Quote"இந்தியாவில் நீர் பாதுகாப்பும், இயற்கை பாதுகாப்பும் மக்கள் பங்களிப்பு மற்றும் மக்கள் இயக்கமாக தனித்துவமாக மேற்கொள்ளப்படுகிறது"
Quote"நீர் சேமிப்பு என்பது வெறும் கொள்கை மட்டுமல்ல, அது ஒரு முயற்சி மற்றும் நல்லொழுக்கமும் கூட"
Quote"இந்தியர்கள், தண்ணீரை கடவுளின் வடிவமாகவும், நதிகளை தெய்வங்களாகவும், நீர்நிலைகளை கடவுள்களின் வசிப்பிடமாகவும் கருதும் ஒரு கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள்"
Quote"எங்கள் அரசு ஒட்டுமொத்த சமூகம் மற்றும் ஒட்டுமொத்த அரசாங்கம் என்ற அணுகுமுறையுடன் பணியாற்றியுள்ளது"
Quote"நீர் பாதுகாப்பு, இயற்கை பாதுகாப்பு, இவை இந்தியாவின் கலாச்சார நனவின் ஒரு பகுதியாகும்"
Quote"நீர் சேமிப்பு என்பது கொள்கைகள் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, சமூக அர்ப்பணிப்பும் கூட"
Quote"நாட்டின் தண்ணீர் எதிர்காலத்தைப் பாதுகாக்க 'குறைத்தல், மறுபயன்பாடு, ரீசார்ஜ் செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல்' என்ற மந்திரத்தை நாம் பின்பற்ற வேண்டும்"
Quote"நாம் ஒன்றிணைந்து, இந்தியாவை மனிதகுலம் முழுவதற்கும் நீர் சேமிப்புக்கான கலங்கரை விளக்கமாக மாற்றுவோம்"

குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்தத் திட்டத்தின் கீழ், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்டகால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

 

|

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், குஜராத் மண்ணிலிருந்து ஜல் சக்தி அமைச்சகத்தால் இன்று ஒரு முக்கியமான இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட அழிவு குறித்து பேசிய திரு மோடி, இதன் காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றார். தாம் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, கிட்டத்தட்ட எந்த தாலுகாவிலும் இதுபோன்ற கனமழையை பார்த்ததில்லை அல்லது கேட்டதில்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த முறை குஜராத் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும், நிலைமையைக் கையாள துறைகள் முழுமையாக ஆயத்தப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார், இருப்பினும், குஜராத் மக்களும் நாடும், இது போன்ற மோசமான சூழ்நிலைகளில் தோளோடு தோள் நின்று ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். நாட்டின் பல பகுதிகள் இன்னும் பருவமழையின் தாக்கத்தில் சிக்கித் தவிப்பதாக அவர் மேலும் கூறினார்.

நீர் சேமிப்பு என்பது வெறும் கொள்கை மட்டுமல்ல, அது ஒரு முயற்சி மற்றும் நல்லொழுக்கம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அதற்கு பெருந்தன்மையும் பொறுப்புகளும் உண்டு. நமது எதிர்கால சந்ததியினர் நம்மை மதிப்பீடு செய்யும் முதல் அளவுகோலாக தண்ணீர் இருக்கும் என்று திரு மோடி கூறினார். இதற்குக் காரணம், நீர் என்பது ஒரு வளம் மட்டுமல்ல, அது வாழ்க்கை மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலம் பற்றிய கேள்வி என்று அவர் தெரிவித்தார். நீடித்த எதிர்காலத்தை நோக்கிய 9 தீர்மானங்களில் நீர் சேமிப்பு முதன்மையானது என்று அவர் கூறினார். நீர் சேமிப்புக்கான அர்த்தமுள்ள முயற்சிகளில் பொதுமக்களின் பங்களிப்பு தொடங்கியதற்கு திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். ஜல்சக்தி அமைச்சகம், குஜராத் அரசு மற்றும் இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் அவர் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

சுற்றுச்சூழல் மற்றும் நீர் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், உலகில் உள்ள நன்னீர் வளத்தில் 4 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது என்று சுட்டிக்காட்டினார். நாட்டில் பல அற்புதமான ஆறுகள் இருந்தாலும், பெரிய புவியியல் பகுதிகள் தண்ணீரின்றி உள்ளன, மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது என்று அவர் விளக்கினார். பருவநிலை மாற்றத்துடன், தண்ணீர் பற்றாக்குறையும் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

சவாலான சூழ்நிலைகளுக்கு இடையிலும், தனக்கும், உலகிற்கும் தீர்வு காணும் திறன் இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் பண்டைய புனித நூல்களின் புரிதலை பாராட்டிய அவர், நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது, புத்தக அறிவாகவோ அல்லது ஒரு சூழ்நிலையில் இருந்து எழுந்த ஒன்றாகவோ கருதப்படவில்லை என்று கூறினார்.  "நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இந்தியாவின் பாரம்பரிய உணர்வின் ஒரு பகுதியாகும்" என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். இந்திய மக்கள் தண்ணீரை கடவுளின் வடிவமாகவும், நதிகளை தெய்வங்களாகவும், நீர்நிலைகளை கடவுள்களின் இருப்பிடமாகவும் கருதும் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார். கங்கை, நர்மதா, கோதாவரி, காவிரி ஆகிய நதிகள் தாயாக போற்றப்படுகின்றன. பண்டைய புனித நூல்களை மேற்கோள் காட்டிய பிரதமர், அனைத்து உயிரினங்களும் நீரிலிருந்து தொடங்கி, அதைச் சார்ந்து இருப்பதால், தண்ணீரைச் சேமிப்பது மற்றும் தானம் செய்வது, மிக உயர்ந்த சேவையாகும் என்று விளக்கினார். நமது முன்னோர்கள், நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். ரஹீம் தாஸின் ஒரு ஈரடிப் பாடலை குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்து, நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று வரும்போது, முன்னின்று வழிநடத்த வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தினார்.

 

|

குஜராத்தில் இருந்து தொடங்கப்பட்ட 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டம் கடைக்கோடியில் உள்ள குடிமக்களுக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கான பல வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். 25 ஆண்டுகளுக்கு முன்பு, முந்தைய அரசுகளுக்கு நீர் சேமிப்பு குறித்த தொலைநோக்குப் பார்வை இல்லாத சவுராஷ்டிராவின் நிலைமையை திரு மோடி நினைவு கூர்ந்தார். பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த சர்தார் சரோவர் அணையை கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததை உறுதி செய்த அவர், இந்த கடுமையான நெருக்கடியை சமாளிக்க உறுதிபூண்டதாகவும் கூறினார். தண்ணீர் அதிகமாக உள்ள பகுதிகளிலிருந்து தண்ணீரை எடுத்து, பற்றாக்குறைப் பகுதிகளுக்கு விநியோகிப்பதன் மூலமும் சவுனி (Sauni) திட்டம் தொடங்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார். குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலன்கள் இன்று உலகிற்கு தெரிவது குறித்து திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

"நீர் சேமிப்பு என்பது கொள்கைகள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, சமூக உறுதிப்பாடும் கூட" என்று கூறிய பிரதமர், உணர்வுபூர்வமான குடிமகன், பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் மக்கள் இயக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான நீர்வளத் திட்டங்கள் தொடங்கப்பட்டிருந்தாலும், அதன் பலன்கள் கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே வெளிப்படையாகத் தெரிவதாக என்று அவர் சுட்டிக்காட்டினார். "எங்கள் அரசு ஒட்டுமொத்த சமூகம் மற்றும் ஒட்டுமொத்த அரசாங்க அணுகுமுறையுடன் பணியாற்றியுள்ளது" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை எடுத்துரைத்த பிரதமர், தண்ணீர் தொடர்பான பிரச்சினைகளில் முதன்முறையாக தடைகள் உடைக்கப்பட்டதாகவும், ஒட்டுமொத்த அரசின் அணுகுமுறையின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்காக ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ஜல் ஜீவன் இயக்கம் மூலம், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய்வழி குடிநீர் வழங்குவதற்கான உறுதிப்பாட்டை அவர் சுட்டிக் காட்டினார். இன்று 15 கோடிக்கும் அதிகமான குடிநீர் இணைப்புகளுடன் ஒப்பிடும்போது, 3 கோடி வீடுகளுக்கு மட்டுமே குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது என்றார். நாட்டில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தூய்மையான குழாய் வழியாக குடிநீர் சென்றடைந்ததற்காக ஜல் - ஜீவன் இயக்கத்திற்கு அவர் பெருமிதம் தெரிவித்தார். ஜல் - ஜீவன் இயக்கத்திற்கு உள்ளூர் தண்ணீர் அமைப்புகள் செய்த பங்களிப்புகளைப்  பாராட்டிய அவர், குஜராத்தின் பானி சமிதியில் அதிசயங்களைச் செய்த பெண்களைப் போலவே, நாடு முழுவதும் உள்ள தண்ணீர் அமைப்புகளில், பெண்கள் அற்புதமான பணிகளைச் செய்வதாக அவர் கூறினார்.

