சாலை, ரயில்வே மற்றும் உயர்கல்வித் துறை தவிர, இயற்கை எரிவாயு, நிலக்கரி, மின் உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய எரிசக்தித் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் ரூ.68,000 கோடிக்கும் அதிகமான திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் ஐஐஎம் சம்பல்பூர் நிறுவனத்தின் மாதிரி மற்றும் புகைப்பட கண்காட்சியையும் திரு மோடி பார்வையிட்டார்.
நிகழ்வில் திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கல்வி, ரயில்வே, சாலைகள், மின்சாரம் மற்றும் பெட்ரோலியம் ஆகிய துறைகளில் சுமார் ரூ.70,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளதால், ஒடிசாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு குறிப்பிடத்தக்க தருணம் என்று கூறினார்.
ஒடிசாவின் ஏழைப் பிரிவைச் சேர்ந்த மக்கள், தொழிலாளர்கள், ஊழியர் சமூகத்தினர் , வணிக உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் இன்றைய வளர்ச்சித் திட்டங்களின் பலன்களை அறுவடை செய்வார்கள் என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். இது ஒடிசா இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
முன்னாள் துணைப் பிரதமர் திரு. லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவின் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மற்றும் பல தசாப்த கால நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் திரு. அத்வானியின் இணையற்ற பங்களிப்புகளையும், பல தசாப்த கால அனுபவத்தையும் பிரதமர் மோடி பாராட்டினார்.
"அத்வானிக்கு பாரத ரத்னாவை வழங்கி கௌரவிப்பதன் மூலம் , நாட்டின் சேவைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை இந்த தேசம் ஒருபோதும் மறக்காது" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். திரு. எல். கே. அத்வானி தன் மீது காட்டிய அன்பு, வாழ்த்து மற்றும் வழிகாட்டுதலுக்காக அவரது நல்வாய்ப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அனைத்து மக்கள் சார்பிலும் அவரை வாழ்த்துவதுடன் அவரது நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்தார்.
ஒடிசாவை கல்வி மற்றும் திறன் மேம்பாட்டின் மையமாக மாற்ற மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் ஐ.ஐ.எஸ்.இ.ஆர் பெர்ஹாம்பூர் மற்றும் புவனேஸ்வரின் வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற நவீன கல்வி நிறுவனங்களை அமைத்ததன் மூலம் ஒடிசாவின் இளைஞர்களின் தலைவிதி மாறியுள்ளது.
இப்போது, ஐ.ஐ.எம் சம்பல்பூர் ஒரு நவீன மேலாண்மை நிறுவனமாக நிறுவப்பட்டதன் மூலம், மாநிலத்தின் பங்கு மேலும் வலுப்படுத்தப்படுகிறது. தொற்றுநோய் காலகட்டத்தின் போது ஐஐஎம் (இந்திய மேலாண்மை நிறுவனம்) -க்கு அடிக்கல் நாட்டியதை நினைவு கூர்ந்த பிரதமர், அனைத்து தடைகளுக்கு மத்தியில் அதை நிறைவு செய்தவர்களை பாராட்டினார்.
"அனைத்து மாநிலங்களும் வளர்ச்சியடைந்தால் மட்டுமே வளரச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார், ஒவ்வொரு துறையிலும் ஒடிசாவுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், ஒடிசாவின் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தின் ரயில்வே பட்ஜெட் 12 மடங்கிற்கும் மேலாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ஒடிசாவின் கிராமப்புறங்களில் 50,000 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 4,000 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மூன்று தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை இன்று தொடங்கி வைத்ததைக் குறிப்பிட்ட பிரதமர், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் இடையேயான மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பு பயண தூரத்தைக் குறைக்கும் என்று தெரிவித்தார்.
சுரங்கம், மின்சாரம் மற்றும் எஃகு தொழில்களில் இந்த பிராந்தியம் அதன் திறனுக்கு பெயர் பெற்றது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, புதிய இணைப்பு முழு பிராந்தியத்திலும் புதிய தொழில்களுக்கான சாத்தியங்களை உருவாக்கும் என்றும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறினார்.
