பிரதமர் திரு நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் ரூ.3,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். அத்துடன் ஷிவமோகா விமான நிலையத்தை தொடங்கி வைத்த அவர், அங்குள்ள வசதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். ஷிவமோகா-ஷிக்காரிபூரா-ராணெபென்னூர் புதிய ரயில்வே இணைப்பு மற்றும் கோட்டேகங்கௌரு ரயில்வே பயிற்சி மனை உள்ளிட்ட 2 ரயில்வே திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூ.215 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள பல்வேறு சாலை வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். நீர்வள இயக்கத்தின் கீழ், ரூ.950 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு கிராமத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ஷிவமோகா நகரில் ரூ.895 கோடி ரூபாய் மதிப்பில் 44 பொலிவுறு நகரத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒரே பாரதம்-உன்னத பாரதம் என்பது இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் வகையில், அர்ப்பணிப்புடன் செயலாற்றிய இந்நிலத்தின் தேசிய கவி குவேம்புவை தலை வணங்குவதாக தெரிவித்தார். ஷிவமோகாவில் புதிய விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர், குடிமக்களின் தேவை நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறினார்.
விமான நிலையத்தின் கட்டமைப்பு மற்றும் சிறப்பான அழகு குறித்து குறிப்பிட்ட பிரதமர், கர்நாடகாவின் தொழில்நுட்பமும் மற்றும் பாரம்பரியமும் ஒருங்கிணைந்துள்ளதை சுட்டிக் காட்டினார். இது விமான நிலையமாக மட்டுமல்லாமல் இளைய தலைமுறையினரின் கனவுகளை நிறைவேற்றும் இயக்கமாக உள்ளது என்று அவர் கூறினார். ஒவ்வொரு வீட்டிலும் குழாய் மூலம் குடிநீர் திட்டங்களுடன் சாலை மற்றும் ரயில்வேத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது குறித்து தெரிவித்த பிரதமர், இம்மாவட்ட குடிமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
திரு பி எஸ் எடியுரப்பாவின் பிறந்த தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த பிரதமர், பொது வாழ்க்கையில் அவருடைய பங்களிப்பை நினைவு கூர்ந்தார். அண்மையில், சட்டப்பேரவையில் அவர், ஆற்றிய உரை பொது வாழ்க்கையில் உள்ள அனைவருக்கும் உத்வேகம் அளிக்க கூடியது என்று கூறினார். திரு பி எஸ் எடியுரப்பாவை கவுரவிக்கும் வகையில், மொபைல் ஃபோன்களை உயர்த்தி ஒளிரச் செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மக்கள் அதைப் பின்பற்றி மூத்த தலைவருக்கு தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள்.
கர்நாடகா வளர்ச்சிப் பாதைகளை நோக்கி செல்வதாக பிரதமர் தெரிவித்தார். ரயில்வே, சாலை, விமானப் போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் இணைப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கர்நாடகாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது என்று அவர் கூறினார். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்வதன் மூலம், கர்நாடகா வலிமைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். அண்மைக் காலங்களில் பெரிய நகரங்களை மையமாகக் கொண்டு வளர்ச்சிப் பெற்ற வளர்ச்சி பெற்று வரும் நிலையில், இரட்டை இயந்திர அரசு மூலம் இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலை நகரங்களும், கிராமங்களும் கர்நாடகாவில் விரிவான வளர்ச்சி அடைந்து வருவதாக சுட்டிக் காட்டினார். ஷிவமோகாவின் வளர்ச்சி இந்த சிந்தனை நடைமுறையில் உருவானது என்று அவர் கூறினார்.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக விமானப் பயணம் அதிகரித்துள்ள நிலையில், ஷிவமோகாவில் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக் காட்டினார். உலகில் மிகப்பெரிய பயணிகள் விமானத்தைக் கொள்முதல் செய்ய அண்மையில்தான் ஏர் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது, 2014-ம் ஆண்டிற்கு முன்பாக ஏர் இந்தியா குறித்து எதிர்மறையாக கருத்துகள் நிலவியதாகவும், அதன் அடையாளம் ஊழலோடு தொடர்புபடுத்தப்பட்டதாகவும், வர்த்தகம் இழப்பை சந்தித்து வருவதாகவும் கூறப்பட்டதாக குறிப்பிட்டார். ஏர் இந்தியா நிறுவனம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், ஏர் இந்தியா இன்று புதிய இந்தியாவின் ஆற்றலாக அங்கீகரிக்கப்பட்டு வெற்றியின் சிகரத்திற்கு எடுத்துச் செல்வதாகத் தெரிவித்தார். இந்தியாவில் விமானப் போக்குவரத்துக்கான சந்தை விரிவடைந்து வருவதாகக் கூறிய அவர், எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான விமானங்கள் தேவைப்படும் என்றும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிக்காக தேவைப்படுவார்கள் என்றும் கூறினார். இன்று நாம் விமானங்களை இறக்குமதி செய்தாலும் கூட, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பயணிகள் விமானங்களில் இந்திய குடிமக்கள் பறப்பதற்கு வெகு நாள் இல்லை என்று தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்துத் துறையின் விரிவாக்கத்திற்கு அரசு மேற்கொண்ட கொள்கைகளைப் பிரதமர் விவரித்தார். முந்தைய அரசுகளின் அணுகுமுறையை போன்று அல்லாமல், தற்போதைய அரசு சிறிய நகரங்களிலும், விமான நிலையங்களை அமைத்து வருவதாகக் குறிப்பிட்டார். சுதந்திரம் அடைந்து முதல் 70 ஆண்டுகளில் 2014-ம் ஆண்டு வரை நாட்டில் 74 விமான நிலையங்கள் இருந்ததாகவும் கடந்த 9 ஆண்டுகளில் மேலும் 74 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு பல சிறிய நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். உடான் திட்டத்தின் கீழ், குறைந்த கட்டணத்தில் பயணம் செய்வது என்பது ஹவாய் செருப்பு அணிந்த சாதாரண குடிமக்கள் விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கனவு நிறைவேறுவதாகக் கூறினார்.
