பீகார் மாநிலம் தர்பங்காவில் சுமார் ரூ.12,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். சுகாதாரம், ரயில்வே, சாலை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்கள் இதில் அடங்கும்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் வாக்குப்பதிவு நடந்து வருவதாகவும், மாநில மக்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு வாக்களித்து வருவதாகவும் கூறினார். ஜார்க்கண்ட் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மறைந்த சாரதா சின்ஹா அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், இசைத் துறையில் அவரது ஒப்பிடமுடியாத பங்களிப்புகளை, குறிப்பாக சாத் மஹாபர்வ் பாடலை அவர் பாராட்டினார்.
பீகார் மாநிலமும், ஒட்டுமொத்த நாடும் முக்கிய வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றத்தை சந்தித்து வருவதை பிரதமர் சுட்டிக் காட்டினார். கடந்த காலங்களில் திட்டங்கள் வெறும் காகிதத்தில் மட்டுமே இருந்ததைப் போலல்லாமல், தற்போது அவை வெற்றிகரமாக கள அளவில் செயல்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார். "நாம் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நிலையை நோக்கி உறுதியாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்" என்று திரு மோடி பெருமிதம் கொண்டார். நமது தற்போதைய தலைமுறையினர் வளர்ச்சியடைந்த இந்தியா திட்டத்தின் சாட்சியாக இருப்பதோடு, இலக்கை நோக்கி பங்களிப்பு செய்யும் அதிர்ஷ்டசாலிகள் என்றும் அவர் கூறினார்.
மக்களின் நலன் மற்றும் நாட்டுக்கான சேவையில் அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் கூறிய பிரதமர், சாலை, ரயில் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பு துறைகளை உள்ளடக்கிய தற்போதைய ரூ.12,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் பற்றி குறிப்பிட்டார். மேலும், தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க இன்று குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இது பீகாரின் சுகாதாரத் துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்றும் பிரதமர் கூறினார். மேற்கு வங்கத்தின் பகுதிகள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள் தவிர மிதிலா, கோசி, திர்ஹுத் பகுதிகள் இதன் மூலம் பயனடையும் என்றும், நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு சேவை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பல புதிய வாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக மிதிலா, தர்பங்கா மற்றும் ஒட்டுமொத்த பீகார் மக்களையும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
நாட்டின் மக்கள் தொகையில் அதிக அளவில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளனர் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தப் பிரிவைச் சேர்ந்த மக்கள்தான் நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனால் சிகிச்சைக்காக தங்கள் கையிலிருந்து பெருமளவில் செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார். குடும்பத்தில் யாராவது ஒருவர் நோயால் பாதிக்கப்பட்டால், ஒட்டுமொத்த குடும்பமும் எவ்வாறு துயருற்றிருக்கும் என்பதை தாம் நன்கு அறிவேன் என்று திரு மோடி குறிப்பிட்டார். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை, அதிக விலை மருந்துகள் மற்றும் குறைந்த நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் காரணமாக மருத்துவ உள்கட்டமைப்பின் நிலைமை கடந்த காலங்களில் மிகவும் மோசமாக இருந்தது என்று அவர் கூறினார். மோசமான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் ஏழைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் காரணமாக நாட்டின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். எனவே, பழைய சிந்தனையும், அணுகுமுறையும் மாற்றப்பட்டன என்று அவர் கூறினார்.
சுகாதாரம் தொடர்பாக அரசு கடைப்பிடித்து வரும் முழுமையான அணுகுமுறையை பிரதமர் சுட்டிக் காட்டினார். அரசு கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளைக் குறிப்பிட்ட காட்டிய அவர், நோய்களைத் தடுப்பதே முதல் கவனம் செலுத்தும் பகுதி என்று கூறினார். இரண்டாவதாக, சரியாக நோயறிதல், மூன்றாவதாக, இலவச அல்லது குறைந்த கட்டண சிகிச்சை மற்றும் மருந்துகள் கிடைப்பது, நான்காவது, சிறிய நகரங்களை சிறந்த மருத்துவ வசதிகளுடன் அமைப்பது, ஐந்தாவதாக, சுகாதாரத் துறையில் தொழில்நுட்ப விரிவாக்கம் ஆகியவை குறித்து குறிப்பிட்டார்.
"யோகா, ஆயுர்வேதம், ஊட்டச்சத்து மதிப்பு, ஃபிட் இந்தியா இயக்கம் ஆகியவற்றுக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதை திரு மோடி எடுத்துரைத்தார். பொதுவான நோய்களுக்கு துரித உணவுகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், அரசின் முயற்சிகளை பட்டியலிட்ட பிரதமர், தூய்மை இந்தியா, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள், குழாய் நீர் இணைப்பு போன்ற பிரச்சாரங்கள் தூய்மையை ஊக்குவித்து நோய்களுக்கான வாய்ப்பைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டவை என்றார். கடந்த சில நாட்களாக தர்பங்காவில் தூய்மை பிரச்சாரங்களை மேற்கொள்ளவும், இயக்கத்தை வலுப்படுத்தவும் தலைமைச் செயலாளர், அவரது குழுவினர் மற்றும் மாநில மக்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் பிரதமர் பாராட்டினார். பிரச்சாரத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டால் பல நோய்களின் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், நோயறிதல் மற்றும் ஆராய்ச்சியின் அதிக செலவால் மக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி அறிந்து கொள்வதைத் தடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். "நாங்கள் நாட்டில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களைத் தொடங்கியுள்ளோம்" என்றும், இது நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் திரு மோடி கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தத் திட்டம் இல்லாதிருந்தால் நோய்வாய்ப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைக் கூட தவிர்த்திருக்கும் என்று கூறினார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் காரணமாக பல ஏழை மக்களின் கவலைகளை இந்தத் திட்டம் களைந்துள்ளது என்று திரு மோடி கூறினார். ஆயுஷ்மான் திட்டத்தின் காரணமாக கோடிக்கணக்கான குடும்பங்களால் சுமார் 1.25 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது என்றும், நோயாளிகள் இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலின் போது வெளியிடப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வரம்பில் 70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களையும் சேர்ப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், "இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. குடும்ப வருமானத்தைப் பொருட்படுத்தாமல் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து பயனாளிகளுக்கும் விரைவில் ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டை வழங்கப்படும் என்று அவர் கூறினார். மிகக் குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் மக்கள் மருந்தக மையங்கள் குறித்தும் அவர் பேசினார்.
நாட்டில் சிறந்த சுகாதார சேவையை நோக்கி சிறிய நகரங்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவர்களை வழங்கும் நான்காவது நடவடிக்கையை சுட்டிக்காட்டிய பிரதமர், நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆன நிலையில் நாடு முழுவதிலும் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே இருந்ததாகவும், முந்தைய அரசுகளின் போது புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை நிறுவும் திட்டம் நிறைவடையவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசுதான் நோய்கள் குறித்து அறிந்ததோடு மட்டுமல்லாமல், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை நிறுவியுள்ளது என்றும் இதன் மூலம் அதன் மொத்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாகவும், இதனால் அதிக மருத்துவர்கள் உருவாகியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். தர்பங்கா எய்ம்ஸ் மருத்துவமனை பீகார் மற்றும் நாட்டின் சேவைக்காக பல புதிய மருத்துவர்களை உருவாக்கும் என்றும் அவர் கூறினார். தாய்மொழியில் உயர்கல்வியை சாத்தியமாக்குவது குறித்தும் குறிப்பிட்ட பிரதமர், கற்பூரி தாக்கூர் அவர்களின் கனவுகளுக்கு இதுவே தனது மிகப்பெரிய மரியாதை என்று தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில், 1 லட்சம் புதிய மருத்துவ இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75,000 இடங்களை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்தி மற்றும் பிற பிராந்திய மொழிகளில் மருத்துவம் படிப்பதற்கான விருப்பமும் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
புற்றுநோயை எதிர்த்துப் போராட அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை சுட்டிக்காட்டிய திரு மோடி, முசாஃபர்பூரில் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் மையம் பீகாரில் உள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு பயனளிக்கும் என்றார். இந்த ஒற்றை வசதி பல்வேறு வகையான புற்றுநோய்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்றும், நோயாளிகள் தில்லி அல்லது மும்பைக்கு பயணிக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார். பீகாரில் புதிய கண் மருத்துவமனை விரைவில் தொடங்கப்படும் என்பதை அறிவிப்பதில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். வாரணாசியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சங்கரா கண் மருத்துவமனை போன்று பீகாரில் ஒரு கண் மருத்துவமனை அமைக்க காஞ்சி காமகோடி ஸ்ரீ சங்கராச்சார்யா அவர்களிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
"நல்லாட்சிக்கான மாதிரியை உருவாக்கியதற்காக பீகார் முதலமைச்சரை பிரதமர் பாராட்டினார். மத்தியிலும் இந்த மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்வதால் விரைவான வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளது என்றும், சிறு விவசாயிகள் மற்றும் தொழில்களை வலுப்படுத்துவதற்கான திட்டத்தில் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். உள்கட்டமைப்பு மேம்பாடு, விமான நிலையங்கள் மற்றும் விரைவுச் சாலைகள் மூலம் பீகாரின் அடையாளம் வலுப்பெற்று வருவதாக கூறிய அவர், தர்பங்காவில் புதிய விமான நிலையத்தை உருவாக்க உடான் திட்டத்தை பாராட்டினார். ரூ.5,500 கோடி மதிப்பிலான விரைவுச் சாலைகள், ரூ.3,400 கோடி மதிப்பிலான நகர எரிவாயு விநியோக கட்டமைப்பு உள்ளிட்ட தற்போதைய இதர வளர்ச்சித் திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார். "பெருந்திட்ட வளர்ச்சிகள் பீகாரை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்கிறது" என்று கூறிய பிரதமர், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
இந்தப் பிராந்தியத்தில் விவசாயிகள், தாமரை விதை உற்பத்தியாளர்கள் மற்றும் மீன்வளத் துறைகளின் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று பிரதமர் கூறினார். மிதிலாவைச் சேர்ந்த விவசாயிகள் உட்பட பீகார் விவசாயிகள் பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.25,000 கோடிக்கு மேல் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். தாமரை விதை உற்பத்தியாளர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு மாவட்டம் ஒரு உற்பத்தி திட்டத்தை பாராட்டிய அவர், தாமரை விதை ஆராய்ச்சி மையத்திற்கு ஒரு தேசிய நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். "தாமரை விதைகளும் புவிசார் குறியீடு பெற்றுள்ளன" என்று அவர் மேலும் கூறினார். வேளாண் கடன் அட்டைகள் மற்றும் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் பயன்களை, மீன் வளர்ப்பவர்கள் பெறுவதையும் அவர் குறிப்பிட்டார். உலகிலேயே மிகப்பெரிய மீன் ஏற்றுமதியாளராக இந்தியாவை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
கோசி மற்றும் மிதிலாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் மீண்டும் கூறினார். பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தை எதிர்கொள்ள இந்த ஆண்டு பட்ஜெட்டில் விரிவான திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். நேபாளத்தின் ஒத்துழைப்புடன் வெள்ளப் பாதிப்பிற்கு தீர்வு காணப்படும் என்றும், இது தொடர்பாக ரூ.11,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"இந்திய பாரம்பரியத்தின் மிகப்பெரிய மையமாக பீகார் திகழ்கிறது" என்று கூறிய திரு மோடி, இந்த பாரம்பரியத்தை போற்றுவது நம் அனைவரின் பொறுப்பாகும் என்று கூறினார். எனவே, "வளர்ச்சியும் பாரம்பரியமும் என்ற மந்திரத்தை அரசு பின்பற்றி வருவதாகவும் அவர் கூறினார். நாளந்தா பல்கலைக்கழகம் நீண்ட காலமாக இழந்த தனது புகழை மீண்டும் பெற தற்போது முன்னேறி வருவதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
மொழிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், புத்தரின் போதனைகளையும், பீகாரின் புகழ்பெற்ற கடந்த காலத்தையும் பிரதிபலிக்கும் பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் மைதிலி மொழியை உள்ளடக்கியது தற்போதைய அரசு என்பதை அவர் நினைவூட்டினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மைதிலி மொழிக்கு இரண்டாவது மொழியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 12-க்கும் மேற்பட்ட நகரங்களில் தர்பங்கா நகரம் ராமாயண நிகழ்வுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் சுற்றுலாவுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். தர்பங்கா – சீதாமர்ஹி – அயோத்தி வழித்தடத்தில் இயக்கப்படும் அமிர்த பாரத் ரயில் குடிமக்களுக்கு பெருமளவில் பயனளித்துள்ளது என்று அவர் கூறினார்.
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய தர்பங்கா எஸ்டேட் மகாராஜா திரு காமேஷ்வர் சிங் அவர்களுக்கு திரு மோடி அஞ்சலி செலுத்தினார். திரு காமேஷ்வர் சிங்கின் சமூகப் பணி தர்பங்காவின் பெருமை மற்றும் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார். காசியிலும் அவரது நற்பணிகள் குறித்து அடிக்கடி விவாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு அதிகபட்சமான பயன்களை வழங்குவதில் மாநில மற்றும் மத்திய அரசுகளின் முயற்சிகளை சுட்டிக்காட்டியதுடன், அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்து தெரிவித்து தமது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் பீகார் ஆளுநர் திரு. ராஜேந்திர அர்லேகர், பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார், மத்திய உணவுப் பதனப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னணி
தர்பங்காவில் ரூ.1260 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது ஒரு சிறப்பு மருத்துவமனை / ஆயுஷ் பிரிவு, மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, இரவு தங்குமிடம் மற்றும் குடியிருப்பு வசதிகளைக் கொண்டிருக்கும். இது பீகார் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு துணை நிலை சுகாதார வசதிகளை வழங்கும்.
சாலை மற்றும் ரயில்வே துறைகளில் புதிய திட்டங்கள் மூலம் இந்தப் பிராந்தியத்தில் போக்குவரத்தை மேம்படுத்த திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. பீகாரில் சுமார் ரூ.5,070 கோடி மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
தேசிய நெடுஞ்சாலை 327இ-ல் கல்கலியா - அராரியா நான்கு வழிச்சாலையை அவர் தொடங்கி வைத்தார். இது கிழக்கு - மேற்கு வழித்தடத்தில் (என்.எச்-27) அராரியாவிலிருந்து அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தின் கல்கலியாவுக்கு மாற்று பாதையை ஏற்படுத்தும். தேசிய நெடுஞ்சாலை எண் 322 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 31 ஆகியவற்றில் இரண்டு ரயில்வே மேம்பாலங்களையும் அவர் திறந்து வைத்தார். ஜெஹனாபாத் மற்றும் பீகார்ஷரீப் இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண் 110-ஐ பிரதமர் திறந்து வைத்தார்.
ராம்நகர் முதல் ரோசேரா வரை, பீகார் - மேற்கு வங்க எல்லை முதல் தேசிய நெடுஞ்சாலை எண் 131-ஏ-வில் மணிஹரி பிரிவு வரை, மஹ்னார், மொஹியுதீன் நகர் வழியாக ஹாஜிபூர் முதல் பச்வாரா வரை, சர்வான் – சக்காய் பிரிவு உள்ளிட்ட எட்டு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தேசிய நெடுஞ்சாலை 327இ-யில் ராணிகஞ்ச் புறவழிச்சாலைக்கு அவர் அடிக்கல் நாட்டினார். கட்டோரியா, லக்புரா, பாங்கா மற்றும் பஞ்ச்வாரா புறவழிச்சாலைகள் என்எச்-333ஏ; மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 82 முதல் தேசிய நெடுஞ்சாலை 33 வரை நான்கு வழி இணைப்பு சாலை அடங்கும்.
1740 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார். பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் சிரலபோத்து முதல் பாகா பிஷுன்பூர் வரையிலான சோன்நகர் புறவழி ரயில் பாதைக்கு ரூ.220 கோடி மதிப்பில் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
ரூ.1520 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜான்ஜார்பூர் – லௌகா பஜார் ரயில் பிரிவில் பாதை மாற்றம், தர்பங்கா சந்திப்பில் ரயில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். தர்பங்கா புறவழி ரயில் பாதை, சிறந்த பிராந்திய இணைப்புக்கு உதவும் ரயில் பாதை திட்டங்களை இரட்டிப்பாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
ஜான்ஜார்பூர் – லவ்கா பஜார் பிரிவில் ரயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பிரிவில் மின்சார ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், அருகிலுள்ள நகரங்களில் வேலைகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை எளிதாக அணுக உதவும்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் 18 பிரதமரின் மக்கள் மருந்தக மையங்களை பிரதமர் அர்ப்பணித்தார். இவை பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும். பொதுவான மருந்துகளை வாங்குதல் மற்றும் விழிப்புணர்வை இது ஊக்குவிக்கும், இதன் மூலம் சுகாதாரப் பராமரிப்புக்கான ஒட்டுமொத்த செலவினம் குறைக்கப்படும்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையில் ரூ.4,020 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை கொண்டு வருவது மற்றும் வணிக மற்றும் தொழில்துறை துறைகளுக்கு தூய்மையான எரிசக்தி வாய்ப்புகளை வழங்குவது என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, பீகாரின் ஐந்து முக்கிய மாவட்டங்களான தர்பங்கா, மதுபானி, சுபால், சீதாமர்ஹி மற்றும் ஷியோகர் ஆகிய இடங்களில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நகர எரிவாயு விநியோக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பரவுனி சுத்திகரிப்பு ஆலையின் தார்கட்டி உற்பத்திப் பிரிவுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த ஆலை இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைத்து உள்நாட்டில் தார்கட்டியை உற்பத்தி செய்யும்.
Click here to read full text speech
दरभंगा AIIMS के निर्माण से बिहार के स्वास्थ्य क्षेत्र में बहुत बड़ा परिवर्तन आएगा। pic.twitter.com/OHVMAoo5YB
— PMO India (@PMOIndia) November 13, 2024
हमारी सरकार देश में स्वास्थ्य को लेकर होलिस्टिक अप्रोच के साथ काम कर रही है: PM @narendramodi pic.twitter.com/KEs5GlaJaY
— PMO India (@PMOIndia) November 13, 2024
हमने पाली भाषा को शास्त्रीय भाषा का दर्जा दिया है: PM @narendramodi pic.twitter.com/Atbr8fbMov
— PMO India (@PMOIndia) November 13, 2024