வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு கவனம் அளித்ததற்காக பாராட்டு தெரிவித்து, கொவிட் பெருந்தொற்றை கையாள்வதற்கு தக்க தருணத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக முதல்வர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்
தொற்றின் உருமாறும் தன்மையையும், அனைத்து மாறுபாடுகளையும் தீவிரமாகக் கண்காணிக்குமாறு பிரதமர் வலியுறுத்தல்
போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல் மலைப்பிரதேசங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு எதிராக கடுமையாக எச்சரித்தார்
மூன்றாவது அலையை எவ்வாறு தடுப்பது என்பதுதான் நமது மனதில் எழும் முக்கிய கேள்வி: பிரதமர்
தடுப்பூசிக்கு எதிரான பொய்யான தகவல்களை எதிர்கொள்வதற்காக சமூக, கல்வி நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் ஆன்மீக நம்பிக்கையுள்ள நிறுவனங்களின் உதவியை நாடுங்கள்: பிரதமர்
‘அனைவருக்கும் இலவச தடுப்பு மருந்து’ பிரச்சாரத்திற்கு வடகிழக்குப் பகுதிகள் மிகவும் முக்கியம்: பிரதமர்
அண்மையில் அனுமதி அளிக்கப்பட்ட ரூ. 23,000 கோடி தொகுப்பு, மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் உதவிகரமாக இருக்கும்: பிரதமர்
பிஎம்- கேர்ஸ் பிராணவாயு ஆலைகளை நிறைவு செய்யுமாறு முதலமைச்சர்களுக்கு கோரிக்கை

பிரதமர் திரு நரேந்திர மோடி, வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கொவிட்-19 நிலவரம் குறித்து இன்று கலந்துரையாடினார். நாகலாந்து, திரிபுரா, சிக்கிம், மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். கொவிட் பெருந்தொற்றை உரிய நேரத்தில் கையாண்டதற்காக பிரதமருக்கு முதலமைச்சர்கள் நன்றி தெரிவித்தனர். வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு கவனம் வழங்கியதற்காக பிரதமரை அவர்கள் பாராட்டினர். உள்துறை, பாதுகாப்பு, சுகாதாரம், வட கிழக்கு மாகாண வளர்ச்சி உள்ளிட்ட துறைகளின் மத்திய அமைச்சர்களும் கலந்துரையாடலின் போது உடனிருந்தனர்.

தங்களது மாநிலங்களில் தடுப்பூசி செலுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்தும், தொலைதூரப் பகுதிகளில் தடுப்பூசிகளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர்கள் விளக்கமளித்தனர். தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயங்குவது தொடர்பான பிரச்சனை மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் பற்றியும் அவர்கள் ஆலோசித்தனர். கொவிட் தொற்றை சமாளிப்பதற்காக மருத்துவ உள்கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் அவசரகால சூழ்நிலையில் பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணத்தால் (பிஎம் கேர்ஸ்) அளிக்கப்பட்ட ஆதரவு பற்றியும் அவர்கள் எடுத்துரைத்தனர். தங்களது மாநிலங்களில்  தொற்று உறுதி விகிதம் மற்றும் பாதிப்புகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு உரிய நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.

ஒட்டுமொத்த அன்றாட பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றி உள்துறை அமைச்சர் பேசினார். எனினும், இதன் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிடக்கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். நாட்டின் ஒரு சில பகுதிகளில்  தொற்று உறுதி விழுக்காடு அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். பரிசோதனை, தடம் அறிதல், கண்காணித்தல் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.  கொவிட் பாதிப்புகள் குறித்த ஒட்டுமொத்த பார்வையை சுகாதாரத்துறை செயலாளர் முன் வைத்ததோடு, ஒரு சில வடகிழக்கு மாநிலங்களில் தொற்று உறுதி வீதம் உயர்ந்திருப்பது பற்றியும் ஆலோசித்தார். மருத்துவப் பிராணவாயுவின் விநியோகத்தை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி விளக்கமளித்த அவர், தடுப்பூசியின் வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர், பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மாநிலங்களின் கடினமான நிலப்பரப்பையும் பொருட்படுத்தாது பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகத் தீவிரமாக உழைத்த வடகிழக்கு மாநிலங்களின் மக்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அரசுகளைப் பாராட்டினார்.

ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த பிரதமர், இந்த சமிக்ஞைகளைப் பயன்படுத்தி மிகச்சிறிய அளவில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையை சமாளிப்பதற்காக மிகச்சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கான நெறிமுறைகளைப் பயன்படுத்துமாறு அவர் மீண்டும் வலியுறுத்தினார். இதுதொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெற்றுள்ள அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை முழுமையாகப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

விரைவாக உருமாறும் தன்மையுடைய தொற்று குறித்துப் பேசிய பிரதமர், தொற்றின் உருமாறும் தன்மையையும் அனைத்து மாறுபாடுகளையும்  தீவிரமாகக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தினார். மாறுபாடுகள் பற்றியும் அவற்றின் தாக்கம் குறித்தும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். கொவிட் சரியான நடத்தை விதிமுறையை வலியுறுத்திய அவர், இதுபோன்ற சூழ்நிலையில் முன்னெச்சரிக்கை மற்றும் சிகிச்சை முக்கியத்துவம் பெற்றிருப்பதாகக் கூறினார். தனிநபர் இடைவெளி, முகக்கவசம், தடுப்பூசி போன்றவற்றின் பயன்பாடு தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். அதேபோல பரிசோதனை, தடம் அறிதல் மற்றும் சிகிச்சை ஆகிய உத்திகளும் நிரூபணமாகியுள்ளன.

 

சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் பெருந்தொற்றின் தாக்கம் குறித்துப் பேசிய பிரதமர், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல் மலைப்பிரதேசங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு எதிராக கடுமையாக எச்சரித்தார். மூன்றாவது அலை துவங்குவதற்கு முன்பு மக்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள் என்ற கூற்றை நிராகரித்த அவர், மூன்றாவது அலை தானாகவே உருவாகாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மூன்றாவது அலையை எவ்வாறு தடுப்பது என்பதுதான் நமது மனதில் எழும் முக்கிய கேள்வியாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அஜாக்கிரதை மற்றும் கூட்ட நெரிசலால் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் இதுபற்றி நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். தவிர்க்கக்கூடிய நெரிசலைத் தடுக்க வேண்டும் என்று அவர் தீவிரமாக வலியுறுத்தினார்.

‘அனைவருக்கும் இலவச தடுப்பு மருந்து' என்ற மத்திய அரசின் பிரச்சாரத்தில் வடகிழக்குப் பகுதியும் சம அளவில் முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பதாகவும், எனவே தடுப்பூசித் திட்டத்தைத் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். தடுப்பூசி பற்றியும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மக்களை அழைத்துச் செல்வது பற்றியும் எழுப்பப்படும் தவறான செய்திகளை எதிர்கொள்வதற்காக, சமூக, கல்வி நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் ஆன்மீக நம்பிக்கையுள்ள நிறுவனங்களின் உதவியை நாடுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். தொற்றின் பரவல் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் தடுப்பூசித் திட்டத்தை அதிகப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 23,000 கோடி தொகுப்பிற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், வடகிழக்குப் பகுதிகளில் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு இந்தத் தொகுப்பு உதவிகரமாக இருக்கும் என்று கூறினார். பரிசோதனை, சிகிச்சை, மரபியல் மாறுபாடுகளை இந்தத் தொகுப்பு விரைவுபடுத்தும். வடகிழக்குப் பகுதிகளில் படுக்கைகளின் எண்ணிக்கை, பிராணவாயு வசதி மற்றும் குழந்தைகள் மருத்துவப் பிரிவின் உள்கட்டமைப்பை துரிதமாக அதிகரிக்குமாறு பிரதமர் வலியுறுத்தினார். நாடு முழுவதும் பிஎம் கேர்ஸ் மூலம் நூற்றுக்கணக்கான பிராணவாயு ஆலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், வட கிழக்குப் பகுதிகளிலும் 150 ஆலைகள் நிறுவப்படவிருப்பதாகவும் பிரதமர் கூறினார். இந்த ஆலைகளின் பணியை விரைந்து முடிக்குமாறு முதலமைச்சர்களுக்கு பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

வடகிழக்குப் பகுதிகளின் புவி சார்ந்த நிலையைக் கருத்தில் கொண்டு தற்காலிக மருத்துவமனைகள் அங்கு அமைக்கப்படுவதன் தேவையை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். பிராணவாயு ஆலைகள், அவசர கட்டுப்பாட்டுப் பிரிவுகள், புதிய இயந்திரங்கள் போன்றவை இரண்டு வட்டார அளவிலான மருத்துவமனைகளுக்கு விரைவில் வழங்கப்படவிருப்பதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு போதிய பயிற்சிகளை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அவர் உறுதி அளித்தார்.

பரிசோதனையின் திறன் நாளொன்றுக்கு 20 லட்சம் பரிசோதனைகளாக இருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பரிசோதனை வசதிக்கான உள்கட்டமைப்பை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். நோக்கின்றி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுடன், தீவிர பரிசோதனைகளையும் அவர் வலியுறுத்தினார். ஒன்றிணைந்த நடவடிக்கைகளின் வாயிலாக தொற்றின் பரவலை நம்மால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

 

 

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi