வூகானில் தவித்துக் கொண்டிருந்த இந்தியர்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஏர் இந்தியா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கடமை உணர்வையும், உயரிய ஈடுபாட்டையும் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குழு உறுப்பினர்களுக்கு பிரதமர் பாராட்டும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார். சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சரால் இந்தக் கடிதம் ஊழியர்களிடம் வழங்கப்படும்.
நோவல் கொரோனா வைரஸ் வூகான் நகரத்தில் மையம் கொண்டு வேகமாக பரவி வந்த நிலையில், ஏர் இந்தியா அவசர வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்தப் பிராந்தியத்தில் நிலைமை மோசமாக இருந்த போதிலும் ஏர் இந்தியா இரண்டு பி-247 விமானங்களை, சுகாதார அமைச்சகத்தின் குழுக்களுடன் அனுப்பிவைத்தது. ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் இந்த விமானங்கள் மூலம் இந்தியர்கள் கொண்டுவரப்பட்டனர்.