அசாம் மாநிலம் குவஹாத்தியில் ரூ. 11,000 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். குவஹாத்தியில் விளையாட்டுக் கட்டமைப்புகள், மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இதில் அடங்கும்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ரூ. 11,000 கோடி மதிப்பிலான பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் அன்னை காமாக்யாவின் ஆசியுடன் இன்று அசாம் மாநிலத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அண்டை நாடுகளுடன் அசாமின் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும் என்று அவர் கூறினார். அதே நேரத்தில் சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்றும் மாநிலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக மாநிலத்தில் மருத்துவக் கல்வி மற்றும் சுகாதாரத் துறை முன்னேற்றம் அடையும் என்று அவர் குறிப்பிட்டார். இன்று தொடங்கப்படும் வளர்ச்சித் திட்டத்திற்காக அசாம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, நேற்று மாலை தமக்கு சிறப்பான வரவேற்பு அளித்த குவஹாத்தி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பல்வேறு புனிதத் தலங்களுக்கு அண்மையில் தாம் சென்றதை நினைவுகூர்ந்த பிரதமர், இன்று அன்னை காமாக்யாவின் தலத்திற்கு வருகை தந்துள்ளதற்கும், மா காமாக்யா திவ்ய லோக் பரியோஜனா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளதற்கும் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தத் திட்டப் பணி முடிந்ததும், பக்தர்களுக்கு வசதிகள் மேலும் அதிகரிக்கும் என்றார். அன்னை காமாக்யாவின் தரிசனத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பதன் மூலம் அசாம் மாநிலம் வடகிழக்குப் பகுதியின் சுற்றுலா நுழைவாயிலாக மாறும் என்று கூறிய பிரதமர், மாநில அரசு மற்றும் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் முயற்சிகளைப் பாராட்டினார்
இந்திய புனித தலங்கள் மற்றும் கோயில்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இந்த இடங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது நாகரிகத்தின் அழிக்க முடியாத அடையாளமாக திகழ்கின்றன என்று கூறினார். பாரதம் சந்தித்த ஒவ்வொரு நெருக்கடியையும் எவ்வாறு எதிர்கொண்டு மீண்டு வந்தது என்பதை அவர் எடுத்துரைத்தார். கடந்த காலங்களில் சிறப்பாகக் கருதப்பட்ட நாகரிகங்கள் இன்று எவ்வாறு அழிந்து நிற்கின்றன என்பதை நாம் கண்பதாக அவர் கூறினார். அரசியல் ஆதாயங்களுக்காக சொந்த கலாச்சாரம் மற்றும் அடையாளங்கள் கண்டுகொள்ளப்படாமல் போன போக்கு தொடங்கியதாக அவர் தெரிவித்தார். இந்தியாவின் புனித இடங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசுகள் தவறியதாக அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டையும் மையமாகக் கொண்ட கொள்கைகளின் உதவியுடன் இது சரி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அசாம் மக்களுக்கு இந்த கொள்கைகளின் நன்மைகளை விளக்கிய பிரதமர் திரு நரேந்திர மோடி, மாநிலத்தில் உள்ள வரலாற்று மற்றும் ஆன்மீக இடங்களை நவீன வசதிகளுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம் போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களின் விரிவாக்கத்தைக் குறிப்பிட்ட அவர், முன்பு அவை மிகப் பெரிய மாநகரங்களில் மட்டுமே அமைக்கப்பட்டு வந்தன என்றார். இப்போது ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் ஆகியவை நாடு முழுவதும் பல இடங்களுக்குப் பரவியுள்ளது என்று அவர் கூறினார். அசாமில் முன்பு 6 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 12 ஆக உயர்ந்துள்ளது என்றும் வடகிழக்கில் புற்றுநோய் சிகிச்சைக்கான மையமாக இந்த மாநிலம் படிப்படியாக மாறும் என்றும் தெரிவித்தார்.
