நாடு முழுவதும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். மருந்து உற்பத்தியாளர்களின் சாதனை மற்றும் நிபுணத்துவத்தை அவர் பாராட்டினார். நமது தடுப்பூசி தொழிலின் மிகப்பெரிய வலிமை அதன் “சாமர்த்தியம், சன்சதன் மற்றும் சேவை’’யில் உள்ளது என்று பிரதமர் திரு.மோடி கூறினார். இந்த வலிமை தடுப்பூசி உற்பத்தியாளர்களை உலகின் தடுப்பூசி தலைமை இடத்துக்கு மாற்றியுள்ளது என அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி உற்பத்தியாளர்களின் திறமையில் நம்பிக்கை வைத்து, மே ஒன்றாம் தேதி முதல் வயது வந்த அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அரசு அனுமதித்துள்ளதாக திரு. மோடி கூறினார். நமது மக்கள் இயன்ற குறுகிய காலத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியைத் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். புதிய தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளை நடத்தி வரும் நமது விஞ்ஞானிகளின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
தடுப்பூசிகளை குறுகிய காலத்திற்குள் உருவாக்கி உற்பத்தி செய்ததற்காக அவர்களை பிரதமர் திரு.மோடி வெகுவாகப் பாராட்டினார். இங்கு உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகள் மிகவும் விலை குறைவானவை என்று குறிப்பிட்ட அவர், உலகின் மிகப் பெரிய தடுப்பூசி செலுத்தும் இயக்கம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது என்றார்.
‘கோவிட் பாதுகாப்பு இயக்கத்தின்’ கீழ், பொதுத்துறை –தனியார் கூட்டாண்மையுடன் நாடு தடுப்பூசி உருவாக்கம் மற்றும் உற்பத்தியில் தொடர்ந்து பாடுபட்டு வருவதுடன், தடுப்பூசி உருவாக்கத்துக்கான சூழலையும் உருவாக்கியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். அனைத்து தடுப்பூசி உற்பத்தியாளர்களும் இயன்ற அனைத்து உதவிகளையும் பெறுவதுடன், மருந்து விநியோகத்தையும் அரசு உறுதிசெய்துள்ளது. அதேபோல, தடுப்பூசிக்கு ஒப்புதலும் விரைவாகவும், அறிவியல் ரீதியிலும் வழங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். தற்போது சோதனையில் உள்ள தடுப்பூசிகளுக்கும் இயன்ற அனைத்து ஒப்புதல் நடைமுறைகளும் சுமுகமாக இருக்க ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் தனியார் துறை சுகாதார உள்கட்டமைப்பு மிக முக்கிய பங்கு வகித்துள்ளதாக பிரதமர் கூறினார். இனி வரும் காலங்களிலும், தடுப்பூசி போடுவதில் தனியார் துறை மேலும் தீவிர பங்காற்றும். இதற்கு மருத்துவமனைகள் மற்றும் தொழில்துறைக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு அவசியமாகும்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு அனுமதி அளிக்கும் அரசின் முடிவுக்காகவும், மேலும் ஊக்குவிப்பு மற்றும் நீக்குப்போக்குடன் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்காகவும் பிரதமருக்கு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் நன்றி தெரிவித்தனர். தடுப்பூசி உருவாக்கம் மற்றும் உற்பத்தி நடைமுறையில் இந்திய அரசிடமிருந்து பெறப்பட்ட ஆதரவுக்காகவும் பிரதமரை அவர்கள் பாராட்டினர். உற்பத்தியை அதிகரித்தல், புதிய தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி குறித்த தங்களது திட்டங்கள் பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.