கொவிட்-19 பெருந்தொற்றின் நிலை மற்றும் இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
நிலையான கொவிட்-19 மேலாண்மைக்கு சமூக விழிப்புணர்வும் அதன் பங்களிப்பும் இன்றியமையாதது என்றும் கொவிட்-19 மேலாண்மை நடவடிக்கைகளில் மக்களின் பங்களிப்பும் மக்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, கொவிட் எதிர்ப்பு சரியான நடத்தை விதிமுறை மற்றும் தடுப்பூசி ஆகிய ஐந்து முனை யுக்திகள், தீவிரமாகவும் உறுதித் தன்மையோடும் அமல்படுத்தப்பட்டால், பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
100 சதவீதம் முகக் கவசத்தை பயன்படுத்துவது, தனிநபர் சுகாதாரம் மற்றும் தூய்மையை கடைபிடிப்பதை வலியுறுத்தும் வகையில் பொது இடங்கள்/ பணியிடங்கள் மற்றும் சுகாதார மையங்களில் கொவிட் எதிர்ப்பு சரியான நடத்தை விதி முறைகள் பற்றிய சிறப்பு பிரச்சாரம் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறும்.
வரும் நாட்களில் கொவிட் எதிர்ப்பு சரியான நடத்தை விதி முறைகளை கடைப்பிடிப்பது, சிகிச்சைக்கான படுக்கைகள், பரிசோதனை வசதிகள், பாதிக்கப்பட்டவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தல் போன்றவற்றை உறுதி செய்வதன் அவசியம் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்.
சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தி, பிராண வாயு, செயற்கை சுவாசக் கருவிகள், தளவாடங்கள் முதலியவற்றின் இருப்பை உறுதி செய்து, மருத்துவ மேலாண்மை நெறிமுறைகள், அனைத்து மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெறுபவர்களிடம் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்து, இவற்றின் வாயிலாக எந்தச் சூழ்நிலையிலும் உயிரிழப்பை தடுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
தொற்றின் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வரும் மகாராஷ்டிராவிற்கும், சமனில்லாத விகிதத்தில் உயிரிழப்புகள் பதிவாகும் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கருக்கும் பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய மத்திய குழுக்கள் செல்லுமாறு பிரதமர் உத்தரவிட்டார்.
கட்டுப்பாட்டு மண்டலங்களின் மேலாண்மை மற்றும் நோய்தொற்று உள்ளவர்களை அடையாளம் காணும் முயற்சியில் சமூக தன்னார்வலர்களின் பங்களிப்போடு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முறையாக செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
நோயின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் பகுதிகளில் விரிவான கட்டுப்பாடுகளோடு கடுமையான நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
10 மாநிலங்களில் 91 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படுவதன் வாயிலாக கொவிட்-19 தொற்றினால் ஏற்படும் பாதிப்பும் உயிரிழப்பும் நாட்டில் அபாயகரமாக உயர்ந்து வருவதாக, விரிவான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சத்திஸ்கரின் தற்போதைய நிலை மிகவும் கவலை அளிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
இன்றைய தேதியில் கடந்த 14 நாட்களில் நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் 57 சதவீதமும், மொத்த உயிரிழப்புகளில் 47 சதவீதமும் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் புதிய பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 47,913 ஆக அதிகரித்திருப்பது முந்தைய உச்சத்தை விட இரண்டு மடங்காகும்.
கடந்த 14 நாட்களில் நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் பஞ்சாபில் 4.5% பதிவாகியுள்ளது. எனினும் மொத்த உயிரிழப்புகளில் 16.3 சதவீதம் இந்த மாநிலத்தில் ஏற்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரியது. அதேபோல் கடந்த 14 நாட்களில் நாட்டின் மொத்த பாதிப்பில் 4.3 சதவீதம் சத்தீஸ்கரில் பதிவாகியுள்ள போதும் மொத்த உயிரிழப்புகளில் 7 சதவீதம் இந்த மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
அதிக பாதிப்புகள் ஏற்படும் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த பாதிப்புகளில் 91.4 சதவீதமும், மொத்த உயிரிழப்புகளில் 90.9 சதவீதமும் பதிவாகியுள்ளன.
முகக் கவசம் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கொவிட் எதிர்ப்பு சரியான நடத்தை விதி முறைகளைப் பின்பற்றுவதில் தளர்வு மற்றும் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்தாதது ஆகியவை கொவிட் தொற்று அதிகரித்ததற்குக் காரணமாக இருக்கலாம் என இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சில மாநிலங்களில் கொவிட் தொற்று அதிகரிப்புக்கு உருமாறிய கொரோனா தொற்று காரணம் என்பது யூகத்தின் அடிப்படையிலானது என்றாலும், தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஒரே மாதிரியாகவே உள்ளன. அதனால் அப்பகுதிகளில் கொவிட்-19 மேலாண்மை நெறிமுறைகளை அமல்படுத்துவது மிகவும் முக்கியம்.
கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விளக்கப்பட்டது. பல்வேறு தரப்பினருக்குத் தடுப்பூசி போடப்படும் விவரங்கள், மற்ற நாடுகளின் தடுப்பூசித் திட்ட செயல்பாடுகள், மாநிலங்களின் செயல்பாடு ஆகியவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்த தினசரி ஆய்வை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பின்னூட்டமாக பகிர்ந்து கொண்டு, அதற்கேற்ப சரியான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்த கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.
கொவிட் தடுப்பூசிகளின் ஆராய்ச்சி, மேம்பாடு, தற்போதுள்ள தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தித் திறன், பரிசோதனைகளில் உள்ள தடுப்பூசிகளின் திறன் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தடுப்பூசித் தயாரிப்பாளர்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் அவர்கள் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதிகரித்து வரும் உள்நாட்டு தேவைக்கேற்ற வகையிலும், அதேபோல் ‘உலகமே ஒரு குடும்பம்' என்ற உணர்வுடன் இதர நாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், போதிய அளவு தடுப்பூசிகளை தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் இந்த கூட்டத்தில் எடுத்துக் கூறப்பட்டது.
கடந்த 15 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 மேலாண்மை நடவடிக்கைகளின் பயன்கள் சிதையாமல் இருக்கும் வகையில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் திட்ட இலக்குடன் கூடிய அணுகுமுறையை தொடர்ந்து பின்பற்றும்படி பிரதமர் உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், தடுப்பூசி மேலாண்மை குழுவின் தலைவர், சுகாதாரத்துறை, மருந்தகத்துறை, உயிரி தொழில்நுட்பத்துறை, ஆயுஷ் துறை ஆகியவற்றின் செயலாளர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Reviewed the COVID-19 and vaccination related situation across the country. Reiterated the importance of the five fold strategy of Testing, Tracing, Treatment, Covid-appropriate behaviour and Vaccination as an effective way to fight the global pandemic. https://t.co/WjOtjfCXm3
— Narendra Modi (@narendramodi) April 4, 2021