இயற்கை, கலாச்சாரம் மற்றும் வேளாண்மையின் நிலமான ஷிவமோகாவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டிருப்பது அந்நகரில் வளர்ச்சி ஏற்படுத்த உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
புகழ்பெற்ற மேற்குத் தொடர்ச்சி மலைகள், பசுமை, வனவிலங்கு சரணாலயங்கள், ஆறுகள், புகழ்பெற்ற ஜோக் அருவி மற்றும் யானை முகாம், சிம்ஹா தாமில் சிங்கம் உலாவிடம், அகம்பே மலைத் தொடர்கள் உள்ள மாலேநாடு பகுதிக்கு நுழைவாயிலாக ஷிவமோகா உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கங்கை நதியில் நீராடாத, துங்கபத்ரா ஆற்றின் தண்ணீரைக் குடிக்காதவரின் வாழ்க்கை முழுமை பெறாது என்ற பழமொழியை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
ஷிவமோகாவின் கலாச்சார வளம் பற்றி பேசிய பிரதமர், தேசியக்கவி குவெம்பு, உலகில் உயிரோட்டமாக இருக்கும் ஒரே சமஸ்கிருத கிராமமான மட்டூர் மற்றும் ஷிவமோகாவில் உள்ள பல வழிபாட்டு மையங்கள் பற்றியும் குறிப்பிட்டார். இஸ்சுரு கிராமத்தின் விடுதலைப் போராட்டம் பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.
ஷிவமோகாவின் வேளாண் தனித்துவம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், நாட்டில் மிகவும் செழிப்பான பகுதிகளில் ஒன்றாக இது உள்ளது என்றார். இந்தப் பகுதியின் பல்வேறு பயிர் வகைகள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். இரட்டை என்ஜின் அரசால் வலுவான போக்குவரத்துத் தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த வேளாண் செல்வம் உந்துதல் அளித்ததாக அவர் கூறினார். புதிய விமான நிலையம், சுற்றுலாவை அதிகப்படுத்த உதவும் என்றும், இதனால் பொருளாதார செயல்பாடும், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். ரயில் போக்குவரத்துத் தொடர்பு விவசாயிகளுக்குப் புதிய சந்தைகளை உறுதிசெய்யும் என்று அவர் மேலும் கூறினார்.
