பிரதமர் திரு. நரேந்திர மோடி 2024 நவம்பர் 20 முதல் 21 வரை கயானாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு இன்று ஜார்ஜ்டவுன் சென்றடைந்தார். கடந்த 56 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் கயானாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். சிறப்பு அடையாளமாக, விமான நிலையத்தை வந்தடைந்ததும், கயானா அதிபர் டாக்டர் முஹம்மது இர்பான் அலி, கயானா பிரதமர் பிரிகேடியர் (ஓய்வு) மார்க் அந்தோணி பிலிப்ஸ் ஆகியோர் அவரை அன்புடன் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கயானா அரசின் கேபினட் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
தங்கும் விடுதிக்கு வந்த பிரதமரை பார்படாஸ் பிரதமர் மியா அமோர் மோட்லி, கிரனடா பிரதமர் திரு டிக்கோன் மிட்செல் ஆகியோர் வரவேற்றனர். மேலும், கயானாவின் பல்வேறு கேபினட் அமைச்சர்கள் முன்னிலையில், இந்திய சமூகத்தினரும், இந்தோ-கயானா வம்சாவளியினரும் பிரதமருக்கு வண்ணமயமான வரவேற்பை அளித்தனர். விமான நிலையத்திற்கும், தங்கும் விடுதிக்கும் இடையே, கயானா அரசின் அமைச்சரவையும் கலந்து கொண்டது. இந்தியா-கயானா இடையேயான நெருங்கிய நட்புறவுக்கு சான்றாக, ஜார்ஜ்டவுன் நகர மேயர், "ஜார்ஜ்டவுன் நகரின் சாவியை" பிரதமரிடம் ஒப்படைத்தார்.