எனதருமைக் குடும்பச் சொந்தங்களே, வணக்கம். மனதின் குரலின் மேலும் ஒரு பகுதியில் உங்கள் அனைவருடனும், தேசத்தின் வெற்றியை, நாட்டுமக்களின் வெற்றியை, அவர்களின் உத்வேகமளிக்கும் வாழ்க்கைப் பயணத்தை, உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் மீண்டும் ஒரு முறை எனக்கு வாய்த்திருக்கிறது. எனக்குக் கிடைக்கும் கடிதங்களில் இப்போதெல்லாம் இரண்டு விஷயங்கள் மிக அதிகம் காணப்படுகின்றன. முதலாவதாக, சந்திரயான் – 3இன் வெற்றிகரமான தரையிறங்கல்; இரண்டாவதாக, தில்லியில் நடைபெற்ற ஜி20இன் வெற்றிகரமான ஏற்பாடுகள். தேசத்தின் அனைத்து பாகங்களிலிருந்தும், அனைத்துப் பிரிவிடமிருந்தும், அனைத்து வயதினரிடமிருந்தும், எனக்குக் கணக்கில்லாத கடிதங்கள் கிடைத்திருக்கின்றன. சந்திரயான் – 3இன் லேண்டரானது, சந்திரனின் மீது இறங்கும் தருவாயில் இருந்த போது, கோடிக்கணக்கான மக்கள், பல்வேறு வழிகளில், ஒரே நேரத்தில் இந்தச் சம்பவத்தின் ஒவ்வொரு நொடியின் சாட்சிகளாக ஆகிக் கொண்டிருந்தார்கள். இஸ்ரோ அமைப்பின் யூ ட்யூப் நேரடி ஒளிபரப்பில், 80 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வினைக் கண்டார்கள் என்பதே கூட மிகப்பெரிய சாதனை. சந்திரயான் – 3உடன் கோடிக்கணக்கான இந்தியர்களின் ஈடுபாடு எத்தனை ஆழமாக இருந்திருக்கிறது என்பது இதிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்கும். சந்திரயானின் இந்த வெற்றி குறித்து தேசத்தில் இன்றைய காலகட்டத்தில் மிக அருமையான வினா விடைப் போட்டியும் நடைபெற்று வருகிறது; இந்தப் போட்டிக்கு இடப்பட்டிருக்கும் பெயர் – சந்திரயான் – 3 மஹா க்விஸ் ஆகும். மைகவ் தளத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்தப் போட்டியில் இதுவரை 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்து விட்டார்கள். மைகவ்வின் தொடக்கத்திற்குப் பிறகு, இது எந்த ஒரு வினா விடைப் போட்டி என்று எடுத்துக் கொண்டாலும், மிகப்பெரிய பங்கெடுப்பு என்று கொள்ளலாம். நீங்கள் இதுவரை இதில் பங்கெடுக்கவில்லை என்றால், காலம் இன்னும் கடந்து விடவில்லை, இப்போது கூட இதிலே இன்னும் 6 நாட்கள் எஞ்சி இருக்கின்றன. இந்த வினாவிடைப் போட்டியில் நீங்களும் கண்டிப்பாகப் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று உங்களிடத்திலே நான் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்குப் பிரியமான என் குடும்பச் சொந்தங்களே, சந்திரயான் – 3 இன் வெற்றிக்குப் பிறகு ஜி20இனுடைய அருமையான ஏற்பாடுகள், பாரத நாட்டு மக்கள் அனைவருடைய மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டது. பாரத் மண்டபமே கூட ஒரு பிரபலஸ்தர் என்ற வகையில் மாறிப் போனது. மக்கள் அதோடு கூட சுயபுகைப்படம், செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள், பெருமிதத்தோடு அதைத் தரவேற்றம் செய்து கொள்கிறார்கள். பாரதம் இந்த உச்சிமாநாட்டிலே ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பினை ஜி 20இன் முழுமையான உறுப்பினராக ஆக்கி, தலைமைப் பொறுப்புக்குப் பெருமை சேர்த்தது. பாரதம் மிகவும் வளமான தேசமாக இருந்த, அந்தக் காலத்தில், நமது தேசத்திலும் சரி, உலகிலும் சரி, சில்க் ரூட் எனக் கூறப்படும் பட்டுப் பாதை பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது. இந்தப் பட்டுப் பாதையானது, வணிகத்துக்கான மிகப்பெரிய ஊடுபாதையாக இருந்தது. இப்போது நவீன யுகத்திலே, பாரதமானது மேலும் ஒரு பொருளாதார ஊடுபாதையை ஜி 20இலே முன் வைத்தது. அது என்னவென்றால், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார இடைவழியாகும். இந்த இடைவழி, வரவிருக்கும் ஆண்டுகளில் உலக வணிகத்தின் ஆதாரமாக ஆக இருக்கிறது, மேலும், இந்த இடைவழிக்கான வித்திடல் பாரத மண்ணில் விதைக்கப்பட்டது என்பதற்கு வரலாறு சாட்சியாக விளங்கும்.
நண்பர்களே, ஜி20இன் போது எந்த வகையிலே பாரதத்தின் இளையோர் சக்தி, இந்த ஏற்பாடுகளோடு தொடர்புபடுத்திக் கொண்டது என்பது குறித்து விசேஷமாக விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது. ஆண்டு முழுவதும் நாட்டின் பல பல்கலைக்கழகங்களில் ஜி20யோடு தொடர்புடைய பல நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இந்தத் தொடரில், தில்லியில் மேலும் ஒரு விறுவிறுப்பான நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது – ஜி20 யுனிவர்சிட்டி கனக்ட் ப்ரோக்ராம். இந்த நிகழ்ச்சி வாயிலாக நாடெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பரஸ்பரம் இணைவார்கள். இவற்றில் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள் போன்ற பல புகழ்மிக்க நிறுவனங்கள் பங்கெடுக்கும். நீங்கள் கல்லூரி மாணவர் என்றால், செப்டம்பர் 26ஆம் தேதியன்று நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியைக் கண்டிப்பாகக் காணுங்கள், இத்துடன் அவசியம் இணையுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். பாரதத்தின் எதிர்காலம் தொடர்பாக, இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பாக, இதிலே பல சுவாரசியமான விஷயங்கள் இடம்பெற இருக்கின்றன. நானும் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறேன். நானும் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான உரையாடலுக்காகக் காத்திருக்கிறேன்.
என் இனிய குடும்பச் சொந்தங்களே, இன்றிலிருந்து 2 நாட்கள் கழித்து, செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று, ‘உலக சுற்றுலா தினம்’ வரவிருக்கிறது. சுற்றுலா என்பதை இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்ப்பது என்பதாக மட்டும் பார்க்கிறார்கள், ஆனால் சுற்றுலாவின் ஒரு மிகப்பெரிய பக்கம், வேலைவாய்ப்போடு தொடர்புடையது. மிகக் குறைந்த முதலீட்டில், மிக அதிகமான வேலைவாய்ப்பினை ஒரு துறையால் உருவாக்க முடியும் என்றால், அது தான் சுற்றுலாத் துறை. சுற்றுலாத் துறையைப் பெருக்குவதில், எந்த ஒரு தேசத்திற்கும் நல்லிணக்கம், அந்த நாட்டின் மீதான ஈர்ப்பு ஆகியன மிகவும் அவசியமானவை. கடந்த சில ஆண்டுகளில் பாரதத்தின்பால் ஈர்ப்பு மிகவும் அதிகப்பட்டிருக்கிறது, ஜி20யின் வெற்றிகரமான ஏற்பாட்டிற்குப் பிறகு உலக மக்களின் ஆர்வம் பாரதம் மீது மேலும் அதிகமாகி இருக்கிறது.
நண்பர்களே, ஜி20 தொடர்பாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பாரதம் வந்திருந்தார்கள். அவர்கள் இங்கிருக்கும் பன்முகத்தன்மை, பல்வேறு பாரம்பரியங்கள், பலவகையான உணவுகள், நமது மரபுகள் ஆகியவை பற்றித் தெரிந்து கொண்டார்கள். இங்கே வரும் பிரதிநிதிகள், தங்களுடன் கூட ஒரு அற்புதமான அனுபவத்தைக் கொண்டு சென்றார்கள், இதனால் சுற்றுலாவானது மேலும் விரிவாக்கம் அடையும். பாரதத்திடம் ஒன்று மற்றதை விஞ்சும் அளவுக்கு உலக பாரம்பரியச் சின்னங்கள் இருக்கின்றன, இவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. சில நாட்கள் முன்பாகத் தான், சாந்திநிகேதனும், கர்நாடகத்தின் பவித்திரமான ஹொய்சளக் கோயில்கள், உலக பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டது. இந்த அட்டகாசமான சாதனையை முன்னிட்டு, நாட்டுமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2018ஆம் ஆண்டு, சாந்தி நிகேதனைச் சுற்றிப் பார்க்கும் பேறு எனக்குக் கிடைத்தது. குருதேவ் ரவீந்திரநாத் டகோர், சாந்திநிகேதனின் கொள்கை வாக்கியத்தை, ஒரு பண்டைய சம்ஸ்கிருத சுலோகத்திலிருந்து கையாண்டிருக்கிறார். அந்த சுலோகம் –
யத்ர விஸ்வம் பவத்யேக நீடம்
அதாவது, ஒரு சின்னஞ்சிறு கூட்டிற்குள், உலகமனைத்தும் அடங்குதல் என்பதாகும். அதே போல கர்நாடகத்தின் ஹொய்சளக் கோயில்களும் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது, 13ஆம் நூற்றாண்டின் சிறப்பான கட்டிடக்கலைக்காக இது பெயர் பெற்றது. இந்த ஆலயங்களுக்கு, யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிடைத்தல் என்பது ஆலய நிர்மாணம் தொடர்பான பாரத நாட்டுப் பாரம்பரியத்துக்கான கௌரவம் ஆகும். பாரதத்தில் இப்போது உலகப் பாரம்பரியச் சின்னங்கள் என்று பார்த்தால், அவற்றின் எண்ணிக்கை 42 ஆகும். நம்முடைய அதிகபட்ச வரலாற்று மற்றும் கலாச்சார இடங்களுக்கு, உலகப் பாரம்பரிய இடங்கள் என்ற அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே பாரதத்தின் முயற்சியாகும். நீங்கள் எங்காவது சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டீர்கள் என்றால், பாரதத்தின் பன்முகத்தன்மையைச் சென்று காணுங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளுங்கள், மரபுச் சின்னங்களைக் காணுங்கள். இதனால், நம்முடைய தேசத்தின் கௌரவமான வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள முடிவதோடு, அந்தப் பகுதி மக்களின் வருமானத்தைப் பெருக்கவும் ஒரு கருவியாக நீங்கள் ஆவீர்கள்.
