிழிக் குப்பைகள், இன்னபிற குப்பைகளை எடுக்கிறார்கள். இந்தக் குழுவின் பெயர் Kanpur Ploggers Group, அதாவது கான்பூர் குப்பை சேகரிப்போர் குழு. இதை சில நண்பர்கள் இணைந்து தொடங்கினார்கள். மெல்லமெல்ல இது மக்கள் பங்களிப்பின் பேரியக்கமாக மாறிவிட்டது. நகரின் பலர் இதோடு இணைந்திருக்கிறார்கள். இதன் உறுப்பினர்கள் இப்போது கடைகள் மற்றும் வீடுகளில் இருக்கும் குப்பைகளையும் கூட சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தக் குப்பை வாயிலாக மறுசுழற்சி ஆலையில் மரங்களுக்கான பாதுகாப்பு வேலி தயாரிக்கப்படுகிறது, அதாவது இந்தக் குழுவானது, குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட மரக்காப்பானைக் கொண்டு தாவரங்களுக்குப் பாதுகாப்பையும் அளிக்கிறது.
நண்பர்களே, சின்னச்சின்ன முயற்சிகளால் பெரிய வெற்றிகள் எப்படி சாத்தியமாகின்றன என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு, அஸாம் மாநிலத்தின் இதிஷா. இதிஷா படித்தது எல்லாம் தில்லியிலும், புணேயிலும். இதிஷா பெருநிறுவன உலகின் பகட்டான வாழ்க்கையைத் துறந்து, அருணாச்சலத்தின் சாங்கதி நதித்துறையைத் தூய்மைப்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறார். சுற்றுலாப் பயணிகள் காரணமாக அங்கே கணிசமான நெகிழிக் கழிவுகள் திரளத் தொடங்கின. அங்கே ஒருகாலத்தில் தூய்மையாக இருந்த நதி, நெகிழிக் கழிவுகள் காரணமாக மாசடைந்து விட்டது. இதை சுத்தப்படுத்த வட்டார மக்களோடு இணைந்து இதிஷா செயல்பட்டு வருகிறார். இவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள், வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, நெகிழிக் கழிவுகளைத் திரட்டி, ஒட்டுமொத்த படித்துறையிலும் மூங்கிலால் செய்யப்பட்ட குப்பைக்கூடைகளை வைத்திருக்கிறார்கள்.
நண்பர்களே, இப்படிப்பட்ட முயற்சிகளால் பாரதத்தில் தூய்மை இயக்கத்திற்கு வேகம் கிடைத்து வருகிறது. இது தொடர்ந்து நடைபெற்றுவரும் இயக்கம். உங்கள் அருகிலே கூட இப்படிப்பட்டவை நடந்து கொண்டிருக்கலாம். நீங்கள் இப்படிப்பட்ட முயற்சிகள் தொடர்பாக கண்டிப்பாக எனக்கு எழுதி வாருங்கள்.
நண்பர்களே, மனதின் குரலின் இந்தப் பகுதியில் இம்மட்டே. உங்களுடைய எதிர்வினைகள், கடிதங்கள், ஆலோசனைகளுக்காக மாதம் முழுவதும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். மாதம்தோறும் வருகின்ற உங்களுடைய தகவல்கள் என்னை மேலும் சிறப்பாக இயங்க வைக்க உத்வேகம் அளிக்கின்றன. அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம், மனதின் குரலின் மேலும் ஒரு பகுதியில், தேசம் மற்றும் தேசத்தின் மக்களின் புதிய சாதனைகளோடு சந்திப்போம். அதுவரை, நாட்டுமக்கள் அனைவருக்கும் என்னுடைய ஏராளமான நல்வாழ்த்துக்கள். பலப்பல நன்றிகள்.
NCC instills a spirit of discipline, leadership and service in the youth. #MannKiBaat pic.twitter.com/DTvJx4lpfu
— PMO India (@PMOIndia) November 24, 2024
On 12th January next year, we will mark Swami Vivekananda's 162nd Jayanti. This time it will be celebrated in a very special way. #MannKiBaat pic.twitter.com/TbumRi0Ta6
— PMO India (@PMOIndia) November 24, 2024
The compassion and energy of our Yuva Shakti in helping senior citizens is commendable. #MannKiBaat pic.twitter.com/UNBPi9mrnt
— PMO India (@PMOIndia) November 24, 2024
Innovative efforts from Chennai, Hyderabad and Bihar's Gopalganj to enhance children’s education. #MannKiBaat pic.twitter.com/RSy1HVbyv4
— PMO India (@PMOIndia) November 24, 2024
Let's celebrate the inspiring stories of Indian diaspora who made their mark globally, contributed to freedom struggles and preserved our heritage. Share such stories on the NaMo App or MyGov using #IndianDiasporaStories.#MannKiBaat pic.twitter.com/SHUXii9ln6
— PMO India (@PMOIndia) November 24, 2024
Numerous Indian families have been living in Oman for many centuries. Most of them who have settled there are from Kutch in Gujarat.
— PMO India (@PMOIndia) November 24, 2024
With the support of the Indian Embassy in Oman and the National Archives of India, a team has started the work of preserving the history of these… pic.twitter.com/EoaXuCVe2h
A special effort in Slovakia which is related to conserving and promoting our culture. #MannKiBaat pic.twitter.com/qWfm9iZsTH
— PMO India (@PMOIndia) November 24, 2024
A few months ago, we started the 'Ek Ped Maa Ke Naam' campaign. People from all over the country participated in this campaign with great enthusiasm.
— PMO India (@PMOIndia) November 24, 2024
Now this initiative is reaching other countries of the world as well. During my recent visit to Guyana, President Dr. Irfaan Ali,… pic.twitter.com/g47I055ASN
Commendable efforts across the country towards 'Ek Ped Maa Ke Naam' campaign. #MannKiBaat pic.twitter.com/rnWYZ3oryU
— PMO India (@PMOIndia) November 24, 2024
Unique efforts are being made to revive the sparrows. #MannKiBaat pic.twitter.com/7KII9kB5Kb
— PMO India (@PMOIndia) November 24, 2024
Innovative efforts from Mumbai, Kanpur and Arunachal Pradesh towards cleanliness. #MannKiBaat pic.twitter.com/fDGsH2Uqyd
— PMO India (@PMOIndia) November 24, 2024