கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுந்தர் பிச்சையுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாடினார்.
இந்த உரையாடலின் போது, இந்தியாவில் மின்னணு உற்பத்தி சூழலை விரிவுபடுத்துவதில் கூகுளின் திட்டம் குறித்துப் பிரதமரும், திரு. சுந்தர் பிச்சையும் விவாதித்தனர். இந்தியாவில் குரோம்புக்குகளைத் தயாரிப்பதில் ஹெச்பி நிறுவனத்துடன் கூகுள் கொண்டுள்ள கூட்டாண்மையைப் பிரதமர் பாராட்டினார்.
கூகுளின் 100 மொழிகள் என்ற முன்னெடுப்பை அங்கீகரித்த பிரதமர், செயற்கை நுண்ணறிவு முறையை இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளை ஊக்குவித்தார். நல்லாட்சி என்ற கருத்தாக்கத்தில் செயற்கை நுண்ணறிவு முறையை ஊக்குவிக்க வேண்டும் என்று திரு சுந்தர்பிச்சையிடம் வலியுறுத்தினார்.
காந்திநகரில் உள்ள குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப மையத்தில் (கிஃப்ட்) தனது உலகளாவிய ஃபின்டெக் செயல்பாட்டு மையத்தைத் திறக்கும் கூகுளின் திட்டங்களைப் பிரதமர் வரவேற்றார்.
ஜிபே, யுபிஐ ஆகியவற்றின் வலிமை மற்றும் வரம்பைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவில் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான கூகுளின் திட்டங்கள் குறித்து திரு சுந்தர் பிச்சை பிரதமரிடம் தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பங்களிப்பதில் கூகுளின் உறுதிப்பாட்டையும் அவர் தெரிவித்தார்.
2023 டிசம்பரில் புதுதில்லியில் இந்தியா நடத்தும் செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாட்டிற்குப் பங்களிக்குமாறு கூகுளின் திரு சுந்தர்பிச்சைக்குப் பிரதமர் திரு மோடி அழைப்பு விடுத்தார்.