தாமஸ் கோப்பை மற்றும் உபெர் கோப்பை பேட்மிண்டன் சாம்பியன் அணியுடன் பிரதமர் கலந்துரையாடினார்.அவர்கள் தாமஸ் கோப்பை மற்றும் உபெர் கோப்பையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். வீரர்கள் தங்கள் விளையாட்டின் பல்வேறு அம்சங்கள், பேட்மிண்டனைத் தாண்டிய வாழ்க்கை மற்றும் பலவற்றைப் பற்றி பேசினர்.
பிரதமரால் அங்கீகரிக்கப்பட்டது குறித்து , கிடாம்பி ஸ்ரீகாந்த் பெருமிதம் பொங்க குறிப்பிட்டார். அவரது தலைமைத்துவ பாணி மற்றும் சவால்கள் குறித்து அணித் தலைவரிடம் பிரதமர் கேட்டறிந்தார். தனித்தனியாக, அனைவரும் சிறப்பாக செயல்படுவதாகவும், ஒரு குழுவாக தங்களின் சிறந்த திறமையை வெளிப்படுத்துவதே தலையாய பணி என்றும் ஸ்ரீகாந்த் கூறினார். முக்கியமான, தீர்மானிக்கும் போட்டியில் விளையாடும் பாக்கியம் குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். உலக நம்பர் 1 தரவரிசை மற்றும் தாமஸ் கோப்பையில் தங்கம் பற்றி பிரதமர் கேட்டதற்கு, இந்த இரண்டு மைல்கல் சாதனைகளும் தனது கனவுகள் என்றும், அவற்றை அடைந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார். முந்தைய ஆண்டுகளில் அவ்வளவு சிறப்பாக செயல்படாததால், தாமஸ் கோப்பை பற்றி அதிகம் பேசப்படவில்லை என்றும், இந்த அணியின் சாதனை பற்றி தெரிந்து கொள்ள நாட்டில் சிறிது நேரம் பிடித்தது என்றும் பிரதமர் கூறினார். “பல தசாப்தங்களுக்குப் பிறகு, இந்தியக் கொடி உறுதியாக நாட்டப்பட்டிருப்பதால், முழு நாட்டின் சார்பாக உங்களுக்கும் உங்கள் ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு சிறிய சாதனையல்ல… மிகுந்த அழுத்தத்திற்கு இடையே, இந்த உணர்வுடன் குழுவை ஒன்றாக வைத்திருப்பது என்னால் நன்றாக புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று. நான் உங்களை தொலைபேசியில் வாழ்த்தினேன், ஆனால் இப்போது உங்களை நேரில் பாராட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பிரதமர் கூறினார்.
சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி கடந்த பத்து நாட்களில் பெற்ற மகிழ்ச்சியையும் உணர்வுகளையும் தெரிவித்தார். அணி மற்றும் ஆதரவு ஊழியர்களிடமிருந்து தனக்கு கிடைத்த மறக்கமுடியாத ஆதரவை அவர் நினைவு கூர்ந்தார். வெற்றியின் தருணங்களில் அணி இன்னும் வாழ்கிறது என்று அவர் கூறினார். பிரதமர் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதுடன், தங்கள் பதக்கத்துடன் உறங்கிய குழு உறுப்பினர்களின் ட்வீட்களை நினைவு கூர்ந்தார். ரங்கிரெட்டி தனது பயிற்சியாளர்களுடன் மேற்கொண்ட செயல்திறன் மதிப்பாய்வு குறித்தும் விளக்கினார். சூழ்நிலைக்கு ஏற்ப அவரது மாற்றிக் கொள்ளும் திறனை பிரதமர் பாராட்டினார். எதிர்கால இலக்குகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
சிராக் ஷெட்டி தனது போட்டியின் பயணத்தையும் விவரித்தார். ஒலிம்பிக் குழுவுடன் பிரதமர் இல்லத்திற்கு வந்ததை அவர் நினைவு கூர்ந்தார். சில வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாமல் போனதால், ஏற்பட்ட ஏமாற்றத்தை தான் கண்டதாக பிரதமர் கூறினார். இருப்பினும், வீரர்கள் உறுதியாக இருந்ததாகவும், இப்போது அவர்கள் அனைத்து எதிர்பார்ப்புகளையும் சரியாக நிரூபித்துள்ளதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். “ஒரு தோல்வி என்பது முடிவல்ல, ஒருவருக்கு வாழ்க்கையில் உறுதியும் ஆர்வமும் தேவை. அத்தகையவர்களுக்கு மட்டுமே வெற்றி என்பது இயற்கையாக விளையும், அதை நீங்கள் காட்டியுள்ளீர்கள்”, என்றார் பிரதமர். நாளடைவில் மேலும் பல பதக்கங்களை வெல்வோம் என்று அணியினரிடம் பிரதமர் தெரிவித்தார். நிறைய விளையாட வேண்டும்,மேலும் பரிமளிக்க வேண்டும். நாட்டை விளையாட்டு உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும். “இப்போது இந்தியா பின்தங்கியிருக்க முடியாது. உங்களது வெற்றிகள் தலைமுறையினரை விளையாட்டுக்காக ஊக்குவிக்கிறது” என்று பிரதமர் மேலும் கூறினார்.