எனதருமைக் குடும்ப உறவுகளே, பாரத நாட்டுக் கலாச்சாரம் மற்றும் பாரதநாட்டு இசை என்பன, இப்போது உலக அளவிலானவை ஆகி விட்டன. உலகெங்கிலும் மக்கள் இவற்றால் ஈர்க்கப்பட்டு, இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு அன்பான பெண் வாயிலாக அளிக்கப்படும் ஒரு சின்ன ஒலி அமைவைக் கேளுங்கள்.
இதைக் கேட்டு, உங்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது, இல்லையா!! எத்தனை இனிமையான குரல் பாருங்கள்!! ஒவ்வொரு சொல்லிலும் பாவம் தொனிக்கிறது, இறைவன் மீதான இவருடைய ஈடுபாட்டை நம்மால் அனுபவிக்க முடிகிறது. இந்த மதுரமான குரலுக்குச் சொந்தக்காரப் பெண் ஒரு ஜெர்மானியர் என்றால், நீங்கள் மேலும் கூட ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். இந்தப் பெண்ணின் பெயர், கைஸ்மி. 21 வயதான கைஸ்மி இப்பொது இன்ஸ்டாகிராமில் வியாபித்திருக்கிறார், இதுவரை இவர் பாரதநாடு வந்ததே இல்லை என்றாலும், பாரத நாட்டு சங்கீதம் இவரை ஆட்கொண்டிருக்கிறது. பாரத நாட்டை பார்த்திராத ஒருவருக்கு பாரத நாட்டு இசையின் மீதிருக்கும் ருசி மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. பிறப்பிலிருந்தே பார்வைத்திறன் அற்ற மாற்றுத் திறனாளி கைஸ்மி. ஆனாலும், இந்தக் கடினமான சவாலால் அவரை அசாதாரணமான சாதனைகளைப் படைப்பதிலிருந்து தடுக்க முடியவில்லை. இசை மற்றும் படைப்பாற்றல் தொடர்பான அவருடைய பேரார்வம் எப்படிப்பட்டது என்றால், சிறுவயதிலேயே இவர் பாடுவதைத் தொடங்கி விட்டார். ஆப்பிரிக்க மேளம் வாசித்தலை இவருடைய 3ஆம் வயதிலேயே இவர் தொடங்கி விட்டார். பாரதநாட்டு இசையோடு இவருக்கு அறிமுகம் 5-6 ஆண்டுகள் முன்பாக ஏற்பட்டது. பாரத நாட்டு சங்கீதம் அவரை எந்த அளவுக்கு மோகித்து விட்டது என்றால், இவர் அதிலே முழுமையாக ஆழ்ந்து போய் விட்டார். மிகவும் கருத்தூக்கம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இவர் பாரத நாட்டின் பல மொழிகளில் பாடுவதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். சம்ஸ்கிருதம், ஹிந்தி, மலையாளம், தமிழ், கன்னடம், அஸாமி, பங்காலி, மராட்டி, உருது என இவையனைத்திலும் இவர் பாடல்களைப் பாடியிருக்கிறார். அந்நிய மொழி பேசுவோருக்கு ஓரிரு வரிகளைப் பேசுவது என்றாலே கூட எத்தனை கஷ்டமாக இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்; ஆனால், கைஸ்மியைப் பொறுத்த வரையில் இது ஒரு பொருட்டே அல்ல. உங்கள் அனைவருக்கும் அவர் கன்னட மொழியில் பாடிய ஒரு பாடலை ஒலிக்கச் செய்கிறேன்.
பாரத நாட்டுக் கலாச்சாரம் மற்றும் சங்கீதம் தொடர்பாக ஜெர்மனியின் கைஸ்மியின் இந்தப் பேரார்வத்தை நான் இதயப்பூர்வமாகப் பாராட்டுகிறேன். அவருடைய இந்த முயற்சி, பாரத நாட்டவர் அனைவருக்கும் சிலிர்ப்பை உண்டு பண்ணுவது.
