ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான 3 செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டினார்
"இந்தியா ஒரு முக்கிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக திகழ உள்ளது"
"தன்னம்பிக்கை கொண்ட இளையோர் நாட்டின் எதிர்காலத்தை மாற்றுகிறார்"
"இந்தியாவின் துரிதமான முன்னேற்றம் நமது இளையோர் சக்தி மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது"
"இந்தியாவை தற்சார்பையும், நவீனத்தையும் நோக்கி, சிப் உற்பத்தி முன்னெடுத்துச் செல்லும்"
"சிப் உற்பத்தி எல்லையற்ற சாத்தியக்கூறுகளுக்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது"
"இந்திய இளைஞர்கள் திறமையானவர்கள், அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தேவை. செமிகண்டக்டர் முன்முயற்சி அந்த வாய்ப்பை இன்று இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது"
இதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க ஆர்வமாக உள்ளது என்று கூறிய அவர், நாட்டின் தொழில்நுட்ப வளம், அணுசக்தி மற்றும் டிஜிட்டல் சக்தியை எடுத்துரைத்தார்

'இந்தியாவின் தொழில்நுட்பம்: வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான சிப்' நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான மூன்று செமிகண்டக்டர் திட்டங்களுக்கு இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். குஜராத்தின் தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை, அசாம் மாநிலம் மோரிகானில் அவுட்சோர்சிங் செமிகண்டக்டர் தயாரிப்பு மற்றும் சோதனை   தொழிற்சாலை, குஜராத் மாநிலம் சனந்தில் அவுட்சோர்சிங் செமிகண்டக்டர் தயாரிப்பு மற்றும் சோதனை   தொழிற்சாலை ஆகியவை இன்று தொடங்கி வைக்கப்பட்ட வசதிகளாகும்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், குஜராத்தில் தோலேரா, சதானந்த் மற்றும் அசாமில் மோர்கான் ஆகிய இடங்களில் சுமார் 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று பெரிய செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க படியாகும் என்று கூறினார். "இன்றைய திட்டங்கள் இந்தியாவை ஒரு செமிகண்டக்டர் மையமாக திகழச் செய்வதில்  முக்கிய பங்கு வகிக்கும்" என்று பிரதமர் திரு மோடி கூறினார், மேலும் முக்கிய முயற்சிகளுக்காக மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். தைவானில் இருந்து செமிகண்டக்டர் தொழில்துறையினர் மெய்நிகர் முறையில் பங்கேற்றதை குறிப்பிட்ட அவர், இன்றைய நிகழ்ச்சிக்கான உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

 

இந்த தனித்துவமான நிகழ்வில் 60,000-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்திருந்தன என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்றைய நிகழ்ச்சியை நாட்டின் இளைஞர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றும் நிகழ்வு என்றும், அவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலத்தின் உண்மையான பங்குதாரர்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். தற்சார்பு மற்றும் உலகளாவிய விநியோக அமைப்பில் வலுவான இருப்புக்காக இந்தியா எவ்வாறு பல தளங்களில் செயல்படுகிறது என்பதை இளைஞர்கள் காண்பதாகவும், தன்னம்பிக்கை கொண்ட இளையோர் நாட்டின் எதிர்காலத்தை மாற்றுவார்கள் என்று பிரதமர் திரு மோடி கூறினார்.

