பாங்காக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்கிடையே வங்கதேச இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுசை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

ஜனநாயக ரீதியான, நிலையான, அமைதியான, முன்னேற்றமான, அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்துக்கு  இந்தியாவின் ஆதரவை பிரதமர் உறுதிப்படுத்தினார்.  இந்தியாவின் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையை எடுத்துரைத்த பிரதமர்,  இரு நாடுகளுக்குமிடையேயான ஒத்துழைப்பு இருநாட்டு  மக்களுக்கும் மிகச்சிறந்த பயன்களை கொண்டுவரும் என்றார். நடைமுறை அடிப்படையில் வங்கதேசத்துடனான ஆக்கப்பூர்வ உறவுக்கு இந்தியாவின் விருப்பத்தை அவர் கோடிட்டுகாட்டினார்.

 

எல்லைப்பகுதியில் பாதுகாப்பையும், நிலைத்தன்மையையும், பராமரிப்பதற்கு சட்டவிரோத எல்லை தாண்டல்களை தடுப்பதற்கும், குறிப்பாக இரவு நேரத்தில் சட்டம் ஒழுங்கை கடுமையாக அமல்படுத்துவதற்கும் அவசியமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  நமது உறவுகளை ஆய்வு செய்யவும், முன்னெடுத்து செல்லவும் பொருத்தமான இருதரப்பு நடைமுறை தேவை என்று  அவர் கூறினார்.

பங்களாதேஷில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து தொடர்பான இந்தியாவின் கவலைகளை சுட்டிக்காட்டிய பிரதமர், அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் வழக்குகளை  முழுமையாக புலனாய்வு செய்து அவர்களின் பாதுகாப்பை வங்கதேச அரசு உறுதிசெய்யும் என்ற தமது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

 

பிம்ஸ்டெக் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதற்காக வங்கதேசத்துக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், அதன் தலைமையில் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் இந்த அமைப்பு முன்னெடுத்து செல்வதை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவித்தார். பிம்ஸ்டெக் கட்டமைப்பின் கீழ் பிராந்திய ஒருங்கிணைப்பை முன்னேற்றுவதற்கான விரிவடைந்த  ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும் விரிவாக்க தலைவர்கள் ஒப்புகொண்டனர்.

தங்களின் நீண்டகால நலன் மற்றும் பரஸ்பர பயனளிக்கும்  இருதரப்பு உறவுகளில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் மூலம் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் இரு நாடுகளுக்கிடையே  விவாதித்து தீர்வு காணப்படும் என்ற தமது நிலைப்பாட்டை பிரதமர் எடுத்துரைத்தார்.