என் இனிமைநிறை குடும்ப உறவுகளே, நம்முடைய தேசத்திலே கல்வி என்பது ஒரு சேவையாகவே பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட உணர்வோடு குழந்தைகளுக்குக் கல்விச் சேவையாற்றும் உத்தராக்கண்டின் சில இளைஞர்களைப் பற்றி எனக்குத் தெரிய வந்தது. நைநிதால் மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், சிறுவர்களுக்காக ஒரு வித்தியாசமான குதிரை நூலகத்தைத் தொடக்கியிருக்கின்றார்கள். இந்த நூலகத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், செல்ல மிகக் கடினமான இடங்களுக்கும் கூட, இதன் வாயிலாக குழந்தைகளுக்குப் புத்தகங்கள் கொண்டு சேர்க்கப்படுகின்றன என்பது மட்டுமல்ல, இந்தச் சேவை இலவசமானதும் கூட. இதுவரை இதன் வாயிலாக நைநிதாலைச் சேர்ந்த 12 கிராமங்கள் இதில் அடக்கம். சிறுவர்களின் கல்வியோடு தொடர்புடைய இந்த நேரிய பணியின் உதவிக்காக, வட்டாரத்து மக்கள் மனமுவந்து முன்வருகிறார்கள். இந்தக் குதிரை நூலகம் வாயிலாக மேற்கொள்ளப்படும் முயற்சி என்னவென்றால், தொலைவான கிராமங்களில் வசிக்கும் பிள்ளைகளுக்கு, பள்ளிக்கூடத்தின் புத்தகங்களைத் தவிர, கவிதைகள், கதைகள் மற்றும் அறநெறிக் கல்வி தொடர்பான புத்தகங்களும் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்பது தான். இந்த வித்தியாசமான நூலகம், சிறுவர்களின் மனதைக் கொள்ளை கொண்டிருக்கிறது.
நண்பர்களே, ஹைதராபாதிலே நூலகத்தோடு தொடர்புடைய இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான முயற்சி பற்றியும் தெரிய வந்தது. இங்கே 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியான ஆகர்ஷணா சதீஷ் ஒரு அற்புதம் நிகழ்த்திக் காட்டியிருக்கிறாள். வெறும் 11 வயதே நிரம்பிய இந்தச் சிறுமி, குழந்தைகளுக்கு ஒன்றிரண்டு அல்ல, ஏழு நூலகங்களை நடத்தி வருகிறாள். தன்னுடைய பெற்றோருடன் புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்ற போது, ஆகர்ஷணாவுக்கு ஈராண்டுகள் முன்பாக உத்வேகம் பிறந்தது. இவருடைய தந்தை நலிந்தோருக்கு உதவும் வகையில் அங்கே சென்றார். சிறுவர்கள் அங்கே அவரிடத்திலே வண்ணம் தீட்டும் புத்தகங்களைக் கோரினார்கள், இந்த விஷயமானது, இந்த இனிமையான சிறுமியின் மனதைத் தொட்டு விட்டது, பல்வேறு வகையான புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தாள். தனது அண்டை அயல்புறங்களில் இருக்கும் வீடுகள், உறவினர்கள், நண்பர்களின் புத்தகங்களைத் திரட்டத் தொடங்கினாள், அதே புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான முதல் நூலகத்தைத் துவக்கினாள் என்ற செய்தி உங்களுக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கலாம். நலிந்த நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு இடங்களில் இந்தச் சிறுமி இதுவரை ஏழு நூலகங்களைத் திறந்திருக்கிறாள், இவற்றில் இப்போது சுமார் 6000 புத்தகங்கள் இருக்கின்றன. சிறுமியான ஆகர்ஷணா எப்படி குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்த்தெடுக்க பெரிய பணியாற்றுகிறாளோ, இது அனைவருக்கும் உத்வேகம் அளிக்க வல்லதாக இருக்கிறது.
நண்பர்களே, இன்றைய உலகம் டிஜிட்டல் தொழில்நுட்பம், மின்னணுப் புத்தகங்களுடையது என்பது உண்மை தான் என்றாலும், புத்தகங்கள் நமது வாழ்க்கையில் என்றுமே ஒரு நல்ல நண்பன் என்ற பங்களிப்பை ஆற்றி வருகின்றன. ஆகையால், புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தினை நாம் குழந்தைகளிடத்திலே ஊக்கப்படுத்த வேண்டும்.
என் நெஞ்சம்நிறை சொந்தங்களே, நமது சாத்திரங்களில் என்ன கூறியிருக்கிறது என்றால் –
ஜீவேஷு கருணா சாபி, மைத்ரீ தேஷு விதீயதாம்.
