"இன்று, உங்களைப் போன்ற வீரர்களின் உற்சாகம் அதிகரித்துள்ளது, பயிற்சியும் மேம்பட்டு வருகிறது, மேலும் நாட்டில் விளையாட்டுக்கு உகந்த சூழலும் அதிகரித்துள்ளது"
"மூவர்ணக் கொடி உயரத்தில் பறப்பதைப் பார்ப்பதும், தேசிய கீதம் இசைக்கப்படுவதைக் கேட்பதுமே குறிக்கோள்"
“நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் நேரத்தில் விளையாட்டு வீரர்கள் காமன்வெல்த் போட்டிகளுக்குச் செல்கின்றனர்”
“நீங்கள் அனைவரும் நன்கு பயிற்சி பெற்றுள்ளீர்கள், உலகின் சிறந்த வசதிகளுடன் பயிற்சி பெற்றிருக்கிறீர்கள். அந்தப் பயிற்சியையும் உங்கள் மன உறுதியையும், விருப்பத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது”
“இதுவரை நீங்கள் சாதித்தது நிச்சயம் ஊக்கமளிக்கிறது. ஆனால் இப்போது நீங்கள் புதிதாக, புதிய சாதனைகளை நோக்கிப் பயணிக்க வேண்டும்”

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில்  கலந்துகொள்ள செல்லும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களும், அவர்களது பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், விளையாட்டுத் துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 சர்வதேச சதுரங்க தினத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியும் தமிழகத்தில் ஜூலை 28 முதல் நடைபெறுகிறது. விளையாட்டு வீரர்களின் முன்னோடிகளைப் போலவே இந்தியாவை, அவர்களும் பெருமைப்பட வைக்க வேண்டும் என்று அவர் வாழ்த்தினார். காமன்வெல்த் போட்டிகளில் முதன்முறையாக இந்தியாவில் இருந்து 65-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதை குறிப்பிட்ட அவர், அவர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். "உங்கள் முழு திறமையுடனும், முழுமையான ஆற்றலுடனும், எந்தவித பதட்டமும் இன்றி, போர்க்குணத்துடன் விளையாட வேண்டும் என்று பிரதமர் வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
 கலந்துரையாடலின் போது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் திரு அவினாஷ் சாப்ளேயிடம், மகாராஷ்டிராவிலிருந்து வந்து சியாச்சினில் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய அவரது வாழ்க்கை அனுபவம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றியதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாக அவர் கூறினார். இந்திய ராணுவத்திடம் பெற்ற ஒழுக்கமும், பயிற்சியும் தான் எந்தத் துறையில் சென்றாலும் பிரகாசிக்க உதவுவதாக அவர் கூறினார். சியாச்சினில் பணிபுரியும் போது ஸ்டீபிள்சேஸ் விளையாட்டை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று பிரதமர் கேட்டார். தடைகளை கடப்பதே ஸ்டீபிள்சேஸ் என்றும், ராணுவத்தில் இதேபோன்ற பயிற்சி பெற்றதாகவும் அவர் கூறினார். இவ்வளவு வேகமாக உடல் எடையை குறைத்த அனுபவம் பற்றி பிரதமர் கேட்டார். ராணுவம் தன்னை விளையாட்டில் சேர ஊக்குவித்ததாகவும், தனக்கு பயிற்சி அளிக்க கூடுதல் நேரம் கிடைத்ததாகவும், இது உடல் எடையை குறைக்க உதவியது என்றும் அவர் கூறினார். 
 மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 73 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்கும் வீரரான அச்சிந்தா ஷீலியிடம் பேசிய பிரதமர், அவரது அமைதியான இயல்புக்கும், விளையாட்டில் பளுதூக்கும் ஆற்றலுக்கும் இடையே எப்படி சமநிலையை ஏற்படுத்த முடிகிறது என்று கேட்டார். மனதை அமைதிப்படுத்த யோகா தனக்கு உதவி வருவதாக அச்சிந்தா கூறினார். பிரதமர் அவரிடம் அவரது குடும்பத்தைப் பற்றிக் கேட்டார், அதற்கு அச்சிந்தா தனது தாயும், மூத்த சகோதரரும், உயர்வு, தாழ்வின் போது உறுதுணையாக இருப்பதாக பதிலளித்தார். விளையாட்டில் ஏற்படும் காயம் தொடர்பான பிரச்சனைகளை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பது குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதி என்றும், அவற்றை மிகவும் கவனமாக அணுகுவதாகவும் அச்சிந்தா பதிலளித்தார். காயத்திற்கு வழிவகுத்த தனது தவறுகளை  ஆய்வு செய்வதோடு எதிர்காலத்தில் அவை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் அவர் மேலும் கூறினார். அவரது முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர், அச்சிந்தாவின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ததற்காக அவரது குடும்பத்தினரை, குறிப்பாக அவரது தாயார் மற்றும் சகோதரரைப் பாராட்டினார்.
 கேரளாவைச் சேர்ந்த பாட்மிண்டன் வீராங்கனையான ட்ரீசா ஜாலியுடன் பிரதமர் கலந்துரையாடினார். கால்பந்து மற்றும் விவசாயத்திற்கு பெயர்போன கண்ணூரில் இருந்து வரும் அவர் எப்படி பூப்பந்து விளையாட்டை தேர்வு செய்தார் என்று பிரதமர் கேட்டறிந்தார். விளையாட்டில் ஈடுபடுவதற்கு தனது தந்தை ஊக்கமளித்ததாக அவர் கூறினார். காயத்ரி கோபிசந்த் உடனான நட்பு மற்றும் களத்தில் பார்ட்னர்ஷிப் பற்றி பிரதமர் கேட்டறிந்தார். தனது களத் துணையுடனான நல்ல நட்புறவு, தனது விளையாட்டிற்கு உதவுவதாக அவர் தெரிவித்தார். திரும்பி வரும்போது கொண்டாட்டத்திற்கான அவரது திட்டங்களைப் பற்றியும் பிரதமர் கேட்டார்.
 ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹாக்கி வீராங்கனையான சலிமா டெட்டுடன் பிரதமர் உரையாடினார். ஹாக்கி துறையில் அவரும் அவரது தந்தையும் மேற்கொண்ட பயணம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். தனது தந்தை ஹாக்கி விளையாடுவதைப் பார்த்து உத்வேகம் அடைந்ததாக அவர் கூறினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். டோக்கியோவுக்குச் செல்வதற்கு முன்பு பிரதமருடன் அவர் நடத்திய உரையாடல் தான் உந்துதலாக இருந்தது என்று அவர் கூறினார்.
 ஹரியானாவை சேர்ந்த பாரா தடகள வீராங்கனையான ஷர்மிளாவுடன் பிரதமர் உரையாடினார். 34 வயதில் விளையாட்டுத் துறையை தேர்ந்தெடுத்து, இரண்டே ஆண்டுகளில் தங்கப் பதக்கத்தை வென்றதற்கும் உத்வேகம் அளித்தது குறித்து பிரதமர் அவரிடம் கேட்டார். சிறுவயதிலிருந்தே தனக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்ததாகவும், ஆனால் குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டதாகவும், கணவனால் கொடுமைகளை சந்திக்க நேரிட்டதாகவும் ஷர்மிளா கூறினார். அவரும் தனது இரண்டு மகள்களும் ஆறு வருடங்கள் பெற்றோருடன் இருக்க வேண்டி  இருந்தது என்றும், அவரது உறவினரும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கொடி தாங்கிச் சென்றவருமான தேக்சந்த் பாய் அவரை ஆதரித்து ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தீவிர பயிற்சி அளித்தார் என்றும் அவர் கூறினார்.  அவரது மகள்களைப் பற்றி கேள்வி எழுப்பிய பிரதமர், அவர் தனது மகள்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு முன்மாதிரி என்றும் கூறினார். தனது மகள் விளையாட்டில் சேர்ந்து தேசத்திற்கு பங்களிக்க வேண்டும் என்று விரும்புவதாக ஷர்மிளா மேலும் கூறினார். முன்னாள் பாராலிம்பியனான அவரது பயிற்சியாளர் தேக்சந்த் ஜியைப் பற்றியும் பிரதமர் கேட்டறிந்தார், அதற்கு ஷர்மிளா தனது வாழ்க்கை முழுவதும் அவர் உத்வேகமாக இருந்ததாக பதிலளித்தார். ஷர்மிளாவின் பயிற்சியில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்புதான் அவரை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வைத்தது. அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கிய வயதில் மற்றவர்கள் கைவிட்டிருப்பார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், பின்னர் அவரது வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் வெல்ல வாழ்த்து தெரிவித்தார்.
 அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த சைக்கிள் வீரர் திரு டேவிட் பெக்காமுடன் பிரதமர் கலந்துரையாடினார். ஒரு பழம்பெரும் கால்பந்து வீரரின் பெயரைக் கொண்டுள்ளதால் அவருக்கு கால்பந்து மீது ஆர்வம் உள்ளதா என்று பிரதமர் கேட்டார். தனக்கு கால்பந்தாட்டத்தில் ஆர்வம் இருப்பதாகவும் ஆனால் அந்தமானில் உள்ள உள்கட்டமைப்பு தன்னை விளையாட்டைத் தொடர அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறினார். இவ்வளவு காலம் இந்த விளையாட்டைத் தொடர எது உந்துதலாக இருந்தது என்று பிரதமர் கேட்டார். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் மிகவும் ஊக்கமளித்ததாக அவர் கூறினார். கேலோ இந்தியா அவருக்கு எப்படி உதவியது என்று பிரதமர் கேட்டார். கேலோ இந்தியாவுடன் தனது பயணம் தொடங்கியது என்றும், பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் அவரைப் பற்றி பேசியது மேலும் ஊக்கமளித்தது என்றும் அவர் கூறினார். சுனாமியால் தனது தந்தையை இழந்த பிறகும், விரைவில் தனது தாயை இழந்த பிறகும் உத்வேகத்துடன் இருந்ததற்காக பிரதமர் அவரைப் பாராட்டினார்.
 கலந்துரையாடலுக்குப் பின்னர் விளையாட்டு வீரர்களிடம் உரையாற்றிய பிரதமர், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதால், அவர்களை நேரில் சந்திக்க விரும்பினாலும், அதுஇயலவில்லை என்று கூறினார். அவர்கள் திரும்பி வரும்போது நிச்சயம் சந்திப்பதாக உறுதி அளித்த பிரதமர், அவர்களின் வெற்றியை ஒன்றாகக் கொண்டாடலாம் என்றும் உறுதியளித்தார்.
 இந்திய விளையாட்டுத்துறை வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம் இது என்று பிரதமர் கூறினார். இன்று, வீரர்களின் உற்சாகமும் அதிகரித்துள்ளது, பயிற்சியும் மேம்பட்டு வருகிறது, மேலும் நாட்டில் விளையாட்டுக்கு உகந்த சூழலும் நன்றாக உள்ளது. நீங்கள் அனைவரும் புதிய சிகரங்களை எட்டி, புதிய சாதனைகளை படைக்கிறீர்கள் என்று அவர் தெரிவித்தார்.

 பெரிய சர்வதேச அரங்கில் விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக நுழைபவர்களுக்கு, அரங்கம் மட்டுமே மாறியுள்ளது என்றும், ஆனால் வெற்றிக்கான மனப்பான்மையும், விடாமுயற்சியும் அப்படியே உள்ளன என்றும் பிரதமர் கூறினார். “மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்ப்பதும், தேசிய கீதம் இசைக்கப்படுவதைக் கேட்பதும்தான் நமது குறிக்கோள். அதனால்தான் பதற்றம் இல்லாமல், எந்தவித அழுத்தத்துக்கும் ஆட்படாமல், நல்ல மற்றும் வலுவான ஆட்டத்தின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துங்கள்” என்று அவர் மேலும் கூறினார்.
 நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள வேளையில் விளையாட்டு வீரர்கள் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குச் செல்வதாகவும், விளையாட்டு வீரர்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது நாட்டுக்கு பரிசாக அமையும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். எதிரி யார் என்பது முக்கியமல்ல. அனைத்து விளையாட்டு வீரர்களும் உலகிலேயே சிறந்த வசதிகளுடன் சிறப்பாகப் பயிற்சி பெற்றுள்ளனர் என்று கூறிய பிரதமர், பயிற்சியை நினைவில் வைத்துக் கொள்ளவும், மன உறுதியை நம்பவும் வலியுறுத்தினார். விளையாட்டு வீரர்கள் சாதித்தது நிச்சயம் உத்வேகம் அளிப்பதாக இருந்தாலும், புதிய சாதனைகளை படைத்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தங்களால் இயன்றதை வழங்குவதை அவர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
 முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு முன்னதாக விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் அவரது தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக பிரதமரின் இந்த உரையாடல் உள்ளது. கடந்த ஆண்டு, டோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்குச் சென்ற இந்திய விளையாட்டு வீரர்களின் குழு மற்றும் டோக்கியோ 2020 பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கான இந்திய பாரா-தடகள வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
விளையாட்டு  போட்டிகளின் போதும், பிரதமர் விளையாட்டு வீரர்களின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை காட்டினார். பல சந்தர்ப்பங்களில், அவர் தனிப்பட்ட முறையில் விளையாட்டு வீரர்களை தொடர்பு கொண்டு, அவர்களின் வெற்றி மற்றும் உண்மையான முயற்சிகள் குறித்து வாழ்த்தினார், அதே நேரத்தில் அவர்கள் சிறப்பாகச் செயல்படவும் ஊக்குவித்தார். மேலும், அவர்கள் நாடு திரும்பியதும், அவர்களை சந்தித்து பிரதமர் உரையாடினார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022 பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 08 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 19 விளையாட்டுக்களைச் சேர்ந்த 141  போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்கள் இந்தியாவின் சார்பில் பங்கேற்கின்றனர், 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 21, 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage