பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலக்க வேண்டும் என்ற இலக்கை முன்கூட்டியே அதாவது 2025க்குள் அடைய வேண்டும்: பிரதம மந்திரி
மறுசுழற்சி மூலமாக மூலவளங்களை சிறப்பாகப் பயன்படுத்தக் கூடிய 11 துறைகளை அரசு அடையாளம் கண்டுள்ளது: பிரதம மந்திரி
எத்தனால் உற்பத்தி செய்வதற்கும் அதை நாடு முழுவதும் விநியோகிப்பதற்கும் இ-100 முன்னோடித் திட்டம் பூனாவில் தொடங்கப்படுகிறது

பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகமும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுதல் அமைச்சகமும் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த உலகச் சுற்றுச்சூழல் தின நிகழ்வில் பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது பூனாவில் இருந்து கலந்து கொண்ட விவசாயி ஒருவரிடம் பிரதமர் கலந்துரையாடினார்.  அப்போது அந்த விவசாயி இயற்கை முறை விவசாயம் மற்றும் வேளாண்மையில் உயிரி எரிபொருளின் பயன்பாடு குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“இந்தியாவில் எத்தனால் கலப்பதற்கான திட்ட வரைவு குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை 2020-2025” என்பதை பிரதம மந்திரி வெளியிட்டார்.  எத்தனால் உற்பத்திக்கும் அதை நாடு முழுவதும் விநியோகிப்பதற்கும் இ-100 என்ற முன்னோடித் திட்டத்தை பூனாவில் பிரதம மந்திரி தொடங்கி வைத்தார்.  இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தின நிகழ்வின் மையக் கருத்து ”மிகச் சிறந்த சுற்றுச்சூழலுக்கான உயிரி எரிபொருட்களை மேம்படுத்துதல்” என்பது ஆகும்.  இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் திரு நிதின் கட்கரி, திரு நரேந்திர சிங் தோமர், திரு பிரகாஷ்  ஜவடேகர், திரு பியூஸ் கோயல் மற்றும் திரு தர்மேந்திர பிரதான் ஆகியோரும் கலந்து கொண்டர்.

இந்தத் தருணத்தில் உரையாற்றிய பிரதம மந்திரி உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் எத்தனால் தொழில் பிரிவின் வளர்ச்சிக்கான விரிவான திட்ட வரைவை வெளியிட்டதன் மூலம் இந்தியா மற்றொரு படி முன்னேறி இருக்கிறது எனக் குறிப்பிட்டார். 21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாக எத்தனால் உருவாகி உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். எத்தனால் மீது கவனம் செலுத்துவது என்பது சுற்றுச்சூழல் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விவசாயிகளின் வாழ்க்கையிலும் சாதகமான அம்சங்களை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.  பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலக்க வேண்டும் என்ற இலக்கை 2025ல் அடைய வேண்டும் என அரசு உறுதி கொண்டுள்ளது. இதற்கு முன் இந்த இலக்கை அடைவதற்கான காலவரம்பாக 2030ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.  இப்போது இலக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2014ஆம் ஆண்டு வரை, சராசரியாக 1.5 சதவிகிதம் எத்தனால் மட்டுமே பெட்ரோலில் கலக்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால் இப்போது இது 8.5 சதவிகிதமாக இருக்கிறது. 2013-14இல் நாட்டில் 38 கோடி லிட்டர் எத்தனால் வாங்கப்பட்டு இருந்தது. இதன் அளவு தற்போது 320 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது. எட்டு மடங்கு அதிக அளவில் எத்தனால் வாங்குவதில் பெரும் பங்கு நாட்டின் கரும்பு விவசாயிகளுக்கு பலன் அளித்தது.

