பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில், 2024 ஜூன் 14 அன்று நடைபெறும் ஜி7 அவுட்ரீச் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலியில் உள்ள அபுலியா பகுதிக்கு நான் பயணம் மேற்கொள்கிறேன்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் முதல் பயணமாக, இத்தாலிக்கு செல்வது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். 2021 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக நான் இத்தாலி சென்றதை அன்புடன் நினைவு கூர்கிறேன். கடந்த ஆண்டு பிரதமர் மெலோனியின் இரண்டு இந்தியப் பயணங்கள் நமது இருதரப்பு உறவில் வேகத்தையும் ஆழத்தையும் ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தன. இந்தியா-இத்தாலி இடையேயான உறவை வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
அவுட்ரீச் அமர்வில் விவாதங்களின் போது, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் பிராந்தியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் முடிவுகள் மற்றும் வரவிருக்கும் ஜி 7 உச்சிமாநாட்டின் முடிவுகளுக்கு இடையே அதிக ஒருங்கிணைப்பைக் கொண்டுவரவும், உலகளாவிய தெற்கிற்கு முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் மற்ற தலைவர்களுடனான சந்திப்பை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.