The presidency of G-20 has come as a big opportunity for us. We have to make full use of this opportunity and focus on global good: PM
The theme we have for G20 is 'One Earth, One Family, One Future'. It shows our commitment to 'Vasudhaiva Kutumbakam': PM Modi
After the space sector was opened for the private sector, dreams of the youth are coming true. They are saying - Sky is not the limit: PM Modi
In the last 8 years, the export of musical instruments from India has increased three and a half times. Talking about Electrical Musical Instruments, their export has increased 60 times: PM
Lifestyle of the Naga community in Nagaland, their art-culture and music attracts everyone. It is an important part of the glorious heritage of our country: PM Modi

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலுக்கு மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த நிகழ்ச்சி 95ஆவது பகுதி, நாம் மிக விரைவாக மனதின் குரலின் சதம் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.  இந்த நிகழ்ச்சி என்னைப் பொறுத்த மட்டில் 130 கோடி நாட்டுமக்களையும் இணைக்கின்ற, மேலும் ஒரு கருவியாகும்.  ஒவ்வொரு பகுதிக்கு முன்பாகவும், கிராமங்கள்-நகரங்களிலிருந்து வந்திருக்கும் ஏராளமான கடிதங்களையும் படிப்பது, சிறுவர்கள் முதல் பெரியோர் வரையிலானவர்களிடமிருந்து வந்திருக்கும் ஒலிவழிச் செய்திகளைக் கேட்பது என்பது ஒரு ஆன்மீக அனுபவமாகவே எனக்கு இருக்கிறது.

 

          நண்பர்களே, இன்றைய நிகழ்ச்சியை ஒரு அருமையான பரிசோடு நான் தொடங்க விரும்புகிறேன்.  தெலங்கானாவின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளிச் சகோதரர் தாம் எல்தீ ஹரிபிரசாத் காரு.  இவர் ஜி-20 மாநாட்டிற்கான சின்னத்தைத் தனது கைகளாலேயே நெய்து எனக்கு அனுப்பியிருந்தார்.  இந்த அருமையான பரிசைக் கண்டவுடன் நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனேன்.  ஹரிபிரசாத் அவர்கள் தனது கலையில் எந்த அளவுக்கு நிபுணத்துவம் பெற்றிருக்கிறார் என்றால், அவரால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட முடிகிறது.  ஹரிபிரசாத் அவர்களின் கைகளால் நெய்யப்பட்ட ஜி-20இன் இந்தச் சின்னத்தோடு எனக்கு ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தார்.  அடுத்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டிற்குத் தலைமையேற்று நம் நாட்டிலே அதை அரங்கேற்றுவது என்பது நமக்கு மிகவும் பெருமிதம் வாய்ந்த ஒன்று.  தேசத்தின் இந்தச் சாதனை தொடர்பான மகிழ்ச்சியில் ஜி-20க்கான இந்தச் சின்னத்தைத் தனது கரங்களாலேயே தயார் செய்திருக்கிறார்.  அற்புதமான இந்த நெசவுக் கலை இவரது தந்தையாரிடமிருந்து பாரம்பரியமாகக் கிடைத்திருக்கிறது, இன்று முழு ஆர்வத்தோடு இதில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் இவர்.

 

          நண்பர்களே, சில நாட்கள் முன்பாக ஜி-20ற்கான சின்னம், பாரதத்தின் தலைமை ஆகியவை தொடர்பான இணையத்தளத்தைத் தொடங்கி வைக்கும் பேறு எனக்குக் கிடைத்தது.  பொதுப் போட்டி வாயிலாக இந்தச் சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது.  ஹரிபிரசாத் காரு அனுப்பிய பரிசு எனக்குக் கிடைத்த போது, என் மனதில் ஒரு எண்ணம் உதித்தது.  தெலங்கானாவின் ஏதோ ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நபரும் கூட, ஜி-20 உச்சி மாநாட்டோடு எந்த அளவுக்குத் தான் தொடர்பு கொண்டிருப்பதாக உணர்கிறார் என்பதைப் பார்க்கும் போது என் மனது இனித்தது.  இன்று, இத்தனை பெரிய மாநாட்டிற்குத் தலைமையேற்று நம் நாட்டில் அதை நடத்துவது என்பதை நினைக்கும் போது, தங்கள் நெஞ்சங்கள் பெருமிதத்தால் நிமிர்கின்றன என்று ஹரிபிரசாத் காருவைப் போன்ற பலர் எழுதியிருக்கிறார்கள்.   புணேயில் வசிக்கும் சுப்பா ராவ் சில்லாரா அவர்கள், கோல்கத்தாவைச் சேர்ந்த துஷார் ஜக்மோஹன் அவர்கள் அனுப்பியிருக்கும் செய்திகளை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.   இவர்கள் ஜி-20 மாநாடு தொடர்பான பாரதத்தின் செயலூக்கம் மிக்க முயற்சிகளைப் பாராட்டியிருக்கிறார்கள்.

 

          நண்பர்களே, ஜி-20 மாநாட்டில் பங்கெடுக்கும் நாடுகளின் மக்கட்தொகை உலக மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பங்கு, உலக வர்த்தகத்தில் நான்கில் மூன்று பங்கு, உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் உடையவை.  நீங்களே கற்பனை செய்து பாருங்கள் – பாரதம் இப்போதிலிருந்து 3 நாட்கள் கழித்து, அதாவது டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கி, இத்தனை பெரிய நாடுகள் குழுவிற்கு, இத்தனை வல்லமை வாய்ந்த குழுவிற்குத் தலைமை தாங்க இருக்கிறது.  பாரதத்திற்கும், பாரதவாசிகள் ஒவ்வொருவருக்கும் இது எத்தனை பெரிய வாய்ப்பு!!  இது மேலும் ஏன் விசேஷமானது என்றால், இந்தப் பொறுப்பு, பாரத நாட்டு சுதந்திரத்தின் அமுதகாலத்தில் கிடைத்திருப்பது தான்.

