உலகம் முழுவதையும் சேர்ந்த மாபெரும் சுழற்சங்க குடும்பத்தினரே, அன்பு நண்பர்களே, வணக்கம்!
உலகளாவிய சிறிய மகாசபை போல இங்கே பெருமளவில் கூடியிருக்கின்ற ரோட்டரி இன்டர்நேஷனல் மாநாட்டில் உரையாற்ற நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது பன்முகத்தன்மை கொண்டது, துடிப்புமிக்கது. சுழற்சங்கத்தினராகிய நீங்கள் அனைவரும் உங்களின் சொந்தத்துறைகளில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இருப்பினும் பணியுடன் மட்டும் நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. இந்த புவிக்கோளினை சிறப்பானதாக மாற்றும் விருப்பம் உங்களை இந்தத் தளத்திற்கு ஒருங்கிணைத்து அழைத்து வந்துள்ளது. வெற்றி மற்றும் சேவையின் உண்மையான கலவையாக இது இருக்கிறது.
நண்பர்களே!,
இந்த அமைப்பு இரண்டு முக்கியமான நோக்கங்களை கொண்டுள்ளது. ஒன்று தன்னலத்தையும் விஞ்சிய சேவை. மற்றொன்று சிறப்பாக சேவை செய்வோர் பெரும் ஆதாயம் பெறுகிறார்கள். இந்த இரண்டும் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நன்மை செய்யும் கோட்பாடுகளாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நமது முனிவர்கள், துறவிகள் இதையே ஆற்றல்மிகு பிரார்த்தனையாக நமக்கு அளித்தனர். அனைத்து ஜீவராசிகளும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். அனைத்து ஜீவராசிகளும் ஆரோக்கிய வாழ்க்கையை பெறட்டும் என்பது அவர்களின் வேண்டுகோளாக இருந்தது. இதுதான் நமது கலாச்சாரம். இதன் பொருள் மகாத்மாக்கள் மற்றவர்களின் நலனுக்காக மட்டுமே பணியாற்றுகிறார்கள், வாழ்கிறார்கள். நமது நாடு புத்தர், மகாத்மா காந்தி ஆகியோருடையது. அவர்கள் அனைத்துக்கும் மேலாக மற்றவர்களின் வாழ்க்கைக்காக செயல்படுவதை எடுத்துக்காட்டியவர்கள்.
நண்பர்களே!
நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோம். ஒருவரோடு ஒருவர் உறவாக இருக்கிறோம். ஒருவரோடு ஒருவர் தொடர்புடைய உலகத்தில் இருக்கிறோம். “இந்தப் பிரபஞ்சத்தில் எந்தவொரு அணுவும் தன்னுடன் மற்றொன்றை பிணைத்து இழுத்து செல்லாமல், இந்த உலகம் இயங்க முடியாது” என்று சுவாமி விவேகானந்தர் மிகச்சரியாகவே எடுத்துரைத்தார். இதனால் தனி நபர்களும், அமைப்புகளும், அரசுகளும் ஒருங்கிணைந்து நமது புவிக்கோளை கூடுதல் பலமுடையதாகவும், நீடிக்கவல்லதாகவும் மாற்றுவது மிகவும் முக்கியமானதாகும். ரோட்டரி இன்டர்நேஷனல் என்பது இந்த பூமியில் மேற்கொண்டுள்ள பல பணிகள் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்களே!
எனது உரையை நான் நிறைவு செய்வதற்கு முன், சுழற்சங்க குடும்பத்திற்கு நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் வருகிறது. யோகா என்பது உடல், மனம், அறிவு, ஆன்மிகம் ஆகியவற்றின் நலனுக்கானது என்பதை நீங்கள் அறிவீர்கள். ரோட்டரி குடும்ப உறுப்பினர்களாகிய நீங்கள் பெரும் எண்ணிக்கையில் உலகம் முழுவதும் யோகா தினத்தை அனுசரிப்பீர்களா? உங்களின் உறுப்பினர்களிடையே யோகாவை தொடர்ச்சியாக மேற்கொள்ள ஊக்கப்படுத்துவீர்களா? அப்படி செய்தால் அதன் பயனை நீங்கள் காணலாம். உங்களின் மாநாட்டில் உரையாற்ற என்னை அழைத்ததற்கு நான் மீண்டும் நன்றி கூர்கிறேன். ஒட்டுமொத்த ரோட்டரி இன்டர்நேஷ்னல் குடும்பத்திற்கு எனது வாழ்த்துக்கள். நன்றி! உங்களுக்கு மிக்க நன்றி.