அதாவது, உயிர்களிடத்தில் கருணையோடு நடக்க வேண்டும், அவற்றை நமது நண்பர்களாகக் கொள்ள வேண்டும். பெரும்பாலான நமது தெய்வங்களின் வாகனங்களே கூட விலங்குகள்-பறவைகள் தாமே!! பலர் கோயில்களுக்குச் செல்கிறார்கள், பகவானை சேவிக்கிறார்கள் என்றாலும், தெய்வங்களின் வாகனங்களின்பால் அவர்களின் கவனம் அதிகம் செல்வதில்லை. இந்த உயிரினங்கள் நமது நம்பிக்கையின் மையத்தில் அவசியம் இருக்க வேண்டும், தேவையான அனைத்து வகைகளிலும் நாம் இவற்றைப் பாதுகாக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், தேசத்தில், சிங்கம், புலி, சிறுத்தை, யானை ஆகியவற்றின் எண்ணிக்கை உற்சாகம் அளிக்கும் வகையில் அதிகரித்திருக்கிறது. மேலும் நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன; இவற்றால் இந்த மண்ணில் வசிக்கின்ற பிற உயிரினங்களும் காக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட ஒரு அலாதியான முயற்சி, ராஜஸ்தானத்தின் புஷ்கரில் செய்யப்பட்டு வருகிறது. இங்கே சுக்தேவ் பட் அவர்களும் அவருடைய குழுவினரும் இணைந்து வன விலங்குகளைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள்; இவர்களுடைய அணியின் பெயர் என்ன தெரியுமா? இவர்களுடைய அணியின் பெயர் கோப்ரா. ஏன் இந்த ஆபத்தான பெயர் என்றால், இவர்களுடைய அணியானது இந்தப் பகுதியின் பயங்கரமான நாகங்களை மீட்கும் பணியையும் புரிகிறது. இந்த அணியில் அதிக எண்ணிக்கையில் மக்கள் இணைந்திருக்கிறார்கள். இவர்களை ஒரு முறை தொலைபேசியில் அழைத்தால் போதும், அழைத்த இடத்திற்குச் சென்று விடுகிறார்கள், தங்கள் குறிக்கோளில் இறங்கி விடுகிறார்கள். சுக்தேவ் அவர்களின் இந்த அணியானது இதுவரை 30,000த்திற்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளின் உயிர்களைக் காப்பாற்றி இருக்கின்றார்கள். இந்த முயற்சி காரணமாக மனிதர்களின் அபாயம் நீங்கிய அதே வேளையில், இயற்கையும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்த அணியானது பிற நோய்வாய்ப்பட்ட உயிரினங்களுக்கும் சேவை புரியும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
நண்பர்களே, தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநரான எம். ராஜேந்திர பிரசாத் அவர்களும் இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 25-30 ஆண்டுகளாகவே புறாக்களுக்குச் சேவை புரிவதில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய வீட்டிலேயே கூட 200க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்க்கிறார். அதே வேளையில் பறவைகளுக்கு உணவு, நீர், ஆரோக்கியம் போன்ற அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறார். இதற்காக கணிசமான பணம் இவருக்குச் செலவாகிறது என்றாலும், தனது சேவையில் இவர் உறுதியாக இருக்கிறார். நண்பர்களே, நேரிய நோக்கம் கொண்ட மக்களின் பணியைக் காணும் போது உண்மையிலேயே மிகவும் நிம்மதி ஏற்படுகிறது, மிகவும் சந்தோஷம் உண்டாகிறது. உங்களிடத்திலும் இப்படிப்பட்ட முயற்சிகள் குறித்த தகவல் இருந்தால் அவற்றைக் கண்டிப்பாகப் பகிருங்கள்.
