பிரதமர் திரு. நரேந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலம் வாஷிமில் ரூ.23,300 கோடி மதிப்பிலான வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை தொடர்பான பல்வேறு முன்முயற்சிகளை இன்று தொடங்கி வைத்தார். பிரதமரின் உழவர் நல நிதியின் 18 வது தவணையை வழங்குதல், நமோ விவசாயிகள் பெருங்கவுரவ நிதி திட்டத்தின் 5- வது தவணையைத் தொடங்குதல், வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் 7,500 க்கும் மேற்பட்ட திட்டங்களை அர்ப்பணித்தல், 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், மகாராஷ்டிரா முழுவதும் மொத்தம் 19 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து சூரிய பூங்காக்கள் மற்றும் கால்நடைகளுக்கான ஒருங்கிணைந்த மரபணு சிப் மற்றும் உள்நாட்டு பாலின வகைப்படுத்தப்பட்ட விந்து தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இந்த முன்முயற்சிகளில் அடங்கும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், புனித பூமியான வாஷிம் பகுதியைச் சேர்ந்த பொஹராதேவி மாதாவை வணங்கி, மாதா ஜகதாம்பா கோவிலில் இன்று காலை தரிசனம் மற்றும் பூஜை செய்ததாகக் குறிப்பிட்டார். துறவி சேவாலால் மகராஜ் மற்றும் சந்த் ராம்ராவ் மகாராஜ் ஆகியோரின் சமாதியில் அவர்களிடமிருந்து ஆசி பெறுவது குறித்தும், பெரிய துறவிகளுக்கு மரியாதை செலுத்தியது குறித்தும் அவர் பேசினார். கோண்டுவானாவின் மாபெரும் போர்வீரர் ராணி துர்காவதியின் பிறந்த நாளையும் குறிப்பிட்ட பிரதமர், கடந்த ஆண்டு அவரது 500-வது பிறந்த நாளை தேசம் கொண்டாடியதை நினைவு கூர்ந்தார்.
ஹரியானாவில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதைக் குறிப்பிட்ட பிரதமர், மாநில மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர்களின் வாக்கு ஹரியானாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று அவர் கூறினார்.
சுமார் 9.5 கோடி விவசாயிகளுக்கு சுமார் ரூ.20,000 கோடி மதிப்பிலான பிரதமரின் உழவர் நல நிதியின் 18-வது தவணை இன்று விடுவிக்கப்பட்டதை எடுத்துரைத்த பிரதமர், மாநில அரசு தனது விவசாயிகளுக்கு இரட்டைப் பலன்களை வழங்க பாடுபடுகிறது என்றார். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 90 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.1900 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ள நமோ விவசாயிகள் பெருங்கவுரவ நிதி திட்டம் குறித்தும் திரு மோடி குறிப்பிட்டார். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்காக பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அர்ப்பணித்ததாக அவர் குறிப்பிட்டார். இன்று பெண் சகோதரி திட்டத்தின் பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கியது பற்றிப் பேசிய பிரதமர், இந்தத் திட்டம் மகளிர் சக்தியின் திறன்களுக்கு அதிகாரம் அளிக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். இன்றைய திட்டங்களுக்காக மகாராஷ்டிரா மற்றும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பொஹராதேவியில் இன்று பஞ்சாரா பாரம்பரிய அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், புதிதாக திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் எதிர்காலச் சந்ததியினருக்கு பஞ்சாரா சமூகத்தின் பண்டைய கலாச்சாரம் மற்றும் பரந்த பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் என்று கூறினார். பொஹாராதேவியில் பஞ்சாரா சமூகத்தினருடன் தாம் கலந்துரையாடியதை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த அருங்காட்சியகத்தின் மூலம் அவர்களின் பாரம்பரியத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதால் அவர்களது முகங்களில் திருப்தி மற்றும் பெருமித உணர்வு இருப்பதை எடுத்துரைத்தார். பஞ்சாரா பாரம்பரிய அருங்காட்சியகத்திற்காக அந்தச் சமூகத்தினருக்கு திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
"இந்தியாவின் சமூக வாழ்க்கை மற்றும் வளர்ச்சிப் பயணத்தில் நமது பஞ்சாரா சமூகம் பெரும் பங்காற்றியுள்ளது" என்று பிரதமர் கூறியுள்ளார். கலை, கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியில் சமூகத்தின் மீள்திறன் மற்றும் விலைமதிப்பற்ற பங்கை அவர் பாராட்டினார். அந்நிய ஆட்சியின் கீழ் பெரும் துன்பங்களை அனுபவித்து, சமூகத்திற்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ராஜா லக்கி ஷா பஞ்சாரா போன்ற பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த பல மரியாதைக்குரியவர்களுக்கு திரு மோடி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் ஆன்மீக உணர்வுக்கு எல்லையற்ற சக்தியை அளித்த துறவி சேவாலால் மகராஜ், சுவாமி ஹாதிராம் ஜி, துறவி ஈஸ்வர்சிங் பாபுஜி, துறவி லட்சுமண சைத்யன் பாபுஜி போன்ற பிற ஆன்மீகத் தலைவர்களையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். "இந்தியாவின் ஆன்மீக உணர்வுக்கு மகத்தான ஆற்றலை வழங்கிய இதுபோன்ற பல துறவிகளை பஞ்சாரா சமூகம் வழங்கியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார். பல நூற்றாண்டுகளாக நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் வளர்ப்பதற்கும் அவர்களின் அயராத முயற்சிகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார், மேலும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் ஆட்சி முழு பஞ்சாரா சமூகத்தையும் குற்றவாளிகள் என்று நியாயமற்ற முறையில் முத்திரை குத்திய வரலாற்று அநீதி குறித்தும் வருத்தம் தெரிவித்தார்.
