சுதந்திரப் போரின் அனைத்து வீரர்கள், இயக்கங்கள், எழுச்சி மற்றும் போராட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவின் பெருமைமிகு சுதந்திர போராட்ட வரலாற்றில் உரிய அங்கீகாரம் பெறாத இயக்கங்கள், போராட்டங்கள் மற்றும் வீரர்களுக்கு அவர் சிறப்பு அஞ்சலியை செலுத்தினார்.
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் சுதந்திரத்தின் அம்ருத் மகோத்சவம் (இந்தியா @ 75) நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.
அதிகம் அறியப்படாத இயக்கங்கள் மற்றும் போராட்டங்களின் பங்களிப்பை பாராட்டிய அவர், ஒவ்வொரு போராட்டமும் பொய்களை பரப்பும் சக்திகளுக்கு எதிரான இந்தியாவின் உண்மைக்கான பிரகடனம் என்றும் இந்தியாவின் சுதந்திர வேட்கைக்கு சான்று என்றும் அவர் கூறினார்.
ராமர், மகாபாரதம், ஹல்டிகாட்டி மற்றும் வீர சிவாஜியின் கர்ஜனையின் காலத்திலிருந்தே நிலவி வந்த உறுதி மற்றும் வீரத்தை இந்த போராட்டங்கள் பிரதிபலித்தன என்று அவர் கூறினார்.
கோல், காசி, சந்தால், நாகா, பில், முண்டா, சன்யாசி, ராமோஷி, கித்தூர் இயக்கம், திருவாங்கூர் இயக்கம், பர்தோலி சத்தியாகிரகம், சம்பரன் சத்தியாகிரகம், சம்பல்பூர், சுவார், புண்டெல் மற்றும் குகா எழுச்சிகள் மற்றும் இயக்கங்கள் பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.
இத்தகைய பல்வேறு போராட்டங்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சுதந்திர வேட்கையை அணையாமல் காத்தன என்று திரு மோடி கூறினார். கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பதற்கு சீக்கிய குரு முறை நாட்டுக்கு ஊக்கம் அளித்ததாக அவர் கூறினார்.
நமது ஞானிகள், மகான்கள் மற்றும் ஆச்சாரியர்களால் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சுதந்திர வேட்கை அணையாமல் காக்கப்பட்டது என்றும் இதை நாம் என்றுமே நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். நாடு தழுவிய சுதந்திரப் போராட்டத்திற்கான அடித்தளத்தை அவர்கள் அமைத்தனர்.
கிழக்கு பகுதியை பொருத்தவரை, சைதன்ய மகாபிரபு மற்றும் ஸ்ரீமந்த் சங்கர தேவ் ஆகியோர் சமுதாயத்திற்கான பாதையை வழங்கி இலட்சியத்தின் மீது மக்களை கவனம் கொள்ள வைத்தனர் என்று பிரதமர் கூறினார்.
மீராபாய், ஏக்நாத், துக்காராம், ராம்தாஸ் மற்றும் நர்சி மேத்தா ஆகியோர் மேற்கிலும் சந்த் ராமானந்த், கபீர்தாஸ், கோஸ்வாமி துளசிதாஸ், சூர்தாஸ், குரு நானக் தேவ், சந்த் ராய் தாஸ் ஆகியோர் வடக்கிலும், மாதவாச்சாரியா, நிம்பர்க்கச்சாரியா, வல்லபாச்சார்யா மற்றும் ராமானுஜாச்சாரியார் ஆகியோர் தெற்கிலும் வழிகாட்டினர்.
பக்தி காலத்தில், மாலிக் முகமது ஜெயசி, ராஸ் கான், சூர்தாஸ் கேசவதாஸ் மற்றும் வித்யாபதி ஆகியோர் சீர்திருத்தங்களை நோக்கி சமுதாயத்தை ஊக்குவித்ததாக பிரதமர் கூறினார். சுதந்திர போராட்டம் இந்தியா முழுவதும் நடைபெற்றதற்கு இவர்கள் காரணம் என்று அவர் தெரிவித்தார். இத்தகைய நாயகர், நாயகிகளின் வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இவர்களுடைய ஊக்கமளிக்கும் கதைகள், ஒற்றுமை குறித்தும் இலக்குகளை அடைவது குறித்தும் விலைமதிப்பற்ற பாடங்களை நமது புதிய தலைமுறைகளுக்கு கற்றுக்கொடுக்கும் என்று பிரதமர் கூறினார்.