வெற்றி பெற்ற உடனேயே தொலைபேசி அழைப்பின் போது உறுதியளித்தபடி ‘பால் மித்தாய்’ கொண்டு வந்ததற்காக லக்ஷ்யா சென்னுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். முன்னதாக இளையோர் ஒலிம்பிக்கில் வென்ற பிறகும், இப்போது தாமஸ் கோப்பை வெற்றிக்குப் பிறகும் பிரதமரை சந்தித்ததை லக்ஷ்யா நினைவு கூர்ந்தார். இதுபோன்ற சந்திப்புகளுக்குப் பிறகு வீரர்கள் பெரிதும் ஊக்கம் அடைவதாக உணர்கிறார்கள் என்று அவர் கூறினார். "இந்தியாவுக்காக தொடர்ந்து பதக்கங்களை வென்று உங்களை தொடர்ந்து சந்திக்க விரும்புகிறேன்" என்று இளம் பேட்மிண்டன் வீரர் கூறினார். போட்டியின் போது லக்ஷ்யா எதிர்கொண்ட உணவு ஒவ்வாமை குறித்து பிரதமர் கேட்டறிந்தார். விளையாட்டில் ஈடுபடும் சிறு குழந்தைகளுக்கான அவரது ஆலோசனையைப் பற்றி கேட்டபோது, பயிற்சியில் முழு கவனத்தையும் செலுத்துமாறு லக்ஷ்யா கேட்டுக் கொண்டார். உணவு நச்சுத்தன்மையின் அதிர்ச்சியை எதிர்கொள்ளும் போது அவர் பயன்படுத்திய அவரது வலிமை மற்றும் சமநிலையை நினைவு கூர்ந்த பிரதமர், மேலும் வலிமை மற்றும் உறுதியைப் பயன்படுத்துவதற்கு கற்றுக்கொண்ட பாடங்களை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டில் மதிப்புமிக்க போட்டியில் வெற்றி பெற முடியும் என்பதை அணி காட்டியுள்ளது இன்னும் பெருமையான தருணம் என்று எச்.எஸ்.பிரணாய் கூறினார். காலிறுதி மற்றும் அரையிறுதியில் அழுத்தம் அபரிமிதமாக இருந்ததாகவும், அணிக்கு கிடைத்த ஆதரவு காரணமாக அதை சமாளிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார். பிரணாய்க்குள் ஒரு வீரர் உள்ளதை தாம் அடையாளம் கண்டுகொண்டதாகவும், அவரது மனப்பான்மையே அவரது பெரும் பலம் என்றும் பிரதமர் கூறினார்.
பதக்கம் வென்றவர்கள் மற்றும் பதக்கம் பெறாதவர்கள் எனப் பாகுபாடு காட்டாததற்காக பிரதமரைப் பாராட்டிய, அணியில் மிகவும் இளையவரான உன்னதி ஹூடாவை பிரதமர் வாழ்த்தினார். அவரது உறுதியை பாராட்டிய பிரதமர், பல தரமான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் ஹரியானா மண்ணின் சிறப்புத் தரம் குறித்து கேட்டறிந்தார். அங்கிருந்த அனைவரின் மகிழ்ச்சிக்கும் 'தூத் தாய்' உணவு முக்கிய காரணியாக இருக்கிறது என்று உன்னதி பதிலளித்தார். உன்னதி தன் பெயருக்கு ஏற்றாற்போல் பிரகாசிப்பார் என்று உறுதியாக நம்புவதாக பிரதமர் அவரிடம் கூறினார். அவர் செல்ல வேண்டிய தூரம் வெகுதூரம் இருப்பதாகவும், வெற்றிகள் மனநிறைவை அடைய அனுமதிக்கக் கூடாது என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
ட்ரீசா ஜாலி தனது விளையாட்டுத் தேடலுக்குக் கிடைத்த சிறந்த குடும்ப ஆதரவைப் பற்றி கூறினார். உபேர் கோப்பையில் நமது மகளிர் அணி விளையாடிய விதம் குறித்து நாடு பெருமை கொள்கிறது என்று பிரதமர் கூறினார்.
