


விமானப் பயணத்தை பாதுகாப்பானதாகவும் குறைந்த செலவிலும், அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையிலும் மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள மகாராஜா அக்ரசென் விமான நிலையத்தில் ரூ. 410 கோடி மதிப்பிலான புதிய முனைய கட்டிடத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஹரியானா மாநில மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். ஹரியானா மாநில மக்கள் வலிமை, விளையாட்டுத் திறன், சகோதரத்துவம் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளனர் என்றும் கூறினார். இந்த பரபரப்பான அறுவடை காலத்தில் திரளான மக்கள் தனக்கு ஆசி வழங்கியுள்ளதற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
குரு ஜம்பேஷ்வர், மகாராஜா அக்ரசென் மற்றும் புனித அக்ரோஹா தாம் ஆகியோருக்கும் பிரதமர் மரியாதை செலுத்தினார். ஹரியானா மாநிலத்தில், குறிப்பாக ஹிசார் விமான நிலையம் குறித்த தனது இனிமையான நினைவுகளை அப்போது அவர் பகிர்ந்து கொண்டார். பிஜேபி கட்சியால் மாநிலத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டபோது பல்வேறு சகாக்களுடன் நெருக்கமாக பணியாற்றிய தருணங்களை அவர் நினைவு கூர்ந்தார். ஹரியானாவில் அக்கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதில் பலதரப்பட்ட குழுக்களின் அர்ப்பணிப்பு மிக்க பணி மற்றும் முயற்சிகளை அவர் விரிவாக எடுத்துரைத்தார். வளர்ச்சியடைந்த ஹரியானா, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய தனது கட்சியின் உறுதியான செயல்பாடுகள் குறித்து பெருமிதம் தெரிவித்த பிரதமர், இந்த இலக்கை நோக்கி மிகுந்த அக்கறையுடன் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
"அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த தினமான இன்றைய நாள், ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள்" என்று கூறிய திரு நரேந்திர மோடி, பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை, போராட்டங்கள், போதனைகள் ஆகியவை மத்திய அரசின் 11 ஆண்டுகாலப் பயணத்தின் அடித்தளமாக அமைந்துள்ளன என்று குறிப்பிட்டார். மத்திய அரசின் ஒவ்வொரு முடிவும், கொள்கையும், செயல்பாடுகளும் பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். ஏழைகள், விளிம்புநிலை மக்கள், நலிவடைந்த பிரிவினர், பழங்குடியினர், பெண்கள் போன்ற அடித்தட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றவும், அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தவும் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த இலக்குகளை அடைவதற்கு, வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே அரசின் தாரக மந்திரமாக உள்ளது என்று அவர் கூறினார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புனித பூமிக்கும், பகவான் ஸ்ரீ ராமர் நகருக்கும் இடையே நேரடிப் போக்குவரத்துத் தொடர்பை ஏற்படுத்தும் வகையில், ஹரியானா மாநிலம், அயோத்தி தாமுடன் இணைக்கும் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய பிரதமர், மற்ற நகரங்களுக்கும் விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்தார். ஹிசார் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்திற்கு அப்போது அவர் அடிக்கல் நாட்டினார். ஹரியானா மாநில மக்களின் விருப்பங்களை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை இது என்று விவரித்தார். இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளதற்காக ஹரியானா மாநில மக்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