 

நண்பர்களே, ஜி-20இன் தலைமை நமக்கெல்லாம் ஒரு பெரிய சந்தர்ப்பமாக அமைந்திருக்கிறது.  நாம் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, உலக நன்மை மீது முழுகவனத்தையும் செலுத்த வேண்டும்.  அது உலக நன்மையாகட்டும் அல்லது ஒற்றுமையாகட்டும், சுற்றுச்சூழல் தொடர்பான புரிந்துணர்வாகட்டும் அல்லது நீடித்த வளர்ச்சியாகட்டும், பாரதத்திடம் இவற்றோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வு இருக்கிறது.  ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று கொடுக்கப்பட்டிருக்கும் கருப்பொருளிலிருந்து, வசுதைவ குடும்பகம் என்பதன் மீதான நம்முடைய அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது.  நாம் எப்போதுமே கூறிவந்திருப்பது என்னவென்றால்,

ॐ सर्वेषां स्वस्तिर्भवतु ।

सर्वेषां शान्तिर्भवतु ।

सर्वेषां पुर्णंभवतु ।

सर्वेषां मङ्गलंभवतु ।

ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

ஓம் சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது,

சர்வேஷாம் சாந்திர் பவது,

சர்வேஷாம் பூர்ணம் பவது,

சர்வேஷாம் மங்களம் பவது,

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:.

 

அதாவது, அனைவரும் நன்றாக இருக்கட்டும், அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும், அனைவரும் முழுமையடையட்டும், அனைவருக்கும் நலன்கள் பயக்கட்டும்.  இனிவரும் நாட்களில், தேசத்தின் பல்வேறு பாகங்களில், ஜி-20 மாநாடு தொடர்பான பல நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட இருக்கின்றன.  இதன்படி, உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் மக்கள் உங்கள் மாநிலங்களுக்கு வரும் சந்தர்ப்பம் ஏற்படும்.  நீங்கள் உங்கள் பகுதியின் கலாச்சாரத்தின் பல்வகையான, தனித்துவமான வண்ணங்களை உலகின் பார்வைக்கு எடுத்துக் காட்டுவீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.  அதே வேளையில், ஜி-20 மாநாட்டிற்கு வருவோர், இன்று என்னவோ ஒரு பிரதிநிதியாக வரலாம் ஆனால், எதிர்காலத்தில் அவரே ஒரு சுற்றுலாப் பயணியாகவும் வரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.  உங்களிடம் நான் மேலும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். குறிப்பாக என்னுடைய இளைய நண்பர்களிடத்தில்; அது என்னவென்றால், ஹரிபிரசாத் காருவைப் போலவே நீங்களும், ஏதோ ஒரு வகையிலே ஜி-20 மாநாட்டோடு கண்டிப்பாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.  துணியில் ஜி-20யின் பாரதநாட்டுச் சின்னத்தை மிகவும் நேர்த்தியாக, அழகாக உருவாக்கலாம், அச்சிடலாம்.  உங்கள் இடங்களில் ஜி-20யோடு தொடர்புடைய விவாதங்கள், உரைகள், போட்டிகள் போன்றவற்றை அரங்கேற்றும் சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுங்கள் என்று பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.  நீங்கள் G20.in என்ற இணைத்தளத்தில் நுழைந்தால், உங்கள் விருப்பத்திற்கேற்ப அங்கே பல விஷயங்கள் கிடைக்கும். 

          எனதருமை நாட்டுமக்களே, நவம்பர் மாதம் 18ஆம் தேதி ஒட்டுமொத்த உலகின் விண்வெளித்துறை ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டதைக் கண்டது.   இந்த நாளன்று தான் பாரதம் முதன்முதலாக எப்படிப்பட்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது என்றால், இதன் வடிவமைப்பை பாரதத்தின் தனியார் துறையானது உருவாக்கியிருந்தது.  இந்த ராக்கெட்டின் பெயர் விக்ரம்-எஸ்.  ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஏவப்பட்ட உள்நாட்டு விண்வெளி ஸ்டார்ட் அப்பின் இந்த முதல் ராக்கெட், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்ட போது, பாரதநாட்டவர் ஒவ்வொருவரின் சிரமும் பெருமையில் நிமிர்ந்தது.