21ஆம் நூற்றாண்டு இந்தியாவானது எரிசக்தியை நவீன சிந்தனையில் இருந்தும் 21ஆம் நூற்றாண்டின் நவீன கொள்கைகளில் இருந்தும்தான் பெற முடியும் என பிரதம மந்திரி தெரிவித்தார். இந்த விதமான சிந்தனையுடன் அரசானது ஒவ்வொரு புலத்திலும் கொள்கை முடிவுகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இன்று, நாட்டில் எத்தனால் உற்பத்திக்கும் கொள்முதலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.  எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை சர்க்கரை உற்பத்தி அதிகம் உள்ள 4-5 மாநிலங்களிலேயே குவிந்துள்ளன. எத்தனால் உற்பத்தியை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்காக இப்போது உணவு தானிய அடிப்படையிலான வடிசாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. வேளாண் கழிவுகளில் இருந்து எத்தனால் தயாரிப்பதற்கு நவீன தொழில்நுட்பம் அடிப்படையிலான தொழிற்சாலைகள் நாட்டில் நிறுவப்பட்டு வருகின்றன.

பருவநிலை நீதியை நிலைநாட்டுவதில் இந்தியா வலுவான ஆதரவை வழங்கும் நாடாக இருக்கிறது என்று பிரதம மந்திரி சுட்டிக்காட்டினார்.  மேன்மையான உலகளாவிய தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்தியா நடைபோடுகிறது. ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொகுப்பு என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் சர்வதேச சூரிய ஆற்றல் உடன்பாட்டை உருவாக்குதல் மற்றும் பேரிடர் தாங்குதிறன் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் முன்முயற்சிக்கான கூட்டணி போன்ற நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். பருவநிலை மாறுதல் செயல்திறன் குறியீட்டு எண் வரிசையில் உலகின் முதல் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டினார்.  பருவநிலை மாறுதல் காரணமாக பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் குறித்து இந்தியா விழிப்புடன் இருப்பதாக தெரிவித்ததோடு அதற்காக ஆக்கரீதியாக நாடு செயல்பட்டு வருகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பருவநிலை மாறுதலை எதிர்த்து மேற்கொள்ளப்பட்டு வரும் பாரம்பரியமான மற்றும் முற்போக்கான அணுகுமுறைகள் குறித்தும் பிரதம மந்திரி பேசினார். பாரம்பரியமான அணுகுமுறையில் கடந்த 6-7 ஆண்டுகளில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்திக்கான நமது திறன் 250 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். நிறுவப்பட்ட புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி திறன் அடிப்படையில் உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இன்று இந்தியா விளங்குகிறது. அதிலும் குறிப்பாக சூரிய ஆற்றலைப் பொறுத்தவரையில் கடந்த 6 ஆண்டுகளில் 15 மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