சிலிப்பர் காலணி அணிந்தவர்கள் கூட விமானத்தில் பயணிக்க முடியும் என்ற தொலைநோக்குப் பார்வை, நாடு முழுவதும் தற்போது நனவாகி வருவதாகத் தெரிவித்த பிரதமர், தாம் அளித்த வாக்குறுதியை மீண்டும் நினைவுகூர்ந்தார். கடந்த 10 ஆண்டுகளில், லட்சக்கணக்கான மக்கள் முதன்முறையாக விமானப் பயணத்தை அனுபவித்துள்ளனர் என்றார். முன்பு முறையான ரயில் நிலையங்கள் இல்லாத பகுதிகளில் கூட புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 2014 - ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன என்றும், இந்த எண்ணிக்கை 70 ஆண்டுகளில் எட்டப்பட்டதாகவும், ஆனால் இன்று விமான நிலையங்களின் எண்ணிக்கை 150- ஐக் கடந்துள்ளன என்றும் தெரிவித்தார். உடான் திட்டத்தின் கீழ் சுமார் 90 விமான நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்றும், 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் செயல்பாட்டில் உள்ளன என்றும், இது பலருக்கு குறைந்த செலவில் விமானப் பயணத்தை சாத்தியமாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். இது ஆண்டுதோறும் விமானப் பயணிகளின் எண்ணிக்கையில் சாதனைகளைப் படைக்க வழிவகுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். விமான சேவைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் 2,000 புதிய விமானங்களுக்கு கொள்முதல் ஆணைகளை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இது விமானிகள், விமானப் பணிப்பெண்கள் மற்றும் விமானப் போக்குவரத்தின் பிற சேவைகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் என்று அவர் மேலும் எடுத்துரைத்தார். விமானப் பராமரிப்பு துறை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். "ஹிசார் விமான நிலையம் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களின் விருப்பங்களை அதிகரிக்கச் செய்வதுடன், அவர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் கனவுகளையும் வழங்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
பாபாசாஹேப் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலும், ஏழைகளின் நலன் மற்றும் சமூக நீதியை உறுதி செய்யும் அதே வேளையில், போக்குவரத்து வசதிகளுக்கான இணைப்பிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார். பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி நடத்திய விதத்தை விமர்சித்த அவர், அம்பேத்கர் உயிருடன் இருந்தபோது, அவர்கள் அவரை அவமதித்தனர் என்றும், இரண்டு முறை அவரைத் தேர்தலில் தோற்கடிக்கச் செய்தனர் என்றும் குறை கூறினார். பாபாசாகேப் அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு, அவரது பாரம்பரியத்தை அழிக்கவும், அவரது சிந்தனைகளை ஒடுக்கவும் அக்கட்சி முயன்றது என்று அவர் குறிப்பிட்டார். டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக இருந்தார் என்றும் அவர் எடுத்துரைத்தார். டாக்டர் அம்பேத்கர் சமூகத்தில் சமத்துவம் ஏற்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தபோது, காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
பாபாசாகேப் அம்பேத்கர் தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்றும், ஒவ்வொரு ஏழை, விளிம்பு நிலையில் உள்ள தனிநபரும் கண்ணியமான வாழ்க்கையை அமைத்து, அவர்களது கனவுகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றவதற்கு வழிவகுத்தவர் என்று திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். ஷெட்யூல்ட் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை தனது நீண்ட பதவிக்காலத்தில் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தியதாக முந்தைய அரசுகளை அவர் விமர்சித்தார். காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை அவர் விரிவாக எடுத்துரைத்தார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும், கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் 16% வீடுகளுக்கு மட்டுமே குழாய்வழிக் குடிநீர் இணைப்புகள் இருந்ததாக அவர் தெரிவித்தார். இது ஷெட்யூல்ட் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை விகிதாச்சாரமின்றி பாதிப்படையச் செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். கடந்த 