வணக்கம்!
மாண்புமிகு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத்தலைவருமான திரு. வெங்கையா நாயுடு அவர்களே, மாண்புமிகு மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா அவர்களே, மாண்புமிகு மாநிலங்களவைத் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் அவர்களே, மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்களே, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இதர முக்கியஸ்தர்களே, சீமாட்டிகளே, கனவான்களே!
இன்று, நமது நாடாளுமன்ற அமைப்பில் மற்றொரு முக்கியமான அத்தியாயம்.
இன்று, நாடு சன்சத் தொலைக்காட்சியைப் பெறுகிறது. இது நாட்டின் ஜனநாயகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் புதிய குரலாக செயல்படும்.
இந்த யோசனையை நனவாக்கிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நல்வாழ்த்துக்கள். நமது மாண்புமிகு சபாநாயகர் தெரிவித்தபடி, இன்றுடன் தூர்தர்ஷனின் 62 ஆண்டுகள் நிறைவடைகிறது. இது மிக நீண்ட பயணம். இந்தப் பயணத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு பலர் பங்களித்துள்ளனர். தூர்தர்ஷனின் செயல்பாட்டுடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
நண்பர்களே,
வேகமாக மாறிவரும் காலங்களில், ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களின் பங்கு மிக வேகமாக மாறி வருகிறது.
இந்த 21 ஆம் நூற்றாண்டில் நமது நாடாளுமன்றத்துடன் தொடர்புடைய சேனல்களும் இந்த நவீன அமைப்புகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். சன்சத் தொலைக்காட்சி சமூக ஊடகங்கள் மற்றும் OTT தளங்களில் கிடைக்கும், அதற்கான செயலியும் இருக்கும் என்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இதன்மூலம், நமது நாடாளுமன்ற உரையாடல் நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படுவது மட்டுமல்லாமல், சாமானிய மனிதனையும் சென்றடையும்.
சர்வதேச ஜனநாயக தினம் செப்டம்பர் 15 அன்று கொண்டாடப்படுகிறது. ஜனநாயகம் குறித்து, இந்தியாவின் பொறுப்பு அதிகம். இந்தியா ஜனநாயகத்தின் தாய். சர்வதேச ஜனநாயக தினத்தன்று சன்சத் தொலைக்காட்சியைத் தொடங்குவது மிகவும் பொருத்தமானதாகிறது.
இன்று பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. எம். விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த ஆண்டில் இந்த நாள், இந்தியாவின் கடின உழைப்பாளிகளான, திறமையான பொறியியலாளர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி உலகில், ஓபி பொறியாளர்கள், ஒலிப் பொறியாளர்கள், கிராபிக்ஸ் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், பேனலிஸ்டுகள், ஸ்டுடியோ இயக்குநர்கள், கேமராமேன்கள், வீடியோ எடிட்டர்கள் மற்றும் பல தொழில் வல்லுநர்கள் ஒளிபரப்பை சாத்தியமாக்குகிறார்கள். சன்சத் தொலைக்காட்சி உட்பட நாட்டின் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் பணிபுரியும் பொறியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
நண்பர்களே,
நாடு விடுதலையடைந்து 75 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது. கடந்த கால பெருமை மற்றும் வருங்காலத் தீர்மானங்கள் நம்மிடம் உள்ளன. இந்த இரண்டிலும் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்க வேண்டும். ஊடகங்கள் தூய்மை இந்தியா திட்டம் போன்ற திட்டங்கள் பற்றி விவாதிக்கையில், அது மக்களிடையே வேகமாகப் பரவுகிறது.
விடுதலை பவள விழா காலத்தின் போது, விடுதலைக்காக நாட்டு மக்கள் மேற்கொண்ட முயற்சிகளை ஊடகங்கள் எடுத்துக் கூறி, சிறந்த பணியாற்ற முடியும். உதாரணமாக, தொலைக்காட்சி சேனல்கள் சுதந்திரப் போராட்டத்தின் 75 அத்தியாயங்களைத் திட்டமிட்டு ஆவணப்படங்களை உருவாக்கலாம்.
செய்தித்தாள்கள் விடுதலை பவள விழா தொடர்பான கூடுதல் பக்கங்களை வெளியிடலாம். வினாடி வினாக்கள் மற்றும் போட்டிகள் போன்றவை மூலம் டிஜிட்டல் மீடியா நேரடியாக இளைஞர்களை இணைக்க முடியும்.