சம்பல்பூர் – தால்ச்சர் ரயில் பிரிவை இரட்டை ரயில்பாதையாக மாற்றுவது மற்றும் ஜார்பா – தர்பா முதல் சோன்பூர் பிரிவு வரையிலான புதிய ரயில் பாதை தொடங்கி வைக்கப்பட்டது குறித்தும் அவர் பேசினார்.
பூரி-சோன்பூர் எக்ஸ்பிரஸ் மூலம் சுபர்ணாபூர் மாவட்டம் இணைக்கப்படும், இதனால் பக்தர்கள் ஜெகந்நாதரை எளிதாக தரிசிப்பார்கள்" என்று அவர் கூறினார். இன்று தொடங்கி வைக்கப்பட்ட சூப்பர் கிரிட்டிகல் மற்றும் அல்ட்ரா கிரிட்டிகல் அனல் மின் நிலையங்கள் ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் போதுமான மற்றும் குறைந்த விலையில் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யும் என்று திரு மோடி கூறினார்.
"கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு உருவாக்கிய கொள்கைகளால் ஒடிசா பெரிதும் பயனடைந்துள்ளது" என்று கூறிய பிரதமர், சுரங்கக் கொள்கையில் மாற்றம் மேற்கொண்ட பிறகு ஒடிசாவின் வருமானம் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார். கனிம உற்பத்தியின் பலன்கள் சுரங்கம் தோண்டப்பட்ட பகுதிகள் மற்றும் மாநிலங்களுக்கு கிடைக்காத முந்தைய கொள்கையை சுட்டிக்காட்டிய பிரதமர், மாவட்ட கனிம அறக்கட்டளையை உருவாக்கியதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாகவும், சுரங்கத்தின் மூலம் பெறப்படும் வருமானத்திலிருந்து அதே பகுதியின் வளர்ச்சிக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். .
"ஒடிசா இதுவரை ரூ .25,000 கோடிக்கு மேல் அதிக நிதி உதவியை பெற்றுள்ளது, மேலும் அந்த நிதி உதவி சுரங்கம் நடைபெறும் பகுதியில் உள்ள மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது" என்று உரையை நிறைவு செய்த பிரதமர், ஒடிசா மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அதே அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து பாடுபடும் என்று அம்மாநில மக்களுக்கு உறுதியளித்தார்.
ஒடிசா ஆளுநர் திரு. ரகுபர் தாஸ், ஒடிசா முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக், மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, ஒடிசாவின் சம்பல்பூரில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர், திட்டங்களை தொடங்கி வைத்து, தேசத்திற்கு அர்ப்பணித்தார். எரிசக்தித் துறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
'ஜகதீஷ்பூர் – ஹால்டியா மற்றும் பொக்காரோ – தாம்ரா குழாய்ப்பாதைத் திட்டத்தில் தாம்ரா– அங்குல் குழாய்ப் பிரிவை (412 கிலோமீட்டர்)யும், 'பிரதமரின் கங்கா ஆற்றல்' திட்டத்தின் கீழ் ரூ.2450 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட ஒடிசாவை தேசிய எரிவாயு தொகுப்புடன் இணைக்கும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். மும்பை – நாக்பூர் – ஜார்ஜுகுடா குழாய் திட்டத்தின் 'நாக்பூர் ஜார்ஜுகுடா இயற்கை எரிவாயு குழாய் பிரிவுக்கும் (692 கிலோமீட்டர்) பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூ.2660 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்படும் இந்தத் திட்டம், ஒடிசா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கு இயற்கை எரிவாயு கிடைப்பதை மேம்படுத்தும்.
இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, சுமார் 28,980 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்களில் ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் என்டிபிசி தர்லிபாலி சூப்பர் அனல் மின் நிலையம் மற்றும் என்எஸ்பிசிஎல் ரூர்கேலா பிபி-II விரிவாக்கத் திட்டம் ஆகியவை அடங்கும். ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் என்டிபிசி தால்ச்சர் அனல் மின் திட்டத்தின் நிலை-3 திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த மின் திட்டங்கள் ஒடிசா மற்றும் பல மாநிலங்களுக்கு குறைந்த விலை மின்சாரத்தை வழங்கும்.
