கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய விளையாட்டரங்கில் ரூ.3,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டியதோடு, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்கள் கொச்சி நீர்வழி மெட்ரோ போக்குவரத்தையும், பல்வேறு ரயில் திட்டங்களுக்கும், திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டியதையும் உள்ளடக்கியதாகும். முன்னதாக திருவனந்தபுரம்- காசர்கோடு இடையேயான கேரளாவின் முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை இன்று காலையில் பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், மக்களுக்கு விஷூ வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் கேரள மக்களுக்கு அவர் வாழ்த்து கூறினார்.
கேரளாவின் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிலைகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர், கேரள மக்களின் கடின உழைப்பும், கட்டுப்பாடும் அவர்களுக்கு தனித்துவ அடையாளத்தைத் தந்துள்ளன என்றார்.
கேரள மக்கள் உலக நிலையை புரிந்துகொள்ளும் திறமையுள்ளவர்கள் என்றும், சிக்கலான தருணங்களில் வளர்ச்சியின் துடிப்புமிக்க இடத்தை இந்தியா எவ்வாறு பெற்றது என்பதை அறிந்து அவர்கள் பாராட்டினார்கள் என்றும் அவர் கூறினார். நாட்டின் நலனுக்காக மத்திய அரசு விரைவாகவும், உறுதியாகவும் முடிவுகள் எடுப்பதால் இந்தியாவின் மீது உலகம் நம்பிக்கை வைத்துள்ளது. என்றும், இதனால் இந்தியாவின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நவீனப்படுத்தவும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முதலீடுகள் கிடைத்துள்ளன என்றும் பிரதமர் கூறினார். ஒத்துழைப்பு கூட்டமைப்பில் அரசு கவனம் செலுத்துகிறது, மாநிலங்களில் முன்னேற்றத்தை நாட்டின் முன்னேற்ற ஆதாரமாகக் கருதுகிறது என்று அவர் தெரிவித்தார். “சேவை சார்ந்த அணுகுமுறையுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். கேரளா முன்னேறினால் தான் வேகமான விகிதத்தில் தேசம் முன்னேற முடியும்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் போக்குவரத்து கட்டமைப்பு தொடர்பான பணி வேகத்திலும், அளவிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பட்ஜெட்டில் கூட அடிப்படை கட்டமைப்புக்கு 10 லட்சம் கோடிக்கு மேல் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட ரயில்வே மேம்பாட்டு திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், பாதை மாற்றம், இரட்டிப்பாக்குதல், மின்மயமாக்குதல் ஆகிய பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார். பலவகை போக்குவரத்தை மையமாக கேரளாவை மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கேரளாவில் 3 பெரிய ரயில் நிலையங்களை மறுசீரமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இதுவரையிலான அனைத்து வந்தே பாரத் ரயில்களும், கலாச்சார, ஆன்மீக, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைப்பதாக உள்ளன என்று பிரதமர் தெரிவித்தார். “கேரளாவின் முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வடக்கு கேரளாவையும், தெற்கு கேரளாவையும் இணைக்கும். இந்த ரயில், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர், கண்ணூர் போன்ற யாத்திரை தலங்களுக்கான பயணத்தை எளிதாக்கும்” என்று அவர் கூறினார். திருவனந்தபுரம்- ஷோரனூர் பிரிவில் சுமாரான அதிவேக ரயில்களை இயக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இது நிறைவடைந்த பின் இதே போன்ற ரயில்களை திருவனந்தபுரத்துக்கும், மங்களூருக்கும் இடையே இயக்கும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.
கொச்சி நீர்வழி மெட்ரோ போக்குவரத்து என்பது இந்தியாவில் உருவாக்கப்பட்ட திட்டம் என்பதை அடிக்கோடிட்டுக்காட்டிய பிரதமர், இதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு பாராட்டுத் தெரிவித்தார்.
கொச்சிக்கு அருகே உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு எளிதான, மலிவான போக்குவரத்து சாதனமாகும் என்றும் பேருந்து முனையம் மற்றும் மெட்ரோ வலைப்பின்னலுக்கு இடையே போக்குவரத்து தொடர்பை இது வழங்கும் என்றும் பிரதமர் கூறினார். நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு அப்பால் முகத்துவார சுற்றுலாவுக்கும் இது பயனளிக்கும் என்று தெரிவித்தார். கொச்சி நீர்வழி மெட்ரோ போக்குவரத்து நாட்டின், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
போக்குவரத்து தொடர்புக்கான முதலீடுகள் சேவைகளை விரிவுபடுத்துவது மட்டுமின்றி தூரத்தைக் குறைத்து சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி பல்வேறு கலாச்சாரங்களை இணைக்கிறது என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். உள்ளார்ந்த வளமுள்ள கலாச்சாரம், உணவுப்பழக்கம், பருவநிலையை கேரளா கொண்டுள்ளது என்று அவர் கூறினார். அண்மையில் குமாரகோனில் நடைபெற்ற ஜி20 கூட்டம் பற்றி எடுத்துரைத்த பிரதமர், இதுபோன்ற ஜி20 கூட்டங்களும், நிகழ்வுகளும் கேரளாவிற்கு கூடுதலாக உலகளாவிய முக்கியத்துவத்தை அளிக்கின்றன என்றார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களின் சாதனைகள் பற்றி பேசப்படுவதை எடுத்துரைத்த பிரதமர், உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக கேரளாவில் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பற்றி அவ்வப்போது குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார். “மனதின் குரல் நிகழ்வின் 100-வது அத்தியாயம் வரும் ஞாயிறு அன்று நிறைவு பெறுவதை சுட்டிக்காட்டிய அவர், தேசக்கட்டுமானத்திற்கான நாட்டு மக்களின் முயற்சிகளுக்கும், ஒரே இந்தியா உன்னத இந்தியா உணர்வுக்கும் இது அர்ப்பணிக்கப்படுகிறது என்றார். வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று கோரியதுடன் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
கேரள ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான், முதலமைச்சர் திரு பினராயி விஜயன், ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் திரு வி முரளீதரன், திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சசி தரூர் மற்றும் கேரள அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
First Vande Bharat Express of Kerala, water metro in Kochi and other initiatives launched today will further the state's development journey. pic.twitter.com/9mrLOSG1Wy
— PMO India (@PMOIndia) April 25, 2023
India is a bright spot on the global map. pic.twitter.com/24uRQwZQo6
— PMO India (@PMOIndia) April 25, 2023
Encouraging cooperative federalism for India's progress and prosperity. pic.twitter.com/BcDzIikVTB
— PMO India (@PMOIndia) April 25, 2023
India is progressing at a speed and scale that is unprecedented. pic.twitter.com/dz0ah44Oza
— PMO India (@PMOIndia) April 25, 2023
With better connectivity, progress is guaranteed. pic.twitter.com/ItA6sNmuAr
— PMO India (@PMOIndia) April 25, 2023
Diverse topics have been covered in the episodes of #MannKiBaat. Numerous inspiring stories from Kerala have been shared by the PM as well. pic.twitter.com/glk4RJltgP
— PMO India (@PMOIndia) April 25, 2023