பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாதோலில் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு தேசிய இயக்கத்தைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு செல் மரபணு நிலை அட்டைகளை வழங்கினார். மத்தியப் பிரதேசத்தில் சுமார் 3.57 கோடி ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா அட்டைகளின் விநியோகத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, 16-ம் நூற்றாண்டின் மத்தியில் கோண்ட்வானாவை ஆட்சி செய்த ராணி துர்காவதியை பிரதமர் கௌரவித்தார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ராணி துர்காவதிக்கு புகழஞ்சலி செலுத்தியதுடன், அவரால் ஈர்க்கப்பட்ட அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு தேசிய இயக்கம் இன்று தொடங்கப்படுவதாகக் குறிப்பிட்டார். மத்தியப் பிரதேச மக்களுக்கு 1 கோடி ஆயுஷ்மான் கார்டுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த இரண்டு முக்கிய முயற்சிகளின் மூலம், கோண்ட், பில் மற்றும் பிற பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பயனடைவதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த விழாவில் மத்தியப் பிரதேச மக்களுக்கும், இரட்டை எஞ்சின் அரசிற்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இன்று, ஷாதோல் நிலத்தில் இருந்து, பழங்குடி சமூக மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான பெரிய உறுதிமொழியை நாடு எடுத்து வருவதாகவும், அரிவாள் செல் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட 2.5 லட்சம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார். பழங்குடியினருடனான தனது தனிப்பட்ட அனுபவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அரிவாள் செல் இரத்த சோகையின் வலிமிகுந்த அறிகுறிகள் மற்றும் மரபணுத் தோற்றம் ஆகியவற்றையும் சுட்டிக் காட்டினார்.
உலகில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அரிவாள் செல் இரத்த சோகை பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டாலும், கடந்த 70 ஆண்டுகளாக இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்தப்படவில்லை என்று பிரதமர் வருத்தம் தெரிவித்தார். கடந்த கால அரசுகள் பழங்குடியினர் மீது கொண்டிருந்த அலட்சியப் போக்கை எடுத்துரைத்த அவர், தற்போதைய அரசு இதற்குத் தீர்வு காண முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த அரசு பழங்குடியினத்தவரை வெறும் வாக்கு அரசியலுக்காக பயன்படுத்தவில்லை எனவும், அவர்களை மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான விஷயமாகக் கருதுவதாகவும் பிரதமர் கூறினார். குஜராத்தின் முதலமைச்சராக பதவியேற்கும் முன்னரே இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், தானும், தற்போதைய மத்தியப் பிரதேச ஆளுநர் திரு. மங்குபாய் சி படேலும் பழங்குடியின மக்களை சந்தித்து அரிவாள் செல் இரத்த சோகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் பிரதமர் தெரிவித்தார். மேலும், குஜராத் முதலமைச்சரான பிறகு அங்கு பல்வேறு பிரச்சாரங்களை தொடங்கியதையும் அவர் நினைவு கூர்ந்தார். இந்தியப் பிரதமராக ஜப்பான் சென்றிருந்தபோது நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஒருவரிடம், இந்நோய்க்கு உதவி கோரியது குறித்தும் அவர் தெரிவித்தார்.
அரிவாள் செல் இரத்த சோகையை ஒழிப்பதற்கான இந்த பிரச்சாரம் அமிர்தக் காலத்தின் முக்கியப் பணியாக மாறும் என்றும் பிரதமர் கூறினார். 2047-ம் ஆண்டிற்குள் பழங்குடி மக்களையும், நாட்டையும் அரிவாள் செல் இரத்த சோகை நோயிலிருந்து முற்றிலும் விடுவிப்பதற்கான உறுதியை பிரதமர் வெளிப்படுத்தினார். இதில் அரசு, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பழங்குடியினரின் ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்காக இரத்த வங்கிகள் நிறுவப்பட்டு வருவதாகவும், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், அரிவாள் செல் அனீமியாவை பரிசோதிக்கும் பணிகள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் தங்களை சோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இந்நோய் ஒரு குடும்பத்தையே வறுமைக்குள் தள்ளுவதால், இது முழு குடும்பத்தையும் பாதிக்கிறது என்று பிரதமர் கூறினார். தனது குடும்ப வறுமையின் பின்னணியைக் குறிப்பிட்டப் பிரதமர், இந்த வலியை அரசு அறிந்திருப்பதாகவும், நோயாளிகளுக்கு உதவுவதில் அக்கறையுடன் இருப்பதாகவும் கூறினார். இந்த முயற்சிகளால் காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க நாடு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நோய்களின் தாக்கம் குறித்த தகவல்களை அளித்த பிரதமர், 2013-ம் ஆண்டில் 11,000 காலா அசார் நோயாளிகள் இருந்ததாகவும், தற்போது அவை ஆயிரத்திற்கும் குறைவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 2013-ம் ஆண்டில் 10 லட்சம் மலேரியா பாதிப்புகள் இருந்ததாகவும், தற்போது அந்த எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 2 லட்சத்திற்கும் குறைவாகியுள்ளதாகக் கூறினார். அதேபோல், தொழுநோய் பாதிப்பு 1.25 லட்சத்தில் இருந்து 70-75 ஆயிரமாக குறைந்துள்ளதாகவும் கூறினார்.