ஏழைகளுக்காக 4 கோடி வீடுகள் கட்டுதல், மின்சார இணைப்பு வழங்கும் திட்டம், இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம், கழிப்பறைகள் கட்டும் திட்டம் உள்ளிட்டவற்றைப் பிரதமர் குறிப்பிட்டார். மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவது தற்போதைய அரசின் முன்னுரிமையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பாரம்பரியத்துடன் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தும் மத்திய அரசு, இளைஞர்களுக்கு பெருமளவில் பயன் அளிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். நாட்டில் சுற்றுலா மற்றும் புனித யாத்திரைகளில் ஆர்வம் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், காசி வழித்தட பணிகள் நிறைவடைந்த பின்னர் வாரணாசிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை சாதனை அளவாக அதிகரித்து வருவது குறித்து தெரிவித்தார். கடந்த ஆண்டில், 8.50 கோடி மக்கள் காசிக்கு வருகை தந்துள்ளனர் என்றும் 5 கோடிக்கும் அதிகமானோர் உஜ்ஜைனில் உள்ள மகாகல் லோக்கிற்கு வருகை தந்துள்ளனர் எனவும் 19 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கேதர்தாமுக்கு வந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். ராமர் கோயிலின் பிராண பிரதிஷ்டைக்குப் பிறகு கடந்த 12 நாட்களில் அயோத்திக்கு 24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வந்துள்ளதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். மா காமாக்ய திவ்ய லோக் பரியோஜனா நிறைவடைந்த பிறகு இதே போன்ற காட்சிகளை இங்கு அசாமிலும் பார்க்க முடியும் என்று அவர் கூறினார்.
ரிக்ஷா தொழிலாளி, டாக்சி ஓட்டுநர், ஹோட்டல் உரிமையாளர் அல்லது சாலையோர வியாபாரி என யாராக இருந்தாலும், யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்களின் வருகையால் ஏழைகளின் வாழ்வாதாரம் மேம்படுகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த ஆண்டு பட்ஜெட்டில் சுற்றுலா மேம்பாட்டுக்கு அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளது குறித்து எடுத்துரைத்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மேம்படுத்த மத்திய அரசு மேலும் பல புதிய திட்டங்களை தொடங்க உள்ளது என்று கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இது தொடர்பாக வடகிழக்கு மாநிலங்களுக்கு உள்ள ஏராளமான வாய்ப்புகளை எடுத்துரைத்தார். வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் வடகிழக்குப் பகுதிக்கு வருகை தந்துள்ள சாதனை எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை பிரதமர் சுட்டிக்காட்டினார். இப்பகுதியில் இயற்கை அழகு இருந்தபோதிலும், முந்தைய அரசுகள் அலட்சியம் காட்டியதாக அவர் தெரிவித்தார். அதன் காரணமாக வன்முறை மற்றும் வளங்களின் பற்றாக்குறை காரணமாக வடகிழக்குப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை முன்பு மிகவும் குறைவாகவே இருந்தது என்று கூறினார். இப்பகுதியில் முன்பு மோசமான விமான, ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து இணைப்புகள் இருந்ததைக் குறிப்பிட்ட அவர், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குப் பயணிக்க பல மணி நேரம் ஆனது என்றார். மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மத்திய, மாநில அளவில் இரட்டை இன்ஜின் அரசுகளே காரணம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிராந்தியத்தின் மேம்பாட்டு செலவினங்களை அரசு 4 மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். 2014-ம் ஆண்டுக்கு பின்பு ரயில் பாதைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 400 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 2014-ம் ஆண்டு வரை அமைக்கப்பட்ட 10,000 கிலோ மீட்டருடன் ஒப்பிடுகையில், கடந்த 10 ஆண்டுகளில் 6,000 கிலோ மீட்டர் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். இன்றைய திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இட்டா நகருக்கான இணைப்பை இது வலுப்படுத்தும் என்றார்.
