சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான பல்வேறு துப்புரவு, தூய்மைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவடைந்தத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
"தூய்மை இந்தியாவின் பத்தாண்டு நிறைவைக் குறிக்கும் இந்த வேளையில், தூய்மையை மக்கள் இயக்கமாக மாற்றிய 140 கோடி இந்தியர்களின் தளராத உணர்வுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்"
"தூய்மை இந்தியா இந்த நூற்றாண்டில் உலகின் மிகப்பெரிய, வெற்றிகரமான மக்கள் இயக்கமாகும்"
"தூய்மை இந்தியா இயக்கம் நாட்டின் சாமானிய மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் விலைமதிப்பற்றது"
"தூய்மை இந்தியா திட்டம் காரணமாக பெண்களிடையே தொற்றுநோய்களின் எண்ணிக்கைக் கணிசமாக குறைந்துள்ளது”
"தூய்மையின் மதிப்பு அதிகரித்து வருவதால் நாட்டில் மிகப்பெரிய உளவியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது"
"தற்போது தூய்மை என்பது வளத்திற்கான புதிய பாதையாக மாறிவருகிறது"
"தூய்மை இந்தியா இயக்கம் சுழற்சிப் பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது"
"தூய்மைக்கான இயக்கம் என்பது ஒரு நாள் சடங்கு அல்ல, வாழ்நாள் முழுவதற்குமான செயல்பாடு"
"அழுக்கின்மையைப் பற்றிய வெறுப்பு நம்மை தூய்மையின் நோக்கத்தில் மேலும் வலிமையாக்கும்"
"நாம் எங்கு வசித்தாலும், அது நமது வீடு, நமது அக்கம் பக்கமோ அல்லது நமது வேலை இடமோ, தூய்மையை பராமரிப்போம் என்று ஒரு சத்தியத்தை எடுத்துக்கொள்வோம்"

தூய்மைக்கான மிக முக்கிய மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 155-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2 அன்று) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற  தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அம்ருத் மற்றும் அம்ருத் 2.0, தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம், கோபர்தன் திட்டம் உள்ளிட்ட ரூ.9,600 கோடி மதிப்பிலான பல்வேறு துப்புரவு மற்றும் தூய்மைத் திட்டங்களைத்  திரு மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தூய்மையே சேவை இயக்கம்-2024-ன் கருப்பொருள் 'தூய்மைப் பழக்கம், தூய்மைக் கலாச்சாரம்.'

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த தினங்களை குறிப்பிட்டு, அன்னை  பாரதத்தின் புதல்வர்களுக்கு மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தி மற்றும் பிற மகத்தான மனிதர்களின் கனவுகளை கூட்டாக நனவாக்க இன்றைய நிகழ்ச்சி உத்வேகம் அளிக்கிறது என்பதை  திரு மோடி சுட்டிக் காட்டினார்.

 

அக்டோபர் 2-ம் தேதி அன்று தாம் உணர்ச்சிவசப்பட்டிருந்தாலும் கடமை உணர்வு நிறைந்திருப்பதாகப் பிரதமர் கூறினார். தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி பேசிய பிரதமர், "தூய்மை இந்தியா இயக்கத்தின் பயணம் கோடிக்கணக்கான இந்தியர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டின் அடையாளமாகும்" என்றார். கடந்த 10 ஆண்டுகளில் இந்த இயக்கம் பெற்ற பொதுமக்களின் ஆதரவை எடுத்துரைத்த அவர், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இதை தங்கள் சொந்த இயக்கமாக - தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொண்டதாகக் கூறினார். தூய்மை இந்தியா இயக்கத்தை மிகப்பெரிய பொது இயக்கமாக மாற்றுவதில் துப்புரவுத் தொழிலாளர்கள், மதத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் முயற்சிகளைப் பாராட்டினார். உழைப்பு தான  வடிவில்  தூய்மை இந்தியா இயக்கத்திற்கு முன்னாள் மற்றும் இந்நாள் குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பை சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டிற்கு உத்வேகம் அளித்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். கிராமங்கள், நகரங்கள் மற்றும் காலனிகளில் இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் ஏராளமான தூய்மை நடவடிக்கைகளை எடுத்துரைத்த பிரதமர், மாநில அமைச்சர்கள், தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் தீவிர பங்கேற்பையும் குறிப்பிட்டார். தூய்மையே சேவை திட்டத்தின் இந்த பதிப்பில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர் என்று தெரிவித்த அவர், சேவை இருவார விழாவின்  15 நாட்களில், நாடு முழுவதும் 27 லட்சத்துக்கும் அதிகமான  நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, 28 கோடி மக்கள் பங்கேற்றனர் என்றார். இந்தியாவை தூய்மையாக வைத்திருக்க தொடர் முயற்சிகள் தேவை என்று வலியுறுத்திய பிரதமர், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்றி தெரிவித்தார்.