இன்று ஜல்சக்தி இயக்கம் எவ்வாறு தேசிய இயக்கமாக மாறியது என்பதை எடுத்துரைத்த பிரதமர், பாரம்பரிய நீர் ஆதாரங்களை புதுப்பிப்பதாக இருந்தாலும் அல்லது புதிய கட்டுமானங்களை நிர்மாணிப்பதாகட்டும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் முதல் பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகள் வரை அனைத்து தரப்பு தனிநபர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார். பொதுமக்கள் பங்களிப்பின் வலிமையை விளக்கிய திரு மோடி, சுதந்திரத் திருநாள் அமிர்தப் பெருவிழாவின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்ரித் சரோவர் பணிகள் தொடங்கப்பட்டதாகவும், இதன் விளைவாக இன்று நாட்டில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமிர்த நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக் காட்டினார். அதேபோல், அடல் பூஜல் திட்டத்தில், நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்கான நீர் ஆதாரங்களை நிர்வகிப்பது கிராமவாசிகளின் பொறுப்பு என்றும் அவர் கூறினார். மேலும், 2021-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'கேட்ச் தி ரெயின்' பிரச்சாரம் இன்று ஏராளமான பங்குதாரர்களை உள்ளடக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். 'நமாமி கங்கை' முன்முயற்சி குறித்து பேசிய திரு மோடி, இது நாட்டு மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான உறுதியாக மாறியுள்ளது என்றும், நதிகளின் தூய்மையை உறுதி செய்வதற்காக மக்கள் பழைய பாரம்பரியங்கள் மற்றும் பொருத்தமற்ற பழக்கவழக்கங்களை கைவிட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' இயக்கத்தின் கீழ் ஒரு மரக்கன்றை நடுமாறு மக்களுக்கு தாம் விடுத்த வேண்டுகோள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், காடு வளர்ப்பால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக அதிகரிக்கிறது என்றார்.  கடந்த சில வாரங்களில் 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். இதுபோன்ற இயக்கங்கள் மற்றும் உறுதிப்பாடுகளில் பொதுமக்களின் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்திய திரு மோடி, 140 கோடி மக்களின் பங்களிப்புடன் நீர் சேமிப்பு முயற்சிகள், மக்கள் இயக்கமாக மாறி வருவதாக கூறினார்.

 