தொழில்நுட்பம் சார்ந்த 21-ம் நூற்றாண்டில் மின்னணு சிப்களின் மையத்தன்மையை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட சிப்கள், இந்தியாவை தற்சார்பு மற்றும் நவீனமயமாக்கலை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார். பல்வேறு காரணங்களால் முதல் மூன்று தொழில் புரட்சிகளை தவறவிட்ட இந்தியா, தற்போது நான்காவது தொழில் புரட்சியான தொழில் துறை 4.0-ஐ வழிநடத்தும் நோக்கத்துடன் முன்னேறி வருகிறது என்று பிரதமர் கூறினார். ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், அரசு எந்த அளவுக்கு வேகமாக பணியாற்றி வருகிறது என்பதற்கு இன்றைய நிகழ்ச்சி உதாரணமாக உள்ளதாக சுட்டிக்காட்டினார். செமிகண்டக்டர் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் வரிசையை விளக்கிய பிரதமர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட செமிகண்டக்டர் இயக்கம் குறித்தும் சில மாதங்களுக்குள் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், தற்போது மூன்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார். "இந்தியா உறுதியளிக்கிறது, இந்தியா வழங்குகிறது, ஜனநாயகம் அளிக்கிறது" என்று பிரதமர் கூறினார்.

உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே தறபோது செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்கின்றன என்பதை குறிப்பிட்ட பிரதமர், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட இடையூறுகளுக்குப் பிறகு நம்பகமான விநியோக சங்கிலியின் அவசியத்தை வலியுறுத்தினார். இதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க ஆர்வமாக உள்ளது என்று கூறிய அவர், நாட்டின் தொழில்நுட்ப வளம், அணுசக்தி மற்றும் டிஜிட்டல் சக்தியை எடுத்துரைத்தார். செமிகண்டக்டர் துறைக்கான வர்த்தக உற்பத்தியை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ள எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக விவரித்த பிரதமர், செமிகண்டக்டர் துறைக்கான தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் இந்தியா உலகளாவிய சக்தியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று கூறினார். இன்று மேற்கொள்ளப்பட்ட கொள்கை முடிவுகளால் எதிர்காலத்தில் இந்தியா உத்திச்சார்ந்த நன்மையைப் பெறும் என்று கூறிய அவர், வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல், சட்டங்களை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளில், 40,000-க்கும் மேற்பட்ட இணக்கங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். பாதுகாப்பு, காப்பீடு, தொலைத் தொடர்புத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகள் தாராளமயமாக்கப்பட்டுள்ளன. மின்னணு மற்றும் வன்பொருள் உற்பத்தியில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிலையையும் பிரதமர் குறிப்பிட்டார். அங்கு பெரிய அளவிலான மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தி, மின்னணு கிளஸ்டர்களுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்கு ஒரு தளத்தை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  தற்போது உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் குவாண்டம் இயக்கம் தொடங்கப்பட்டது, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்பட்டது மற்றும் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் விரிவாக்கம் ஆகியவற்றை சுட்டிக்காட்டிய பிரதமர், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்கிடையே, தொழில்நுட்ப முன்னேற்றத்தை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்கிறது என்று தெரிவித்தார்.

 

