சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் இன்று நடைபெற்ற திக்ஷந்த் அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.
இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் தான் தொடர்ந்து உரையாடி வருவதாக பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளிடம் பேசிய பிரதமர் குறிப்பிட்டார். "கொரோனா வைரஸ் காரணமாக உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எனது ஆட்சிகாலத்துக்குள் உங்கள் அனைவரையும் ஏதாவது ஒரு சமயத்தில் சந்திப்பேன் என நான் உறுதியாக நம்புகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அதிகாரிகளை பிரதமர் வாழ்த்தினார். அவர்கள் தங்களது சீருடையின் அதிகாரத்தை வெளிப்படுத்துவதை விட, அதைக் குறித்து பெருமைப் படவேண்டும் என்றார். "காக்கி சீருடையின் மரியாதையை என்றும் மனதில் கொள்ளுங்கள்", என்று ஐபிஎஸ் பயிற்சி அலுவலர்களிடம் கூறிய பிரதமர், காவல் துறையின் மனித நேயம் கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வெளிப்பட்டு, அவர்களின் நற்பணி மக்களின் மனங்களில் தங்கிவிட்டதாகத் தெரிவித்தார்.
ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசிய பிரதமர், "பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் பயிற்சி பெறுபவர்களாக இத்தனை நாட்கள் இருந்தீர்கள். ஆனால், அகாடமியை விட்டு நீங்கள் வெளியில் வரும் அடுத்த நிமிடத்தில் இருந்து நிலைமை மாறும். உங்களைப் பற்றிய எண்ணம் மாறும். அதீத கவனத்தோடு நீங்கள் பணியாற்ற வேண்டும். உங்களைப் பற்றி முதலில் உருவாகும் எண்ணம் என்றென்றும் நிலைத்திருக்கும். நீங்கள் எந்த இடத்துக்கு பணி மாற்றலாகி சென்றாலும், அது உங்களைத் தொடர்ந்து வரும்" என்றார்.
நெல்லில் இருந்து பதரை வேறுபடுத்திப் பார்க்கும் திறமையை வளர்த்துக்கொள்ளுமாறு பயிற்சி அதிகாரிகளை அறிவுறுத்திய பிரதமர், தங்களின் காதுகளை பூட்டி வைத்துக்கொள்ள வேண்டாமென்றும், ஒரு வடிகட்டியை வைத்துக்கொண்டால் மட்டும் போதும் என்றும் தெரிவித்தார். "வடிகட்டப்பட்ட விஷயங்கள் உங்கள் மூளைக்கு சென்றால் தான், அவை உங்களுக்கு உதவும். குப்பையை புறம் தள்ளி உங்கள் இதயத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்," என்றார்.
அவர்கள் பணிபுரியும் ஒவ்வொரு நிலையத்திலும், உரிமையோடும், பெருமையோடும் சேவையாற்றுமாறு பயிற்சி அதிகாரிகளை பிரதமர் கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் மீது கருணையோடு இருங்கள் என்று இளம் காவல் அதிகாரிகளிடம் கூறிய பிரதமர், மக்களைக் கட்டுப்படுத்தும் எண்ணத்தோடு பணியாற்றாமல், கருணையோடு சேவை செய்தால் இதயங்களை வென்று நீடித்து நிலைக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
காவல் துறையின் மனித நேயம் கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வெளிப்பட்டதாக பிரதமர் பாராட்டினார்.
குற்றவழக்கை தீர்ப்பதில் காவலர் புத்திக்கூர்மையின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். களத்தில் இருந்து வரும் நுண்ணறிவுத் தகவல்களின் முக்கியத்துவத்தை மறந்து விடாமல், தொழில்நுட்பத்தையும் முடிந்த அளவு பயன்படுத்துமாறு பயிற்சி அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். தகவல்கள், பெருந்தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கு பஞ்சமில்லை. சமூக ஊடகங்களில் கிடைக்கும் தகவல்கள் ஒரு சொத்து என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை கடந்த சில வருடங்களில் பேரிடர் காலங்களில் ஆற்றிய சேவை, காவல் துறைக்கு ஒரு புதிய அங்கீகாரத்தை அளித்துள்ளதாக பிரதமர் கூறினார். தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்களை தங்களது பகுதிகளில் ஒருங்கிணைக்குமாறும், இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். தங்கள் பயிற்சியை என்றும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார். பயிற்சி என்பது தண்டனைப் பணி போன்றது என்னும் மனநிலையில் இருந்து வெளியில் வருமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.
கர்மயோகி இயக்கம் இரு தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டதாக திரு நரேந்திர மோடி கூறினார். திறன் வளர்த்தலிலும், வேலையை குறித்த அணுகலிலும், கடந்த ஏழு தசாப்த குடிமைப் பணியில் இது ஒரு முக்கிய சீர்திருத்தம் என்று அவர் கூறினார். விதி சார்ந்த அணுகலில் இருந்து பங்களிப்பு சார்ந்த அணுகலை நோக்கிய மாற்றம் இது என்று அவர் கூறினார்.
திறமைகளைக் கண்டறிந்து, பயிற்சியளிக்க இது உதவும் என்று பிரதமர் கூறினார். சரியான நபரை சரியான பணியில் அமர்த்த இது உதவும் என்றும் அவர் கூறினார்.
"எதிர்பார்க்காதவற்றை எதிர்கொள்ளூம் வாய்ப்புகள் உங்கள் பணியில் ஏராளம். நீங்கள் அனைவரும் இதற்குத் தயாராக இருக்க வேண்டும். அழுத்தம் அதிக அளவில் இருக்கும், எனவே உங்கள் அன்புக்குரியவர்களிடமும், அருகில் இருப்பவர்களிடமும் நீங்கள் பேசுவது அவசியம். அடிக்கடியோ அல்லது ஓய்வு நாட்களிலோ, ஆசிரியர் போன்றவரையோ அல்லது யாருடைய அறிவுரையை நீங்கள் மதிப்பீர்களோ, அவர்களை சந்தியுங்கள்," என்று பிரதமர் கூறினார்.
காவல்துறையில் உடல்வலிமையின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். பயிற்சியின் போது மேம்படுத்தப்பட்ட உடல் வலிமையைப் பராமரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். நீங்கள் உடல் உறுதியுடன் இருந்தால், உங்கள் சகாக்களும் உடல்வலிமையுடன் இருப்பார்கள். உங்களைக் கண்டு அவர்கள் ஊக்கமடைவார்கள் என்றார்.
மிகச் சிறந்த மனிதர்களால் உருவாக்கப்படும் உதாரணங்களை மக்கள் பின்பற்றுவார்கள் என்னும் கீதையின் வரியை மனதில் கொள்ளுமாறு பயிற்சி அதிகாரிகளை பிரதமர் வலியுறுத்தினார்.
“यत्, यत् आचरति, श्रेष्ठः,
तत्, तत्, एव, इतरः, जनः,
सः, यत्, प्रमाणम्, कुरुते, लोकः,
तत्, अनुवर्तते।