27,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் தாளபிரா அனல் மின் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தற்சார்பு இந்தியா குறித்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும் வகையில், இந்த அதிநவீன திட்டம் நம்பகமான, மலிவான மற்றும் 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்கி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பில் முக்கிய பங்கு வகிக்கும்.
மகாநதி நிலக்கரி வயல்கள் நிறுவனத்தின் நிலக்கரி உள்கட்டமைப்புத் திட்டங்களான புவனேஸ்வரின் (முதல் கட்டம்), அங்குல் மாவட்டத்தில் உள்ள தால்ச்சர் நிலக்கரி வயல்களில் (முதல் கட்டம்) மற்றும் லஜ்குரா விரைவு சரக்கு ஏற்றும் அமைப்பு உள்ளிட்ட திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். சுமார் 2145 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள் ஒடிசாவிலிருந்து உலர் எரிபொருளின் தரம் மற்றும் விநியோகத்தை மேம்படுத்தும். ஒடிசா மாநிலம் ஜார்ஜுகுடா மாவட்டத்தில் ரூ.550 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ள இப் பள்ளத்தாக்கு சலவை நிலையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். நிலக்கரி பதப்படுத்துதலில் தரமான மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், புதுமை மற்றும் நிலைத்தன்மையை குறிக்கும் வகையில் இது அமையும். ரூ. 878 கோடி முதலீட்டில் மகாநதி நிலக்கரி நிறுவனம் நிறுவனத்தால் கட்டப்பட்ட ஜார்ஜுகுடா – பார்பாலி – சர்டேகா ரயில் பாதை முதல் கட்டத்தின் 50 கிலோமீட்டர் நீளமுள்ள இரண்டாவது பாதையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சுமார் ரூ.2110 கோடி ஒட்டுமொத்த செலவில் மேம்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் மூன்று சாலை மேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். தேசிய நெடுஞ்சாலை எண் 520-ல் ரிமுளி-கொய்டா பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல், தேசிய நெடுஞ்சாலை எண் 23-ல் (புதிய தேசிய நெடுஞ்சாலை எண் 143) பிராமித்ராபூர்-பிராமணி புறவழிச்சாலை பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல் (புதிய தேசிய நெடுஞ்சாலை எண் 143) ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். இந்தத் திட்டங்கள், சாலைகள் இடையே இணைப்பை மேம்படுத்துவதோடு, அந்தந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.
மேலும், சுமார் ரூ.2146 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார்.. சைலஸ்ரீ அரண்மனை வடிவிலான சம்பல்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.. சம்பல்பூர் – தால்செர் இரட்டை ரயில் பாதை (168 கிலோமீட்டர்) மற்றும் ஜார்தார்பா – சோன்பூர் புதிய ரயில் பாதை (21.7 கிலோமீட்டர்) ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது இந்தப் பிராந்தியத்தில் ரயில் கட்டமைப்புத் திறனை மேம்படுத்துகிறது. பூரி-சோனேபூர்-பூரி வாராந்திர விரைவு ரயிலையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்்.
சம்பல்பூர் இந்திய மேலாண்மைக் கழகத்தின் நிரந்தர வளாகத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். மேலும், ஜார்ஜுகுடா தலைமை அஞ்சலக பாரம்பரிய கட்டிடத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
आज देश ने अपने एक महान सपूत, पूर्व उप-प्रधानमंत्री लालकृष्ण आडवाणी जी को भारत रत्न देने का भी निर्णय लिया है: PM @narendramodi pic.twitter.com/1YjHcWYJav
— PMO India (@PMOIndia) February 3, 2024
हमने ओडिशा को शिक्षा का, कौशल विकास का एक महत्वपूर्ण केंद्र बनाने के लिए निरंतर प्रयास किए हैं: PM @narendramodi pic.twitter.com/foAmT5qDeq
— PMO India (@PMOIndia) February 3, 2024
विकसित भारत के लक्ष्य को हम तभी प्राप्त कर सकते हैं, जब भारत का हर राज्य विकसित बने: PM @narendramodi pic.twitter.com/5euHFdGZZx
— PMO India (@PMOIndia) February 3, 2024