          நண்பர்களே, விக்ரம்-எஸ் ராக்கெட்டின் பல சிறப்பம்சங்கள் உண்டு.  பிற ராக்கெட்டுக்களோடு ஒப்பிடுகையில் இது மிகவும் லகுவானது, விலை குறைவானதும் கூட.  இதனை மேம்படுத்துவதற்கான செலவு, விண்வெளிச் செயல்பாட்டோடு தொடர்புடைய பிற நாடுகளுக்கு ஆகும் செலவினத்தை விட மிகவும் குறைவானது தான்.  குறைந்தபட்ச செலவினம்- உலகத்தரம் வாய்ந்த விண்வெளித் தொழில்நுட்பம் என்பது பாரதத்தின் அடையாளமாக ஆகி விட்டது.  இந்த ராக்கெட்டைத் தயாரிக்க, மேலும் ஒரு நவீன தொழில்நுட்பம் பயனாகி இருக்கிறது.  இந்த ராக்கெட்டின் சில முக்கியமான பாகங்கள் 3டி பிரிண்டிங், அதாவது முப்பரிமாண அச்சிடுதல் வாயிலாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்.  உண்மையில், விக்ரம்-எஸ் உடைய ஏவுதல் இலக்கிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தொடக்கப் பெயர் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.  இது பாரதத்தில் தனியார் துறை விண்வெளிச் செயல்பாடுகளுக்கான ஒரு புதிய யுக உதயத்தின் அடையாளம்.  இது தேசத்தின் தன்னம்பிக்கை நிறைந்த ஒரு யுகத்தின் தொடக்கம்.  எந்தக் குழந்தைகள் ஒரு காலத்தில் தங்கள் கைகளால் காகிதத்தால் ஆன விமானங்களை உருவாக்கிப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார்களோ, இப்போது பாரதத்திலேயே விமானங்களை உருவாக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!!   எந்தக் குழந்தைகள் ஒருகாலத்தில் நிலவையும் விண்மீன்களையும் பார்த்து, வானத்தின் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார்களோ, இப்போது பாரதத்திலேயே ராக்கெட்டை உருவாக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!!  விண்வெளியை தனியார் துறைக்காகத் திறந்து விட்ட பிறகு, இளைஞர்களின் இந்தக் கனவும் மெய்ப்படத் தொடங்கி இருக்கிறது.  ராக்கெட்டை உருவாக்கி வரும் இந்த இளைஞர்கள் என்ன கூறுகிறார்கள் – வானம் எல்லையல்ல, Sky is not the limit!!

          நண்பர்களே, பாரதம் விண்வெளித்துறையில் தனது வெற்றியை, தனது அண்டை நாடுகளோடும் பகிர்ந்து கொண்டு வருகிறது.  நேற்றுத் தான் பாரதம் ஒரு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது, இதை பாரதமும் பூட்டான் தேசமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன.  இந்த செயற்கைக்கோள் மிகவும் சிறப்பான resolution, பிரிதிறன் மிக்க, துல்லியமான படங்களை அனுப்பும்; இது தன்னுடைய இயற்கை ஆதாரங்களை சிறப்பாக நிர்வகிக்க பூட்டான் நாட்டிற்கு உதவிகரமாக இருக்கும்.  இந்தச் செயற்கைக்கோளின் ஏவுதல், பாரத-பூட்டான் நாடுகளுக்கு இடையேயான பலமான உறவுகளை பிரதிபலிக்கிறது.

          நண்பர்களே, கடந்த சில மனதின் குரல் பகுதிகளில் நாம் விண்வெளி, தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் ஆகியன தொடர்பாக அதிகமாக உரையாடி வருகிறோம் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு; நமது இளைஞர்கள் இந்தத் துறையில் மிகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்கள் என்பது ஒன்று.  அவர்கள் பெரிதாகச் சிந்தித்து, பெரிதாகச் சாதிக்கிறார்கள்.  இப்போதெல்லாம் சின்னச்சின்ன சாதனைகளால் அவர்கள் நிறைவெய்துவதில்லை.  நூதனக் கண்டுபிடிப்பு மற்றும் மதிப்புருவாக்கலின் இந்த சிலிர்க்கவைக்கும் பயணத்தில் அவர்கள் தங்களுடைய பிற இளைய நண்பர்களையும், ஸ்டார்ட் அப்புகளையும் கூட ஊக்கப்படுத்தி வருகிறார்கள் என்பது இரண்டாவது விஷயம். 

          நண்பர்களே, நாம் தொழில்நுட்பம் தொடர்பான நூதனக் கண்டுபிடிப்புகள் பற்றிப் பேசும் போது, ட்ரோன்களை நம்மால் எவ்வாறு மறக்க இயலும்?   இந்தத் தானியங்கி ஆளில்லாமல் பறக்கும் கருவிகள் துறையிலும் கூட பாரதம் விரைவாக முன்னேறி வருகிறது.  சில நாட்கள் முன்பாக, எப்படி ஹிமாச்சல் பிரதேசத்தின் கின்னோரில் இந்த ட்ரோன்கள் வாயிலாக ஆப்பிள்கள் கொண்டு செல்லப்பட்டன என்பதை நாம் பார்த்தோம்.  கின்னோர் என்பது ஹிமாச்சல் பிரதேசத்தின் மிகத் தொலைவான மாவட்டம், மேலும் இங்கே பருவநிலையும் தீவிரமான பனிப்பொழிவு உடையது.  இத்தனை பனிப்பொழிவிலும், கின்னோரின் பகுதிகள், மாநிலத்தின் பிற பாகங்களோடு தொடர்பு கொள்வது கடினமாகி விடுகிறது.  இந்த நிலையில் அங்கிருந்து ஆப்பிள் பழத்தைக் கொண்டு வருவது என்பது அதே அளவு கடினங்கள் நிறைந்தது.  இப்போது ட்ரோன் தொழில்நுட்பத்தால் ஹிமாச்சலுடைய சுவையான கின்னோரி ஆப்பிள்கள் மக்களைச் சென்றடையத் தொடங்கி விட்டன.  இதனால் நமது விவசாய சகோதர சகோதரிகளின் செலவு குறைகிறது, ஆப்பிள்களும் சரியான நேரத்தில் சந்தைகளைச் சென்றடைய முடிகிறது, ஆப்பிள்கள் பாழாவதும் குறைந்திருக்கிறது.