6-7 ஆண்டுகளில், தற்போதைய மத்திய அரசு 12 கோடிக்கும் கூடுதலான கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதன் மூலம் 80% கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். பாபாசாகேப் அம்பேத்கரின் ஆசியுடன், குழாய் மூலம் தூய்மையான குடிநீர் ஒவ்வொரு வீட்டையும் சென்றடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கழிப்பறைகள் இல்லாதது ஷெட்யூல்ட் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை கடுமையாக பாதித்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகளைக் கட்டுவதில் மத்திய அரசின் சீரிய முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மக்களின் கண்ணியமான வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஷெட்யூல்ட் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் குறிப்பிடத்தக்க தடைகளை எதிர்கொண்ட முந்தைய ஆட்சி குறித்து விமர்சித்த பிரதமர், வங்கி சேவைகள் அவர்களுக்கு ஒரு கனவாக இருந்தது என்றும், காப்பீடு, கடன் வசதிகள் மற்றும் நிதி உதவி ஆகியவை அவர்களுக்கு கனவுகளாகவே இருந்தன என்றும் கூறினார். பிஜேபி தலைமையிலான மத்திய அரசின் கீழ், ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு ஷெட்யூல்ட் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மிகப்பெரிய அளவில் பயனடைந்துள்ளதை அவர் எடுத்துரைத்தார். இன்று இந்த சமூகங்களைச் சேர்ந்த மக்கள் நம்பிக்கையுடன் தங்களது ரூபே அட்டைகளை பயன்படுத்துபவர்களாக உள்ளனர் என்று கூறினார். இது அவர்களின் நிதிசார் உள்ளடக்கம், அதிகாரமளித்தல் ஆகியவற்றின் அடையாளமாக உள்ளது என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
புனிதமான அரசியலமைப்புச் சட்டத்தை, அதிகாரத்தைப் பெறுவதற்கான கருவியாக காங்கிரஸ் கட்சி மாற்றிவிட்டதாக திரு மோடி குற்றம் சாட்டினார். அதிகார நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம், அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை நசுக்கும் செயல்களில் ஈடுபட்டனர் என்று அவர் குறிப்பிட்டார். நெருக்கடி நிலை காலகட்டத்தில் அப்போதைய அரசு ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல் சாசனச் சட்டத்தின் மாண்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதை அவர் எடுத்துரைத்தார். அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை உறுதி செய்வதே அரசியலமைப்பின் சாராம்சம் என்பதை அவர் வலியுறுத்தினார். அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் வகையில் பொதுச் சிவில் சட்டம் இருந்த போதிலும் உத்தராகண்ட் மாநிலத்தில் அப்போதைய அரசு அதை ஒருபோதும் செயல்படுத்த முன்வரவில்லை என்பதை சுட்டிக் காட்டினார். ஷெட்யூல்ட் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனம் வகை செய்துள்ளது என்றும், ஆனால் காங்கிரஸ் அதனை முறையாக செயல்படுத்தவில்லை என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார். மதத்தின் அடிப்படையில் மத்திய அரசின் ஒப்பந்தப் புள்ளிகளில் இடஒதுக்கீடு வழங்குவதை கர்நாடகா மாநிலத்தின் தற்போதைய அரசு அனுமதிப்பதாக அண்மையில் வெளிவந்துள்ள அறிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற விதிமுறைகளை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்றபோதிலும், சிலரை திருப்திப்படுத்தும் கொள்கைகள் இஸ்லாமிய சமூகத்திற்கு கணிசமானத் தீமையை விளைவித்துள்ளன என்றும், அவை ஒரு சில தீவிரவாதிகளுக்கு மட்டுமே பயனளிக்கின்றன என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில், ஏனைய சமூக மக்கள் புறக்கணிக்கப்பட்டு வறுமை, கல்வியறிவு பெறுவதில் சிக்கலான நிலையில் உள்ளதைஅவர் சுட்டிக் காட்டினார். வக்ஃப் சட்டம் முந்தைய அரசின் தவறான கொள்கைகளுக்கு மிகப்பெரிய சான்று என்று அவர் குறிப்பிட்டார். 2013 - ம் ஆண்டில், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வதற்காக வக்ஃப் சட்டத்தை திருத்தியது என்று அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய மக்களின் நலனுக்காக பணியாற்றுவதாகக் கூறிக்கொண்டு, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்காக காங்கிரஸை விமர்சித்த திரு நரேந்திர மோடி,அக்கட்சி உண்மையிலேயே இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கறை கொண்டிருந்தால், ஒரு இஸ்லாமியரை அவர்கள் தங்கள் கட்சித் தலைவராக நியமித்திருப்பார்கள் அல்லது 50 சதவீத இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருப்பார்கள் என்றும், அவர்களின் நோக்கங்கள் ஒருபோதும் இஸ்லாமிய மக்களின் உண்மையான நலனுடன் இணைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இது அக்கட்சியின் உண்மையான இயல்பை அம்பலப்படுத்துவதாக உள்ளது என்றார். ஏழைகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் பயனடையும் வகையில் வக்ஃப் சட்டத்தின் கீழ் ஏராளமான நிலங்கள் ஒருசில குறிப்பிட்ட நில சுவான்தாரர்களிடம் இருப்பதை சுட்டிக்காட்டிய திரு. நரேந்திர மோடி, தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் நிலங்களை ஆக்கிரமித்து, பஸ்மாண்டா இஸ்லாமிய சமூகத்தினருக்கு எவ்விதப் பலனும் கிடைக்காமல் விடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். வக்ஃப் சட்டத் திருத்தங்கள் இத்தகைய சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று குறிப்பிட்ட அவர், திருத்தப்பட்ட சட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க புதிய விதியை சுட்டிக்காட்டி, பழங்குடியின மக்களின் நிலங்களை வக்ஃப் வாரியங்களால் கையகப்படுத்த முடியாது என்பதை உறுதி செய்தார். பழங்குடியின மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இது ஒரு முக்கிய நடவடிக்கை என்றும் அவர் விவரித்தார். புதிய விதிகள் வக்ஃப் சட்டத்தின் புனிதத்தை மதித்து, ஏழை, பஸ்மண்டா இஸ்லாமியக் குடும்பங்கள், பெண்கள், குழந்தைகளின் உரிமைகள் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்யும் என்று அவர் கூறினார். இது அரசியலமைப்புச் சட்டத்தின் உண்மையான உணர்வையும், உண்மையான சமூக நீதியையும் பிரதிபலிக்கிறது என்று அவர் உறுதிபடக் கூறினார்.
பாபாசாஹேப் அம்பேத்கரின் பாரம்பரியத்தை கௌரவிக்கவும், எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கவும் 2014 - ம் ஆண்டு முதல் மத்திய அரசு மேற்கொண்டு வரும் எண்ணற்ற நடவடிக்கைகளை சுட்டிக் காட்டிய பிரதமர், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பாபாசாகேப் அம்பேத்கருடன் தொடர்புடைய இடங்கள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மும்பையில் உள்ள இந்து மில்லில் பாபாசாகேப்பின் நினைவிடம் கட்டுவதற்கு கூட மக்கள் போராட வேண்டியிருந்தது என்று அவர் குறிப்பிட்டார். பாபா சாகேப் பிறந்த இடமான மோ, லண்டனில் உள்ள அவரது கல்வி கற்ற இடம், தில்லியில் அவரது மஹா பரிநிர்வாண் ஸ்தல், நாக்பூரில் அவரது தீக்ஷா பூமி உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களையும் மத்திய அரசு மேம்படுத்தி, அவற்றை பஞ்சதீர்த்தமாக மாற்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அண்மையில் தீக்ஷா பூமிக்கு சென்று பாபாசாகேப் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் பாக்கியம் தனக்கு கிடைத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டார். பாபாசாகேப் மற்றும் சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கத் தவறிய காங்கிரஸ் கட்சி சமூக நீதி குறித்து தெரிவித்தக் கருத்துக்களை பிரதமர் விமர்சித்தார். மத்தியில் பிஜேபி தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தான் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்றும், தங்கள் கட்சியே சவுத்ரி சரண் சிங்கிற்கும் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.
