மகளிர் தினமான இன்று, பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரிடமிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி பொருட்களை வாங்கினார்.
பெண் தொழில்முனைவோருக்கும், தற்சார்பு இந்தியாவுக்கும் ஊக்கமளிக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது.
தற்சார்புக்கான நாட்டின் லட்சியப் பயணத்தில் பெண்களின் பங்கை குறிப்பிட்டு பேசிய திரு மோடி, “தற்சார்படைவதற்கான இந்தியாவின் லட்சியப் பயணத்தில் பெண்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.
சர்வதேச மகளிர் தினத்தன்று, பெண்களிடையே தொழில்முனைதலை ஊக்குவிக்க நாம் உறுதியேற்போம்.
இன்றைக்கு, மகளிர் தொழில்முனைதலில், படைப்புத்திறன் மற்றும் இந்தியாவின் கலாச்சாரத்தை கொண்டாடும் சில பொருட்களை நான் வாங்கியுள்ளேன்,” என்று டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் தோடா பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட பூத்தையலால் நெய்யப்பட்ட சால்வையை வாங்கியது குறித்து பதிவிட்ட பிரதமர், “தமிழ்நாட்டில் உள்ள தோடா பழங்குடியின கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட பூத்தையலால் நெய்யப்பட்ட நேர்த்தியான சால்வை மிகவும் அழகாக உள்ளது.
நான் ஒரு சால்வையை வாங்கியுள்ளேன். டிரைப்ஸ் இந்தியாவால் இது சந்தைப்படுத்தப்படுகிறது. #NariShakti”, என்று கூறியுள்ளார்.
கோண்டு காகித ஓவியம் குறித்து பதிவிட்டுள்ள பிரதமர், “சுற்றுப்புறத்திற்கு அதிக வண்ணங்களை சேர்க்கிறது! நமது பழங்குடியினரின் கலை பிரமிக்க வைக்கிறது. கோண்டு காகித ஓவியம் வண்ணங்களையும், படைப்புத்திறனையும் ஒன்றிணைக்கிறது. இந்த ஓவியத்தை இன்று வாங்கினேன். #NariShakti”, என்று கூறியுள்ளார்.
நாகாலாந்தின் பாரம்பரிய சால்வையை வாங்கிய பிரதமர், “வீரம், கருணை மற்றும் படைப்புத்திறனை பிரதிபலிக்கும் நாகா கலாச்சாரத்தின் மீது இந்தியா பெருமை கொள்கிறது. நாகாலாந்தில் இருந்து பாரம்பரிய சால்வையை வாங்கியுள்ளேன். #NariShakti”, என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மதுபனி ஓவியத்துடன் கூடிய காதி பருத்தி அங்கியை வாங்கியது குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர், “மகாத்மா காந்தி மற்றும் இந்தியாவின் வளமிக்க வரலாற்றுடன், காதிப் பொருட்கள் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது.
மதுபனி ஓவியத்துடன் கூடிய காதி பருத்தி அங்கியை வாங்கினேன். உயர்தர பொருளான இது, நமது மக்களின் படைப்புத்திறனோடு பின்னிப்பிணைந்துள்ளது. #NariShakti”, என்று பதிவிட்டுள்ளார்.
கையால் தயாரிக்கப்பட்ட சணல் கோப்புறை குறித்து பதிவிட்ட திரு மோடி, “மேற்குவங்கத்தின் இந்த கையால் தயாரிக்கப்பட்ட சணல் கோப்புறையை நான் கட்டாயம் பயன்படுத்தப் போகிறேன்.
இது அம்மாநிலத்தின் பழங்குடியினாரால் தயாரிக்கப்பட்ட பொருளாகும். மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்பட்ட சணல் பொருள் ஒன்றையாவது உங்கள் வீடுகளில் நீங்கள் வைத்திருக்க வேண்டும்! #NariShakti”, என்று கூறியுள்ளார்.
அசாமின் காக்கடிப்பாப்புங்க் வளர்ச்சி வட்டத்தின் சுய உதவிக்குழுவினரால் தயாரிக்கப்பட்ட கமுசாவையும் பிரதமர் வாங்கினார்.
“நான் அடிக்கடி கமுசா அணிவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது மிகவும் வசதியானது. இன்றைக்கு, காக்கடிப்பாப்புங்க் வளர்ச்சி வட்டத்தில் உள்ள பல்வேறு சுய உதவிக்குழுவினரால் தயாரிக்கப்பட்ட
கமுசாவை நான் வாங்கியுள்ளேன். #NariShakti”, என்று அவர் கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ள பெண்களால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய பனை கைவினை நிலவிளக்கை வாங்கியது குறித்தும் திரு மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“கேரளாவில் உள்ள பெண்களால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய பனை கைவினை நிலவிளக்கை பெற்றுக்கொள்ள நான் ஆவலோடு காத்திருக்கிறேன். உள்ளூர் கைவினை மற்றும் பொருட்களை நமது பெண்கள் #NariShakti பாதுகாப்பதும், பிரபலப்படுத்துவதும் பாராட்டுக்குரியது,” என்று அவர் கூறியுள்ளார்.