என் நெஞ்சம்நிறை உறவுகளே, சுதந்திரத்தின் அமுதக்காலம், தேசத்திற்காக அனைத்துக் குடிமக்களின் கடமைக்காலமும் கூட. தங்களுடைய கடமைகளை நிறைவேற்றும் வேளையிலே, நாம் நமது இலக்குகளையும் அடைய முடியும், நமது இலக்குகளைச் சென்று எட்ட முடியும். கடமையுணர்வு என்பது நம்மனைவரையும் ஒரே இழையில் இணைக்கிறது. உத்தர பிரதேசத்தின் சம்பலில், தேசத்தின் கடமையுணர்வின் ஒரு உதாரணம் காணக் கிடைக்கிறது, இதை நான் உங்களிடத்திலே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்களே சிந்தனை செய்து பாருங்கள், 70க்கும் மேற்பட்ட கிராமங்கள், ஆயிரக்கணக்கான மக்கள்தொகை, அனைவரும் இணைந்து ஓர் இலக்கு, ஒரு நோக்கத்தை எட்ட, ஒன்றுபட்டு பணியாற்றுவது என்பது அரிதாகவே பார்க்க முடிவது; ஆனால் சம்பலைச் சேர்ந்தவர்கள் இதைச் செய்து காட்டியிருக்கின்றார்கள். இவர்கள் அனைவருமாக இணைந்து, மக்கள் பங்களிப்பு, சமூக ஒன்றிணைவு ஆகியவற்றின் மிகச் சிறப்பான எடுத்துக்காட்டை நிறுவியிருக்கின்றார்கள். உள்ளபடியே, இந்தப் பகுதியில் பல தசாப்தங்களுக்கு முன்பாக, சோத் என்ற பெயருடைய ஒரு நதி இருந்து வந்தது. அம்ரோஹாவில் தொடங்கி சம்பல் வழியாகப் பயணித்து, பதாயூன் வரை பெருகியோடும் நதியானது, ஒரு காலத்தில் இந்தப் பகுதியின் உயிரூட்டியாக அறியப்பட்டது. இந்த நதியில் நீர் இடைவிடாமல் பெருகியோடிக் கொண்டிருந்தது, இது இங்கிருக்கும் உழவர்களின் வயல்களின் முக்கியமான ஆதாரமாக விளங்கியது. காலப்போக்கில் நதியின் பிரவாகம் குறைந்தது, நதியோடிய வழியிலே ஆக்ரமிப்புகள் ஏற்பட்டு, இந்த நதி காணாமலே போனது. நதிகளைத் தாய் எனவே அழைக்கும் நமது தேசத்திலே, சம்பலின் மக்கள் இந்த சோத் நதியையும் மீள் உயிர்ப்பிக்கும் சங்கல்பத்தை மேற்கொண்டார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சோத் நதிக்கு மீள் உயிர்ப்பளிக்கும் பணியை, 70க்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துக்கள் இணைந்து தொடங்கின. கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள், அரசுத் துறைகளையும் தங்களோடு இணைத்துக் கொண்டார்கள். ஆண்டின் முதல் 6 மாதங்களிலேயே, இந்த மக்கள் நதியின் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான பாதையை புனருத்தாரணம் செய்து விட்டார்கள் என்பது உங்களுக்குப் பேருவகையை அளிக்கும். மழைக்காலம் தொடங்கிய போது, இந்தப் பகுதி மக்களின் உழைப்பு பலனை அளித்தது, சோத் நதியில் நீர் நிரம்பி விட்டது. இந்தப் பகுதிவாழ் உழவர்களுக்கு இது மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக ஆகியது. நதிக்கரைகளில் 10,000த்திற்கும் மேற்பட்ட மரங்களை மக்கள் நட்டார்கள்; இதனால் இதன் கரையோரங்கள் முழுமையாகப் பாதுகாப்பாக இருக்கும். நதிநீரிலே, 30,000க்கும் மேற்பட்ட காம்பூசியா மீன்கள் எனும் கொசு மீன்களை விட்டார்கள், இவை கொசுக்களின் பரவலாக்கத்தைத் தடுக்கும். நண்பர்களே, சோத் நதியின் எடுத்துக்காட்டு நமக்கெல்லாம் என்ன கூறுகிறது என்றால், நாம் ஒருமுறை உறுதி செய்து விட்டால், மிகப்பெரிய சவால்களையும் நம்மால் கடக்க முடியும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதைத் தான். நீங்களும் கடமைப்பாதையில் பயணித்து, உங்கள் அருகிலே, இப்படிப்பட்ட மாற்றங்கள் பலவற்றின் ஊடகமாக மாறமுடியும்.
எனக்குப் பிரியமான சொந்தங்களே, நோக்கம் அசைக்கமுடியாததாக இருக்குமேயானால், கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஈடுபாடு இருந்தால், எந்த ஒரு வேலையும் கடினமாகவே இராது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சகுந்தலா சர்தார் அவ்ர்கள் இந்த விஷயம் மிகவும் சரியானது என்று நிரூபித்திருக்கிறார்கள். இன்று இவர் பிற பெண்கள் பலருக்கு உத்வேகமாக மாறியிருக்கிறார்கள். சகுந்தலா அவர்கள் ஜங்கல்மஹலின் ஷாத்நாலா கிராமத்தில் வசிப்பவர். நீண்ட காலம் வரை இவருடைய குடும்பத்தினர், தினக்கூலிகளாக வாழ்க்கை நடத்தி வந்தார்கள். இவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியே சென்று வருதல் கூட மிகவும் சிரமமானதாகவே இருந்தது. இதற்காக இவர் ஒரு புதிய