          நண்பர்களே,  இன்று நமது நாட்டுமக்கள் தங்களுடைய நூதனக் கண்டுபிடிப்புகள் வாயிலாக, முன்பெல்லாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதனவற்றை எல்லாம் சாத்தியமாக்கி வருகிறார்கள்.  இதைக் காணும் வேளையில் யாருக்குத் தான் சந்தோஷம் ஏற்படாது?  தற்போதைய ஆண்டுகளில் நமது தேசம் சாதனைகளுக்கான நீண்டதொரு பயணத்தை முடிவு செய்தது.  பாரத நாட்டுமக்களான நாமனைவரும், குறிப்பாக நமது இளைய தலைமுறையினர் இப்போது தடைப்படுவதாக இல்லை என்பதில் எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது.

          எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நான் உங்களிடத்திலே ஒரு சின்ன ஒலிக்குறிப்பை ஒலிக்க இருக்கிறேன்…….

பாடல், வைஷ்ணவ ஜனதோ

          நீங்கள் அனைவரும் இந்தப் பாடலை ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாகக் கேட்டிருப்பீர்கள்.  இது அண்ணலுக்கு மிகவும் பிடித்தமான பாடல் ஆனால், இதற்கு மெட்டமைத்தவர் கிரேக்க நாட்டவர் என்று நான் சொன்னால் நீங்கள் ஆச்சரியத்தில் அமிழ்ந்து போவீர்கள்.   இந்தப் பாடலைப் பாடுபவர் கிரேக்க நாட்டுப் பாடகரான கான்ஸ்டாண்டினோஸ் கலாயிட்ஸிஸ், (Konstantinos Kalaitzis).   காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாள் விழாவின் போது இதை இவர் பாடினார்.  ஆனால் இன்று நான் இதைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு காரணம் உண்டு.  அவருடைய மனதிலே இந்தியா மற்றும் இந்திய இசை தொடர்பாக விசித்திரமான ஒரு ஆர்வம் உண்டு.  பாரதத்திடம் அவருக்கு எந்த அளவுக்கு ஈர்ப்பு இருந்தது என்றால், கடந்த 42 ஆண்டுகளில், இவர் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் பாரதம் வந்திருக்கிறார்.  இவர் பாரதநாட்டு சங்கீதத்தின் தோற்றம், பல்வேறு இந்திய இசையமைப்புகள், பலவகையான ராகங்கள், தாளங்கள், பாவங்களோடு கூடவே, பல்வேறு பாணிகளைப் பற்றியும் ஆய்வு செய்திருக்கிறார். இவர் பாரதநாட்டு சங்கீதத்தின் பல ஆகச்சிறந்த ஆளுமைகளின் பங்களிப்புகளைப் பற்றியும் ஆய்வு செய்திருக்கிறார், பாரத நாட்டின் பாரம்பரியமான நடனங்களின் பல்வேறு பரிமாணங்களையும் இவர் நெருக்கமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.  பாரதத்தோடு தொடர்புடைய தனது இந்த அனைத்து அனுபவங்களையும் இவர் ஒரு புத்தக வடிவிலே மிக அழகாகக் கோர்த்தளித்திருக்கிறார்.  இந்திய இசை, Indian Music என்ற பெயர் கொண்ட இந்தப் புத்தகத்தில் கிட்டத்தட்ட 760 படங்கள் இருக்கின்றன.  இவற்றிலிருக்கும் பெரும்பாலான படங்களை இவரே படம் பிடித்திருக்கிறார்.  பிற நாடுகளில் பாரத நாட்டுக் கலாச்சாரம் தொடர்பான இத்தனை உற்சாகமும், ஈர்ப்பும் உள்ளபடியே ஆனந்தத்தை அளிப்பதாக இருக்கிறது.

          நண்பர்களே, சில வாரங்கள் முன்பாக மேலும் ஒரு செய்தி காதில் வந்து விழுந்தது, இது நமக்கு பெருமிதம் அளிப்பது.  கடந்த 8 ஆண்டுகளாக பாரதத்திலிருந்து இசைக்கருவிகளின் ஏற்றுமதி, மூணரை மடங்கு அதிகரித்திருக்கிறது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம்.  மின்னிசைக்கருவிகள் பற்றிப் பேசும் போது இவற்றின் ஏற்றுமதி 60 மடங்கு அதிகரித்திருக்கிறது.  பாரதநாட்டுக் கலாச்சாரம் மற்றும் சங்கீதம் மீதான பேரார்வம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது என்பதையே இது நமக்கு எடுத்துக் காட்டுகிறது.  இந்திய இசைக்கருவிகளின் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள், அமெரிக்கா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஜப்பான் மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் தாம்.  நமது தேசத்தில் இசை, நடனம் மற்றும் கலைகளில் மிகச் செரிவான மரபு இருக்கிறது என்பது நம்மனைவருக்கும் பெரும் பேறு அளிக்கும் விஷயம்.   