இன்றைய முக்கிய மைல்கல்லை குறிக்கும் வகையில், தூய்மை தொடர்பாக சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். அமிர்த நீர்நிலை இயக்கத்தின் ஒரு பகுதியாக, பல நகரங்களில் குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். நமாமி கங்கை இயக்கமாக இருந்தாலும் கரிமக் கழிவுகளை இயற்கை எரிவாயுவாக மாற்றும் கோபர்தன் திட்டமாக இருந்தாலும், தூய்மை இந்தியா இயக்கம் இவற்றைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என்று பிரதமர் குறிப்பிட்டார். "தூய்மை இந்தியா இயக்கம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நமது நாடு பிரகாசிக்கும்" என்று திரு மோடி உறுதிபட தெரிவித்தார்.

 

இந்தியா குறித்த ஆய்வு நடத்தப்படும்போது, 1000 ஆண்டுகளுக்குப் பிறகும் தூய்மை இந்தியா இயக்கம் நினைவுகூரப்படும் என்று பிரதமர் கூறினார். "தூய்மை இந்தியா இயக்கம் மக்களின் பங்களிப்பு மற்றும் தலைமையுடன் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய,வெற்றிகரமான மக்கள் இயக்கமாகும்" என்று திரு மோடி புகழாரம் சூட்டினார். இந்த இயக்கம் மக்களின் உண்மையான ஆற்றலை தனக்கு வெளிப்படுத்திக் காட்டியதாக அவர் மேலும் கூறினார். தம்மைப் பொறுத்தவரை, தூய்மை என்பது மக்கள் சக்தியை உணரும் திருவிழாவாக மாறியுள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டபோது, அது திருமணமாக இருந்தாலும், பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் அல்லது வேறு எந்த இடமாக இருந்தாலும், தூய்மை குறித்த செய்தி சிறப்பாக பரவியதை பிரதமர் நினைவு கூர்ந்தார். வயதான தாய்மார்கள் கழிப்பறை கட்டுவதற்காக தங்கள் கால்நடைகளை விற்ற சம்பவங்கள் உள்ளன, சில பெண்கள் தங்கள் தாலிக் கயிற்றை விற்றனர், சிலர் தங்கள் நிலத்தை விற்றனர், சில ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தங்கள் ஓய்வூதியத்தை நன்கொடையாக வழங்கினர், சில ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தூய்மை இயக்கத்திற்காக தங்கள் ஓய்வூதிய பலன்களை நன்கொடையாக வழங்கிய சம்பவங்களும் உள்ளன என்று அவர் கூறினார். இதே நன்கொடை ஒரு கோவிலுக்கோ வேறு எந்த நிகழ்ச்சியிலோ வழங்கப்பட்டிருந்தால், அது செய்தித்தாள்களில் ஒரு முக்கிய தலைப்பாக இருந்திருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். தொலைக்காட்சியில் ஒருபோதும் முகம் காட்டாத அல்லது செய்தித்தாளில் அவர்களின் பெயர் ஒருபோதும் வெளியிடப்படாத, இந்த இயக்கத்தை வெற்றிபெறச் செய்வதற்காக தங்கள் பணத்தையும், மதிப்புமிக்க நேரத்தையும் நன்கொடையாக அளித்த லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர் என்பதை நாடு அறிய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் இந்தியாவின் தன்மைப் பண்பை பிரதிபலிப்பதாக திரு மோடி கூறினார். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்த திரு மோடி, கடைக்குச் செல்லும்போது சணல் மற்றும் துணிப்பைகளைப் பயன்படுத்தும் பாரம்பரியத்தை பலர் மீண்டும் வலியுறுத்தியதை எடுத்துரைத்தார். ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில்துறையினர் மக்களுடன்  கைகோர்த்து இந்த முயற்சிக்கு ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார். இந்த முயற்சிக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