பாதையில் பயணிக்கத் தீர்மானம் மேற்கொண்டார், வெற்றி பெற்றார், அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அப்படி என்ன அற்புதம் நிகழ்த்தி விட்டார் இவர் என்று அறிய ஆவலாக இருப்பீர்கள் இல்லையா!! இதற்கான பதில் ஒரு தையல் இயந்திரத்தில் அடங்கி இருக்கிறது. ஒரு தையல் இயந்திரத்தின் வாயிலாக இவருடைய திறமையானது ஒட்டுமொத்த குடும்பத்தினரின் வாழ்க்கையையும் மாற்றியமைத்துவிட்டது. ஒரு தையல் இயந்திரத்தின் வாயிலாக, இவர் சால் மரம் அதாவது குங்கிலிய மரத்தின் இலைகளின் மீது அழகான வடிவங்களை உருவாக்கத் தொடங்கினார். இவருடைய இந்தத் திறமையானது, குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இவரால் உருவாக்கப்படும் இந்த அற்புதமான கைவினைப்பொருளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. சகுந்தலா அவர்களின் இந்தத் திறன், இவருக்கு மட்டுமல்ல, குங்கிலிய இலைகளைத் திரட்டும் பலருடைய வாழ்க்கையையும் மாற்றியது. இப்போது, இவர், பல பெண்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். தினக்கூலியைச் சார்ந்து வாழ்ந்து வந்த ஒரு குடும்பம், இப்போது பிறருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் அளவுக்கு உத்வேக காரணியாக இருக்கிறது என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? தினக்கூலி வேலையைச் சார்ந்து வாழ்ந்த தன் குடும்பத்தாரை, அவர்கள் கால்களிலேயே நிற்க வைத்திருக்கிறார் இவர். இதன் காரணமாக இவருடைய குடும்பத்தார், பிற பணிகளில் கவனம் செலுத்தத் தேவையான வாய்ப்பு அமைந்திருக்கிறது. மேலும் ஒரு விஷயமும் நடந்தது. சகுந்தலா அவர்களின் நிலைமை சீரடைந்தவுடன், இவர் சேமிக்கவும் தொடங்கி விட்டார். இப்போது இவர் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டார், இதனால் இவருடைய குழந்தைகளின் எதிர்காலமும் பிரகாசமானதாக ஆகும். சகுந்தலா அவர்களின் பேரார்வம் குறித்து அவரை எத்தனை பாராட்டினாலும் தகும். பாரத நாட்டவரிடம் இப்படிப்பட்ட திறமைகள்-திறன்கள் நிறைந்து காணப்படுகிறது – நீங்கள் அவர்களுக்குச் சந்தர்ப்பம் மட்டும் தாருங்கள், கண் சிமிட்டும் நேரத்திற்குள்ளாக என்னவெல்லாம் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார்கள் தெரியுமா!!
எனதருமைச் சொந்தங்களே, தில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது காணப்பட்ட காட்சிகளை யாரால் மறக்க முடியும்? உலகத் தலைவர்கள் பலர், அண்ணலுக்குச் சிரத்தையுடன் கூடிய அஞ்சலியைச் செலுத்த ராஜ்காட்டிற்கு வந்தார்கள். உலகெங்கும் இருப்போர் மனங்களில் அண்ணலின் கருத்துக்கள் எத்தனை மதிப்புடையதாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. காந்தி ஜயந்தி தொடர்பாக நாடு முழுவதிலும் தூய்மையோடு தொடர்புடைய பல நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களிலும் தூய்மையே சேவை இயக்கமானது, அதிக வேகம் பிடித்திருக்கிறது. Indian Swachhata Leagueலும் கூட, நிறைய பங்களிப்பை என்னால் காண முடிகிறது. இன்று மனதின் குரல் வாயிலாக, நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், அக்டோபர் மாதம் 1ஆம் தேதி, அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, தூய்மை தொடர்பாக ஒரு பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. நீங்களும் நேரம் ஒதுக்கி, தூய்மையோடு தொடர்புடைய இயக்கத்தில் உங்கள் பங்களிப்பை அளியுங்கள். நீங்கள் உங்கள் தெருவிலே, அக்கம்பக்கத்திலே, பூங்காவிலே, நதியிலே, குளத்திலே அல்லது ஏதோவொரு பொதுவிடத்திலே, இந்தத் தூய்மை இயக்கத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்; எங்கெல்லாம் அமுத நீர்நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறதோ, அங்கே கண்டிப்பாகத் தூய்மைப்பணியை மேற்கொண்டாக வேண்டும். தூய்மையின் இந்த கார்யாஞ்சலி தான் காந்தியடிகளுக்கு நாமளிக்கக் கூடிய மெய்யான நினைவாஞ்சலியாகும். காந்தியடிகளின் பிறந்த நாள் என்ற சந்தர்ப்பத்திலே, நாம் கதரின் ஏதாவது ஒரு பொருளைக் கண்டிப்பாக வாங்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.
எனதருமைக் குடும்பத்தாரே, நமது தேசத்திலே பண்டிகைக்காலம் தொடங்கி விட்டது. உங்கள் அனைவரின் வீடுகளிலும் புதிதாக ஏதாவது வாங்கும் திட்டம் தீட்டியிருப்பீர்கள். சிலர் நவராத்திரிக்காலத்தில், தங்கள் புதிய பணியைத் தொடங்கலாம் என்று காத்திருக்கலாம். உற்சாகம், உல்லாசம் நிரம்பிய சூழலில் நீங்கள் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை அவசியம் நினைவில் நிறுத்திச் செயலாற்றுங்கள். நீங்கள், பாரதத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துங்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கே உங்கள் ஆதரவு அமைய வேண்டும். உங்களின் சிறிய சந்தோஷமானது, வேறு ஒருவருடைய குடும்பத்துக்கு மிகப்பெரிய சந்தோஷ காரணியாக ஆகலாம். நீங்கள் பாரத நாட்டுப் பொருட்களை வாங்கும் போது இதன் நேரடி தாக்கமும் ஆதாயமும், நமது உழைப்பாளர்கள், நமது கைவினைஞர்கள், கலைஞர்கள், பிற விச்வகர்மா சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் தொடக்கநிலைத் தொழில்களான பல ஸ்டார்ட் அப்புகளும் கூட உள்ளூர்ப் பொருட்களுக்கு ஊக்கமளித்து வருகின்றன. நீங்கள் உள்ளூர் பொருட்களை வாங்கினால், ஸ்டார்ட் அப்புகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் ஆதாயம் உண்டாகும்.
என் குடும்பத்தின் கனிவான சொந்தங்களே, மனதின் குரலில் இம்மட்டே. அடுத்த முறை உங்களோடு மனதின் குரலில் நாம் கலக்கும் போது, நவராத்திரியும், தசராவும் கடந்து சென்றிருக்கும். திருவிழாக்களின் காலத்தில் நீங்களும் நிறைவான உற்சாகத்தோடு அனைத்து விழாக்களையும் கொண்டாடுங்கள், உங்களுடைய குடும்பத்தார் அனைவரும் சந்தோஷமாக இருக்கட்டும், இதுவே என்னுடைய வேண்டுதல். இந்த அனைத்துப் பண்டிகைகளுக்கும் என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள். மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன், மேலும் புதிய விஷயங்களைக் கொண்டு வருகிறேன், நாட்டுமக்களின் வெற்றிகளோடு நான் வருவேன். நீங்களும், உங்களுடைய தகவல்களை-செய்திகளை எனக்கு அவசியம் அனுப்பி வையுங்கள், உங்கள் அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள், நான் காத்துக் கொண்டிருப்பேன். பலப்பல நன்றிகள், வணக்கம்.
Deep attachment of crores of Indians to Chandrayaan-3. #MannKiBaat pic.twitter.com/SOvynVo9Kq
— PMO India (@PMOIndia) September 24, 2023
India showcased its leadership by making the African Union a full member of G20 bloc.
— PMO India (@PMOIndia) September 24, 2023
The India-Middle East-Europe Economic Corridor proposed during the Summit is also set to become a cornerstone of global trade for times to come. #MannKiBaat pic.twitter.com/4pvCJW8g0l
Matter of immense pride that Santiniketan associated with Gurudev Rabindranath Tagore and the Hoysala Temples of Karnataka have been declared world heritage sites. #MannKiBaat pic.twitter.com/d3lv32rqia
— PMO India (@PMOIndia) September 24, 2023
21-year-old Kasmi is quite popular these days. A resident of Germany, she has never been to India, but her passion for Indian culture and music is praiseworthy. #MannKiBaat pic.twitter.com/RCJZw2rHpj
— PMO India (@PMOIndia) September 24, 2023
Youth in Nainital district have started a unique ‘Ghoda Library’ for children.
— PMO India (@PMOIndia) September 24, 2023
Books are reaching children even in the most remote areas and not only this, the service is absolutely free. #MannKiBaat pic.twitter.com/2SvBII0vb4
11-year-old Akarshana from Hyderabad manages seven libraries for children. The way she is contributing towards shaping the future of children, is inspiring. #MannKiBaat pic.twitter.com/4lLd4IJbqV
— PMO India (@PMOIndia) September 24, 2023
Various individuals and groups, like Sukhdev Ji's Team Cobra in Rajasthan and auto driver M. Rajendra Prasad Ji in Chennai, are making inspiring efforts towards rescuing and caring for animals, including snakes and pigeons. #MannKiBaat pic.twitter.com/CpDsqwtwz3
— PMO India (@PMOIndia) September 24, 2023
'Azadi Ka Amrit Kaal' is also 'Kartavya Kaal' for every citizen of the country. #MannKiBaat pic.twitter.com/eIV4k7Yg0u
— PMO India (@PMOIndia) September 24, 2023
UP’s Sambhal district exemplifies Janbhagidari. 70 villages united revive Sot River. #MannKiBaat pic.twitter.com/WmsaxCSJzY
— PMO India (@PMOIndia) September 24, 2023
West Bengal's Shakuntala Ji's skill transformed the life of her entire family. She started making beautiful designs on 'Sal' leaves. Now, she is also working on imparting training to many women. #MannKiBaat pic.twitter.com/r5iu9OCknL
— PMO India (@PMOIndia) September 24, 2023
Bapu's ideals reverberate globally. #MannKiBaat pic.twitter.com/AUT4SpHP0h
— PMO India (@PMOIndia) September 24, 2023