மேன்மை தங்கியவர்களே,
மேதகு பெருமக்களே,
உங்களது மதிப்புமிக்க யோசனைகள் மற்றும் கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும், நமக்கு பொதுவான பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். உங்களது கருத்துகள் உலகளாவிய தெற்கு அமைப்பு ஒன்றுபட்டுள்ளது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
உங்களது யோசனைகள் நமது விரிவான பங்களிப்பை பிரதிபலிக்கிறது. நமது இன்றைய விவாதங்கள், பரஸ்பர புரிந்துணர்வுடன் முன்னோக்கிச் செல்வதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. நமது பொதுவான குறிக்கோள்களை எட்ட இது உத்வேகம் அளிக்கும் என நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
உங்கள் அனைவரது கருத்துகளையும் இன்று கேட்ட பிறகு, “உலகளாவிய வளர்ச்சியின் நெருக்கம்” குறித்து இந்தியாவின் சார்பில் விரிவான கருத்துகளை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நெருக்கத்திற்கான அடித்தளம், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் மற்றும் வளர்ச்சிக்கான பங்குதாரர்களின் அனுபவங்கள் அடிப்படையில் அமைந்ததாகும். இந்த நெருக்கம், உலகளாவிய தெற்கு அமைப்பின் உறுப்பு நாடுகள் தமக்கு தாமே நிர்ணயித்து கொண்ட வளர்ச்சிக்கான முன்னுரிமை மூலம் உற்சாகம் அளிக்கக்கூடியதாகும்.
இது மனிதர்கள் சார்ந்த, பல பரிமாண மற்றும் வளர்ச்சிக்கான பல்துறை அணுகுமுறையை ஊக்குவிக்கும். இது உதவி தேவைப்படும் நாடுகளை வளர்ச்சி நிதி என்ற பெயரில் கடன் சுமையில் தள்ளாது. இது சமச்சீரான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான பங்குதாரர் நாடுகளுக்கு பங்களிப்பை வழங்கும்.
நண்பர்களே,
உலகளாவிய தெற்கு அமைப்பின் உறுப்பு நாடுகளின் நிதிச்சுமை மற்றும் வளர்ச்சி நிதியத்திற்கான தலைவர்கள் குழுவின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு குறித்த ஊக்க நடவடிக்கைக்கு இந்தியா தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. விலை குறைவான நல்ல பலனை அளிக்கக் கூடிய பாரம்பரிய மருந்துகள் உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு கிடைக்கச் செய்ய நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் நாங்கள் உதவி வருகிறோம்.