          நண்பர்களே, மகத்தான ஆளுமையான கவி பர்த்ருஹரியை நாம் அவர் இயற்றிய நீதி சதகம் நூலிலிருந்து நன்கறிவோம்.  ஒரு சுலோகத்திலே அவர், இசை, இலக்கியம் ஆகியவற்றில் நமக்கு இருக்கும் பிடிப்புத் தான் மனித சமூகத்தின் மெய்யான அடையாளம் என்கிறார்.  உண்மையில், நமது கலாச்சாரம் இதை மனித நேயத்தை விடவும் உயர்வாக இறையுணர்விடமே இட்டுச் செல்கிறது.  வேதங்களில் சாமவேதமே நமது பல்வேறு இசை வடிவங்களின் ஊற்றுக்கண் என்று கூறப்படுகிறது.  அன்னை சரஸ்வதியின் வீணையாகட்டும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் குழலாகட்டும், போலேநாத்தின் டமருகமாகட்டும், நமது தேவதேவியரும் கூட இசையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்பதையே நமக்குத் தெரிவிக்கிறது.  பாரத நாட்டவரான நாம், ஒவ்வொரு விஷயத்திலும் இசைத் தேடலில் ஈடுபடுகிறோம்.  அது நதியின் கலகல ஒலியாகட்டும், மழையின் நீர்த்துளிகளாகட்டும், புள்ளினங்களின் கீச்சொலியாகட்டும், தென்றலின் மென்னொலியாகட்டும், நமது நாகரீகத்தில் இசையானது அனைத்து இடங்களிலும் பரவி விரவி இருக்கிறது.  இந்த இசை உடலுக்கு மட்டும் ஓய்வளிப்பதில்லை, மனதையும் உல்லாசத்தில் ஆழ்த்துகிறது.  இசையானது நமது சமூகத்தை இணைக்கிறது.  பாங்க்டாவிலும், லாவணியிலும் ஆனந்தமும், உற்சாகமும் கொப்பளித்தால், ரவீந்திர சங்கீதத்தில், நமது ஆன்மா கரைந்து போகிறது.  நாடெங்கிலும் இருக்கும் பழங்குடியினத்தவரிடம் பல்வேறு இசைப்பாரம்பரியங்கள் உண்டு.  இவை நம்மை ஒருங்கிணைப்பதோடு, இயற்கையோடு இசைவான வாழ்வை வாழ உத்வேகம் அளிக்கின்றன. 

          நண்பர்களே, இசையின் நமது வகைகள், நமது கலாச்சாரத்தை மட்டும் வளப்படுத்தவில்லை, உலகெங்கிலும் இருக்கும் இசையிலும் கூட தங்களுடைய அழிக்கமுடியா முத்திரையை விட்டுச் சென்றிருக்கின்றன.  பாரதநாட்டு இசையின் புகழானது, உலகின் மூலை முடுக்கெங்கும் பரவியிருக்கிறது.  நான் உங்களுக்கு ஒரு ஒலிக்குறிப்பை இசைக்கிறேன். 

கயானா நாட்டுப் பாடல்

          வீட்டுக்கருகிலே ஏதோ ஒரு கோயிலில் நடக்கும் பஜனை-கீர்த்தனை என்று நீங்கள் இதைக் கருதலாம்.  ஆனால் இந்தக் குரல் கூட, பாரதத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கும் தென்னமரிக்க நாடான கயானாவிலிருந்து வந்திருக்கிறது.  19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டில் அதிக எண்ணிக்கையில் நம் நாட்டிலிருந்து மக்கள் கயானாவில் குடியேறினார்கள்.   அவர்கள் இங்கே பாரதத்தின் பல்வேறு பாரம்பரியங்களையும் தங்களோடு கூடவே கொண்டு வந்தார்கள்.  எடுத்துக்காட்டாக, நாம் பாரதத்தில் எவ்வாறு ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோமோ, கயானாவிலும் கூட ஹோலிப் பண்டிகை வண்ணங்களைக் கொட்டி முழக்குகிறது.  எங்கே ஹோலியின் வண்ணங்கள் உள்ளனவோ, அங்கே பக்வா, அதாவது ஃபகுவாவின் இசையும் உண்டு தானே!!  கயானாவின் பக்வாவில், பகவான் இராமபிரான், பகவான் கிருஷ்ணனோடு தொடர்புடைய திருமணப் பாடல்களைப் பாடும் ஒரு விசேஷமான பாரம்பரியம் உள்ளது.  இந்தப் பாடல்களை சௌதால் என்று அழைக்கிறார்கள்.  எப்படி நம் நாட்டில் உள்ளதோ அதைப் போன்றே, இவை இந்த மெட்டில், இத்தனை உச்சஸ்தாயியில் பாடப்படுகின்றன.  இது மட்டுமல்ல, கயானாவில் சௌதால் போட்டிகளும் உண்டு.  இதைப் போலவே பல பாரத நாட்டவர், குறிப்பாக கிழக்கு உத்திர பிரதேசம் மற்றும் பிஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஃபிஜிக்கும் சென்றார்கள்.  இவர்கள் பாரம்பரியமான பஜனைகள்-கீர்த்தனைகளைப் பாடினார்கள், இவற்றில் முக்கியமான ராமசரிதமானஸின் தோஹாக்கள் இடம் பெற்றிருந்தன.  இவர்கள் ஃபிஜியிலும் கூட பஜனைகள்-கீர்த்தனைகளோடு இணைந்த பல மண்டலிகளை உருவாக்கினார்கள்.  ஃபிஜியில் இராமாயண மண்டலியின் பெயரில் இன்றும் கூட, 2000த்திற்கும் மேற்பட்ட பஜனை-கீர்த்தனை மண்டலிகள் இருக்கின்றன.  இவற்றை இன்று ஒவ்வொரு கிராமம்-பகுதிகளிலும் நம்மால் காண முடியும்.  நான் இங்கே சில எடுத்துக்காட்டுக்களை மட்டுமே உங்களுக்கு அளித்திருக்கிறேன்.  நீங்கள் உலகெங்கும் பார்த்தால், பாரதநாட்டின் இசைப் பிரியர்களின் இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது.

          என் மனம்நிறை நாட்டுமக்களே, நாமனைவரும், எப்போதும் பெருமிதப்படும் ஒரு விஷயம் என்றால், நமது தேசம் உலகின் மிகத் தொன்மையான பாரம்பரியங்களின் இல்லம் என்பதே ஆகும்.  ஆகையால், நாம் நமது பாரம்பரியங்களையும், நமது பாரம்பரியமான ஞானத்தையும் பாதுகாத்தளிக்க வேண்டும், அவற்றைப் போற்ற வேண்டும், இயன்றவரை அவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்  என்பது நம்மனைவரின் பொறுப்பாகும்.  இந்த வகையிலே பாராட்டுதலுக்குரிய ஒரு முன்னெடுப்பினை வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் சில நண்பர்கள் செய்து வருகின்றார்கள்.  இந்த முயற்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மனதின் குரல் நேயர்களோடு இதைப் பகிர வேண்டும் என்று என் மனம் அவாவியது. 

          நண்பர்களே, நாகாலாந்தின் நாகா சமூகத்தவரின் வாழ்க்கைமுறை, அவர்களின் கலை-கலாச்சாரம் மற்றும் இசை ஆகியன அனைவர் மனங்களையும் கொள்ளை கொள்ளக்கூடியவை.  இவை நமது தேசத்தின் பெருமிதமான பாரம்பரியத்தின் முக்கியமான அங்கமாகும்.  நாகாலாந்தின் மக்களின் வாழ்க்கையும் அவர்களுடைய திறன்கள்-நீடித்த வாழ்க்கைமுறை ஆகியவற்றிற்காக பெயர் போனவை.  இந்தப் பாரம்பரியங்கள் மற்றும் திறன்களைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினர் வரை கொண்டு சேர்க்க, அங்கிருப்போர் ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கின்றார்கள், இதன் பெயர் லிடி-க்ரோ-யூ ஆகும்.  கலாச்சாரத்தின் பரிமாணங்களை நாகாக்கள் இழந்துவரும் கட்டத்தில், இவற்றை மீண்டும் உயிர்ப்பிக்கும் பணியை இந்த லிடி-க்ரோ-யூ அமைப்பு செய்து வருகிறது.  எடுத்துக்காட்டாக, நாகாக்களின் நாட்டுப்புற இசையானது உள்ளபடியே மிகவும் நிறைவான பாரம்பரியம் கொண்டது.  இந்த அமைப்பானது, நாகா மக்களின் இசையினை, தொகுப்புக்களாக்கி வெளியிடத் தொடங்கியது.  இதுவரை இப்படிப்பட்ட மூன்று இசைத் தொகுப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.  இவர்கள் நாட்டுப்புற இசை, நாட்டுப்புற நடனம் ஆகியவற்றோடு தொடர்புடைய கருத்துப் பட்டறைகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  இளைஞர்களுக்கும் இவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது.  இது மட்டுமல்ல, நாகாலாந்தின் பாரம்பரியமான பாணியில் ஆடைகளை உருவாக்கல், தைத்தல்-நெசவு செய்தல் போன்ற பணிகளில் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.  வடகிழக்கில் மூங்கிலிலும் கூட பலவகையான பொருட்கள் வடிவமைக்கப்படுகின்றன.  புதிய தலைமுறை இளைஞர்களுக்கு மூங்கில் பொருட்களை உருவாக்குதல் கற்பிக்கப்படுகிறது.  இதனால் இந்த இளைஞர்களுக்குத் தங்களுடைய கலாச்சாரத்தில் பிடிப்பு ஏற்படுவதோடு, வேலைவாய்பிற்கான புதிய சந்தர்ப்பங்கள் பிறக்கின்றன.  நாகா மக்களின் கலாச்சாரம் குறித்து, அதிக அளவில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், இதன் பொருட்டு லிடி-க்ரோ-யூ அமைப்பைச் சார்ந்தவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

          நண்பர்களே, உங்கள் பகுதியிலும் கூட இப்படிப்பட்ட கலாச்சார மரபுகளும், பாரம்பரியங்களும் இருக்கலாம்.  நீங்களுமே கூட, உங்களுடைய பகுதிகளில் இதைப் போன்ற முயற்சியில் ஈடுபடலாம்.  இப்படிப்பட்டதொரு அருமையான முயற்சி உங்கள் பகுதியில் நடைபெறுகிறது என்ற செய்தி உங்கள் கவனத்திற்கு வந்தால், அதைப் பற்றிய தகவலைக் கண்டிப்பாக என்னோடு பகிர்ந்து கொள்ளத் தவறாதீர்கள்.