|

நீர் சேமிப்பு குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், தண்ணீர் தொடர்பான பிரச்சினைகளில் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, 'குறைத்தல், மறுபயன்பாடு, நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் மறுசுழற்சி செய்தல்' என்ற மந்திரத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தண்ணீரின் தவறான பயன்பாடு முடிவுக்கு வந்து, நுகர்வு குறைக்கப்பட்டு, தண்ணீரை மீண்டும் பயன்படுத்தி, நீர் ஆதாரங்களில் தண்ணீரை சேகரித்து, மாசுபட்ட நீரை மறுசுழற்சி செய்தால் மட்டுமே தண்ணீரை சேமிக்க முடியும் என்று அவர் கூறினார். இந்த இயக்கத்தில் புதுமையான அணுகுமுறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவின் நீர் தேவைகளில் சுமார் 80 சதவீதம் விவசாயத்தின் மூலம் பூர்த்தி செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், தண்ணீர் பயன்பாடு குறைவான விவசாயம் முக்கியமானது என்றார். நீடித்த வேளாண்மையை நோக்கி நீடித்த பயன்பாட்டிற்கு சொட்டு நீர் பாசனம் போன்ற தொழில்நுட்பங்களை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக அவர் கூறினார். 'ஒரு துளி தண்ணீரில் அதிக பயிர் சாகுபடி'  போன்ற பிரச்சாரங்களைப் பற்றியும் அவர் பேசினார். மேலும் இது தண்ணீரைப் பாதுகாக்க உதவும் அதே நேரத்தில், தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கிறது என்றார். பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் போன்ற குறைவான நீர் தேவைப்படும் பயிர்களின் சாகுபடிக்கு அரசு அளிக்கும் ஆதரவை திரு மோடி எடுத்துரைத்தார். மாநில அளவிலான முயற்சிகள் குறித்த விவாதத்தை வலியுறுத்திய திரு மோடி, நீர் சேமிப்பு நடைமுறைகளை பின்பற்றி, விரைவுபடுத்துமாறு மாநிலங்களை ஊக்குவித்தார். குறைந்த நீரைப் பயன்படுத்தும் மாற்றுப் பயிர்களை விளைவிக்க, சில மாநிலங்கள் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிப்பதை ஒப்புக் கொண்ட பிரதமர், இந்த முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து, இயக்கம் என்ற  அணுகுமுறையில் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். வயல்களுக்கு அருகில், புதிய தொழில்நுட்பங்களுடன், குளங்களை உருவாக்குதல், கிணறுகளில் தண்ணீரை சேமித்தல் போன்ற பாரம்பரிய அறிவை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

"மிகப்பெரிய நீர் பொருளாதாரம் என்பது, சுத்தமான தண்ணீர் கிடைக்கச் செய்வதுடனும், நீர் சேமிப்பின் வெற்றியுடனும் தொடர்புடையது" என்று திரு மோடி வலியுறுத்தினார். தொடர்ந:து பேசிய அவர், ஜல் ஜீவன் இயக்கம், பொறியாளர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள் மற்றும் மேலாளர்கள் போன்ற லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றார். உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம், குடிநீர் வழங்குவதன் மூலம் நாட்டில் உள்ள குடிமக்களின் சுமார் 5.5 கோடி மனித மணி நேரங்கள் சேமிக்கப்படும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த முயற்சி நமது சகோதரிகள் மற்றும் புதல்விகளின் நேரம் மற்றும் முயற்சிகளை மிச்சப்படுத்த உதவும் என்றும், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார். தண்ணீர் பொருளாதாரத்தில், சுகாதாரமும் ஒரு முக்கிய அம்சம் என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். ஆய்வு அறிக்கைகளின்படி, 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் அகால மரணங்களைத் தடுக்க முடியும் என்றாலும், ஜல் ஜீவன் இயக்கம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை வயிற்றுப்போக்கு போன்ற நோய்களிலிருந்து காப்பாற்ற முடியும்.

