வங்கதேச அரசின் மேதகு பிரதிநிதிகளே, வேளாண் அமைச்சர் டாக்டர் முஹம்மத் அப்துல் ரசாக் அவர்களே, திரு ஷேக் செலின் அவர்களே லெப்டினன்ட் கர்னல் முகமது ஃபரூக்கான் அவர்களே, ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாகூர் அவர்களின் பாரம்பரியம் மற்றும் மாண்புகளை எடுத்துரைக்கும் எனது சக இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் நண்பருமான திரு சாந்தனு தாகூர் அவர்களே, இந்தியாவிலிருந்து வந்துள்ள அகில இந்திய மதுவா கூட்டமைப்பு பிரதிநிதிகளே, சகோதர, சகோதரிகளே!
அனைவருக்கும் வணக்கம்!
ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாகூர் அவர்களின் ஆசியால் இந்த புனித ஒரகண்டி தாகூர்பாரியில் வணங்கும் வாய்ப்பை நான் பெற்றேன். பல ஆண்டுகளாக இந்த புனித தருணத்திற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதமராக முதன்முதலாக வங்கதேசத்திற்கு வந்திருந்தபோது இங்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை நான் வெளிப்படுத்தினேன். எனது ஆசை இன்று நிறைவேறியுள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாகூரின் தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினரின் அன்பையும் ஆதரவையும் நான் எப்போதும் பெறுகிறேன். மேற்கு வங்கத்தில் உள்ள தாகூர் நகருக்கு நான் சென்றிருந்த போது எனது மதுவா சகோதர, சகோதரிகள் ஓர் குடும்ப உறுப்பினரைப் போல என் மீது அன்பு செலுத்தியதை நான் நினைவு கூர்கிறேன். மேற்கு வங்கத்தில் உள்ள தாகூர் நகர் முதல் வங்கதேசத்தின் தாகூர்பாரி வரை அதே மரியாதை, நம்பிக்கை மற்றும் அனுபவம் கிடைக்கிறது.
வங்கதேசத்தின் தேசியத் திருவிழாவை முன்னிட்டு இந்தியாவில் உள்ள 130 கோடி சகோதர, சகோதரிகளின் அன்பையும் வாழ்த்துகளையும் நான் உங்களுக்கு எடுத்து வந்துள்ளேன்.
வங்கதேசம் விடுதலை பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
நான் இங்கு வருவதற்கு முன்பு, தேசத்தந்தை பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினேன். ஷேக் முஜிபூர் ரஹ்மானின் தலைமை, அவரது தொலைநோக்குப் பார்வை, வங்கதேச மக்களின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை ஆகியவை போற்றத்தக்கது.
இன்று இந்தியா, வங்கதேச நாடுகளுக்கு இடையேயான இயற்கையான உறவை இருநாட்டு அரசுகளும் மேலும் வலுப்படுத்தி வரும் நிலையில், தாகூர்பாரி மற்றும் ஸ்ரீ ஹரிசந்த் தாகூர் அவர்களால் கலாச்சார ரீதியாக இந்த முயற்சி பல தசாப்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
ஒருவகையில் இந்த இடம் இந்தியா, வங்கதேச நாடுகளுக்கு இடையேயான ஆன்மீக உறவுகளுக்கான புனிதத் தலமாகும். நமது உறவு இரு நாடுகளின் மக்களுக்கு இடையேயான உறவு, இதயங்களுக்கு இடையேயான உறவு.
இந்தியாவும், வங்கதேசமும் தங்களது வளர்ச்சியின் வாயிலாக ஒட்டுமொத்த உலகின் வளர்ச்சியைக் காண விரும்புகின்றன. உலகில் நிலையற்ற தன்மை, தீவிரவாதம், அமைதியின்மை ஆகியவற்றிற்கு மாற்றாக நிலைத்தன்மை, அன்பு மற்றும் அமைதி ஏற்பட இரு நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன.
இந்த மாண்புகள் ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாகூர் தேவ் அவர்களால் நமக்கு வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் பேசப்படும் மற்றும் மனித சமுதாயம் கனவு காணும் மாண்புகளுக்காக ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் அவர்கள் தமது வாழ்நாளை அர்ப்பணித்தார்.
ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் அவர்கள் வழிகாட்டிய பாதையில் பொதுவான, இணக்கமான சமுதாயத்தை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அந்த சகாப்தத்தில் பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் சமூக பங்களிப்பிற்காக அவர் பணியாற்றினார். இன்று பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான முயற்சிகளின் வளர்ச்சியை நாடு முழுவதும் நாம் காண்கிறோம்.