ஷிவமோகா-ஷிகாரிபுரா-ராணெபென்னூர் புதிய வழித்தடம் பூர்த்தி அடையும்போது ஹவேரி, தாவண்கரே மாவட்டங்களும் பயனடையும் என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார். லெவல்கிராசிங் இல்லாதிருப்பது இந்த வழித்தடத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதோடு, அதிவேக ரயில்கள் எளிதாக கடந்து செல்ல முடியும் என்பதை அவர் கோடிட்டுக் காட்டினார். புதிய இணைப்பு முனையம் கட்டமைக்கப்பட்ட பின் சிறிது நேரம் நின்று செல்லும் ரயில் நிலையமான கோட்டாகங்கௌரின் திறன் அதிகரிக்கும் என்று அவர் கூறினார். இந்த நிலையம் தற்போது 4 வழித்தடங்கள், 3 நடைமேடைகள், ஒரு ரயில்வே இணைப்புத் தொழிற்சாலை ஆகியவற்றுடன் மேம்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்தப் பகுதியின் கல்வி மையமாக ஷிவமோகா விளங்குவதாகக் குறிப்பிட்ட பிரதமர், அதிகரிக்கும் போக்குவரத்துத் தொடர்பால் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து மாணவர்கள் எளிதாக வந்துசெல்ல உதவும் என்றார். மேலும் இந்தப் பகுதியில் வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு புதிய கதவுகளைத் திறக்கும் என்றும் அவர் கூறினார். நல்லப் போக்குவரத்து வசதியுடனான அடிப்படைக் கட்டமைப்பு, ஒட்டுமொத்த பிராந்தியத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்தப் பகுதியின் மிகப்பெரிய ஜல் ஜீவன் இயக்கம் ஷிவமோகா பெண்களின் வாழ்க்கையை எளிதாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஜல்ஜீவன் இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பு ஷிவமோகாவில் உள்ள 3 லட்சம் குடும்பங்களில் 90,000 குடும்பங்கள் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் இணைப்பைப் பெற்றிருந்தன என்றும் இப்போது இரட்டை என்ஜின் அரசு 1.5 லட்சம் குடும்பங்களுக்குக் குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளது என்றார். அனைத்துக் குடும்பங்களுக்கும் இதனை உறுதிசெய்ய பணிகள் நடைபெறுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் 40 லட்சம் குடும்பங்கள் குடிநீர்க் குழாய் இணைப்புகளைப் பெற்றதாக அவர் கூறினார்.
இந்த இரட்டை என்ஜின் அரசு, கிராமங்களில் உள்ள ஏழை, எளிய தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுடையது என்று பிரதமர் கூறினார். கழிப்பறைகள், சமையல் எரிவாயு இணைப்புகள், குழாய் மூலம் குடிநீர் விநியோகம் ஆகியவற்றை உதாரணங்களாக எடுத்துரைத்த பிரதமர், தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண அரசு முயற்சி செய்துவருகிறது என்றார். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய இரட்டை என்ஜின் அரசு பாடுபடும் என்று அவர் உறுதியளித்தார்.
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அமிர்தகாலம் இது என்பதைக் கர்நாடக மக்கள் நன்கு அறிவார்கள் என்று கூறிய பிரதமர், இந்தியாவின் சுதந்திர வரலாற்றில் முதல் முறையாக உலக அரங்கில் இந்தியாவின் குரல் கேட்கப்படுவதற்கும், வாய்ப்புகள் கதவை தட்டுவதற்குமான காலம் வந்துள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டினார். உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், இது கர்நாடாவிற்கும், அதன் இளைஞர்களுக்கும் பயனளிக்கும் என்றார். கர்நாடகாவின் வளர்ச்சிக்கான இந்த இயக்கத்தில் அனைவரும் இணைந்து முன்னேற்றத்தை உறுதிசெய்வோம் என்று கூறி, பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் திரு பி.எஸ். எடியூரப்பா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி, கர்நாடக அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னணி
ஷிவமோகா விமான நிலைய தொடக்கம் என்பது நாடு முழுவதும் போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்தும் செயலாகும் என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார். இந்தப் புதிய விமான நிலையம் ரூ.450 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டடம் ஒரு மணிநேரத்தில் 300 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. மேலும் மால்நாடு பிராந்தியத்தின் அருகே உள்ள பகுதிகளுடன் ஷிவமோகாவை இணைப்பதற்கு இது பயன்படும்.
ஷிவமோகாவில் ரூ.990 கோடி செலவில் இரண்டு ரயில்வே திட்டங்களை செயல்படுத்த பிரதமர் அடிக்கல் நாட்டினார். மேலும் ஷிவமோகா நகரில் ரூ.100 கோடி செலவில் கோட்டேகங்கௌரு ரயில்வே இணைப்புத் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது.
பலவகை சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்கள் ரூ.215 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சியின் போது ரூ.950 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வகை கிராமத் திட்டங்கள் ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் பிரதமரால் அடிக்கல் நாட்டி, தொடங்கிவைக்கப்பட்டன. ஷிவமோகா நகரில் ரூ.895 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 44 பொலிவுறு நகரத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
Airport in Shivamogga will significantly boost connectivity. pic.twitter.com/kgzR5c8hME
— PMO India (@PMOIndia) February 27, 2023
Karnataka has scaled new heights of development in the last few years. pic.twitter.com/wvh2A3V9ZX
— PMO India (@PMOIndia) February 27, 2023
India's aviation market is growing rapidly. pic.twitter.com/USO6dwNUWE
— PMO India (@PMOIndia) February 27, 2023
आज भारत के एविएशन मार्केट का डंका पूरी दुनिया में बज रहा है। pic.twitter.com/dEZYgC1YjC
— PMO India (@PMOIndia) February 27, 2023
हमने बहनों से जुड़ी हर परेशानी को दूर करने का प्रयास किया है। pic.twitter.com/xHZWzjAlHg
— PMO India (@PMOIndia) February 27, 2023