சுதந்திர தின உரையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
2 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்குவது, அதாவது சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் அல்லது அங்கன்வாடிகளில் பணிபுரிபவர்கள் என 2 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்றுவது குறித்து பிரதமர் தமது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார். இந்த இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு வாழ்வாதார நடவடிக்கைகள் குறித்து அவர் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்தார்.
பிரதமர் தமது சுதந்திர தின உரையில், 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விவசாயம் மற்றும் அது தொடர்பான நோக்கங்களுக்காக ட்ரோன்களை இயக்கப் பயிற்சி அளிப்பது பற்றி குறிப்பிட்டார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிப்பது முதல், செயல்பாடுகளை கண்காணிப்பது வரை இதைச் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்துப் பிரதமருக்கு இந்தக் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.
மலிவு விலை மருந்துகள் மேலும் பலரைச் சென்றடைவதை உறுதி செய்ய, இந்தியாவில் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையைத் தற்போதைய 10,000-லிருந்து 25,000 ஆக உயர்த்துவது குறித்தும் பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார். இந்த விரிவாக்கத்தை செயல்படுத்துவதற்கான உத்தி குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.