முடிவில், தாமஸ் கோப்பையை வெல்வதன் மூலம் இந்த அணி நாட்டில் மிகப்பெரிய ஆற்றலைப் புகுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார். ஏழு தசாப்தங்களாக நிலவிய நீண்ட காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. ‘பேட்மிண்டனைப் புரிந்துகொள்பவர், இதைப் பற்றி கனவு கண்டிருக்க வேண்டும், அது உங்களால் நிறைவேற்றப்பட்ட ஒரு கனவு’ “இத்தகைய வெற்றிகள் நாட்டின் ஒட்டுமொத்த விளையாட்டு சூழலிலும் மிகுந்த ஆற்றலையும் நம்பிக்கையையும் செலுத்துகின்றன. மிகப் பெரிய பயிற்சியாளர்களாலும், தலைவர்களின் பேச்சுத்திறமையாலும் சாதிக்க முடியாத ஒன்றை உங்களது வெற்றி செய்துள்ளது” என்று திரு மோடி கூறினார்.
உபேர் கோப்பை பற்றி குறிப்பிட்ட பிரதமர், வெற்றிக்காக காத்திருக்கும் வேளையில் அதற்கான ஏற்பாட்டையும் செய்வோம் என்றார். தற்போதைய அணியின் தரமான விளையாட்டு வீரர்கள் விரைவில் சிறந்த வெற்றிகளைப் பெறுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். "நமது மகளிர் அணி தங்கள் திறமையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த முறை இல்லை என்றால், அடுத்த முறை நாம் நிச்சயமாக வெல்வோம், ”என்று அவர் மேலும் கூறினார்.
சுதந்திரத்தின் 75வது ஆண்டில், இந்த வெற்றிகளும், வெற்றியின் உச்சத்தை எட்டியிருப்பதும் ஒவ்வொரு இந்தியனையும் பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. ‘என்னால் முடியும்’ என்பது புதிய இந்தியாவின் மனநிலை. போட்டியைப் பற்றி கவலைப்படுவதை விட, ஒருவரின் சொந்த செயல்திறனில் கவனம் செலுத்துவது முக்கியம், என்றார். இப்போது எதிர்பார்ப்பின் அழுத்தம் அதிகரிக்கும், அது பரவாயில்லை, நாட்டின் எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தில் அவர்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்றார். “அழுத்தத்தை ஆற்றலாக மாற்ற வேண்டும். நாம் அதை ஊக்கமாக கருத வேண்டும்," என்றார் பிரதமர்.
கடந்த 7-8 ஆண்டுகளில் நமது வீரர்கள் புதிய சாதனைகளை படைத்துள்ளனர் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒலிம்பிக், பாராலிம்பிக்ஸ் மற்றும் காது கேளாதோர் ஒலிம்பிக்ஸ் ஆகியவற்றில் மிகச்சிறந்த செயல்திறனை அவர் குறிப்பிட்டார். இன்று விளையாட்டு தொடர்பான மனநிலை மாறி வருகிறது என்று கூறிய பிரதமர், புதிய சூழல் உருவாகும் என்றார். “இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் இது ஒரு பொன் அத்தியாயம் போன்றது, உங்களைப் போன்ற சாம்பியன்களும் உங்கள் தலைமுறை வீரர்களும்தான் இதை எழுதியவர்கள். இந்த வேகத்தை நாம் தொடர வேண்டும்”, என வலியுறுத்திய பிரதமர், நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து விதமான ஆதரவும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
Interacted with our badminton champions, who shared their experiences from the Thomas Cup and Uber Cup. The players talked about different aspects of their game, life beyond badminton and more. India is proud of their accomplishments. https://t.co/sz1FrRTub8
— Narendra Modi (@narendramodi) May 22, 2022