இத்தாலியின் அபுலியாவில் இன்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் பகுதி குறித்த பரப்புரை கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். குழுவின் 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய ஜனநாயக நடவடிக்கையாக தாம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பது தமக்கு மிகுந்த மனநிறைவு அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். தொழில்நுட்பம் வெற்றி பெற வேண்டுமானால், அது மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையால் ஆதரிக்கப்பட வேண்டும் என்று அவர் வெளிப்படுத்தினார். இந்தச் சூழலில், பொதுச் சேவைகளை வழங்குவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இந்தியாவின் வெற்றியை அவர் பகிர்ந்து கொண்டார்.
"அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு" என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு இயக்கம் பற்றிப் பேசிய பிரதமர், இந்தத் தொழில்நுட்பம் அனைவரின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தப் பரந்த நோக்கத்தை மனதில் கொண்டு, செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மையின் நிறுவன உறுப்பினராக சர்வதேச ஒத்துழைப்பை இந்தியா வளர்த்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் எரிசக்தி மாற்றத்திற்கான பாதை குறித்து விரிவாக எடுத்துரைத்த பிரதமர், அதன் அணுகுமுறை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளது என்றார். 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய இந்தியா செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், உலக சுற்றுச்சூழல் தினத்தில் தாம் தொடங்கியுள்ள மரம் நடும் இயக்கத்தில் உலக சமுதாயம் இணைய வேண்டும் என்றும், தனிப்பட்ட தொடர்பு மற்றும் உலகளாவிய பொறுப்புடன் கூடிய மக்கள் இயக்கமாக இதை மாற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
உலகின் தெற்குப் பகுதியின், குறிப்பாக ஆப்பிரிக்காவின் கவலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். ஆப்பிரிக்க ஒன்றியம் தமது தலைமையின் கீழ் ஜி-20 அமைப்பின் நிரந்தர உறுப்பினராக அனுமதிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு பெருமை தரும் விஷயம் என்று அவர் நினைவுகூர்ந்தார்.