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகளுக்கு உத்தரவாதம் அளிப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், "மோடியின் உத்தரவாதம் நிறைவேறப்படக் கூடிய உத்தரவாதம்" என்று கூறினார். வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம் மற்றும் அரசின் திட்டப் பயன்கள் கிடைக்காதவர்களுக்கு பலன்களை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடும் 'மோடியின் உத்தரவாத வாகனம்' ஆகியவற்றைப் பற்றியும் அவர் பேசினார். வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான லட்சியப் பயணத்தில் நாடு முழுவதும் சுமார் 20 கோடி மக்கள் நேரடியாக பங்கேற்றுள்ளனர் என்றும் அசாமின் ஏராளமான மக்களும் இதன் பலன்களைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையைப் பற்றிப் பேசிய பிரதமர், ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் அரசு எளிமைப்படுத்துவதாக உறுதியளித்தார். இந்த உறுதிப்பாடு இந்த ஆண்டு பட்ஜெட் அறிவிப்புகளிலும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். இந்த ஆண்டு உள்கட்டமைப்புக்காக ரூ. 11 லட்சம் கோடியை செலவிடுவதாக அரசு உறுதியளித்துள்ளது என்றும் உள்கட்டமைப்பில் இந்த செலவு அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்குவதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதை பிரதமர் எடுத்துரைத்தார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் மின்சாரக் கட்டணங்களை பூஜ்ஜியமாகக் குறைக்க எடுக்கப்பட்ட முடிவு குறித்து அவர் தெரிவித்தார். சூரிய சக்தித் திட்டத்தைத் தொடங்குவதன் மூலம், ஒரு கோடி குடும்பங்களுக்கு சூரிய மேற்கூரைகளை நிறுவ அரசு உதவும் என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம், அவர்களின் மின்சார கட்டணமும் பூஜ்ஜியமாக இருக்கும் என்றும் சாதாரண குடும்பங்கள் தங்கள் வீட்டில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் சம்பாதிக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
நாட்டில் 2 கோடி லட்சாதிபதிப் பெண்களை உருவாக்குவதற்கான உத்தரவாதம் குறித்துப் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1 கோடியை எட்டியது என்றும், இப்போது இந்த ஆண்டு பட்ஜெட்டில் 3 கோடி லட்சாதிபதிப் பெண்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதன் மூலம் அசாமைச் சேர்ந்த லட்சக்கணக்கான பெண்களும் பயனடைவார்கள் என்று அவர் கூறினார். சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய அனைத்து மகளிருக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும், ஆயுஷ்மான் திட்டத்தில் அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களைச் சேர்ப்பது குறித்தும் அவர் பேசினார்.
"இரவும் பகலும் உழைக்கவும், அளிக்கும் உத்தரவாதங்களை நிறைவேற்றவும் மோடிக்கு மன உறுதி உள்ளது என்று கூறிய பிரதமர், மோடியின் உத்தரவாதத்தின் மீது வடகிழக்கு மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார். ஒரு காலத்தில் கலவரம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட அசாமில் நிரந்தர அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 10 க்கும் மேற்பட்ட முக்கிய அமைதி ஒப்பந்தங்கள் இங்கு கையெழுத்திடப்பட்டுள்ளன என்று தெரிவித்த அவர், கடந்த சில ஆண்டுகளில் வடகிழக்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வன்முறைப் பாதையைத் தவிர்த்து வளர்ச்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் கூறினார். இவர்களில் 7,000-க்கும் மேற்பட்ட அசாம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதைத் துறந்துவிட்டு, நாட்டின் வளர்ச்சியில் தோளோடு தோள் நிற்க உறுதி பூண்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். பல மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்பட்டதை எடுத்துரைத்த அவர், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இன்று மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படுகின்றன என்றார்.