நீர் சேமிப்புக்கான இந்தியாவின் இயக்கத்தில் தொழிற்சாலைகள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்கை ஒப்புக் கொண்ட பிரதமர், அவற்றின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார். நிகர பூஜ்ஜிய திரவ வெளியேற்ற தரநிலைகள் மற்றும் நீர் மறுசுழற்சி இலக்குகளை பூர்த்தி செய்த தொழில்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். நீர் நிலைத்தன்மையை நிவர்த்தி செய்வதில், பல்வேறு துறைகளின் முயற்சிகளை எடுத்துரைத்தார். பல தொழிற்சாலைகள், தங்கள் பெருநிறுவன சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக நீர் சேமிப்பு திட்டங்களைத் தொடங்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். நீர் சேமிப்புக்காக பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு முறையை குஜராத் புதுமைப்பூர்வமாக பயன்படுத்தியதற்கு பாராட்டு தெரிவித்த திரு மோடி, இது ஒரு சாதனை முயற்சி என்று விவரித்தார். "நீர் சேமிப்புக்கு பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியை  பயன்படுத்துவதன் மூலம், குஜராத் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது. சூரத், வல்சாத், டாங், தபி மற்றும் நவ்சாரி போன்ற இடங்களில் சுமார் 10,000 ஆழ்துளை கிணறு செறிவூட்டும் கட்டமைப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன" என்று திரு மோடி வலியுறுத்தினார். இந்த முயற்சிகள் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், முக்கியமான பகுதிகளில் நிலத்தடி நீர் வளங்களை மறு நீரேற்றம் செய்யவும் உதவுவதாக அவர் மேலும் கூறினார். அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளை வலியுறுத்திய திரு மோடி, "தண்ணீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு திட்டத்தின் மூலம், ஜல் சக்தி அமைச்சகமும் குஜராத் அரசும் இப்போது இதுபோன்ற 24,000 கட்டமைப்புகளை உருவாக்க ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளன" என்று அறிவித்தார். எதிர்காலத்தில் இதே போன்ற முயற்சிகளை மற்ற மாநிலங்கள் மேற்கொள்ள ஊக்கமளிக்கும் முன்மாதிரி இயக்கம் இது என்று அவர் விவரித்தார்.

தனது உரையின் நிறைவாக பேசிய பிரதமர் திரு மோடி, நீர் சேமிப்பில் உலகிற்கு உத்வேகம் அளிக்கும் நாடாக இந்தியா மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். "நாம் ஒன்றிணைந்து, இந்தியாவை மனிதகுலம் முழுவதற்குமான நீர் சேமிப்பின் கலங்கரை விளக்கமாக மாற்றுவோம் என்று நான் நம்புகிறேன்" என்று கூறிய அவர், இந்த இயக்கத்தின் தொடர்ச்சியான வெற்றிக்கு தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.

பின்னணி

நீர் பாதுகாப்பு குறித்த பிரதமரின் பார்வையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக, 'தண்ணீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' முன்முயற்சி சமூக கூட்டாண்மை மற்றும் உரிமையை வலியுறுத்துவதன் மூலம், தண்ணீரைப் பாதுகாக்க முற்படுகிறது. இது ஒட்டுமொத்த சமூகம் மற்றும் ஒட்டுமொத்த அரசு அணுகுமுறையால் இயக்கப்படுகிறது. குஜராத் அரசு தலைமையிலான தண்ணீர் சேமிப்பு முயற்சியின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, ஜல் சக்தி அமைச்சகம், மாநில அரசுடன் இணைந்து, குஜராத்தில் 'தண்ணீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' முயற்சியைத் தொடங்குகிறது. தண்ணீர் பாதுகாப்பு மிகுந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக குடிமக்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற பங்குதாரர்களை அணிதிரட்ட குஜராத் அரசு முயற்சித்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சமுதாய பங்கேற்புடன் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நீர் செறிவூட்டும் கட்டமைப்புகள் மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்டகால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் உதவும்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves $2.7 billion outlay to locally make electronics components

Media Coverage

Cabinet approves $2.7 billion outlay to locally make electronics components
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM speaks with Senior General H.E. Min Aung Hlaing of Myanmar amid earthquake tragedy
March 29, 2025

he Prime Minister Shri Narendra Modi spoke with Senior General H.E. Min Aung Hlaing of Myanmar today amid the earthquake tragedy. Prime Minister reaffirmed India’s steadfast commitment as a close friend and neighbor to stand in solidarity with Myanmar during this challenging time. In response to this calamity, the Government of India has launched Operation Brahma, an initiative to provide immediate relief and assistance to the affected regions.

In a post on X, he wrote:

“Spoke with Senior General H.E. Min Aung Hlaing of Myanmar. Conveyed our deep condolences at the loss of lives in the devastating earthquake. As a close friend and neighbour, India stands in solidarity with the people of Myanmar in this difficult hour. Disaster relief material, humanitarian assistance, search & rescue teams are being expeditiously dispatched to the affected areas as part of #OperationBrahma.”