திரைப்படங்கள் மூலம் தூய்மை குறித்த செய்தியை பரப்புவதில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய திரைப்படத் துறையின் பங்களிப்பை சுட்டிக்காட்டிய பிரதமர், இதுபோன்ற பணிகள் ஒரு முறை மட்டுமல்ல, ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் தூய்மைப் பிரச்சினையை 800 முறை எழுப்பியதை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

 

இன்று தூய்மையை நோக்கி மக்கள் மேற்கொண்ட முயற்சிகளை குறிப்பிட்ட பிரதமர், "தூய்மையை நோக்கிய பாதையை மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்தின் போது காட்டினார்" என்றார்.  இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து முந்தைய அரசுகள் தூய்மையை புறக்கணித்தது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். மகாத்மா காந்தியை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் பயன்படுத்தியவர்கள் அவர் ஆர்வம் காட்டிய விஷயத்தை மறந்துவிட்டனர் என்று அவர் கூறினார். அசுத்தம் மற்றும் கழிப்பறை பற்றாக்குறை ஒரு தேசிய பிரச்சினையாக அவர்களால் ஒருபோதும் கருதப்படவில்லை.  இதன் விளைவாக, சமூகத்தில் இதைப் பற்றி எந்த விவாதங்களும் இல்லாமல் அழுக்கு, வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்று பிரதமர் கூறினார். செங்கோட்டையின் கொத்தளங்களில் இருந்து இந்த பிரச்சினையை எழுப்பிய பின்னர் விமர்சனங்களை எதிர்கொண்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். "சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே பிரதமரின் முதல் முன்னுரிமை" என்று கூறிய அவர், கழிப்பறைகள் மற்றும் சானிட்டரி நாப்கின்கள் பற்றி பேசுவதற்கான தனது பொறுப்பை சுட்டிக்காட்டினார். அதன் பயன்களை இன்றும் காண முடிகிறது என்று அவர் மேலும் கூறினார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கழிப்பறை வசதி இல்லாததால் இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் திறந்தவெளியில் மலம் கழிக்க நிர்ப்பந்திக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், இது மனித கண்ணியத்திற்கு எதிரானது என்றும், நாட்டின் ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய சமூகங்களை அவமதிப்பதாகும் என்றும் இது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு தொடர்ந்தது என்றும் கூறினார். கழிப்பறைகள் இல்லாததால் தாய்மார்களும் சகோதரிகளும் மகள்களும்  துன்பப்படுவது பற்றிக்  குறிப்பிட்ட திரு மோடி, அவர்களின் உடல்நலத்திற்கும் பாதுகாப்புக்கும்  ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களையும் சுட்டிக்காட்டினார். திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் அசுத்தம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்துள்ளது என்றும் குழந்தைகள் இறப்புக்கு இது ஒரு முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

இதுபோன்ற பரிதாபமான சூழ்நிலையில் நாடு தொடர்வது கடினம் என்று குறிப்பிட்ட திரு மோடி, விஷயங்கள் அப்படியே தொடராது என்று அவர்கள் முடிவு செய்ததாக கூறினார். இந்த அரசு இதை ஒரு தேசிய மற்றும் மனிதநேய சவாலாக கருதி, அதைத் தீர்ப்பதற்கான இயக்கத்தைத் தொடங்கியதாகவும், இங்குதான் தூய்மை இந்தியா இயக்கத்திற்கான விதை ஊன்றப்பட்டது என்றும் அவர் கூறினார். குறுகிய காலத்திற்குள், கோடிக்கணக்கான இந்தியர்கள் அதிசயங்களை நிகழ்த்தியுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். நாட்டில் 12 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்றும், முன்பு 40 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த கழிப்பறை வசதி தற்போது 100 சதவீதத்தை எட்டியுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