முற்போக்கான அணுகுமுறையின் மூலம் நாடு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கைத் தவிர்த்தல், கடற்கரையை சுத்தப்படுத்துதல் அல்லது தூய்மை இந்தியா என்பன போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பிரச்சாரத்தில் இன்று நாட்டின் சாதாரண குடிமகனும் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுக்க முடிகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 37 கோடிக்கும் அதிகமான எல்இடி விளக்குகள் மற்றும் 23 லட்சத்திற்கும் அதிகமான மின்சிக்கன காற்றாடிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.  இதனுடைய சாதகமான பலன் அடிக்கடி எடுத்துரைக்கப்படுவது இல்லை. இதேபோன்று கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவது, சௌபாக்யா திட்டத்தின் கீழ் மின்சார இணைப்புகள் வழங்குவது போன்றவை அந்த மக்கள் விறகைச் சார்ந்து இருப்பதை வெகுவாகக் குறைத்துள்ளன. மாசுபடுதலை இவை குறைத்துள்ளதோடு மக்களின் ஆரோக்கிய நிலைமையை மேம்படுத்தவும் உதவி உள்ளன மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தி உள்ளன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக வளர்ச்சிப் பணிகளை நிறுத்த வேண்டிய தேவை இல்லை என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டுகின்ற ஒரு முன்னுதாரணமாக இந்தியா திகழ்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.  பொருளாதாரமும் சூழலியலும் ஒன்றாக இணைந்து முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும் என்று அவர் வலியுறுத்தியதோடு இந்தப் பாதையைத்தான் இந்தியா தேர்ந்தெடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.  நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு கடந்த சில ஆண்டுகளில் நமது காடுகளின் பரப்பளவு 15,000 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு அதிகரித்து உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.  நம் நாட்டில் புலிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. அதே போன்று கடந்த சில ஆண்டுகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கையும் 60 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்து உள்ளது.  சுய-சார்பு இந்தியா இயக்கத்தின் முக்கிய அம்சங்களாக தூய்மை மற்றும் திறன் மிகுந்த எரிசக்தி அமைப்புகள், பேரிடர்களைத் தாங்கி நிற்கும் நகர உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் திட்டமிடப்பட்ட சூழலியல் மீட்பு ஆகியன விளங்குகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.  சுற்றுச்சூழல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் அனைத்து முயற்சிகளின் காரணமாக நாட்டில் புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். காற்று மாசுறுதலை தடுப்பதற்காக தேசிய தூய்மை காற்றுத் திட்டம் மூலமாக ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் இந்தியா செயலாற்றி வருகிறது. நீர்வழிப் பாதைகள் தொடர்பான பணிகள் மற்றும் பல்முனைய இணைப்பு ஆகியன பசுமை போக்குவரத்து இயக்கத்தை வலுப்படுத்துவதோடு நாட்டின் போக்குவரத்து திறனையும் மேம்படுத்துகின்றன. இன்று நாட்டில் மெட்ரோ ரெயில் சேவை 5 நகரங்களில் இருந்து 18 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதனால் தனிநபர் வாகனப் பயன்பாடு குறைக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் ரெயில்வே நெட்வொர்க்கின் பெரும்பகுதி மின்சார மயமாக்கப்பட்டு உள்ளது என்று பிரதம மந்திரி தெரிவித்தார். நாட்டில் உள்ள விமான நிலையங்கள் சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் விரைவாக மாற்றம் பெற்று வருகின்றன.  2014ஆம் ஆண்டுக்கு முன்பு 7 விமான நிலையங்கள் மட்டுமே சூரிய எரிசக்தி வசதியைப் பெற்றிருந்தன.  ஆனால் இன்று இந்த எண்ணிக்கை 50க்கும் மேலாக அதிகரித்து உள்ளது. 80 விமான நிலையங்களுக்கும் மேலாக எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.  இது எரிசக்தி திறனை அதிகரிக்கிறது.

கேவதியா நகரத்தை ஒரு மின்சார நகரமாக மேம்படுத்தும் செயல்திட்டம் குறித்தும் பிரதம மந்திரி பேசினார்.  எதிர்காலத்தில் கேவதியா நகரில் பேட்டரி அடிப்படையிலான பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே இயக்கக் கூடிய வகையிலான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.  நீர் சுழற்சி என்பது நேரடியாக பருவநிலை மாறுதலோடு தொடர்புடையதாக இருக்கிறது என்றும் நீர் சுழற்சியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு நேரடியாக நீர் பாதுகாப்பை பாதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஜல்ஜீவன் இயக்கம் மூலமாக நாட்டில் நீர்வள ஆதாரங்களை உருவாக்கவும் பாதுகாக்கவும் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் பிரதமர் தெரிவித்தார்.  ஒரு பக்கம் அனைத்து வீடுகளும் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன, மறுபக்கம் அடல் பூஜல் திட்டம் மற்றும் மழைநீரைப் பிடித்தல் போன்ற பிரச்சாரங்களின் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக மறுசுழற்சி மூலம் மூலவளங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தக் கூடிய 11 தொழில்பிரிவுகளை அரசு அடையாளம் கண்டுள்ளதாக பிரதம மந்திரி அறிவித்தார்.  கச்ரா முதல் கஞ்சன் வரையிலான இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளில் எண்ணற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்று அவர் தெரிவித்தார். இந்த இயக்கம் தற்போது போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது.  அனைத்துவிதமான நெறிமுறைப்படுத்தும் அம்சங்கள் மற்றும் வளர்ச்சி சார்ந்த கூறுகள் அடங்கிய இது தொடர்பான செயல்திட்டம் வரும் மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.  பருவநிலையை பாதுகாக்க வேண்டுமெனில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நமது முயற்சிகளை ஒழுங்குபடுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார். நீர், காற்று மற்றும் நிலத்தை சமச்சீராக பராமரிப்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சியை நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மேற்கொள்ளும் போதுதான் நமது அடுத்த தலைமுறையினருக்கு நாம் பாதுகாப்பான சுற்றுச்சூழலை விட்டுச் செல்ல முடியும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi