சூடானில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்து காணொலிக்காட்சி வாயிலாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார். வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சூடானிற்கான இந்திய தூதர் மற்றும் ஏராளமான உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது, சூடானில் மிக சமீபத்தில் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் அங்குள்ள உண்மையான களநிலவரம் குறித்து நேரடி தகவல்களை பிரதமர் கேட்டறிந்தார். குறிப்பாக அந்த நாட்டில் வாழ்ந்து வரும் 3,000-க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கடந்த வாரம் குண்டடிபட்டு உயரிழந்த இந்திய பிரஜைக்கு பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும், விழிப்புடனும் ஏற்பட்டு வரும் களநிலவரம் குறித்து கண்காணிப்புடனும் இருக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரவிட்டார். சூடானில் வாழும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை தடையின்றி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சூடானில் இருந்து இந்திய குடிமக்களை தற்காலிகமாக வெளியேற்றும் நடவடிக்கைகள், துரித கதியில் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு சூடானிலேயே இடமாற்றுவது உள்ளிட்ட இதர வாய்ப்புகள் குறித்தும் உடனடியாக தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
அந்த பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டிய அவசியத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார்.