நாட்டில் உள்ள சாமானிய மக்களின் வாழ்க்கையில் தூய்மை இந்தியா இயக்கத்தின் தாக்கம் விலைமதிப்பற்றது என்பதைப் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். வாஷிங்டனில் உள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய பிரபல சர்வதேச பத்திரிகையின் சமீபத்திய ஆய்வை மேற்கோள் காட்டிய திரு மோடி, தூய்மை இந்தியா இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் 60 முதல் 70 ஆயிரம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி வருகிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றார். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2014க்கும்  2019 க்கும்  இடையே, வயிற்றுப்போக்கு காரணமாக இழந்திருக்கவேண்டிய 3 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. யுனிசெஃப் அறிக்கையை மேற்கோள் காட்டிய அவர், வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டதன் காரணமாக, தற்போது 90 சதவீதத்திற்கும் அதிகமான  பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்றும், தூய்மை இந்தியா இயக்கம் காரணமாக பெண்களுக்கு நோய்த்தொற்றால் ஏற்படும் நோய்களும் கணிசமாகக் குறைந்துள்ளன என்றும் கூறினார். லட்சக்கணக்கான பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறைகள் கட்டப்பட்டதால் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது என்று திரு மோடி மேலும் கூறினார். யுனிசெஃபின் மற்றொரு ஆய்வை மேற்கோள் காட்டிய அவர், தூய்மை காரணமாக, கிராமங்களில் உள்ள  குடும்பங்களால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50,000 ரூபாய் சேமிக்கப்படுகிறது என்றும், முன்பு இது நோய்களைக் குணப்படுத்துவதற்காக கையிலிருந்து செலவிடப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

தூய்மை இந்தியா இயக்கம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், கோரக்பூரில் மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறந்த சம்பவங்களை உதாரணம் காட்டி,  தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றுக்கு தீர்வு காணப்பட்டது என்றார்.

 தூய்மையின் மதிப்பு அதிகரித்திருப்பது நாட்டில் மிகப்பெரிய உளவியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். தூய்மை இந்தியா இயக்கம் கொண்டு வந்த சிந்தனை மாற்றம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் முன்பு இழிவாகப் பார்க்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். "துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மரியாதை கிடைத்தபோது, அவர்களும் நாட்டை மாற்றுவதில் தங்கள் பங்கு குறித்து பெருமிதம் கொண்டனர். தூய்மை இந்தியா திட்டம் லட்சக்கணக்கான துப்புரவு நண்பர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளது" என்று குறிப்பிட்ட பிரதமர், தூய்மைப் பணியாளர்களின் கண்ணியமான வாழ்க்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார். கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்குவதால் ஏற்படும் பிரச்சினைகளை போக்குவதற்கான முயற்சிகள் குறிப்பிட்ட  திரு மோடி, இது தொடர்பாக தனியார் மற்றும் பொதுத் துறையினருடன் அரசு இணைந்து பணியாற்றி வருவதாக தெரிவித்தார். "நாங்கள் தொழில் வல்லுநர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் ஊக்குவித்து வருகிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

 

தூய்மை இந்தியா இயக்கத்தின் வாய்ப்புகள் பரவலாக விரிவடைந்து வருவதை சுட்டிக்காட்டிய திரு மோடி, இது வெறும் தூய்மைத் திட்டம் மட்டுமல்ல என்றும் இன்று தூய்மை என்பது வளத்திற்கான புதிய பாதையை உருவாக்கியுள்ளது என்றும் கூறினார்.

தூய்மை இந்தியா இயக்கம் நாட்டில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும், கடந்த ஆண்டுகளில் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டதன் மூலம் பல துறைகள் பயனடைந்துள்ளன என்றும் பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார். கிராமங்களில் கொத்தனார்கள், பிளம்பர்கள், கூலிகள் போன்ற பலர் வேலை செய்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். இந்த இயக்கத்தின் காரணமாக சுமார் 1.25 கோடி பேர் ஏதேனும் ஒரு வகையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக யுனிசெஃப் மதிப்பிட்டுள்ளதாக திரு மோடி குறிப்பிட்டார். புதிய தலைமுறை பெண் கொத்தனார்கள் என்பது தூய்மை இந்தியா இயக்கத்தின் மிகப்பெரிய விளைவு என்றும், தூய்மையான தொழில்நுட்பத்தின் மூலம் நமது இளைஞர்கள் சிறந்த வேலைகளையும், சிறந்த வாய்ப்புகளையும் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது தூய்மையான தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய சுமார் 5 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். நீர் மற்றும் சுகாதாரத் துறையில் பல புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக திரு மோடி தெரிவித்தார். அவை கழிவிலிருந்து செல்வம், கழிவுகளை சேகரித்தல்,கொண்டு செல்லுதல், நீரை மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகியவையாக உள்ளன. இந்த தசாப்தத்தின் இறுதியில், இந்தத் துறையில் 65 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்  என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், தூய்மை இந்தியா இயக்கம் நிச்சயமாக இதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

"தூய்மை இந்தியா இயக்கம், இந்தியாவில் சுழற்சிப்  பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளித்துள்ளது" என்று கூறிய பிரதமர், வீடுகளிலிருந்து உருவாகும் கழிவுகள் தற்போது மதிப்புமிக்க வளங்களாக மாற்றப்பட்டு வருவதை எடுத்துரைத்தார். உரம், பயோகேஸ், மின்சாரம் மற்றும் சாலை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் கரி போன்ற பொருட்கள் வீட்டுக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன என்று அவர் கூறினார். ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாக விளங்கும் கோபர்தன் திட்டத்தின் வெற்றி குறித்து பேசிய பிரதமர், கோபர்தன் திட்டத்தின் கீழ் கிராமங்கள் முழுவதும் நூற்றுக்கணக்கான சாண எரிவாயு ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன என்றும், அங்கு விலங்குகளின் கழிவுகள் சாண எரிவாயுவாக மாற்றப்படுகின்றன என்றும் தெரிவித்தார். நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அழுத்தப்பட்ட சாண எரிவாயு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இன்று, பல புதிய சாண எரிவாயு ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியை மேலும் விரிவுபடுத்த புதிய திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன.

 

எதிர்கால சவால்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பொருளாதாரம் மற்றும் நகரமயமாக்கலில் ஏற்படும் விரைவான மாற்றங்களை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். விரைவான நகரமயமாக்கல் மற்றும் கழிவு உற்பத்தியை எதிர்கொள்ள, திறமையான கழிவு மேலாண்மையை உறுதி செய்வதற்கான உத்திகளை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். பூஜ்ஜிய அல்லது குறைந்தபட்ச கழிவு வெளியேற்றத்தை உறுதி செய்யும் வீட்டு வளாகங்களுக்கான மறுசுழற்சி பொருட்கள் மற்றும் வடிவமைப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் கட்டுமானத் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். தண்ணீர் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதையும், கழிவுநீர் பயன்படுத்துவதற்கு முன்பு சுத்திகரிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று திரு மோடி கூறினார். நமாமி கங்கா இயக்கம் நதிகளை தூய்மைப்படுத்துவதற்கான முன்மாதிரி என்று குறிப்பிட்ட பிரதமர், கங்கை நதி தற்போது மிகவும் தூய்மையாக உள்ளது என்றார். அமிர்த  இயக்கம் மற்றும் அமிர்த  நீர்நிலை முன்முயற்சிகள் கணிசமான மாற்றத்தைக் கொண்டு வருவதாக குறிப்பிட்ட பிரதமர், நீர் பாதுகாப்பு, சுத்திகரிப்பு, நதிகளை தூய்மைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான புதிய தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். தூய்மைக்கும் சுற்றுலாவுக்கும் இடையேயான தொடர்பை எடுத்துரைத்த பிரதமர் மோடி, தூய்மையான சுற்றுலா தலங்கள் மற்றும் பாரம்பரிய தளங்கள் பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் என்று குறிப்பிட்டார். நமது சுற்றுலாத் தலங்கள், நம்பிக்கைக்குரிய இடங்கள், பாரம்பரிய இடங்கள் ஆகியவற்றை தூய்மையாகவும், நன்கு பராமரித்தும் வைக்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், "தூய்மை இந்தியா திட்டத்தின் இந்த 10 ஆண்டுகளில் நாம் நிறைய சாதித்துள்ளோம். ஒவ்வொரு குடிமகனும் தூய்மையை தங்கள் கடமையாகவும், பொறுப்பாகவும் ஏற்றுக்கொள்ளும்போதுதான் உண்மையான மாற்றம் ஏற்படுகிறது என்றார். தூய்மை இந்தியா இயக்கத்தில் அரசின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் மோடி, தூய்மையான இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு குடிமகனும் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தூய்மைக்கான இயக்கம் ஒரு நாள் சடங்கு அல்ல, மாறாக வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் செயல்பாடு என்றும், இது தலைமுறை தலைமுறையாக முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். தூய்மை என்பது ஒவ்வொரு குடிமகனின் இயல்பாக இருக்க வேண்டும், அது ஒவ்வொரு நாளும் செய்யப்பட வேண்டும்" என்று பிரதமர் தெரிவித்தார். அடுத்த தலைமுறை குழந்தைகள், இந்தியா உண்மையிலேயே தூய்மையாகும் வரை ஓயக்கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.

