கசான் நகரில் ரஷ்யா தலைமையில் இன்று நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது, நிலையான வளர்ச்சியைத் தொடர்வது, உலகளாவிய தென் பகுதி நாடுகளின் கவலைகள் உள்ளிட்டவை குறித்து பயனுள்ள விவாதங்களை பிரிக்ஸ் தலைவர்கள் மேற்கொண்டு இருந்தனர். பிரிக்ஸ் நாடுகளின் 13 புதிய நட்பு நாடுகளை தலைவர்கள் வரவேற்றனர்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இரண்டு அமர்வுகளில் பிரதமர் உரையாற்றினார். தமது உரையில், போர்கள், பாதகமான பருவநிலை தாக்கங்கள், இணைய அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு நிச்சயமற்ற தன்மைகளையும் சவால்களையும் உலகம் சந்தித்து வரும் நேரத்தில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது என்று அவர் கூறினார். இதனால் பிரிக்ஸ் மீது அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த சவால்களை சமாளிக்க மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை இந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை கூறினார். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான தீர்மானத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்களை முன்கூட்டியே செயல்படுத்துமாறு பிரிக்ஸ் நாடுகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பின் போது இந்தியா நடத்திய தெற்கு உலக நாடுகளின் குரல்கள் உச்சிமாநாட்டை நினைவுகூர்ந்த பிரதமர், அந்த நாடுகளின் கவலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவின் குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரம் உட்பட பிராந்திய அளவில் புதிய வளர்ச்சி வங்கி இருப்பது சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடுகளை எடுத்துரைத்த அவர், வேளாண்மையில் வர்த்தக வசதி, நெகிழ்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகள், மின்னணு வர்த்தகம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றில் பிரிக்ஸ் மேற்கொண்டுள்ள முயற்சிகள் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்று கூறினார். சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆண்டு இந்தியா தொடங்கவுள்ள பிரிக்ஸ் புத்தொழில் அமைப்பு, பிரிக்ஸ் பொருளாதார செயல்திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க வலுவைச் சேர்க்கும் என்று அவர் தெரிவித்தார்.
சர்வதேச சூரியசக்தி கூட்டணி, பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணி, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், பசுமைக் கடன் முன்முயற்சி உள்ளிட்ட இந்தியா மேற்கொண்ட பசுமை முயற்சிகள் குறித்து பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். இந்த முயற்சிகளில் இணையுமாறு பிரிக்ஸ் நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் புதினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்த அமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பை பிரேசில் ஏற்பதற்கும் வாழ்த்து தெரிவித்தார். உச்சிமாநாட்டின் முடிவில், தலைவர்கள் 'கசான் பிரகடனத்தை' ஏற்றுக்கொண்டனர் .
Address of PM at the Closed Plenary may be seen here.
Address of PM at the Open Plenary may be seen here.