"தற்போதைய அரசு நோய்களைக் குறைப்பது மட்டுமல்லாமல், நோய்க்கான செலவைக் குறைக்கவும் பாடுபடுகிறது" என மக்களின் மருத்துவச் செலவுகளைக் கணிசமாகக் குறைத்துள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். 1 கோடி பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டைகள் இன்று வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். "இந்தியாவின் எந்தப் பகுதியாக இருந்தாலும், இந்த அட்டையைக் காட்டி, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச சிகிச்சையைப் பெறலாம்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் சுமார் 5 கோடி நோயாளிகள் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையைப் பெற்று, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான தொகையை மிச்சப்படுத்தியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். இந்த ஆயுஷ்மான் அட்டை ஏழைகளின் கவலையை நீக்குவதற்கான உத்தரவாதம் என்றும் கூறினார். "கடந்த காலங்களில் இந்த 5 லட்சம் ரூபாய்க்கு யாரும் உத்தரவாதம் அளிக்கவில்லை, இந்த அரசுதான், மோடிதான் இந்த உத்தரவாதத்தை அளித்துள்ளார்” என்று பிரதமர் கூறினார்.
பொய்யான உத்தரவாதங்களை வழங்குபவர்கள் குறித்து எச்சரித்த பிரதமர், அதிலுள்ள குறைகளை அடையாளம் காணுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தைக் குறிப்பிட்ட பிரதமர், அது மின்சாரச் செலவு உயரும் என்பதை உணர்த்துவதாகக் கூறினார். அதேபோல், ஒரு அரசு இலவசப் பயணத்தை வழங்கும்போது, மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பு அழிந்து போகிறது என்று அர்த்தம் எனவும், அதிக ஓய்வூதியம் வழங்கப்படும் என்று வாக்குறுதிகள் அளிக்கப்படும்போது, ஊழியர்களின் ஊதியம் தாமதமாகும் என்பதை தெளிவாகக் காட்டுவதாகவும் கூறினார். மேலும், சலுகையில் மலிவான பெட்ரோல் விலை தரப்படும் என்பதைக் குறிப்பிட்டு, அது வரி விகிதம் அதிகரிப்பதைக் குறிக்கிறது என்று கூறினார். வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்தின் பேரில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகள் மாநிலத்தில் உள்ள தொழில்களை அழிப்பது உறுதி என்றும் பிரதமர் கூறினார். எதிர்க்கட்சிகளைக் கடுமையாக சாடிய பிரதமர், “சில அரசியல் கட்சிகளின் நோக்கமே ஏழைகளைக் காயப்படுத்துவது தான் என்றும் கூறினார். கடந்த 70 ஆண்டுகளில், முந்தைய அரசுகள் ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை எனவும், ஆனால் தற்போதைய அரசு கரிப் கல்யாண் யோஜனா மூலம் 80 கோடி குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்களை உத்தரவாதம் செய்துள்ளதாகக் கூறினார். ஆயுஷ்மான் யோஜனா மூலம் 50 கோடி பயனாளிகளுக்கு சுகாதாரப் பாதுகாப்பையும், உஜ்வாலா யோஜனா மூலம் 10 கோடி பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளையும், முத்ரா யோஜனா மூலம் 8.5 கோடி பயனாளிகளுக்கு கடன்களையும் வழங்கியுள்ளதாகக் கூறினார்.
கடந்த காலத்தில் இருந்த பழங்குடியினருக்கு எதிரானக் கொள்கைகள் குறித்தும் பிரதமர் பேசினார். புதிய தேசியக் கல்விக் கொள்கையானது, பழங்குடியின மாணவர்களின் முன் உள்ள கற்றல் குறித்த சவாலை சரிசெய்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். பொய்யான வாக்குறுதிகளை வழங்கியவர்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார். பழங்குடியினக் குழந்தைகளுக்கு 400-க்கும் மேற்பட்ட புதிய ஏகலவ்யா உண்டு உறைவிட பள்ளிகளை வழங்குவது பற்றி அவர் தெரிவித்தார். இதில், மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 24,000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
முந்தைய அரசுகளின் புறக்கணிப்புக்கு மாறாக, தற்போதைய அரசு பழங்குடியினர் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி, அந்த அமைச்சகத்தின் பட்ஜெட்டை மூன்று மடங்கு உயர்த்தி பழங்குடியின சமூகங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது என்று பிரதமர் கூறினார். வன உரிமைச் சட்டத்தின் கீழ் 20 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பழங்குடியின மக்களுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட்டதாகவும், ஆதி மகா உத்சவம் போன்ற நிகழ்வுகளால் அவர்களின் பாரம்பரியங்கள் கௌரவிக்கப்பட்டதாகவும் பிரதமர் கூறினார்.