சமூக நீதி மற்றும் ஏழைகள் நலனுக்கான பாதையை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் ஹரியானா மாநில அரசைப் பாராட்டிய பிரதமர், முந்தைய நிர்வாகங்களின் கீழ் ஹரியானா மாநிலத்தில் அரசுப் பணிகளின் மோசமான நிலையை எடுத்துரைத்தார். அங்கு தனிநபர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு அரசியல் தொடர்புகளை சார்ந்திருக்க வேண்டும் அல்லது குடும்ப சொத்துக்களை விற்க வேண்டிய நிலை இருந்ததாக அவர் தெரிவித்தார். இத்தகைய ஊழல் நடைமுறைகளை ஒழித்துள்ள அம்மாநில முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனியின் அரசு குறித்து அவர் திருப்தி தெரிவித்தார். லஞ்சம் அல்லது பரிந்துரைகள் இல்லாமல் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் ஹரியானா மாநிலத்தின் குறிப்பிடத்தக்க சாதனையை அவர் பாராட்டினார். ஹரியானா மாநிலத்தில் 25,000 இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பு பெறுவதைத் தடுக்க முந்தைய அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டன என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனி பதவியேற்றவுடன், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆயிரக்கணக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன என்றார். அவரது நல்லாட்சிக்கு இது ஒரு உதாரணமாக உள்ளது என்று தெரிவித்த அவர், வரும் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான மாநில அரசின் திட்டத்திற்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
ஏராளமான இளைஞர்கள் ஆயுதப்படைகளில் பணியாற்றி வரும் நிலையில், நாட்டிற்காக ஹரியானா மாநிலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கியுள்ளதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (ஓஆர்ஓபி) திட்டம் பல தசாப்தங்களாக கிடப்பில் போட்டதற்கு முந்தைய அரசுகளை விமர்சித்ததுடன், இத்திட்டத்தை அமல்படுத்தியது தனது தலைமையிலான மத்திய அரசு என்று கூறினார். இத்திட்டத்தின் கீழ் ஹரியானா மாநிலத்தின் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.13,500 கோடி ஓய்வூதியத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதை அப்போது அவர் பகிர்ந்து கொண்டார். நாட்டின் பாதுகாப்புப் படை வீரர்களை தவறாக வழிநடத்தும் வகையில் முந்தைய அரசு இந்த திட்டத்திற்கு ரூ.500 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். முந்தைய அரசு ஒருபோதும் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்துவதில் ஹரியானா மாநிலத்தின் பங்கு மீது நம்பிக்கை தெரிவித்த பிரதமர், விளையாட்டு அல்லது விவசாயம் என எதுவாக இருந்தாலும் ஹரியானா மாநிலம் உலகளவில் ஏற்படுத்தி வரும் தாக்கத்திற்கு பாராட்டு தெரிவித்தார். ஹரியானா மாநில இளைஞர்கள் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதமர், புதிய விமான நிலையமும் விமான சேவைகளும் ஹரியானா மாநில மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான உத்வேகம் அளிப்பதாக குறிப்பிட்டார். இந்த புதிய மைல்கல்லை எட்டியதற்காக ஹரியானா மாநில மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.
ஹரியானா மாநில முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனி, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் திரு. முரளிதர் மோஹல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
மகாராஜா அக்ரசென் விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்தில் அதிநவீன பயணிகள் முனையம், சரக்கு முனையம், ஏடிசி கட்டிடம் ஆகியவை இருக்கும். ஹிசார் விமான நிலையத்திலிருந்து அயோத்திக்கு (வாரத்திற்கு இரண்டு முறை), ஜம்மு, அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகருக்கு வாரத்தில் மூன்று விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இது ஹரியானா மாநிலத்தின் விமான போக்குவரத்துக்கான இணைப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிப்பதாக உள்ளது.
உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
आज का दिन हम सभी के लिए, पूरे देश के लिए बहुत महत्वपूर्ण है।
— PMO India (@PMOIndia) April 14, 2025
आज संविधान निर्माता बाबा साहेब अंबेडकर की जयंती है: PM @narendramodi pic.twitter.com/J9LZZ7ZGxl
आज हरियाणा से अयोध्या धाम के लिए फ्लाइट शुरु हुई है।
— PMO India (@PMOIndia) April 14, 2025
यानि अब श्री कृष्ण जी की पावन भूमि हरियाणा, प्रभु राम की नगरी से सीधे जुड़ गई है: PM @narendramodi pic.twitter.com/ZiHlJxdqME
हमारी सरकार एक तरफ कनेक्टिविटी पर बल दे रही है... दूसरी तरफ गरीब कल्याण और सामाजिक न्याय भी सुनिश्चित कर रही है: PM @narendramodi pic.twitter.com/EDDoAMQ5B5
— PMO India (@PMOIndia) April 14, 2025