என் மனம் நிறை நாட்டுமக்களே, நம் நாட்டிலே ஒன்று கூறப்படுவதுண்டு - வித்யாதனம் சர்வதனப்பிரதானம்.   அதாவது, யாரேனும் ஒருவர் கட்டணமில்லாக் கல்வியை அளிக்கிறார் என்றால், அவரே சமூகத்தின் நலனுக்காக மிகப்பெரிய பணியைச் செய்கிறார் என்று பொருள்.  கல்வித் துறையில் ஏற்றப்படும் ஒரு சிறிய விளக்கால், சமூகத்திற்கே ஒளிகூட்ட முடியும்.  இன்று நாடெங்கிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் பல நடந்தேறி வருகின்றன என்பதைக் காணும் போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.  யூபியின் தலைநகரான லக்னௌவிலிருந்து 70-80 கிலோமீட்டர் தொலைவில் ஹர்தோயியைச் சேர்ந்த பான்ஸா என்ற பெயருடைய ஒரு கிராமம் உள்ளது.   இந்த கிராமத்தைச் சேர்ந்த ஜதின் லலித் சிங் அவர்களைப் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது.  இவர் கல்வியின் ஒளியை ஏற்றி வைப்பதில் ஈடுபட்டு வருகிறார்.  ஜதின் அவர்கள் ஈராண்டுகள் முன்பாக Community Library and Resource Centre, அதாவது சமூக நூலகம் மற்றும் ஆதாரங்கள் மையம் ஒன்றினைத் தொடங்கினார்.  அவருடைய இந்த மையத்தில் ஹிந்தி மற்றும் ஆங்கில இலக்கியங்கள், கணிப்பொறி, சட்டம் மற்றும் பல அரசுத் தேர்வுகளுக்கான தயாரிப்புகளோடு தொடர்புடைய 3000த்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.  இந்த நூலகத்தில் குழந்தைகளுக்குப் பிடித்தமான விஷயங்களும் முழுமையாக கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன.  இங்கே இருக்கும் சிறுவர்களுக்கான வேடிக்கைப் புத்தகங்களான காமிக்ஸ் புத்தகங்களாகட்டும், கல்விசார் விளையாட்டுப் பொருட்களாகட்டும், குழந்தைகளிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.  குழந்தைகள் விளையாட்டுப் போக்கிலே இங்கே புதியபுதிய விஷயங்களைக் கற்க வருகின்றார்கள்.  படிப்பு இணையவழியாகவோ, இணையவழி சாராததாகவோ இருந்தாலும், சுமார் 40 தன்னார்வலர்கள் இந்த மையத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  ஒவ்வொரு நாள் காலையிலும் கிராமத்தின் சுமார் 80 மாணவர்கள் இந்த நூலகத்தில் படிக்க வருகின்றார்கள்.

நண்பர்களே, ஜார்க்கண்டின் சஞ்ஜய கஷ்யப் அவர்களும் கூட ஏழைக் குழந்தைகளின் கனவுக்குக்குப் புதிய இறக்கைகளை அளித்து வருகிறார்.  தனது பள்ளிப் பருவத்தில் சஞ்ஜய் அவர்களால் நல்ல புத்தகங்களைப் படிக்க முடியாத நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  இந்த நிலையில், புத்தகங்களின் குறைபாடு தனது பகுதியைச் சார்ந்த குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாழாக்கக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டார்.  தனது இந்தக் குறிக்கோளின் காரணமாக, இன்று இவர் ஜார்க்கண்டின் பல மாவட்டங்களின் குழந்தைகளுக்காக நூலக மனிதன், Library Man ஆகியிருக்கிறார்.  சஞ்ஜய் அவர்கள் தனது வேலைத் தொடங்கிய வேளையில், தனது முதல் நூலகத்தை தனது பிறந்த இடத்தில் ஏற்படுத்தினார்.  பணிக்கிடையில், எங்கெல்லாம் அவருக்கு இடமாற்றம் ஏற்பட்டதோ, அங்கெல்லாம் ஏழை மற்றும் பழங்குடியினக் குழந்தைகளின் படிப்பிற்காக நூலகத்தைத் திறக்கும் தனது இலக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.  இப்படிச் செய்து, இவர் ஜார்க்கண்டின் பல மாவட்டங்களின் குழந்தைகளுக்காக நூலகத்தைத் திறந்து விட்டார்.  நூலகத்தைத் திறப்பதற்கான அவருடைய இலக்கு இன்று ஒரு சமூக இயக்கமாக உருமாறி இருக்கிறது.  சஞ்ஜய் அவர்களாகட்டும், ஜதின் அவர்களாகட்டும், இப்படிப்பட்ட பல முயற்சிகளுக்காக சிறப்பான பாராட்டுக்களுக்குச் சொந்தக்காரர்கள். 

எனக்குப் பிடித்தமான நாட்டுமக்களே, மருத்துவ அறிவியல் உலகில், ஆய்வுகளும், நூதனமான கண்டுப்பிடிப்புக்களோடு கூடவே, மிக நவீனமான தொழில்நுட்பமும், கருவிகளின் துணையும் மிகவும் முன்னேறியிருக்கிறது என்றாலும், சில நோய்கள், இன்றுவரை மிகப்பெரிய சவாலாகவே விளங்கி வருகின்றன.  இப்படிப்பட்ட ஒரு நோய் தான் muscular dystrophy, தசைநார் தேய்வு.  இது முக்கியமாக ஒரு மரபுவழி பரம்பரை நோய், இது எந்த வயதிலும் தாக்கலாம், இதனால் உடலின் தசைகள் பலவீனப்படத் தொடங்குகின்றன.  நோயாளியால் தனது சின்னச்சின்ன அன்றாடச் செயல்களைச் செய்வது கூட சிரமமானதாகிறது.  இப்படிப்பட்ட நோயாளிகளின் சிகிச்சையும், பராமரிப்பும் செய்ய, பெரிய சேவை உணர்வு அவசியமாகிறது.  நம் நாட்டிலே ஹிமாச்சல் பிரதேசத்தின் சோலன் பகுதியில் இப்படிப்பட்ட ஒரு மையம் உள்ளது, இது தசைநார் தேய்மானம் உள்ள நோயாளிகளின் வாழ்வில் ஒரு புதிய ஒளிக்கிரணமாக விளங்குகிறது.  இந்த மையத்தின் பெயர் மானவ் மந்திர்.  இதனை Indian Association of Muscular Dystrophy, அதாவது தசைநார் தேய்வுக்கான இந்தியச் சங்கம் நிர்வகித்து வருகிறது.  மானவ் மந்திர், தனது பெயருக்கேற்பவே, மனித சேவையின் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு.  இங்கே நோயாளிகளுக்காக புறநோயாளி மற்றும் சேர்க்கை தொடர்பான சேவைகள் 3-4 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டன.  மானவ் மந்திரில் சுமார் 50 நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் உண்டு.  இயன்முறைமருத்துவம், மின்முறைமருத்துவம், நீர்முறைசிகிச்சை ஆகியவற்றோடு கூடவே, யோகம்-பிராணாயாமத்தின் துணையோடும் இங்கே நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