பழங்குடியினரின் பாரம்பரியத்தைப் போற்றிப் பேசிய பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் அவர்களின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். பிர்சா முண்டாவின் பிறந்தநாளான நவம்பர் 15-ம் தேதியை பழங்குடிகள் கௌரவ தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பழங்குடியினப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் பல அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டையும் அவர் குறிப்பிட்டார். பழங்குடியினப் பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்குக் கூட ஒரே குடும்பத்தின் பெயரை வைக்கும் பழைய நடைமுறையை எடுத்துரைத்த பிரதமர், சிவராஜ் சிங் அரசு சிந்த்வாரா பல்கலைக்கழகத்திற்கு சிறந்த கோண்ட் புரட்சியாளரான ராஜா சங்கர் ஷாவின் பெயரைச் சூட்டியதையும், படல்பானி நிலையத்திற்கு தந்தியா மாமாவின் பெயரைச் சூட்டியதையும் எடுத்துக்காட்டினார். தல்வீர் சிங் போன்ற கோண்ட் தலைவர்களுக்கு செய்யப்பட்ட அவமரியாதையை தற்போதைய அரசு சரிசெய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ராணி துர்காவதியின் 500-வது பிறந்தநாளை மத்திய அரசு தேசிய அளவில் கொண்டாடும் என்று பிரதமர் அறிவித்தார். அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுவதோடு, நினைவு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
தனது உரையை நிறைவு செய்த பிரதமர், இந்த முயற்சிகள் மேலும் தொடர மக்களின் ஒத்துழைப்பையும், ஆசிர்வாதத்தையும் கோரினார். ராணி துர்காவதியின் ஆசீர்வாதமும், உத்வேகமும் மத்தியப் பிரதேசம் வளர்ச்சியின் புதிய உச்சத்தை அடையவும், வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்கவும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச ஆளுநர் திரு.மங்குபாய் சி படேல், மத்தியப் பிரதேச முதல்வர் திரு.சிவராஜ் சிங் சவுகான், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
இந்த இயக்கம், அரிவாள் செல் நோயால் ஏற்படும் சுகாதார சவால்களை, குறிப்பாகப் பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் நோய் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டதாகும். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்த நோயை முற்றிலுமாக ஒழிப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த நோய் ஒழிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், கேரளா, பீகார், உத்தராகண்ட் ஆகிய அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய 17 மாநிங்களைச் சேர்ந்த 278 மாவட்டங்களில் இந்த இயக்கம் செயல்படுத்தப்படும்.
மத்தியப் பிரதேசத்தில் சுமார் 3.57 கோடி பேருக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்ட அட்டைகளை வழங்கும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கிராமப் பஞ்சாயத்துக்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் போன்ற இடங்களில் இந்த அட்டை வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு பயனாளியும் 100 சதவீத நலத்திட்டப் பயன்களை பெற வேண்டுமென்ற பிரதமரின் தொலைநோக்கை எட்டும் விதமாக இந்த ஆயுஷ்மான் அட்டை வழங்கும் இயக்கம் செயல்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியின் போது 16-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கோண்ட்வானாவை ஆண்ட ராணியான ராணி துர்காவதியை பிரதமர் கௌரவிப்பார். மொகலாயர்களிடமிருந்து விடுதலைக்காக போராடிய மிகவும் துணிச்சலான, அச்சமற்ற வீராங்கனையாக அவர் திகழ்ந்தார்.
आज शहडोल की धरती पर देश बहुत बड़ा संकल्प ले रहा है।
— PMO India (@PMOIndia) July 1, 2023
ये संकल्प है- सिकल सेल एनीमिया की बीमारी से मुक्ति का। pic.twitter.com/Fh5ARoAMov
हमारे लिए आदिवासी समाज सिर्फ एक सरकारी आंकड़ा नहीं है।
— PMO India (@PMOIndia) July 1, 2023
ये हमारे लिए संवेदनशीलता का विषय है, भावनात्मक विषय है: PM @narendramodi pic.twitter.com/kiTGCyVRdK
हमारी सरकार का प्रयास है कि बीमारी कम हो, साथ ही बीमारी पर होने वाला खर्च भी कम हो। pic.twitter.com/Td70HDq8LI
— PMO India (@PMOIndia) July 1, 2023
पहले की सरकारों ने जनजातीय समाज की लगातार उपेक्षा की।
— PMO India (@PMOIndia) July 1, 2023
हमने अलग आदिवासी मंत्रालय बनाकर इसे अपनी प्राथमिकता बनाया: PM @narendramodi pic.twitter.com/iQRLltp6su
बीते 9 वर्षों में आदिवासी गौरव को सहेजने और समृद्ध करने के लिए भी निरंतर काम हुआ है। pic.twitter.com/qrON1W6XkO
— PMO India (@PMOIndia) July 1, 2023