தற்போதைய அரசின் முயற்சிகளுக்கு மத்தியில் முந்தைய அரசுகளின் அணுகுமுறையை பிரதமர் மக்களுக்கு நினைவுபடுத்தினார். பொஹராதேவி கோயில் மேம்பாட்டுத் திட்டத்தின் பணிகள் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன, ஆனால் மகா அகதி அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டன, ஆனால் திரு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசால் மீண்டும் தொடங்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார். பொஹாராதேவி கோயில் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ .700 கோடி செலவிடப்படுவதாகவும் அவர் கூறினார். இந்தத் திட்டம் புனித யாத்திரை மையத்தின் மேம்பாட்டிற்கும், யாத்ரீகர்களுக்கு எளிதான பயணத்திற்கும், அருகிலுள்ள இடங்களின் விரைவான முன்னேற்றத்திற்கும் உதவும் என்று திரு மோடி குறிப்பிட்டார்.
இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு எதிராக செயல்படும் வரவிருக்கும் அபாயங்களை மக்களுக்கு நினைவூட்டிய திரு மோடி, "மக்களிடையே ஒற்றுமை மட்டுமே இத்தகைய சவால்களில் இருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும்" என்று கூறினார். போதைப்பொருள் பழக்கம் மற்றும் அதன் அபாயங்களுக்கு எதிராக மக்களை எச்சரித்த பிரதமர், இந்த போரில் ஒன்றாக வெற்றி பெற அவர்களின் உதவியை நாடினார்.
"எங்கள் அரசின் ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு கொள்கையும் வளர்ந்த பாரதத்திற்கு உறுதிபூண்டுள்ளது, மேலும் நமது விவசாயிகள் இந்தப் பார்வையின் முக்கிய அடித்தளமாக உள்ளனர்" என்று பிரதமர் மோடி கூறினார். இந்திய விவசாயிகளை வலுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய பிரதமர், வேளாண் பொருட்களின் சேமிப்பு, பதப்படுத்துதல், மேலாண்மை திறன்களை மேம்படுத்துவதற்காக 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் பல்வேறு முக்கிய வேளாண் உள்கட்டமைப்புத் திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார். "மகாராஷ்டிராவில், தற்போதைய அரசின் கீழ் விவசாயிகள் இரட்டிப்பு நன்மையைப் பெறுகிறார்கள்" என்று கூறிய திரு மோடி, முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அரசின் விவசாயிகளுக்கான இலவச மின்சாரக் கொள்கையைப் பாராட்டினார்.
பல ஆண்டுகளாக பெரும் துன்பங்களை சந்தித்து வரும் மகாராஷ்டிரா மற்றும் விதர்பாவின் விவசாயிகளுக்கு அனுதாபம் தெரிவித்த பிரதமர், முந்தைய அரசுகள் விவசாயிகளை ஏழைகளாக மாற்றின என்று குறிப்பிட்டார். மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்தவரை, மகா கூட்டணி அரசாங்கம் இரண்டு நிகழ்ச்சி நிரல்களுடன் மட்டுமே செயல்பட்டது, அதாவது விவசாயிகள் தொடர்பான திட்டங்களை நிறுத்துவது மற்றும் இந்தத் திட்டங்களின் பணத்தில் ஊழல் செய்வது என்று அவர் கடுமையாக சாடினார். மத்திய அரசில் இருந்து அனுப்பப்படும் நிதிகள் பயனாளிகளிடமிருந்து திருப்பி விடப்படுவதாக திரு மோடி குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு உழவர் நல நிதியுடன் தனி நிதியை வழங்கும் மகாராஷ்டிராவின் தற்போதைய மகாயுதி அரசைப் போல, கர்நாடகாவில் பாஜக அரசு அதை வழங்கி வந்தது என்பதை மக்களுக்கு நினைவூட்டிய பிரதமர், இப்போது புதிய அரசு ஆட்சியில் இருப்பதால் அது நிறுத்தப்பட்டுள்ளது என்றார். கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் வாக்குறுதி குறித்து தெலுங்கானா விவசாயிகள் இன்று மாநில அரசிடம் கேள்வி எழுப்பி வருவதாகவும் திரு மோடி கூறினார்.