அடிமைத்தனம் நிறைந்த அந்தக் காலகட்டத்திலும் உண்மையான வளர்ச்சிக்கான பாதையை சமுதாயத்திற்கு அவர் வழங்கினார். இன்று இரு நாடுகளும் சமுதாய ஒற்றுமை, இணக்கம், வளர்ச்சியின் புதிய பரிமாணங்கள் என்ற அதே தாரக மந்திரங்களோடு நமது எதிர்காலத்தை கட்டமைக்கிறோம்.
நண்பர்களே,
ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தேவ் அவர்களின் வாழ்க்கை நமக்கு மற்றொரு பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது. ஆன்மீக அன்பு சார்ந்த கருத்துக்களுடன், நமது கடமைகளையும் அவர் நமக்குப் புரிய வைத்தார். அடக்குமுறை மற்றும் துன்பத்திற்கு எதிரான போராட்டமும் ஒருவகை தியானம் என்று அவர் கூறினார்.
இந்தியா, வங்கதேசம் மற்றும் உலகெங்கும் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் அவர்களின் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்த பாதையை பின்பற்றி மனித சமுதாயம் சந்திக்கும் எல்லாவிதமான இன்னல்களுக்கும் தீர்வு ஏற்பட ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.
நண்பர்களே,
இன்று இந்தியாவும் வங்கதேசமும் சந்திக்கும் பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கு ஸ்ரீ ஹரிசந்த் அவர்களின் ஊக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாடுகளும் அனைத்து சவால்களையும் ஒன்றாக இணைந்து சந்திக்க வேண்டும். இது நமது கடமை; இரு நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்விற்கான பாதை, இது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவும் வங்கதேசமும் தங்களது வலிமையை எடுத்துரைத்தன. இன்று இரு நாடுகளும் இந்த பெருந்தொற்றை எதிர்த்து இணைந்து வலிமையாக போராடுகின்றன. தனது கடமையாக, 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' தடுப்பூசி வங்கதேசத்தின் குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் அவர்கள் எப்போதுமே புதுமைகளுக்கும், மாற்றங்களுக்கும் ஆதரவளித்தார். பெருந்தொற்று நெருக்கடியின் துவக்க காலத்தில் ஒரகண்டியில் உள்ள நீங்கள் அனைவரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், சமூக தன்னம்பிக்கையை வளர்க்கவும் தொடங்கியதை நான் அறிகிறேன்.
அவரைத் தொடர்ந்து ஸ்ரீ ஸ்ரீ குருசந்த் தாகூர் அவர்கள், ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் அவர்களின் போதனைகளை மக்களிடையே எடுத்துச் சென்று பாதிக்கப்பட்ட தலித்துகளை ஒன்றிணைத்தார். பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் அவர் அயராது பணியாற்றினார்.
ஒரகண்டியில் உள்ள பெண்கள் நடுநிலைப் பள்ளியில் இந்திய அரசு, புதிய நவீன வசதிகளை ஏற்படுத்தி, அதன் தரத்தை உயர்த்தும். மேலும் இங்கே ஓர் ஆரம்ப பள்ளிக்கூடத்தை இந்திய அரசு அமைக்கும்.
கோடிக்கணக்கான இந்தியர்களின் சார்பாக ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாகூர் அவர்களுக்கு இது ஓர் மரியாதை. இந்தப் பணியில் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வங்கதேச அரசுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.
ஸ்ரீ ஸ்ரீ ஹரி சிங் தாகூர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் ஒரகண்டி வருகிறார்கள். இந்திய சகோதர, சகோதரிகளின் இந்தப் புனித பயணத்தை எளிதாக்குவதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ளும்.தாகூர் நகரில் மதுவா சமூகத்தின் ஒளிமயமான வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான பிரம்மாண்ட விழாக்களை ஏற்பாடு செய்வதிலும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.
நண்பர்களே,
‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம்' என்ற தாரக மந்திரத்துடன் இந்தியா தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறது. வங்கதேசம் அதற்குத் துணையாக உள்ளது. அதேவேளையில் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கு வலுவான உதாரணமாக வங்கதேசம் உலக நாடுகளுக்கு விளங்குகிறது. இந்த முயற்சிகளில் இந்தியா உங்களுக்குத் துணை நிற்கும்.
21-ஆம் நூற்றாண்டில் இரு நாடுகளுக்கு இடையேயான பொதுவான இலக்குகளை நாம் எட்டுவோம் என்று நம்புகிறேன். வளர்ச்சி மற்றும் அன்பின் பாதையில் இந்தியா மற்றும் வங்கதேசம் உலக நாடுகளைத் தொடர்ந்து வழிநடத்தும்.
இந்திய- வங்கதேச நட்பு நிலைக்கட்டும்.
நன்றி!
குறிப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.