இந்தத் திசையில் சன்சத் தொலைக்காட்சிக் குழுவும் பல நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
எனது அனுபவத்தைப் பொறுத்தவரை "உள்ளடக்கம் தான் நம்மை மற்றவர்களுடன் இணைக்கும்". அதாவது, உங்களிடம் சிறந்த உள்ளடக்கம் இருக்கும்போது, மக்கள் தானாகவே உங்களுடன் இணைந்து கொள்வார்கள். இது ஊடகங்களுக்கு எவ்வளவு பொருந்துமோ, அதே அளவிற்கு, நமது நாடாளுமன்ற அமைப்பிற்கும் பொருந்தும். ஏனெனில் நாடாளுமன்றத்தில் அரசியல் மட்டுமல்ல, கொள்கை வகுத்தலும் உள்ளது.
நாடாளுமன்ற அமர்வின் போது, பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன, இளைஞர்கள் கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கிறது. நமது மாண்புமிகு உறுப்பினர்களும், நாடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தால், மேலும் சிறந்த நடத்தை, சிறந்த விவாதங்கள் ஆகியவற்றுக்கான உத்வேகம் பெறுகிறார்கள். இது நாடாளுமன்றத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது.
மக்கள், நாட்டில் எங்கிருந்தாலும், சபையின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக மாற வேண்டும். எனவே, மக்கள், குறிப்பாக இளைஞர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு சன்சத் டிவி தனது நிகழ்ச்சிகளை வடிவமைக்க வேண்டும்.
உதாரணமாக, நாடாளுமன்றத்தின் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த உரைகளை ஒளிபரப்பலாம். அர்த்தமுள்ள மற்றும் தர்க்கரீதியான விவாதங்களுடன், சில நேரங்களில் சில வேடிக்கையான தருணங்களும் ஒளிபரப்பப்படலாம். பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தகவல்களையும் பகிரலாம்.
இதனால் மக்கள் பல்வேறு பணிகளையும் ஒப்பீட்டு பகுப்பாய்வு செய்ய முடியும். பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு துறைகளில் பாராட்டுக்குரிய பணிகளைச் செய்து வருகின்றனர். இந்த முயற்சிகளை நீங்கள் மக்களுக்கு ஒளிபரப்பினால், அவர்களின் உற்சாகமும் அதிகரிக்கும். மற்ற பொதுமக்கள் பிரதிநிதிகளும் நேர்மறையான அரசியலுக்கு உத்வேகம் பெறுவார்கள்.
நண்பர்களே,
நாட்டின் குடிமக்களின் கடமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு தேவை. சன்சத் தொலைக்காட்சி இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது என்று எனக்குக் கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிகளிலிருந்து, நமது இளைஞர்கள் நமது ஜனநாயக அமைப்புகள், அவற்றின் செயல்பாடுகள், குடிமைக் கடமைகள் ஆகியவை பற்றி நிறைய கற்றுக்கொள்ள முடியும். அதுபோலவே, பணிக்குழுக்கள், சட்டமன்றப் பணிகளின் முக்கியத்துவம், சட்டமன்றப் பணிகள் பற்றிய தகவல்கள் ஆகியவற்றின் மூலம் இந்திய ஜனநாயகத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.
சன்சத் தொலைக்காட்சி, அடித்தட்டு ஜனநாயகமாக செயல்படும் பஞ்சாயத்துகள் குறித்த நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பும் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிகள் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஒரு புதிய ஆற்றலை, ஒரு புதிய உணர்வை கொடுக்கும்.
நண்பர்களே,
நமது நாடாளுமன்றம், பல்வேறு அரசியல் கட்சிகள், நமது ஊடகங்கள், நமது அமைப்புகள், ஒவ்வொன்றும் வெவ்வேறு பணிகளைக் கொண்டவை. ஆனால் புதிய இந்தியாவின் கனவை நிறைவேற்ற ஒரு ஒருங்கிணைந்த முயற்சி தேவை.
நான் ரவி கபூரை வாழ்த்த விரும்புகிறேன், ஏனெனில் இது அவருடைய களம் அல்ல. ஆனால் அவர் உலகம் முழுவதிலுமுள்ள மக்களை எவ்வாறு அணுகினார்; அவர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்றார்; யோசனைகளைப் பெற்றார், சன்சத் தொலைக்காட்சியை எப்படி வடிவமைத்தார் என்று என்னிடம் சொல்ல வந்தபோது நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ரவி மற்றும் அவரது குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
நன்றி!