கடந்த அரசால் நீர்ப்பாசனத் திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்தும் பிரதமர் நாட்டு மக்களுக்கு நினைவூட்டியதுடன், தற்போதைய அரசின் வருகைக்குப் பின்னரே துரிதமாகப் பணிகள் தொடங்கப்பட்டன என்றும் சுட்டிக்காட்டினார். அமராவதி, யவத்மால், அகோலா, புல்தானா, வாஷிம், நாக்பூர் மற்றும் வார்தா ஆகிய பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைகளைத் தீர்க்க சுமார் ரூ .90,000 கோடி செலவில் வைன்கங்கா-நல்கங்கா நதிகளை இணைக்கும் திட்ட ஒப்புதல் பற்றி அவர் கூறினார். பருத்தி மற்றும் சோயாபீன்ஸ் பயிரிடும் விவசாயிகளுக்கு மாநில அரசு ரூ .10,000 நிதி உதவி வழங்குவதையும் அவர் குறிப்பிட்டார். அமராவதியில் ஜவுளிப் பூங்காவுக்கும் சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது, இது பருத்தி விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை வழிநடத்த மகாராஷ்டிராவுக்கு மகத்தான ஆற்றல் உள்ளது என்பதை ஒப்புக் கொண்ட பிரதமர், ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான பிரச்சாரம் வலுவாக தொடரும்போது மட்டுமே இது நனவாக மாறும் என்றும், வளர்ந்த மகாராஷ்டிரா மற்றும் வளர்ந்த பாரதம் என்ற கனவை நனவாக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் திரு அஜித் பவார், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான தமது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பிரதமர் சுமார் 9.4 கோடி விவசாயிகளுக்கு சுமார் ரூ .20,000 கோடி மதிப்புள்ள பிரதமர் உழவர் நல நிதியின் 18 வது தவணையை விடுவித்தார். 18- வது தவணை விடுவிப்பின் மூலம், இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்ட மொத்த நிதி சுமார் ரூ .3.45 லட்சம் கோடியாக இருக்கும். மேலும், சுமார் ரூ.2,000 கோடி வழங்கும் நமோ விவசாயிகள் பெருங்கவுரவ நிதி திட்டத்தின் 5வது தவணையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1,920 கோடி மதிப்பிலான 7,500-க்கும் மேற்பட்ட திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். முக்கிய திட்டங்களில் தனிப்பயன் பணியமர்த்தல் மையங்கள், முதன்மை செயலாக்க அலகுகள், கிடங்குகள், வரிசையாக்கம் மற்றும் தரம் பிரித்தல் அலகுகள், குளிர் சேமிப்பு திட்டங்கள் மற்றும் அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
சுமார் 1,300 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மேலும், கால்நடைகளுக்கான ஒருங்கிணைந்த மரபணு சிப் மற்றும் உள்நாட்டு பாலின விந்து தொழில்நுட்பத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த முயற்சி விவசாயிகளுக்கு மலிவு விலையில் பாலின வகைப்படுத்தப்பட்ட விந்து கிடைப்பதை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் ஒரு டோஸுக்கு சுமார் ரூ .200 செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த ஜீனோமிக் சிப், உள்நாட்டு கால்நடைகளுக்கான GAUCHIP மற்றும் எருமைகளுக்கான MAHISHCHIP ஆகியவை மரபணு தட்டச்சு சேவைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. மரபணு தேர்வை செயல்படுத்துவதன் மூலம், இளம் உயர்தர காளைகளை இளம் வயதிலேயே அடையாளம் காண முடியும்.
மேலும், முதலமைச்சரின் சூரிய சக்தி வேளாண் கழகத் திட்டம் – 2.0 திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா முழுவதும் மொத்தம் 19 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து சூரிய பூங்காக்களை பிரதமர் அர்ப்பணித்தார். நிகழ்ச்சியின் போது, முதலமைச்சரின் பெண் சகோதரி திட்டத்தின் பயனாளிகளையும் அவர் கௌரவித்தார்..
Click here to read full text speech
हमारे बंजारा समाज ने भारत के सामाजिक जीवन में, भारत की निर्माण यात्रा में बहुत बड़ी भूमिका निभाई है: PM @narendramodi pic.twitter.com/HSzxLxjunh
— PMO India (@PMOIndia) October 5, 2024
हमारे बंजारा समाज ने ऐसे कितने ही संत दिये, जिन्होंने भारत की आध्यात्मिक चेतना को असीम ऊर्जा दी: PM @narendramodi pic.twitter.com/GqM37S4ZCf
— PMO India (@PMOIndia) October 5, 2024