நண்பர்களே, அனைத்துவிதமான உயர்தொழில்நுட்ப வசதிகள் வாயிலாக இந்த மையத்தில் நோயாளிகளின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.  தசைநார் தேய்வோடு தொடர்புடைய சவால்கள் பற்றிய விழிப்புணர்வும் போதுமானதாக இல்லை.  ஆகையால், இந்த மையமானது, ஹிமாச்சல் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடெங்கிலும் நோயாளிகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே முகாம்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.  மிக முக்கியமான நம்பிக்கை அளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த அமைப்பை, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களே நிர்வாகம் செய்கிறார்கள்; எடுத்துக்காட்டாக சமூக சேவகர், ஊர்மிளா பால்தீ அவர்கள், தசைநார் தேய்விற்கான இந்தியச் சங்கத்தின் தலைவர், சகோதரி சஞ்ஜனா கோயல் அவர்கள், மேலும் இந்தச் சங்கத்தைத் தோற்றுவிப்பதில் முக்கிய பங்காற்றிய விபுல் கோயல் அவர்கள் இந்த அமைப்பில் முக்கிய பங்காற்றி வருகின்றார்கள்.  மானவ் மந்திரை மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் என்ற வகையில் மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதனால் இங்கிருக்கும் நோயாளிகளுக்கு மேலும் சிறப்பான சிகிச்சை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.  இந்தத் திசையில் முயற்சிகளை மேற்கொண்டுவரும் அனைவருக்கும் என் இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; கூடவே தசைநார் தேய்மானத்தை எதிர்கொண்டு வரும் அனைவருக்கும் விரைவில் நலன்கள் ஏற்பட என் நல்விருப்பங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

எனதருமை நாட்டுமக்களே, இன்று மனதின் குரலில் நாட்டுமக்களின் ஆக்கப்பூர்வமான, சமூகப் பணிகளைப் பற்றி உரையாடினோம், இவை தேசத்தின் ஆற்றல் மற்றும் உற்சாகத்தின் உதாரணங்கள்.  நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் இன்று ஏதோ ஒரு துறையில், ஒவ்வொரு நிலையிலும், தேசத்திற்காக வித்தியாசமான ஏதோ ஒரு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.  இன்றைய உரையாடலில் நாம் என்ன பார்த்தோம்…….. ஜி-20 போன்ற சர்வதேச நிகழ்ச்சியில் நமது ஒரு நெசவாளி நண்பர், எப்படி தனது பொறுப்பினை நிறைவேற்றினார், இதைப் புரிய முன்வந்தார்.  இதைப் போலவே ஒருவர் சுற்றுச்சூழலுக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், ஒருவர் நீருக்கான பணியில் ஈடுபட்டு வருகிறார், பலர் கல்வித் துறையில், சிகிச்சை மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் தொடங்கி, கலாச்சாரம்-பாரம்பரியங்கள் வரை, அசாதாரணமான செயல்களில் ஈடுபட்டு வருவதைக் கண்டோம்.  இது ஏன் இவ்வாறு என்றால், நமது குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கடமைகளைப் புரிந்து கொண்டுள்ளார்கள், இப்படிப்பட்ட கடமையுணர்வு எந்த ஒரு தேசத்தின் குடிமக்களிடமும் வந்து விட்டது என்று சொன்னால், அந்த தேசத்தின் பொன்னான எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டு விடும், தேசத்தின் பொன்னான எதிர்காலம் என்றால் அது நம்மனைவரின் பொன்னான எதிர்காலம் தானே!!

நான், மீண்டும் ஒருமுறை நாட்டுமக்களுக்கும், அவர்களின் முயல்வுகளுக்கும் தலைவணங்குகிறேன்.  அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம், இப்படிப்பட்ட பல, உற்சாகமளிக்கும் விஷயங்கள் குறித்து கண்டிப்பாக உரையாடுவோம்.  உங்களுடைய ஆலோசனைகள், கருத்துக்களைக் கண்டிப்பாக அனுப்பி வாருங்கள்.  உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள்.   

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait

Media Coverage

When PM Modi Fulfilled A Special Request From 101-Year-Old IFS Officer’s Kin In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Under Rozgar Mela, PM to distribute more than 71,000 appointment letters to newly appointed recruits
December 22, 2024

Prime Minister Shri Narendra Modi will distribute more than 71,000 appointment letters to newly appointed recruits on 23rd December at around 10:30 AM through video conferencing. He will also address the gathering on the occasion.

Rozgar Mela is a step towards fulfilment of the commitment of the Prime Minister to accord highest priority to employment generation. It will provide meaningful opportunities to the youth for their participation in nation building and self empowerment.

Rozgar Mela will be held at 45 locations across the country. The recruitments are taking place for various Ministries and Departments of the Central Government. The new recruits, selected from across the country will be joining various Ministries/Departments including Ministry of Home Affairs, Department of Posts, Department of Higher Education, Ministry of Health and Family Welfare, Department of Financial Services, among others.