செமிகண்டக்டர் ஆராய்ச்சி இளைஞர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று பிரதமர் கூறினார். பல்வேறு தொழிற்சாலைகளில் செமிகண்டக்டர்களின் விரிவான உற்பத்தியை சுட்டிக்காட்டிய பிரதமர்,  "செமிகண்டக்டர் என்பது வெறும் தொழில் மட்டுமல்ல, எல்லையற்ற வாய்ப்புகளை அது ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். உலகளாவிய சிப் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் இந்தியாவின் திறமைகளையும் பிரதமர் திரு மோடி சுட்டிக்காட்டினார். எனவே, செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் நாடு தற்போது முன்னோக்கி நகர்வதால் இந்தியாவின் திறமைக்கான சூழல் அமைப்பு நிறைவடைந்துள்ளது என்று பிரதமர் கூறினார். இன்றைய இளைஞர்கள் தங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்துள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், அது விண்வெளித் துறையாக இருந்தாலும் சரி, வரைபடத் துறையாக இருந்தாலும் சரி, இந்தத் துறைகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பாக இந்தியா திகழ்வதற்கு முன்னெப்போதும் இல்லாத ஊக்கத்தொகை மற்றும் ஊக்குவிப்பை பாராட்டிய அவர், இன்றைய சந்தர்ப்பம் செமிகண்டக்டர் உற்பத்தியில் புத்தொழில் நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார். இன்றைய திட்டங்கள் இளைஞர்களுக்கு பல மேம்பட்ட தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுதான் தருணம், இதுவே சரியான தருணம் என்று செங்கோட்டையில் தாம் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த நம்பிக்கையுடன் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகளும், முடிவுகளும் குறிப்பிடத்தக்க பலன்களை உருவாக்குகின்றன என்று தெரிவித்தார். "இந்தியா தற்போது பழைய சிந்தனை மற்றும் பழைய அணுகுமுறையை விட வெகுதூரம் முன்னேறியுள்ளது. இந்தியா இப்போது முடிவுகளையும் கொள்கைகளையும் வேகமாக எடுத்து வருகிறது" என்று பிரதமர் திரு மோடி கூறினார். இந்தியாவின் செமிகண்டக்டர் கனவுகள் முதன்முதலில் 1960 ஆம் ஆண்டில் கற்பனை செய்யப்பட்டாலும், அப்போதைய அரசுகளின் விருப்பமின்மை மற்றும் தீர்மானங்களை சாதனைகளாக மாற்றுவதற்கான முயற்சி காரணமாக அவற்றை செயல்படுத்தத் தவறிவிட்டன என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் திறன், முன்னுரிமைகள் மற்றும் எதிர்காலத் தேவைகளைப் புரிந்து கொள்ள முந்தைய அரசுகளின் இயலாமை குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்தார். தற்போதைய அரசின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் எதிர்கால அணுகுமுறை பற்றி சுட்டிக்காட்டிய பிரதமர், வளர்ந்த நாடுகளுடன் போட்டியிடும் லட்சியத்துடன் கூடிய செமிகண்டக்டர் உற்பத்தி பற்றி குறிப்பிட்டார். ஏழைகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள், முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவித்தல், உலகின் மிகப்பெரிய தூய்மை இயக்கத்தை நடத்துதல், செமிகண்டக்டர் உற்பத்தியில் முன்னேறுதல், ஏழ்மையை விரைவாகக் குறைத்தல், தற்சார்பு பாரதம் என்ற நோக்கத்துடன் உள்கட்டமைப்பில் பெரும் முதலீடு ஆகியவற்றை உதாரணமாக கூறிய பிரதமர், நாட்டிற்கு தேவையான அனைத்து முன்னுரிமைகளிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.  "2024 ம் ஆண்டில் மட்டும், ரூ. 12 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, தொடங்கப்பட்டுள்ளதாக"  பிரதமர் கூறினார். பொக்ரானில் நேற்று நடைபெற்ற பாரத் சக்தி பயிற்சி, 21 ம் நூற்றாண்டில் பாதுகாப்பு துறையில்  இந்தியாவின் தற்சார்பு குறித்து விளக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அக்னி-5 வடிவில் அதற்கான உலகின் பிரத்யேக கிளப்பில் இந்தியா இணைந்தது என்றும் அவர் கூறினார். 2 நாட்களுக்கு முன்பு வேளாண்மை துறையில் ஆளில்லா ட்ரோன் புரட்சி தொடங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். நமோ ட்ரோன் சகோதரி திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ஆளில்லா ட்ரோன்கள் மகளிரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார். ககன்யானுக்கான இந்தியாவின் தயாரிப்புகள் விரைவாக நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். அண்மையில் தொடங்கப்பட்ட இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்ட விரைவு ஈணுலை குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். "இந்த முயற்சிகள், இந்த திட்டங்கள் அனைத்தும் இந்தியாவை வளர்ச்சி இலக்குக்கு நெருக்கமாக கொண்டு செல்வதாகவும்,  நிச்சயமாக தற்போதைய இந்த மூன்று திட்டங்களும் இதில் பெரும் பங்கு வகிக்கும்" என்று பிரதமர் திரு மோடி மேலும் கூறினார்.