இலக்குகளை நிர்ணயிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், முந்தைய அரசுகள் நோக்கங்கள் இல்லாமல் செயல்பட்டதாகவும் கடினமாக உழைக்கத் தவறிவிட்டன என்றும் கூறினார். வருங்காலத்தில் மாநிலத்தில் உள்ள மேலும் பல சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன என்று அவர் தெரிவித்தார். இது வடகிழக்கை ஒரு வர்த்தக மையமாக மாற்றும் என்று அவர் கூறினார். வடகிழக்குப் பகுதி இளைஞர்களின் விருப்பங்களையும் கனவுகளையும் நனவாக்குவதில் தமது உறுதியையும் பிரதமர் வெளிப்படுத்தினார்.
இந்திய மக்களின் மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கை என்ற இலக்குதான் இன்று மேற்கொள்ளப்படும் அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் முக்கிய காரணம் என்று பிரதமர் கூறினார். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதே இலக்கு என்றும் 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பெரிய பங்காற்றும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
அசாம் ஆளுநர் திரு குலாப் சந்த் கட்டாராய், அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
புனித தலங்களுக்கு வருகை தரும் மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவது பிரதமரின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. இந்த முயற்சியின் மற்றொரு படியாக, மா காமாக்யா திவ்யா பரியோஜனா திட்டம் அடங்கும், இது வடகிழக்கு பிராந்தியத்திற்கான பிரதமரின் மேம்பாட்டு முன்முயற்சி (PM-DevINE) திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது. காமாக்யா கோயிலுக்கு வருகை தரும் யாத்ரீகர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை இது வழங்கும்.
தெற்காசிய துணை மண்டல பொருளாதார ஒத்துழைப்பு (SASEC) போக்குவரத்து இணைப்பின் ஒரு பகுதியாக 38 பாலங்கள் உட்பட 43 சாலைகளை மேம்படுத்தும் ரூ. 3,400 கோடி மதிப்பிலான பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். டோலாபாரி முதல் ஜமுகுரி வரையிலும், பிஸ்வநாத் சாரியாலி முதல் கோஹ்பூரிலும் இரண்டு நான்கு வழிப்பாதை திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்கள் இட்டாநகருக்கான இணைப்பை மேம்படுத்தவும், இப்பகுதியின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும்.
இந்தப் பிராந்தியத்தின் அபரிமிதமான விளையாட்டுத் திறனைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, மாநிலத்தில் விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். சந்திரபூரில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் நேரு விளையாட்டரங்கத்தை ஃபிஃபா தரத்திலான கால்பந்து மைதானமாக மேம்படுத்துதல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.
குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். மேலும், கரீம்கஞ்சில் ஒரு மருத்துவக் கல்லூரியின் வளர்ச்சிப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
अयोध्या में भव्य आयोजन के बाद मैं अब यहां मां कामाख्या के द्वार पर आया हूं।
— PMO India (@PMOIndia) February 4, 2024
आज मुझे यहां मां कामाख्या दिव्यलोक परियोजना का शिलान्यास करने का सौभाग्य प्राप्त हुआ: PM @narendramodi pic.twitter.com/H6GklHsoPF
हमारे तीर्थ, हमारे मंदिर, हमारी आस्था के स्थान, ये सिर्फ दर्शन करने की स्थली ही नहीं हैं।
— PMO India (@PMOIndia) February 4, 2024
ये हज़ारों वर्षों की हमारी सभ्यता की यात्रा की अमिट निशानियां हैं: PM @narendramodi pic.twitter.com/1IG55iQRi3
हमारा लक्ष्य हर नागरिक का जीवन आसान बनाने का है: PM @narendramodi pic.twitter.com/ZvxJBijEiR
— PMO India (@PMOIndia) February 4, 2024
लक्ष्य है, भारत और भारतीयों का सुखी और समृद्ध जीवन।
— PMO India (@PMOIndia) February 4, 2024
लक्ष्य है, भारत को दुनिया की तीसरी बड़ी आर्थिक ताकत बनाने का।
लक्ष्य है, 2047 तक भारत को विकसित राष्ट्र बनाने का। pic.twitter.com/RZUNe3OTpz