மாவட்ட, வட்டார, கிராம மற்றும் உள்ளூர் மட்டங்களில் தூய்மை முயற்சிகளை அமல்படுத்துவதன் மூலம் மாநில அரசுகள் தங்களது முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களில் தூய்மையான பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களில் போட்டிகளை நடத்த அவர் பரிந்துரைத்தார். நன்கு பராமரிக்கப்படும் பொது கழிப்பறைகளை நகராட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், தூய்மை அமைப்புகள் பழைய நடைமுறைகளுக்கு திரும்பக்கூடாது என்றும் அவர் கூறினார். சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் அதன் பராமரிப்புக்கு உள்ளாட்சி அமைப்புகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். வீட்டில், அக்கம்பக்கத்தில் அல்லது பணியிடத்தில் எங்கிருந்தாலும் தூய்மையைப் பராமரிக்க அனைத்துக் குடிமக்களும் உறுதிமொழி எடுக்க பிரதமர் மோடி ஊக்குவித்தார். "நமது வழிபாட்டுத் தலங்களை நாம் தூய்மையாக வைத்திருப்பதைப் போலவே, நமது சுற்றுப்புறங்களிலும் தூய்மைக்கான அதே அர்ப்பணிப்பு உணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும்" என்று கூறிய பிரதமர், வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான  பயணத்தில் தூய்மையின் பங்கை எடுத்துரைத்தார். நோக்கங்களை அடைவதில் நம்பிக்கை தெரிவித்ததுடன், மகாத்மா காந்தியின் கொள்கைகளை புதிய சக்தியுடனும், உற்சாகத்துடனும் பின்பற்றி அவருக்கு அஞ்சலி செலுத்துமாறு குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு மனோகர் லால் கட்டார், மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு டோகான் சாஹு, மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ராஜ் பூஷண் சவுத்ரி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.9600 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பல திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அம்ருத் மற்றும் அம்ருத் 2.0-ன் கீழ் நகர்ப்புற நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ரூ.6,800 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்கள், தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் கங்கைப் படுகைப்  பகுதிகளில் நீரின் தரம் மற்றும் கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதை மையமாகக் கொண்ட ரூ.1550 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 10 திட்டங்கள், கோபர்தன் திட்டத்தின் கீழ் ரூ .1332 கோடிக்கும்  அதிக மதிப்புள்ள 15 அழுத்தப்பட்ட சாண எரிவாயு (சிபிஜி) ஆலை திட்டங்கள் இதில் அடங்கும்.

 

 

தூய்மை இந்தியா தின நிகழ்ச்சி இந்தியாவின் பத்தாண்டு கால துப்புரவு சாதனைகளையும், சமீபத்தில் முடிவடைந்த தூய்மையே சேவை இயக்கத்தையும் காட்சிப்படுத்துகிறது. இந்த தேசிய முயற்சியின் அடுத்த கட்டத்திற்கும் இது களம் அமைக்கும். உள்ளாட்சி அமைப்புகள், மகளிர் குழுக்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் சமூகத் தலைவர்கள் நாடு தழுவிய அளவில் பங்கேற்பதும், முழுமையான  தூய்மையின் உணர்வு இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை உறுதி செய்வதும் இதில் அடங்கும்.

தூய்மையே சேவை 2024-ன் கருப்பொருளான , 'தூய்மைப் பழக்கம், தூய்மைக் கலாச்சாரம்', தூய்மை, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான உறுதிப்பாட்டில் தேசத்தை மீண்டும் ஒன்றிணைத்துள்ளது. தூய்மையே சேவை 2024-ன் கீழ், 17 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்களிப்புடன் 19.70 லட்சத்துக்கும் அதிகமான  திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. சுமார் 6.5 லட்சம் தூய்மை இலக்கு அலகுகளில் மாற்றம் எட்டப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் துப்புரவுத் தொழிலாளர் பாதுகாப்பு முகாம்களுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 லட்சத்திற்கும் அதிகமான  துப்புரவு நண்பர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின் கீழ் 45 லட்சத்துக்கும் அதிகமான  மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi congratulates hockey team for winning Women's Asian Champions Trophy
November 21, 2024

The Prime Minister Shri Narendra Modi today congratulated the Indian Hockey team on winning the Women's Asian Champions Trophy.

Shri Modi said that their win will motivate upcoming athletes.

The Prime Minister posted on X:

"A phenomenal accomplishment!

Congratulations to our hockey team on winning the Women's Asian Champions Trophy. They played exceptionally well through the tournament. Their success will motivate many upcoming athletes."