 

தற்போதைய உலகில் செயற்கை நுண்ணறிவு   உருவாகி வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், தனது உரைகள் குறுகிய காலத்தில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதை உதாரணமாகக் கூறினார். பிரதமரின் கொள்கைகளை பல்வேறு இந்திய மொழிகளில் நாடு முழுவதும் பரப்ப முன்முயற்சி எடுத்ததற்காக இந்திய இளைஞர்களை அவர் பாராட்டினார். "இந்திய இளைஞர்கள் திறமையானவர்கள், அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தேவை. செமிகண்டக்டர் முன்முயற்சி அந்த வாய்ப்பை தற்போது இந்தியாவுக்கு அளித்துள்ளது" என்று பிரதமர் கூறினார். அசாமில் இன்று மூன்று செமிகண்டக்டர் தொழிற்சாலைகளில் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டப்படுவதால், வடகிழக்கில் ஏற்பட்டு வரும் வளர்ச்சிகளுக்காக அவர் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டு, "மோடியின் உத்தரவாதம் உங்களுக்கும் உங்கள் எதிர்காலத்திற்கும்" என்று கூறி தமது உரையை பிரதமர் நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல், சிஜி மின் மற்றும் தொழில்துறை நிறுவனத் தலைவர் திரு வெள்ளையன் சுப்பையா மற்றும் டாடா சன்ஸ் தலைவர் திரு நடராஜன் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதும், நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை ஊக்குவிப்பதும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையாக இருந்து வருகிறது. இந்த தொலைநோக்குக்கு ஏற்ப, குஜராத்தின் தோலேரா சிறப்பு முதலீட்டு பிராந்தியத்தில் செமிகண்டக்டர் கட்டமைப்பு வசதி, அசாமின் மோரிகானில் அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் தயாரித்தல், சோதனை வசதி; குஜராத்தின் சனந்தில் அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் தயாரித்தல், சோதனை வசதி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை ஏற்படுத்துவதற்கான மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் டாடா மின்னணுவியல் நிறுவனம் மூலம், தோலேரா சிறப்பு முதலீட்டு பிராந்தியத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும். 91,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மொத்த முதலீட்டுடன், இது நாட்டின் முதல் வணிக செமிகண்டக்டர் உற்பத்தித்துறை ஆகும்.

27,000 கோடி ரூபாய் மொத்த முதலீட்டில் செமிகண்டக்டர் தயாரித்தல், சோதனை, குறித்தல், பேக்கேஜிங் ஆகியவற்றுக்காக மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ்  அசாமின் மோரிகானில் அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் தயாரித்தல் மற்றும் சோதனை தொழிற்சாலை டாடா மின்னணுவியல் நிறுவனம் மூலம் அமைக்கப்படும்.

சுமார் 7,500 கோடி ரூபாய் மொத்த முதலீட்டில் செமிகண்டக்டர் தயாரித்தல், சோதனை, குறித்தல் மற்றும் பேக்கேஜிங்  ஆகியவற்றுக்காக   மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் சனந்தில் உள்ள அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் தயாரித்தல் மற்றும் சோதனை தொழிற்சாலை, சிஜி மின் மற்றும் தொழில்துறை நிறுவனத்தால் அமைக்கப்படும்.

இந்த தொழிற்சாலைகள் மூலம், செமிகண்டக்டர் சூழல் அமைப்பு வலுப்படுத்தப்பட்டு, இந்தியாவில் உறுதியாக நிலைப்பெறும். இந்த தொழிற்சாலைகள் செமிகண்டக்டர் தொழிலில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, மின்னணு, தொலைத்தொடர்பு போன்ற தொடர்புடைய துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதை ஊக்குவிக்கும்.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள், செமிகண்டக்டர் தொழில்துறையைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s Space Sector: A Transformational Year Ahead in 2025

Media Coverage

India’s Space Sector: A Transformational Year Ahead in 2025
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 24, 2024
December 24, 2024

Citizens appreciate PM Modi’s Vision of Transforming India